
கார்த்திகை ஒளி: கண்டிக்கவேண்டியவர்களைக் கண்டிக்க அஞ்சும் மு.க.தாலின்
இந்தியத் துணைக்கணடத்திற்கே வழிகாட்டும் பொறுப்பில் இருப்பவர் மு.க.தாலின்; தமிழக அரசை எப்படியாவது கலைக்க முடியுமா எனச் செயற்படுவது முறையல்ல. மக்களின் நல்லெண்ணங்களைச் சம்பாதித்து பொதுத்தேர்தலைச் சந்திக்கலாம் எனக் காத்திராமல், பயனில்லை என அறிந்தும் தமிழக அரசிற்கு எதிராகத் தேவையற்ற அவதூறுகளை அள்ளி வீசுவது சரியல்ல.
திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை மத்தியச் சேமக் காவல் படை (CRPF) வசம் ஒப்படைத்தல், அறங்காவலர் குழுவைக் கலைத்தல் முன்னாள் நீதிபதிகள் குழுவிடம் பொறுப்புகளை வழங்குதல் போன்ற உத்தரவுகள் அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்நிலை மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தது உண்மைதான். ஆனால், இவற்றுக்குக் காரணமானவர்களைக் கண்டிக்காமல், தமிழக அரசு நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது சரிதானா? விசய் அரசைத் தாக்குவதையே நோக்கமாகக் கொண்டு அறிக்கை விடுவதும் பேசுவதும் சரிதானா? பாதிப்பு ஏற்படுத்தியவர்களைக் கண்டிக்காமல் விசய் அரசைக் கண்டிப்பது ஏற்புடைத்துதானா?
உச்சநீதி மன்றம் தமிழ்நாட்டரசிற்கு அறங்காவலர் குழுவைக் கலைப்பதற்கும் தமிழகக் காவல் துறைக்கு மாற்றாக மத்தியப்படையைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தியிருக்கலாம். ஆனால், தானே தலையிட்டு இத்தகைய பணிகளில் ஈடுபடுவது எங்ஙனம் சரி என்று உச்சநீதி மன்றத்தையும் அதற்கான மூல காரணர்களையும் கண்டிக்காமல் தமிழக அரசைத் தாக்கிப் பயன் என்ன?
அவருக்கும் தெரியும். நடுநிலை மக்கள் அனைவருக்கும் தெரியும். –வாதுரை எப்படி இருந்தாலும் தீர்ப்புரை இப்படித்தான் வரும் என்று. அப்படி இருந்தும் தமிழ்நாடு அரசு சரியான வாதங்களை எடுத்து வைக்காததால்தான் இப்படித் தீர்ப்பு வந்தது என்று சொல்வது ஏன்? எதையேனும் சொல்லி மக்களைக் குழப்பி விசய்அரசிற்கு எதிரான நிலைப்பாட்டிற்குத் தள்ளவேண்டும் என்பதுதானா?
மக்களாட்சியின் நான்கு தூண்கள் 1.) சட்டமன்றம் 2.) பணியாட்சி(நிருவாகம்) 3.) நீதித்துறை 4.) ஊடகங்கள் ஆகும். இவற்றின் அதிகாரங்களும் செயற்பாடுகளும் சமன் நிலையில் இருக்க வேண்டும். ஒன்றின் அதிகாரங்களை மற்றொன்று எடுத்துக்கொண்டால் அது மக்காட்சிக்கு அழிவேயாகும். ஆனால், உச்ச நீதிமன்றம் அ்திகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தானே நேரடி நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளது பெருங்கொடுமையன்றோ? இதனைக் கண்டிக்க வேண்டிய மு.க.தாலின் விசய் அரசைக் கண்டிப்பது ஏன்?
கருநாடகா அரசு ஒரு முறை இரு முறை அல்ல ஒவ்வொரு முறையுமே காவிரி ஆற்றுச் சிக்கல் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறித்தான் செயற்பட்டு வருகிறது. என்ன செய்தது உச்ச நீதி மன்றம்?
முல்லைப்பெரியாறு தொடர்பான உச்ச நிதிமன்றத்தீர்ப்பைக் கேரள அரசு மீறத்தான் செய்தது. என்ன நடவடிக்கை எடுத்தது உச்ச நீதி மன்றம்?
பாபர் சூதியை இடிக்கக் கூடாது, அங்குள்ள நிலையை மாற்றக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தீர்ப்பை மீறி உ.பி.அரசு செயற்பட்டதால்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. தன் ஆணை மீறியதற்காகப் பொங்கி எழுநததா உச்சநீதி மன்றம்?
தமிழ்நாட்டிலுள்ள வைகோ, மாணிக்கம் தாகூர், தொல் திருமா, சண்முகம், வீரபாண்டியன், சவாஃகிருல்லா முதலான அனைத்துக் கட்சித்தலைவர்கள் மட்டுமல்லாமல், கரப்பான்பூச்சி சனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவு தாசு முதலிய இந்தியத் தலைவர்களும் உச்சநீதிமன்றச் செயலைக் கண்டித்துள்ளனர். ஆனால் மாநில உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும், மாநிலத் தன்னாட்சியை வலியுறுத்தும் கொள்கை வீட்டில் இருந்து கொண்டே மாநில உரிமைகளைப் பறிக்கும் உச்ச நீதிமன்றத்தைக் கண்டிக்காமல் பாதிப்பிற்குள்ளான தமிழ்நாட்டின் முதல்வர் விசய்யைக் கண்டிப்பது ஏன்?
இறுதித்தீர்ப்பு வரும்முன் பிறப்பிக்கப்படும் இடைத்தீர்ப்பு அதற்கு முரணாக அமைந்தால் இதன் விளைவுகளை எப்படிச் சரி செய்ய இயலும்? எனவே விசய் அரசைத் தாக்குவதைக் குறியாகக் கொள்ளாமல் இறுதித்தீர்ப்பு வரும் முன் இடைத்தீர்ப்பு சொல்லியதை எதிர்த்து மு.க.தாலின் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு வழக்கு தொடுத்திருக்கலாம் அல்லவா? மாநில உரிமைகளை நசுக்கும் உச்ச நீதிமன்றச் செயலுக்கு எதிராக இந்திய அளவில் தலைவர்களைத் திரட்டி ஒருங்கிணைந்து உச்ச நிதி மன்றத்தில் சீராய்வு வழக்கு தொடுத்திருக்கலாம் அல்லவா? இத்தகைய வாய்ப்பு இருப்பினும் அதுபற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தமிழக அரசைத் தாக்குவதன் மூலம் மூல காரணர்களுக்கு மறைமுகமாகப் பாதுகாவலாக இருப்பது ஏன்?
இந்திய அரசியலில் திருப்புமுனைகளை உருவாக்கும் தகைமையாளர் மு.க.தாலின் தம் போக்கை மாற்றிக் கொண்டு கட்சிவேறுபாடின்றித் தமிழக நலன்களைக் காக்கும் செயல்களில் ஈடுபட அன்படன் வேண்டுகிறோம். கட்சிக்கண்ணோட்டத்தில் அடுத்த நிலைத் தலைவர்களைச் செயற்படச் செய்யட்டும். தான் பொறுப்பான முன்னாள் முதல்வராக இனியேனும் செயற்பட அன்புடன் வேண்டுகிறோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல
13.11.2057/29.11.2026
No comments:
Post a Comment