சூன் 3 ஆம் நாள் இந்தியத் தலைமையாளரைத்
தமிழக முதல்வர் சந்திக்க இருப்பதாகச் செய்தி உலா வருகின்றது. அன்றோ வேறு
என்றோ இருவர் சந்திப்பும் நிகழத்தான் போகிறது. ஆனால், இந்தச் சந்திப்பு,
தமிழ்நாட்டிற்குப் பயன் தரும் வகையில் அமைய வேண்டும்.
மக்களவையில் தனிப் பெரும்பான்மை பெற்றுவிட்ட பாசகவிற்கு மாநிலங்களவையில்
பெரும்பான்மை இல்லை. எனவே, அஇஅதிமுக ஆதரவு அதற்குத் தேவை. இந்தச் சூழலைப்
பயன்படுத்தி இரு கட்சிகளும் நெருங்கி வரலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி
மத்திய அரசில் அஇஅதிமுக பங்கேற்கும் வாய்ப்பும் வரலாம். இதன் மூலம்
அமைச்சர் பதவிகள் பெற்று, வேண்டும் வகையில் தமிழ்நாட்டின் தேவைகளை
நிறைவேற்றிக் கொள்ளலாம். என்றாலும் கட்சி அளவில் இது நன்மை விளைவிக்காது.
பெரியார், அண்ணா கருத்துகள் பதிந்த தமிழ்நாட்டில் காங்.கும் பாசகவும் சம
அளவில் விரட்டப்பட்ட தொலைவில்தான் உள்ளன. இதனால், வரும் தேர்தலில்
அஇஅதிமுகவிற்கு ஊறு நேரலாம். இக்கட்சி சேருவதால் பாசக கூட்டணியில் உள்ள
தமிழகக் கட்சிகள் திமுக கூட்டணியில் சேரத் தள்ளப்படும். இதனாலும் தேர்தலில்
வெற்றி வாய்ப்பு குறையும் வாய்ப்பும் ஏற்படும். எனவே, இதனைக் கைவிடுவது
அக்கட்சிக்கு நல்லது.
அதே நேரம், எதிர்க்கட்சிகளுக்குரிய
மக்களவைத் துணைத்தலைவர் பதவி முதலானவற்றை அஇஅதிமுக பெற வேண்டும். இதனால்,
இணக்கமான சூழலும் ஏற்படும்; தனித்தன்மையும் காப்பாற்றப்படும்.
இதில் எந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டாலும் அதற்கு முன்னராக வேறு சில உறுதிகளை மத்திய அரசிடம் பெற வேண்டும்.- தமிழ் நாட்டுச் சட்ட மன்றத்தில் ஈழம் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தச் செய்ய வேண்டும்.
- சிங்கள இனப்படுகொலையாளிகளும் உடந்தையாக இருந்த காங்.குற்றவாளிகளும் அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.
- பன்னாட்டு நீதிமன்றத்தின் முன்னர் பட்சே போன்ற கொலையாளிகள் நிறுத்தப்பட்டுத் தண்டனை பெற இந்தியா ஆவன செய்ய வேண்டும்.
- இப்பொழுது தமிழ் ஈழமண்ணைச் சிங்களம் வன்முறையில் கவர்ந்தும், சிங்களக் குடியேற்றங்களைப் பரவலாக்கியும் சிங்களமயமாக்கி வருகின்றது. எனவே, இதற்குக் காரணமானவர்களும் பேரினப்படுகொலைக்குப் பின்னரும் அன்றாடம் இனப்படுகொலைகளிலும் கற்பழிப்பு முதலான கொடுமைகளிலும் ஈடுபடுவோரும் தண்டிக்கப் பெற வேண்டும்.
- தமிழ் ஈழத்தை இந்திய அரசு ஏற்க வேண்டும்.
- 01.01.1600 இல் இலங்கைத் தீவில் தமிழ்மக்கள் வாழ்ந்த பகுதி தமிழ் ஈழம் என எல்லை வரையறுக்க வேண்டும்.
- கச்சத்தீவைத் திரும்பப்பெற்றுத் தமிழ்நாட்டிற்குரியதாக்க வேண்டும்.
- கேரளா, ஆந்திரா, கருநாடகா மாநிலங்களில் இணைக்கப்பட்ட, தமிழ்மக்கள் வாழும் தமிழ் நிலம், மீ்ண்டும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்படும் வகையில் எல்லைச் சீரமைப்பு மேற்கொள்ள வேண்டும்.
- இராசீவு கொலை வழக்கில் சிக்கிய அப்பாவிகளும் தமிழ்நாட்டுஅரசால் விடுதலை செய்யப்பட அறிவிக்கப்பட்ட பிறரும் விடுதலை செய்யப்படுவதற்குத் தடையாக உள்ள மத்திய அரசின் சீராய்வு முறையீடு விலக்கப்பட்டு இவர்கள் விடுதலைக்கு வழி வகுக்க வேண்டும்.
- வீரப்பன் தொடர்பான வழக்குகளில் சிக்க வைக்கப்பெற்று, கருநாடகாச் சிறைகளில் உள்ள அப்பாவித் தமிழர்கள் விடுதலை செய்யப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காவிரி, பெரியாறு தொடர்பான சிக்கல்களில் தமிழ்நாட்டிற்கு விரைவில் நிலைாயன நீதி வழங்கப்பட வேண்டும்.
- மத்திய அரசின் ஆட்சிமொழியாகத் தமிழும் அறிவிக்கப்பட வேண்டும்.
- தொல்காப்பியர், திருவள்ளுவர், சங்கத்தமிழ் சிறப்பு முதலானவை அனைத்து மொழிப் பாடங்களிலும் இடம் பெறச் செய்ய வேண்டும்.
- மத்திய அரசின் திட்டங்களுக்குத் தமிழ்ப் பெயர்களும் சூட்டப்பட வேண்டும்.
- உச்சநீதி மன்றம் வரை தமிழ், முறைமன்ற மொழியாக ஏற்கப்பட வேண்டும்.
- தமிழ்மக்கள் வாழும் பிற நாட்டுத் தூதரகங்களில் தமிழர்கைளயே தூதர்களாக அமர்த்த வேண்டும்.
- புலம் பெயர் தமிழர்கள் வாழும் நாட்டில் சம உரிமையுடன் வாழ வழி செய்ய வேண்டும்.
- இவைபோல், தமிழ்நலன் தொடர்பான செயல்களில் மத்தியஅரசை ஈடுபடுத்த வேண்டும்.
எனவே, தலைமையாளர் நரேந்திரரும் முதல்வர்
செயலலிதாவும் சந்திப்பது என்பது இரு தனிப்பட்டவரின் சந்திப்பு
என்றில்லாமல் தமிழ்நாட்டிற்கும் தமிழர்க்கும் தமிழ்மொழிக்கும் நன்மை தரும்
சந்திப்பாக அமைய வேண்டும்.
அதே நேரம், தமிழக அரசும், தமிழ் தமிழ்
நாட்டின் கல்விமொழியாக, நீதிமன்ற மொழியாக, ஆட்சி மொழியாக, இறைவழிபாட்டு
மொழியாக என்றென்றும் திகழ நடவடிக்கை எடுக்க வேண்டும். முதன்மைப் பதவிகளில்
தமிழர்களையே அமர்த்த வேண்டும். தமிழ் தொடர்பான துறைகளிலும் அமைப்புகளிலும்
தமிழாய்ந்த தமிழ்ப்பற்று மிக்க தமிழர்களையே அமர்த்த வேண்டும். இங்குள்ள
ஈழத்தமிழர்கள் இந்நாட்டுமக்கள்போல் உரிமையுடன் வாழ வழி செய்ய வேண்டும்.
மத்திய அரசிடம் முறையிடுவது தொடர்பாக
எத்தகயை சிக்கல்களும் இங்கு இல்லை எனவும் தமிழ்நாடு முன்முறையாக
நன்முறையில் செயல்படுகின்றது என்றும் காட்டவேண்டும்.
தமிழ், தமிழருக்குள்ள தடைகள் நீங்க இருவர் சந்திப்பும் வழிவகுக்கட்டும்!
தமிழர் நலன் ஓங்கட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
வைகாசி 18, 2045 / சூன் 1, 2014
No comments:
Post a Comment