Showing posts with label குறள் கடலில் சில துளிகள். Show all posts
Showing posts with label குறள் கடலில் சில துளிகள். Show all posts

Sunday, August 3, 2025

குறள் கடலில் சில துளிகள் 31 – அறிஞர்களே கண்கள்; அவர்களைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்



(குறள் கடலில் சில துளிகள் 30 – பெரியாரைத் துணையாகக் கொள்க! – தொடர்ச்சி)

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.  

(திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், எண் ௪௱௪௰௫ – 445)

பதவுரை: சூழ்வார்-சூழ்ந்து இருப்பவர்; கண்-விழி; ஆக-ஆகும்படி; ஒழுகலான்-நடந்து கொள்ளுதலால்; மன்னவன்-வேந்தன்; ஆட்சியாளர்; சூழ்வாரை-பெரியாரை; சூழ்ந்து-ஆராய்ந்து; கொளல்-கொள்க.

அறிஞரகளே உலகின் கண்கள். எனவே, ஆட்சியாளர்கள் அவர்களைத் தம் சுற்றமாகக் கொண்டு இயங்க வேண்டும்.

சூழ் என்பதற்குச் சுற்றுதல், சுற்றியிருத்தல் என்பன மட்டும் பொருள்கள் அல்ல. ஆராய்தல், தேர்ந்தெடுத்தல், கலந்தாய்வு எனப் பல பொருள்களும் உள்ளன. இதனடிப்படையில் சூழ்வார் என்றால் கலந்தாய்விற்குரிய அறிஞர் என்று பொருள்.

இத்தகைய அறிஞர்களையே நமக்குத் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆதலின் அறிஞர் பெருமக்களையே ஆட்சியாளர் அமைச்சராக வைத்துக் கொள்ள வேண்டும்.

சூழ் என்ற சொல் சூழ்ந்துகொள், ஆராய் என்ற இரண்டு பொருளில் இக்குறளில் வந்துள்ளது. சூழ்ந்து என்றது தன்னைச் சுற்றிக்கொள்பவர்களாக ஏற்றுக்கொள்ளுமுன் அவர்கள் அறிவாலும் பயிற்சியாலும் சூழ்ச்சியாலும் தேர்ந்தவர்களா என்பதை ‘ஆராய்ந்து’ தனக்குத் துணையாகக் கொள்ள வேண்டும் என்பதாம்.

சூழ்வார் என்ற சொல்லில் உள்ள ‘சூழ்’ என்பது சூழ்ந்து கொள்      அ ஃதாவது சுற்றியிரு என்ற பொருளில் வந்து சூழ்வார் என்பது சூழ்ந்துள்ளவர் (சுற்றியிருப்பவர்) எனப் பொருள்படும். இங்கு நாட்டுத் தலைவனைச் சுற்றியிருப்பவர்கள் சூழ்வார் எனப்படுகின்றனர். ஆட்சியைத் திறம்பட நடத்துவதற்கு ஆற்றல் வல்ல அறவோர் அணுக்கமாக இருக்க வேண்டும். இவர்கள் வெவ்வேறு துறையில் சிறப்பு அறிவு கொண்ட பெரியோர்களாயிருப்பர். அவனுக்கு ஆராய்ச்சியுரையும் அறிவுரையும் கூறுபவர்கள் இவர்களே. அவர்களைக் கலந்து எண்ணியே ஆட்சித் தலைவன் அரசியல் முடிவுகளை எடுப்பான்; நல்லாட்சிக்கு அவ்வாறு கலந்துபேசி முடிவு எடுக்க வேண்டும். அத்தகையோர் அமைச்சர் பெருமக்கள், படைத்தலைவர்கள், புலவர்கள், ஒற்றர்கள், தூதர்கள், அறவாணர்கள் முதலானோர் ஆவர். இவர்கள் ஆட்சியாளரைச் சூழ இருத்தலால்  சூழ்வோர் எனப்படுகின்றனர். சூழ்வார் என்றதற்குச் சூழ்ச்சித் துணையாவார் என்றும் பொருள் கூறுவர்.

மணக்குடவர் “அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொல்ல நினைப்பாரைத் தானுஞ் சூழ்ச்சியாற் கொல்ல வல்லவனாதல்” என்று இப்பகுதிக்கு உரை கூறியுள்ளார். இவர் குறளின் பிற்பகுதியிலுள்ள ‘கொளல்’ என்ற சொல்லுக்கு ‘கொலல்’ என்று பாடம் கொண்டு இவ்வாறு கூறியுள்ளாரா எனத் தெரியவில்லை. அல்லது சூழ்ச்சி என்றால் தீவினை புரிய திட்டமிடல் என்னும் பொருள் உள்ளதால், அங்ஙனம் கருதி உரையெழுதினாரா எனத் தெரியவில்லை.

நன்கு கற்ற அறிஞரைத் தன் சுற்றமாகக் கொள்வது பற்றிய வேறு சில செய்யுள்களும் உள்ளன. அவற்றில் இரண்டு வருமாறு:

ஒற்றர் தங்களை ஒற்றரின் ஆய்தலும்

கற்ற மாந்தரைக் கண் எனக் கோடலும்

சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் சூது அரோ

கொற்றம் கொள் குறிக் கொற்றவற்கு என்பவே

(சீவக சிந்தாமணி, விமலையார் இலம்பகம் 28)

“ஒற்றரை ஒற்றரைக் கொண்டே ஆராய்தலும், அறநூல் கற்றவரைக் கண்போலக் கொள்வதும் மந்திரிச் சுற்றத்தையும் தந்திரிச் சுற்றத்தையும் இவன் இதற்குரியன் என்று ஆராய்ந்து பெருக்கலும் வெற்றிகொள்ளுங் கருத்தையுடைய அரசற்குச் சூழ்ச்சி யென்ப” எனப் பொருள் கூறுகின்றனர்.

கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான்

உற்றுஇடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்

மரையா துணைபயிரும் மாமலை நாட!

சுரையாழ் நரம்பறுத் தற்று.

(பழமொழி, 260)

“பெண் மான்கள் தந்துணைகளை அழைக்கும் சிறந்த மலைநாடனே! நீதிநூல்களைக் கற்றவர்களைத் தனக்குக் கண்ணாகப் பெற்றிராத அரசன், யாதாயினும் ஒரு துன்பம் வந்துற்று, அத்துன்பத்தில் தான் அகப்பட்டு நின்றபொழுது, தானே ஒருவகையாகத் துணிதல், நரம்பினையுடைய சுரைபொருந்திய யாழின் அந்த ஒரு நரம்பையும் அறுத்தாற் போலும்” எனப் பொருள் கூறுகின்றனர்.

கிரேக்க மெய்யியலாளர்களும் மெய்யியல் அறிஞர்கள் துணை கொண்டு ஆட்சி நடப்பதே சிறந்த ஆட்சி என்கின்றனர்.

கண்ணின் பார்வைத்திறன் செம்மையாக இருக்க வேண்டும். அதுபோல் கண்ணாக விளங்க வேண்டிய சூழ்ந்திருப்போர் செம்மையாக இருத்தல் வேண்டும். இவ்வாறு சொல்வது ஆட்சியாளருக்கு மட்டும் உரியதல்ல. மக்களாய்ப் பிறந்த ஒவ்வொருவருமே துன்பம் வந்தால் அதைத் துடைத்தெறியவும் சிறந்த இலக்கினை அடைய நல்ல பாதை காட்டுவதற்கும் அறிவு, ஆற்றல், சூழ்வினைத் திறன், அறவுணர்வு உடையோரை உடன் இருப்பவர்களாகக் கொள்ள வேண்டும். ஆதலின்,

குறள்வழியில் கண்களாய்க் கருதுவதற்குரிய

அறிஞர்களைத் துணையாகக்  கொண்டு

சிறந்து வாழ்க!

Sunday, July 6, 2025

குறள் கடலில் சில துளிகள் 30 – பெரியாரைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(குறட் கடலிற் சில துளிகள் 29 . பெரியாரைப் பேணுக – தொடர்ச்சி)

தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையுள் எல்லாம் தலை

(திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், குறள் ௪௱௪௰௪ – 444)

பதவுரை: தம்மின்-தம்மைக்காட்டிலும், தம்மைவிட; பெரியார்-பெருமையுடையவர்; தமரா-தம்மவராக, சுற்றமாக; ஒழுகுதல்-நடந்து கொள்ளல்; வன்மையுள்-வலிமையுள், வல்லமையுள்; எல்லாம்-அனைத்தும்; தலை-முதன்மை, சிறந்தது.

பொழிப்புரை: நம்மினும் பெரியவரை நம்மவராக ஏற்றுப் பின்பற்றல் எல்லா வன்மையினும் சிறந்தது.

‘தம்மின் பெரியார்’ என்பதற்குத் ‘தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல்’ என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் கூறுகின்றனர்.

செல்வம், கல்வி, அறிவு இவற்றில் தம்மிலும் பெரியாரைத் தமக்கு உறவாகப் பண்ணிக்கொள்ளுதல் என்று பரிதி சொல்லியுள்ளார்.

குலத்தாலும் குணத்தாலும் கல்வியானும் தம்மின் சிறந்த பெரியோரை இவ்வரசர்க்குத் துணையாகக் கொண்டு ஒழுகுதலே என்கிறார் காலிங்கர். குலம் என்றது வருண அடிப்படையிலான சாதியைக் குறிப்பது அல்ல. கல்வி, கேள்வி, பண்புகளில் தலைசிறந்த வழி வழி குடிப்பெருமையைக் குறிப்பதே குலம்.

அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல் என்கிறார் பரிமேலழகர்.

தன்னைவிடச் சிறந்தவரைத் துணையாகக் கொள்ளுதலால் குறைவு ஒன்றும் இல்லை; நிறைவே காணலாம்.

‘தமராக் கொளல்’ என்றதற்குத் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல், தமக்குத் துணையாகக் கோடல், தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல், தமக்கு மெத்த நண்பராகக் கொள்ளுதல், தமக்குத் தமராய்க் கொள்ளுதல், தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், தமக்கு வேண்டியவர்களாக ஆக்கிக் கொள்ளுதல், உறவாகக் கொள்ளல், தமக்குச் சிறந்தவராகத் துணையாகக் கொள்ளுதல், தமக்கு உறவினராகக் கொள்ளுதல், தமக்கு உற்றாராகப் பெற்றுக் கொள்ளுதல், உறவாக்கிக் கொள்ளுதல், தம்மவர் ஆக்கிக்கொள்வது என்றவாறு உரையாளர்கள் முந்தைய குறள்(444) விளக்கத்தின் பொழுது தெரிவித்துள்ளனர். இங்கும் அவற்றைப் பொருத்திப் பார்க்க வேண்டும்

தம்மைக் காட்டிலும் மிக்காராக இருக்கும் பெரியார் தனக்குச் சுற்றத்தவராக இருந்து நடந்து கொள்ளுதல் தமக்குள்ள வன்மைகள் பலவற்றுள்ளும் தலையானதாகும்.

பெரியாரின்  துணை, தேவைப்படும் காலத்தில் அறிவையும், ஆற்றலையும், ஊக்கத்தையும், சூழ்ச்சித் திறனையும், தன்னம்பிக்கையையும்  தந்து துணை நிற்பதால், வலிமைகளுள்  தலையாய வலிமையாகத் திகழ்வதாக உரையாளர்கள் விளக்குகின்றனர்.

சிலர் செல்வத்திலும் பெரியாராக இருக்க வேண்டும் என்று விளக்குகின்றனர். திருவள்ளுவர் கூறும் தாழ்விலாச் செல்வராக, நல்வழியில் பொருள் ஈட்டி நல்வழியில் செலவழிப்பவராக இருப்பின் அவர் துணை சிறந்ததே. மாறாகத் தீயவழியில் பொருள் ஈட்டுவோர் தீய வழிகளில் செல்வத்தைச் செலவழிப்போர் துணை இருப்பது தீதே. எனவே, பெரியாரைப்பற்றிச் சொல்லும் பொழுது செல்வம் என்பது குறித்துச் சொல்ல வேண்டிய தேவையில்லை.

உரையாசிரியர்கள் அக்காலச் சூழலுக்கேற்ப அரசர்களை மையமாகக் கொண்டே விளக்கியுள்ளனர். ஆனால், ஆள்வோருக்கு மட்டுமல்ல, பிற நிலைகளிலும் எளிய வகையிலும் வாழ்வோருக்கும் உரியதே இக்குறள். தனியரின் தொழில், வணிகம், வாழ்க்கை முறை, பணி தொடர்பானவற்றிலும் சிக்கல்கள் வராமல் இருக்கவும் சிக்கல்கள் வரின் அவற்றைக் களையவும் வாழ்வில் முன்னேறவும் கல்வி, அறிவு, ஒழுக்கம் முதலியவற்றில் பெரியோராய் இருப்போரின் துணை வலிமையானதாகும்.

எனவே, வாழ்வில் நேரும் இன்னல்களையும் இடுக்கண்களையும் களைந்து உயர்ந்து வளர, சிறந்து விளங்க, நம்மைவிடப்

பெரியாரின் துணையைக் கொள்வதே

வலிமைகளுள் எல்லாம் வலிமையானதாகும்.

Thursday, June 12, 2025

குறள் கடலில் சில துளிகள் 29. – பெரியாரைப் பேணுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ         13 June 2025      கரமுதல


குறட் கடலிற் சில துளிகள் 29 . பெரியாரைப் பேணுக!

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.  

(திருவள்ளுவர்,  திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல்,  குறள் எண் ௪௱௪௰௩ – 443)

பதவுரை: அரியவற்றுள்-அருமையானவற்றுள், (அருமையான பேறுகளுள்); எல்லாம்-அனைத்தும்; அரிதே-அருமையானதே; பெரியாரை-பெருமையுடையவரை; பேணி-விரும்பி; நலன்பாராட்டி; உவப்பன செய்து; தமர்-தம்மவர்; தமக்கு நெருக்கமான உறவினர், தமக்குச் சிறந்தாராக; கொளல்-கொள்க.

பொழிப்புரை : பெரியோரையே விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக் கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம் அரிதான பெரும்பேறு ஆகும். (புலியூர்க் கேசிகன், திருக்குறள் – புதிய உரை)

மணக்குடவர், “பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை” என்கிறார்.

பரிப்பெருமாள், குறிப்புரையில் “பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரை.அவரைத் தேடிக் கூட்டுதல் அரிது என்றது.” என்கிறார்.

புரோகிதர் ஆரியச் சடங்குகளைச் செய்விப்பவர். இவர்களைத் துணையாகக் கொள்வதற்கான தேவை ஏன் வருகிறது? பல நிலைகளிலும் உள்ள பொதுமக்கள் பெரியாரைத் துணைக் கொள்ள வேண்டும். எனினும் உரையாசிரியர்கள் ஆள்வோர்க்கு முதன்மை கொடுத்து அரசர்க்குத் துணையாக இருப்பவரைக் கூறுகின்றனர்.  அவ்வாறு கூறும் பொழுது, பெரியாரைத் துணைக்கோடல் என்பது குறித்து விளக்கும் மணக்குடவர் அரசன் குற்றம் அற்றானாயினும், தன்னின் முதிர்ந்த அறிவுடையாரைத் துணையாகக் கொண்டு வினைசெய்ய வேண்டுதல் என்கிறார்.

பரிமேலழகர், அரசன், தீநெறி விலக்கி நன்னெறிச் செலுத்தும் பேரறிவுடையாரைத் தனக்குத் துணையாக் கோடல் என்று சொல்லுகிறார். அத்துடன் “பேரறிவுடையர் என்பவர், அரசர்க்கும் அங்கங்கட்கும் மானுடத் தெய்வக் குற்றங்கள் வாராமல் காத்தற்கு உரிய அமைச்சர் ,புரோகிதர்” என்று விளக்கவும் செய்கிறார்.

உரையாசிரியர்கள் தங்கள் காலத்தில் ஆரியம் ஆதிக்கம் செலுத்திய சூழலில் அல்லது தாங்கள் ஆரியத்திற்கு ஆட்பட்டுத் தேவையே இல்லாமல் ஆரியச்சடங்காளரை, அஃதாவது புரோகிதரை உரையில் சேர்த்தது தவறேயாகும். அவ்வாறு சேர்த்தது தவறு என்னும் பொழுது அமைச்சருக்கு இணையாகப் புரோகிதரைக் கூறுவது பெருந்தவறாகும்.

அரிதான செயல் என்பது எதுவாகும்?

பரிப்பெருமாள் “செய்தற்கரியன வெல்லாவற்றினும் செய்தலரிது” என்கிறார். பரிமேலழகர், “அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது” என்கிறார்.

அரிது என்பதை விளக்கும் பரிதி, “ஒரு மலையையெடுத்து ஒரு மலைமேலே வைத்தல். ஒரு கடுகிலே ஏழுகடலை அடக்கல். இதிலும் பெரியது” என்கிறார்.

காலிங்கர்,  “கல்வியும் கேள்வியும் அறிவுடைமையும் குற்றங் கடிதலும் பிறவும் ஆகிய செயற்கரிய எல்லாவற்றுள்ளும் பெரிதும் அரிது” என்கிறார்.

இத்தகைய அரிதான செயல்களாக ஆரியச்சடங்குகளையும் அவற்றைச் செய்விக்கும் புரோகிதரையும் கூறுவது தமிழ்நெறிக்கு எதிரான பெருங்கொடுமையாகும்.

துணையாகக் கொள்ள வேண்டிய பெரியாரை விளக்கும்போது, கல்வித்துறையில் சிறந்தவர்கள், படைத்துறையில் வல்லுநர்கள், அறிவியல் துறையில் ஆற்றலாளர்கள், இலக்கியத் துறையில் ஈடிணையற்றோர், வானியலில் வல்லவர்கள் அன்பிலும் பண்பிலும் தலை சிறந்தோர், நல்லாற்றுப்படுத்துவதில் வல்ல அமைச்சர்கள் முதலானவர்களைக் கூறாமல் அவ்வரிசையில் புரோகிதரைச் சேர்த்தது தவறு என உணர்வோம்.

ஆள்வோராயினும் வேறு நிலைகளில் வாழ்வோராயினும் குற்றங்குறையற்ற வாழ்க்கைக்கு நாம் என்றும்

பெரியாரைத் துணையாகக் கொள்வோம்!

Sunday, May 11, 2025

குறள் கடலில் சில துளிகள் 28. – துன்பம் வந்ததை நீக்கி, வருவதிலிருந்து காப்போரைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(குறள் கடலில் சில துளிகள் 27. அறமறிந்த அறிவு உடையவரைத் துணையாகக் கொள்க! – தொடர்ச்சி)

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.  

(திருவள்ளுவர்,  திருக்குறள், அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்,  குறள் எண்:௪௱௪௰௨ – 442)

பதவுரை: உற்ற-நேர்ந்த; நோய்-துன்பம்; நீக்கி-விலக்கி; உறாஅமை-வராத வண்ணம்; முன் – (வரும்)முன்னால்; காக்கும்-காப்பாற்றும்; பெற்றியார்-தன்மையுடையார், இயல்புடையர்; பேணி-நலன்பாராட்டி,; கொளல்-கொள்க.

பொழி்ப்புரை: வந்த துன்பம் நீக்கி, வர உள்ள துன்பத்திலிருந்து முன்னதாகவே காக்கும் பெரியோர் துணை கொள்ள வேண்டும்.

மணக்குடவர்: அரசர் தமக்குற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்பமுறாமல் முன்னே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக் கொள்க. பெற்றியாரென்று பொதுப்படக் கூறினமையால், இது மந்திரிகளைக் கூட்டுமாறு கூறிற்று.

பரிமேலழகர்: உற்ற நோய் நீக்கி – தெய்வத்தானாக மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கி ; உறாமை முற்காக்கும் பெற்றியார் – பின் அப்பெற்றியன வாராவண்ணம் முன் அறிந்து காக்கவல்ல தன்மையினையுடையாரை; பேணிக்கொளல் – அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க. (தெய்வத்தான் வரும் துன்பங்களாவன: மழையினது இன்மை மிகுதிகளானும், காற்று தீ, பிணி என்ற இவற்றானும் வருவன. அவை கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகளான் நீக்கப்படும். மக்களான் வரும் துன்பங்களாவன: பகைவர், கள்வர், கற்றறிந்தார், வினை செய்வார் என்றிவர்களான் வருவன. அவை சாம பேத தான தண்டங்கள் ஆகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனால் நீக்கப்படும். முற்காத்தலாவது: தெய்வத்தான் வருவனவற்றை உற்பாதங்களால் அறிந்து அச்சாந்திகளால் காத்தலும், மக்களான் வருவனவற்றை அவர் குணம், இங்கிதம், ஆகாரம், செயல் என்பனவற்றுள் அறிந்து, அவ்வுபாயங்களுள் ஒன்றால் காத்தலும் ஆம் ; ஆகவே புரோகிதரையும் அமைச்சரையும் கூறியவாறாயிற்று. இங்கிதம் – குறிப்பால் நிகழும் உறுப்பின் தொழில். ஆகாரம் – குறிப்பின்றி நிகழும் வேறுபாடு. உவப்பன – நன்கு மதித்தல் முதலியன.)

பரிமேலழகர் வான் வழி இயற்கை இடர்களை முன்கூட்டி அறிதல் என்றதும் தம் சாதிப்பற்றால் புரோகிதர் எனக் கூறிவிட்டார். வான் வழி இடர்களைக் கணித்து அறியும் வானியலறிஞர்களையும் நில நடுக்கம் போன்ற புவியியல் இடர்களை எதிர்நோக்கி அறியும் புவியியல் அறிஞர்களையுமே திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வறிவியலறிஞர்களின் துணை இருப்பின் வர உள்ள இடர்களை அறிந்து அவற்றைத் தடுக்கும் அல்லது ஏற்படும் துன்பங்களை மட்டுப்படுத்தவும் துன்பத்தைக் குறைக்கவும் முடியுமல்லவா? எனவேதான் திருவள்ளுவர் இத்தகையோரையும் உள்ளடக்கிப் பெற்றியார் பேணிக் கொளல் வேண்டும் என்றார்.

பரிப்பெருமாள்: அரசர்க்கு உற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்பமுறாமல் முன்பே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக் கொள்க. (நோய் = துன்பம்)

பரிதி: ஒரு விதனம் வருமுன்னே விதனம் வராமல் காத்து அப்படிக்கு விதனம் வந்தால் அந்த விதனத்தை நீக்கும் உபாயஞ் செய்யும்பெரியோரைப் பேணிக்கொள்வான். (விதனம் = துன்பம்)

காலிங்கர்: வேந்தரானவர் தாம் யாதானும் ஒருவழியால் உற்றது ஓர் இடர் உளராயின் மற்று அதனையும் துடைத்துப் பின் ஓர் இடர் உறாதவாறு முன்னுறத் தேர்ந்து காக்கும் பெரியோரைப் பேணித் துணையாக கொள்க.

சி இலக்குவனார்: தமக்கு வந்துள்ள துன்பத்தை நீக்கிப், பின் அவை தம்மை வந்து அடையாமல் முன் அறிந்து காப்பாற்றவல்ல இயல்பினை உடையாரை விரும்பித் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.

மழையின்மை, அதனால் ஏற்படும் வறட்சி, பெருமழை, அதனால் ஏற்படும் பெரு வெள்ளம்,  கடுங்காற்று, புயல், கொள்ளைநோய்/தொற்றுநோய், நிலநடுக்கம், நிலச்சரிவு, கடல்கோள் முதலியன இயற்கைப் பேரிடர்கள் ஆகும். இவை வருவதை உணர்ந்து தடுக்க முயன்றாலும் இவற்றால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க இயலாது. ஆனால் அவற்றை மட்டுப்படுத்த இயலும்.  அவற்றால் பாதிக்கப்பட்டோர்க்குத் துயர் தணிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

இயற்கையாலும் மனிதர்களாலும் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் ஏற்படும் தீங்குகளிலிருந்து காக்க வல்ல பேரிடர் மேலாண்மையர்கள் துணை தேவை. இவற்றுக்கான நோயியல் அறிஞர்கள், போரியல் வலலுநர்கள், வேளாண் அறிஞர்கள், தொழிற்துறை வினைத்திறனாளர்கள் முதலியவர்கள் துணை இருந்தால்தான் இத்தகைய இடர்களிலிருந்து மக்களைக் காக்க இயலும். இப்போது பாக்கித்தான் ஆதரவாளர்களால் ஏற்பட்ட குண்டு வீச்சுக் கொலைகள், அவ்வப்பொழுது கலகக்காரர்களும் கொள்ளைக்காரர்களும் காம வெறியர்களும் போலிச் சாமியார்களும் மூடநம்பிக்கை பரப்புநர்களும் உண்டாக்கும் இன்னல்கள் மனிதர்களால் உண்டாகும் தீங்குகளாகும். ஊழல் அதிகாரிகளாலும் பணியாளர்களாலும் ஏற்படும் அவர்களின் செய்ய வேண்டிய செய்கைகளைச் செய்யாப் போக்குகளையும் செல்வமும் செல்வாக்கும் உடையர்களுக்கு அடிபணிந்து பொதுமக்களுக்கு இடர்கள் ஏற்படுத்துவதையும் நாம் மனிதர்களால் ஏற்படும் தீங்குகளாகக் கருதலாம். சாலைப் பணிகளில் குறைபாடு, நோய்த்தடுப்பில் உரிய செயற்பாடுகளின்மை, விதிமுறைகள் மீறி ஊர்திகளுக்கு உரிமம் வழங்கல், கட்டடங்களுக்கு இசைவு தருதல், கல்வி நிறுவனங்களுக்கு இணைப்பு தருதல் போன்ற பலவற்றால் ஏற்படும் நேர்ச்சிகள்(விபத்துகள்), இடிபாடுகள், தரமற்ற கல்வி முதலியனவும் மனிதர்களால் ஏற்படும் இடர்களே. எனவே, பெற்றியார் என்பதில் நேர்மையான செயற்பாடு உடையவர்களின் துணையையும் உள்ளடக்கிக் கொண்டு பொருள் காண வேண்டும்.

திருவள்ளுவர் வழியில் கம்பரும் இதனைப் பின்வரும் பாடலில் விளக்குகிறார்.

உற்றது கொண்டு, மேல்வந்து

     உறுபொருள் உணரும் கோளார் ;

மற்றுஅது வினையின் வந்தது

     ஆயினும், மாற்றல் ஆற்றும்

பெற்றியர் ; பிறப்பின் மேன்மைப்

     பெரியவர் ; அரிய நூலும்

கற்றவர் ; மானம் நோக்கின்,

     கவரிமா அனைய நீரார்.

(கம்பராமாயணம், அயோத்தியா கண்டம், மந்திரப் படலம், 1409)

தொடர்பான அரிய துறைநூல்களைக் கற்றறிந்தவர் களையும் கம்பர் குறிப்பிடுகிறார். நூலறிவும் பட்டறிவும் இருந்தால்தான் துன்பம் துடைக்கவும் துன்பத்திலிருந்து காக்கவும் இயலும். அதுபோல் கவரிமா போன்ற மான உணர்வுள்ளவர்களையும் குறிப்பிடுகிறார். அவர்கள்தாமே குற்றம் வராமல் விழிப்புடன் செயற்படும் உணர்வுடையவர்களாக இருப்பார்கள். (கவரிமா என்பது கவரிமான் அல்ல. நீண்ட மயிர்க்கற்றைகளைக் கொண்ட இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு விலங்கினம் என்பதற்கு இப்பாடலும் ஒரு சான்றாகும்.)

பொதுவாக உரையாசிரியர்கள், நாடு, அரசர், அரசு, அரசாட்சி என்ற கண்ணோட்டத்திலேயே உரை எழுதியுள்ளனர். இக்குறள் தனியருக்கும் பொருந்தும். ஆட்சிப்பொறுப்பில் இல்லாதவர்களும் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்களிலிருந்து நீங்கச் செய்யவும் வந்த துன்பங்களைத் தணிக்கவும் நீக்கவும் இனி வரும் துயரங்களிலிருந்து எதிர்நோக்கிக் காக்கவும் வல்ல பெரியோர் துணை கொள்ள வேண்டும். குடும்பச் சிக்கல்கள், பணிச்சிக்கல்கள், தொழில் சிக்கல்கள் முதலானவற்றில் துணையாக வருவோர் துணையை ஒவ்வொருவரும் கொள்ள வேண்டும்.

எனவே, நல்லாட்சிக்கும் நல் வாழ்விற்கும்

துன்பத்தில் நெறிப்படுத்தும் பெரியோர் துணை கொள்க!

Sunday, May 4, 2025

குறள் கடலில் சில துளிகள் 27. அறமறிந்த அறிவு உடையவரைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(குறள் கடலில் சில துளிகள் 26. விருப்பத்தைப் பகைவர் அறியப் புலப்படுத்தாதே! – தொடர்ச்சி)

(திருவள்ளுவர்,  திருக்குறள், அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்: ௪௱௪௰௧ – 441)

பதவுரை: அறன்-அறவழி; அறிந்து-தெரிந்து; மூத்த-முதிர்ந்த; அறிவுடையார்-அறிவுடையவர்; கேண்மை-உறவு, நட்பு; திறன்-கூறுபாடு; அறிந்து-தெரிந்து; தேர்ந்து-ஆராய்ந்து; கொளல்-கொள்க.

பொழிப்பு:

அறநெறியை அறிந்து முதிர்ந்த அறிவினையுடையாரது நட்பை அதன் ஆற்றலை அறிந்து, ஆராய்ந்து அடைய வேண்டும்.( சி.இலக்குவனார்)

“அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க. இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.” என்கிறார் மணக்குடவர்

இங்கே புரோகிதர் எங்கே வந்தார் என்று தெரியவில்லை. மணக்குடவர் உள்ளத்தில் ஆரியச் சிந்தனை ஆதிக்கம் செலுத்தியதால் புரோகிதர் உள்ளே நுழைந்து விட்டார். திருவள்ளுவர் எங்கும் சடங்கு பற்றியும் அதனைச் செய்பவர் பற்றியும் கூறாத பொழுது இங்கே எங்ஙனம் சடங்கு செய்வோர் துணை பெற வேண்டும் என்றிருப்பார். எனவே, இவ்விளக்கம் தவறாகும்.

“அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க” என விளக்குகிறார் பரிமேலழகர்.

பரிமேலழகர் குறிப்புரை: அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், ‘அறம் அறிந்து’ என்றார். மூத்தல் – அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். [உய்த்துணர்வானும்- உலக நடையை ஆராய்தலானும்; சீலம் – ஒழுக்கம்]

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.   (௪௱௰௫ – 415)

என்கிறார் திருவள்ளுவர். எனவே, பரிமேலழகர் அறிவுடையார் கேண்மை என்பதற்கு ஒழுக்கத்தையும் சேர்த்துள்ளது சரியே. 

செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்.   (௬௱௩௰௭ – 637)

என உலக இயல்பறிந்து நடப்போரே துணையாக  இருக்க வேண்டும் என்பார்.

எனவே, உலக இயல்பையும் அறிந்தவர்களாகவும் துணையாகக் கொள்வோர்  இருத்தல் வேண்டும் என்பதும் சரியே.

ஆதலின், நூலறிவாலும் பட்டறிவாலும் முதிர்ந்த அறிவு உடையவரது துணையை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அறிவுடையார் கூறிய எல்லையில் இருத்தல்;அன்பால் நீங்காமல் இருத்தல் எனவும் பரிமேலழகர் விளக்குகிறார்.

இப்பண்புகள் உடையவர்களே என்றும் நீங்காமல் துணை நின்று வழிகாட்டுவர்.

எனினும் இவ்வறிவுரை அரசனுக்கு மட்டுமல்ல. நல்வழியில் நடக்க விரும்பும் ஒவ்வொருவருக்குமே யாகும்.

வாழ்வியல் அறநூலான திருக்குறள் அறத்தை வலியுறுத்தும்போது நமக்குத் துணையாகக் கொள்ள வேண்டியவரும் அறவாணராக இருத்தல் வேண்டும் எனத் திருவள்ளுவர் வலியுறுத்துவது இயல்புதானே. எனவேதான் முதலிலேயே அறனறிந்தவரைத் துணையாகக் கொள்ள வேண்டும் என்று சொல்லி விடுகிறார்.

அறிவுடையார் துணை எப்போது தேவைப்படுகிறது? ஒரு சிக்கல் வரும் பொழுது அதனைக் களைவதற்கு அறிவு தேவைப்படும். ஒரு செயலைத் தொடங்கும் பொழுது திட்டமிடுவதற்கும் செயல் முறைக்கும் அறிவுரை தேவைப்படும். ஒரு தொழிலைத் தொடங்கும் பொழுது தொழில் தொடர்பான நூலறிவும் பட்டறிவும் உடைய முதிர்ந்த அறிவுடையவரின் வழிகாட்டல் தேவைப்படும். எனவேதான் திருவள்ளுவர் அறிவுடையார் கேண்மையைத் திறனறிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

எனவே நாம்

அறனறிந்த திறனாளரைத் துணையாகக் கொள்வோம்!

Monday, April 28, 2025

குறள் கடலில் சில துளிகள் . 26. விருப்பத்தைப் பகைவர் அறியப் புலப்படுத்தாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்




(குறள் கடலில் சில துளிகள் . 25. உன்னையே வியந்து கொள்ளாதே! – தொடர்ச்சி)

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்

(திருவள்ளுவர்,  திருக்குறள், அதிகாரம்:குற்றங்கடிதல் குறள் எண்: ௪௱௪௰ – 440)

பதவுரை: காதல-காதலித்த பொருள்கள்; விரும்புகின்ற பொருள்கள்; காதல்-விருப்பம்; அறியாமை-தெரியாமல்; உய்க்கிற்பின்-செலுத்த வல்லனாயின்.

பொழிப்பு:

தன்விருப்பம் வெளிவராவாறு அடக்கி வாழ்ந்தால், பகைப்பார் தோற்பார் (பேரா.வெ.அரங்கராசன்).

தனக்கு விருப்பமானவற்றைப் பிறர் அறியாதபடி அடக்கி வைத்திருப்பவனிடம் பகைவரின் வஞ்சகச் செயல்கள் பலிக்காது.

மணக்குடவர் உரை: காதலிக்கப்பட்ட யாவற்றின் மேலுஞ் செல்லுங் காதலைப் பிறரறியாமற் செலுத்துவனாயின் பகைவர் இவனைக் கொல்லுமாறு சிந்திக்கும் சிந்தனை இவன் மாட்டுச் செல்லாது, அயலாம். நூலென்பது அவர் கற்ற கல்வி.

பரிமேலழகர் உரை: காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் – தான் காதலித்த பொருள்களை அவர் அக்காதல் அறியாமல் அனுபவிக்க வல்லனாயின், ஏதிலார் நூல் ஏதில் – பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம். (அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பர் ஆகலின், அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம், வெகுளி, உவகை என்பன முற்றக்கடியும் குற்றம் அன்மையின், இதனான் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறி, ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.)

மு. கருணாநிதி உரை: தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்  (௪௱௪௰)

இரா சாரங்கபாணி உரை: தாம் விரும்பும் பொருள்களின் மேலுள்ள விருப்பத்தைப் பிறர் அறிய முடியாதவாறு மனத்தை அடக்கிச் செலுத்துவானாயின், பகை வந்து அவனை வஞ்சிக்க நினைக்கும் எண்ணம் பழுதுபடும்.

காதல என்ற சொல்லுக்கு விரும்பினவற்றை என்பது பொருள்.

காதல் என்பது விருப்பம் என்ற பொருள் தரும்.

அறியாமை என்ற சொல் அறியாவண்ணம் என்று பொருள்படும்.

உய்க்கிற்பின் என்பதற்கு செலுத்த வல்லராயின் என்பது பொருள்.

ஏதில என்பது பயனற்றது என்னும் பொருள் கொடுக்கும்.

ஏதிலர் என்ற சொல்லுக்குப் அயலர் அல்லது பகைவர் என்பது பொருள்.

நூல் என்ற சொல்லுக்கு இங்கு சிந்தனை அல்லது சூழ்ச்சி எனக் கொள்வர்.” (குறள்.திறன்)

ஒருவருக்கு ஒரு பொருளின்மேல் அல்லது உணவின் மேல் அல்லது இடத்தின்மேல் அல்லது ஆளின் மேல் விருப்பம் இருப்பின் அதனைப் பிறரறியச் செய்தால் அவ்விருப்பத்தை நுகரும் பொழுது உணவில் நஞ்சு கலந்தோ குறிப்பிட்ட பொருளை நுகர அல்லது இடத்திற்கு வரும் பொழுது தீங்கு இழைத்தோ அழிவிற்கு வழி வகுப்பர். ஆதலின் தன் விருப்பத்தைக் கமுக்கமாகவே வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றார். பொதுவாக ஆட்சித்தலைவருக்குத் தகுந்த குறளாக இருந்தாலும் தனியாளுக்கும் பொருந்தக் கூடியதே. நம் தனிப்பட்ட செய்திகளைப் பகைவர் அறியாமல் கமுக்கமாக வைத்திருக்க வேண்டும். ஆனால், பகைவர் யார் என்று அறியாமல் உட்பகைவரும் மறைமுகப் பகைவரும் இருப்பர். எனவேதான், பிறர் யாரும் அறியாமல் வைத்திருப்பின் அதில் பகைவரும் அடங்குவர் அல்லவா? அவரும் அறிய மாட்டார். ஏதிலார் என்றால் பகைவர் என்றும் பொருள். பிறர் என்றும் பொருள். எனவேதான் பிறர் அறியாமல் விருப்பத்தை நுகர வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் காதல் பொருட்கள் எவை எவை என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆதலின் அவர் எல்லாப் பொருள்கள் மேலும் விருப்பத்தைப் பிறரறியாமல் கொள்ள வேண்டும் என்று சொன்னதாகத்தான் கருத வேண்டும்.  காமக் காதலையே கூறினார் என்றும், ஆசை நாயகியரிடம் செல்வதைக் குறிப்பிடுகிறார் என்றும் இவ்வாறான காம ஆசையின் அடிப்படையில் கூறுகிறார் என்றும் சிலர் சொல்வது பொருந்தாது. காதல் என்பதைக் காமக் காதலாக் கருதாது விருப்பம் என்றேதான் கொள்ள வேண்டும். பகைவர் அறியா வண்ணம் விருப்பத்தை அடக்கமாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார் என்பதே பொருத்தமாகும்.

எனவே,

உன் விருப்பத்தைப் பிறர் அறியுமாறு வெளிப்படுத்தாதே!

Followers

Blog Archive