[புதுச்சேரியில் நடைபெற்ற உத்தமத்தின்13 ஆவது தமிழ் இணையமாநாட்டில் இடம் பெற்ற கட்டுரைகள் சில அடுத்த இதழில் வெளிவரும். இப்பொழுது இவ்விதழில் பிழையில்லாப் பிழைதிருத்திகள் தேவை என்னும் என் கட்டுரை இடம் பெறுகிறது. தனியாக வெளியிடுவதன் காரணம், இக்கட்டுரை கருத்தரங்க வாசிப்பிற்குத் தெரிவு செய்யப்படவில்லை என்பதால், கருத்தரங்கக் கட்டுரை வரிசையில் இடம் பெறுவது முறையல்ல என்பதே! மாண்புமிகு மதிப்பீட்டாளர்கள், 10க்கு 5 மதிப்பெண்ணிற்குக் குறைவாக வழங்கியதால் கட்டுரை இடம் பெறவில்லையாம்! நீங்களே சொல்லுங்கள்! இத்தகைய கட்டுரை வல்லுநர்களுக்கு வழிகாட்டியாகத் தேவையா இல்லையா என்று! எனினும் இக்கட்டுரை உருவாகக் காரணமாக இருந்தமைக்காக மாநாட்டுப் பொறுப்பாளர்களுக்கு நன்றி. - இலக்குவனார் திருவள்ளுவன்]
pizhaithiruthi_thalaippu
-   இலக்குவனார் திருவள்ளுவன்
thiru2050@gmail.com
  பிழையில்லாமல் எழுதுவதே சொல்லவரும் கருத்தைத் தெளிவாகச் சொல்வதற்கு உதவும். இன்றைக்குப் பிழையின்றி எழுதுவோர் மிகவும் குறைந்து விட்டனர். குறிப்பாகக் கணிப்பொறியைப் பயன்படுத்துவோரில் மிகுதியானோர் எழுதுவனவற்றறுள் பிழைகள் மலிந்தே காணப்படுகின்றன. இவர்களுள் ஒரு சாரார் தவறாக எழுதுவதையே பெருமையாகவும் சிறப்பாகவும் கருதும் மேதைகள். அவர்களுக்குக் காலம்தான் விடையிறுக்கும். ஆனால், பெரும்பான்மையர், பிழையின்றி எழுதும் ஆர்வம் இருப்பினும் அறியாமையாலும் ஐயத்தாலும் தவறாக எழுதி விடுகின்றனர். இவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது தமிழ்ப்புலவர்களின் கடமையாகும்; கணிப்பொறி வல்லுநர்களின் பணியாகும். அந்த வகையில் தமிழுக்குச் சிறப்பான பிழை திருத்தியை உருவாக்குவதில் கணிஞர்கள் கூடுதல் கருத்து செலுத்த வேண்டும். இப்பொழுதும் சில பிழைதிருத்திகள் உருவாக்கிப் பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும் அவை அரைக்கிணறு தாண்டச் செய்யும் நிலை உள்ளமையால் உரிய பயனில்லை. எனவே, செவ்வ‌ையான பிழைதிருத்தி வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
பிழை திருத்திகள்:

  மைக்கிரோசாஃப்டு பக்கங்களில் நாம் பிழைதிருத்தும் வாய்ப்பு உள்ளது. கூகிள் தட்டச்சு மூலமும் பிழை திருத்தும் வாய்ப்பு உள்ளது. இவை போதுமான அளவில் இல்லை. அல்லது பயன்படுத்துவோரின் இலக்கண அறிவிற்கேற்பவே இவற்றின் பயன்பாடு அமையும். சர்ச்கோ (Searchko.in), சக்தி, மென்தமிழ் சொல்லாளர், நாவி(Naavy), பாலச்சந்திரன் முருகானந்தத்தின் தமிழ் எழுத்துப்பிழை திருத்தி முதலான பிழை திருத்திகள் பயன்பாட்டில் உள்ளன. தமிழ், ஒலிப்பிற்கேற்ப பொருள் மாறுபடக்கூடிய, மரபுச் சொற்கள் உடைய வளம் மிக்க மொழியாக உள்ளமையால் இப்போதுள்ளவற்றை, முழுமையை நோக்கிய முயற்சி நிலை என்றுதான் சொல்ல வேண்டும். எனவே, பிழைதிருத்தி உருவாக்குநர்களைக் குறை கூறாமல் செவ்வையான பிழை திருத்திகளாக இப்போதுள்ளனவற்றை மேம்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும்.
திருத்தமும் திருத்தமின்மையும்:

  செய்தி யிதழ்களில் அல்லது இணையப் பக்கங்களில் காணப்படும் செய்திகள் அல்லது கட்டுரைகளை, இப்போதுள்ள பிழைதிருத்திகள் மூலம் திருத்த முயன்றால் பெரிதும் ஏமாற்றமே கிடைக்கிறது. சான்றுக்குச் சில காண்போம்.
  எண்களை எழுத்தால் குறிக்கும்பொழுது பெரும்பான்மையர் தவறாகவே குறிக்கின்றனர். இருபத்தி ஒன்று, முப்பத்தி நான்கு, அறுபத்தி எட்டு என்பதுபோல் உகரம்வரவேண்டிய இடத்தில் இகரம் பயன்படுத்தி எழுதுகின்றனர். (அவ்வாறே பேசவும் செய்கின்றனர்.) இதனைப் பிழைதிருத்திகள் மூலம் திருத்திப் பார்த்தால் இயலவில்லை.
றுபத்தி நாலு
முப்பத்தி ம்பது
ன்பத்தி எட்டு

என உள்ளீடு செய்தால்,

இருபத்தி நாலு
முப்பத்தி ஒன்பது
எண்பத்தி எட்டு

என்றுதான் மென்தமிழ் சொல்லாளர் திருத்துகிறது.
நாவி, சக்தி, சர்ச்கோ ஆகியவற்றில் மாற்றமில்லை.
அதே நேரம் இரண்டிலும் எண்ணை எழுத்தால் மாற்றுவதற்காக. 24, 39, 88 ஆகியவற்றை உள்ளீடு செய்தால்,
இருபத்துநான்கு
முப்பத்தொன்பது
எண்பத்தெட்டு
எனச் சரியாகவே வருகின்றன. எனவே, எண்களை எழுத்தால் எழுத உதவும் செயலின் கூறு சரியாக உள்ளமையால் அதன் மூலம் பிழை திருத்தியிலும் சரியாகத் திருத்த வேண்டும். பிற திருத்திகளும் இதில் தக்கக் கருத்து செலுத்த வேண்டும்.
அரசு வழங்கிய புதிய பஸ்களை,” என்பதை எச்சொல்லாளரும் திருத்த வில்லை. ஆனால், மென்தமிழ் தனியாக இச்சொல் இடம் பெற்றால் பேருந்து எனத் திருத்துகின்றது. எனவே, சொல் அடையும் மாற்றத்திற்கேற்ற திருத்தம் அமையவில்லை எனலாம்.
அக்டோபர் 23ம் நாள், 610 புதிய பேருந்துகள் மற்றும் 50 மினி பேருந்துகளை, முதல்வர் ஜெயலலிதா, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினார்.” இத்தொடரில் 23 ஆம்நாள், சிறு பேருந்து அல்லது சிற்றுந்து, செயலலிதா எனத் திருத்த வேண்டும். ஆனால், எவற்றிலும் மாற்றம் இல்லை. பொதுவாக அயலெழுத்து(கிரந்தஎழுத்து) குறித்துப் பிழைதிருத்திகள் கவலைப்படுவதில்லை. எனவே, அதில் திருத்தம் மேற்கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால், எண்களை இணைத்து எழுதும் முறையும் ஆங்கிலச் சொல்லும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா?
 பின்வரும் தொடர்களின் திருத்தம் குறித்து முயன்றேன்.
ராஜநாயகம் ஜனநாயகம் பத்தி பேசினார்.
ஒரு வருத்தில் பல அறிஞர்கள் பங்கேற்றனர்.

ஒருண்டில் முடிக்க வேண்டிய பயிர்ச்சி.
இ பயிற்ச்சியைமுடித்தால் உடன் பனி கிடைக்கும்.
இராசநாயகம் சனநாயகம் பற்றிப் பேசினார்.
ஒரு வருடத்தில் அறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.
ஓர் ஆண்டில் முடிக்க வேண்டிய பயிற்சி.
இப்பயிற்சியை முடித்தால் உடன் பணி கிடைக்கும்
என்றல்லவா செம்மைப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், நாவியில் இப் (பயிற்ச்சி) என்ற திருத்தம் மட்டும் கிடைத்தது. பிறவற்றில் திருத்தம் இல்லை என்ற விடைதான் கிடைத்தது.
“மதுரைக்குசென்று அவணை பார்.”
என்னும் தொடருக்கு மென்தமிழ்
“மதுரைக்குச் சென்று அவனை பார்.”
என்று மட்டும் திருத்தம் செய்கிறது.
இரண்டாம் வேற்றுமை உருபிற்கு அடுத்து வல்லினம் மிகும் வகையில் மென்தமிழ் திருத்தங்கள் மேற்கொண்டாலும் இங்கே பார் என்பதை மதுவகத்தின் ஆங்கிலச் சொல்லாகக் கருதித் திருத்தவில்லை. இதுபோன்ற குழப்பங்கள் கூடா.
நாவியில் திருத்தம் மேற்கொள்ளும் பொழுதுதரும் விளக்கம் பயன்படுத்துநரைக் குழப்பும். எல்லாவற்றிற்கும் ஒன்றுபோல், இத்தனாவது வேற்றுமைத் தொகையாக இருந்தால், உவமைத்தொகை, பண்புத் தொகை யாக இருந்தால், வடமொழி இடப் பெயராக இருந்தால், விளிப்பெயராக இருந்தால் வலி மிகும் அல்லது வலி மிகாது என்பன போல் பெட்டிச் செய்தியாகத் தரும் பொதுவான விளக்கம் தேவையற்றது. மாறாக உள்ளீட்டுச் செய்தியில் என்ன காரணத்திற்காக வல்லினம் மிகுந்தது அல்லது மிகவில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுத் தேவையான இடங்களில் மட்டும் மாற்றுக் கொடுக்க வேண்டும். சான்றாக,
மதுரைதமிழ்சங்கம்

மதுரை காமராசர் பல்கலைகழகம்
என்பனவற்றுள் மதுரையில் உள்ள தமிழுக்கான சங்கம் என்பதால் மதுரைத் தமிழ்ச் சங்கம் என வரவேண்டும். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என வரும் பொழுது காமராசர் பொதுவானவர் என்பதால் ஒற்று மிகக் கூடாது. (ஆனால் பல்கலைக்கழகத்தில் ஒற்று மிக வேண்டும்.) நாவி திருத்தவில்லை. எனவே விளக்கமும் தரவில்லை. ஆனால் திருத்தம் உள்ள இடங்களில் தெளிவான விளக்கம் தேவை. மென்தமிழில் எவ்வகைத் திருத்தமும் மேற்கொள்ள வில்லை.
பிழைதிருத்திகளின் மதிப்பீடு:

