Sunday, October 18, 2026

இரு மொழிக் கொள்கையால் தமிழுக்கு இழப்புகளே அதிகம்! -இலக்குவனார் திருவள்ளுவன், அறம் மின்னிதழ்

     18 October 2026      அகரமுதல



1967-இல் மத்திய நாடாளுமன்றத்தில்  ‘ஆட்சி மொழிகள் திருத்தச் சட்டம்’,  1968-இல் மும்மொழிக் கொள்கைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதற்கு எதிராகத்தான் இருமொழிக்கொள்கைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மொழிக்கொள்கையே தமிழ்நாட்டின் மூச்சு

“இரு மொழிக்கொள்கையே தமிழ்நாட்டின் மூச்சு” எனப் பாசக தவிர அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூறுகின்றனர். பாசவில் இருந்து ‘காலாவதிக் கொள்கை’ என்று இரு மொழிக் கொள்கைக்கு எதிராகப் பேசி வந்த-தலைமையின் இசைவுடன் கட்சிக்குக் கூடத் தமிழ்ப் பெயர் வைக்காது புதிய கட்சி தொடங்கிய-திடீர்த் தலைவரும் இப்போது இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாகப் பேசுகிறார். இரு மொழிக் கொள்கையே பெரும்பான்மை மக்களின் எண்ணமாக உள்ளதால், அதனையே கட்சித் தலைவர்கள் எதிரொலிக்கிறார்கள் எனலாம்.

பேரறிஞர் அண்ணாவால் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் சனவரி -23, 1968 அன்று  இருமொழிக்கொள்கைத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது; தொடர்ந்து சட்டமன்றத்தில் மனிதநேயச் செம்மல் எம்ஞ்சியாரால் நவம்பர் 13,1986 அன்றும்,  எடப்பாடி பழனிச்சாமியால் ஆகத்து 03, 2020 அன்றும் இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த ஆட்சியில் மு.க.தாலினும் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

தற்போதைய த.வெ.க. அரசும் ஆளுநர் உரை மூலமாக இருமொழிக் கொள்கைக்கு அழுத்தமான ஆதரவைத் தெரிவித்துள்ளது. “தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே  தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்று தமிழக முதல்வரான ச.சோ. விசய்  திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

‘’இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின், தவெகவின் உயிர்க் கொள்கை’’ என அமைச்சர் ஆதவு அர்ச்சுனாவும்,  ‘’தமிழ்நாட்டு மாணவர்களின் மரபணுவிலும் உள்ளது, மறைமுக அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம்’’ என்று அமைச்சர் இராசுமோகனும் தெரிவித்துள்ளனர்.

மும்மொழிக் கொள்கைக்குத் தோற்றுவாயாக இருந்த கட்சியின் இன்றைய தலைவர் இராகுல் காந்தியும், மும்மொழிக் கொள்கை மூலம் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்;  மொழியியல் அடையாளங்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பிற தலைவர்களும் இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர்.

காங்கிரசு கட்சியின் மற்றொரு தலைவரான ப. சிதம்பரம், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை ஏட்டளவில் மட்டுமே இல்லாமல் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதுவே உண்மையாகும்.

ஆங்கிலத்திற்கு முதன்மை சரியல்ல;

இருமொழிக் கொள்கைக்குத் தொடர்ச்சியாக ஆதரவு இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், பேச்சிலும், எழுத்திலும் உள்ள ஆதரவு நடைமுறையில் இல்லை என்பது தான் பேரவலமாக உள்ளது. இதற்குக் காரணம் இருமொழிக் கொள்கை என்றால் தமிழையும் ஆங்கிலத்தையும் பயன்படுத்தலாம் எனக் கருதி ஆங்கிலத்திற்கு முதன்மை அளிப்பது தான்.

பெரும்பாலான இணையத் தளங்கள் தமிழில் இல்லை. இரு மொழிகளில் தளம் இருப்பின் தமிழ்த் தளம் சரியாக இயங்காது. தமிழ்ப் பெயர்களுக்கு ஆங்கிலத்தில் பெயர்கள் சூட்டுவதே வழக்கம். சான்றாக, ஆவின் எனத் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ள நிறுவனத்தின் பால் வகைகளுக்கு, ஆவின் ‘டயட்டு’, ஆவின் ‘நைசு, ஆவின் ‘கிரீன் மேசிக்கு’, ஆவின் ‘பிரீமியம்’, ஆவின் ‘டிலைட்டு’ என ஆங்கிலத்தில் பெயர்கள் சூட்டியுள்ளனர்.

விளம்பரங்களில் பெரும்பான்மை ஆங்கிலமே அல்லது ஆங்கிலத்திற்கு  தான் முதன்மை உள்ளது. கடந்த ஆட்சியில் சதுரங்க ஞாலப் போட்டியை Chess Olympiad  என ஆங்கிலத்தில் விளம்பரப்படுத்தியதைக் கண்டித்த பின், வெளியிட்ட விளம்பரங்களில் தமிழைப் பயன்படுத்தினர். ஆனால், இப்போது ஆங்கில ‘ஒலிம்பியாடு’தான் இடம் பெறுகிறது.

அண்ணா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு எம்ஞ்சியார் பல்கலைக் கழகம், உயர்கல்வி நிறுவனம், அண்ணா மேலாண்மைப் பயிலகம், பாரதிதாசன் மேலாண்மைப் பயிலகம், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் எல்லாம் வல்ல கல்விக் கழகம்(Almighty Educational Academy) முதலான பல நிறுவனங்களின் முத்திரைகள் ஆங்கிலத்தில் தான் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகம், மைய மின் வேதியல் ஆராய்ச்சியகம் முதலான மத்திய நிறுவனங்களில் இந்தியும் ஆங்கிலமும் தான்; தமிழுக்கு இடமில்லை. பொதுத்துறை, உள்துறை, நிதித்துறை, வணிக வரித்துறை என எத்துறையாயினும் ஆணைகளை ஆங்கிலத்தில் வெளியிடுவதையே பெருமையாகக் கொள்கின்றனர்.

தமிழைப் புறக்கணிக்கும் சென்னை உயர்நீதி மன்றம்

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழக அரசின் நிதி அளிப்பால் செயற்படும் சென்னை உயர்நீதி மன்றம், தமிழ்நாட்டு அரசின் ஆணைகளுக்கு எதிராகச் செயற்படுவது கொடுமையாகும். அரசு முத்திரையில் உள்ள ‘சத்தியமேவ செயதே’ என்பதை அகற்றி ‘வாய்மையே வெல்லும்’ என மாற்றிய பின்பும், சமற்கிருதத் தொடரையே பயன்படுத்துகிறது. இந்நாட்டின் தலைநகர்ப் பெயரைச் ‘சென்னை’ என முந்தைய பெயருக்கு மாற்றி ஆணை பிறப்பித்த பின்பும், தமிழ்ப்பெயரைப் புறக்கணிக்கிறது, உயர் நீதிமன்றம்..

எல்லாத் தரப்பாருக்கும் பொருந்தும்

அரசாங்க ஆணை என்பது அரசிற்கு மட்டுமல்ல. தனியார் உட்படத் தமிழ்நாட்டில் உள்ள எல்லாத் தரப்பாருக்கும் பொருந்தும். ஆனால், பிற அரசு நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் இதனைப் பொருட்படுத்தவில்லை.

“எங்கும் ஆங்கிலம்! எதிலும் ஆங்கிலம்!” என்பதற்கு மேலும் பல எடுத்துக் காட்டுகளைக் கூறலாம். ஆனால், இவற்றுக்கெல்லாம் காரணம் ஆங்கிலம் இன்றி வாழ்வில்லை என்ற தவறான நம்பிக்கையே.

பள்ளிகளில் இந்தி;

“பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்திலிருந்து இந்தி மொழி முற்றிலும் நீக்கப்பட்டது” என்று பேரறிஞர் அண்ணா அறிவித்தார். இன்று விருப்பப்பாடம் என்ற பொய்யான பெயரில் பள்ளிகளில் இந்தி உள்ளது. “வசதி படைத்தவர்கள் இந்தியைப் படிக்கும் பொழுது ஏழை மாணாக்கர்களுக்கு இந்தி தரத் தடை ஏன்?” என தமிழ்ப் பகைவர்களும் இந்தி ஆர்வலர்களும்  கேட்கின்றனர். இப்படித்தான் “ஏழை மாணாக்கர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி மறுப்பது ஏன்?” என்று கேட்டு அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியைப் புகுத்தச் செய்தனர்.

இருமொழிக்கொள்கைத் தீர்மானத்தில் “தமிழகத்தில் தமிழ், பயிற்சி மொழியாகவும், பாடமொழியாகவும் எல்லாக் கல்லூரிகளிலும் ஐந்தாண்டுக் காலத்துக்குள் நடைமுறைக்கு வருவதற்கான துரிதமான நடவடிக்கையை மேற்கொள்வது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பயிற்சிமொழிக் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனாரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் கல்லூரிகளில் தமிழ்ப்பயிற்சி மொழி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இன்றைக்குக் கல்லூரிகளில் மட்டுமல்லாமல், பள்ளிகளிலும் தமிழ் அகற்றப்பட்டு வருகிறது.

இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன? இருமொழிக் கொள்கை என்றால் என்ன? என்று புரிந்து கொள்ளாதது தான். இக் கொள்கையின்படி நாம் தமிழையும், ஆங்கிலத்தையும் பயன்படுத்தலாம் எனத் தவறாக எண்ணிக் கொண்டு   ஆங்கிலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டது போன்று இருமொழிக்கொள்கை என்றால், தமிழ்நாட்டிற்குள் எல்லா நிலைகளிலும் தமிழும் பிற மாநிலங்கள், ஒன்றிய அரசு, பிற நாடுகளுடன் தொடர்பு கொள்ள ஆங்கிலமும் பயன்பாட்டு மொழியாக இருக்கும் என்பது தான். ஆனால், நாமோ தமிழைப் புறக்கணித்துவிட்டு, எல்லா இடங்களிலும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தி வருகிறோம்.

இலக்குவனார் குறிப்பிடும் அறம் சார்ந்த முழுக் கல்வி

தமிழ்ப் போராளி இலக்குவனார், தம் 7 ஆம் அகவைக்குள்ளாகவே ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நீதிசாரம், கிருட்டிணன் தூது, நிகண்டுகள், கீழ்வாய் இலக்கம், மேல்வாய் இலக்கம், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என அனைத்தும் கற்றதாகத் தாம் எழுதிய ‘என் வாழ்க்கைப்போர்’ நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாலையில் சிலம்பம், விளையாட்டு, இரவில் நாடகப்பயிற்சி, கலைநிகழ்ச்சிகள், வழிபாட்டுப் பாடல் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்பட்டமையால் தம் அகவைக்குரிய முழுமையான கல்வியைப்பெற்றார் எனலாம்.

ஆங்கிலம் 6 ஆம் வகுப்பில் இருந்து போதும்

கடந்த நூற்றாண்டுத் தொடக்கம் வரை இருந்த சிறப்பான கல்வி எங்கே போயிற்று? அறவழியில் சிறாரைக் கொண்டு செல்லும் அத்தகைய கல்வி முறை தேவை. திருக்குறள், நீதி நூல்கள் முதலியவற்றைத் தொடக்கக் கல்வியிலேயே வழங்க வேண்டும். ஆங்கிலம் 6 ஆம் வகுப்பில் இருந்து கற்பிக்கப்பட்டால் போதும்.

மும்மொழிக்கொள்கை என்பது ஏமாற்றுத் திட்டம்

ஏட்டில் இரு மொழிக் கொள்கையும், பாடத்திட்டத்தில் மும்மொழிக்கொள்கையும் நடைமுறையில் தமிழில்லா நிலையும் உள்ளன.

1968இலிருந்து கேரளா, கருநாடகா, ஆந்திர மாநிலங்களில் மும்மொழிக்கொள்கை நடைமுறையில் உள்ளது. ஆனால், எந்த வடமாநிலத்திலும் இம்மொழிகள் கற்பிக்கப்படவில்லை.  இதற்குப் பின்னர் புதுச்சேரியிலும் மும்மொழிக்கொள்கை பயன்பாட்டில் உள்ளது. இக்கல்வியாண்டில் இந்திமொழி கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. 2023 இலிருந்து கல்லூரிகளிலும் இந்தி புகுந்து விட்டது. ஆனால், வட மாநிலங்களில் மும்மொழித்திட்டத்தின்படி தமிழ் கற்பிக்கப்படவில்லை. எனவே, மும்மொழிக்கொள்கை என்பது ஏமாற்றுத் திட்டம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தேவை, ஒரு மொழிக்கொள்கை ஆணை!

இந்த இழிநிலை இல்லாது மறைய வேண்டும். அதற்குத் த.வெ.க.ஆட்சி புதிய ஆணையை வெளியிடவேண்டும். இதுவரை நாம் இருமொழிக்கொள்கை என்று சொல்லி, ஆங்கிலத்திற்கு முதன்மை அளித்துத் தமிழன்னையை வஞ்சித்ததற்கு முற்றுப்புள்ளி இட வேண்டும். அதற்கு முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய் தமிழ்நாட்டின் உயிர்நாடி ஒரு மொழிக்கொள்கையே என அறிவிக்கவேண்டும். தமிழ்நாட்டிற்கு அப்பால் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள ஆங்கிலம் இருக்கும் என்றும் தெரிவிக்க வேண்டும். அப்படிச் சொன்னால் அஃது இருமொழிக் கொள்கையாகாதா என எண்ணலாம்.

தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே என்பது உயிர்க்கொள்கை. அயலவர்களுடன் ஆங்கிலம் என்பது தொடர்புமொழிக் கொள்கை. இதனைத் தெளிவுபடுத்துவதன் மூலம் ஒரு மொழிக்கொள்கை வலுப்படும்.

அன்னை நாட்டில் அன்னைத் தமிழ் மட்டுமே!

அயலவர் தொடர்பிற்கு ஆங்கிலம் போதும்!

–  இலக்குவனார் திருவள்ளுவன்,

பேசி – 9884481652

Tuesday, October 13, 2026

பா.ம.க.எதிர்ப்பைக் கொள்கையாகக் கொள்ள வேண்டா!:திருமாவுக்கு வேண்டுகோள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




விடுதலைச்சிறுத்தைகளின் நல்ல கொள்கைகள் இடையே ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்கு எதிராகச் செயற்படுவதையே கொள்கையாகக் கொள்வது பெருந்தவறு என்பதை அதன் தலைவர் தொல்.திருமாவளவன் உணர வேண்டும்.

அனைத்துக் கட்சிகளும் மாறுபட்ட கொள்கைகளுடன் இருப்பது இயற்கை. என்றாலும் கொள்கை யடிப்படையிலும் அவற்றின் அடிப்படையிலான செயற்பாட்டு அடிப்படையிலும் வேறுபாடுகள் இருந்தாலும் ஒவ்வொரு கட்சியும் பிற கட்சிகளை எதிரிக்கட்சிகளாக் கருதி பகைமை பாராட்டுவது நல்லதல்ல.

தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளான வி.சி.க.வும் பா.ம.க.வும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் ஒத்த கருத்துகளில் உடன்பட்டுச் செயற்படுவதுதான் அக்கட்சிகளுக்கும் நாட்டிற்கும் நன்று. ஆனால், உடன்பாடான கொள்கைகள் பல இருப்பினும் பகைமை பாராட்டுவது ஏன்? சமத்துவமான தமிழகம்,  சாதியற்ற குமுகம், அனைவருக்குமான கல்வியும் வேலை வாய்ப்பும், பெண்கள் – இளைஞர் முன்னேற்றம், மனித உரிமைப் பாதுகாப்பு, தமிழர் பண்பாட்டு வளர்ச்சி, தமிழ்மொழிக்காப்பு என எல்லாவற்றிலும் இரு கட்சிகளும் ஒத்த கொள்கையைத்தான் அறிவித்துள்ளனர். எனவே, ஒன்றிணைந்து செயற்படவேண்டிய இரு கட்சியினரும் எதிர்த்து நின்றால் அவர்களின் கொள்கை நிறைவேற்றத்திற்கு ஊறு நேரும் அல்லவா?

அதிலுங் குறிப்பாக வி.சி.க.வின் வன்னியர் எதிர்ப்பு என்பது நாட்டிற்கும் கேடு என்பதை அறிந்தும் விடாப்பிடியாக இருப்பது முறையல்ல.

த.வெ.க. அமைத்துள்ள கூட்டணி ஆட்சியில் பா.ம.க. இணைவதாகச் செய்திகள் வருகின்றன. அவ்வாறு இணைந்தால் கூட்டணியை விட்டு வெறியேறுவோம் என வி.சி.க.கூறுகிறது.

“சாதியவாத பாமக, மதவாத பாசகவோடு விசிக  கூட்டணி ஒருபோதும் இல்லை” எனத் திருமாவளவன் சொல்லியுள்ளார். கிறித்துவ, இசுலாமியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இவ்வாறு கூறுவது சரியல்ல. சாதிப்பற்றில் உருவாக்கப்பட்ட கட்சிகளும் நாளடைவில் தங்கள் அடையாளத்தைப் பொதுவாகத்தான் காட்டுகின்றன. அவ்வாறு சாதிக் கட்சிகள் பல உள்ளன. வி.சி.க.வே தாழ்த்தப்பட்டோர் (தலித்து) சிறுத்தைகள் இயக்கம் என்று இருந்ததுதான். மராத்தியில் ‘தலித்து’ எனத் தொடங்கப்பட்டதே தமிழ்நாட்டிலும் அப்பெயர் கொண்டது.  இப்பெயரில் எம். மலைச்சாமி என்பவரால் தொடங்கப்பட்டதுதான் அவர் மறைவிற்குப் பின் தலைமைப் பொறுப்பேற்ற திருமாவால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எனப் பெயர் பெற்றது.

இவ்வமைப்பின் பெயரில் இல்லாவிட்டாலும் நடைமுறையில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் நலக்கட்சிதான். எனவே, சாதி வெறி, மதவெறி கூடாது என வற்புறுத்திச் செயற்படலாமே தவிர, உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்றாக வைத்துக் கொண்டு சாதியவாத மத வாதத்திற்கு எதிரானதாகக் காட்டிக் கொள்வதை மக்கள் நம்பவில்லை.

தமிழ்நாட்டு மக்கள் தொகையில் ஏறத்தாழ எட்டில் ஒரு பங்கினர் வன்னியராக உள்ளனர். தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கினர் உள்ளனர். இவ்விரு வகுப்பாரிடையே நிலையான கலகத்தை உண்டாக்குவதை ஒரு கொள்கையாகக் கொள்வது அறமாகுமா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை 2004 நாடாளுமன்றத் தேர்தல், 2006 சட்டமன்றத் தேர்தல், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் ஒரே கூட்டணியில் (திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில்) இணைந்திருந்தன. இப்பொழுது மீண்டும் இணைவதில் என்ன தவறு? திமுக தான் தங்களைப் பிளவு படுத்தியதாகத் திருமா கூறுகிறார். இப்போதுதான் திமுக கூட்டணியில் இல்லையே! அடுத்தவரால் பிளவு பட்டதை உணர்ந்துள்ளதால் மீள இணையலாம் அல்லவா?

தமிழில் பெயர்ப் பலகைகள் வைப்பது, தமிழ் மொழியைப் பாதுகாப்பது போன்ற தமிழ்நல நோக்கங்களுக்காக மருத்துவர் இராமதாசும்  தொல். திருமாவளவனும்  இணைந்து 2002 இல் ‘தமிழ்ப் பாதுகாப்பியக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி ஒன்றாக மேடைகளில் முழங்கினர். தமிழுக்காக என்றும் இணைந்து செயற்படுவோம் எனவும் கூறி வந்தனர். அந்த உணர்வு எங்கே போயிற்று?

விசிக தொடங்கப்பட்ட பொழுது தேர்தல் புறக்கணிப்பு என்பதையே அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்தது. திருமா தனிமனிதராகத் தன் அமைப்பின் கொடியைக் கொடிக்கம்பத்தில் ஏற்றியதிலிருந்து என் கெழுதகை நண்பராக உள்ளார். அந்த உரிமையில் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிட வேண்டும் என்று முன்பு மதுரையில் இருந்த அவரிடம் விளக்கமாக வலியுறுத்தினேன். இறுதியில் “அடிப்படைக் கொள்கையான தேர்தல் புறக்கணிப்பைக் கைவிடுவது அடிமடியிலேயே  கை வைப்பதாக உள்ளது. எவ்வாறு அதனைக் கைவிடுவது” என்றார். “தேர்தலைப் புறக்கணிப்பது கொள்கை இல்லை. அஃது ஒரு வழிமுறையே யாகும். உங்கள் கொள்கைகளை நிறைவேற்ற அந்த வழிமுறை தடையாக இருக்கும்  பொழுது அதைக் கைவிடுவதே நல்லது. மக்கள் மன்றங்களில் நுழைந்து மக்களுக்காகக் குரல் கொடுத்து அவர்களை மேம்படுத்துவதையே வழிமுறையாகக் கொள்ள வேண்டும். எனவே, மக்கள் மன்றங்களில் நீங்கள் பங்கேற்க வேண்டும். நாளை ஆட்சியிலும் பொறுப்பேற்க வேண்டும்.” என்றேன். தான் இதை ஒப்புக் கொள்வதாகவும் கட்சிப் பொறுப்பாளர்களிடம் கலந்து பேசி முடிவெடுப்பதாகவும் தெரிவித்தார். மறுநாள் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிடும் முடிவை எடுத்துள்ளதாகவும் ஆனால், இந்த முறை தேர்தலைப் புறக்கணிப்பதாகச் சுவரொட்டி ஒட்டுவதை மட்டும் மேற்கொண்டு பரப்புரையைக் கைவிடுவதாகவும்  தொண்டர்களிடம் தேர்தல் புறக்கணிப்புக் காரணங்களை விளக்கி விட்டு அடுத்த ஆண்டு முதல் தேர்தலில் பங்கேற்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஒன்றையும் தெரிவித்தார். அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சோ.அய்யர் இ.ஆ.ப. மட்டும்தான் தங்களை அமர வைத்துப் பேசியவர் எனவும் அவரது பதவிக்காலத்தல் தேர்தல் புறக்கணிப்புப் பரப்புரையை எவ்வாறு மேற்கொள்வது எனத் தயங்கியதாகவும் இப்பொழுது இதனையும் கருதித் தேர்தல் புறக்கணிப்பை முழுமனத்துடன் கைவிடுவதாகவும் தெரிவித்தார்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.  

(திருவள்ளுவர், திருக்குறள், ௩௱௫௰௫ – 355)

என்பதற்கேற்ப எதையும் கூர்ந்தாய்ந்து முடிவெடுக்கும் தொல்.திருமாவளவன் இப்பொழுதும் பாமக எதிர்ப்புக் கொள்கையைக் கைவிடுவது குறித்து நன்கு கருதிப் பார்த்து எதிர்ப்பைக் கைவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம். இதில் ஏதும் இடர்ப்பாடு இருப்பதாகக் கருதினால், முதற்கட்டமாக, ஒரு கூட்டணியில் இணையத் தடையில்லை என்றும் எனினும் ஒரே மேடையில் பரப்புரை மேற்கொள்வது இப்போதைக்கு இல்லை என்றும் அறிவிக்கட்டும். பாமக தவெக கூட்டணியில் இணைவதன் மூலம் ஆட்சி வலுப்படும், மேலும் சிறப்பான திட்டங்களைத் தீட்ட இயலும். அவ்வாறில்லாமல் பாமக இணைந்தால் விசிக விலகும் என்றால், விசிக அமைச்சர் வன்னியரசு சமூக நீதித்துறை மூலம் ஆற்றி வரும்,  ஆற்ற உள்ள பணிகளை நிறுத்த விரும்புகிறாரா? மக்கள் நலன் கருதி ஆட்சியைப் பிளவு படுத்த விரும்பலாமா?

“தமிழ்க்குடிதாங்கி”, “அம்பேத்கர் சுடர்” என மரு.இராமதாசைப் பாராட்டிய முனைவர் தொல்.திருமாவளவன் இன்றைக்கு எதிரும் புதிருமாகக் கூட அல்ல, பிறவிப் பகைவர்போல் பேசுவது குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும்.

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு. (திருவள்ளுவர், திருக்குறள், ௭௱௮௰௧ – 781)

ஆதலின் அரிய பாதுகாப்பான நட்பை பா.ம.க.வுடன் கொள்ள வேண்டும். இந்நட்பு இரண்டு வகுப்பாரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும். இந்நட்பின் காரணமாகப் “பாமக நுழைந்தால் வெளியேறுவோம்” என்று சொல்லத் தேவை வராது. பாமகவினரும் அமைச்சர் பொறுப்பேற்றுத் தம்மைச் சார்ந்தவர்க்கும் நாட்டுக்கும் நற்பணியாற்றுவார்கள்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதைச் சொல்லவும் தேவையில்லை அல்லவா?





Sunday, October 11, 2026

‘அகரமுதல’ கணிப்பு சரியானது. இனியேனும் அரசியல் மேதைகள்(!) ஊடக உளறல்களை நிறுத்தட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




“இடைத்தேர்தல்களில் த.வெ.க.வாகை சூடட்டும்!” எனத் தெரிவித்திருந்தோம். அதன்படியே சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் வாகை சூடியுள்ளது.

“த.வெ.க. கூட்டணி புதிய கட்சிகளை இணைத்துள்ளது. இதனால் அமைந்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வலுவாக உள்ளது”  எனக் குறிப்பிட்டிருந்தோம். தேர்தல்முடிவுகள் இதன் வலுவை மெய்ப்பித்துள்ளது.

“த.வெ.க. வெற்றி பெற்றாலும் உண்மையான வெற்றியாகக் குறிப்பிடாமல் அதிகார வலிமையால்  பெற்ற வெற்றி என்றுதான் கூறுவர். கூறிவிட்டுப் போகட்டும்.”  என்றோம். அதன்படிதான் தோல்வியைத் தழுவியவர்களும் அவர்களின் கூட்டாளிகளும் அப்படித்தான் சொல்லித் தங்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள். 

“இத்தேர்தல்களில் பொதுவுடைமைக் கட்சிகள் ஒவ்வொன்றும் ஆயிரம் வாக்குகள் அளவில்தான் பெறுவார்கள்.. அக்கட்சிகளுக்கு எதிரான எண்ணம்தான் மக்களிடையே எழுகிறது. எனவே, அவர்கள் மண்ணைக் கெளவுவதன் மூலம் அதற்கு விடை கொடுத்தாற்போல் அமையும். அதுவும் இத்தேர்தலின்  மக்கள் வெற்றியாக அமையும்.” எனத் தெரிவித்திருந்தோம். இதனை உண்மையாக்கும் வண்ணம், இ.பொ.க. வேட்பாளர் இலட்சுமணன் – 1,157 வாக்குகளும் இ.மா.க.வேட்பாளர்  பி.சுகந்தி, 1,986 வாக்குகளும் மட்டுமே பெற்றுள்ளனர். மண்ணைக் கவ்விய பொதுவுடைமைக் கட்சிகள். எங்கள் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல்  சில நாள் எதுவும் கூறிவிட்டுப் பின்னர்ச் சில ஆண்டுகள் அமைதி காப்பது நன்று. அல்லது எதிரணியில் வெளிப்படையாகச் சேர்ந்து விடுவது அல்லது தனியணியாகச் செயற்பட்டு, மக்கள் தொண்டாற்றுவது நன்று.

கருதியவாறு அதிமுக தோல்வியைத்தான் தழுவியுள்ளது. “தான் வென்ற தொகுதிகளிலேயே வெற்றி வாய்ப்பை இழப்பது அதிமுகவின் தோல்வியல்ல, தலைமையின் தோல்வி” என்றும் குறிப்பிட்டிருந்தோம். இதைத்தான் அக்கட்சியினரே கூறுகின்றனர்.

குதிரைபேரம் பொருந்தாது என்றும் குறிப்பிட்டிருந்தோம். “த.வெ.க. வேட்பாளர்கள் இருவரும் கட்சி மாறி வாக்களிக்கவில்லை. கட்சியின் செயற்பாடு பிடிக்காமல் விலகி வந்துள்ளனர். இப்பொழுது மக்கள் அவர்களை வெற்றி பெறச்செய்தால் மக்கள் இவர்கள் செயற்பாடுகளை ஏற்றுக்கொண்டதாகும். அவ்வாறாயின் குதிரை பேரம் எங்கே வரும்?” எனக் கேட்டிருந்தோம்.

