(நாலடி நல்கும் நன்னெறி 30 : பண்பாளர் நட்பு இருப்போர் பிறப்பை வெறுப்பதில்லை- தொடர்ச்சி)
முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள
பின்னரும் பீடழிக்கும் நோயுள; – கொன்னே
பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்
கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.
நாலடியார், பாடல் 92, அறத்துப்பால், ஈகை
கருத்து:
நம் எதிரே இறப்பு, மூப்பு, பிணி ஆகிய மூன்றும் காத்திருக்கின்றன. எனவே, கையில் செல்வம் அல்லது பொருள் அல்லது உணவு உள்ளபோதே, அதை மறைத்து வைக்காமல் பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும்.
பதவுரை
- முன்னரே= முன்பாகவே ; சாம்நாள்= சாகும் நாள் > சாகும் நாளும்; முனிதக்க=வெறுக்கத் தக்க; மூப்புள= முதுமையும் வர உள்ளன; பின்னரும்= ; பீடழிக்கும்> பீடு அழிக்கும் = வலிமையையும் அழிக்கும்; நோயுள>நோய் உள= நோய்கள் உள்ளன; கொன்னே=வீணாக; பரவன்மின்= புகழாதீர்கள்; பற்றன்மின்=செல்வத்தை இறுகப் பற்றிக் கொள்ளாதீர்கள்; பாத்துண்மின்> பாத்து=பகுத்துக் கொடுத்து; உண்மின்= உண்ணுங்கள்; யாதும்=எதையும்; கரவன்மின்= மறைத்து வைத்துக் கொள்ளாதீர்கள்; கைத்துண்டாம்= நம் கையில் உணவு அல்லது செல்வம்; போழ்து= இருக்கும்போது
கவிஞர் மாயவநாதன்
“தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே”
எனத் தொடங்கும் பாடலை எழுதியிருப்பார். இப்படம் 1970-ஆம் ஆண்டு வெளியான ‘மகிழம்பூ‘ திரைப்படத்தில் இடம்பெற்றது. மேலும்,
வாரி வழங்குவதில் வறுமை இல்லை – இந்த
வையகம் முழுதும் உண்மை இதுவே!
கோடி கொடுத்தாலும் குறைவதுண்டோ – மனிதன்
கோவில் கட்டிடும் புகழ் நிலைக்காதோ!
என்றும் தொடர்ந்து
பசித்தவன் முகம் பார்த்துப் பிச்சை இடு – அது
பண்புள்ள மனிதனின் சின்னமடா!
வயிற்றில் அடித்து வாழ நினைத்தால் – என்றும்
வாழ்வினில் நிம்மதி கிடையாதடா!
என்றும் பாடல் வரிகள் வரும்.
அன்றைய நாலடியார் கருத்துகளையே இன்றைய போக்கில் கவிஞர் மாயவநாதன் எழுதியுள்ளார்.
பொருளை உனக்கென ஒதுக்கி வைத்துக் கொள்வதற்காக அதனைப் பற்றிக் கொண்டிராதே என்கிறார் புலவர். பசித்தவனைப் புசிக்கச் செய்யச் சொல்வதன் மூலம் பகுத்துண்டு பிற வயிற்றுப் பசியைப் போக்கச் சொல்கிறார்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. (திருக்குறள், ௩௱௨௰௨ – 322)
என்கிறார் திருவள்ளுவர்.
அறநூலார் கூறுவனவற்றுள் தலையாய அறம் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே என்கிறார் திருவள்ளுவர்.
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள. (திருக்குறள்,௫௱௨௰௭ – 527)
எனத் திருவள்ளுவர்
தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காகம் உண்ணுவதைக் குறிப்பதன் மூலம் பிறருக்குக் கொடுத்து உண்பதை வலியுறுத்துகிறார்.
இவற்றையே நாலடியார் “பாத்துண்மின்” என்கிறது.
“பாத்து உண்மின்” என்று பகுத்து உண்ணுக எனச் சொல்வதுபோல், இதன் வழி, ‘பாத்து’ என்பது சோற்றைக் குறிக்கலாயிற்று. இச்சொல் வடக்கே சென்று தமிழகத்திற்கு மீண்டும் பகளாபாத்(Bagalabath-தயிர்ச்சோறு)என்பதுபோல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
நிலையாமை உடையது இவ்வுலகு.மூப்போ, பிணியோ, சாவோ எப்போது வேண்டுமானாலும் வரலாம். நம் கண்முன் வந்து அவை அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. இத்துன்பங்களை வென்று நாம் இன்பம் காண வேண்டும். அதற்கு நாம், நிலையான புகழ் வரும் செயலைச் செய்ய வேண்டும். அதற்காக நாம் நம்மிடம் இருக்கும் எதையும் மறைக்கக் கூடாது. இருப்பதைப் பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும். பிறருக்குக் கொடுத்து உவகை அடைந்து இன்பம் காண வேண்டும்.
நிலையாமையைக் குறிப்பிடுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. கொடுக்க நினைத்து விட்டுப் பிறகு கொடுக்கலாம் எனச் சிலர் முடிவெடுக்கலாம். ஆனால் அதற்குள் அவர் கொடுக்கும் நிலையிலிருந்து தாழலாம். செல்வ நிலையிலிருந்து வறுமை நிலைக்கு வீழலாம். பிறருக்குக் கொடுக்க இயலாத நிலை ஏற்படலாம். எனவே, பிறருக்கு எதையும் முழுமையாகவோ பகிர்ந்தோ கொடுக்க நினைத்தால் நினைத்தவுடன் கொடுத்து விடவேண்டும். ஆதலின்,
இருக்கும் பொழுதே கொடுப்போம்!
இருப்பதை மறைக்காமல் இல்லார்க்குக் கொடுப்போம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment