‘அகரமுதல’ கணிப்பு சரியானது. இனியேனும் அரசியல் மேதைகளின்(!) ஊடக உளறல்களை நிறுத்தட்டும்!
“இடைத்தேர்தல்களில் த.வெ.க.வாகை சூடட்டும்!” எனத் தெரிவித்திருந்தோம். அதன்படியே சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் வாகை சூடியுள்ளது.
“த.வெ.க. கூட்டணி புதிய கட்சிகளை இணைத்துள்ளது. இதனால் அமைந்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வலுவாக உள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தோம். தேர்தல்முடிவுகள் இதன் வலுவை மெய்ப்பித்துள்ளது.
“த.வெ.க. வெற்றி பெற்றாலும் உண்மையான வெற்றியாகக் குறிப்பிடாமல் அதிகார வலிமையால் பெற்ற வெற்றி என்றுதான் கூறுவர். கூறிவிட்டுப் போகட்டும்.” என்றோம். அதன்படிதான் தோல்வியைத் தழுவியவர்களும் அவர்களின் கூட்டாளிகளும் அப்படித்தான் சொல்லித் தங்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
“இத்தேர்தல்களில் பொதுவுடைமைக் கட்சிகள் ஒவ்வொன்றும் ஆயிரம் வாக்குகள் அளவில்தான் பெறுவார்கள்.. அக்கட்சிகளுக்கு எதிரான எண்ணம்தான் மக்களிடையே எழுகிறது. எனவே, அவர்கள் மண்ணைக் கெளவுவதன் மூலம் அதற்கு விடை கொடுத்தாற்போல் அமையும். அதுவும் இத்தேர்தலின் மக்கள் வெற்றியாக அமையும்.” எனத் தெரிவித்திருந்தோம். இதனை உண்மையாக்கும் வண்ணம், இ.பொ.க. வேட்பாளர் இலட்சுமணன் – 1,157 வாக்குகளும் இ.மா.க.வேட்பாளர் பி.சுகந்தி, 1,986 வாக்குகளும் மட்டுமே பெற்றுள்ளனர். மண்ணைக் கவ்விய பொதுவுடைமைக் கட்சிகள். எங்கள் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் சில நாள் எதுவும் கூறிவிட்டுப் பின்னர்ச் சில ஆண்டுகள் அமைதி காப்பது நன்று. அல்லது எதிரணியில் வெளிப்படையாகச் சேர்ந்து விடுவது அல்லது தனியணியாகச் செயற்பட்டு, மக்கள் தொண்டாற்றுவது நன்று.
கருதியவாறு அதிமுக தோல்வியைத்தான் தழுவியுள்ளது. “தான் வென்ற தொகுதிகளிலேயே வெற்றி வாய்ப்பை இழப்பது அதிமுகவின் தோல்வியல்ல, தலைமையின் தோல்வி” என்றும் குறிப்பிட்டிருந்தோம். இதைத்தான் அக்கட்சியினரே கூறுகின்றனர்.
குதிரைபேரம் பொருந்தாது என்றும் குறிப்பிட்டிருந்தோம். “த.வெ.க. வேட்பாளர்கள் இருவரும் கட்சி மாறி வாக்களிக்கவில்லை. கட்சியின் செயற்பாடு பிடிக்காமல் விலகி வந்துள்ளனர். இப்பொழுது மக்கள் அவர்களை வெற்றி பெறச்செய்தால் மக்கள் இவர்கள் செயற்பாடுகளை ஏற்றுக்கொண்டதாகும். அவ்வாறாயின் குதிரை பேரம் எங்கே வரும்?” எனக் கேட்டிருந்தோம்.
பொதுமக்களால் த.வெ.க. வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுவதால், அவர்களுக்குத் தோல்வி உறுதி என்று பரப்பினர். “வேட்பாளர்களைப் பொதுமக்கள் விரட்டியடிக்கிறார்கள் என்கிறீர்களா? பொதுமக்கள் போர்வையில் எதிர்க்கட்சியினர் விரட்டியடிக்கச் செய்வதும் ஆனால், விரட்டப்பட்டவர்கள் வெற்றி பெறுவதும் முந்தைய தேர்தல்களில் நாம் பார்த்தவைதாமே! இவற்றை யெல்லாம் பொருட்படுத்தவேண்டா!” எனக் கூறியபடி விரட்டி யடிக்கப்பட்டவர்கள் வெற்றி மாலை சூடியுள்ளனர்.
“பொதுமக்கள் சிந்தித்து அளிக்கும் வாக்குகளால் த.வெ.க. வெற்றிக் கனிகளைப் பறித்து ஆட்சி நிலைப்பை உறுதி செய்யட்டும்!” என்றும் “தமிழ்நாட்டின் நன்மைக்குத் தேவை நிலையான ஆட்சி. எனவே, இவ்விரு தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெறுவதுதான் அதற்கு ஏற்ற வழியாகும்” என்றோம். ஆம் நாம் கணித்தபடியும் வேண்டியபடியும் த.வெ.க. / ம.சா.ச.நீ. வெற்றிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
எனினும் அடுத்த இடைத்தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகப் பொய்யென அறிந்தும் பொய்யுரை புகல்வதுதான் கொடுமையானது.
தவெக-வை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளைக் கணக்கில் கொண்டால், ஆளுங்கட்சியான தவெக பெரும்பான்மையான மக்களால் ஒதுக்கித்தள்ள(நிராகரிக்க)ப்பட்டுள்ளது என்று முன்னாள் முதல்வர் மு.க.தாலின் கூறியுள்ளார்
2006 சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்படியானால், 138 தொகுதிகள் தி.மு.க.விற்கு எதிரானதுதானே. இருந்தும் ஆட்சி அமைக்கவில்லையா? 100 வாக்குகள் உள்ள தேர்தலில் ஒருவர் 11 வாக்குகள் பெற்று போட்டியிட்ட மீதி 10 வேட்பாளர்களும் 11 வாக்குகளுக்குக் குறைவாகப்பெற்றிருந்தால் 11 வாக்குகள் பெற்றவர்தான் வென்றவர். இதுதான் குடிநாயக இலக்கணம். மற்றொரு சான்றைப் பார்க்கலாம். எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 62,992. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,63,866. அப்படியானால், 105807 வாக்காளர்கள் உதயநிதிக்கு எதிரானவர்கள் என்றுதானே பொருள். ஆக 64.57% வாக்காளர்கள் எதிராக இருப்பதால், உதயநிதி பதவி விலகுவாரா? மாட்டார் அல்லவா? த.வெ.க.வெற்றியை ஏற்க மனமின்றி அப்பாவி மக்களை ஏமாற்றலாம் எனத் திரித்துக் கூறுவதைச் சொந்தக் கட்சியினரே நம்பவில்லை. எனவே, இவ்வாறெல்லாம் தோல்வியை ஏற்க மனமின்றிக் கூறுவதை நிறுத்தி விட்டு தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து திருத்திக் கொள்ள வேண்டும்.
தோல்வியடைந்தவர்களும் அவர்கள் சார்பானவர்களும் சார்பு ஊடகங்களும் நடுநிலையுடன் செயற்பட வேண்டும். நல்லன செய்தால் பாராட்டியும் தவறு நேரும் வாய்ப்பு உள்ள இடங்களில் திருத்துவதற்கு வழிகாட்டியும் மக்களாட்சி மாண்பைக் காக்க வேண்டும்.
இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என ஒரு கட்சித்தலைவர் கூறுகிறார். அப்படியால் வரும் இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை என அறிவித்து ஒதுங்கி விட வேண்டும். ஒதுங்குவார்களா?
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். (திருவள்ளுவர், திருக்குறள், ௫௱௫ – 505)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

