Saturday, February 26, 2011

Affection about moon: andre' sonnaargal 32:அன்றே சொன்னார்கள்32- திங்கள் மீது தீராக் காதல்

>>அன்றே சொன்னார்கள்32


திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள்

                                                                                                                

natpu கடலலைகள் நிலவினால் உருவாவதாகக் கி.மு.2ஆம் நூற்றாண்டில் செலியூகசு (Seleucus) என்னும் அறிஞர் குறிப்பிட்டார். பின்னர் உரோமன் அறிஞர் செனெக்கா (Seneca) நிலவொளிக்கும் கடலலைகளுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிட்டார். கி.பி. 499 இல் ஆரியபட்டரும் இதைக் குறிப்பிட்டுள்ளார். கி.பி.1687 இல் அறிஞர் ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விதியைத் தெரிவித்த பின்பு இக் கருத்து மேலும் வலுப்பட்டது. ஆனால், சங்கக்  காலத்திலேயே நிலவொளிக்கும் கடல் அலைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதன் வழி வழித் தொடர்ச்சியாகத்தான் மக்களிடம், முழுநிலா, இருள் நிலாக் காலங்களில் கடலலைகளின் வேகம் மிகுதியாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனலாம். மேலும் திங்களின் பல்வேறு தோற்றங்களை இயல்பாகவும் உவமையாகவும் குறிப்பிட்டுள்ளமை திங்கள் மீதுள்ள தமிழ் மக்களின் தீராக்காதலை வெளிப்படுத்துகின்றது.
குளிர்ந்த ஒளியைத் தருவதால் திங்களுக்குத் தண்கதிர் என்று பெயர். கலையென்பது நிலவொளியின் ஒரு பகுதியைக் குறிக்கும். நாள்தோறும் ஒவ்வொரு கலையாக வளர்வதும் பின்  தேய்வதுமாய தோற்றம் திங்களுக்கே உரியது. எனவே கலையுடையவன் என்னும் பொருளில் நிலா, கலையோன் எனப்பட்டது. இரவுப் பொழுதில் விளங்குவதால் இரவோன் எனவும் பெயர்.
’அல்லும் பகலும்’ என்னும் தொடரால் ’அல்’ என்றால் இரவு எனப் புரிந்து கொள்ளலாம். எனவே, இரவிற்குரிய திங்கள் அலவன் என்றும் அல்லோன் என்று பெயர்களைப் பெற்றது. 15 நாள் வளர்ந்து 15 நாள் தேய்ந்து 30 நாள் கொண்ட ஒரு கால அளவை வரையறுக்கத் திங்கள் உதவுகிறது. வரையறுத்தலை மதித்தல் என்பர்; அளவிடுதலை மதிப்பிடுதல் என்பர்.  காலத்தை வரையறுத்து மதிப்பிட உதவுவதால் ’மதி’ என்றனர். (எனவேதான் திங்களால் மதிப்பிடப்படும் கால அளவிற்குத் திங்கள் என அறிவியல் பெயர் சூட்டினர்.) இடையிடையே கறையுடையது போல் தோற்றம் அளித்தலால் கறையாகிய களங்கம் உடையவன் என்னும் பொருளில் களங்கன் என்றனர்.  குரங்கு என்றால் வளைவு என்று பொருள் உண்டு. வளைந்த பிறைவடிவில் தோன்றுவதால் பிறை நிலவைக் ’குரங்கு’ என்றனர்.  நிலவினில் காணப்படும் கறை, சிறுவர் கண்களுக்கு முயல் வடிவாகத் தோற்றம் அளிப்பதால் முயல் தங்கியுள்ள கூடு என்னும் பொருளில் முயற்கூடு என்றனர்.
இனிமையான கள்போன்று நிலவொளி இருப்பதால் இனிமை என்னும் பொருளில், தீ+கள்=தீங்கள் என்பது குறுகித் திங்கள் என்றாயிற்று.
நிறைமதி, தேய்மதி, வெள்ளுவா (பௌர்ணமி), காருவா(அமாவாசை), வளர்மதி, பிறைமதி, எட்டாம் நாள் திங்கள், மறுக்கொண்ட மதி, அரவு வாய்மதி, வைகறை மதி, பக்கமதி, நிலவு, மீன்சூழ் மதி, குழவித் திங்கள், திங்கள் குழவி, மதி அரும்பு, என நிலவின் பல்வேறு தோற்றங்கள் குறிக்கப் பெறுகின்றன.
வளைந்த கரையைக் குறிப்பிடும் பொழுது எட்டாம் பக்கத்துப் பிறைபோலும் உள்ளதாக,
    எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரை (118.2)
எனப் புலவர் கபிலர் குறித்துள்ளார்.
அரைநிலாபோல் உள்ள பெண்களின் நெற்றியைக் குறிப்பிட,
   மாக்கடல் நடுவண் எண்நாள் பக்கத்துப்
   பசுவெண் திங்கள் தோன்றியாங்கு (குறுந்தொகை : 129: 3-4)
எனக் கோப்பெருஞ்சோழவேந்தன் குறித்துள்ளார்.
புலவர் முடத்தாமக் கண்ணியார், யாழின் வாயைக் குறிப்பிடுகையில் எட்டாம் நாள் திங்கள் போல் அரைவட்டமாக இருப்பதாக                                                         
எண்நாள் திங்கள் வடிவிற்று ஆகி (பொருநராற்றுப்படை: 11) எனக் குறிக்கிறார்.
   மாக விசும்பின் வெண் திங்கள்
   மூவைந்தான் முறை முறைக்
   கடல்நடுவண் கண்டன்ன     (கோவூர் கிழார்: புறநானூறு : 400 : 1-3)
என்னும் பாடல் வரிகள் மூலம், ஆகாயமாகிய நீல வானில் வெண்ணிலா பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தேய்ந்து வளர்ந்து கடல் நடுவே முழுமதியாய்த் தோன்றுவது போல் எனக் குறிப்பிட்டுத் திங்களின் வளர்ச்சி பற்றிய அறிவைப் புலப்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு திங்களின் பல்வேறு தோற்றங்களைப் பல இடங்களில் காணலாம்.
  ...........சிறுகோட்டுக்
குழவித் திங்கள் கோள்நேர்ந்தாங்கு  
எனப் பெரும்பாணாற்றுப்படையில் (383-384) கடியலூர் உருத்திரங்கண்ணனார் நிலவு மறைப்பு (கிரகணம்) குறித்துக் கூறுகிறார்.
    பாம்புசேர் மதி
(பாலை பாடிய பெருங்கடுங்கோ : கலித்தொகை : 15 : 17)
    அரவுநுங்கு மதி
(குறுந்தொகை : 395 : 4)
    திங்களைப் பாம்பு கொண்டற்று (திருவள்ளுவர் : திருக்குறள் 1146)
என்பனவும் நிலவுமறைப்புக் காட்சிகளே!
நிலா எல்லாத் திசைகளிலும் ஒளிவீசுவதைப் புலவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
    திங்கள் போலத் திசை விளக்கும்மே (திருமுருகாற்றுப்படை: 98)
எனக் கூறுகிறார்.
புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், இருண்ட வானத்தில் நிலா நன்கு ஒளிர்வதை
    மங்குல் வானத்துத் திங்கள் (பெரும்பாணாற்றுப்படை 480)
எனக் குறிப்பிடுகிறார்.
நிலவொளி கிளர்ச்சியையும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் அதற்கெனவே மேல்மாடியில் நிலா முற்றத்தை அமைத்துள்ளனர்.
    நிலவுப் பயன்கொள்ளும் நெடுவெண் முற்றத்து
( மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் : நெடுநல்வாடை : 95)
    வெண்ணிலவின் பயன் துய்த்தும்
(கடியலூர் உருத்திரங் கண்ணனார் : பட்டினப்பாலை : 114)
என வரும் பாடலடிகள் இதை உணர்த்துகின்றன.
    நிலவுப் பயன்கொள்ளும் நெடுநிலா முற்றத்து
என்றும்
    சுடர் வெண் நிலவின் தொழில் பயன் கொண்ட
   மிசை நீள் முற்றம்
natpu என்றும் பின்னரும் நாம் சிலப்பதிகாரத்திலும் பெருங்கதையிலும் காணலாம்.
நிலா முற்றத்தை அரமியம் என மதுரைக் காஞ்சியும் அகநானூறும் குறிக்கின்றன.
அரமியத்தில் காணும் எழில் காட்சி (அரமியம் என்பதில் இருந்து) இரமியம் என மாறிற்று. (இரமியத்தில் இருந்து உருவானதே இரம்யா)
   நிலவு அடைந்த இருள் போல
   வலை உணங்கும் மணல் முன்றில்
(கடியலூர் உருத்திரங் கண்ணனார்: பட்டினப்பாலை : 82-83) என வருவது போல், நிலவொளியுடன் வெண்மணலை ஒப்பிட்டு மிகுதியான சங்கப்பாடல்கள் உள்ளன.
நிலவொளிக் கதிர் குறித்தும் குறிப்பிட்டுள்ளனர்.
    நிலவே, நீள்நிற விசும்பின்  பல்கதிர் பரப்பிப்
    பான்மலி கடலில் பரந்து பட்டன்றே
(வெள்ளிவீதியார் : நற்றிணை : 348 : 1-2)
பொதுவாகத் திங்களின் ஒளியை நிலவு என்றும் அதன் வளர்ந்துவரும் தோற்றத்தைப் பிறை என்றும் தேய்ந்து வரும் பக்கத்தை மதி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பிறையை உலகெங்கும் தொழும் பழக்கம் உள்ளதால்
    தொழுதுகாண் பிறை (குறுந்தொகை : 178 : 5)
என்றும்
   பலர் தொழச்
   செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி
    இன்னம் பிறந்தன்று பிறையே (குறுந்தொகை : 307 : 1-3)
என்றும்
    ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்(அகநானூறு : 236)
என்றும்
    ஆநாள் நிறைமதி அலர்தரு பக்கம்போல்
(ஆசிரியன் நல்லந்துவனார் : பரிபாடல் : 11: 31)
என்றும் கூறியுள்ளனர்.
மேற்கில் தோன்றும் நிலவு நாள்தோறும் வளர்பிறையாய் வளர்வதுபோல் ஆக்கம் சிறக்கவும் கிழக்குத் திசையில் தோன்றும் நிலா நாள்தோறும் தேய்வதுபோல் எதிரிகளின் ஆக்கம் கெடவும் வாழ்த்தி,
    குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்
   வழிவழிச் சிறக்க நின் வலப்படு கொற்ற
   குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியின்
   தேய்வன கெடுக, நின் தெவ்வர் ஆக்கம் (மாங்குடி மருதனார் : மதுரைக்காஞ்சி : 193-196)
என்னும் பொழுது நிலா, கிழக்கில் தோன்றும் பொழுது தேய்வதையும் மேற்கே தோன்றும் பொழுது வளர்பிறைகளாக வளர்வதையும் குறிப்பிட்டுள்ளார். (வளர்பிறைக் காலத்தில் பகலிலேயே தோன்றும் நிலா சூரியனின் ஒளியில் மங்கித் தெரிந்தும் தெரியாமலும் இருக்கலாம்; இரவில், நிலா தெரியும் பொழுது மேற்குத் திசையில் இருக்கும்.) ஆக வளர்நிலா பிறையாகவும் தேய்நிலா மதியாகவும் சொலலப்படுகின்றது.
இதனைப் பின்னர் வந்த திருக்குறளில் (782)
    நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
   பின்னீர பேதையார் நட்பு
எனவும் நாலடியாரில் (125)
     பெரியவர் கேண்மை பிறை போல நாளும்
    வரிசை வரிசையாய் நந்தும் - வரிசையால்
    வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே
     தானே சிறியார் தொடர்பு
எனவும் நாம் காணலாம்.
கார்காலப் பிற்பகுதியில் வானில் பால்போலும் நிலவு கதிர்களைப் பரப்பும் முழுமதியைச் சுற்றிக் காணப்படும் வட்டம் குறிக்கப் பெறுகிறது.
திங்கள் பெண்களுடன் உவமிக்கப்படும் இயற்கைச்சூழலாகவும் பல இடங்களில் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது. இவ்வாறு இடம் பெற்றுள்ள செய்திகள் திங்களைப் பற்றிய ஆராய்ச்சி அறிவு பழந்தமிழகத்திலேயே இருந்ததை உணர்த்துகிறது. எஞ்சியவற்றைப் பிறிதொரு முறை காண்போம்.
         உலகெங்கும் உள்ள காய்கதிர் போன்ற கொடுங்கோலாட்சி மறைந்து   

          நிலவுபோல் தண்மையான ஆட்சி நிலவட்டும்!

- இலக்குவனார் திருவள்ளுவன்




No comments:

Post a Comment