(நாலடி நல்கும் நன்னெறி 12: நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்! – தொடர்ச்சி)
நாலடி நல்கும் நன்னெறி 13:
நிலைபுகழ் பெற நல்வினைகள் புரிவோம்!
நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்.
(நாலடியார், அறத்துப்பால், 3. யாக்கை நிலையாமை, பாடல் எண் 26)
பாடலின் பிரித்து எழுதிய வடிவம் :
நார்த் தொடுத்து ஈர்க்கில் என்? நன்று ஆய்ந்து அடக்கில் என்?
பார்த்துழிப் பெய்யில் என்? பல்லோர் பழிக்கில் என்?
தோற்பையுள்நின்று, தொழில் அறச் செய்து ஊட்டும்
கூத்தன் புறப்பட்டக்கால்.
பதவுரை: தோல் பையுள் நின்று – தோலாலான பையாகிய உடம்பினுள் இருந்து, தொழில் அறச்செய்து ஊட்டும் – தொழில்களை முடியச் செய்து அவ்வுடம்பை இயக்கி வருகின்ற, கூத்தன் – கூத்தனாகிய உயிர், புறப்பட்டக்கால் – உடலில் இருந்து வெளியே சென்ற பின், ஈர்க்கில் – ஈர்த்தல்; இழுக்கப்படுதல்; நார் தொடுத்து ஈர்க்கில் என் – அவ்வுடம்பை நாரினாற் கட்டி இழுத்தா லென்ன, ஆய்ந்து – தூய்மை செய்து; நன்று ஆய்ந்து அடக்கில் என் – நன்றாகக் குளிப்பாட்டித் தூய்மைசெய்து அடக்கஞ்செய்தால் என்ன, உழி – இடம்; பெய்யில் – பெய்தால் – வைத்தல்; பார்த்துழிப் பெய்யில் என் – பார்த்த இடத்திற் போட்டா லென்ன, பல்லோர் பழிக்கில் என் – பலரும் பழித்துச்சொன்னால்தான் என்ன ; வருகின்ற பெருமையோ சிறுமையோ ஒன்றுமில்லை. கூத்தன் – இங்கு உயிரைக் குறிக்கின்றது
பொருள்: தோற்பையாகிய உடம்புக்குள் இருந்து கூத்தாடும் உயிர் புறப்பட்டுச் சென்றுவிட்டால், மிஞ்சி இருப்பது உடல்தான். உடலைக், கயிற்றில் கட்டித் தரையில் இழுத்துச் சென்றால் என்ன? நன்கு ஆராய்ந்து குழி வெட்டிப் புதைத்தால்தான் என்ன? விலங்குகளும் பறவைகளும் உண்ணும் வகையில் வீசி எறிந்தால்தான் என்ன? சவம் என்று பலரும் சொல்லிப் பழித்தால்தான் என்ன? எல்லாமே ஒன்றுதான்.
அதிகாரத் தலைப்பு விளக்கம்: யாக்கை என்றால் கட்டுதல் என்று பொருள். நரம்பு-நார்-எலும்பு-தசை-இரத்தம் முதலியவற்றால் கட்டப் பெற்றதாகிய உடம்பு யாக்கை எனப்படுகிறது.
நிலையாமை என்றால் நிலைத்த தன்மையின்மை. உடலின் நிலைத்த தன்மை குறித்துத் திருவள்ளுவர் முதலானோரும் கூறியுள்ளனர். இதன் காரணம் நிலையற்ற உடலில் மட்டும் கருத்து செலுத்தாமல் உயிரையும் பேண வேண்டும் என்பதற்காகத்தான். உயிரை எவ்வாறு பேணுவது? நற்செயல்கள் புரிவதன் மூலம், அறச் செயல்கள் ஆற்றுவதன் மூலம் உயிரைப் பேண வேண்டும் என்கின்றனர்.
பை என்றால் என்ன? எதையாவது அல்லது எவற்றையாவது உள்ளே வைத்திருக்கும் கொள்கலமதானே! உடல் தோலால் மூடப்பட்டு உள்ளே உடலுறுப்புகளை வைத்திருக்கிறதல்லவா? அதனால் தோற்பை எனப்படுகிறது.
மேலும், இத்தோற்பையுள்தான் உயிரும் இருக்கிறது. உயிர் இன்பமும் துன்பமும் தந்து பல்வகைத் தொழில்வினைகளை ஆற்றுகின்றது. அவ்வுயிர் இல்லையேல் உடலுக்கு இயக்கமும் இல்லை. அதனால், உயிர் நீங்கியபின் உடலுக்கு மதிப்பும் இல்லை. உயிர் இருக்கும் வரை மதிப்புடன் பெயரால் குறிக்கப்பெற்றவர், ஐயா, அம்மா அல்லது அவர், இவர் என்று சொல்லப்பட்டவர், உயிர் நீங்கிய பின் அது அல்லது இதுவாகி விடுகிறார். அதை எரிப்பீர்களா, அடக்கம் செய்வீர்களா? அதைப் பாடையில் கிடத்து, அதன் மேல் உள்ள மாலைகளை அகற்றி விடு என்பன போன்றுதான் அஃறிணையில் சொல்லுவார்கள்.
1. சணல் நார், 2. பூண்டு நார், 3. காய்கறி நார், 4. பட்டை நார், 5. தேங்காய் நார், 6. வித்து நார், 7. கற்றாழை நார், 8. முள்ளி நார், 9. பருத்தி நார், 10. வாழை நார், 11. எருக்கு நார், 12. செம்புளிச்சை நார், 13. வக்கை நார் என நார் பல்வகைப்படும். நாரால் கட்டி இழுத்தால் என்ன என்பதன் காரணம் கயிற்றுப் பயன்பாட்டிற்கு முன் நார்தான் கயிறாகப் பயன்படுத்தப்பெற்றது.
உடலைப் பல்வேறு வகையில் நாம் போற்றுகிறோம், பேணுகிறோம். உயிர் நீங்கிய பின் நாம் உடலை மதிப்பதில்லை. எனவே, உயிர் இருக்கும்போதே உயிர் இருக்கும் உடலைப் பாதுகாப்பதுடன் உடலுள் இருக்கும் உயிரையும் நாம் பாதுகாக்க வேண்டும். அதற்கு எனன செய்ய வேண்டும்? அறச்செயல்கள் செய்ய வேண்டும்.
அப்படியானால் உடலைப் பேண வேண்டாவா?
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்”
(திருமந்திரம், பாடல் 724) என்கிறார் திருமூலர்.
உயிரைக்காக்க வேண்டுமானால் உடலையும் காக்க வேண்டும். ஆனால், உடலை மட்டும் பேணிப்பயனில்லை.
ஆகவே நிலையாமையைக் கூறுவதன் மூலம் நிலையான புகழுக்கான நல்லன ஆற்ற இப்பாடல் வலியுறுத்துகின்றது. நாமும்,
நிலைபுகழ் பெற நல்வினைகள் புரிவோம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment