கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 16, 2011பழந்தமிழ்நாட்டில், பெரிய அகன்ற மாடிகள் பலவற்றை உடைய நகரத்தைப் போன்ற சிறப்பான மாளிகைகள் கட்டப்பட்டிருந்தன என்பதைப் பார்த்தோம். அவை வெறும் கட்டடங்களாக மட்டும் அல்லாமல் செல்வச் செழிப்பிற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கியமையால் வளமனை என்றும் திருமனை என்றும் செல்வமனை என்றும் சிறப்பாகச் சொல்லப்பட்டன.
பண்பார்ந்த பழங்குடிகள் நிறைந்த அகன்ற இடத்தை உடைய தொன்மையான ஊரில் உள்ள செழுமையான வீடு குறித்துக் கல்லாடனார்
பண்பின் முதுகுடி
நனந்தலை மூதூர் . . …..
செழுநகர் (புறநானூறு : 319.9-17) என்கிறார்.
செழிப்பான மாளிகையைச் செழு நகர் என்று புலவர் பாலைக் கௌதமனார் (பதிற்றுப்பத்து:21/12) கூறுகிறார். தோற்றத்தாலும் சிறப்பாலும் சிறந்து விளங்குகின்ற மாளிகையைப் புலவர் பெருங்குன்றூர் கிழார் (குறுந்தொகை : 338.7) விளங்கு நகர் என்கிறார்.
செல்வச் செழிப்பைக் காட்டும் வண்ணம் அமைக்கப்பட்ட வீடுகள் திருமனை (கிளிமங்கலங் கிழார் : குறுந்தொகை : 181.6) என அழைக்கப்பட்டன.
புலவர் கருவூர்க் கண்ணம்புல்லனார் செல்வம் மிகுந்த அழகிய மாளிகையைத்
திரு நகர் வரைப்பகம் (அகநானூறு : 63.2) என்கிறார்.
புலவர் மாமூலனார், மணல் பரப்பப்பட்ட பொலிவு மிகுந்த செல்வச் செழிப்பு மிக்க மாளிகையைத்
தரு மணல் ஞெமிரிய திரு நகர் (அகநானூறு : 187.9) என்கிறார்.
புலவர் ஒருவர் செல்வம் மிகுந்த பழமையான வீட்டை
மூதூர்த் திருநகர் (அகநானூறு : 114.13) என்கிறார். இவரே வீடுகளின்
மதில்கள், அவை மீது ஏற்றப்படும் கொடிகள் வானைத் தொடும் அளவிற்கு உயரமாக இருக்கும் என்பதை
நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை (அகநானூறு 114.9) என்னும்
வரியில் விளக்குகிறார்.
மற்றொரு புலவர், தொழில் நலம் பொருந்திய செல்வம் மிகுந்த மாளிகையை,
ஏர் வினை
வளம் கெழு திரு நகர் (அகநானூறு : 117.3-4) என்கிறார்.
நலமும் வளமும் பொருந்திய அழகான மாளிகையைப் புலவர் தயங்கண்ணியார்
வளம் கெழு திருநகர் (புறநானூறு : 250.6) என்கிறார்.
இனிமையாய்த் தூங்குவதற்குரிய செழிப்பான வளமனையைப் புலவர் உலோச்சனார்
இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின் (புறநானூறு : 377.3) என்கிறார்.
புறத்திணை நன் நாகனார் செல்வம் மிகுந்த சிறப்பான மாளிகையைத்
திருஉடைத் திருமனை (புறநானூறு : 379.16) என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வ வளத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டமையால் வளமனைகள் என்றும் அழைக்கப்பெற்றன. வளமனை என்பதற்கேற்ப வீடுகளில் செல்வவளத்திற்குரிய பொருள்கள் நிறைந்து காணப்பட்டு நாகரிகச் சிறப்பிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கின.
சிறப்பான பெரிய வளமனையைப் புலவர் வெறிபாடிய காமக்கண்ணியார் (அகநானூறு: 22.9),புலவர் கருவூர்க் கண்ணம்பாளனார் (அகநானூறு: 263.12) ஆகியோர் வள நகர் என்றே கூறுகின்றனர்.
பல வசதிகளும் உடைய வீட்டை வளமனை எனப் புலவர்கள் கயமனார் (அகநானூறு 275.4),மதுரைக் கண்ணத்தனார் (நற்றிணை 351.1), பரணர் (புறநானூறு 354.6; மதுரைக்காஞ்சி 603; குறிஞ்சிப்பாட்டு 223), ஓரம்போகியார் (ஐங்குறுநூறு : 66.4) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
பெரிய நகரத்தைப் போன்று தோற்றத்தாலும் அமைப்பாலும் உள்ளடக்கங்களாலும் சிறப்பாகவும் செழிப்பாகவும் உள்ள மாளிகைகளைச் செழுநகர் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
புலவர் நக்கீரர்
பெரும்பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன
செழு நகர் (அகநானூறு : 205.11-13) என்கிறார்.
தழை செறிந்த புன்னைகளை உடைய செழிப்பான மாடமாளிகையைப் புலவர் கல்லாடனார்
துதைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின் (புறநானூறு :391.17) என்கிறார்.
எனவே, இன்றைக்கு உள்ளவாறான செல்வ வளத்தை உணர்த்தும் வகையில் வீடுகள் சிறப்பாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அமைக்கப்பட்டுள்ளன என்பது தமிழர்களின் கட்டடக்கலைச்சிறப்பை உணர்த்துகின்றது அல்லவா?
No comments:
Post a Comment