(குறள் கடலில் சில துளிகள் 30 – பெரியாரைத் துணையாகக் கொள்க! – தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள் 31
அறிஞர்களே கண்கள்; அவர்களைத் துணையாகக் கொள்க!
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
(திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், எண் ௪௱௪௰௫ – 445)
பதவுரை: சூழ்வார்-சூழ்ந்து இருப்பவர்; கண்-விழி; ஆக-ஆகும்படி; ஒழுகலான்-நடந்து கொள்ளுதலால்; மன்னவன்-வேந்தன்; ஆட்சியாளர்; சூழ்வாரை-பெரியாரை; சூழ்ந்து-ஆராய்ந்து; கொளல்-கொள்க.
அறிஞரகளே உலகின் கண்கள். எனவே, ஆட்சியாளர்கள் அவர்களைத் தம் சுற்றமாகக் கொண்டு இயங்க வேண்டும்.
சூழ் என்பதற்குச் சுற்றுதல், சுற்றியிருத்தல் என்பன மட்டும் பொருள்கள் அல்ல. ஆராய்தல், தேர்ந்தெடுத்தல், கலந்தாய்வு எனப் பல பொருள்களும் உள்ளன. இதனடிப்படையில் சூழ்வார் என்றால் கலந்தாய்விற்குரிய அறிஞர் என்று பொருள்.
இத்தகைய அறிஞர்களையே நமக்குத் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆதலின் அறிஞர் பெருமக்களையே ஆட்சியாளர் அமைச்சராக வைத்துக் கொள்ள வேண்டும்.
சூழ் என்ற சொல் சூழ்ந்துகொள், ஆராய் என்ற இரண்டு பொருளில் இக்குறளில் வந்துள்ளது. சூழ்ந்து என்றது தன்னைச் சுற்றிக்கொள்பவர்களாக ஏற்றுக்கொள்ளுமுன் அவர்கள் அறிவாலும் பயிற்சியாலும் சூழ்ச்சியாலும் தேர்ந்தவர்களா என்பதை ‘ஆராய்ந்து’ தனக்குத் துணையாகக் கொள்ள வேண்டும் என்பதாம்.
சூழ்வார் என்ற சொல்லில் உள்ள ‘சூழ்’ என்பது சூழ்ந்து கொள் அ ஃதாவது சுற்றியிரு என்ற பொருளில் வந்து சூழ்வார் என்பது சூழ்ந்துள்ளவர் (சுற்றியிருப்பவர்) எனப் பொருள்படும். இங்கு நாட்டுத் தலைவனைச் சுற்றியிருப்பவர்கள் சூழ்வார் எனப்படுகின்றனர். ஆட்சியைத் திறம்பட நடத்துவதற்கு ஆற்றல் வல்ல அறவோர் அணுக்கமாக இருக்க வேண்டும். இவர்கள் வெவ்வேறு துறையில் சிறப்பு அறிவு கொண்ட பெரியோர்களாயிருப்பர். அவனுக்கு ஆராய்ச்சியுரையும் அறிவுரையும் கூறுபவர்கள் இவர்களே. அவர்களைக் கலந்து எண்ணியே ஆட்சித் தலைவன் அரசியல் முடிவுகளை எடுப்பான்; நல்லாட்சிக்கு அவ்வாறு கலந்துபேசி முடிவு எடுக்க வேண்டும். அத்தகையோர் அமைச்சர் பெருமக்கள், படைத்தலைவர்கள், புலவர்கள், ஒற்றர்கள், தூதர்கள், அறவாணர்கள் முதலானோர் ஆவர். இவர்கள் ஆட்சியாளரைச் சூழ இருத்தலால் சூழ்வோர் எனப்படுகின்றனர். சூழ்வார் என்றதற்குச் சூழ்ச்சித் துணையாவார் என்றும் பொருள் கூறுவர்.
மணக்குடவர் “அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொல்ல நினைப்பாரைத் தானுஞ் சூழ்ச்சியாற் கொல்ல வல்லவனாதல்” என்று இப்பகுதிக்கு உரை கூறியுள்ளார். இவர் குறளின் பிற்பகுதியிலுள்ள ‘கொளல்’ என்ற சொல்லுக்கு ‘கொலல்’ என்று பாடம் கொண்டு இவ்வாறு கூறியுள்ளாரா எனத் தெரியவில்லை. அல்லது சூழ்ச்சி என்றால் தீவினை புரிய திட்டமிடல் என்னும் பொருள் உள்ளதால், அங்ஙனம் கருதி உரையெழுதினாரா எனத் தெரியவில்லை.
நன்கு கற்ற அறிஞரைத் தன் சுற்றமாகக் கொள்வது பற்றிய வேறு சில செய்யுள்களும் உள்ளன. அவற்றில் இரண்டு வருமாறு:
ஒற்றர் தங்களை ஒற்றரின் ஆய்தலும்
கற்ற மாந்தரைக் கண் எனக் கோடலும்
சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் சூது அரோ
கொற்றம் கொள் குறிக் கொற்றவற்கு என்பவே
(சீவக சிந்தாமணி, விமலையார் இலம்பகம் 28)
“ஒற்றரை ஒற்றரைக் கொண்டே ஆராய்தலும், அறநூல் கற்றவரைக் கண்போலக் கொள்வதும் மந்திரிச் சுற்றத்தையும் தந்திரிச் சுற்றத்தையும் இவன் இதற்குரியன் என்று ஆராய்ந்து பெருக்கலும் வெற்றிகொள்ளுங் கருத்தையுடைய அரசற்குச் சூழ்ச்சி யென்ப” எனப் பொருள் கூறுகின்றனர்.
கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான்
உற்றுஇடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்
மரையா துணைபயிரும் மாமலை நாட!
சுரையாழ் நரம்பறுத் தற்று.
(பழமொழி, 260)
“பெண் மான்கள் தந்துணைகளை அழைக்கும் சிறந்த மலைநாடனே! நீதிநூல்களைக் கற்றவர்களைத் தனக்குக் கண்ணாகப் பெற்றிராத அரசன், யாதாயினும் ஒரு துன்பம் வந்துற்று, அத்துன்பத்தில் தான் அகப்பட்டு நின்றபொழுது, தானே ஒருவகையாகத் துணிதல், நரம்பினையுடைய சுரைபொருந்திய யாழின் அந்த ஒரு நரம்பையும் அறுத்தாற் போலும்” எனப் பொருள் கூறுகின்றனர்.
கிரேக்க மெய்யியலாளர்களும் மெய்யியல் அறிஞர்கள் துணை கொண்டு ஆட்சி நடப்பதே சிறந்த ஆட்சி என்கின்றனர்.
கண்ணின் பார்வைத்திறன் செம்மையாக இருக்க வேண்டும். அதுபோல் கண்ணாக விளங்க வேண்டிய சூழ்ந்திருப்போர் செம்மையாக இருத்தல் வேண்டும். இவ்வாறு சொல்வது ஆட்சியாளருக்கு மட்டும் உரியதல்ல. மக்களாய்ப் பிறந்த ஒவ்வொருவருமே துன்பம் வந்தால் அதைத் துடைத்தெறியவும் சிறந்த இலக்கினை அடைய நல்ல பாதை காட்டுவதற்கும் அறிவு, ஆற்றல், சூழ்வினைத் திறன், அறவுணர்வு உடையோரை உடன் இருப்பவர்களாகக் கொள்ள வேண்டும். ஆதலின்,
குறள்வழியில் கண்களாய்க் கருதுவதற்குரிய
அறிஞர்களைத் துணையாகக் கொண்டு
சிறந்து வாழ்க!
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment