(நாலடி நல்கும் நன்னெறி 20: – பிறன் மனைவியை விரும்பாதே: தொடர்ச்சி)

கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும், – ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும், உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்  

நாலடியார் பாடல் 169

பண்புடையவ ர்கள் படிக்காமல் இருக்கும் நாள் இல்லை;
பெரியவர்களிடம் சென்று பழகாத நாள் இல்லை; 
தன்னால் முடிந்ததைப் பிறருக்குக் கொடுக்காத நாள் இல்லை. 

பதவுரை:

கல்லாது=கற்க வேண்டிய நூற்களைக் கற்காது; போகிய=போன; நாளும்=நாள்களும்; பெரியவர்கண்=பெரியோரிடத்து; செல்லாது= போகாது; வைகிய=இருந்த; வைகலும்= நாள்களும் ஒல்வ=முடியக் கூடியவற்றை; கொடாது=கொடுக்காது; ஒழிந்த=வீணே கழிந்த; பகலும்=நாள்களும்;உரைப்பில்=சொல்வதாயின்;படாஅவாம்=இருக்காவாம்; பண்புடையார் கண் = நற்குணம் உடையாரிடத்து.

கற்க வேண்டிய நூல்களைக் கற்காமல் வீணாகக் கழிக்கும் நாளும், பெரியவர்களிடம் சென்று பழகி அறிவு பெறாது வீணாய்க் கழிந்த நாளும், தன்னால் முடிந்த அளவு பொருளை இரப்பவர்களுக்குக் கொடுக்காமல் பயனின்றிப் போன நாளும் பண்புடையவர்களிடம் இல்லை. இத்தகைய சிறப்பு மிக்கப் பெரியாரைப் பிழையாது அவர்சொற்கேட்டலே சிறப்பு என்கிறது இப்பாடல்.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு  (திருக்குறள் ௩௱௯௰௭ – 397)

என்கிறார் திருவள்ளுவரும்.

கற்றவர்க்கு எந்த நாட்டிற்குச் சென்றாலும் எந்த ஊருக்குச் சென்றாலும் சிறப்பு கிட்டுகிறது. அவ்வாறிருக்க ஒருவன் சாகும் வரையிலும் கற்காமல் வீண் காலம் கழிப்பது ஏன் என வினவுகிறார். இதன் மூலம் கற்பதற்குக் கால வரம்பு இல்லை. சாகும் வரை நாளும் கற்க வேண்டும் என்கிறார். அதனையே நாலடியாரும் கற்காமல் வீண் காலம் கழிப்பது ஏன் என்கிறது.

பெரியாரைத் துணைக்கோடல், பெரியாரைப் பிழையாமை அதிகாரங்கள் மூலம் திருவள்ளுவர் பெரியாரைப் பேணி வாழ வேண்டும் என்கிறார்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.   (திருக்குறள், ௩௰௩ – 33)

என்று திருவள்ளுவரும்  கூறியுள்ளார்.

ஆற்றவும் கற்றார் அறிவுடையார்,அஃது உடையார்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை — அந்நாடு

வேற்று நாடு ஆகா, தமவே ஆம், ஆயினால்

ஆற்று உணா வேண்டுவது இல். 

என்று பழமொழி நானூறும் கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் தம் நாடே என்கிறது.

மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர்தூக்கின்,

மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் — மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை,கற்றோற்குச்

சென்ற இடம் எல்லாம் சிறப்பு.

என்று மூதுரையில் ஒளவையாரும் கற்றவர்க்குச் சென்றவிட மெல்லாம் சிறப்பு என்கிறார்.

அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்

புறங்கடை நல்இசையும் நாட்டும் – உறுங்கவல்ஒன்று

உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்குஇல்லை

சிற்றுயிர்க்கு உற்ற துணை.

என்று நீதிநெறி விளக்கத்தில் கல்வியே உயிருக்கு உற்ற துணையாக அமையும். வேறு துணை ஏதும் இல்லை என்கின்றார் குமரகுருபர அடிகள்

இவ்வாறு கல்வியின் சிறப்பைப் பலரும் கூறியுள்ளார்கள். அதுபோல்,

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதிய மில்லை உயிர்க்கு (திருக்குறள் ௨௱௩௰௧ – 231)

என்கிறார் திருவள்ளுவரும்.

ஆற்றும் துணையும் அறஞ்செய்க” என்று பழமொழியும் இயன்ற வகையில் எலலாம் அறம் செய்ய வலியுறுத்துகிறது.