“நாவியானது, தற்போதுவரை கொஞ்சம் மரபுப் பிழைகளைத் திருத்தவும், 40%{22/07/2012ன் படி 70%} சந்திப் பிழைகளைத் திருத்தவும், 90% சந்திப்பிழைகளைப் புரிந்து கொள்ளவும் இதன் மூலம் முடிகிறது, மேலும் மேம்படுத்தப்படவும் உள்ளது, (ஆனால், இவற்றிலும் குறைவான அளவே உள்ளது.) “இச்செயலி பிறமொழிச் சொற்கள்[காபி, கலெக்டர்], உயர்திணைப் பெயர்கள்[கண்ணன், சான்சன்], இடப்பெயர்கள்[பொன்னமராவதி, வத்தலகுண்டு, கானாடுகாத்தான்] போன்ற எண்ணற்ற கணிக்கமுடியாத பெயர்களைக் கண்டுணராது.” என்று குறிக்கப்பெறுகிறது. (எதிர்நீச்சல் http://tech.neechalkaran.com/2012/06/naavi.html )
செய்தித்தாள்களில் வருவனவற்றைப் பிழையின்றி வலைத்தளங்களில் பதிவதற்காக மென்தமிழ் மூலம் திருத்த முயன்றேன். பயனில்லை. இது குறித்து அதன் உருவாக்குநரிடம் கேட்ட போது, “தினமலர் எனில் ஒன்றும் திருத்த இயலாது. தினமணி எனில் ஓரளவு திருத்தும். இனி அயலெழுத்துகளை நீக்கித் திருத்தும் முயற்சி மேற்கொள்ககின்றேன். குறைபாடு காணும் பொழுதெல்லாம் தெரிவியுங்கள் செப்பம் செய்கின்றேன்.” என்றார்.
கருத வேண்டியனவற்றுள் சில:
இச்சூழலில் எண்ணற்ற சான்றுகள் இருப்பினும், உரியவர்கள் செயலியின் செயலறு தன்மையை உணர்ந்துள்ளதால், அவற்றை விளக்க வேண்டிய தேவையில்லை. இருப்பினும் மிகக்கடினமான செயலான ஏறத்தாழ முழுமையான நிலைக்குச் செல்லப் பின்வருவன போன்றவற்றில் தனித்தனியே கருத்து செலுத்த வேண்டும்.
 அஃறிணை, உயர்திணை விகுதிகள்
அடுக்குத் தொடர்கள்
அயலெழுத்து நீக்குதல்
அயற்சொல் நீக்குதல்
இடத்திற்கேற்றவாறு சொற்களைக்  கையாளும் முறைகள்
இரட்டைக்கிளவி
உடம்படுமெய்
உம்மைத்தொகைகள்
உயிரினங்களின் இளமைப் பெயர்கள்
உயிரினங்களின் ஒலிகள்
உவமைகள்
எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி
எழுத்தில் எண்களைக் குறித்தல்
எழுத்துப் பிழைகள்
ஒருமை- பன்மை விகுதிகள்
காய்களின் இளநிலைப் பெயர்கள்
சந்திமுறைகள்
சொல்லின் இறுதியில் வரா எழுத்துகள்
சொல்லின் முதலில் வரா எழுத்துகள்,
ணகர, நகர, னகர வேறுபாடுகள்
தன்மை, முன்னிலை, படர்க்கை விகுதிகள்
தன்வினை, பிறவினை
திசைச்சொற்கள்
நிறுத்தற்குறிகள்
நேர்க்கூற்று, அயற்கூற்று முறைகள்
பயிரினங்களின் தொகுப்பிடப் பெயர்கள்
பயிரினங்களின் உறுப்புப் பெயர்கள்
பழமொழிகள்
பால் விகுதிகள்
பிற மரபுப் பெயர்கள்
பொருள்களின் தொகுப்புப் பெயர்கள்
முக்கால வேறுபாடுகள்
ரகர றகர வேறுபாடுகள்
லகர ழகர ளகர வேறுபாடுகள்
வலி மிகாமை
வலி மிகுதல்
வழக்கத்தில் தவறாக எழுதப்படும் பெயர்கள்
விலங்கின் இருப்பிடப் பெயர்கள்
விலங்கின் கழிவுப் பெயர்கள்
வினைமுற்று விகுதிகள்
வேற்றுமையில் ஏற்படும் பெயர் மாற்றங்கள்
 ஒருங்கிணைப்பும் பொருளுதவியும்:
தமிழ் இணையக் கல்விக்கழகம், பிழைதிருத்தி உருவாக்குநர்களை ஒருங்கிணைத்துப், போதிய பொருளுதவி அளித்து, நிறைவான தமிழ் பிழை திருத்தி உருவாக ஆவன செய்ய வேண்டும். உத்தமம் அமைப்பும் ஒல்லும் வகை யெலாம் உதவ வேண்டும். பெயரளவிற்குப் பிழை திருத்திகள் இருப்பன, பயன்படுத்துநரின் நேரத்தைத்தான் வீணடிக்கின்றன என்பதை உணர்ந்து செவ்வயைான பிழைதிருத்திகள் உருவாக வல்லுநர்களும் புலமையாளர்களும் முயன்று வெற்றி காணவேண்டும்.
முடிவுரை:
எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு (திருக்குறள் 392)
என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
இக்கண்கள் பார்வைக்குறைபாடற்று இருக்க நாம் பிழையின்றி எழுத வேண்டும். அதற்கு உருவாகும் பிழைதிருத்திகள் உதவட்டும்!
பிழையின்றி எழுதுவோம்!
பிழையின்றிப் பேசுவோம்!
பிழையின்றி வாழ்வோம்!
ilakkuvanar_thiruvalluvan+10