14 December 2025 அகரமுதல
(சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 7: தொடர்ச்சி)
சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 8
திட்டத்தை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசு செய்யக்கூடியது
ஒன்றிய அரசுடன் இணைந்து செய்யக்கூடியது
ஒன்றிய அரசு செய்யக்கூடியது
போன்ற மூவகை திட்டங்கள் போட்டுச் செய்ய வேண்டும். தன்னார்வலர்கள் முன் வந்து செய்யக்கூடியதும் வர வேண்டும். அது மட்டுமல்ல இங்கே சமற்கிருத கல்விக்கூடங்கள் எல்லாவற்றையும் கருதுநிலை பல்கலைக்கழகங்களாக அஃதாவது டீம்டு யுனிவர்சிட்டி (Deemed University) என்று ஆக்கினார்களோ, அதே போன்று உலகின் பல நாடுகளில் ,பல தமிழ் அமைப்புகள் தமிழைக் கற்றுக் கொடுக்கின்றன. தமிழார்வலர்கள் தமிழைக் கற்பித்து வருகிறார்கள். அவர்கள் ஏதோச் சொந்த செலவிலும் ,நிதி, நன்கொடை வாங்கி ஏதோ ஒரு வகையிலும் செலவழித்துக் கொண்டுவருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை எல்லாம் அரசு உதவி தந்து அத்தகைய கல்வி நிறுவனம் ஏறத்தாழ ஒரு பல்கலைக்கழகம் போன்ற அமைப்பாக, ஒரு கல்வியகமாக அரசு சார் கல்வியகமாக மாற்ற வேண்டும். யார் யாரெல்லாம் தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்களோ – பிற நாடுகளிலே – அவர்கள் அமைப்பை அரசு நிதி உதவி பெறும் கல்வியகமாக மாற்ற வேண்டும். அதற்கான முழு உதவியும் தர வேண்டும். எங்கெல்லாம் தமிழர் இருக்கின்றனரோ அங்கெல்லாம் இந்தியும், சமற்கிருதமும் இந்திய அரசு கற்றுக் கொடுக்கிறது . அதை நிப்பாட்ட வேண்டும். நிறுத்தி அங்கு தமிழைத்தான் கற்றுத் தர வேண்டும். மொரிசியசில் தமிழன் தமிழ் படிக்க வேண்டும் என்றால், நீ இந்தியன். இந்தி படி என்றார்கள் சமற்கிருதத்தைத் திணித்தார்கள். அப்படித்தான் அங்கெல்லாம் சென்றது. பல நாடுகளைச் சொல்லலாம் 80 நாடுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இருக்கிறார்கள் அல்லவா ஆனால் சமற்கிருதம் எப்படி இப்பொழுது கூட இந்தியாவில் 25 ஆயிரம் பேர் பேசுவார்கள் என்றார்கள் இல்லையா? 25 ஆயிரம் பேர் கிடையாது. ஏறத்தாழ 10000 பேர் தான். அதனைக் கூட நாம் சொல்லவில்லை. ஒன்றிய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெளிவாகக் கூறுகிறது, அவர்களில் பெரும்பாலோர் சமற்கிருதத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்லர். பலர் கோயில்களிலே ஓதக்கூடிய ஓதுபவர்கள் . அது அவர்களுக்குத் தாய்மொழி ஆக முடியாது.
மாத்தூர் என்று கருநாடகாவில் ஓர் இடம் இருக்கிறது .அங்கே சமற்கிருதத்திற்குப் பல நிதி உதவிகளை அரசு தருகிறது. அந்த மாத்தூரில் உள்ளவர்கள் பேசுவது சங்கேத மொழி என்று பெயர். தமிழர் தான் அவர்கள். போறேன் வாரேன் என்ற இந்த பேச்சுத் தமிழ்தான் அங்கே இருக்கிறது, ஆகப் பேச்சுத் தமிழைச் சமற்கிருதம் என்றாக்கி சமற்கிருத நிதி வருகிறது சமற்கிருதத்தை பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நிறுத்த வேண்டும்.
அடுத்தது, எழுத்து இல்லாத மறைந்த அஃதாவது குறைந்த எண்ணிக்கை உள்ள மொழிகளில் எல்லாம் எழுத்தை அதாவது ஒலி வரி வடிவத்தை மாற்றி விட்டு, தேவ நாகரி வடிவத்தைப் புகுத்தி விடுகிறது. தேவ நாகரியைப் புகுத்தி விட்டு இது தேவ நாகரி வடிவம் என்று சொல்லிவிட்டு, உங்கள் மொழி இந்தி அல்லது சமற்கிருதம் என்று சொல்லிவிடுவார்கள் ஏன்? அப்படித்தான் வடக்கே செய்தார்கள் பீகாரில் மட்டுமே என்பது 80 மொழிகளை இந்தி மொழியாக மாற்றினார்கள். ஒன்றல்ல இரண்டல்ல 80 மொழிகள், பொய்யல்ல 80 மொழிகள் கற்றவர்கள் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். புள்ளி விவரங்கள் இருக்கின்றன. குறிப்புகள் இருக்கின்றன. எல்லாமே இருக்கிறது. 80 மொழிகளை இந்தி மொழியாகக் காட்டினார்கள். இவ்வாறு இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் குறைந்த எண்ணிக்கை உடைய தமிழ்க் குடும்பமொழி திராவிடமொழி என்று சொல்கிறோமே, பேராசிரியர் இலக்குவனார் சொல்படி தமிழ்க்குடும்ப மொழி என்று சொல்கிறோமே, தமிழ்க்குடும்ப மொழிகள்தான். அந்த தமிழ்க்குடும்ப மொழிகளை எப்படி மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள், தேவ நாகரி என்று சொல்லி மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆக நாம் இங்குதான் திராவிடம் திராவிடம் என்று சொல்லுவோமே தவிர அந்த திராவிட மொழி என்று சொல்லக்கூடிய தமிழ் குடும்ப மொழியினரிடம் போய் டேய் உனது தாய்மொழி தமிழ் என்று சொல்லி அவர்களை தமிழ் படிக்கவோ எழுதவோ செய்வது கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும் திராவிடம் திராவிடம் என்று குரல் கொடுத்தால் போதுமா ஏன் அந்தத் தவற்றை செய்து கொண்டு இருக்கிறோம் என்று உணர வேண்டும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
இணைய வழி உரையின் எழுத்தாக்கம்
13.07.2025
No comments:
Post a Comment