பொதுமக்களால் த.வெ.க. வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுவதால், அவர்களுக்குத் தோல்வி உறுதி என்று பரப்பினர். “வேட்பாளர்களைப் பொதுமக்கள் விரட்டியடிக்கிறார்கள் என்கிறீர்களா? பொதுமக்கள் போர்வையில் எதிர்க்கட்சியினர் விரட்டியடிக்கச் செய்வதும் ஆனால், விரட்டப்பட்டவர்கள் வெற்றி பெறுவதும் முந்தைய தேர்தல்களில் நாம் பார்த்தவைதாமே! இவற்றை யெல்லாம் பொருட்படுத்தவேண்டா!” எனக் கூறியபடி விரட்டி யடிக்கப்பட்டவர்கள் வெற்றி மாலை சூடியுள்ளனர்.

“பொதுமக்கள் சிந்தித்து அளிக்கும் வாக்குகளால் த.வெ.க. வெற்றிக் கனிகளைப் பறித்து ஆட்சி நிலைப்பை உறுதி செய்யட்டும்!” என்றும்  “தமிழ்நாட்டின் நன்மைக்குத் தேவை நிலையான ஆட்சி. எனவே, இவ்விரு தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெறுவதுதான் அதற்கு ஏற்ற வழியாகும்” என்றோம். ஆம் நாம் கணித்தபடியும் வேண்டியபடியும் த.வெ.க. / ம.சா.ச.நீ. வெற்றிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

எனினும் அடுத்த இடைத்தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகப் பொய்யென அறிந்தும் பொய்யுரை புகல்வதுதான் கொடுமையானது.

 தவெக-வை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளைக் கணக்கில் கொண்டால், ஆளுங்கட்சியான தவெக பெரும்பான்மையான மக்களால் ஒதுக்கித்தள்ள(நிராகரிக்க)ப்பட்டுள்ளது என்று முன்னாள் முதல்வர் மு.க.தாலின் கூறியுள்ளார்

2006 சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்படியானால், 138 தொகுதிகள் தி.மு.க.விற்கு எதிரானதுதானே. இருந்தும் ஆட்சி அமைக்கவில்லையா? 100 வாக்குகள் உள்ள தேர்தலில் ஒருவர் 11 வாக்குகள் பெற்று போட்டியிட்ட மீதி 10 வேட்பாளர்களும் 11 வாக்குகளுக்குக் குறைவாகப்பெற்றிருந்தால் 11 வாக்குகள் பெற்றவர்தான் வென்றவர். இதுதான் குடிநாயக இலக்கணம். மற்றொரு சான்றைப் பார்க்கலாம். எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 62,992. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,63,866. அப்படியானால், 105807 வாக்காளர்கள் உதயநிதிக்கு எதிரானவர்கள் என்றுதானே பொருள். ஆக 64.57% வாக்காளர்கள் எதிராக இருப்பதால், உதயநிதி பதவி விலகுவாரா? மாட்டார் அல்லவா? த.வெ.க.வெற்றியை ஏற்க மனமின்றி அப்பாவி மக்களை ஏமாற்றலாம் எனத் திரித்துக் கூறுவதைச் சொந்தக் கட்சியினரே நம்பவில்லை. எனவே, இவ்வாறெல்லாம் தோல்வியை ஏற்க மனமின்றிக் கூறுவதை நிறுத்தி விட்டு தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து திருத்திக் கொள்ள வேண்டும்.

தோல்வியடைந்தவர்களும் அவர்கள் சார்பானவர்களும் சார்பு ஊடகங்களும் நடுநிலையுடன் செயற்பட வேண்டும். நல்லன செய்தால் பாராட்டியும் தவறு நேரும் வாய்ப்பு உள்ள இடங்களில் திருத்துவதற்கு வழிகாட்டியும் மக்களாட்சி மாண்பைக் காக்க வேண்டும்.

இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என ஒரு கட்சித்தலைவர் கூறுகிறார். அப்படியால் வரும் இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை என அறிவித்து ஒதுங்கி விட வேண்டும். ஒதுங்குவார்களா?

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௫௱௫ – 505)



Thursday, October 8, 2026

இரு மொழிக் கொள்கைக்கு எதிராகச் செயற்பட்டால் தண்டனை – பாராட்டும் நெறியுரையும்: இலக்குவனார் திருவள்ளுவன்

 



வழிகாட்டு சாலைப்பலகைகளில் இந்தி இடம் பெறச்செய்ததை அரசு கொள்கைக்கு எதிராகச் செயற்பட்டதாகக் கூறி உரிய அதிகாரிகளுக்குத் தமிழக அரசு தண்டனை கொடுத்துள்ளது. ஆட்சிமாழிச் செயலாக்கத்திற்கு எதிராகச் செயற்படு வோருக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்  என நாம் பலமுறை இதனை வலியுறுத்திவந்தோம். அதற்கேற்ப அரசின் இரு மொழிக்கொள்கைக்கு எதிராக நடந்து கொண்ட அதிகாரிகளுக்குத் தண்டனை கொடுத்தது பாராட்டிற்குரியது.  இதன் தொடர்பில் மேலும் சில செய்திகளை நாம் உணர வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் – நாசரேத்து மாநில நெடுஞ்சாலையில் (மாநில நெடுஞ்சாலை/மா.நெ./SH-93) புதிதாக அமைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டிருந்தது. அனைத்துத் தரப்பாரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் பூமிநாதன், உதவிப் பொறியாளர் முத்துலட்சுமி ஆகியோர் பணியிடை விலக்கம் செய்யப்பட்டனர்.

தமிழக அரசின் இருமொழிக் கொள்கைக்கு (தமிழ், ஆங்கிலம்) எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் மீது எவ்வித தயவும் இன்றிக் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என மாநில அரசு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வச் செய்திக்குறிப்பில் எச்சரிக்கையும் இடப்பட்டுள்ளது.

பலர் தவறு செய்திருக்கும் பொழுது இருவர் மீது மட்டும் நடவடிக்கை பாய்வது ஏன்? பொதுவாகக் குற்றம் புரிந்தவர் களுக்குத் தண்டனை என்றில்லை. குற்றவாளி பிடிபட்டால்தான் தண்டனை. அதுவும் குற்றம் புரிந்தவர் வேண்டியவரா, வேண்டாதவரா என்பதைப் பொறுத்தே தண்டனை அமையும்.

சாத்தான்குளம் – நாசரேத்து மாநில நெடுஞ்சாலைப் பெயர்ப்பலகையில் மட்டும்தானா இந்தி இடம் பெற்றுள்ளது. பூவிருந்தவல்லி தேசிய நெடுஞ்சாலையில் பெருந்தொடரி(மெட்டிரோ) நிலையம் அருகேயுள்ள மாதவரம் – பாரிமுனை – கோயம்பேடு இடங்களைக் குறிப்பிடும் சாலைவழிப் பலகைப் படத்தை மாதிரிக்குப் பார்க்கலாம். இதுபோல் தமிழ்நாடெங்கும் பல நெடுஞ்சாலைகளில் இந்தி இடம் பெற்றுள்ளதைப் பார்க்கலாம்.

ஆனால், மாநில நெடுஞ்சாலைத்துறை, பொறியாளர் சங்கப் பொறுப்பாளர்கள் சிலர், மத்திய சாலை – உள்கட்டமைப்பு நிதி வாயிலாக, 80% நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு உள்ளதால் விதிக்கிணங்க இந்தியிலும் பெயர் குறிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர்.

சில முன்நிகழ்வுகள் அடிப்படையில் இப்படித்தான் இருக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், பிற மாநில  வழிகாட்டுப் பலகைகளில் இந்தி இல்லை. சான்றுக்கு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கருநாடகா, குசராத்து, மகாராட்டிரம், மே.வங்காளம், அசாம் முதலிய மாநிலச் சாலைப் பெயர்ப் பலகைகள் படங்கள் தரப்பட்டுள்ளன.

பிற மாநிலங்களால் பெயர்ப்பலகைகளில் இந்தியைத் தவிர்த்திருக்கும் பொழுது தமிழ்நாட்டு அரசால் ஏன் அவ்வாறு செய்ய இயலாது? இந்தி இடம் பெறுவதைத் தவிர்க்க வேண்டுமென்றால் ஒன்றிய அரசின் நிதிப்பங்களிப்புத் திட்டம் எதுவென்றாலும் அறிவிக்கைப்பலகையில் அது குறிப்பிடப்படுமே தவிர, பெயர்ப்பலகை போன்ற எதிலும் இந்திக்கு இடமில்லை என்பதைத தெளிவாகக் கூறிவிடவேண்டும்.

இன்று நெடுஞ்சாலை எல்லைக் கற்களில் இந்தி இருப்பதைப் பார்க்கிறோம். இதற்குக் காரணம் தி.மு.க.வின் அமைச்சர் த.இரா.பாலுதான். அதைப் பெருமையாக இந்தித்திணிப்பு என்று சொல்லாமல் முதலில் மாநில மொழி, அடுத்து ஆங்கிலம், மூன்றாவது பிற மொழி என்றார். அந்தப் பிற மொழி இந்திதான். இந்தி என்று சொல்லாமல் பிற மொழி என்றார். இவ்வாறு இந்தியா முழுவதும் இந்தியை எல்லைக்கற்களில் திணித்த தி.மு.க. இன்று சாலைவழிப்பலகைகளில் இந்தி இடம் பெற்றதற்கு மூலவர் யார் என அறிந்தும் தமிழக அரசைத் திட்டுகிறது.

ஒன்றிய அரசின் நிதியுதவியால் இந்தியில் பெயர் வைக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது முறையல்ல. இந்திமட்டும்தான் ஒன்றிய அரசின் மொழியா? ஒன்றிய நிதியுதவியால் நிறைவேற்றப்படும் திட்டம் குறித்து அறிவிப்புப் பலகை வைத்தால் போதுமானது.

இருமொழிக் கொள்கையை அரசுகளும் புரிந்து கொள்ளவில்லை. புரிந்தும் புரியாமல் இருக்கும் அதிகாரிகளும் சரியாகச் செயற்படுத்துவதிலலை. சட்டப் பேரவையில் இருமொழிக்கொள்கை அறிவித்தது எப்பொழுது?

1968 சனவரி 23 செவ்வாய்க்கிழமை காலை 10.30க்கு இரு மொழிக்கொள்கைத் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. “தமிழும், மற்ற தேசிய மொழிகளும் மத்திய ஆட்சி மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியல் சட்டம் திருத்தப்படவேண்டும். அதுவரையில், ஆங்கிலமே ஆட்சி மொழியாகத் தொடர்ந்து இருந்துவர வேண்டும். அதற்கு ஏற்றபடி இந்திய அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவு திருத்தப்பட வேண்டும் என்று இந்த மன்றம் வற்புறுத்துகிறது” என்பதைப் பேரறிஞர் அண்ணா தெரிவித்தார்.

தே.ப.ப.(என். சி. சி.) முதலிய அணிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தி ஆணைச் சொற்களை நீக்கிவிடுவது என்றும், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்தால், தே.ப.ப.(என். சி. சி.) போன்ற அணிகளைக் கலைத்துவிடவும் இந்த மன்றம் தீர்மானிக்கிறது.  என்றும் பேரறிஞர் அண்ணா தீர்மானத்தின் பொழுது தெரிவித்தார். (இப்பொழுது தே.ப.ப.வில் பயிற்சி தருவோர் இந்திக் கட்டளைகளைத்தான் தெரிவிக்கின்றனர்.) இதே போன்று நெடுஞ்சாலைப் பெயர்ப்பலகையில் இந்தியில் குறிப்பிட வேண்டும் என்று சொன்னால் அந்நிதி ஒதுக்கீடே வேண்டா என்று சொல்ல வேண்டியதுதான்.

“நமது வீட்டிற்குள் புழங்குவதற்குத் தாய்மொழியான தமிழும், உலகத்தோடு தொடர்பு கொள்வதற்கு பன்னாட்டு மொழியான ஆங்கிலமும் நமக்குப் போதும். நமக்குத் தொடர்பே இல்லாத மற்றொரு மொழி நமக்குத் தேவையில்லை.”  என இருமொழிக்கொள்கைத் தீர்மானத்தின் பொழுது பேரறிஞர் அண்ணா உரையாற்றினார். நமது வீட்டிற்குள் என்று சொல்வதன் மூலம் நாம் வாழும் தமிழ்நாட்டிற்குள் தமிழும் அயல்நாட்டுடன் தொடர்பு கொள்ள ஆங்கிலமும் என்பதே இருமொழிக் கொள்கை.

ஆனால், நடைமுறையில் இருப்பது என்ன? இரு மொழிக்கொள்கை என்றால் தமிழும் ஆங்கிலமும் பயன்படுத்தலாம் எனக் கருதி முடிந்த அளவு ஆங்கிலத்தைப் பயன்படுத்துகின்றனர். அறிவிப்புப் பலகைகள், பெயர்ப் பலகைகள், சுற்றறிக்கைகள், மாறுதல் ஆணைகள், பதவி உயர்வு ஆணைகள், ஒப்பந்த அறிவிப்புகள், ஒப்பந்தங்கள், பொதுவான அரசாணைகள், விலைப்புள்ளிக் கேட்புகள், குறிப்பாணைகள், ஒழுங்கு நடவடிக்கை ஆணைகள், பதவி உயர்வு ஆணைகள், இடைவிலக்க ஆணைகள், பதவி நீக்க ஆணைகள், விளம்பரங்கள், பெரும்பாலான இணையத் தளப் பக்கங்கள் முதலிய எதுவாயினும் ஆங்கிலம் ஆங்கிலம் ஆங்கிலம்தான். தமிழ்ஆட்சிமொழித்திட்டத்தைச் சிறப்பாகச்செயற்படுத்தும் துறைகளில் தமிழைக் காணலாம். ஆனால் அங்கும் செயலகத்திலிருந்து வரும் ஆணைகள் ஆங்கிலத்தல் வருவதால், அவை தாெடர்பான பேணுகைகளை ஆங்கிலத்திற்குத் தாவிப் பயன்படுத்துகின்றனர்.

பொதுத்துறை, உள்துறை, நிதித்துறை,  முதலிய ஆங்கிலத்திலேயே மூழ்கியுள்ள சில துறைகளின் செயலர்கள் மீதும் உயர்நிலை அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுத்தால் தலைமைச்செயலகத்தில் தமிழைக் காணலாம். தமிழ்நாட்டில் தமிழை வாழச் செய்யலாம்.

அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திலேயே – அஃதாவது முதல்வரின் முகவரித் துறையிலேயே தமிழ்ப்படிவத்தைக் கூட ஆங்கிலத்தில்தான் நிறைவுசெய்கிறார்கள். இப்பிரிவு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் கூடுதல் தலைமைச்செயலர் நிலையில் உள்ள தனி அலுவலருக்குத்  தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றாதது குறித்துத் தெரிவித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தேன். இவ்வாறு நடவடிக்கை எடுத்து, இதன் விவரம் தெரிவிக்காவிடில் “தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நினைவு நாளான ஆவணி 17, 2057/03.09.2026 அன்று காலவரையறையற்ற உண்ணா நோன்பு மேற்கொள்ள” உள்ளதைத் தெரிவிததிருந்தேன். பின்னர் வேறு ஒர் அலுவலர் வேண்டியதற்கிணங்க இந்நாளை ஒத்திவைத்துள்ளேன். எனினும் இது குறித்துச் சிறிதும் பொருட்பத்தவில்லை.

ஒருவர் தலைமைச் செயலகத்திற்குள் நுழையும் பொழுது முகப்பில் யார், யாரைப் பார்க்க வருகிறார் முதலிய விவரங்களை ஆங்கிலத்தில்தான் பதிகிறார்கள். தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழைந்ததும் செய்திமக்கள் தொடர்புத் துறையினர் ஆங்கிலத்தில் ஒரு நுழைவுச்சீட்டைத் தருவார்கள். இதுவும் ஆங்கிலத்தில்தான். கணிணிமுறை இல்லாதபொழுது முகப்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையினர் ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற நுழைவுச்சீட்டைத் தருவார்கள். இப்பொழுது எதற்கு இது தேவை? முதலில் விவரம் கேட்டுப் பதியும் பொழுதே நுழைவுச்சீட்டைத் தமிழில் தரலாமே! அடுத்து உள்ளே புகுந்தால் தலைமைச்செயலர் அறைமுகப்பில் ஆங்கிலத்தில் பெயர் விவரங்களைப் பார்க்கலாம். தமிழில் மாற்ற வேண்டி அதற்கிணங்க அப்போதைய தலைமைச்செயலர் முனைர் வெ.இறையன்பு தமிழில் மாற்றி வைத்த பின்பு யார் ஆங்கிலத்திற்கு மாற்றியது? அவர் மீது நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும்.

அனைத்து அறைகள் வாயிலிலும் பெயர்களும் பதவிப்பெயர்களும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன. சில இடங்களில் ஆங்கிலம் மட்டும் உள்ளது. இரு மொழிக் கொள்கை என்றால் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் எனத் தவறாக எண்ணுவதாலேயே இந்த நிலை. தமிழில்மட்டுமே எழுதினால் பலகையின் அளவும் எழுதும் பகுதியும் பாதியாகிச் செலவும் பாதியாகும். எனவே, எல்லா இடங்களிலும் தமிழில் மட்டுமே பெயர்ப்பலகை வைததால் போதும் என ஆணை பிறப்பித்து நடைமுறைப்படுத்த  வேண்டும்.  அமைச்சர்கள், அதிகாரிகள் அறைகளைக் குறிப்பிடும் சுட்டுகைப் பலகை ஒன்று வைத்தால் போதுமானது.

தமிழில் இருக்கக்கூடிய கையொப்பம், சுருக்கொப்பம், சுற்றறிக்கைகள், குறிப்பாணைகள், அறிக்கைகள், ஆணைகள், ஒப்பந்தங்க்ள, பட்டியல்கள், பதிவேடுகள் முதலியன மட்டுமே செல்லத்தக்கன என அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள தமிழக அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாமல் பிற மாநில அரசுஅலுவலகங்கள், ஒன்றிய அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பிற அலுவலகங்கள் யாவற்றிலும் தமிழ்மட்டுமே அலுவலக மொழியாக இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயற்பட்டதாகக் கூறி நடவடிக்கை எடுத்த பொதுப்பணி-நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவு போன்று, தமிழ் வளர்ச்சி அமைச்சரும் மனிதவள மேலாண்மை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டு முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய் கூடுதல் கருத்து செலுத்தி, இரு மொழிக்கொள்கை என்றால் தமிழ்நாட்டிற்குள் தமிழ்மட்டுமே பயன்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்!

Tuesday, September 29, 2026

ஆட்சி நிலைக்க இடைத்தேர்தல்களில் த.வெ.க.வாகை சூடட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்



வரும் அட்டோபர் 6 அன்று மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள்அடிப்படையில் கணக்கிட்டு யார் வெற்றி பெறுவார் எனக் கணிப்பது வழக்கம். ஆனால் பொதுத்தேர்தலுக்கும்  இடைத்தேர்தலுக்கும் இடையில் கட்சி அணிகள் இடம் மாறியதால் அதற்கேற்பவே கணக்கிட வேண்டும்.

 பொதுத்தேர்தலின்போது இருந்த கூட்டணிக் கட்சிகள் இன்றைக்குத் தி.மு.க. கூட்டணியிலும் அதிமுக கூட்டணியிலும் இல்லை. அதே நேரம் த.வெ.க. கூட்டணி புதிய கட்சிகளை இணைத்துள்ளது. இதனால் அமைந்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வலுவாக உள்ளது. இருப்பினும் மக்கள் மனநிலையை யாரே அறிவார்?

இச்சூழலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். இரண்டுதொகுதிகளும் த.வெ.க. வென்ற தொகுதிகள் அல்ல. எனவே, முன்பை விட வாக்குகள் கூட பெற்றாலே அதற்கு வெற்றியாகத்தான் கருத வேண்டும். ஆனால் வெற்றிக்கனியைப் பறிக்காமல் விட்டு விட்டால் த.வெ.க.விற்கு மாபெரும் தோல்வி என்றுதான் ஊடகத்தினர் ஊதித் தள்ஞவார்கள். முதல்வர் ச.சோ.விசய்க்கு மாபெரும் தோல்வி என்று கூறி ஆட்சியைக் கலைக்க வேண்டும் அல்லது முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கூக்குரலிடுவார்கள்.

இது தமிழ்நாட்டின் அமைதியான சூழலுக்கு இடையூறாக அமையும்.  ஐந்தாண்டு முடிவின் பொழுதுதான் ஆட்சிக்கான முழுப் பருவத் தேர்வு நடைபெறும். அப்பொழுதுதான் மக்கள் ஆட்சியை அகற்றலாமா நீடிக்கச் செய்யலாமா என முடிவெடுப்பர். அதுவே இயற்கையாகும். ஆட்சியில் அமர்ந்த சில திங்களிலேயே ஆட்சி மா்றறம் பற்றிக் கூறுவது முறையல்ல. தான் பொதுத்தேர்தலில் வெற்றி பெறாததொகுதி என்றாலும் த.வெ.க.விற்குத் தோல்வி வந்தால் அவ்வாறு கூறாமல் அக்கட்சிக்கான மாபெரும் தோல்வி, விசய்க்கான வீழ்ச்சி, மக்கள் திருந்தி விட்டார்கள், மாயைஅகன்று விட்டது படச்சுருள்(ரீல்சு) சுருண்டு விட்டது, உண்மை (ரியல்) வெளிவந்து விட்டது என்றெல்லாம் பரப்புவார்கள். த.வெ.க. வெற்றி பெற்றாலும் உண்மையான வெற்றியாகக் குறிப்பிடாமல் அதிகார வலிமையால்  பெற்ற வெற்றி என்றுதான் கூறுவர். கூறிவிட்டுப் போகட்டும். ஆனால் ஆட்சிக் கலைப்பு என்ற கூக்குரல் சற்று அடங்கும். தமிழ்நாட்டின் நன்மைக்குத் தேவை நிலையான ஆட்சி. எனவே, இவ்விரு தொகுதிகளிலும்த.வெ.க. வெற்றி பெறுவதுதான் அதற்கு ஏற்ற வழியாகும்.

இத்தேர்தல்களில் பொதுவுடைமைக் கட்சிக்ள ஒவ்வொன்றும் ஆயிரம் வாக்குகள் அளவில்தான் பெறுவார்கள் என நம்பப்படுகிறது. ஒருவேளை தி.மு.க. வாக்குகள் கிடைத்தால் சில ஆயிரம் பெறலாம். இவ்வாறு அவர்கள் தோல்வியைத் தழுவுவதும் நிலையான ஆட்சிக்கான வழிதான். ஏனெனில் நடுநிலையாகக் கூறுவதாக விளம்பரப்படுத்திக் கொண்டு, இன்னும் பழைய கூட்டணியிலேயே இருக்கும் அவர்களை மக்கள் நம்பவில்லை. இதற்கு அவர்கள் முந்தைய கூட்டணியிலேயே இருந்திருக்கலாமே என்றுதான் கருதுகின்றனர். நாள்தோறும் – அதிலும் குறிப்பாக மார்க்குசியப் பொதுவுடைமைக் கட்சியின் அறிவிப்பு அல்லது செவ்வி வரும் பொழுது அதன் உண்மைத் தன்மையைப் பார்க்காமல் அக்கட்சிக்கு எதிரான எண்ணம்தான் மக்களிடையே எழுகிறது. எனவே, அவர்கள் மண்ணைக் கெளவுவதன் மூலம் அதற்கு விடை கொடுத்தாற்போல் அமையும். அதுவும் இத்தேர்தலின்  மக்கள் வெற்றியாக அமையும்.

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௯௱௮௰௮ – 988)

“மக்கள் ஆதரவின்மை  என்பது இழிவாகாது, சால்பு என்னும் வலிமைப் பண்பைப் பெற்றால்” என்பதைத் தி.மு.க.வும் உணரவேண்டும். தலைமைக்கு இருக்கும் ஆங்கிலப்பித்து, இந்தித்திணிப்பை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு தாங்கள் நடத்தும் கல்வி நிலையங்கள் மூலம் இந்தியைத் திணித்தல் போன்ற குறைகளை அகற்றச் சிந்தித்துத் தமிழ், தமிழர் நலன் குறித்துக் கூடுதலாகச் செயலாற்ற வாய்ப்பு வந்ததாகக் கருத வேண்டும். இன்னும் மூன்று ஆண்டுகளேனும் தேர்தலைப்பற்றி எண்ணாமல், அதற்கடுத்த தேர்தலுக்கு முந்தைய ஈராண்டுகளில் மட்டும் அது குறித்துச் சிந்தித்துச் செயலாற்றினால் நல்லன நடைபெறலாம்.

தான் வென்ற தொகுதிகளிலேயே வெற்றி வாய்ப்பை இழப்பது அதிமுகவின் தோல்வியல்ல, தலைமையின் தோல்வி என்பதை உணர்ந்து அதன் திறன்மிகு கட்சித் தலைமை தன்னைத் திருத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும்.

பா.ச.க.வும் தமிழ்நாட்டிற்கு எதிராகவும் இயற்கை நீதிக்கு மாறாகவும் உள்ள செயற்பாடுகளைக் களைய ஒரு வாய்ப்பு கிடைத்ததாக எண்ணி அது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒவ்வொரு தொகுதியை மற்ற கட்சிக்கு விட்டுக்கொடுத்தால் அது த.வெ.க.விற்குத்தான் பயன்தரும்.

குதிரை பேரம் என்னாவது என்கிறீர்களா? குதிரை பேரம் மூலம் ஆட்சிகளை அமைத்து நடத்திக் கொண்டிருக்கும் பாசகவும் அதன் தோழமைகளும் அதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரவித்து முற்றுப்புள்ளி வைக்காத பிற எதிர்க்கட்சிகளும் அதனைக் கூறத் தகுதியுண்டா?

தேர்தலில் போட்டியிட இருந்த த.வெ.க. வேட்பாளரையே குதிரை பேரத்தால் ஒளியச் செய்த அதிமுகவிற்கு இது குறித்து என்ன தகுதி உள்ளது?  மாற்றுக் கட்சியினரைத் தன் கட்சிச் சின்னத்தில் போட்டியிடச்செய்து அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் திமுகவிற்கும் என்ன தகுதி உள்ளது? இதற்கு முந்தைய பல தேர்தல்களும் குதிரை பேர முன் வரலாற்றைக் கூறுமே!

த.வெ.க. வேட்பாளர்கள் இருவரும் கட்சி மாறி வாக்களிக்கவில்லை. கட்சியின் செயற்பாடு பிடிக்காமல் விலகி வந்துள்ளனர். இப்பொழுது மக்கள் அவர்களை வெற்றி பெறச்செய்தால் மக்கள் இவர்கள் செயற்பாடுகளை ஏற்றுக்கொண்டதாகும். அவ்வாறாயின் குதிரை பேரம் எங்கே வரும்?

வேட்பாளர்களைப் பொதுமக்கள் விரட்டியடிக்கிறார்கள் என்கிறீர்களா? பொதுமக்கள் போர்வையில் எதிர்க்கட்சியினர் விரட்டியடிக்கச் செய்வதும் ஆனால், விரட்டப்பட்டவர்கள் வெற்றி பெறுவதும் முந்தைய தேர்தல்களில் நாம் பார்த்தவைதாமே! இவற்றை யெல்லாம் பொருட்படுத்தவேண்டா!

 ஆக ஒட்டுமொத்தமாகத் த.வெ.க.வின் வெற்றி என்பது அனைத்துக் கட்சிகளுக்கும் நன்மையே விளைவிக்கும். எனவே, பொதுமக்கள் சிந்தித்து அளிக்கும் வாக்குகளால் த.வெ.க. வெற்றிக் கனிகளைப் பறித்து ஆட்சி நிலைப்பை உறுதி செய்யட்டும்!

  • இலக்குவனார் திருவள்ளுவன்
  • இதழுரை, அகரமுதல, புரட்டாசி 13, 2057 / 30.09.2026



Followers

Blog Archive