நல வாழ்வு மையங்கள் தமிழுக்கு நலம் சேர்க்க வேண்டாவா?(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 13)
தமிழ்நாட்டில் மருத்துவ நிலையங்கள் மருத்துவச் சாலைகள்(பொது மருத்துவ மனைகள்), மாவட்ட மருத்துவ மனைகள், வட்ட மருத்துவமனைகள், நகரக நல்வாழ்வு நிலையங்கள், ஊரக நல்வாழ்வு நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவமனைகள், பன்னோக்கு மருத்துவமனை எனச் சிலவகை உள்ளன. 2019 ஆம் ஆண்டுக் கணக்கின் படித் தமிழ்நாட்டில் 377 அரசு மருத்துவமனைகள், 242 மருந்தகங்கள், 2127 ஊரக, நகரகத் தொடக்க நலவாழ்வு நிலையங்கள், 87413 நலவாழ்வுத் துணை மையங்கள், 416 நடமாடும் மருத்துவ அலகுகள் உள்ளன. இந்தியாவில் மருத்துவமனைகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 6ஆவதாக உள்ளது. ஆனால் படுக்கை வசதி அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. இவை தவிர ஏறத்தாழ 1200 சித்த மருத்துவமனை முதலான பிற இந்தியமுறை மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் உள்ளன. “நல வாழ்வு மையங்கள் தமிழுக்கு நலம் சேர்க்க வேண்டாவா?” என நாம் கேட்பது எல்லாவகை மருத்துவமனைகளுக்கும் பொருந்தும். இருப்பினும் இன்றைக்கு உள்ள ஏறத்தாழ 2500 நல வாழ்வு மையங்கள் அடிப்படையில் இக்கட்டுரை அமைகிறது.
நலவாழ்வு மையங்களுக்கு நோயர் சென்றதும் முதலில் பதிவது ஆங்கிலத்தில்தான். பதிவை நோயர் சீட்டில் குறித்துக் கொடுப்பதும் ஆங்கிலத்தில்தான். அடுத்து இரத்த அழுத்தம் பார்த்துக் குறிப்பதும் ஆங்கிலத்தில்தான்(B.P.). அடுத்து இரத்த சருக்கரை ஆய்வு பார்ப்பதற்கான குறிப்பும் பின்னர் தரப்படும் உண்ணாநிலை இரத்தச் சருக்கரை(FBS-Fasting blood sugar), உணவிற்குப் பிந்தைய சருக்கரை Postprandial Blood Sugar-PBS) ஆய்வு முடிவுக் குறிப்பும், ஊனீர்க் கொழுப்பு (Serum cholesterol) )முதலியனவற்றைக் குறிப்பதும் ஆங்கிலத்தில்தான். மாத்திரைகளைக் குறிப்பிட்டு உணவிற்கு முன், உணவிற்குப் பின், காலை, நண்பகல், மாலை, இரவு உண்ணும் வேளைகளைக் குறிப்பதும் ஆங்கிலத்தில்தான். மருந்து மாத்திரைகளை முன் குறித்ததுபோல் மீளத் தர வேண்டும் என்பதற்கும் ஆங்கிலத்தில்தான்(Repeat). மருத்துவர் அறை, மருந்தாளர் அறை, ஆய்வகம் முதலிய அறைகளின் பெயர்ப்பலகைகள், சில இடங்களில் தொடக்க நலவாழ்வு மையங்களின்(ஆரம்ப சுகாரார நிலையங்களின்) முகப்புப் பெயர்ப்பலகைகள், பலரின் கையொப்பங்கள், சுருக்கொப்பங்கள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அரசிற்கு அனுப்பப்படும் விவர அறிக்கைகளும் ஆங்கிலத்தில்தான். அரசே ஆங்கிலப் படிவ முறையில் கேட்கும் பொழுது இவர்களைக் குறித்து என்ன சொல்வது? ஒன்றிய அரசிற்கு அனுப்ப வேண்டிய புள்ளிவிவரங்களும் உள்ளன. படிவங்களில் தமிழ், ஆங்கிலம் இடம் பெறச்செய்து, உரிய இயக்ககம் தொகுத்து ஆங்கிலத்தில் விவர அறிக்கையை அனுப்பலாம்.
இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் நலத்திட்டங்கள் மிகுதியாகச் செயற்படுத்தப்படுகின்றன. எனவே, மருத்துவத் துறையிலும் மிகுதியான நலவாழ்வுத்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், சூல்மகளிர்(கருப்பிணித் தாய்மார்கள்) குழந்தைகள் பேணுகை-தடுப்பூசிச் சேவைகள், நலவாழ்வுத் தூதர்கள் திட்டம். மக்களைத் தேடி மருத்துவம், காசநோய், தொழுநோய், ஏப்புநோய்(எயிட்சு) முதலான பல நோய்கள், தொற்றுகள் முதலியவற்றைப்பற்றிய விழிப்புணர்வுத் திட்டங்கள், நல வாழ்வு தொடர்பான புகையிலை-போதைப்பொருள்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இலவச மருத்துவம், இலவச மருத்துவ முகாம்கள், மகுடைத்தொற்றுக்கு (கொரானா) எதிரான தடுப்பூசி முகாம்கள் என மிகப் பல திட்டங்களைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றுகிறது. தனி மனிதரின் சராசரி வருவாயில் இத்திட்டங்களால் குறையும் செலவினம், செலவின்மை ஆகியவற்றை வருவாயாகக் கணக்கிட்டால் சராசரி வருவாயைக் கூடுதலாக் கருதலாம். அவ்வாறு மக்களின் நல்வாழ்விற்காக இவை ஆற்றும் பணிகள் – ஆங்காங்கே மருத்துவர்கள் வருகையின்மை, போதிய மருந்துகள் இன்மை, தேவையான ஆய்வுக்கருவிகள் வசதி யின்மை போன்ற குறைகள் இருப்பினும் – பாராட்டிற்குரியனவே.
பிறப்பு இறப்பு பதிவேடு, புறநோயர் பதிவேடு, உள்நோயர் பதிவேடு, மருந்து இருப்புப்பதிவேடு, பிற இருப்புப் பதிவேடு, வருகைப்பதிவேடு, மகப்பேறு தொடர்பான பதிவேடுகள் எனப் பலப் பதிவேடுகள் நலவாழ்வு மையங்களில் பேணப்படுகின்றன. இங்கெல்லாம் தமிழ்வளர்ச்சித்துறையின் ஆய்வு நடைபெறுகிறதா எனத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் இவற்றைப் பேணுவதையே தம் கடமைகளாகக் கொண்டு பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். பொதுவாக நல வாழ்வு மையங்களில் எழுத்தர் பணியிடங்கள் இருப்பதில்லை. எனவே, ஊதியம் கோருவதில் இருந்து அமைச்சுப்பணியாளர்கள் பார்க்க வேண்டிய வேலைகளை மருத்துவப் பணியாளர்களே மேற்கொள்கின்றனர். இவர்களின் பணிகளை எளிமையாக்கும் வண்ணம் அமைச்சுப் பணியிடங்களை உருவாக்கி அரசு ஆவன செய்ய வேண்டும்.
மருத்துவக் கலைச்சொற்கள் அகராதி, மருந்துப் பெயர்கள் அகராதி முதலியன உள்ளன. இவை தாள்களில் இருந்து என்ன பயன்? பயன்பாட்டிற்கு வரவேண்டாவா? இவற்றில் இருந்து நல வாழ்வு மையங்களுக்குத் தேவையான கலைச்சொற்களைத் தொகுத்து வழங்கினால், நலவாழ்வு மைய மருத்துவர்கள், செவிலியர்கள், நலவாழ்வுப் பணியாளர்கள், மருந்து தருநர், பிற பணியாளர்கள் தமிழில் எழுத எளிமையாக இருக்கும். தேவையெனில் இவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கலாம்.
திட்டங்கள் மக்களுக்காகத்தான். மக்கள்மொழியான தமிழில் அவை தெரிவிக்கப்பட்டால்தான் உரிய பயன் மக்களைச் சென்றடையும். ஆனால், பெரும்பாலான திட்டங்களின் பெயர்களைத் தமிழில் குறிப்பதில்லை. அரசே ஒன்றிய அரசின் திட்டங்களின் பெயர்களை ஆயுசுமான் பாரத் பிரதான் மந்திரி சன் ஆரோக்கியா யோசனா ((PMJAY)(தலைமை யமைச்சரின் மக்கள் நலவாழ்வுக் கொள்கை), பிரதான் மந்திரி சுரக்கசா பீமா யோசனா (PMSBY)(தலைமை யமைச்சரின் பாதுகாப்புக் காப்பீட்டுத் திட்டம்), ஆம் ஆத்துமி பீமா யோசனா(AABY)(எளிய மனிதனின் காப்பீட்டுத் திட்டம்) முதலியவாறு இந்தித்தொடரின் ஒலி பெயர்ப்பில்தான் குறிப்பிட்டுப் பயன்படுத்துகின்றது. அனைத்துத் திட்டங்களின் பெயர்களையும் அரசு தமிழிலேய பயன்படுத்திப் பரப்ப வேண்டும்.
மக்களின் நலவாழ்வுப்பணிகளில் கருத்து செலுத்துவோர் மக்கள்மொழியான தமிழின் நலவாழ்வுப் பணிகளிலும் கருத்து செலுத்த வேண்டுமல்லவா? ஆட்சித்தமிழ்த் திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டுமல்லவா? இல்லையே! உரிய தலைமை அலுவலகங்கள் நல்ல முறையில் வழிகாட்டாமையே காரணம். இவைபோன்ற குறைபாடுகளுக்குத் துறையும் காரணம் என்பதால், பணியாளர்களின் ஆட்சித் தமிழ்ப் பங்களிப்பில் குறைபாடுகள் இருப்பினும் நம்மால் முழுமையாகக் குற்றம் சுமத்த இயலவில்லை.
எனவே, அரசும் மருத்துவ இயக்குநரகங்களும் தமிழ்வளர்ச்சித்துறையும் சிறப்பாகச் செயற்பட்டு நலவாழ்வு நிலையங்களும் பிற வகை மருத்துவமனைகளும் தமிழுக்கு நலம் சேர்க்கப் பணியாற்ற வேண்டும்.
தமிழின் நலம் குன்றினால் மக்கள் நலமும் குன்றும்!
– உணர்ந்து செயற்படுக!
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். (திருவள்ளுவர், திருக்குறள் 948)
மக்களுக்கு வரும் நோயை மட்டுமல்ல, தமிழ்த்தாய்க்கு தமிழ்நாட்டு மக்களால் தரப்பட்டுள்ள பயன்பாட்டுப் புறக்கணிப்பு என்னும் நோயையும் உணர்ந்து காரணம் அறிந்து தணித்து நலமடையும் முறையில் செயற்படுக!
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment