Thursday, October 2, 2014

முதல்வருக்குத் தண்டனை – எண்ண ஓட்டங்கள் : இலக்குவனார் திருவள்ளுவன்

முதல்வருக்குத் தண்டனை – எண்ண ஓட்டங்கள் : இலக்குவனார் திருவள்ளுவன்

  ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுது செய்த தவறுகளுக்காகப் பதவிப் பொறுப்பில் இல்லாத பொழுது தண்டிக்கப் பெறும் பொழுது பதவிக்கு இழுக்குவராது. இப்பொழுது புரட்சித்தலைவி செல்வி செயலலிதா முந்தைய முதல்வர் நிலையில்(ஆனி 17, 2012 / சூலை 1, 1991 முதல் பங்குனி 22, 2017 / ஏப்பிரல் 4, 1996 வரை) இருந்த பொழுது வருவாய்க்கு மீறி உரூபாய் 66 கோடி சொத்து வைத்து இருந்தமையால் (புரட்டாசி 11, 2045 / செப். 27, 2014 அன்று)4 ஆண்டுக்காலம் சிறைத்தண்டனையும் உரூபாய் 100 கோடி தண்டத்தொகை விதிக்கப்பட்டும் உள்ளார். உடன் குற்றம் சாட்டப்பட்ட திருவாளர்கள் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஒவ்வொருவரும் தனித்தனியே 4 ஆண்டுச் சிறைத்தண்டனையும் உரூபாய் 10 கோடி தண்டத் தொகையும் விதிக்கப்பட்டனர். செல்வி செயலலிதா, இப்பொழுது முதல்வராக இருக்கும் பொழுது தண்டனை விதிக்கப்பட்டதால் தமிழ்நாட்டிற்குக்களங்கமாகப் பார்க்கப்படுகிறது.
  ஊழல் தடுப்புச் சட்டம் 13(2), 13(1)(ஈ) ஆகிய பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 109 இன் கீழும், 120 இன் கீழும் நடைபெற்ற வழக்கில் இவர்கள்தண்டிக்கப்பட்டுள்ளனர்.இத்தண்டனையுடன் 6 மாதச்சிறைத்தண்டனையும் 10,000 உரூபாய் ஒறுப்புத் தொகையும் விதிக்கப்பட்டுள்ளன. சிறைத்தண்டனை 4 ஆண்டுத்தண்டனையுடன் இணைந்த தண்டனை. எனவே, கூடுதலாகச் சிறையில் இருக்க வேண்டிய தேவையில்லை.எனினும் ஒறுப்புத்தொகை 100 கோடி, பத்து கோடி ஆகியவற்றை உரியவர்கள் செலுத்தத்தவறினால், முறையே, ஓராண்டும், ஆறு திங்களும் கூடுதலாகச் சிறையில் இருக்க வேண்டும்.
  முதல்வர் பொறுப்பில் தண்டனை பெறும் அவலநிலை ஏன் ஏற்பட்டது?சிறப்பு நீதிமன்றத்தில் விதிக்கப்படும் தண்டனை என்பது ஒறுப்புத்தொகை என்ற அளவில் அல்லது உடனே பிணை பெறும் வகையில் குறைவாக இருக்கும் என எதிர்பார்த்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். தண்டனை குறைவாக இருந்தாலும் முதல்வர் பொறுப்பில் இருக்கும் பொழுது தண்டிக்கப்படுவது தமிழ்நாட்டிற்கு மானக்கேடு என எண்ணி இருக்க வேண்டும். தீர்ப்பு நாளன்று முதல்வர் பொறுப்பில் இருந்து விடுபட்டு, அவர்கள் எண்ணுவதுபோல் சிக்கல் இல்லையெனில் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்கத்திட்டமிட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாததால் தொலைநோக்குப்பார்வை இல்லை என்றாகிறது. அருகிலுள்ள வழக்குரைஞர்கள், அன்பர்கள், அதிகாரிகள் இதனை ஊகித்திருந்தாலும் -முன்னர், இவ்வாறு தண்டனை பெற்றால் மாற்று ஏற்பாடு என்ன செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டதால்தானே சிலர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். எனவே, – சொல்லி இருக்க மாட்டார்கள். பொறுப்பில்இருப்பவர், தானே இரு வகை வாய்ப்பையும் எண்ணிப்பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
  தமிழ்நாட்டின் முதல்வர் கருநாடக மாநிலத்தில் கருநாடக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுக் கருநாடகச் சிறையில் இருப்பதும் இழுக்குதான். ஆனால், தமிழ் -கன்னட அடிப்படையில் தண்டனை வழங்கியிருப்பதாகக் கூறுவது பொருந்தாது. கருநாடக முதல்வராக இருந்த சித்தலிங்கப்பா எடியூரப்பா (Bookanakere Siddalingappa Yeddyurappa) அங்கே தண்டிக்கப்பட்டிருக்கிறார். கருநாடக அமைச்சராக இருந்த சனார்த்தனன் அங்கே இன்னும் சிறையில் இருக்கிறார். ஒரு வேளை தீர்ப்பு வேறுவகையாக இருந்தால் கன்னடப் பெண்மணி என்பதால் உரிய தண்டனை வழங்கப்பெறவில்லை எனக் கூறவும் ஆளிருப்பர். எனவே, மொழி அடிப்படையில் கூறுவது பொருந்தாது.
  காவிரிக்காக உரிமைக்குரல் கொடுத்துப் போராடுவதால் தண்டிக்கப்பட்டார் என்பது ஒரு சாரார் கூற்று.
  அப்படி எல்லாம் இல்லை. 18 ஆண்டுகளாக நீதிமன்றப் பணிகளை இழுத்தடித்ததால்தான் தண்டனை என்பது மற்றொரு சாரார் எண்ணம்.
  ஊழல் வழக்குகளில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டதுஎன்று நீதிபதியே தெரிவித்து இருப்பதால் வேறு உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது என்பது ஒரு சாரார் எண்ணம்.
  இனப்படுகொலை செய்த சிங்கள அரசிற்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்தது, இராசீவு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவிகளுக்கு விடுதலை வழங்க முற்பட்டது, இனப்படுகொலையாளிகளை நீதிமன்றத்தின்முன் நிறுத்த வேண்டும் என வாதிட்டு வருவது, தமிழ் ஈழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டுவது போன்ற தமிழக நலன் சார்ந்து மத்திய அரசிற்கு எதிராகப் போராடி வருவதால் தண்டிக்கப்பட்டதாக உலகளாவிய தமிழர்களிடையே எண்ண ஓட்டம் உள்ளது.
  மத்திய அரசு வழக்கின் ஒரு தரப்பாக இருந்திருந்தால் கண்டிப்பாக இவ்வாறு செய்திருக்கும்.எனவே, அதற்கான வாய்ப்பு இல்லை. மேலும் தீர்ப்பு வழங்கிய நீதிபதி யோன் மைக்கேல் குன்ஃகா (John Michael Cunha) நேர்மையானவர் என்பதாலும் இதற்கான வாய்ப்பு இல்லை என்பது மறு தரப்பு எண்ணம்.
  அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய பெரிய கட்சிகளை ஒடுக்கி விட்டால் தமிழக ஆட்சியில் அமரலாம் எனக் கனவு கண்டு பாசக திட்டமிட்டுச் செயலாற்றுகிறது என்பதும் குற்றச்சாட்டு.
  பாசகவிற்கு இந்தக் கனவு இருக்கலாம். ஆனால், அதனால் இதனை நிறைவேற்றத் தமிழக மக்கள் இடம் தர மாட்டார்கள். எனினும் குழம்பியக் குட்டையில் மீன் பிடிக்க ஆவலாக இருக்கும். என்றாலும் இந்தத் தீரப்பில் அதன் தலையீடு இருக்காது என்பது நீதியின் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் எண்ணம்.
  முதல்முறை ஆட்சியில் இருந்தபொழுது தவறு செய்ததாகத்தானே குற்றச்சாட்டு. அதன்பின் இரு முறையும் எந்தத் தவறும் செய்யவில்லை என்றுதானே பொருள்? அதற்கு ஏன் தண்டிக்க வேண்டும்? யார்தான் ஊழல் செய்யவில்லை? என்று பரிவு அலை பரவும் எண்ண ஓட்டமும் ஒரு சாராரிடையே உள்ளது.
  ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இத்தண்டனை முதலடியை எடுத்து வைப்பதாக எடுத்துக் கொள்ளலாமே! அடுத்து நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளில் பிறருக்கும் கடும் தண்டனை வழங்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதே என்ற எண்ண ஓட்டம் உள்ளவர்களும் உள்ளனர்.
  விடுமுறை நாள் தொடர்ச்சியாக வரும் வகையில் தீர்ப்பு நாளை வைத்ததும் திட்டமிடப்பட்ட செயலாக எண்ணப்படுகிறது.
  தமிழகக் காவல்துறைக்கும் இந்த வழக்கம் உண்டே! கைதுப் படலம் என்பதே வெள்ளியன்றுதானேஅல்லது விடுமுறை நாளுக்கு முதல்நாளன்றுதானேஇருக்கும். சட்டத்தின் முன் யாவரும் சமம் என்னும் பொழுது இந்த முறையைத்தானே கருநாடகமும் பின்பற்றி யிருக்கும் என்பதும் மறு தரப்பு எண்ணம்.
  குறைந்த அளவு தண்டனை கொடுத்திருக்கலாமே! பிணையில் செல்லக் கூடாது என்பதற்குத்தானே கூடுதல் தண்டனை என்பதும் ஆளும் கட்சியினரின் எண்ணம். அதிக அளவு தண்டனை கொடுக்கவில்லையே! இடைநிலையில்தானே வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தில் கூடுதலளவு தண்டனை கொடுக்க வாய்ப்பு உள்ள பொழுது குறைந்த தண்டனை ஏன் தரவில்லை என்று எப்படிக் கேள்வி கேட்கமுடியும் என்பது மாற்றுக் கட்சியினரின் வினா!
  பெண் என்று பாராமல் அகவையை நோக்காமல் பிணைகூட மறுக்கிறார்களே என்பதும் கட்சியாளர்கள் எண்ணம். நோயுற்ற தந்தையைப் பார்க்க விடுப்பு கேட்டாரே நளினிஅவர் பெண்ணில்லையா? அகவையில் மூத்தவர்கள் எத்தனை பேர் சிறைகளில் உள்ளனர்? காரணமின்றி அரசியல் காரணங்களுக்காக மட்டும் அடுத்தடுத்துக் குண்டர் சட்டத்தின்கீழ்த் தமிழகத் தலைவர்களைத் தண்டிக்கவில்லையா? அரசியல் காரணங்களுக்காக, நீண்டகாலம் தமிழகத் தலைவர்களைச் சிறைகளில் தள்ளவில்லையா? மாற்றுக்கருத்து சொல்பவர்கள்மீது அவதூறு வழக்குகள் பாயவில்லையா? தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் உண்ணாநோன்பு இருந்தபொழுதும் கருணை சிறிதும் காட்டப்படாமல் துன்புறுத்தப்படவில்லையா? சட்டத்தின் முன் யாவரும் சமம் என்னும் பொழுது இதுபோன்ற காரணங்களால் பரிவு காட்டுமாறு முறையிடுவது சரியல்ல என்பதே பிற கட்சியாளர்கள் எண்ணம்.
  செய்தித்தாள்களையே படிக்க மாட்டேன் என்றவர் இன்று செய்தித்தாள்களை எழுத்தெண்ணி மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. எதற்கெடுத்தாலும் நான், நான் என்றவர், இன்று அவ்வாறு சொல்லமுடியாத சூழல் நிகழ்ந்து விட்டது. எனவே, சிறையில் சில நாள்கள் இருந்தாலும் தன் மறைமுக ஆட்சியிலும் அல்லது மீண்டும் ஆட்சிவாய்ப்பு கிட்டும் பொழுது் அப்பொழுதும் இதுவரை செய்த தவறுகளை எண்ணிப் பார்த்து அனைத்து மக்களுக்கான நல்லாட்சி தருவது குறித்துச் சிந்திக்க வேண்டும் என்பது கட்சி சார்பற்ற நல்லோர்கள் எண்ணம்,
  இப்படி இருவேறுபட்ட எண்ண ஓட்டங்கள் மக்களிடையே உள்ளன. எனினும் நம் நாட்டில் ஊழல் அடிப்படையில் தலைவர்களை வெறுக்கும் தொண்டர்கள் இல்லை என்பதாலும் கட்சித்தலைமைக்கு அடிமையாக இருப்பவர்களே கட்சித் தொண்டர்கள் என்பதாலும், கட்சி மட்டத்தில் இப்போதைக்கு எந்தப் பாதிப்பும் செல்வி செயலலிதாவிற்கு வராது.
  அதே நேரம் பொது மக்களிடையேயும் உலகத் தமிழர்களிடையேயும் தண்டனையைக் கேட்ட பொழுது ஏற்பட்ட பரிவு அலை   கட்சியினரின் வன்முறைப் போராட்டங்களால் குறைகிறது என்பதையும் கட்சியினர் உணர வேண்டும். சொன்னால் போராடுவதற்குத் தொண்டர்கள்இருக்கும் பொழுது இவர்களை இனப் படுகொலையில் இருந்து ஈழத்தமிழர்களைக் காப்பதற்காகவும் இனப்படுகொலைகாரர்களைத் தண்டிப்பதற்காகவும் பயன்படுத்தத் தவறியதைக் கட்சிகளின் தலைமைகளும் உணர வேண்டும்.
  மக்கள் செல்வாக்கால் தண்டனையை அல்லது விடுதலையை முடிவெடுக்கலாம் என்றால் யாருக்கும் தண்டனை கிடைக்காது. நீதிமன்றங்களும் தேவையில்லை.அல்லது குற்றமற்றவர்கள் செல்வாக்கில்லாக் காரணத்தால் தண்டிக்கப் பெறுவர். அரசியல் போராட்டங்களுக்காகச் சிறை செல்பவர்கள் தண்டனையை ஏற்றுக் கொள்கின்றனர். அவ்வாறிருக்க வேறு காரணங்களுக்காகத் தண்டனை விதிக்கப்பட்டால் அதனை நீதிமன்றம் மூலம்தான் முறியடிக்க வேண்டுமே தவிர, வீதியில் போராடி அல்ல!
  சிறையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்தாம் நிலையான தலைவி என்னும் பொழுது எதற்காக வன்முறைகள்? தற்கொலைகள்? மேல் முறையீடு வாய்ப்பு இருக்கும் பொழுது அதுவரை காத்திராமல் ஆர்ப்பாட்டங்கள் ஏன்?   மேல் முறையீட்டில் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை வராமல் போவதன் காரணம் என்ன? இத்தகைய வன்முறைப் போராட்டங்கள் நீதி மன்ற அவமதிப்பாகக் கருதப்பட்டால் அல்லது நீதிமன்றத்தை வன்முறை மூலம் பணிய வைக்கும் முயற்சிகளாகக் கருதப்பட்டால் எதிர்மறையான விளைவுதானே ஏற்படும்? எப்படி இருந்தாலும் வெளியே வருவார் அல்லது இருந்த இடத்தில் இருந்தே ஆட்சி செய்வார் என்னும்பொழுது ஆர்ப்பாட்டங்கள் எதற்கு? எங்கே இருந்தாலும் அவர்தான் தலைவி என்னும் பொழுது பதற்றம் ஏன்?
  கலைஞர் ஆட்சிக்கு வந்தால் மறுநாளிலிருந்தே ஆட்சி கலைக்கப்படும் என்பதுபோன்ற பரப்புரை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும். அதே நேரம் செல்வி செயலலிதா ஆட்சி இழந்தால் மறுநாளிலிருந்தே மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று பரப்பப்படும். இப்பொழுதும் அதே போல் அவர் மீண்டும் வருவர் என்ற நம்பிக்கை அவரது கட்சியினரிடமும் அச்சம் பிறரிடமும் உள்ளது. அச்சத்தின் காரணமாகத்தான் அவர் தண்டனை பெற்றதை ஏதோ ஒரு மூலையில் மிகச்சுருக்கமாகநிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் வேண்டும் எனக்கூறும்நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. அவர் குற்றமற்றவர் என்றால் மேல்முறையீட்டில் விடுதலையாகி ஆட்சி அமைப்பதை வரவேற்கத்தானே வேண்டும். ஆனால், அதற்காக இப்பொழுதே வன்முறைகளில் ஈடுபடுவது இன்னலுக்குள்ளாகும் மக்களால் அக்கட்சியை ஒதுக்கும் போக்கிற்குத் தள்ளுகிறது என்பதை உணர வேண்டும்.
  எனவே, அ.இ.அ.தி.மு.க. கட்சியினர் அமைதி வழிக்குத் திரும்ப வேண்டும். கட்சித்லைமையும் இது குறித்து அறிக்கை விட்டு அமைதி வழியில் தொண்டர்களைத் திருப்ப வேண்டும். இல்லையேல் கட்சிக்குத்தான் பின்னடைவு என்பதை உணர வேண்டும்.
  சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇயற்று.(திருக்குறள் 660)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாக்கினை ஆட்சியில் உள்ளவர்களும் அதிகாரிகளும் பணம் சம்பாதிக்க எண்ணுபவர்களும் உணர வேண்டும்.
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. (திருக்குறள் 659)
என்னும் நம்பிக்கை அனைவருக்கும் வேண்டும்.
குற்றமற்றவர்கள் தண்டிக்கப் பெறாமலும் குற்றவாளிகள் தண்டிக்கப் பெறவும் இருக்கும்
நல்ல சூழலை உருவாக்குவோம்!
ஊழலற்ற உலகை அமைப்போம்!
jayalalaitha


No comments:

Post a Comment