பணிமலர்
1.சித்திரையில் தமிழ்
நான் மதுரையில் 1990 இல் தமிழ்
வளர்ச்சி உதவி இயக்குநராகப் பொறுப்பேற்றேன்.
அதன்பின் நடைபெறும் முதல் சித்திரைப்
பொருட்காட்சி வந்தது. பொருட்காட்சி
தொடங்கும் முன்னர் அரங்குகளைச் சுற்றிப்பார்த்தேன். பெரும்பகுதி ஆங்கிலமே காட்சி
அளித்தது. காவல் துறையில் நூற்றுக்கு நூறு ஆங்கிலமே ஆட்சி செய்தது. மாநகராட்சி அரங்கத்தில் ஆங்கிலம் ஓரளவே இருந்தாலும், தமிழ் சரியான முறையில் எழுதப்பெறவில்லை. அனைத்து அரங்கங்களிலும், பொதுவாகப் பெரும்பகுதி ஆங்கிலமே காட்சி அளித்தது. இதனை மாற்ற எண்ணினேன். அரசு, தன்னாட்சி,
உள்ளாட்சி, தனியார் என
நான்கு பிரிவுகளாக மும்மூன்று கேடயங்கள்
வழங்கிப் பரிசுத் திட்டம் அறிவிக்க எண்ணினேன். கேடயம் சிறப்பாக அமையவேண்டுமே. என்ன
செய்யலாம்? என்ற சிந்தனை. பொதுவாகப் பிறரிடம்
பொருளுதவி கேட்காமல் எதையும் நடத்தி வந்ததால் யாரிடமும் செல்லத் தயக்கம். எனினும்
நண்பர்களை அணுகினால் தவறல்ல என, என் பள்ளித் தோழர் மரு.ஔவை
மெய்கண்டான் அவர்களைச் சந்தித்து
உரைவேந்தர் ஔவை நினைவுக் கேடயமாக வழங்க
இருப்பதாகக் கூறி விவரம் தெரிவித்தேன். உடனே இசைந்தார். 12 கேடயங்களையும் தானே வாங்கித் தருவதாகவும் கேடயங்களை
மட்டும் தேர்ந்தெடுத்துத் தருமாறும் கூறினார்.
அவரும் நானும் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது சித்திரைப் பொருட்காட்சியில்
நடந்த பரதன் நாடகத்தில் இலக்குமணனாகவும்
சத்துருக்கனன் ஆகவும் நடித்தோம். அதே பொருட்காட்சித் திடலில் இப்பொழுது இணைந்து ஒரு போட்டி நடத்துகிறோம் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. இம்மகிழ்ச்சியுடன்
போட்டியை அறிவித்துவிட்டேன். தமிழில்
எழுத இடர் இருந்தால் வழிகாட்டுவதாகவும் அறிவித்து இருந்தேன். மக்கள் தொடர்பு
அலுவலர் திரு இராவணன்,
செய்தியைப் பரப்ப உதவினார்.
காவல் ஆணையரிடம், மிக அருமையான அரங்கினை அமைத்து, மக்களுக்குப்
பயன் உள்ள தகவல்களைத் தெரிவித்து
உள்ளீர்களே! இவை ஆங்கிலத்தில் இருப்பதால் என்ன பயன்? என்றேன். மதுரை மாநகராட்சி ஆணையரிடம் தொடர்பு கொள்ள
முடியவில்லை. அலுவலகத்தில் முதல் பரிசு பெற வாய்ப்பு இருந்தும் தவற விடும் வகையில் ஆங்கிலத் தகவல்கள் ஆங்கில
அறிவிப்புகள் இருப்பதைக் கூறினேன்.
