தன் பாசக்காரக்கூட்டாளி பக்சேவை அழைக்க வேண்டும் என்பதற்காகவே,
தன் பதவியேற்பு விழாவிற்குத் தெற்காசியத் தலைவர்களை
அழைத்திருந்திருக்கின்றார் நரேந்திர(மோடி). ஆனால், அவரை அழைத்தது அரசியல் தந்திரம்
எனவும், நரேந்திரரின் மந்திரக்கோலால்
பக்சே பெட்டிப்பாம்பாக அடங்கிவிட்டதாகவும்
பாசக சார்பு ஊடகங்களில் பரப்பப்பட்டன. திரும்பத் திரும்ப இவற்றையே கேட்ட
மற்றவர்களும், ‘’நாம்தான் தவறாக எண்ணிவிட்டோமோ, உண்மையில் இனப் படுகொலையைாளியை அழைத்தது
எச்சரிக்கத்தானோ’’, என்றெல்லாம் எண்ணத் தொடங்கினர். ஆனால், பக்சே, ‘’உனக்கும் பெப்பே, உன் அப்பனுக்கும் பெப்பே’’ எனக் காட்டி
விட்டான். அதன் விளைவுதான், மீன்பிடி தடைக்காலம் முடிந்து
மீன்பிடிக்கச் சென்ற முதல்நாளிலேயே, சிங்களக்
கடற்படையினர், 33 அப்பாவித் தமிழ் மீனவர்களைத் தாக்கி
இழுத்துச் சென்றதும், அவர்களின் ஏழு படகுகளையும் பறிமுதல் செய்ததும்.
இந்திய அரசு என்பது தமிழருக்கான அரசு அல்ல என்பதைச் சிங்களக் கொடுங்கோலர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். எனவேதான்,
ஒரு நாளைக்கூட அவர்கள் வீணாக்க விரும்பவில்லை.
எங்கே, நரேந்திர(மோடி) ஆட்சியால் தமிழ் மக்களுக்குத்
தங்களைக் காப்பாற்ற தேவதூதன் வந்துவிட்டதாக நம்பிக்கை வந்துவிடுமோ எனக் கருதினர்.
எனவேதான், தமிழக மீனவர்கள், மீன்தடைக்காலம்முடிந்து மீன்பிடிக்கச் சென்ற முதல் நாளேிலேயே
வன்முறையால் இழுத்துச் செல்லப்பட்டனர்.
செய்தி கேட்டதும், நாம் கருதுவதுபோல், நரேந்திர(மோடி), இந்தியக் கடற்படையினரிடம் ‘’தமிழக
மீனவர்களைக் காப்பாற்றி, எல்லை மீறிய சிங்களக் கடற்படையினரைக் கைதுசெய்து இழுத்துவந்து
என்னுடன் இரவு விருந்தில் கலந்து
கொண்ள்ளுங்கள்’’ என அறிவிக்கவில்லை. ஏனெனில், பிடிக்கப்பட்டவர்கள் தமிழக மீனவர்கள்தாம்! இந்தியர்கள் அல்லர்!
‘’பக்சேவின் போக்கைப் பொறுத்துத் தமிழ் ஈழம் அமையும்’’ என்றாரல்லவா? பா.ச.க. தலைவர், மத்திய இணையமைசசர் பொன்.இராதாகிருட்டிணன். அவருக்கு விடையளித்துள்ளது,
சிங்களக் கொடுங்கோலரசு. ‘’நாங்கள், நாங்களாகத்தான் இருப்போம்’’ என்று.
இனியேனும் மத்திய அரசு என்ன செய்கிறது என்றுபார்ப்போம்! தமிழர்களின்
உழைப்பையும் செல்வத்தையும் உறிவதற்கு
இந்தியர்களாகவும் உதவி வேண்டப்படும் நேரத்தில் உதறித்தள்ள வேண்டிய தமிழர்களாகவும்
எத்தனை நாளைக்குத்தான் நடத்தப் போகிறது என்பதைப் பார்ப்போம்!
15.2.2012 அன்று கேரள மீனவர்கள் இருவரைச்
சுட்டுக் கொன்றதற்காக, மாசுமிலியானோ (இ)லாட்டோரே, சல்வாட் டோரே சிரானே என்னும்
இரு இத்தாலியக்கடற்படையினர் தளையிடப்பட்டனர்.
சிங்கள ஒற்றையாட்சியை வலியுறுத்தும் பாசகவும் மார்க்சியப் பொதுவுடைமைக்கட்சியும்
கடுமையான நடவடிக்கை வேண்டும் என வற்புறுத்தின. இப்பொழுது பாசக ஆட்சிப் பொறுப்பில்
இருந்தாலும் அமைதி காக்கிறது. மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் எதிரி ஆட்சியில்
இருப்பினும் அக்கட்சி வாய்மூடிக் கிடக்கிறது. ஏனெனில் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டவர்கள், தமிழர்கள்தானே! இந்தியத்தில் கரைந்து இனவுணர்வற்றுப் போனால்
இதுதான் நிலை என்பதை நாம் புரிந்துகொள்ளும் வரை இது தொடரும்.
என்றாலும், நாம், சிங்களத் தீயாட்சிக்கு, ‘’நீ, நீயாகவே இருப்பதற்கு நன்றி’’
எனச் சொல்ல வேண்டும்! அப்பொழுதுதான், மனித நேயர்கள் உண்மையைப் புரிந்து தீயாய் மாறி அழிக்க முடியும்!
சிங்களத் தீயாட்சியே! நீ,
நீயாகவே இரு! தீயாய் அழிப்போம்!
-
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment