(சட்டச்சொற்கள் விளக்கம் 11- 20: இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம்  21- 25

21. A Oneமுதல் தரமான  

A என்பது ஆங்கில நெடுங்கணக்கின் முதல் எழுத்து.  நிலையில், தரத்தில் முதலிடம் என்பதைக் குறிக்க இதனைப் பயன்படுத்தி ஏ ஒன்/A One என்கின்றனர்.
மிகச்சிறந்த, நல்ல, நேர்த்தியான முதலியவற்றைக் குறிக்க  ஏ ஒன் / A One என்கின்றனர்.
22. A Personஓராள்  

ஓர் ஆள், ஆள், மாந்தன், ஒருவர், தனிப்பட்டவர், தனியாள் என்பனவும் இடத்திற்கேற்பப் பயன்படுத்தப்படுகின்றன.  
தனியர்(individual) என்பதையும் இதே பொருளில் கையாள்வோர் உள்ளனர்.

நபர் என்றும் குறிக்கின்றனர். ஆனால், இது நஃபர்(nafar) என்னும் உருதுச் சொல்லில் இருந்து வந்தது.  
  ஆள் என்பது ஆட்கள் அமைந்த அமைப்பையும் குறிப்பதுண்டு. எடுத்துக்காட்டாக நீதி முறைகளில் ஒரு கூட்டமைப்பு நிறுவனம் சட்டமுறையான ஆளாகக் கணிக்கப்பட்டுக் குறிக்கப்படும்.  

மெய்யியலிலும், மருத்துவத்திலும்  ஆளாகப் பிறந்த அனைவரும் ஆளாகக் குறிக்கப் பெறுவதில்லை. இத்துறைகளில், ஒரு குறித்த வகையில் சிந்திக்கும் வல்லமை கொண்டவரே  “ஆள்” என்னும் சொல்லால் குறிக்கப்படுவர்.       

ஒரு மனித உயிர் பிறந்ததுமே இயல்பாகவே அதற்கு “ஆள்தன்மை” வந்துவிடுவதாகக் கருதப்படுகிறது. எனினும் சிலர், தாய் வயிற்றிலுள்ள கரு, மூளைச் சிதைவு கொண்டோர், ஆழ்மயக்க நிலையில் உள்ளோர் போன்றோரை “ஆள்தன்மை” கொண்டவர்களாகக் கருதுவது சரியல்ல எனக் கருதுகின்றனர்.  

சில மக்கள் கூட்டங்களில் பெண்களை இழிவாகக் கருதிக்கொண்டு அவர்களையும் பழங்குடியினரையும் நாகரிகமற்றவர்கள் என இழிவாகக் கருதி  அவர்களையும் “ஆள்தன்மை” கொண்டோராகக் கருதுவது இல்லை. ஆனால், இது தவறு.  

விலங்கு நலன்கள், விலங்கு உரிமை போன்றவற்றில் நாட்டம் கொண்டோர் சில விலங்குகளுக்கும் “ஆள்தன்மை” கொடுக்கப்பட வேண்டும் என்கின்றனர். விலங்குகளை வணங்கும் சமயத்தவரும் இவ்வாறு கருதுகின்றனர். மனிதக் குரங்குகள், யானைகள் போன்றவை அவற்றின் அறிவுத்திறன் மிக்கவை என்பதால் இவற்றையும் ஆள்களாகக் கருதுகின்றனர்.   விலங்கு வழிபாட்டினர்,   விலங்குகளையும், தாவரங்களையும் மனிதருக்குச் சமமாகவோ அதற்கும் மேலாகவோ கருதி இவற்றை ஆள்தன்மை பெற்றதாகத் தெரிவிக்கின்றனர்.

  “மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” எனத் தொல்காப்பியர் (தொல்காப்பியம், பொருளதிகாரம் 577) மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறியது சிந்திக்கத்தக்கது.
23. A person cannot approbate and reprobateஒருவர், ஒரே நேரத்தில் ஏற்கவும் மறுக்கவும் இயலாது.  

ஒருவர் சொத்துரிமை போன்றவற்றில் ஒரு நீதிமன்றத்தில் அல்லது வழக்கில் ஏற்கும் முறையிலும் மற்றொரு நீதி மன்றத்தில் அல்லது வழக்கில் மறுக்கும் முறையிலும் தெரிவிக்க இயலாது.

ஒரு பொருண்மையில் ஒரு செய்தி அல்லது ஆவணம் குறித்து வெவ்வேறு நேரங்களில் ஏற்பளிப்பையும் மறுதலிப்பையும் வெளிப்படுத்த இயலாது.   எடுத்துக்காட்டாக ஒருவர் பணிநீக்கப்பட்டு, அதுவரையிலான காலத்திற்கான பணப்பயனைப்பெற்றுக் கொண்டால், நீக்க ஆணையை ஒப்புக்கொள்வதாக ஆகிறது. அதே நேரம், அவர், அதற்கு முரணாக,  அந்நீக்க ஆணைக்கு எதிராக முறையிடவோ வழக்கு தொடுக்கவோ கூடாது. அல்லது எதிர் முறையீட்டை நாடினால் நீக்க ஆணை தரும் பயன்களைப் பெறக் கூடாது. இவ்வாறு இரண்டில் ஒன்றைமட்டுமே தெரிவு செய்யவேண்டுமே தவிர வெவ்வேறு இடங்களில்  ஒப்புக்கொள்ளவும் மறுதலிக்கவும் கூடாது.
24. A postஇடுகை  

வழக்கு நாள் இடுகை,

இணையத் தளத்தில் கருத்து இடுகை என்பனபோன்று குறிக்கப் பெறுகின்றது.  

கேட்பு நாள் விவரம், சுற்றறிக்கை, ஏல விவரம், அறிவிப்பு முதலியவற்றை அறிவிப்புப் பலகையில் அல்லது முகப்பில் வைப்பது அல்லது ஒட்டி வைப்பது.  

பலபொருள் ஒரு சொல்லாகும். பதவி, வேலை, பதிவு, தங்குமிடம், பணியில் வை, பாடிவீடு, சுரங்க நிலைக்கால்,  படைத்துறைக் களம்,  அஞ்சல், கம்பம், தூண், சாவடி முதலிய பல்வேறு பொருள்களில் இச்சொல்(post) கையாளப்படுகிறது.
25. A posterioriகாரண அனுமானம்

  குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளிலிருந்து அல்லது முழுமையாக இல்லாத தகவல்களிலிருந்து உருவாக்கிக் கொள்ளும் கருத்தளவான(உத்தேசமான) முடிவு; ஊகம்; உய்த்துணர்தல்; கருதுகை. கூர்ந்தறிதல் அல்லது பட்டறிவிலிருந்து பெறப்படுவது.  

posteriori என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் பிந்தையதிலிருந்து. இதன் எதிர்ச்சொல் முந்தையதிலிருந்து – A priori.  

நேர் பொருள் பிந்தையதிலிருந்து என்றாலும் பயன்பாட்டு நிலையில் காரண அனுமானம் / காரண ஊகம் / காரண உய்த்தறிவு எனலாம்.  

புகை இருப்பின் அதற்குக் காரணமான நெருப்பு இருக்கும் என்பதை  உணர்தல்போல் ஒன்றின் முலம்  அதனோடு சேர்ந்த மற்றொன்றை அறிதல். முடிவிற்கு வர அல்லது தீர்ப்பைத் தீர்மானிக்க உதவுவது.

கணக்குத் துறையிலும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

செ.சொ.பி.பேரகரமுதலியில் குறிப்பிட்டுள்ளதுபோல் அனு என்பது தமிழ் முன்னொட்டு. எனவே, அனுமானம் தமிழ்ச்சொல்லே.   அனு என்பது பொருந்துதல் என்னும் பொருளிலும் மானம் என்பது அளவு, அளவிடு என்னும் பொருள்களிலும் இணைந்து உருவான தமிழ்ச்சொல்.  

ஊகம் என்பது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். எனவே, ஐயுறவு(doubt), அயிர்ப்பு(suspicion) என்னும் பொருள்களும் அனுமானத்திற்கு உண்டு.  

கரணியம் என்னும் சொல்லில் இருந்து திரிந்ததால் காரணமும் தமிழ்ச்சொல்லே.  

இலத்தீன் தொடர்

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்