இவ்வாறு, ஆங்கிலம் மிகுதியாக இருந்த துறையின் அலுவலர்களிடம் தொலைபேசியில்
தொடர்பு கொண்டு அலுவலகப்பணிகளில் தமிழில் எழுதுவதில் ஆர்வம் காட்டுவதுபோல்
மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியவற்றை மக்கள்மொழியான தமிழில் எழுத வேண்டியதை உணர்த்தினேன். பொருட்சி தொடங்கிய பொழுது ஒரே
வியப்பு. ஏறத்தாழ பெரும்பாலான துறைகளில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டிருந்தாலும்,
காவல் துறையில் இருந்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால், காவல் அரங்கு முழுமையும் கவிதை வடிவிலேயே தகவல்களும் அறிவிப்புகளும் நிரம்பி இருந்தன. முழுமையும்
தமிழ் அங்கே ஆட்சி செய்தது. என்னிடம்
தொடர்பு கொண்டிருந்தாலும் அவர்கள் கேட்கும் ஐயங்களைத் தெளிவு படுத்திப் பிழையின்றி
எழுதவும் தமிழ்க் கலைச்சொற்களைப் பயன்படுத்தவும்தான் வழிகாட்டி இருப்பேன். ஆனால், அவர்களாக அருமையாய் அமைத்து இருந்தார்கள். பொருட்காட்சி நிறைவின்பொழுது அவர்களுக்கே அரசுத்துறைகளுக்கான முதல் பரிசு கிடைத்தது.
உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மதுரை
மாநகராட்சி 3 ஆவது பரிசு பெற்றது என எண்ணுகிறேன். அப்பொது ஆணையர் திரு குணாளன் இ.ஆ.ப அவர்களிடம் அவர்கள் முதல்பரிசு
பெறும் வாய்ப்பைத் தவற விட்டதைச் சுட்டிக்காட்டினேன். உடனே அவர் அலுவலக நேர்முக உதவியாளரிடம் பிற
அலுவலர்களிடமும் த.வ.உ.இயக்குநர் எப்பொழுது தொடர்பு கொண்டாலும் உடனே சந்திக்கச் செய்ய வேண்டும் என்றும் இனி, அவரது அறிவுரைப்படி நடந்து மாநகராட்சி முழுமையும் தமிழில் செயல்பட
வேண்டும் என்றும் தெரிவித்தார். அப்பொழுது் அவரிடம் புதிதாக
அமைக்கப்பட்டுத் திறக்கப்பட உள்ள அண்ணா
பேருந்து நிலையக் கடைகளில் எல்லாம் ‘கடைநம்பர்’ என எழுதி
உள்ளதாகவும் தமிழில் எழுதப்பெற்றிருந்தாலும் கடை எண் என எழுதுவதுதானே மாநகராட்சிக்குப் பெருமை சேர்க்கும் என்றும்
கூறினேன். உடனே அவை அனைத்தும் திருத்தி எழுதுமாறு கூறி மறுநாளே திருத்தி எழுதப்பெற்றன. இவ்வாறு பரிசு
பெற்ற ஒவ்வொரு துறையின் உயர் அலுவலர்களிடமும் தனிப்பட்ட அரங்கு அமைப்பாளர்களிடமும் பிறரிடமும் தமிழ்ப்பயன்பாடு முழுமையாக இருக்குமாறு
பார்த்துக்கொள்ளுமாறு தெரிவித்தேன். வரும்
ஆண்டிலிருந்து கடை அரங்குகளிலும் தமிழ் நிலவ நடவடிக்கை எடுக்கச்செய்தித்துறை அலுவலர்களிடமும்
தெரிவித்தேன்.
குழந்தைகளுக்கான நரம்பியல் வல்லுநரான
மரு.ஔவை மெய்கண்டான் உதவியால் சித்திரைப்
பொருட்காட்சியில் தமிழ்மலர வாய்ப்பு
கிடைத்தது. அரங்கில் நடைபெற்ற விவரங்கள் பிற
மாவட்டப் பொருட்காட்சிகளிலும் வைக்கப்பட்டதால் பிற மாவட்டங்களும் நன்மை பெற்றன. இப்பொழுது பொருட்காட்சிகளில் ஆங்கிலமும் ஆட்சி
செய்தாலும் இருக்கின்ற தமிழுக்கு
உரைவேந்தர் ஔவை நினைவுப் பரிசுக்
கேடயங்களே அடிக்கல் இட்டன என்பது மன நிறைவாக உள்ளது.
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment