Showing posts with label சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?. Show all posts
Showing posts with label சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?. Show all posts

Saturday, October 25, 2025

சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 3: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 2: தொடர்ச்சி)

மனுநூல் ,அருத்த சாத்திரம், சுக்கிர நீதி போன்ற நூல்கள் எல்லாம் மக்களைப் பாகுபாடுப்படுத்தக் கூடியவை. வருண வேறுபாடுகளைப் புகுத்துபவை ஆக உள்ள இந்த இலக்கியங்களுக்குப் பணம் கொடுக்கிறவன்தான் வருண வேறுபாட்டுக்கு உயிர் ஊட்டுகிறவன்.” பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருவள்ளுவத்தைப் போற்றுகிற நாம் இந்த இரண்டு இலக்கியங்களுக்கு – இலக்கியங்கள் என்று சொல்லக்கூடாது இழிகாம நூல்களுக்கு – அஃதாவது ஆபாச நூல்களுக்கு –  நாம் முதன்மைத்துவம் கொடுக்கலாமா? ஆனால் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம் நாம், இதன் காரணம் என்ன? நமக்கு உண்மையிலேயே இதைப் பற்றி நடைமுறை அறிவோ திட்டமோ இல்லை. படித்திருக்கலாம்; பெரிய பெரிய பட்டங்கள் பெற்றிருக்கலாம்; ஆனாலும் கூட சமற்கிருதத்தை எந்த அளவிலெல்லாம் திணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்குத் தெரியவில்லை.

நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இந்தியாவிலேயே மிகுதியான சமூக நலத்திட்டங்கள் தமிழ்நாட்டில்தான் நிறைவேற்றப்படுகின்றன. இவற்றை நிறைவேற்றியவர்களுள் முன்னோடியாக நாம் கலைஞர் அவர்களைத்தான் குறிப்பிட வேண்டும்.  திமுகவும் சரி அதிமுகவும் சரி, தமிழ் மொழிக்கும் சேர்த்து பல்வேறு நலத் திட்டங்களைத் செயற்படுத்திக் கொண்டு இருக்கின்றன. பாராட்டக்கூடியதுதான், ஆனாலும் கூட அவை முழுமையாக இல்லை. அடுத்தபடியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஓர் ஒப்பீடு கூடப் பார்ப்போம். சில திட்டங்களுக்குத் தமிழ்நாடு அரசு ஒதுக்கக்கூடிய நிதி மிகக் குறைவாகவும் ஒன்றிய அரசு அளிக்கக் கூடியது கூடுதலாகவும் உள்ளன. அதில் ஒன்றுதான் நலிவுற்ற கலைஞர்களுக்குத் திங்கள் தோறும் தமிழ்நாடு அரசு 3000 உரூபாயும் 100 உரூபாய் மருத்துவப் படியும் தருகிறது. ஒன்றிய அரசு திங்கள் தோறும் 6 ஆயிரம் உரூபாய் தருகிறார்கள்.இவ்வாறு பல திட்டங்கள் பார்க்கலாம்.

சமற்கிருதம் முன்பே தொடங்கப்பட்டது என்று சொன்னேன் அல்லவா? 1957 இலேயே சமற்கிருத ஆணையம் பரிந்துரைத்து, சமற்கிருத வாரியம் ஒன்றை ஒன்றிய அரசு அமைத்தது. இதற்கு இராசுட்டிரிய சமற்கிருத சன்சங்கு என்று பெயரிட்டார்கள். பின்பு 1960 ஆவது சட்டத்தில் தன்னாட்சி அமைப்பாக மாற்றி அட்டோபர் 15, 1970 இல் நிறுவினார்கள். இஃது இந்திய நாடாளுமன்றத்தின் நிறுவப்பட்ட சட்டத்தின் மூலம் ஏப்பிரல் 2020இல் மத்திய சமற்கிருதப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்ல நாளடைவில் சமற்கிருதக் கல்வி நிறுவனங்கள் எல்லாம் கருது நிலை பல்கலைக்கழகங்களாக (Deemed University)  மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் முதன்மையான தமிழ்க் கல்லூரிகள் இருக்கின்றன. மதுரையில் உள்ள செந்தமிழ்க் கல்லூரி, செம்மொழிக்காகத் தீர்மானம் இயற்றிய தஞ்சாவூர் கரந்தைக் கல்லூரி, காரைக்குடி இராமசாமி கல்லூரி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றலாமே, தமிழ்நாடு அரசு நிதி உதவி கொடுக்கலாம் ஒன்றிய அரசிடமும் கேட்கலாம்.

செம்மொழி நிறுவனத்தின் தலைவர் யார்? தமிழ்நாட்டின் முதல்வர் தான். அந்த முறையிலும் கூட பல்வேறு நிதி உதவிகளைக் கேட்கலாம் எந்த ஒரு திட்டமும் நாம் கொடுப்பது கிடையாது.ஏதோ கருத்தரங்குகள் நடத்துவதுதான். கருத்தரங்குகளும் பாதி சரியாக நடக்காது. ஏனென்றால் கருத்தரங்கிலே தமிழுக்கு எதிராகப் பேசுவார்கள். சங்க இலக்கியம் பற்றிய கருத்தரங்கிலே பேசுபவர் சங்க இலக்கியத்தைப் பிற்பட்டதாகப் பேசிக்கொண்டு இருப்பார். இதுதான் கொடுமை. ஆக இப்படிப்பட்ட மோசமான கருத்தரங்கு தான் நடந்து கொண்டு இருக்கிறது. அவ்வாறு இல்லாமல் உண்மையான ஆய்வுகளுக்குச் செலவழிக்கலாம் அல்லவா? பல திட்டங்கள் தீட்டித் தரலாம் அல்லவா? நாம் இத்தகைய திட்டங்களைத் தீட்டித் தந்துவிட்டு இத்தகைய திட்டங்களுக்கு ஒன்றிய அரசு பணம் தரவில்லை என்று கண்டித்தால் பொருளுண்டு. இவர்கள் ஒன்றிய அரசுக்கு மடல் எழுதினாலே கண்டு கொள்வதில்லை. எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. எத்தனையோ மீனவர் படுகொலைக்கு மடல் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் ஒன்றிய அரசிற்குக் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், கண்டனத்தைப்பற்றி ஒன்றிய அரசு கவலைப்படாது. ஏன்? இஃது ஒரு பொம்மலாட்டம் என்று வேடிக்கையாக விட்டு விட்டுச் சென்று விடுவார்கள். இதனாலெல்லாம் ஒன்றும் பயன் கிடையாது.

இவர்கள் சொல்வார்கள்; பிறகு மறந்து விடுவார்கள்; அதற்குள் அடுத்த சிக்கல் வந்துவிடும்; இவ்வாறு அடுத்தடுத்த சிக்கலுக்குத் தாவி விடுவார்கள்; இந்த நம்பிக்கையில் தமிழ்நாட்டு அரசின் கவலை குறித்து  ஒன்றிய அரசினர் கவலைப்பட மாட்டார்கள்.

(தொடரும்)

13.07.2025

Tuesday, October 14, 2025

சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 2: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 1 தொடர்ச்சி)

நாம் செய்ய வேண்டியது என்னவாக இருக்க வேண்டும்? தமிழுக்குத் திட்டங்கள் தர வேண்டும். தரவில்லையே! ஒன்றும் செய்யவே இல்லையே! நமக்கு ஒன்றும் வேண்டா, செம்மொழி அறிவிக்கப்பட்ட பிறகு செம்மொழி விருது கொடுத்தார்கள். யாருக்கு? இளைய அறிஞர்களுக்கு ஆண்டுக்கு ஐவருக்குக் கொடுத்தார்கள். (அதிலும் சில ஆண்டுகள் குறைவாகக் கொடுத்தார்கள்.)

ஒவ்வோர் ஆண்டும்  சமற்கிருத அறிஞர்கள் 15 பேர், அரபி அறிஞர்கள் 3 பேர், பெருசியன் அறிஞர்கள் 3 பேர், பாலி/பிராகிருத அறிஞர் ஒருவர் என 22 அறிஞர்களுக்குக் குடியரசுத் தலைவர் விருது இந்திய விடுதலை நாளின் பொழுது வழங்கப்படுகிறது. இவ் விருதானது விருது பெற்றவர்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் 50,000 உரூபாய் பரிசுத்தொகை வழங்கும் சிறப்பிற்குரியதாகும்.

இளையவர்களுக்குத் தருவது ஒரு முறை விருது( ஒன் டைம் அவார்டு). மூத்தவர்களுக்குத் தருவது வாழ்நாள் முழுமைக்குமான ஆண்டு தோறுமானது (யியர்லி அவார்டு).

 ஆண்டு தோறும் தரக்கூடிய வாணாள்  விருது தமிழில் இதுவரை தரப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழுக்குச் செம்மொழி அறிந்தேற்பு தந்த பிறகுதான் சமற்கிருதத்திற்கு அறிந்தேற்பு தந்தார்கள் பாலி, பிராகிருதத்திற்கும் 2004 இல் கொடுத்துவிட்டார்கள் எல்லாவற்றிற்கும் கொடுத்து விட்டார்கள் கோயிலிலே வருபவர்களுக்கெல்லாம் சுண்டல் தருவது போன்று “இந்தா நீ வாங்கிக்கோ! நீ வாங்கிக்கோ! ” என்று  செம்மொழி அறிந்தேற்பு கொடுத்துவிட்டார்கள். இது மிகவும் தவறானது எல்லாம் செம்மொழியாக இருக்கலாம். ஆனால் தமிழ் ஒன்றுதான் உலகத்திலேயே உயர்தனிச் செம்மொழி, வேறு எந்த மொழியும் உயர் தனிச் செம்மொழி அல்ல. ஆகவே உயர் தனிச் செம்மொழி என்ற தகுதியைத் தமிழுக்குக் கொடுத்து கூடுதல் நிதி ஒதுக்குமாறு கேட்டிருக்க வேண்டும் .ஆனால் கேட்கவில்லை நாம். அது மட்டும் அல்ல. சமற்கிருதம் ஒரு முழுமையான மொழி அல்ல பாலி பிராகிருதம் தமிழும் கலந்த சொற்கலவைதான். தவறுதலாகச் சமற்கிருதத்தில் இருந்து பிராகிருதம் வந்தது என்பார்கள். பிராகிருதம் என்பது இயல்பான பேச்சு மொழி. சமற்கிருதம் செய்யப்பட்ட மொழி. இயல்பான பேச்சிலிருந்து செய்யப்பட்டது தான் சமற்கிருதம் அப்படி இருக்கும் போது பிராகிருதம் மூத்ததாக இருக்குமா சமற்கிருதம் மூத்ததாக இருக்குமா?  

சமற்கிருதப் பேராசிரியர் சுகுமாரி(பாட்டார்சார்)எழுதிய சமற்கிருதச் செவ்விலக்கிய வரலாறு(History of Classical Sanskrit Literature. 1993)  நூலிலேயே சொல்கிறார் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? சமற்கிருத இலக்கியங்கள் பேரளவின என்று காட்டுவதற்காகப் பாலி மொழி நூல்களையும், பிராகிருத மொழி நூல்களையும் மொழி பெயர்த்துக் கொண்டு அல்லது அவற்றின் அப்பட்டமான தழுவல்களையும் எழுதி வைத்துக்கொண்டு, நூல்களாக இயற்றிவிட்டு அவையெல்லாம் சமற்கிருத நூல்கள் என்று பொய்யான வரலாற்றை உருவாக்கி வைக்கிறார்கள். தமிழ் அறிஞர்களின் தமிழ் இலக்கியங்களை அழித்துவிட்டு எவ்வாறு சமற்கிருதம் தனது நூல்களாகக் காட்டுகிறதோ அதேபோன்று வடக்கே செய்து இருக்கிறார்கள். ஆக இத்தகைய ஒரு பொய்யான சமற்கிருதத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவை என்ன?

நாம் என்ன சொல்ல வேண்டும். நமக்கு அஃதாவது இப்போது அரசு அறிவித்தார்களே பத்தாண்டு என்று, இப்போது குதிக்கிறார்கள் அல்லவா? எண்ணிப் பாருங்கள். பத்தாண்டு என்று சொல்லி இன்று கேள்வி கேட்பவர்கள் எங்கு சென்றார்கள். இன்று கூக்குரல் இடுபவர்கள் எங்கு? சென்றார்கள். ஆண்டுதோறும் அறிவித்துக் கொண்டு தானே இருந்தார்கள் ஏன் அப்பொழுது கேட்கவில்லை? ஒன்றிய அரசு ஆட்சிப் பொறுப்பில் தமிழர் கட்சிகள் இருந்தனவே, அப்போது என்ன செய்தார்கள்? அவர்கள் பேசுகையிலே அந்த நாடாளுமன்ற  அவையிலேயே அறிக்கை கொடுக்கிறார்கள் அல்லவா? எதெதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள் என்று பார்த்தால் தெரியுமே, அப்பொழுதெல்லாம்  ஏன் கேட்கத் தெரியவில்லை? இவ்வாறு பல்வேறு வாய்ப்புகளையும் விட்டுவிட்டு இப்பொழுது ஏதோ புதிதாகக் கொடுப்பது போல் கேட்கிறார்கள். அதுதான் கொடுமை. ஏதேனும் சமற்கிருதம் தொடர்பான அறிவிப்பு /இந்தி தொடர்பான அறிவிப்பு வந்த பிறகு அப்பொழுது தான் வந்து குதிகுதியென்று குதிப்பார்களே தவிர ஆண்டுதோறும் நடக்கும் இயல்பான ஒன்று என்பதை மறந்து விடுகிறார்களா அல்லது  மறைக்கிறார்களா எனத் தெரியவில்லை. ஆக ஆண்டுதோறும் விட்டு விட்டு பத்தாண்டுகள் போன பத்தாண்டுகள் அதற்கு முந்தைய 10 ஆண்டுகள் முந்தின ஆண்டு தொடர்ச்சியாகப் பத்தாண்டு இதெல்லாம் ஆங்கிலேயர்களிமிருந்து விடுதலைக்கு முன்பிருந்தே தொடர்ந்து நடந்து வந்த அநீதிகள் இவையெல்லாம், இந்தியா விடுதலை அடைந்து மிகுதியாக வந்துவிட்டது.

பேராய கட்சியான காங்கிரசில் தொடங்கி தொடர்ந்து கொண்டே இருக்கிறது .ஆக, சமற்கிருத நிதி ஒதுக்கீடு என்பது இங்கே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அப்பொழுதெல்லாம் இந்தக் கட்சிகள் எங்கே தூங்கிக் கொண்டு இருந்தன? ஒன்று இவர்கள் தெரிந்தே செய்கிறார்கள் என்றால் இவர்களுக்கு எதையும் சொல்லத் தகுதி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பிறரது முதுகிலே உள்ள அழுக்கைச் சுட்டிக்காட்டுகிற நாம், சுட்டிக் காட்டிய கைகளில் மண்டிக் கிடக்கிற அழுக்கை நாம் பார்க்க வேண்டும். நாம் தமிழுக்காக என்ன செய்தோம் என்று பார்க்க வேண்டும் .அப்படிப் பார்க்கும் பொழுது இப்பொழுது நான் பல திட்டங்களைச் சொன்னேன் அல்லவா, அதை விடப் பல பெரிய திட்டங்கள் இருக்கின்றன. திட்டங்கள் மட்டுமல்ல. எதற்காகச் சொல்கிறேன் தெரியுமா? சமற்கிருதம் தொன்மையான மொழி என்பது பொய், பிற மொழிகளுக்குச் சமற்கிருதம் தாய் மொழி என்பதும் பொய், சமற்கிருதம் தேவ மொழி என்பதும் பொய். இவ்வாறு பொய்களைப் பரப்பிக்கொண்டு பொய்யான தகவல்களுக்காக – அத்தகவல்களின் அடிப்படையிலான திட்டங்களுக்காக –  நிதி ஒதுக்கீடு வழங்குகிறார்கள்.

13.07.2025

Sunday, October 5, 2025

சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- இலக்குவனார் திருவள்ளுவன்

 




எழுத்தைக் காப்போம்!

மொழியைக் காப்போம்!

இனத்தைக் காப்போம்!

அன்புமிகு சான்றோர் பேரவை உறுப்பினர்களுக்கும் நிகழ்ச்சியினை நேரடியாக கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் இப்பதிவொலி வழியாக கேட்க இருப்பவர்களுக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அறிமுக உரையாற்றி இந்நிகழ்ச்சியினை எனக்கு அளித்த அரவிந்தன் அவர்களுக்கும் என் வணக்கமும் நன்றியும்.

தலைப்பைக் கேட்டுச் சிலருக்கு ஆனா உரூனா ஐயாவுடைய தமிழ்ச் சான்றோர் பேரவை இந்த தலைப்பிலா நிகழ்ச்சி நடத்துகிறது என்று எண்ணலாம். “சமற்கிருதத்திற்கு மிகக் கூடுதல் நிதி ஒதுக்கீடும் பிற மொழிகளுக்கு மிகக் குறைந்த  நிதி ஒதுக்கீடும்” என்றுதான் பேசச் சொன்னார்கள். இரண்டு்ம் ஒன்றுதான். என்று இந்த பேச்சைக் கேட்ட பின்பு உங்களுக்குப் புரியும்.

நிகழ்ச்சிக்கு ஏன் இந்த தலைப்பு என்பதை முதலில் பார்ப்போம்.

2014முதல் 2025 வரையில் ஒன்றிய அரசு சமற்கிருதத்திற்கு ரூ.2532.59 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தமிழ் மொழிக்கு ரூ.113.48 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது .தெலுங்கு ,மலையாளம், கன்னடம், ஒரியா ஆகிய மொழிகளுக்கு சேர்த்து உரூ 34 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் இந்த ஐந்து மொழிகளுக்கு ஒதுக்கி உள்ள தொகையைக் காட்டிலும், மிகக் குறைந்த அளவே பேசப்படும் சமற்கிருத மொழி மேம்பாட்டிற்கு 17 மடங்கு அதிகம் ஒதுக்கி ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்துள்ளது வெளிப்படையாக தெரிகிறது என்றும் , சமற்கிருதத்திற்கு அதிக நிதி மற்ற மொழிகளுக்கு அநீதி என்றும், போலி பாசம் தமிழ் மீது பணமெல்லாம் சமற்கிருதத்திற்கு என்றும் ,சமற்கிருதத்திற்கு கோடிக்கணக்கில், தமிழ் முதலான தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டும் என்றும், யாருமே பேசாத சமற்கிருதத்திற்கு ஏன் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள் என்றும் நாடெங்கும் எதிர்ப்புக் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

சமற்கிருதம் எந்த மாநிலத்திலும் பேசப்படுவது இல்லை. கோவிலில் அர்ச்சனை செய்பவர்கள் தான் அதை பயன்படுத்துகிறார்கள் .அதற்காக இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவை என்ன என்றும், இந்திய மொழிகளுக்குக் குறைந்த அளவிலே ஒதுக்கப்படுகிற நிலையிலேயே, 61℅ சமற்கிருதத்திற்கா எனத் தமிழ்நாட்டில் கண்டன குரல் எழுந்துள்ளன .வழக்கம் போல் எழுந்ததும் அடங்கிவிட்டன. இவ்வாறு பேசுபவர்கள் அறிந்தே மக்களை ஏமாற்றும் வகையில் பேசுகிறார்களா அல்லது அறியாமல் பேசுகிறார்களா எனத் தெரியவில்லை. ஏனெனில். சமற்கிருதத்திற்கு நிதி ஒதுக்கீடு ஏதோ செப்பு வைத்து விளையாடுவதற்காகக் கொடுக்கப்படவில்லை.

இந்தியாவில் சமற்கிருதத்திற்கு 18 பல்கலைக்கழகங்கள் உள்ளன நூற்றுக்கணக்கிலான சமற்கிருதக் கல்வி நிறுவனங்கள் உள்ளன சமற்கிருத இயக்கங்கள் பல்வேறு உள்ளன.

அகில பாரத வித்தியா பரிசத்து

வித்தியா பாரதி

சிட்சா சமற்கிருதி

அகில பாரத இதிகாச சங்கலன் யோசனா

சமற்கிருத பாரதி

விஞ்ஞான பாரதி

அகில பாரதிய சாகித்திய பரீட்சத்து

சிக்குசத பச்சாவோ அந்தோலன்

அகில பாரதிய இராசுட்ரிய சமற்கிருத மகா சங்கம்

சன்சுகார் பாரதி

பாரதிய சிக்குசன் மண்டல்

எனப் பல்வேறு கல்வியகங்கள் உள்ளன. இவற்றின் நோக்கங்கள் என்னவாக இருக்கின்றன?

பொதுவாகவே சமற்கிருதத்திற்குப் பல்வேறு பல்கலைக்கழகங்கள் நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்போது அறிவித்த அமைப்புகளும் இன்னும் சில அமைப்புகளும் உள்ளன. இதன் அடிப்படை நோக்கம் என்ன? மரபு வழியிலான சமற்கிருதப் பாடசாலைகள், சமற்கிருத மகா வித்தியாலயங்கள் சமற்கிருத ஆசிரியர்களுக்கான நிதி உதவி அளித்தல், பரம்பரையான சமற்கிருதப் பாடசாலைகள் மகா வித்தியாலங்களில் நவீன பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கான நிதி உதவி அளித்தல், மாநில அரசு பள்ளிகளைச் சேர்ந்த இடைநிலை உயர்நிலைப் பள்ளிகளில் சமற்கிருத ஆசிரியர்களுக்கான நிதி உதவி அளித்தல், குரு சீடர் பரம்பரை நிறுவனங்களில் சமற்கிருத ஆசிரியர்களுக்கான நிதி உதவி, குடியிருப்புகள் பேணுகை, மாணவர்கள் தங்கும் விடுதி, மாணவர்களுக்கு நண்பகல் உணவு இரவு உணவு வழங்குதல், வறிய சூழலில் சிறந்த சமற்கிருத பண்டிதர்களுக்கும் உணவு வழங்கி, சம்மான் இராட்சிகா நிதியுதவி, சமற்கிருதத்தை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்துதல், அரிதான சமற்கிருதப் புத்தகங்கள் வெளியிடுதல், மொத்தமாக வாங்குதல், மறு பதிப்பு செய்வதற்கான நிதி உதவி, சமற்கிருத இலக்கிய இதழ்கள் வெளியிடுதல், சமற்கிருதப் புத்தகங்கள் மொத்தமாக வாங்குதல், அரிய சமற்கிருத புத்தகங்களை மறு பதிப்பு செய்தல், சிறந்த அல்லது ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேவையைப் பயன்படுத்த நிதியுதவி அளித்தல், பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்கள் பரம்பரை சமற்கிருத பாடசாலைகள் அல்லது நிறுவனங்களில் தொழிற்பயிற்சி வகுப்புகள் நடத்த நிதி உதவி சமற்கிருத, பாலி, பிராகிருத மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என மேலும் பலவகையாகச் சமற்கிருதப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் வழங்கப்பெறுகிறது..

அகில இந்திய சமற்கிருதச் சொற்பொழிவுகளும் போட்டிகளும் சமற்கிருதத்தின் வளர்ச்சியை நிலை நிறுத்துகின்றன. 18 திட்டங்கள், குடியரசுத் தலைவர் விருதுகள் மகரிசி பாதராயன் வியாக சம்மான் விருதுகள், ஆதர்ச சமற்கிருத மகா வித்தியாலயங்கள், ஆதர்ச சோத சத்சங்கு நிதியுதவி, சமற்கிருத அகராதித் திட்டம் இவ்வாறு பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி ஒன்றிய அரசு அளித்துக்கொண்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இத்தகைய விதிகளை நிறுவி இந்த அமைப்புகளை நடத்துவதற்கான வாடகை. செலவுகள், பணியாளர் செலவுகள், நூல் வெளியிட சமற்கிருத திரைப்படங்கள் எடுக்க நிதி உதவி என்று அடுக்கிக் கொண்டே போகிற பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. இத்தனைத் திட்டங்களுக்குப் பணம் தேவைப்படும்போது அரசு நிதி ஒதுக்கத் தானே செய்யும்! அதை விடுத்து ஒதுக்கி விட்டார்கள் ஒதுக்கி விட்டார்கள் என கூக்குரலிட்டு என்ன பயன்?

13.07.2025

Followers

Blog Archive