Showing posts with label குறட் கடலிற் சில துளிகள். Show all posts
Showing posts with label குறட் கடலிற் சில துளிகள். Show all posts

Friday, May 1, 2026

குறட் கடலிற் சில துளிகள் 45: இன நலமே பாதுகாப்பு! – இலக்குவனார் திருவள்ளுவன்



(குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுணையே- தொடர்ச்சி)

மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து

(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௮ – 458)

மனம் நன்னலமாக இருப்பினும் சான்றோர்க்கு இனநலமே பாதுகாப்பானது.

பதவுரை:

மன-மனத்தின்; நலம்-நன்மை; நன்கு-மிகுதியும்; உடையர்-உ்டையவர்கள்; ஆயினும்-ஆனாலும்; சான்றோர்க்கு-அறிவு, ஒழுக்கம் முதலியவற்றில் சிறந்து விளங்கும் பண்பாளர்க்கு; இனநலம்-இனத்தின் நன்மை; ஏமாப்பு-வலிமை, பாதுகாவல்; உடைத்து-உடையது.

கருத்துரைகள்

மன நலம் இருப்பினும் சிற்றினம் சேராமல் நல்லினத்துடன் சேர்ந்து வாழ்தலே பாதுகாப்பு உடையது என்கிறார் திருவள்ளுவர்.

மணக்குடவர் உரை: 

மன நன்மை மிக வுடையராயினும் இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து.

இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான் இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது.

 பரிமேலழகர் உரை:

மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்; சான்றோர்க்கு  இனநன்மை அதற்கு வலியாதலையுடைத்து

முந்தைய நல்வினையால் மனநலம் உடையவராக இருப்பதாகப் பரிமேலழகர் கூறுவதுபோல் சிலரும் அவர் வழியில் இவ்வாறே கூறுகின்றனர்.

உள்ளத் தூய்மை மிகக் கொண்டவரே ஆனாலும், சான்றோர்க்கு அவரைச் சேர்ந்தவர்களும் நல்லவர்களாக இருப்பது மன வலிமை கெடாது காக்கும்.

சான்றோர்கள் உறுதியான மனவளம் கொண்டவர்கள். அவர்களும் சிற்றினத்துடன் சேர்க்கை கொண்டால், அவர் மனம் தளர்ச்சி யடைந்து உள்ளத்தை மாசுபடுத்தி விடும். நல்ல இனத்தாருடனனான பழக்கம் அத்தகைய தளர்ச்சிக்கு வழி வகுக்காமல் பாதுகாப்பாக இருக்கும்.

சான்றோர்க்கே இனநலம் பாதுகாப்பாக இருக்கும் என்றால் பிறருக்கு மிகுதியும் இனநலம் தேவை என்பதை உணரலாம்.


நல்லினத்தைத் துணையாகக் கொண்டால் தீமையிலிருந்து காக்கவும் அழிவு வராமல் தடுக்கவும் நற்பயன் விளைவிக்கவும் பாதுகாவலாக இருக்கும். எனவே, நாம் இன நலனில் கருத்து செலுத்த வேண்டும். பல நாட்டுப் போராளிகளும் இனநலத்துடன் செயற்பட்டமையால்தான் மக்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டு, அந்நாட்டு விடுதலைக்கு வழிவகுத்தனர். ஈழத்திலும் விடுதலைப்புலிகளும் இன நலத்துடன் செயற்பட்டமையால்தான் அந்நாட்டு மக்களுக்கு எழுச்சி ஏற்படுத்தி இனப்படுகொலைகள் நிகழும்  வரை – வாணாள் வரையும் நல்லாட்சியும் புரிந்தனர்; தம் நாட்டவர்க்குப் பாதுகாப்பாகவும் இருந்தனர். ஆனால்,  இனநலமற்றவர் ஊடுருவலாலும் தமிழ்நாட்டு மக்கள் இனநலனில் கருத்து செலுத்தாததாலும் நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலையாயினர். கைகளில் விழுந்த விடுதலைக்கனி பறிக்கப்பட்டு இறந்தவர்கள் தவிர இருப்பவர்களும் உறுப்புகள் இழந்தும் உடைமைகள் இழந்தும் இன்னலில் சிக்குண்டுள்ளனர். உலகெங்கும் உள்ள தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க நாம் இனநலம் பேணுவோரைத் துணையாகக் கொள்ளவேண்டும். இவ்வாறு பல நாடுகளிலும் இனநலமுடையாரைச் சார்ந்திருப்போர் பாதுகாப்பாக உள்ளனர். அவ்வாறில்லாதார் பாதுகாப்பு இழந்து துயருறுகின்றனர்.

எனவே தூய மனமுடையவராக இருப்பினும் இன நலத்தைப் பாதுகாப்பாகக் கொள்வோம்!

Monday, April 20, 2026

குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுணையே- இலக்குவனார் திருவள்ளுவன்

      21 April 2026      



(குறட் கடலிற் சில துளிகள் 43: தூய மனத்தவர்க்கு அவர்க்குப் பின்பும் புகழ் நிலைத்து நிற்கும் – தொடர்ச்சி)

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௭ – 457)

மன்னுயிர்க்கு ஆக்கம் தருவது நல்ல மனநிலையே! எல்லா வகையான புகழையும் தருவது நல்லினத்தின் துணையே!

பதவுரை:

மனநலம்=மனத் தூய்மை, மனத்தது நன்மை; மன்னுயிர்க்கு= நிலைபெற்ற உயிர்க்கு; ஆக்கம்=பெருக்கம், செல்வம், சொத்து, உயர்வு, ஆற்றல்; இனம்=குலம், சுற்றம், துணையாகச் சேரும் கூட்டம், சேர்க்கை; நலம்=சிறப்பு; நன்மை; எல்லா-அனைத்து; புகழும்-புகழையும்; தரும்=கொடுக்கும்.

“நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும், இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்” என்கிறார் பரிமேலழகர்.

அறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர், “மாந்தருக்கு மனநன்மை ஒரு செல்வமாம்” என்கிறார்.

அறிஞர் கா சுப்பிரமணியம், “மக்கள் உள்ளத்தின் சிறப்பு அவர்களுக்கு மேன்மேல் உயர்ச்சியைத் தரும். அவர்கள் சேரும் இனத்தினுடைய சிறப்பு அவர்களுக்கு எல்லாப் புகழையுந் தரும்” என்கிறார்.

“மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாவதுபோல, இன நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும்” என்கிறார் உரையாசிரியர் மணக்குடவர்.

உள்ளத் தூய்மையைப் பேணிக்கொண்டால் அதுவே நிலைபெற்ற உயிர்க்கு உயர்வாம்; நல்லோர்களுடனான சேர்க்கையால் புகழ் எல்லாம் வந்தடையும்.

இனச்சிறப்பினால் நற்பெயர் கிடைக்கிறது. இதன்வழி எல்லா வகைப் புகழும் கிடைக்கும்.  சிறுமைக் குணம் உடையவர்கள் சேர்க்கையை நீக்கி நற்பண்புடையவர்களுடன் பழகினால் புகழ் தானே வந்தடையும்.

எல்லாப் புகழும் எனக் கூறுவதன் காரணம், எல்லா வகையான புகழும் கிடைக்கும் என்பதே. அஃதாவது நாம் ஆற்றும் நற்செயல்களால் கிடைக்கும் புகழ், நாம் வகிக்கும் பதவியால் வரும் புகழ், நமது அரசியல் நிலைப்பாட்டால் வரும் புகழ், நம் கல்வியால் வரும் புகழ், கொடையால் கிடைக்கும் புகழ்,ஈகையால் எய்தும் புகழ் எனப் பலவைகயிலும் நமக்கு வரக்கூடிய எல்லா வகைப் புகழையும் நாம் பெறலாம் என்பதை வலியுறுத்தவே

இனநலம் பேணும் போராளிகள் தங்கள் மக்களால் போற்றப்படுகிறார்கள். மனநலமும் இனநலமும் நம்மிடையே இல்லாத காரணத்தால்தான் நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் உயிரிழக்கவும் உறுப்புகளை இழக்கவும் குடும்பத்தினரை இழக்கவும் உடைமைகளை இழக்கவும் நிலத்தைப் பறிகொடுக்கவும் காரணமாக இருந்து விட்டோம்.

எனவே, நமக்கு நல்லன விளையவேண்டு மென்றால், ஆக்கம் கிடைக்க வேண்டுமென்றால், செல்வம் சேர வேண்டுமென்றால், நல்ல மனத்துடன் திகழ வேண்டும். நன்மனம் இல்லையேல் எதிரான விளைவுகள்தான் நம்மைச் சேரும். அஃதாவது, செல்வம் சேராது, ஆக்கம் ஒட்டாது, நல்லன நிகழா. மனத்தைத் தூய்மையாக வைத்திருப்பதற்கு நல்ல மனம் கொண்டவர்களுடன்தான் நட்பு வைத்திருக்க வேண்டும், உறவு கொள்ள வேண்டும், சேர்க்கை இருக்க வேண்டும். அவ்வாறு நற்சேர்க்கை இருந்தால்தான் நன்மை எய்தலாம், செல்வத்தில் செழிக்கலாம், உயர்வு அடையலாம், புகழுடன் வாழலாம்.

எனவே, ஆக்கத்தையும் புகழையும் எய்த

மனநலமும் இனநலமும் கொள்வோம்

Monday, April 13, 2026

குறட் கடலிற் சில துளிகள் 43: தூய மனத்தவர்க்கு அவர்க்குப் பின்பும் புகழ் நிலைத்து நிற்கும் – இலக்குவனார் திருவள்ளுவன்

      14 April 2026      கரமுதல



(குறட் கடலிற் சில துளிகள் 42: மனம், செயல் ஆகியவற்றின் தூய்மை இனத்தூய்மையாலே வரும்.- தொடர்ச்சி)

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு

இல்லைநன் றாகா வினை.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௬ – 456)

மனத்தூய்மை உடையவர்க்கு அவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியன நல்லவையாய் அமையும். தூய இனம் உடையவர்க்கு நன்மை விளைவிக்காத செயல் எதுவுமில்லை.

பதவுரை: மனம்-உள்ளம்; தூயார்க்கு-தூய்மையுடையவர்க்கு; எச்சம்- புகழ்; நன்றாகும்-நன்மையுடையதாகும்; இனம்-குழு; தூயார்க்கு-தூய்மையுடையவர்க்கு; இல்லை-இல்லை; நன்று-நன்மையுடையது; ஆகா-ஆகாத; வினை-செயல்.

எச்சம் என்பதற்கு மணக்குடவர் “பின்பு நிற்கும் காணம் முதலான பொருள்கள்” என்கிறார். காணம் என்னும் சொல்லுக்குக் கொள்ளு, செக்கு,  பழைய நிறுத்தலளவை ஒன்றின் பெயர், பொன், பொருள், பாகம் எனப் பொருள்கள். மணக்குடவர் பொன், பொருள் முதலியவற்றைக் கூறுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  

பரிப்பெருமாள் மக்கள் முதலான பொருள்கள் என்றும்  பரிதி புதல்வர் என்றும் காலிங்கர் மக்கட்பேறு முதலிய என்றும் பரிமேலழகர்  மக்கட்பேறு என்றும் கூறுகின்றனர்.

இவர்கள் வழியில் இன்றைய ஆசிரியர்களில் பலரும் பின்வழி என்றும் மக்கட்பேறு என்றும் நன்மக்கட் பேறு என்றும் எச்சத்திற்குப் பொருள் காண்கின்றனர்.

ஆனால், இவை பொருந்தா. திருமணமாகாதவர்க்கும் அல்லது திருமணமாகிக் குழந்தைப் பேறு பெறாதவர்களுக்கும் இவ்வாறான குறட்பொருள் பொருந்தாதே!

எச்சம் என்றால் என்ன?  எஞ்சி நிற்பது. அஃதாவது ஒருவர் மறைவிற்குப் அவர் விட்டுச் செல்வது. ‘மிச்சம்’ ‘விட்டிருப்பது என்றும் கூறுவர். ஒருவர் ஈட்டிய பொன், உடைமைகள், பிள்ளைகள், புகழ், நற்பெயர், நற்செயல்களின் அடையாளங்கள். முதலியனவே எச்சமாகின்றது. ஒருவர் கல்விக்கூடம், மருத்துவமனை, நீர்நிலைகள், திருமண மண்டபங்கள் முதலியவற்றைக் கட்டித்தந்திருந்தால் அவருக்குப் பின்னும் அவை மக்கட்குப் பயன்பட்டு அவரின் நற்பெயர்களைப் பறைசாற்றும். இவையே எச்சமாகும்.

தூய மனம் கொண்டவர்கள் பிறருக்கு நற்செயல்கள் புரிவர். அவற்றால் பயனடைந்தவர்கள் அவர்களின் புகழைப் பறைசாற்றுவர். நல்வினைப் பயன் என்பதையும் எச்சமாகத்தான் கருத வேண்டும்.

இனத் தூய்மை உடையவர்கள் நல்ல துணையுடன் இருப்பர். நற்செயல் புரிவோர் நற்றுணையுடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு ஆகாதது என்று எதுவும் இல்லாமல் அவர்களுக்கு நடப்பனவெல்லாம் நல்லனவாகவே இருக்கும்.

இனத் தூய்மை உடையவர்கள் நல்ல துணையுடன் இருப்பர். நற்செயல் புரிவோர் நற்றுணையுடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு ஆகாதது என்று எதுவும் இல்லாமல் அவர்களுக்கு நடப்பனவெல்லாம் நல்லனவாகவே இருக்கும்.

அப்படியானால், இனத்தூய்மை உடையவர்க்குத் தீயன விளையாதா? இடர்கள் ஏற்படாவா? துன்பங்கள் உண்டாகாவா? துயரங்கள் வாராவா? இவை வரலாம். ஆனால் இவற்றால் பாதிப்புகள் ஏற்படா வண்ணம் உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களையும் நட்பு.  எனவே, தூய இனத்தை உடையவர்க்கு இன்னலைக் களையும் நட்பு இருப்பின் எல்லாமே நல்லனவாகும். எனவே, நன்றாகாத வினை எதுவும் இருக்காது.

ஆதலின் மனத்தைத் தூயதாக வைத்திருப்போம்! நல்லினத்துடனே நட்பு பாராட்டுவோம்! நமக்கும் நம்மைச் சார்ந்தவர்க்கும் நல்லனவே நிகழும்!

நாம் ஆற்றும் நல்வினைப் பயன்களின் நல் விளைவுகள் நாம் மறைந்த பின்னரும் எஞ்சி நின்று நம் பெயரை நிலை நிறுத்தும். எனவே, நாமும் நாம் விட்டுச்செல்வதற்குரிய நற்பயன் தரும்  அருஞ்செயல் ஆற்றுவோம்!

Friday, March 6, 2026

குறட் கடலிற் சில துளிகள் 42 : இனத்தூய்மை கொள்வோம்- இலக்குவனார் திருவள்ளுவன்

      06 March 2026      அனரமுதல



(குறட் கடலிற் சில துளிகள் 41 : சூழலால் உருவாவதே அறிவு!- தொடர்ச்சி)

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்தூய்மை தூவா வரும்.  

(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௫ – 455)

மனம் தூய்மை யாதலும், செயல் தூய்மை யாதலும் தான் சேரும் இனத்தின் தூய்மையால் உருவாகும்.

பதவுரை:

 மனந்தூய்மை-மனநலன், உள்ளத் தூய்மை; செய்வினை தூய்மை-செயல் நயம்; இரண்டும்-இரண்டும்; இனம் – சேர்க்கை; தூய்மை-நன்றாதல்; தூ-பற்றுக்கோடு; ஆ-ஆகும்படி; வரும்-உண்டாம்.

மனத்தூய்மை என்பது மனத்தில் மாசு இன்றி இருத்தல். அஃதாவது தனக்குத் தீமை தரும் என்று கருதும் செயல்களைத் தான் பிறருக்குச் செய்யாதிருக்க வேண்டும். அதுபோல், தனக்கு நன்மை விளைவிக்கும் எனக் கருதும் செயல்களைப் பிறருக்குச்செய்தல் வேண்டும்.

ஒருவருக்கு அவர் சேர்க்கைக்கு அல்லது கூட்டத்திற்கு அல்லது நட்பிற்கு ஏற்பவே பழக்க வழக்கங்கள், ஒழுக்கங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் முதலியன உருவாகின்றன. கூடா நட்புடன் தொடர்பு ஏற்படும் பொழுது தீய எண்ணத்திற்கு ஆட்பட்டுத் தீய செயலில் ஈடுபட்டு விடுகின்றனர். அதனால் தீமையே விளைகிறது. சேர்க்கையால் நல்ல நண்பர்கள் அமையும் பொழுது மனத்தூய்மை கொண்டு நற்செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனால் நன்மையே விளைகிறது.

வஞ்சகர்களுடன் சேரும்பொழுது மனங்கெட்டு வஞ்சச் செயல்களில் ஈடுபட்டு விடுகின்றனர். அறவோர்களுடன் சேரும்பொழுது மனம் தூய்மை அடைந்து அறச் செயல்களில் நாட்டம் கொள்கின்றனர். மூட நம்பிக்கையருடன் சேருபவர்கள் மனந்திரிந்து மூடச் செயல்களில் ஈடுபடுகின்றனர். பகுத்தறிவாளர்களுடன் பழகினால் நன்மனம் கொண்டு பகுத்தறிவுச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

எனவே, தீய இனத்திலிருந்து விலகியும் நல்லினத்துடன் இணைந்தும் வாழ வேண்டும்.

எனவேதான் திருவள்ளுவர் மனத் தூய்மையையும் அதனால் நிகழும் செயல் தூய்மையையும் வலியுறுத்துகிறார்.

“இனந்தூய்மை தூவா வரும்” என்றால் என்ன பொருள்?  இதற்கு இன்றைய உரையாசிரியர்கள், ‘நல்ல கூட்டுறவால் வரும்’, ‘அவன் நெருங்கிப் பழகும் மனிதர்களுடைய இனம் தூய்மையாக இருந்தால்தான் முடியும்’, ‘ அவன் சேரும் இனத்தாரின் புனிதத்தைச் சார்ந்தே அமைவன ஆகும்’, ‘தாம் சேர்ந்துள்ள இனத்தின் காரணமாக உண்டாகும்’ என்று வெவ்வேறு பொருள் கூறுகின்றனர்.

தூவா வரும்“ என்றால் என்ன?

‘தூவா வரும்’ என்ற தொடர்க்குப் பற்றிவரும், காரணமாகவே வரும், பற்றுக் கோடாக உளவாம், பொறுத்தே ஏற்படும், பொறுத்தே உண்டாகும், வரும், தருவதால் வருவன, சார்ந்தே அமைவன ஆகும், காரணமாக உண்டாகும், பற்றுக்கோடாக நிலைத்து நிற்கும் என அறிஞர்களின் கருத்துகளைக் குறள் திறன் தொகுத்துத் தருகிறது.

குறள்நெறிக்காவலர் பேரா.முனைவர் சி.இலக்குவனார், இக் குறளை ஆட்சியாளருக்கு அறிவுரை கூறுவதாகப் பின்வருமாறு கூறுகிறார்.

ஆட்சிப் பொறுப்பினை ஏற்போர்க்கும் பிறர்க்கும் உள்ளத்தூய்மையும் வினைத் தூய்மையும் இன்றியமையாது வேண்டும். இவையிரண்டும் இல்லையேல், எவரும் நற்பணி ஆற்றி நல்வாழ்வு வாழ்தல் இயலாது. தூய்மையே வாழ்வின் உயிர் என்று கூறலாம். அத்தூய்மையும் இனத்தால்தான் உண்டாகின்றது. ஆதலின் சிற்றினம் தவிர்க்கப்படல் வேண்டும்” என்கிறார்.

ஆட்சிப்பொறுப்பினை ஏற்போர்க்கும் என்று நிறுத்தி விடாது, பிறர்க்கும் என விளக்கம் தருகிறார் இலக்குவனார்.

எனவே, இக்குறள் யாவருக்கும் பொருந்துவதே. எனவே, அனைவரும்  இக்குறளைப் பின்பற்றி, தூய்மையான மனத்துடன் செயலிலும் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். இவற்றுக்குத் தூய இனத்துடன் சேர வேண்டும்.

ஆதலின் நாம் தூய இனத்துடன் சேருவோம்! தூய மனம் கொள்வோம்! தூய செயல் ஆற்றுவோம்!

Thursday, February 12, 2026

குறட் கடலிற் சில துளிகள் 41 : சூழலால் உருவாவதே அறிவு! – இலக்குவனார் திருவள்ளுவன்



(குறட் கடலிற் சில துளிகள் 40 : பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க! – தொடர்ச்சி)

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு

இனத்துள தாகும் அறிவு. 

 (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௪ – 454)

ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றும். ஆனால், சூழும் இனத்திற்கேற்ப உண்டாவதே அறிவாகும்.

பதவுரை : மனத்துளது போலக் காட்டி – (ஒருவனின்) மனத்தில் உள்ளதாகத் தோற்றத்தைக் காட்டி; ஒருவற்கு – ஒருவனுக்கு;
இனத்துளதாகும் – அவன் சேர்ந்துள்ள இனத்தின் தன்மையாகவே;
அறிவு – அவனது அறிவு (சிறப்பறிவு) வெளிப்படும்.

 ஒருவன் மனத்தில் உள்ளதுபோல் அறிவு தோன்றும். அது பொய்த்தோற்றம் என்கிறார் திருவள்ளுவர். ஒருவன் நல்லினத்துடன் சேர்கிறானா அல்லது தீய இனத்துடன் சேர்கிறானா என்பதைப் பொறுத்தே உருவாகும் அறிவு என்கிறார் திருவள்ளுவர்.

ஒருவன் தீய பழக்க வழக்கங்கள் உள்ள இனத்துடன் சேரும் பொழுது அக்கூடாச் சேர்க்கையால் அவனுக்குத் தீய பழக்க வழக்கங்கள் உண்டாகின்றன. அதனால் தீய பண்பினன் ஆகின்றான். அத் தீய பண்புகளுக்கேற்ப அவனது அறிவும் அமைந்து விடுகிறது. அதே நேரம் ஒருவன் நல்லினச் சேர்க்கை உடையவனாக இருந்தால் அவனது இயல்பான நற்பண்புகள் வெளிப்படுவதுடன் மேலும் நற்பண்புகளுக்கு உறைவிடமாகிறான். எனவே, அவனது அறிவு அத்தகைய நற்பண்புகளுக்கேற்பவே உருவாகி அமைகின்றது.

நிலத்தில் விழும் தூய நீர் மண்ணின் தன்மைக்கேற்பத் தன் தன்மை திரிந்து விளங்கும். அதுபோல் சேரும் இனத்தின் இயல்பிற்கேற்ப அறிவும் மாறுபடும் எனத் திருவள்ளுவர் முன்னேர(குறள் 452) கூறியுள்ளார்.

பெரும்பாவச்செயல்கள், ஆணவம், அகங்காரம், தற்பெருமை, நயவஞ்சகம், உள்ளத்தை மறைத்துப் பேசுதல், பொய் பேசுதல், அவதூறு கற்பித்தல், புறம்பேசுதல், அநீதி இழைத்தல், பிறர் பொருள் கவர்தல்,  திருட்டு, கொள்ளை, சூதாட்டம், மோசடி, சோம்பல், மது அருந்துதல், போதைப் பொருள் பயன்பாடு, போதைப் பொருள் விற்பனை, ஏமாற்றிப் பிழைத்தல், பரத்தமை முதலிய பல்வேறு தீய செயல்களில் ஒன்றையோ பலவற்றையோ உடையவர்களாகத் தீயோர் உள்ளனர். இத்தகைய தீய இனத்துடன் சேரும்பொழுது சேருவோரும் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகிப் பிறருக்கும் கொடுமை இழைப்பவர் ஆகிவிடுகிறார். தீய பழக்க வழக்கங்களுக்கும் தீய செயல்களுக்கும் ஏற்ப நல்லறிவும் திரிந்து விடுகிறது. நல்லறிவுடையவர்களும் நல்ல திறமை உடையவர்களும் தீய இனத்தால் சேருவதால்  நிலை தடுமாறிச் சீரழிவதை நாம் பலரது வாழ்வில் பார்த்துள்ளோம். இவற்றைக் கதைகள் மூலமும் தொலைக்காட்சி, திரைக்காட்சிகள் மூலமும் நாம் அறிந்து வருகிறோம். எனவேதான் சேரும் இனத்திற்கேற்ப அறிவு அமைவதாகத் திருவள்ளுவர் கூறுகிறார். இதனால் நல்லினத்துடன் சேருவோருக்கு நல்லறிவும் தீய இனத்துடன் சேருவோருக்குத் தீய அறிவும் உண்டாகிறது என்பது உண்மையாகிறது. அஃதாவது அறிவு என்பது சேரும் இனத்தால்தான் உருவாகிறது.

எனவேதான் திருவள்ளுவர் மனம் காட்டும் அறிவைப் பொய்மை எனவும் சேரும் இனத்தால் சேருவதே உண்மையான அறிவு என்றும் கூறுகிறார்.

ஆதலால் சூழலால் உருவாவதே அறிவு என்பதை உணர்வோம்!


Thursday, January 29, 2026

குறட் கடலிற் சில துளிகள் 40 : பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ         29 January 2026      அகரமுதல



(குறட் கடலிற் சில துளிகள் 39 : தொடர்ச்சி)

பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க!

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

இன்னான் எனப்படுஞ் சொல்

 (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௩ – 453)

மாந்தர்க்கு அறிவு மனத்தினால் உண்டாகும். தான் சேர்ந்த இனத்தினால் இனியன் அல்லது இனியனல்லன் என்று பிறரால் சிறப்பிக்கப்படும் அல்லது பழிக்கப்படும் சொல் உண்டாகும்.

பதவுரை: மனத்தான் – மனத்தைப் பொறுத்து> மனம் காரணமாக; ஆம்-ஆகும்; மாந்தர்க்கு-மக்களுக்கு; உணர்ச்சி-அறிவு/உணர்வு; இனத்தான்-சேரும் இனத்தால்; ஆம்-ஆகும்; இன்னான்-இத்தகையவன்; எனப்படும்-என்று சொல்லப்படும்; சொல்- நிறை மதிப்பான அல்லது குறைமதிப்பான சொல்.

மக்களுக்கு இயற்கையறிவு அவர்களின் மனத்தால் ஏற்படும், இத்தகையவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், அவன் சேரும் இனத்தால் ஏற்படும்.

மனத்தின் தன்மைக்கேற்ப இயற்கை யறிவு அமைகிறது. ஆனால் நல்லவர்களுடன் சேர்ந்திருப்பவனை நல்லவன் என்றும் வஞ்சகர்களுடன் சேர்ந்திருப்பவனை வஞ்சகன் என்றும் மதிப்பிட்டுச் சொல்வர். 

வானிலிருந்து விழும் மழை நீர் அது விழும் நிலத்தின் மண்ணின் தன்மைக்கேற்ப நன்னீர் என்றும் உவர் நீர் என்றும் மாறிவிடுகிறது. மண்ணின் நிறத்திற்கேற்பவும் மழைநீர் நிறம் பெற்று, சிவப்பு அல்லது கருப்பு அலலது சாம்பல் அல்லது பிற நிறம பெற்று விடுகிறது. ஒருவன் இயல்பாக நல்லவனாக இருந்தாலும் சேர்க்கைக்கேற்ப நல்லவனாகவும் தீயவனாகவும் மாறி விடுகிறான். ஒருவனின் உயர்விற்கும் தாழ்விற்கும் காரணமாக அமைவது சேர்ந்துள்ள இனத்தால்தான். எனவேதான், சேரும் இனத்தால்தான் இத்தகையவள் என்று சொல்லப்படும் சொல் பிறரால் சொல்லப்டுகிறது.

கூடாநட்பின் தீமையை உணர்த்தவே திருக்குறளிலும் நாலடியாரிலும் தனி அதிகாரங்களே உள்ளன. “கூடா நட்பு கேடாய் முடியும்” என்பதால் கூடா நட்பு கொள்ளக்கூடாது. ஒரு வேளை கூடாநட்பு ஏற்பட்டாலும் அதனைக் கைவிட வேண்டும். சேரும் இனமே பிறரை மதிப்பிடச் செய்யும்!-

மனத்தால் அமைவது அறிவு! இனத்தால் வருவது பழிச்சொல்! பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க!

Thursday, January 15, 2026

குறட் கடலிற் சில துளிகள் 39 : உழவின் பின்னே உலகம் உணர்த்தும் அறிவியல் உண்மை! – இலக்குவனார் திருவள்ளுவன்

      16 January 2026      கரமுதல



(குறட் கடலிற் சில துளிகள் 38. நல்லினத்துடன் சேர்ந்து நல்லறிவுடன் திகழ்! – தொடர்ச்சி)

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை. 

 (திருவள்ளுவர், திருக்குறள், ௲௩௰௧ – 1031)

பொழிப்புரை: பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது  (கலைஞர் மு. கருணாநிதி)

பதவுரை: சுழன்றும் – உலகம் சுழன்றாலும் / சுழலும் உலகிலுள்ள மக்கள் பல தொழில் புரிந்தாலும் ; ஏர்-ஏருடையார், ஏரை உடைய உழவர்; பின்னது-வழியது, வழிப்பட்டே உள்ளது; உலகம்-உலகமக்கள்; அதனால்-அதன் காரணமாக; உழன்றும்-துன்பத்தால் வருந்தினாலும்  துய்த்தும்; உழவே-பயிர்த்தொழிலே; தலை-முதன்மை.

எல்லாத் தொழிலிலும் துன்பம் உள்ளது. ஆனால், உழவுத் தொழிலில் துன்பம் மிகுதி. உழுதொழிலை எளிமையாக்கப் புதுப்புதுக் கருவிகள் வந்தாலும் வெயில், மழை, பனி முதலிய இயற்கை இடர்களைத் தாங்கிக் கொண்டு மேற் கொள்ளும் உழுதொழில் துன்பம் மிகுந்ததாகவே உள்ளது. குறைவான துன்பம் தரக்கூடிய தொழில்களில் மிகுந்த ஆதாயம் இருக்கலாம். ஆனாால், உழவுத் தொழில் நாம் வாழ்வதற்கு அடிப்படையான உணவைத் தருகிறது; உணவுடன் உடலை மறைக்கும் ஆடையாக்கத்திற்கும் உழவே உதவுகிறது. எனவே, இத்தொழிலைத் திருவள்ளுவர் போற்றுகிறார்.

உரையாசிரியர் காலிங்கர் ‘ஏர் கொண்டு வாழ்வார் தமது வழிச்சேறலே பயனுள்ள வாழ்வாம்’ எனக் கூறி விளக்கமும் தருகிறார்.

உழவுத் தொழிலைச் சிறப்பித்துக் கூறும் திருவள்ளுவர் இக்குறளில் ஓர் அறிவியல் உண்மையையும் புலப்படுத்தி யுள்ளார். உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதுதான் அந்த அறிவியல் உண்மை. புவியின் சுழற்சியை முதலில் உணர்ந்தவர்கள் தமிழர்கள் அல்லவா? அந்தஉண்மையை இதில் வெளிப்படுததியுள்ளார்.

போலந்து அறிவியலாளர் நிக்கோலசு கோபர்னிகசு (Copernicus, Nicolaus;1473-1543),  செருமானிய அறிவியலாளர் இயோன்னசு கெப்ளர் (Kepler,   Johannes; 1571-1630) உடன் இணைந்து பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். ஆனாலும் சமயவாதிகளின் தொல்லையால் இவ்வுண்மையை அவரால் வெளியிடஇயலவில்லை. அவர் மறைந்த 6 ஆண்டுகளுக்குப் பின்னரே இவ்வுண்மை அவரது நூல்கள் மூலம் வெளிவந்தன. ஆனால், பழந்தமிழ்நாடு முடைநாற்றம் வீசும் மூடநம்பிக்கைகளில் மூழ்காமல் இருந்தமையால் இவ்வுண்மைகள் இயல்பாக மக்கள் அறியும் உண்மைகளாக இருந்துள்ளன.

சுற்றுகிறது, உருண்டையானது என்னும் பொருள்கள் அடிப்படையில்  பன்னெடுங்காலத்திற்கு முன்பே நாம் இருக்கும் கோளுக்கு உலகம் எனப் பெயரிட்டனர் நம் முன்னோர். உலவும் உருண்டையான பூமியை உலகம் என்று எவ்வளவு பொருத்தமாக அறிவியல் நோக்கில் பெயரிட்டுள்ளனர்! உழவர்கள் பின்னே இவ்வுலகம் சுற்றுகிறது என்னும் உண்மையைக் கூறவே திருவள்ளுவர் உலகம் என்ற சொல்லைக் கையாண்டுள்ளார்.

உலகம் நகைக்கிறது, உலகம் அழுகிறது என்பனபோன்று உலகம் என்பது ஆகுபெயராக உலக மக்களைக் குறிக்கின்றது. இங்கும் உலகம் என்பது சுற்றிக் கொண்டிருக்கும் உலகில் வாழும் மக்களைக் குறிக்கிறது.

உலவிக் கொண்டிருக்கும் உலகில் மக்கள் தத்தம் தொழில்கள் பின்னே உலவிக் கொண்டிருந்தாலும்  அனைத்துத் தொழிலும் உழவுத்தொழில் பின்னரே உழவின்பின்தான். எனவே உலக மக்களும் உழவின் பின்னரே உள்ளனர். ஆகவே, உழவே தலையாயது.

இக்குறட்பா மூலம் உழவின் சிறப்பை உணர்வோம்! பழந்தமிழின் அறிவியல் வளத்தை மீட்டெடுக்கவும் புத்தறிவியலில் சிறக்கவும்  அன்னைத் தமிழ்வழி அனைத்தையும் கற்போம்!

Followers

Blog Archive