திலீபனைப் போற்றி
விடுதலையை மீட்டெடுப்போம்!
காந்தி வழியில் நடந்ததால், காந்தியம்
பேசும் இந்தியத்தால் பறிக்கப்பட்டது திலீபனின் உயிர். இந்தியம் என்பது
என்றென்றைக்கும் தமிழ்ப்பகையை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளத் தயங்காது
என்பதை உறுதிப்படுத்திக் காட்ட விரும்பியதால் திலீபனின் அறப்போர், உயிர்ப்
பறிப்பில் முடிந்தது.
இராசையா பார்த்தீபன் என்னும் திலீபன்,
கார்த்திகை 12, 1994 / 27.11.1963 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஊரெழு என்னும்
ஊரில் பிறந்து ஊரெழும் வண்ணம் உலகு தொழும் வண்ணம் வீரனாய் மலர்ந்து
வீரனாய்ப் புகழுடல் பெற்றார்.ஆவணி 30, 2018 / 15.09.1987, முதல் நீரும்
அருந்தாது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை திலீபன் அவர்கள்
முன்னெடுத்திருந்தார். புரட்டாசி 10, 2018 / 26.09.1987 10.48
இந்தியத்திற்குத் தலைக்குனிவு ஏற்படுத்தி உலகத்தமிழர்களும் மனித நேயர்களும்
கண்ணீர் வடிக்க உயிரைத் துறந்தார். யாரேனும் மறைந்தால் விளக்கு அணைந்தது
என்பர். ஆனால், மாவீரன் திலீபன் சுடர் விளக்காய் ஒளி வீசினார்; அன்று முதல்
நம் உள்ளங்களில் அணையா விளக்காய் உள்ளார்.
மாவீரன் திலீபன்இந்தியத் தலைமை தனக்கு
வேண்டும் என்று கேட்டு உண்ணா நோன்பு இருக்கவில்லை! சிங்களர்களைப் பழிவாங்க
வேண்டும் என்றுகேட்டு உண்ணா அறப்போர் மேற்கொள்ளவில்லை! மாவீரன் திலீபன்
வேண்டிய ஐந்து முறையீடுகளும் இந்தியம் எண்ணியிருந்தால் எளிதில்
முடிந்திருக்கக்கூடியவையே! ஆனால், அழிக்கவேண்டும் என்ற முடிவினை
எடுத்துவிட்டுச் செயல்படுபவர்களால் எப்படி ஆக்கத்தில் ஈடுபடி முடியும்?
தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் மேதகு
பிரபாகரன் தலைமையிலான கடமை, கண்ணியம், கட்டுப்பாடுநிறைந்த தமிழீழ
விடுதலைப்புலி யமைப்பில் சேர்ந்து போர்க் களத்தில் நின்றவர், அறக்களத்தில்
உயிர் துறந்து இளமுது நாயகர் (Lieutenant colonel) பதவிவழங்கப்
பெற்று அதனைச்சிறப்பித்துள்ளார்..மருத்துவம் படிக்கச் சேர்ந்தும்
மருத்துவத்தை முடிக்காமல், மறத்தமிழனாய்க் களத்தில் இறங்கியவர், அடிமை நோயை
நீக்குவதற்காகத்தானே மருந்தாகிப் போனார்! அதன்பின்னும்கூட உண்ணா
நோன்பிற்குக்காரணங்களாய் அமைந்தஅந்த5 முறையீடுகளும் அப்படியே உள்ளன!
முறையிடக்காரணமாய் அமைந்த அடக்குமுறைகள் இன்றும் இன்னும்
பெருகிக்கொண்டுதான் உள்ளன!சிங்களக் குடியேற்றங்கள் முன்னிலும்
பெருகிக்கொண்டுதான் உள்ளன! தடுப்புக்காவலில் உள்ளவர்கள் விடுதலை
செய்யப்படாததுடன் மேலும்மேலும் ஈழ மக்கள் வதைகூடாரங்களில்
துன்புறுத்தப்பட்டுக்கொண்டுதான் உள்ளனர்! அவசரக்காலச்சட்டத்திற்கான தேவை
இல்லாவிட்டாலும் அதற்கான நடைமுறை என்றும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது!
பகைக்குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுத்தான் வருகின்றன. புதிய காவல்
நிலையங்கள் மட்டுமல்ல, சிங்களப் படைமுகாம்களே தமிழர்கள் நிலத்தில்
அமைக்கப்பட்டுக்கொண்டுதான் வருகின்றன! மேலும் மேலும் கொடுமைகள் கூடினாலும்,
இருநூறாயிர மக்கள் மடிந்தபின்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடிழந்து,
உற்றார் உறவினர் இழந்து, உறுப்புகள் இழந்து பெண்மைகள் அழிக்கப்பட்டாலும் காந்தியம் பேசும் இந்தியம் சிங்களத்திற்குக் காவல் அரணாகத்தான் உள்ளது; சிங்கள இறையாண்மையைக் காக்கத் தமிழர்களை மேலும் மேலும் பலிகொடுக்கவும் தயங்கவில்லை!
உண்ணா நோன்பு மாவீரன்
திலீபன்உயிரைப்பறித்ததற்கு இந்தியமே காரணம். ஆங்கிலேயர் ஆட்சியில்
காந்தியடிகள் எத்தனை முறையோ உண்ணா நோன்பு மேற்கொண்டிருந்திருக்கிறார்.
சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டங்களிலும் இறங்கிஉள்ளார். ஆனால்,
அடிமைப்படுத்திய ஆங்கிலேய அரசு அவர் உயிரைக் காத்தது. இங்கோ நட்புறவு என்று
கூறி வந்த இந்தியம் சாகட்டும்மாவீரன் திலீபன் என்று விட்டு விட்டது. சோதிந்திரா நாத்து(தீசித்து)(Jyotindra Nath Dixit) என்னும் தனிமனித ஆணவத்தால் ஈழத்தில் இந்தியம் திருந்தும் வாய்ப்பைஇழந்தது.
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி
செய்யாததாலும்தமிழர்கள் தலைமை பெறாததாலும் தமிழ்நாட்டவரால் பயன்பெறும்
இங்கு வாழ் அயலவர், நன்றியை எண்ணிப் பார்க்க மாட்டார்கள்; தமிழினப்
பகையாகவே செயல்படுவார்கள். இதற்கு விதிவிலக்கில்லாதவன்தான் சென்னையில்
பிறந்து வளர்ந்த இந்த சோ.நா. பலர் எண்ணுவதுபோல் வடவன் அல்லன். இரண்டாம்
தந்தை சீதாராம் தீட்சித்துபெயரால் குடும்பப்பெயராக ஒட்டிக்கொண்டதே
தீட்சித்து என்பது. இவனது தந்தை புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் முன்சி
பரமு(பிள்ளை)என்னும் பரமேசுவரன் – தாய் இவரின் இரண்டாம்
மனைவிஇரெத்தினமாயிதேவி.உயிர்க்கொடை வீரரைப் பற்றி எழுதும் பொழுது இதைக்
குறிப்பிட வேண்டிய காரணம், தமிழரல்லாதவர்களைத் தமிழ்நாட்டில் முதன்மை நிலையில் வாழ வைக்கும் பொழுது அவர்களால் தமிழினமும் தமிழும் அழிகின்றன
என்பதை உணர வேண்டும் என்பதற்காகத்தான். நமக்கு அடுத்த நிலையிலும் நம்மை
அண்டியும் யார் வாழ்ந்தாலும் நமக்குக்கட்டுப்பட்டுத்தான் இருப்பார்கள்.
ஆனால், நம்மினும் மேலான நிலையில் இருப்பின், நம்மைக்
கட்டுப்படுத்துபவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
திலீபனின் உண்ணாநோன்பு அறப்போரால்
கிளர்ந்த எழுச்சியால் அங்குச் சென்ற இந்தியஅமைதிகொல்லும்படையே ஆடிப்போய்
நிறுத்த எண்ணியபோது, உண்ணாநோன்பை முடிக்காமல் வாழ்க்கையை முடிக்க
வைத்தவன்தான் இவன். எனவே, அறப்போர் எழுச்சி வெற்றியாக மாறாதது வஞ்சகரின்
வீழ்ச்சியால்தான் என்பதை நாம் உணர வேண்டும்.
“அன்பார்ந்த தமிழீழ மக்களே!
விளக்கு, அணையும் முன்பாகச்சுடர்விட்டு
எரியுமாம். அதுபோன்று நானும் இன்று உற்சாகமாக இருக்கின்றேன். இன்று
என்னால் நன்றாகப் பேசமுடிகின்றது. போராடத் தயாராகுங்கள். எனக்கு விடை
தாருங்கள்.
என்னை இந்தப் போராட்டத்தை கைவிடுமாறு எவருமே கேட்கவேண்டா. நானும், தலைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது.
மறைந்த போராளிகள் 650 பேருடன் சேர்ந்து 651வது ஆளாக மேலிருந்து பார்ப்பேன். எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டிவிடும். என்னைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்.
எமது வீரர்கள் கொள்கைக்காக உயிரைக் கொடுப்பவர்கள். கொள்கைக்காக என்னைத் தொடர்ந்து வருவார்கள். அவர்களையும் யாரும் தடுக்கமுயலவேண்டா. அவர்கள் ஐந்து ஆறுபேர் சாவதால் எவ்விதத் தீங்கும் வந்துவிடாது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.
நான் மூன்று தடவை பேசியுள்ளேன். மூன்று தடவையும் ஒரே கருத்தைத்தான் பேசியுள்ளேன்.”
என்று மாவீரன் திலீபன்உணவு மறுத்து
வாடியிருந்த சூழலில் பேசும்பொழுதே இந்தியத்தின் தீ தன்னை அழிக்கும் என்பதை
உணர்ந்திருந்தார். எனினும் அந்தத் தீயே விடுதலைத் தீயையும் கொழுந்துவிட்டு
எரியச் செய்யும் என்ற நம்பிக்கையில்தான் மரணத்தைச் சந்தித்தார். மாவீரன்
நம்பி்க்கை வீண் போகாத வண்ணம் போராளிகளும் மக்களும் தொடர்ந்து களங்களில்
நின்றாலும் வஞ்சகர்களின் கூட்டுச்சதிகளால் பேரழிவைச்சந்திக்க நேர்ந்தது. வஞ்சகர்களின் சதிகள் மட்டுமா அவர்களை அழித்தன? தமிழகத்தின் அமைதியும்தான் அவர்களை அழித்தது!
தமிழகம் இப்பொழுது அதனை உணர்ந்து வருவது
மகிழ்ச்சிக்குரியது. தமிழர்களின் இந்த உணர்வு உலகெங்கும் உள்ள புலம்
பெயர்ந்த தமிழர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிப்பதாக உள்ளது.
திலீபனுக்கு முன்னும் பின்னும் தமிழ்ஈழ
விடுதலைக்காகப் பலர் மடிந்துள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, வஞ்சகர்களின்
பொல்லாச் செயல்களால், அறமில்லா முறைகளால் உயிர்நேயமல்லாத உணர்வினால்
வாழ்ந்த நிலத்தில் மடிந்தவர்களும் உயிர் வாழ்ந்தாலும் அல்லற்பட்டு ஆற்றாது
வருந்தி நிற்பவர்களும் மாவீரர்கள்தாம். எனவே, திலீபன், விடுதலைச்சுடரின்
குறியீடு எனலாம்.திலீபனை நினைவுகூர்வதன் மூலம் எல்லாப் போராளிகளையும் நினைவு கூர்கிறோம்!
ஈழத்தில் விடுதலைப்பயிர் தழைக்கும் என்பதிலும் நம்பிக்கை கொள்கிறோம்!
பாராண்ட பைந்தமிழ், நானிலம் ஆண்ட நற்றமிழ், உரிமை பெறும்பொழுது தமிழர்களும்
உயர்நிலை அடைவார்கள்! தமிழைப் ‘பக்தியின் மொழி’ என்கிறார்கள்! தமிழ் ‘விடுதலை மீது பக்திகொண்ட மொழி’ என்பதைப் படைப்பாளர்கள் மெய்ப்பிக்க வேண்டும்! இறைப்பற்றினும் உயர்வானது நாட்டின் இறையாண்மைமீதான பற்று என்பதை உணர வேண்டும்! தமிழீழ இறையாண்மையைக் காக்க வேண்டும்!
எழுத்து என்னும் ஆயுதத்தால் வஞ்சகரை வீழ்த்தி, சொல் என்னும் கேடயத்தால் நம்மைக் காத்து வெற்றி காண வேண்டும்!
திலீபனின் நினைவைப் போற்றுவோம்!
தீந்தமிழ் உரிமையை மீட்போம்!
தரணி எங்கும் தமிழீழக்கொடி பட்டொளி வீசிப் பறக்கும் என வீர வித்துகள் கண்ட கனவை நனவாக்குவோம்!
இதழுரை
புரட்டாசி 5, 2045 / 21.09.2014
No comments:
Post a Comment