Showing posts with label இந்திய அரசியல் யாப்பு. Show all posts
Showing posts with label இந்திய அரசியல் யாப்பு. Show all posts

Sunday, June 14, 2026

மொழிப்போர் வரலாறு அறிவோம்! -15 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 3 : இலக்குவனார் திருவள்ளுவன்

      14 June 2026      



(மொழிப்போர் வரலாறு அறிவோம்! -14 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 2 : தொடர்ச்சி)

மொழிப்போர் என்னும் பொழுது இந்தித்திணிப்பிற்கு எதிரான நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் மட்டும் பார்த்தால் போதாது. இதற்குக் காரணமான இந்தித் திணிப்புச் சூழல்களையும் நாம் பார்க்க வேண்டும். எனவே, முந்தைய கட்டுரை தொடர்பில் சில செய்திகளைப் பார்ப்போம். இவை முந்தைய கட்டுரையிலேயே இடம் பெற வேண்டியவைதாம். எனினும் இடம் இன்மை கருதி , அதன் தொடர்ச்சியாக இப்போது பார்ப்போம்.

இந்திய அரசமைப்பு அவையில், கட்சிக் கட்டுப்பாட்டினைக் கடந்து நின்ற ஒரு சிக்கல், ஆட்சி மொழிச் சிக்கலாகும்.  பேராயக் கட்சி சார்ந்த இந்தி வெறியர்களுக்கும் தென்னகத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையில், ஆட்சி மொழியைப் பற்றி தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தன.

இந்தித் தீவிரவாதிகளில் இரு பிரிவினர் இருந்தனர். பெரும்பான்மையர் இந்திதான் வேண்டுமென்றனர். சிறுபான்மையர் இந்துத்தானிதான் வேண்டுமென்றனர். இந்தியாவின் ஆட்சிமொழி இந்தியா? இந்துத்தானியா என்ற கருத்து மோதல்கள் இருந்தன.

அரசமைப்பு அவையில், தொடக்கத்திலிருந்து இறுதி வரை இந்தி பற்றி தருக்கம் வரும் போதெல்லாம் உறுப்பினர்கள் உணர்ச்சிப் பிழம்பாகிக் கொதித்து எழுந்தனர்.  எனவே, அரசியலமைப்பு அவை எவ்வகையில் நடைபெற வேண்டும் என்பது பற்றிய “அவை நடைமுறை விதிகளைத்”( Rules of Procedure) தொகுப்பதற்காக ஒரு தனிக் குழு நியமிக்கப்பட்டது.

இவ்வவையின் உறுப்பினர் இந்தி வெறியர் இர.வி.துலேகர்(இரகுநாத் விநாயக்கு துலேகர்-Raghunath Vinayak Dhulekar:1891-1980), “அந்தக் குழு, இந்துத்தானியாலேயே அவை விதிகளை எழுத வேண்டும்.’’ என்ற ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார். அரசியல் அமைப்பவைத் தலைவர், துலேகரை இந்தியில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுமாறு பணித்தார். அதற்குத் துலேகர் மறுமொழியாக,“இந்துத்தானியைத் தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள்; அவர்கள் அரசமைப்பு அவை உறுப்பினராக இருக்கவும் தகுதியற்றவர்கள்” என வாதாடினர்.

“திருத்தம் முறையற்றது” எனத் தீர்ப்பைக் கூறி, மேற்கொண்டு அதைப் பொறுத்த விவாதங்களை நடத்தக்கூடாது என்றும் தலைவர் ஆணை யிட்டார். பின்னர் அரசியலமைப்பவையில் “நடைமுறை விதிகளைப் பற்றிய அறிக்கை” விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. அப்போது மறுபடியும் இந்திச் சிக்கல்  தலை நீட்டியது.

“அரசமைப்பவையின் நடவடிக்கைகள் இந்துத்தானியிலோ ஆங்கிலத்திலோ இருக்கலாம்; அந்த இருமொழிகளும் தெரியாதவர்கள் அவர்தம் தாய்மொழியிலேயே பேசுவதற்குத் தலைவர் அனுமதிக்கலாம். அரசமைப்பு அவையின் அதிகாரப்பூர்வமான ஏடுகள், குறிப்புகள், ஆணைகள் முழுவதும் இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இருக்கலாம்.” என நடைமுறை விதிக்குழுவின் அறிக்கை பரிந்துரை செய்திருந்தது.

மற்றோர் இந்தி  வெறியரான சேத்து கோவிந்ததாசு, (Seth Govind Das:16.10.1896 –  18.06.1974) அரசமைப்பு அவையின் நடவடிக்கைகள் இந்துத்தானியில்தான் இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்திலோ உருது மொழியிலோ நடைபெறலாகாது எனவும், இந்தி தெரியாதவர்கள் மட்டும் ஆங்கிலத்திலேயோ தாய்மொழியிலேயோ பேசலாம் எனவும் கோரும் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

 அந்தத் திருத்தத்தை முன்மொழிந்து அவர் உரையாற்றும் போது, “காந்தியினுடைய 25 ஆண்டுகால முயற்சிக்குப் பின்னரும் கூடத் தென்னகத்தைச் சார்ந்தவர்கள் இந்துத்தானியைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தால், அஃது அவர்கள் குற்றம்தான் என்பதை நான் தென்னகத்தைச் சார்ந்தவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

சென்னையைச் சார்ந்த சிலருக்கு இந்துத்தானி தெரியாத காரணத்தினால், விடுதலை பெற்ற இந்தியாவிற்குரிய ஓர் அரசமைப்பை உருவாக்குவதற்குக் கூடியிருக்கும் இறைமை பொருந்திய அரசமைப்பு அவையில் ஆங்கிலம்தான் கோலாச்சுவது என்று சொன்னால், அது எங்கள் பொறுமையைச் சோதிக்கிறது.” எனக் குறிப்பிட்டு,  இந்தி பேசா மக்களைக் குற்றவாளிகள்போல் இடித்துரைத்தார். மேலும் அவர் இந்துத்தானி குறித்து உரையாற்றினாலும் தனி இந்திக்காகவே வாதுரைத்தார்.

வரைவு அரசமைப்புச் சட்டத்தின் (Draft Constitution) மீது பொது விவாதம் நடைபெறும் போது , இந்திச் சிக்கல் முழுத் தீவிரத்துடன் மீண்டும் தலையெடுத்தது. உணர்ச்சி கொப்பளிக்கும் பல விவாதங்கள் நடைபெற்றன. சேத்து கோவிந்த தாசும், அவர் குழுவைச் சார்ந்த சில இந்தி ஆதரவாளர்களும், “ தேவநாகிரி எழுத்தைக் கொண்ட இந்திதான், நாட்டினுடைய ஆட்சி மொழியாக அரசியல் அமைப்பில் இடம் பெற வேண்டும்; ஆனால் இடைக்கால ஏற்பாடாக ஆங்கிலமும் தொடரலாம்“ என்றார்கள்.

 இன்னொரு சாரார், “தேவநாகிரி, உருது எழுத்து வடிவத்தில் உள்ள இந்துத்தானியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்’’ என்றார்கள். அப்போது இந்திமொழி பேசாத பகுதியைச் சார்ந்தவர்கள், தாங்கள் இந்திக்கு எதிரிகள் அல்லர் என்றும், இந்திமொழி தெரியாத பல கோடி மக்களின் மேல் ஆட்சி மொழி என்ற பெயரால் ஒரே ஒரு மொழியைத் திணிப்பது நாட்டிற்குக் கேடு விளைவிக்கும் என்றும்  அடக்கத்தோடும் பணிவு முறையிலும் எடுத்தியம்பினர்.

தமிழகத்தைச் சேர்ந்த, சந்தானம் அவர்களும் தென்னகத்தின் பல உறுப்பினர்களுமாக 43 பேர்கள் எதிர்த் திருத்தத்தில் கையொப்பமிட்டு அரசமைப்பு அவையில் கொண்டு வந்தனர்.   இந்தி ஆட்சிமொழி என்பதை ஏற்றுக் கொண்டவர்களில் ஒரு சாரார், ஆட்சி மொழித் தகுதியுடன் ஆங்கிலம்  பயன்படுத்தப்பட வேண்டும் என்றனர். ஆங்கிலத்தை எத்தனைக் காலம் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் சிக்கல் எழுந்தது. முன்னாள் உள்துறையமைச்சர். கோவிந்த வல்லபபந்து (Govind Ballabh Pant)(30.08.1887-07.03.1961)  ஆங்கிலத்தை அகற்றுவதற்கு உண்டான கால அளவை வரையறுக்கும்  உரிமையை இந்தி மொழி பேசாத மக்களுக்கே விட்டுவிடலாம் எனக் கூறினார்.

Saturday, May 30, 2026

மொழிப்போர் வரலாறு அறிவோம்! -14 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 2 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(மொழிப்போர் வரலாறு அறிவோம்! -13 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 1 : தொடர்ச்சி)

 இந்தி, தேசியமொழியாவதைத் தென்னிந்தியாவைச் சேர்ந்த திருவள்ளூர் தட்டை கிருட்டிணமாச்சாரி(T.T.K.), கம்மிடிடாலா துருகாபாய்(Gammiḍidala Durgabāi Deshmukh), தி.அ. இராமலிங்கம்(செட்டியார்) (T. A. Ramalingam Chettiar),  கொகினேனி இரங்க நாயகுலு(N. G. Ranga), நரசிம்ம கோபாலசாமி (ஐயங்கார்) (N. Gopalaswami Ayyangar)(சம்மு காசுமீர் அரசின் தலைமை யமைச்சராக 1937 – 1943 ஆம் ஆண்டுகளில் பணியாற்றியவர்.) (அனைவரும் சென்னை மாகாணம்), சி.வ.கிருட்டிணமூர்த்தி (இராவு)(S.V. Krishnamoorthy Rao) (மைசூர்) ஆகியோர் எதிர்த்தனர். இவர்கள் ஆங்கிலத்தையே அரசு மொழியாக நீட்டிக்கச் செய்ய வேண்டுமென்று வாதிட்டனர்.

அப்போது அரசியல் யாப்பு வரையறைக் குழு(Constituent Assembly of India) உறுப்பினர் தி.த.கிருட்டிணமாச்சாரி அவற்றின் சாரமாக  “எனது அருமை உத்திரப்பிரதேசத்து உடன்பிறப்புகள் இந்தி-ஏகாதிபத்தியத்தை இங்கே கசையடிப்பதன் மூலம் எங்களுக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை. நாடு முழு இந்தியாவாக இருக்க வேண்டுமா அல்லது இந்தி-இந்தியாவாக இருக்க வேண்டுமா என்பது உத்திரப்பிரதேசத்து நண்பர்களின் தேர்வைப் பொறுத்தது” எனப் பேசினார்.

இந்தி ஆட்சி மொழியாக ஆக வேண்டும் என வற்புறுத்தப்பட்டால் “இன்னொரு நாட்டுப் பிரிவினை தவிர்க்க முடியாததாகி விடும்’’ எனத் தி.த.கிருட்டிணமாச்சாரி (T.T.K.) போன்றவர்கள் 1948-ஆம் ஆண்டிலேயே அரசமைப்பு அவையில்  வாதிட்டனர்,

அரசியல் யாப்பு அவையில் இருந்த பேராயக் கட்சியின் உறுப்பினர்கள், 1949 செட்டம்பரில் தனியே நடத்திய கூட்டத்தில் ஆட்சி மொழி வாக்கெடுப்பை நடத்தினர். வாக்கெடுப்பில் இந்திக்கு ஆதரவாக 77 வாக்குகளும், ஆங்கிலத்திற்கு ஆதரவாக 77 வாக்குகளும் கிடைத்தன. அப்போது அந்தக் கூட்டத்தின் தலைவராக இருந்த பட்டாபி சீதாராமய்யர் இந்திக்கு ஆதரவாகத் தனது வாக்கை அளித்தார். இதனால் ஒரு வாக்கு வேறுபாட்டில் இந்தி மொழி வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு இந்தி மொழியை, அதனைப் பேசாத பிற மாநிலங்களில் திணிப்பதற்குப் பேராயக்கட்சி பெரிதும் முயன்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் விரும்பாத பொழுதும் இந்தித் திணிப்பு விரைவுபடுத்தப்பட்டது. எனினும்  இந்தி பேசாத மாநிலங்களுக்கு அதனைக் கற்றுக்கொள்ள 15 ஆண்டு கால வாய்ப்பு அளிப்பது என்றும், 1965 முதல் இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே -15.08.1947இற்கு முன்பே -1946ம் ஆண்டிலேயே அரசியல் அமைப்பவை அமைக்கப்பட்டுவிட்டது. இந்த அரசியல் அமைப்பவையில் அல்லது அரசியல் யாப்பவையில் –  உறுப்பினர்களாக யாரைத் தேர்ந்தெடுத்து இருந்தார்கள்? 1935ம் ஆண்டு பிரித்தானியஆட்சி, இந்தியர்களுக்காக  ஓர் அரசியல் திட்டத்தை உருவாக்கி, அதனடிப்படையில் தேர்தல்களை நடத்தியது. அந்தத் தேர்தலில் அனைத்துனக் குடிமக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்படவில்லை. சொத்து-கல்வி அடிப்படையிலேயே வாக்குரிமை வழங்கப் பெற்றது. இதனால் நூற்றுக்கு 14 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டதே நாடாளுமன்றம். இதுவே  அரசியல் அமைப்பவையாக மாற்றப்பட்டது. உண்மையில் இந்தியா விடுதலை பெற்ற பின்னரே எவ்வகை பாகுபாடுமின்றி அனைவராலும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தினரைக் கொண்டே அரசியல் யாப்பவை(அமைப்பவை) உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவே உண்மையான மக்களாட்சியின் கருத்தாக அமைந்திருக்கும். அடிமை நாட்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமைப்பவை எங்ஙனம் உரிமை நாட்டினருக்கு ஏற்றதாகச் செயற்பட்டிருக்க முடியும்?

இந்த அவையில் பெரும்பான்மை எண்ணிக்கையில் பேராயக்(காங்கிரசு) கட்சியினர் இடம் பெற்றிருந்தனர். அரசியல் அமைப்பவை அரசியல் சட்டப் பிரிவுகளை உருவாக்கும் வரைவுக்குழுத் தலைவர் பதவியை அறிஞர் அம்பேத்துகருக்கு வழங்கியது. அந்தக் குழுவில் முகம்மது சாதுல்லா, கே.எம். முன்சி, அல்லாடி கிருட்டிணசாமி(ஐயர்), டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அம்பேத்துகர், முகம்மது சாதுல்லா என்ற இசுலாமியர் ஆகிய இருவர் தவிர, வரைவுக் குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்கள் அனைவரும் பிராம்மணர்கள். பிற்படுத்தப்பட்ட பிரிவினர் எவரும் அரசியல் வரைவுக் குழுவில் இடம் பெறவில்லை. (இருப்பினும் பிராமணரான திருவள்ளூர் தட்டை கிருட்டிணமாச்சாரி(T.T.K.). இந்திக்கு எதிராகவே குரல் கொடுத்தார்.)இதனால் அம்பேத்துகர் தமது முற்போக்குச் சிந்தனை வழியில் வரைவுகளை உருவாக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அரசியல் சட்டத்தை உருவாக்க 13 குழுக்கள் அமைக்கப்பட்டன; அதில் வரைவுக் குழுவிற்கு மட்டுமே அம்பேத்துகர் தலைவர்; வரைவுக்குழு முதலான 10 குழுக்களில் இடம்பெற்றவர் கே.எம்.முன்சி  எனும் பிராம்மணர். (சாதி அடிப்படையிலேயே குழுவினர் அமர்த்தப்பட்டதால் சாதியைக் குறிப்பிட வேண்டிய நிலை வந்துள்ளது.)

அதன் காரணமாகவே இந்திய அரசியல் சட்டத்தை எரிக்கும் நிலை வருமானால், அதை எரிப்பதில் முதல் ஆளாக நான் இருப்பேன் என்று அம்பேத்துகர் அறிவித்தார் . (“I Dare say that if anybody comes forward to burn the constitution of india, I will be the first person to burn it (மாநிலங்களவை விவாதங்கள் 2-9-1953)

1946ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அரசியல் வரையறைக்குழு உருவாக்கிய அரசியல் சட்டம் 26.11.1949இல் அரசியல் அமைப்பவையின்  ஒப்புதலைப் பெற்றது. அரசியல் வரையறை அவையின் தலைவர் இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவராக இருந்த இராசேந்திரபிரசாத்து. 26.01.1950ஆம்நாளில் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் சார்பாளர்களால் உருவாக்கப்படாத இந்தச் சட்டத்தில் சாதிப் பாதுகாப்பு அடிப்படை உரிமையாக்கப்பட்டதை எதிர்த்த பெரியார் ஈ.வெ.இராமசாமி அந்த அரசியல் சட்டப் பகுதிகளைத் தீ வைத்து எரிக்கும் போராட்டத்தை 1957ம் ஆண்டு நடத்தினார். அதற்கு அவர் தேர்வு செய்த நாள் அரசியல் அமைப்பவை இச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்த நவம்பர் 26ஆம் நாள் ஆகும்.

தேர்ந்தெடுக்கப்படாத மக்கள் சார்பாளரகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம் அதன் முகப்புரையில் “இந்திய மக்களாகிய நாம் நமது அரசியலமைப்பு அவையில் இந்த அரசமைப்பை இயற்றி, ஏற்று அதனை நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்’’ என்று அறிவிக்கிறது. இவ்வாறு, இந்திய மக்கள் ஏற்போடு இந்தச் சட்டம் செய்யப்பட்டதாக உண்மைக்கு மாறான கருத்தைப் பதிவு செய்திருக்கிறது;  நாடு விடுதலை பெற்ற பிறகும்கூட இந்த ‘ அரசியல் சட்டத்துக்கு’ மக்களிடம் பொதுவாக்கெடுப்பு ஏதும் நடத்தப் படவில்லை;

இதுவே -அரசியல் சட்டம் உருவாகிய சுருக்கமான இவ்வரலாற்றுப் பின்னணியுடன் நாம் மொழித்திணிப்பு குறித்த கருத்துகளையும் பார்க்க வேண்டும்.

 சட்ட அறிஞர் கு.ச.ஆனந்தன் எழுதிய ‘மலர்க மாநில சுயாட்சி’ நூலில் இது குறித்து விரிவாகக் கணலாம்.

Followers

Blog Archive