ஆள்வோர் ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி
முழு வலிமை கொண்ட வலிமையான ஆட்சியாளராக இருந்தாலும் ஆன்றோர் கூறும் அறிவுரைகளை அல்லது கசப்பான இடித்துரைகளைக் கேட்டு ஆளவேண்டும் என்பதே தமிழர் நெறி.
பழந்தமிழ்நாட்டில் இருந்தது குடி தழுவிய கோனாட்சி. அஃதாவது மக்கள் நலம் நாடும் மன்னராட்சி. மன்னர் ஆட்சி புரிந்தாலும் இன்றைய மக்களாட்சியைவிடச் சிறப்பான மக்கள் நலம் நாடும் ஆட்சியே அப்பொழுது நடந்துள்ளது.
“தான் வலிமையானவன் அல்லது அதிகாரம் முழுமையும் கொண்டவன் எனக் கருதித் தனக்குக் கூறப்படும் அறிவுரைகளை ஒதுக்குபவன் நல்லாட்சி தர முடியாது. அவனது ஆட்சியும் விரைவில் அழியும்” என்பதே தமிழர் நெறி. இந்நெறி இன்றைக்கு உலகில் உள்ள எல்லா நாட்டு ஆட்சியாளரும் பின்பற்றி நடந்தால் உலகம் முழுவதும் மக்களுக்கான ஆட்சியே திகழும் எனலாம்.
ஆட்சிக்கு எதிரான சிறு முணுமுணுப்பைக்கூடத் தாங்கிக் கொள்ள இயலாமல் அடக்கி ஒடுக்குவோர் ஆட்சி அடக்கப்படும் என்பதே வரலாறு எனப் பாரதியார் நமக்கு உணர்த்துகிறார்.
தமிழர் அரசியல் நெறி என்பது ஆட்சியில் உள்ளோர், தம்மிடம் நேரடியாக அல்லது பொதுவெளியில் தெரிவிக்கப்படும் ஆட்சி மீதான சிறு குறையைக்கூடப் பெரிதாக எண்ணி, அவ்வாறு கூறியோர் மீது சினம் கொள்ளாமல், அவர்கள் கூறியதில் உண்மை இருப்பின் அவற்றை நீக்க வேண்டும்.
அவர்கள் யார் மீதாகிலும் குறைகள் தெரிவித்திருந்தால் நடுநிலையுடன் ஆராய்ந்து சூழ்நிலைக்கேற்பக் குற்றம் புரிந்தவர்களைத் தண்டிக்கவோ மன்னிக்கவோ வேண்டும்.
சங்க இலக்கியங்களில் பாடல்களில் சொல்லப்படும் பொருண்மைக்கேற்ப அவற்றைத் திணை என்றும் துறை என்றும் வகுத்துள்ளனர்.
அவற்றுள் சில, ஆட்சியாளருக்கு அறிவுரை கூறி, இடர்ப்பாடுகள் அல்லது துன்பப்பாடுகள் இருப்பின் அவற்றை அகற்ற வலியுறுத்துவனவாகும். இவை, வாயுறைவாழ்த்து, செவியறிவுறூஉ, குடைமங்கலம், வாள் மங்கலம், மண்ணு மங்கலம், ஓம்படை ஆகிய துறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ‘வாயுறை வாழ்த்து’ என்பது மன்னரை வாழ்த்துவதுடன் சான்றோர் கூறும் அறிவுரைகளும் அடங்கியதாகும். ஆள்வோரின் கடமைகள், நடத்தைகள், அவற்றுக்கான நெறிமுறைகளை அவர்களின் செவியில் பதியுமாறு அறிவுறுத்துவது ‘செவியறிவுறூஉ’ துறையாகும்.
பழந்தமிழர் ஆள்வோரைவிட உயர்வாகப் புலவர்களை மதித்தனர். எனவேதான், முதலில் கூறிய மன்னனைப்பற்றி அதே புலவர் பாடியதைக் குறிப்பிடும் பொழுது “அவனை அவர் பாடியது” என்கின்றனர். அஃதாவது மன்னனை ‘ன்’ விகுதியில் அழைப்போர் புலவர்களை மதிப்புடன் ‘அர்’ விதியில் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு சங்கப்புலவர்களைச் சங்கக்கால வேந்தர்களும் மன்னர்களும் மதித்துப் போற்றினர்.
அவர்களால் குறை கூறப்படுவது இழுக்கு எனக் கருதி அதற்கு இடம் தராதவகையில் நடந்து கொண்டனர். அதையும் மீறித் தவறு நடந்து அதனைப் புலவர்கள் சுட்டிக்காட்டினால் அவர்கள் மீது சட்டத்தைப் பாய்ச்சாமல், தங்களைத் திருத்திக் கொண்டனர். இவ்வாறு புலவர்களை மன்னர்கள் மதித்ததால்தான் தமிழகம் வந்த ஆரியர், அறிவை ஆயுதமாகக் கொண்டு தங்களை முன்நிறுத்திக் கொண்டனர் என்பது வரலாறு.
கடந்த நிதி நிலையறிக்கையின் பொழுது மத்திய நிதியமைச்சர் நிருமலா சீதாராமன் மேற்கோளாகச் சொன்ன வரிவிதிப்பு குறித்த புறநானூற்றுப் பாடல் ‘செவியறிவுறூஉ’ துறையாகும். இவ்வாறு மன்னர்கள் செய்ய வேண்டியனபற்றியும் செய்யக்கூடாதனபற்றியும் ஆன்றோர்கள் இடித்துரைக்கும் அளவிற்கு அப்பொழுது கருத்துரிமை பேணப்பட்டு வந்தது.
அறிவியல் உண்மைகளைச் சொன்னதற்கே உயிரைப் பறித்த மேனாட்டு அரசியல் முறைக்கு மாறாகத், தம்மைப்பற்றித் தம்மிடமே குறை கூறினாலும் கேட்கும் மனப்பக்குவம் நிறைந்தவர்களாக அப்போதைய தமிழ் ஆட்சியாளர்கள் இருந்துள்ளனர்.
இத்தகைய தமிழர் நெறி உலகம் முழுவதும் பரவ வேண்டும். மாறாகத் தமிழ் வழங்கும் பகுதி அடங்கிய இத்திருநாட்டிலேயே முறையிடுவதற்குரிய அதிகாரத் தலைமையிடம் முறையிட்டதற்காக, கருத்துரிமையை நசுக்கும் வண்ணம் சட்டத்தைப் பாயவிடுவது பெருங்கொடுமையாகும். அவற்றைச் சிந்தித்து நடவடிக்கை எடுக்காமலும், தவறான முறைப்பாடு எனில் உரியவர்களிடம் விளக்காமலும் அல்லது குறைந்தது அவற்றைப் பொருட்படுத்தாமலும் இருக்கலாம். அவ்வாறில்லாமல் மாறான நடவடிக்கை எடுப்பது அவர்களிடம் நீதியை எதிர்பார்த்தவர்களிடம் அது தவறு எனக் காட்டுவதாக அமையாதா?
உலகம் யாருக்குக் கட்டுப்படும்? குறை கூறப்படும் கசப்பான சொற்களைக் கேட்டு அவர்களுக்கு எதிராகச் செயல்படக்கூடாது. மாறாக அவற்றைப் பொறுத்துக்கொள்ளும் பண்பு உடையவனாக இருக்க வேண்டும். அத்தகைய பண்பாளனிடம் உலகம் கட்டுப்படும் என்கிறார் திருவள்ளுவர்.
அறிவுரை என்பது யாவர்க்குமே கசப்பாகத்தான் இருக்கும். ஆனால், ஆட்சியாளர்கள், தம் கீழுள்ள அமைச்சர்கள் முதலானோர் இடித்துரைத்தாலும் மக்கள் வெறுப்பாகக் கூறினாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு கூறப்படும் குறைகளை நீக்க வேண்டும். அதுதான் நல்லாட்சி என்பது தமிழர் நெறி.
“பொது நன்மையின் பொருட்டும் துன்பம் தரும் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும் பிறர் கூறுவன கடுமையாக இருந்தாலும் வெறுக்கும் படி இருந்தாலும் அவற்றைப் பொறுத்து ஏற்றுக்கொள்ளும் நற்பண்பாளனுக்கு உலகம் கட்டுப்படும்.” என்னும் தமிழர் நெறியை எல்லா நாட்டு அரசாளர்களும் எக்காலத்திலும் தவறாமல் உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஆன்றோர்கள், அறிஞர்கள் துணையைக் கொண்டு ஆட்சி நடத்த வேண்டும் என்பதும் தமிழர் நெறி. எனவேதான், திருவள்ளுவர், ‘பெரியாரைத் துணைக்கோடல்’ எனத் தனி அதிகாரமே வைத்துள்ளார்.
தவறு செய்ய நேரும் பொழுது அல்லது தவறு செய்தால், கண்டும் காணாமல் இருக்கக் கூடாது. மாறாக இடித்துரைத்து அறிவரை கூறி, அத்தவறான செயலை நிறுத்த வேண்டும். இத்தகைய ஆன்றோரைத் துணையாகக் கொள்பவரை யாராலும் அழிக்க முடியாது.
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
(திருவள்ளுவர், திருக்குள், அதிகாரம் பெரியாரைத் துணைக்கோடல், குறள் 447)
என்பது தமிழர் நெறி.
பழந்தமிழ் வேந்தர்கள் மக்களையும் புலவர்களையும் மதித்ததால் நல்லாட்சி வழங்கினர். சான்று ஒன்று. பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் வஞ்சினம் கூறும் பொழுது, “நான், இவ்வாறு செய்து முடிக்காவிட்டால், குடிமக்கள் என்னைக் கண்ணீருடன் கொடியவன் என இகழட்டும்! மாங்குடி மருதன் தலைமையில் இயங்கும் புலவர் குழு என்னைப்பாடாது, என் நாட்டைவிட்டு நீங்கட்டும்!” என்னும் பொருள்படப் பாடியுள்ளார்.
‘கொடியன்எம் இறை’ எனக் கண்ணீர் பரப்பி,
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக;
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை
(புறநானூறு, பாடல் 72, வரிகள் 11-16)
என்று சொல்லி உள்ளதன் மூலம், மக்கள் கருத்துகளையும் ஆன்றோர் கருத்துகளையும் கேட்டு ஆட்சி நடத்திய சான்றோர்களாகத் தமிழ் மன்னர்கள் திகழ்ந்துள்ளனர் எனப் புரிகிறது. கருத்துரிமையை மதிப்பது ஆட்சிக்குச் சிறப்பே தவிர இழுக்கல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகெங்கும் பரவ வேண்டிய தமிழர் நெறி குறித்த மேற்கோள்களைத் தலைமை யமைச்சர் நரேந்திரர் முதலான பல அமைச்சர்களும் பொதுவிடங்களில் கூறிப் பரப்பி வருகின்றனர். அவர்கள்,
No comments:
Post a Comment