தீபாவளி தரும்
மகிழ்ச்சி!
தலைப்பைப் பார்த்ததும் தீபாவளியன்று உடுத்தும்
புத்தாடையாலோ, உண்ணும்
தின்பண்டங்களாலோ, வெடிவகைகளாலோ
ஏற்படும் மகிழ்ச்சியோ என எண்ண வேண்டா! ஏனெனில் நாங்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை.
கொண்டாடாமலே மகிழ்ச்சியா என்றால், ஆம்! தீபாவளி மூலம் வெளிவரும் பிள்ளைகளின், சொல்திறம்பாமையைப் பேணும் பண்பு, கட்டுப்பாடு
முதலியன தரும் மகிழ்ச்சிதான். நம் மக்கள்
மழலையராக இருந்தால்தான் மகிழ்ச்சி என்றில்லை. எவ்வளவுதான் வளர்ந்தாலும் நமக்கு
அவர்கள் மக்கள்தாமே! ஆகவே, அவர்களின்
செயல்கள் மகிழச்சி அளிப்பதில் வியப்பில்லை. நம் மக்களால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி பல
வழிகளில் இருக்கும். இங்கே தீபாவளியுடன் தொடர்புடைய நிகழ்வால் ஏற்படும்
மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
அறிவியலுக்குப் பொருந்தா வகையிலும் நம்மை
இழிவுபடுத்தும் வகையிலும் கதைகள் கூறப்படுவதால் தீபாவளி கொண்டாடுவதில்லை. ஆனால்,
அக்கம் பக்கத்தினர்
வெடித்தும் கொளுத்தியும் மகிழும் பொழுது பிஞ்சு உள்ளங்கள் வாடிப்போகக்கூடாதே என
வெடி, மத்தாப்பு வகைகள்
வாங்கித் தரும் வழக்கம் இருந்தது. இவ்வாறு, புத்தாடையும் தின்பண்டங்களும் அற்ற தீபாவளியாக
இருந்ததும் நன் மக்களின் நல்லுணர்வால் நின்றது.
எங்கள் மகள் தி.ஈழமலர் 8 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது, தீபாவளிக்கு முந்தைய ஒரு வாரத்தில் - நெடுநேரம் கழித்து அலுவலகத்திலிருந்து வரும்
வழக்கத்திற்கு மாறாகச் - சற்று முன்னதாக
மாலை 6.30 மணிக்கே புறப்பட்டு வீட்டிற்கு வந்தேன். முன்னதாக
வருவதால் சற்று நடந்து செல்லலாம் என எண்ணி நடந்தே வீட்டிற்கு வந்தேன். வரும்
வழியில் அடுத்தடுத்து வெடிக்கடைகள்
இருப்பதைப் பார்த்துக் கொண்டு வந்தேன். மந்தைவெளியில் புதிய வெடிவகைகள், சற்றுக் குறைவான விலையில் இருப்பதைக்
கண்ணுற்றேன். பிறகு வாங்க நேரம் கிடைக்காது என எண்ணியவாறு, பிள்ளைகளை அழைத்துச் சென்றும் விருப்பத்தை
அறிந்தும் வாங்காமல் வெடிவகைகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றேன்.
பிள்ளைகளின் மகிழ்ச்சியை எதிர்நோக்கிய எனக்கு முதலில் ஏமாற்றம் வந்தது.
மகள்
தி.ஈழமலர், “அப்பா நான் வெடி
வெடிக்க மாட்டேன்” என்றாள்.
“அஞ்சாது வெடி. நானும் அம்மாவும் பக்கத்தில் இருக்கிறோம். அல்லது வண்ண
மத்தாப்பு, கம்பி மத்தாப்பு,
பூவாணம், முதலான
பிற வகைகளைக் கொளுத்து” என்றேன்.
“எந்த வெடி வகையும் இப்பொழுது மட்டும் அல்ல
எப்பொழுதும் எனக்கு வேண்டா” என்றாள்.
“சரி, காரணத்தையாவது சொல்” என்றேன்.
“சொல்லிய வண்ணம் செய்ய வேண்டும் என்று நீங்கள்தானே சொன்னீர்கள்.” - மகள்
“ஆம். அதற்கு என்ன?” - நான்
“குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகப் பேச்சுப் போட்டியிலும் கட்டுரைப்
போட்டியிலும் பங்கேற்று முதல் பரிசுகள்
வாங்கி வந்தேன் அல்லவா” - மகள்
“ஆமாம். அதற்கென்ன?” - நானும் மனைவி
அன்புச்செல்வியும்
“சிறுவர் சிறுமிகளின் கல்வி உரிமையைப் பறித்து உழைக்கச் செய்து உற்பத்தி
செய்யும் வெடிகளைப் பயன்படுத்தக் கூடாது எனப் பேசிக் கை தட்டுகளும் வாங்கினேன் அல்லவா?”
- மீண்டும் மகள்.
“நீ சொல்வதெல்லாம் உண்மைதான். அதனால் என்ன சொல்ல வருகிறாய் ?” - நாங்கள்
“நானே நான் சொன்னதற்கு மாறாக நடக்கலாமா? அதனால்தான் வெடிகள் வேண்டா என்கிறேன்.” -மகள்.
“நீ சொல்வது மகிழ்ச்சியாகத்தான்
உள்ளது. ஆனால், இந்த முறை வாங்கி விட்டேனே! அடுத்த ஆண்டு முதல்
இதை நிறுத்திக் கொள்ளலாம்” - நான்தான்.
“இப்பொழுது சொன்னால், பிறகு
செய்து கொள்ளலாம் என நீங்கள்
சொல்லவில்லையே!” - மகள்.
இதுவரை தமக்கை கூறியதை அமைதியாகக் கேட்டுக்
கொண்டிருந்த 6 ஆம் வகுப்பு
படிக்கும் மகன் தி.ஈழக்கதிர், “அப்பா, அக்காவிற்கு வேண்டா என்றால் எனக்கும் வேண்டா” என்றான்.
“அக்கா, தான்
தெரிவித்ததற்கு மாறாக நடக்கக்கூடாது என்கிறது. உனக்கு என்ன?” என்றேன்.
“நான் சொல்லாவிட்டால் என்ன? அக்காவிற்குச் சரி என்றால் அதுதானே எனக்கும் சரி. எனவே, எந்த வெடியும் வேண்டா!” - மகன்
“சரி! போகட்டும்! நம் பகுதியில் யாரும்
இப்பொழுதே வெடி வாங்கியதாகத் தெரியவில்லை.
அவர்களுடன் சேர்ந்து வெடிக்கும் வகையில் எல்லார்க்கும் பிரித்துக் கொடுத்து,
இந்த முறை நீயும் வெடி” என்றேன்.
அரைகுறை மனத்துடன் சரி என்றவன் பிற
சிறாருக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டுத்தானும் ஒப்புக்குச் சில வெடி வெடித்தான்.
பிள்ளைகளிடம் நேரடியாக எதுபற்றியும் அறிவுரை
கூறுவதில்லை. பிறரிடமும் மேடையிலும் பேசுவதையும் எழுதுவதையும் வைத்துக் கொண்டு
அவர்களாக வளர்த்துக் கொண்டதுதான் தமிழ்
உணர்வு, பகுத்தறிவு
முதலான எல்லாமும். ஆனால், ஒன்றும்
கூறாவிட்டாலும் வேறு பார்வையில் அவர்கள் தீபாவளியை நிறுத்தியதும் அதற்குச் சொன்ன
காரணமும் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கக் கூடியன. சொன்னவண்ணம் நடக்க வேண்டும் என்ற
மன உறுதி சிறு அகவையில் இயல்பாக அமைந்திருந்தது உண்மையிலேயே உவகை
அளிக்கக்கூடியதுதானே!
ஆரியப்புரட்டும் காசைக் கரியாக்கக்கூடாது என்ற
நிலைப்பாடும் ஊட்டப்பட்டாலும் பத்தாம் வகுப்பு படிக்கும்பொழுதுதான் எனக்கு மண்டையில் உறைத்தது. நாம் சொல்லாமலே
வேறு வகையில் பிள்ளைகள் நல்ல
முடிவிற்குவந்தது,
“தம்மின், தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம், இனிது”
எனும் வள்ளுவத்தை உணர்த்தியது(திருக்குறள்: 68).
பிறர் வெடிப்பதைப்பார்த்து ஏக்கம் வருமோ என
எண்ணிச் சில தீபாவளிகளின் பொழுது “வெடி வாங்கித் தரட்டுமா” என்று கேட்டால்
வழக்கம்போல் மறுப்புதான் கிடைக்கும். “குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்பட்டது என்ற
சான்றிதழுடன் வந்துள்ள வெடி வகைகள் உள்ளன. வாங்கித் தரட்டா” என்றால் அதற்கும் மறுப்புதான்.
இன்று மகள் தி. ஈழமலர் பாலாசி, முது பொறியியல் முடித்துவிட்டுக் கல்லூரி
ஒன்றில் உதவிப் பேராசிரியர்.
மகன் தி.ஈழக்கதிர் பொறியியல் முடித்து விட்டு
இன்ஃபோசிசு நிறுவனத்தில் பொறியாளர்.
இருப்பினும் தங்கள் கொள்கையில் விடாப்பிடியுடன்
இயல்பாகவே உள்ளனர்.
"தம் பொருள் என்ப தம் மக்கள்" எனத் தெய்வப்புலவர்
திருவள்ளுவர் கூறுவதுபோல்,
நம் மக்கள்தாமே நமக்குச் செல்வம்!
"பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை-அறிவு அறிந்த
மக்கட் பேறு அல்ல பிற" (திருக்குறள்: 61)
எனச் சரியாகத்தானே
தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறியுள்ளார்.
நீங்களே சொல்லுங்கள்! பிள்ளைகள் தீபாவளியைக் கொண்டாடுவதைப்
பார்த்தால்தான் மகிழ்ச்சி வரவேண்டுமா? பொறுப்புணர்வுடனும் சொன்னதைச் செய்ய வேண்டும் என்ற கடப்பாட்டுணர்வுடனும்
கொண்டாடாமல் இருப்பதும் மகிழ்ச்சிதானே!
பிள்ளைகளின்
நற்செயல்கள் அவ்வப்பொழுது மகிழ்ச்சி தந்தாலும் தீபாவளியின் பொழுது
அவர்களின் பொறுப்புணர்வால் பெறும் மகிழ்ச்சி தனிதான்.!
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment