>>அன்றே சொன்னார்கள்33
புதன் கோளுக்கு ஆங்கிலத்தில் மெர்க்குரி எனப் பெயர். மெர்க்குரீஇசு(Mercurius) என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து இச் சொல் உருவானது. மெர்க்குரி எனப்படும் புதன் கோள் வணிகக்கடவுளாகவும் தூதுத் தேவதையும் மைய்யாவின் (Maia) மகனுமாகும். கிரேக்க, உரோமன் தொன்மக்கதைகள் போன்றுதான் ஆரியக்கதையும் இயற்கைக் கோள்களைத் தெய்வப் பிறப்பாக அல்லது தேவதைகளாகக் கற்பனைச் சிறகெடுத்துச் சொல்லப்படும். பின்னர் ஆரியத்தாக்கத்தால் கோள்களைப் பற்றிய மூடக் கதைகள் தமிழிலும் இடம் பெற்றிருந்தாலும் தொடக்கத்தில் அறிவியல் அடிப்படையில்தான் உண்மைகளை உணர்ந்து தெரிவித்துள்ளனர்.
புதனுக்குத் தூதன் எனத் தமிழில் பெயர் இருப்பதும் இதனைத் தூது தேவதையாக மேலைநாட்டினர் கருதுவதும் ஒப்பு நோக்கத்தக்கது. இரண்டிற்கும் அடிப்படைக் காரணமே புதனின் விரைவான இயக்கம்தான். தூதன் விரைவாகச் செல்ல வேண்டுமல்லவா?
புதன், கதிரவனுக்கு மிக அருகில் உள்ள கோள். எனவே கடு வெப்பமாகவும் இருக்கும். இதன் நிறம் சாம்பல். சூரியன் அருகில் உள்ளதால் தோன்றும் தோற்றத்தைக் கொண்டு செம்மஞ்சள் என்பாரும் உள்ளனர். ஆனால், புதனுக்குப் பச்சை என்றும் தமிழில் குறிப்பிட்டுள்ளனர். பச்சை என்பது நிறமாக இருப்பின், -சனியின் நிறம் கருப்பு, செவ்வாய் நிறம் சிவப்பு என அறிந்து இருந்தமையால் - ஆய்தற்குரியது. பச்சை என்றால் புதிய என்னும் பொருளும் உண்டு. எனவேதான் பிறந்த பருவத்தில் உள்ள குழந்தையை நாம் பச்சைக் குழந்தை என்று சொல்கிறோம். அந்த வகையில் பெயர் அமைந்திருக்கலாம் என்பதை விளக்க விரும்புகிறேன். வெள்ளி சூரியன் மறையும் பொழுதும் தோன்றும் பொழுதும் தெரியக் கூடியது. முதலில் வெள்ளியைக் கண்டுபிடித்துள்ளனர் தமிழர்கள். வெள்ளி போன்றே புதனையும் அந்தி அல்லது வைகறைக் காலத்தில் - சூரியன் மறைகின்ற அல்லது தோன்றுகின்ற காலத்தில் - பின்னர் அறிந்துள்ளனர். அஃதாவது, கீழ்வானில் சூரியன் தோன்றுவதற்குச் சற்று முன்பாகவும் மேற்குவானில் சூரியன் மறைவதற்குச் சற்றுப்பின்பாகவும் புதன் மங்கலாகத் தோற்றம் அளிக்கும். புதன் வேகமாகச் சுழல்வதாலும் சூரியன் அருகே உள்ளதாலும் முதலில் புலப்படாமல் பின்னரே புலப்பட்டிருக்கிறது. எனவே, வெள்ளி போன்றே குறிப்பிட்ட நேரங்களில் தெரியும் புதன் கோளைக் கண்டறிந்தவர்கள் புதிய விடிகோள் என்பதால் பச்சை எனப் பெயர் இட்டிருக்கலாம்.
இதனை அறிவன் என்றும் கூறுவர். கரிய கோளான சனியைக் கரியன் எனக் கூறியது போல் காண்பதற்கு அரியது ஆன இதனை அரியன் எனக் கூறி இச்சொல் அறியவனாக மாறி அறிவனாகச் சுருங்கி இருக்கலாம். புதனைப் புத்தியுடன் தொடர்பு படுத்தி அறிவுடையவன் என விளக்கம் கூறுவது தவறாகும். இத்தவறான புரிதலின் அடிப்படையில்தான் அறிஞன், மதிமகன், மேதை முதலான பெயர்களில் புதன் அழைக்கப்பட்டுள்ளது(பிங்கல நிகண்டு: பா 231). புதவு என்பது வாயிலைக் குறிக்கும். சூரியனைச் சுற்றி உள்ள மண்டிலத்தில் சூரியனுக்கு அடுத்ததாகச் சூரிய ஒளி பரவும் இடத்தின் வாயில்போல் அமைந்துள்ளதால் புத் என்னும் வேர்ச்சொல்லின் அடிப்படையில் புதன் எனப் பெயர் வந்திருக்கலாம்.
மரபு தொடருவதற்கு வாயிலாகப் பிறக்கும் மகன் அல்லது மகள், புதல்வன் அல்லது புதல்வி என அழைக்கப்படுகின்றனர் அல்லவா? இவை போன்று சூரிய மண்டிலத்தின் வாயில் போல் அமைந்துள்ளதை உணர்த்தும் புதன் என்னும் சொல் அறிவியல் உண்மையை உணர்த்தும் தமிழ்ச் சொல்லாகும்.
‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்ற பழமொழியும் அறிவியல் உண்மையை நமக்கு உணர்த்துகிறது. இங்கு பொன் என்பது வெள்ளியைக் குறிக்கும்.(வெள்ளியின் மற்றொரு பெயர் வெண்பொன் என்பதாகும்.) இதனைக் கதிரவன் ஒளியில் காண்பது அரிது. இவ்வாறான சூழலில் வெள்ளியைக் காண முடிந்தாலும் கதிரவனுக்கு மிக அருகில் உள்ளதால் புதனைக் காண இயலாது என்னும் உண்மையைக் கூறியுள்ளதால் நம் முன்னோரின் வான நூல் அறிவு வியக்கத் தக்கதாகும்.
எத்தனை எத்தனை அறிவியல் உண்மைகள் நம்மிடையே மூடநம்பிக்கைப் போர்வையில் மறைக்கப்பட்டு உள்ளனவோ!
No comments:
Post a Comment