முதல்வர் தலைமையில் தேசிய மொழிகள் ஆட்சிமொழிச் செயலாக்கக் குழு அமைக்க வேண்டும்!
நேற்றைய சட்டமன்ற நாள்(ஐப்பசி 01,2053/18.10.2022) மொழிப்போர் வரலாற்றில் முதன்மையான நாள்களுள் ஒன்றாகும். நேற்று சட்டப்பேரவையில் இந்தி எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிக்கத்தக்கதாகும். தீர்மானத்தை முன் மொழிந்து முதல்வர் மு.க.தாலின், “மொழி என்பது, நமது உயிராய், உணர்வாய், விழியாய், நம் அனைவரின் எதிர்காலமாய் இருக்கிறது. . . . ஆட்சி நிருவாகத்தில் இந்தியைத் திணிப்பது தொடங்கிக், கல்வி மூலமாகத் திணிப்பது வரை, தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியைத் திணிப்பதுதான் என்று நினைக்கிறார்கள். . . . . அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும், இந்திக்கு இணையான மத்திய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்கத் தயாரா?” என்றெல்லாம் மிக அருமையாக உரையாற்றியுள்ளார். அவருக்குப் பாராட்டுகள். தீர்மானத்தை நிறைவேற்றிய அனைத்துப்பேரவை உறுப்பினர்களுக்கும் நம் பாராட்டுகள்.
இந்தி எதிர்ப்புப் படைத் தளபதி பேரா.சி.இலக்குவனார் இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே இந்தியை எதிர்த்துப் பரப்பி வந்தவர்; இந்தி எதிர்ப்பிற்கெனவே தமிழ்க்காப்புக்கழகம் என ஓர் அமைப்பையும் குறள்நெறி என ஓர் இதழையும் நடத்தி மாணாக்கர்களையும் இளைஞர்களையும் தமிழன்பர்களையும் திரட்டி மொழிப்போரில் ஈடுபடச்செய்து இந்தியைத் திணித்த அரசை ஆட்சிப்பீடத்தில் இருந்து அகற்றியவர். “நமக்குத்தேவை மொழித்தேசிய இனங்களின் கூட்டரசே தவிர, மொழி வாரி மாநிலங்கள் அல்ல” என்று குரல் கொடுத்தவர். “எல்லா மாநிலத்தவரும் கூடி வாழ வேண்டுமென்றால் அக்கூட்டரசு மன்றில் எல்லா மாநில மொழிகட்கும் சம உரிமை அளிக்கப்படல் வேண்டும்” (குறள்நெறி 15.02.1964); “எதனை இழந்தாலும் மீண்டும் பெறலாம். மொழியை இழந்தால் மீண்டும் பெறலரிது. மொழியை இழந்தபின் வாழ்வது எற்றுக்கு?” (குறள்நெறி15.06.64); “இந்தி முதன்மை பிரிவினைக்கு வித்து” என்று முழங்கி வந்தவர். முதல்வர் மு.க.தாலின் உரை தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் உரையை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
முதல்வர், “இந்திமொழித்திணிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. . நாமும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம்.” என்று கூறியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால், தவறு நம் மீது உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இடையிடையே முழங்குகிறோமே தவிர, அதற்கேற்பப் போராட்டத்தின் மூலம் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோமே தவிர, அடியோடு இந்தித்திணிப்பை அகற்றுவதற்கு அழுத்தமான அடி கொடுக்கவில்லை. நேற்றைய தீர்மானமும் வழக்கமான ஒன்றாகத்தான் உள்ளது. இந்திய அரசியல் யாப்பை நாம் திருத்தினாலன்றி இந்தியை விரட்ட முடியாது.
இந்திய அரசியல் சாசனப் பிரிவு 343-இன் படி “இந்தி அதன் தேவநாகரி எழுத்துவடிவத்தில் இந்தியாவின் அலுவலக மொழியாக இருக்கும்.” என்னும் தீர்மானத்தை விலக்கிக் கொண்டு அரசியல் யாப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்கும் புதிய தீர்மானத்தை நாடாளுமன்றங்களில் நிறைவேற்றச் செய்து சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். எனவே, இதனை மட்டும் மறு தீர்மானமாக நிறைவேற்றிப் பிற மாநிலச் சட்ட மன்றங்களிலும் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட ஆவன செய்ய வேண்டும்.
இந்திய அரசியல் யாப்பில் ஆங்கிலத்தில் ஆட்சிமொழி என்று குறிப்பிடவில்லை. அலுவலக மொழி என்றுதான் குறிக்கப்பெற்றுள்ளது. இந்தியில் இராசபாசா என்று குறித்துள்ளனர். இக் குழப்பத்தால் தமிழில் அலுவலக மொழி என்றும் ஆட்சி மொழி என்றும் சிலர் தேசிய மொழி என்றும் கூறிவருகின்றனர். அலுவலக மொழி என்பதை அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் மொழி என்றும் பிற அலுவலகங்களுடன் தொடர்பு கொள்ளும் மொழி என்றும் நாம் புரிந்து கொள்கிறோம். ஆட்சி மொழி என்பது அலுவலக மொழியாக மட்டுமல்லாமல் நாட்டில் எல்லா நிலைகளிலும் பயன்படுத்தப்படும் ஆளுமைமிக்க மொழியாகக் கருதப்படுகிறது. எனேவ, அலுவலக மொழி குறித்த வரையறையை அரசு தெரிவிக்க வேண்டும்.
நாம் முதல்வரையும் பேரவையினரையும் மனப்பூர்வமகாப் பாராட்டுகிறோம். அதே நேரம் முன்மொழிவுரையில் இடம் பெற வேண்டிய செய்திகள் எல்லாம் தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
நேருவின் உறுதி மொழி தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளது. இன்னும் எத்தனைக் காலம்தான் நேரு்வின் உறுதி மொழியைக் கட்டி ஆளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அஃது ஒரு செல்லாக்காசு. அதை இடம் பெறச் செய்ய வேண்டிய தேவை என்ன? இந்தி மொழி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் நீடிக்கும் என்பதுதான் அந்த உறுதி மொழி. நாம் வேண்டுவது தமிழ் முதலான அட்டவணை மொழிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் மொழிகளாக ஏற்கப்பட வேண்டும் என்பதுதான்.
“ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராகவும், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் உள்ள அமித்து சா தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை ஏற்கக் கூடாது” என்கிறது தீர்மானம். இது மட்டும் போதுமா? வேறு என்ன செய்ய வேண்டும்? அதைக் கூறவில்லையே!
முதல்வர் தலைமையில் தேசிய மொழிகள் ஆட்சிமொழிச் செயலாக்கக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இந்தி எதிர்ப்பு உணர்வும் தமிழ்க்காப்பு உணர்வும் மிக்க அனைத்துக் கட்சியினரும் அனைத்து அமைப்பினரும் பிற மாநிலத்தவரும் இதில் இடம் பெற வேண்டும். இதன் மூலம் இந்திய அளவில் இந்தி எதிர்ப்பை வலுவாக வேரூன்ற வேண்டும். போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர், இக்குழுவே நாடு தழுவிய மக்கள் மன்றம் அமைத்துக் கூடி இந்திய அரசியல்யாப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும். இதனை ஒன்றிய அரசு ஏற்கும் நிலையை உருவாக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் இப்போதைய தீர்மானத்தால் பயனில்லை. உருப்படியான தீர்மானங்களையே ஒன்றிய அரசு மதிப்பதில்லை. இதனைக் கண்துடைப்பு தீர்மானமாகக் கருதி கண்டு கொள்ளாது.
-இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை
ஐப்பசி 02, 2053 / 19.10.2022
No comments:
Post a Comment