(மொழிப்போர் வரலாறு அறிவோம்! -12 : தமிழ்க்காப்பிற்காகவே இந்தியை எதிர்த்தனர் : தொடர்ச்சி)

இந்தி எதிர்ப்புப்போராட்டங்களை அறியும் நாம் அது வந்த வழியான அரசியல் யாப்பு நிலைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவை குறித்துச் சுருக்கமாகப் பார்ப்போம்.

அரசமைப்பு அவைக்கான முதல் கோரிக்கை தன்னாட்சிக்கட்சியால் (Swaraj Party) 03.05.1934 அன்று எழுப்பப்பட்டது. இது வெள்ளைத்தாள் முன்மொழிவுகளை மறுத்தது. இஃது இந்திய அரசு சட்டம் 1935 இல் இணைக்கப்பட்டது.

அரசு செயலர் பிரடெரிக்கு பெத்திக்கு இலாரன்சு(Frederick Pethick Lawrence),    வயவர் இசுதான்போர்டு கிரிப்புசு(Sir Stanfford Cripps),   ஏ.வி. அலெக்குசாண்டர்(A.V. Alexander) ஆகிய இரண்டு அமைச்சர்கள், அடங்கிய அமைச்சுத்தூதுக் குழு வகுத்தளித்த திட்டம்; அமைச்சுத்  தூதுத்திட்டம், 1946 என்று அழைக்கப்படும் இதுவே இந்திய அரசியல் யாப்பு அவையை உருவாக்கியது. இவ்வவை, இந்திய விடுதலைச் சட்டம் 1947, பிரிவு 8இன் கீழ் ஏற்கப்பெற்றது.

இத்திட்டத்தின் கீழ், 1946ஆம் ஆண்டு மாகாணச்சட்ட அவைகளின் உறுப்பினர்கள், மாற்றத்தக்க ஒற்றை வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூடுதலாகத், தன்னரசு இளவரசர்களை அரசியல் யாப்பவையில் சேர்க்கப் பேச்சும் நடந்தது. யாப்பு அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் பெரும்பான்மையர் ஆண் இந்துக்கள். என்ற போதும்,  எல்லா முதன்மை மதக் குழுக்களிலிருந்தும் ஒவ்வொரு குழுவிலிருந்தும் குறைந்தது இருவர் வீதம் 15 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

80% அவை உறுப்பினர்கள் பேராயக்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் கட்சிக்குள்ளேயே வேற்றுமை இருந்தது. இதன் காரணமாக யாப்பு அவையில் சமவுடைமை, தாராளமயம், பழமைவாதம் கருத்துகளின் சார்பு இருந்தது. நாடாளுமன்ற மைய அவையாக இப்போது அழைக்கப்படுகின்ற அரசியல் யாப்பு அவையில் முதன்முறையாக 09.12.1946 அன்று அரசியல்யாப்புக் குழு கூடியது. பதிவேட்டில் கையொப்பமிட்டுச்,  சான்றாவணம் அளித்த 207 உறுப்பினர்கள் வருகைபுரிந்திருந்தனர்.

திசம்பர் 1947 இல் யாப்பு அவையில் 299 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களுள் 229பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், 12 பேர் மாகாண அரசர்கள்/இளவரசர்கள், 70 பேர் தன்னாட்சி அரசுகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்டவர்கள். இம்மன்றத்தில் மொழிகள் குறித்த காரசார விவாதம் நடைபெற்றது.

இந்திய அரசியல் யாப்பு 26.01.1950 இல் நடைமுறைக்கு வந்தது.

இஃது ஏற்றுக் கொள்ளப்பட்ட நேரத்தில், யாப்பு 22 பகுதிகளையும் 396 கூறுகளையும் 8 அட்டவணைகளையும்  145,000 சொற்களையும் கொண்டிருந்தது. உலகிலேயே இது மிக நீண்ட யாப்பாகும்.

யாப்பிலுள்ள ஒவ்வொரு கூறும் யாப்பு அவை உறுப்பினர்களால் 11 அமர்வுகளில் 167 நாள்களில் 2 ஆண்டுகள் 11 திங்களில் விவாதிக்கப்பட்டதாகும்.

அரசியலமைப்பை எழுத வேண்டிய மொழி, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்குரிய மொழி, புதிய குடியரசுக்கான ‘தேசியமொழி’ போன்ற செய்திகள் மிகவும் அனல்பறக்க விவாதிக்கப்பட்டன.

இந்தி பேசும் மாநிலங்களின் உறுப்பினர்களான அல்கு இராய் (சாத்திரி), ஆர்.வி. துலேகர், பாலகிருட்டிண (சருமா), புருசோத்தம் தாசு தாண்டன் (ஐக்கிய மாகாணம்), பாபுநாத்து குகா (பீகார்), அரி வினாயக்கு படசுகர் (மும்பை), சேத்து கோவிந்து தாசு (மத்திய மாகாணம்) ஆகியோர் ஒரு பக்கம் பல இந்தி ஆதரவு சட்ட வரைவுகளைக் கொண்டுவந்து இந்தியை மட்டுமே தேசிய மொழியாகத் தேர்வு செய்ய வாதாடினர்.

 10.12.1946 அன்று துலேகர் “இந்துத்தானி அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள். இந்தியாவின் அரசியலமைப்பை முடிவு செய்கின்ற இந்த மன்றத்தில் இருந்துகொண்டு இந்துத்தானி அறியாதவர்கள் உறுப்பினராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள்; அவர்கள் விலகிக் கொள்ளலாம்” என்று முழங்கினார்.