(சட்டச் சொற்கள் விளக்கம் 351-360 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

361. Accident  நேர்ச்சி  

எதிர்பாரா விளைவு  
விபத்து;

தற்செயல் நேர்வு  

accidēns என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நிகழ்தல்/நேருதல்.  எனவே, நேர் பொருளாக நேர்ச்சி என்கின்றனர். எதிர்பாரா நேர்வைக் குறிப்பதால், எதிர்பாரா நேர்ச்சி என்பர். இருப்பினும் வழக்கத்தில் விபத்து என்று சொல்லும் பொருளை இதில் உணராமல் பயன்படுத்துவதில்லை. எனினும் வண்டி மோதல், தீப்பற்றியது, என்பதுபோன்று இடத்திற்கேற்பச் சொல்லலாம்.  

சட்டமுறையான செயலை  சட்ட முறையில் சட்டப்படி முறையான கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் அல்லது  குற்ற நோக்கின்றிச் செய்கையில் நேரும் எதிர்பாராத விளைவு அல்லது பெருங்கேடு குற்றமாகாது. (இ.த.ச. பிரிவு 80)  

‘இடர்வு’ என்ற சொல்லைச் சட்டச்சொல்லகராதி குறிப்பிடுகிறது.  இடர் என்பது வறுமை, துன்பம், துயரம், ஏதம் எனப் பொருள்படுவதால், இடர்வு என்பது இவை தொடர்பான சொல்லாக அமையுமே தவிர, துன்பம் தரும் அல்லது தீங்கிழைக்கும் நேர்ச்சியைக் குறிப்பதாக அமையாது. தமிழன்பர்களால் நேர்ச்சி என்ற நேர்ச்சொல் குறிக்கப்பெற்றுப் பயன்பாட்டில் உள்ளதால் அதையே குறித்துள்ளோம்.  

வண்டி மோதல், தீப்பற்றல் போன்ற நேர்வுகளில்  நேர்ச்சி என்பது கடுமையைக் குறிக்காமையால் நிறைவளிக்காமல் உள்ளது. ஆனால், வேறு சொல் காணும் வரை மொழியறிஞர் பாவாணரால் அறிமுகப்படுத்தப்பட்டுப் பயன்பாட்டிலுள்ள இச்சொல்லையே பயன்படுத்தலாம்.
362. accident arising in the course of employmentபணியூறு  

பணியிடை ஊறு  

பணிபுரியும்போது ஏற்படும் நேர்ச்சி/ விபத்து  

பணிபுரியும்போது, எதிர்பாராமல் இயந்திரத்தில் கை சிக்குதல், மின்கசிவு போன்ற பல்வேறு காரணங்களால் எதிர்பாராமல் ஏற்படும் இடையூறுகளின் விளைவுகளைக் குறிப்பது.  

பணிமூலம் ஏற்படும் நேர்ச்சி/விபத்து  

பணிச்சூழலால், மேற்குறித்தவாறான எதிர்பாராக் காரணங்களால் பணி இடையூறு ஏற்பட்டுத் துன்பத்திற்கு ஆளாதல்.
363. Accident claimஇடரீடு,

ஊறீடு   (விபத்தீடு)

எதிர்பாரா நேர்ச்சியால் ஏற்படும் உயிரிழப்பு, உறுப்பிழப்பு, பொருளிழப்பு முதலியவற்றுக்காக உரிய காப்பீட்டு நிறுவனத் தொகையிலிருந்து அல்லது பணி நிறுவனத்திலிருந்து ஈட்டுத்தொகை பெறக் கோருதலும் பெறலும்.
364. Accident in doing a lawful actசட்டச் செயலில் தற்செயல் நிகழ்வு  

சட்டப்படியான செயலைச் செய்யும் பொழுது ஏற்பட்ட தற்செயல் நிகழ்ச்சி.  

சட்ட முறையான செயலைச் சட்ட முறையான பாங்கில் உரிய கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செய்யும் பொழுது குற்ற உணர்வின்றியும் குற்ற நோக்கின்றியும் செய்யும் பொழுது எதிர்பாரா நேர்வாகவோ அவப்பேறாலோ நிகழும் செயல் குற்றமாகக் கருதப்படாது.   – இந்தியத் தண்டிப்புச் சட்டம், பிரிவு 80
365. Accident insuranceநேர்ச்சிக் காப்பீடு  

காப்பீடுகளில் நேர்ச்சிக் காப்பீடும் ஒரு வகை.  

நேர்ச்சியால்(விபத்தால்) ஊறோ காயமோ ஊனமோ மரணமோ நிகழ்ந்தால் இழப்புத் துன்பத்தை ஈடுகட்டும் வகையில் அதுவரை தவணை முறையில் பணம் செலுத்தியவர்க்குப் பணம் அளிப்பது.  மரண இழப்பிற்கு எதுவும் ஈடாகாது. எனினும் இழப்பின் துயர் போக்க உதவுவதால் காப்பீடு என்கின்றனர்.   தீப்பற்றுதலால் ஏற்படும் இழப்பிற்கான காப்பீட்டைத் தீ நேர்ச்சிக் காப்பீடு எனத் தனியாகக் குறிப்பிடுகின்றனர்.
366. Accident registerநேர்ச்சிப் பதிவேடு  

நேர்ச்சியால் ஊறு நேர்ந்தவர்(பாதிக்கப்பட்டவர்) பெயர், நேர்ச்சி நிகழ்ந்த தெருப்பெயர், ஊர் முதலிய முகவரி விவரம், நேர்ச்சி நேரம், காவல் துறைக்குத் தகவல் தெரிவித்த முறை, காய விவரம், இறந்தோர் எண்ணிக்கை, இறப்பு முறை, ஓட்டுநர் பெயர் விவரம் முதலியவற்றைப் பதியும் ஏடு.
367. Accident reportநேர்ச்சி அறிக்கை.

நேர்ச்சி (விபத்து) தொடர்பான அனைத்துத் தகவல்களையும் சேகரித்தல், நிகழ்வுகளை நிரல்பட நிறுவுதல், நடந்ததை நன்கு அறிந்து முடிவெடுத்தல், மூல காரணத்தை அறிந்து குறித்தல் என நடந்த நேர்ச்சி குறித்த முழு விவரங்களையும் அளித்தலே நேர்ச்சி அறிக்கை.
368. Accident reserve fundநேர்ச்சி சேம நிதி  

எதிர்பாரா நேர்ச்சி, வண்டி மோதல், தீப்பற்றல், கட்டடம் இடிந்து விழுதல், பாலம் விழுதல், நிலச்சரிவு, பெருமழை,வெள்ளம், புயல், நிலநடுக்கம், கடல் கோள் போன்ற இயற்கை இறந்த நிகழ்ச்சிகள் போன்ற துயரங்களின் பொழுது ஊறு நேர்ந்தோருக்கு உதவுவதற்காக ஒதுக்கீடு செய்து வைக்கும் காப்பு நிதி.
369. Accident riskநேர்ச்சி இடர்ப்பு  

தீப் பற்றல், வெடிகுண்டு வெடித்தல், உடல் நலனுக்கும் சுற்றுச் சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சு வெளிப்பாடுகள் முதலியற்றையும் உள்ளடக்கிய இன்னல் நேரும் வாய்ப்புகளை நேர்ச்சி இடர்ப்பாடு – நேர்ச்சி இடர்ப்பு – குறிக்கிறது.
370. Accident spotநேர்ச்சி யிடம்.  

நேர்ச்சி(விபத்து) நிகழ்ந்த இடத்தைக் குறிப்பது.  

சாலைப்போக்குவரத்து மேலாண்மையில் அடிக்கடி நேர்ச்சி நிகழும் இடத்தைக் குறிக்கிறது.

(தொடரும்)