Friday, April 15, 2011

andre' sonnargal 44 - type of buildings 6 :அன்றே சொன்னார்கள் 44 - கட்டட வகைகள் 6

அன்றே  சொன்னார்கள் 44 :

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 15, 2011


நகரங்கள் போல் பெரிதாக அமைந்த மாளிகைகளை நகர் என்றே பழந்தமிழர் குறிப்பிட்டள்ளதைக் கண்டோம். புலவர்கள், நகரங்களைப்பற்றிக் குறிப்பிடும் பொழுதே நகரங்களில் உள்ள கட்டடங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர். மாளிகைகள் பற்றிக் குறிப்பிடும் பொழுதே அவற்றின் உயரம், அகலம், காவல், வளமை முதலான சிறப்புகளை உணர்த்த அவர்கள் தவறவில்லை.
உயர்ந்த மேல்நிலைகளை உடைய பெரிய மனை நெடுநிலை வியல் நகர் எனச் சொல்லப்பட்டுள்ளது. புலவர் மதுரைச் சுள்ளம்போதனார்,
வியல் நகர் (நற்றிணை: 215.4) என அகன்ற மாளிகையைக்
குறிப்பிடுகிறார்.    எங்கள் தந்தையால்  பாதுகாக்கப்படும் காவலை உடைய அகன்ற மாளிகை எனத் தலைவி கூறுவதாகப் புலவர் உக்கிரப் பெருவழுதி
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர் (நற்றிணை : 98.8) எனக்
குறிப்பிடுகிறார்.

புலவர் மாமூலனார் (அகநானூறு: 15.11) புலவர் கண்ணங் கொற்றனார், புலவர் ஆலம்பேரி சாத்தனார் (நற்றிணை : 156.2; 255. 3), புலவர் கயமனார் (நற்றிணை : 305.3), புலவர் கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் (அகநானூறு: 232.13), புலவர் மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் (அகநானூறு: 298.16), புலவர் மோசி சாத்தனார் (புறநானூறு : 272.4), புலவர் மதுரைப் பேராலவாயர், (புறநானூறு : 247.8) ஆகியோர் காவலை உடைய அகன்ற மாளிகையைக்
கடியுடை வியல் நகர் எனக் குறிப்பிடுகின்றனர்.

புலவர் ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் (அகநானூறு: 224.17), புலவர் குடவாயில் கீரத்தனார்  (அகநானூறு 315.8),  மாறோக்கத்து நப்பசலையார் (புறநானூறு :363.6) ஆகியோர், அரிய காவலுள்ள அகன்ற பெரிய மாளிகையை
அருங் கடி வியல் நகர் என்கின்றனர்; புலவர் மாமூலனார்
(அகநானூறு : 311.2)
அருங் கடிக் காப்பின் அகல் நகர் என்கிறார்.
செல்வம் மிகுந்த பெரிய மாளிகையைத்,
திருவுடை வியல் நகர் என்கிறார் நக்கீரனார் (நற்றிணை: 258.4)

புலவர் சீத்தலைச் சாத்தனார் அழகு விளங்கும் பெரிய மாளிகையைச்
சீர்கெழு வியல் நகர் (நற்றிணை : 339.6) என்கிறார்.

புலவர் மதுரைப் பேராலவாயர் முன்புறம் மணல் பரப்பி உள்ள அகன்ற பெரிய மாளிகையை
மணல் மலி வியல் நகர் (நற்றிணை : 361.6 ) என்கிறார்.
புலவர் வண்ணப்புறக் கந்தரத்தனார்  உணவுப் பொருள்கள் மிகுதியாக உள்ள காவலுடைய பெரிய மாளிகையை
அல்குபதம் மிகுத்த கடிஉடை வியல் நகர் (அகநானூறு : 49.14)
என்கிறார்.

பெருஞ்செல்வமும் மிகுந்த உணவுப் பொருளும் நிறைந்த பெரிய மாளிகையைப் புலவர்  மருதனிளநாகனார்,
பெருந்திரு நலைஇய வீங்குசோற்று அகல்மனை (கலித்தொகை 83.1)
என்றும் அகல் நகர் (கலித்தொகை 83.11; 84.13) என்றும் கூறுகின்றார்.

திருமணம் நிகழ்த்தும் அளவிற்குப் பெரிதாகிய திருமண மாளிகையைப் புலவர் விற்றூற்று மூதெயினனார்
கடி நகர் புனைந்து (அகநானூறு : 136.6) என்கிறார்.  உணவுப் பொருள் நிறைந்த (அயினிய) திருமண இல்லத்தைப் புலவர் நக்கீரர்
புது மண மகடூஉ அயினிய கடி நகர் (அகநானூறு : 141.1) என்கிறார்.

புலவர் மதுரைப் பேராலவாயார், விடியும் வரை விளக்கெரியும் வானளாவிய அகன்ற பெரிய மாளிகையை
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர் (அகநானூறு : 87.13)
என்கிறார்.

புலவர் மதுரை மருதன் இளநாகனார் (அகநானூறு: 206.11) புலவர் கயமனார்  (அகநானூறு: 397.3) ஆகியோர்,  ஓய்வில்லாமல் முழவு ஒலி கேட்கும் வண்ணம் எப்பொழுதும் விழாக்கோலம் பூண்டுள்ள  பெரிய மாளிகையை
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர் என்கின்றனர்.

புலவர் கயமனார் சிறப்பு மிகுந்த பெரிய மாளிகையைச்
சீர் கெழு வியன் நகர் (அகநானூறு : 219.1) என்கிறார்.

உயர்ந்த மாடிகளை உடைய அகலமான பெரிய மனைகள் எழுப்பப்பட்டமையைப் புலவர்
காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
உறையுநர் போகிய ஓங்குநிலை வியல்மனை (அகநானூறு:103.8) என்கிறார்.
எனவே, அகலமாகவும் பெரியதாகவும் பல மாடிகளை உடையதாகவும் தமிழ்நாட்டு மாளிகைகள் அன்றே கட்டட இலக்கணத்திற்கு இணங்கக் கட்டப்பட்டு இருந்தன என்பது தெளிவாகிறது. இன்றைய கட்டடவியல் சிறப்பு மிக்க பெருமாளிகை நாகரிகத்தை அன்றே தமிழர்கள் கண்டறிந்திருந்தனர் என்பதில் சிறிதும் ஐயமில்லை

No comments:

Post a Comment