Saturday, October 12, 2019

ஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல


ஆள்வோர் ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி
முழு வலிமை கொண்ட வலிமையான ஆட்சியாளராக இருந்தாலும் ஆன்றோர் கூறும் அறிவுரைகளை அல்லது கசப்பான இடித்துரைகளைக் கேட்டு ஆளவேண்டும் என்பதே தமிழர் நெறி.
பழந்தமிழ்நாட்டில் இருந்தது குடி தழுவிய கோனாட்சி. அஃதாவது மக்கள் நலம் நாடும் மன்னராட்சி. மன்னர் ஆட்சி புரிந்தாலும் இன்றைய மக்களாட்சியைவிடச் சிறப்பான மக்கள் நலம் நாடும் ஆட்சியே அப்பொழுது நடந்துள்ளது.
“தான் வலிமையானவன் அல்லது அதிகாரம் முழுமையும் கொண்டவன் எனக் கருதித் தனக்குக் கூறப்படும் அறிவுரைகளை ஒதுக்குபவன் நல்லாட்சி தர முடியாது. அவனது ஆட்சியும் விரைவில் அழியும்” என்பதே தமிழர் நெறி. இந்நெறி இன்றைக்கு உலகில் உள்ள எல்லா நாட்டு ஆட்சியாளரும் பின்பற்றி நடந்தால் உலகம் முழுவதும்  மக்களுக்கான ஆட்சியே திகழும் எனலாம்.
உருசியநாட்டு வல்லாட்சியைக் குறிப்பிடுகையில், மாக்கவி பாரதியார்,
இம்மென்றால் சிறைவாசம்,
ஏனென்றால்
வனவாசம், இவ்வாறங்கே
செம்மையெலாம் பாழாகிக்
கொடுமையே 
அறமாகித் தீர்ந்த
 ஆட்சி நிலவியதாகக்
குறிப்பிடுவார்.
ஆட்சிக்கு எதிரான சிறு முணுமுணுப்பைக்கூடத் தாங்கிக் கொள்ள இயலாமல் அடக்கி ஒடுக்குவோர் ஆட்சி அடக்கப்படும் என்பதே வரலாறு எனப் பாரதியார் நமக்கு உணர்த்துகிறார்.
தமிழர் அரசியல் நெறி என்பது ஆட்சியில் உள்ளோர், தம்மிடம் நேரடியாக அல்லது பொதுவெளியில் தெரிவிக்கப்படும் ஆட்சி மீதான சிறு குறையைக்கூடப் பெரிதாக எண்ணி, அவ்வாறு கூறியோர் மீது சினம் கொள்ளாமல், அவர்கள் கூறியதில் உண்மை இருப்பின் அவற்றை நீக்க வேண்டும்.
அவர்கள் யார் மீதாகிலும் குறைகள் தெரிவித்திருந்தால் நடுநிலையுடன் ஆராய்ந்து சூழ்நிலைக்கேற்பக் குற்றம் புரிந்தவர்களைத் தண்டிக்கவோ மன்னிக்கவோ வேண்டும்.
சங்க இலக்கியங்களில் பாடல்களில் சொல்லப்படும் பொருண்மைக்கேற்ப அவற்றைத் திணை என்றும் துறை என்றும் வகுத்துள்ளனர்.
அவற்றுள் சில, ஆட்சியாளருக்கு அறிவுரை கூறி, இடர்ப்பாடுகள் அல்லது துன்பப்பாடுகள் இருப்பின் அவற்றை அகற்ற வலியுறுத்துவனவாகும். இவை, வாயுறைவாழ்த்து, செவியறிவுறூஉ, குடைமங்கலம், வாள் மங்கலம், மண்ணு மங்கலம், ஓம்படை ஆகிய துறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ‘வாயுறை வாழ்த்து’ என்பது மன்னரை வாழ்த்துவதுடன் சான்றோர் கூறும் அறிவுரைகளும் அடங்கியதாகும். ஆள்வோரின் கடமைகள், நடத்தைகள், அவற்றுக்கான நெறிமுறைகளை அவர்களின் செவியில் பதியுமாறு அறிவுறுத்துவது ‘செவியறிவுறூஉ’ துறையாகும்.
பழந்தமிழர்  ஆள்வோரைவிட உயர்வாகப் புலவர்களை மதித்தனர். எனவேதான், முதலில் கூறிய மன்னனைப்பற்றி அதே புலவர் பாடியதைக் குறிப்பிடும் பொழுது “அவனை அவர் பாடியது” என்கின்றனர். அஃதாவது மன்னனை ‘ன்’ விகுதியில் அழைப்போர் புலவர்களை மதிப்புடன் ‘அர்’ விதியில் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு சங்கப்புலவர்களைச் சங்கக்கால வேந்தர்களும் மன்னர்களும் மதித்துப் போற்றினர்.
அவர்களால் குறை கூறப்படுவது இழுக்கு எனக் கருதி அதற்கு இடம் தராதவகையில் நடந்து கொண்டனர். அதையும் மீறித் தவறு நடந்து அதனைப் புலவர்கள் சுட்டிக்காட்டினால் அவர்கள் மீது சட்டத்தைப் பாய்ச்சாமல், தங்களைத் திருத்திக் கொண்டனர். இவ்வாறு புலவர்களை மன்னர்கள் மதித்ததால்தான் தமிழகம் வந்த  ஆரியர், அறிவை ஆயுதமாகக் கொண்டு தங்களை முன்நிறுத்திக் கொண்டனர் என்பது வரலாறு.
கடந்த நிதி நிலையறிக்கையின் பொழுது மத்திய நிதியமைச்சர் நிருமலா சீதாராமன் மேற்கோளாகச் சொன்ன வரிவிதிப்பு குறித்த புறநானூற்றுப் பாடல் ‘செவியறிவுறூஉ’ துறையாகும். இவ்வாறு மன்னர்கள் செய்ய வேண்டியனபற்றியும் செய்யக்கூடாதனபற்றியும் ஆன்றோர்கள் இடித்துரைக்கும் அளவிற்கு அப்பொழுது கருத்துரிமை பேணப்பட்டு வந்தது.
அறிவியல் உண்மைகளைச் சொன்னதற்கே உயிரைப் பறித்த மேனாட்டு அரசியல் முறைக்கு மாறாகத், தம்மைப்பற்றித் தம்மிடமே குறை கூறினாலும் கேட்கும் மனப்பக்குவம் நிறைந்தவர்களாக அப்போதைய தமிழ் ஆட்சியாளர்கள் இருந்துள்ளனர்.
இத்தகைய தமிழர் நெறி உலகம் முழுவதும் பரவ வேண்டும். மாறாகத் தமிழ் வழங்கும் பகுதி அடங்கிய இத்திருநாட்டிலேயே முறையிடுவதற்குரிய அதிகாரத் தலைமையிடம் முறையிட்டதற்காக, கருத்துரிமையை நசுக்கும் வண்ணம் சட்டத்தைப் பாயவிடுவது பெருங்கொடுமையாகும். அவற்றைச் சிந்தித்து நடவடிக்கை எடுக்காமலும், தவறான முறைப்பாடு எனில் உரியவர்களிடம் விளக்காமலும் அல்லது குறைந்தது அவற்றைப் பொருட்படுத்தாமலும் இருக்கலாம். அவ்வாறில்லாமல் மாறான நடவடிக்கை எடுப்பது அவர்களிடம் நீதியை எதிர்பார்த்தவர்களிடம் அது தவறு எனக் காட்டுவதாக அமையாதா?
ஆட்சியின்மாட்சியைக் கூறும் திருவள்ளுவர்,
செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்:389)
என்கிறார்.
உலகம் யாருக்குக் கட்டுப்படும்? குறை கூறப்படும் கசப்பான சொற்களைக் கேட்டு அவர்களுக்கு எதிராகச் செயல்படக்கூடாது. மாறாக அவற்றைப் பொறுத்துக்கொள்ளும் பண்பு உடையவனாக இருக்க வேண்டும். அத்தகைய பண்பாளனிடம் உலகம் கட்டுப்படும் என்கிறார் திருவள்ளுவர்.
அறிவுரை என்பது யாவர்க்குமே கசப்பாகத்தான் இருக்கும். ஆனால், ஆட்சியாளர்கள், தம் கீழுள்ள அமைச்சர்கள் முதலானோர் இடித்துரைத்தாலும் மக்கள் வெறுப்பாகக் கூறினாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு கூறப்படும் குறைகளை நீக்க வேண்டும். அதுதான் நல்லாட்சி என்பது தமிழர் நெறி.
“பொது நன்மையின் பொருட்டும் துன்பம் தரும் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும் பிறர் கூறுவன கடுமையாக இருந்தாலும் வெறுக்கும் படி இருந்தாலும் அவற்றைப் பொறுத்து ஏற்றுக்கொள்ளும் நற்பண்பாளனுக்கு உலகம் கட்டுப்படும்.” என்னும் தமிழர் நெறியை எல்லா நாட்டு அரசாளர்களும் எக்காலத்திலும் தவறாமல் உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஆன்றோர்கள், அறிஞர்கள் துணையைக் கொண்டு ஆட்சி நடத்த வேண்டும் என்பதும் தமிழர் நெறி. எனவேதான், திருவள்ளுவர், ‘பெரியாரைத் துணைக்கோடல்’ எனத் தனி அதிகாரமே வைத்துள்ளார்.
தவறு செய்ய நேரும் பொழுது அல்லது தவறு செய்தால், கண்டும் காணாமல் இருக்கக் கூடாது. மாறாக இடித்துரைத்து அறிவரை கூறி, அத்தவறான செயலை நிறுத்த வேண்டும். இத்தகைய ஆன்றோரைத் துணையாகக் கொள்பவரை  யாராலும் அழிக்க முடியாது.
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
(திருவள்ளுவர், திருக்குள், அதிகாரம் பெரியாரைத் துணைக்கோடல், குறள் 447)
என்பது தமிழர் நெறி.
பழந்தமிழ் வேந்தர்கள் மக்களையும் புலவர்களையும் மதித்ததால் நல்லாட்சி வழங்கினர். சான்று ஒன்று. பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் வஞ்சினம் கூறும் பொழுது, “நான், இவ்வாறு செய்து முடிக்காவிட்டால், குடிமக்கள் என்னைக் கண்ணீருடன் கொடியவன் என இகழட்டும்! மாங்குடி மருதன் தலைமையில் இயங்கும் புலவர் குழு என்னைப்பாடாது, என் நாட்டைவிட்டு நீங்கட்டும்!” என்னும் பொருள்படப் பாடியுள்ளார்.
கொடியன்எம் இறை’ எனக் கண்ணீர் பரப்பி,
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக;
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை
(புறநானூறு, பாடல் 72, வரிகள் 11-16)
என்று சொல்லி உள்ளதன் மூலம், மக்கள் கருத்துகளையும் ஆன்றோர் கருத்துகளையும் கேட்டு ஆட்சி நடத்திய சான்றோர்களாகத் தமிழ் மன்னர்கள் திகழ்ந்துள்ளனர் எனப் புரிகிறது. கருத்துரிமையை மதிப்பது ஆட்சிக்குச் சிறப்பே தவிர இழுக்கல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகெங்கும் பரவ வேண்டிய தமிழர் நெறி குறித்த மேற்கோள்களைத் தலைமை யமைச்சர் நரேந்திரர் முதலான பல அமைச்சர்களும் பொதுவிடங்களில் கூறிப் பரப்பி வருகின்றனர். அவர்கள்,
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:448)
என்னும் தமிழர் நெறியையும் உலகெங்கும் பரப்ப வேண்டும். தாங்களும் முன்மாதிரியாக இருந்து கருத்துரிமைக் காவலர்களாகத் திகழ வேண்டும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, October 2, 2019

தற்பாலுறவு இன அழிப்பிற்குத் திறவுகோல் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல
தற்பாலுறவு இன அழிப்பிற்குத் திறவுகோல்
நல்லொழுக்க உறவு என்பது ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே இருவரின் விருப்பத்தால் ஏற்படும் காதல் உறவுதான். மாறான உறவுகளைச் சில நாடுகளில் சட்டம் ஏற்றுக் கொண்டாலும் அந்த வரிசையில் இந்தியாவும் இடம் பெற்றாலும் இல்லறம் போற்றும் நம் நாட்டில் இது நல்லறமல்ல!
ஆணுக்கும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு அடிப்படையிலான உறவு ஓரினச்சேர்க்கை, தற்பால்சேர்க்கை, தன்பாலினப்புணர்ச்சி, ஒரு பாலீர்ப்பு, சமப்பாலுறவு, தன் பாலீர்ப்பு (Homosexuality) எனப் பலவகையாகக் குறிக்கப் பெறுகிறது. தம் பாலினத்தைச் சேர்ந்தவர்களைக் காமுறுதல், உடலுறவுக்கு விழைதல், காதல் வயப்படுதல் என்பவற்றால் தற்பால்சேர்க்கை அடையாளம் காணப்படுகிறது.
ஆணுடன் உறவு கொள்ளும் ஆண் அகஉறவன்(gay) என்றும் பெண்ணுடன் உறவு கொள்ளும்  பெண் அகஉறவள்(lesbian) என்றும்  அழைக்கப்படுகின்றனர்.
இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 377  தற்பாலினத்திற்குள் அல்லது விலங்குடன் விருப்புடன் கொள்ளும் “இயற்கைக்கு மாறான பாலுறவு”  என்பதைத் தண்டனைக்குரிய குற்றம் என முன்னர் வரையறுத்தது. இப்பிரிவின்படி, இயற்கைக்குப் புறம்பான பாலுறவு கொள்வோருக்குப் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையோ வாணாள் சிறைத் தண்டனையோ விதிக்கலாம். தண்டத்தொகையும் விதிக்கலாம் என இருந்தது.
தற்பால் சேர்க்கை என்பது இன்று நேற்று தொடங்கியதல்ல. கிரேக்க, உரோமானிய, ஆரியக் காப்பியங்களில் இஃது இடம் பெற்றுள்ளது. கண்ணன் நாரதர் உடலுறவு முதலான பல ஆரியக்கதைகளும் தமிழிலும் குறிக்கப் பெற்றிருந்தாலும் தமிழர் நெறி என்பது இருபாலரிடையே ஏற்படும்  நல்லொழுக்க இல்லற நெறியே! கிரேக்கச் சொல்லான ஃகோமோவிலிருந்து(homo)  ஃகோமோ செக்சு என்னும் சொல் உருவானது. கி.பி 1869இல் செருமானிய உளவியல் வல்லுநர் கார்ல் மரியா கெர்ட்டு பெனி (Karl-Maria Kertbeny,) என்பவர் தற்பால்சேர்க்கையை ஃகோமோ செக்சு என்று குறிப்பிட்டார்.
தத்துவ ஞானி பிளாட்டோ போன்றவர்களும் தற்பால் சேர்க்கையை உயர்த்திக் கூறியுள்ளனர். கடந்த நூற்றாண்டில் தமிழ் நாட்டில் உயர்ந்த பொறுப்பிலிருந்த ஒருவர் தற்பால் சேர்க்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். குரல் கொடுத்தார் என்று சொல் வதை விட மருத்துவரிடம் இதற்கு ஆதரவாகச் சண்டையிட்டார் என்றே சொல்லலாம். அண்மைக் காலங்களில் தமிழ் நாட்டிலும் அங்கும் இங்குமாகத் தற்பாலுறவு ஏற்பட்டிருந்தாலும் இது தவறு என்ற அச்சத்துடனேயே இருந்துள்ளனர்.
காலந்தோறும் தற்பாலுறவு என்பது சிலரின் பழக்கமாக இருந்து வருகிறது. எனினும் பொது நிலையில் இதனை விரும்பத்தகாததாக, வெறுப்பிற்குரியதாகவே கருதியுள்ளனர். இதன் காரணமாகப் பல நாடுகளில் சட்டத்திற்கு எதிரானதாகவும் கருதப்படுகிறது. பல நாடுகள் சட்டப்படியான ஏற்பையும் வழங்கியுள்ளன. இந்த வரிசையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
1980இல் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு விவரத்தின் பொழுதே கல்லூரி மாணவியர் பலர், தற்பாலுறவு தவறல்ல என்று கருத்து தெரிவித்திருந்தனர். இத்தகைய கருத்துதான் பெருகி இன்று அதற்காகப் போராடிச் சட்ட ஏற்பையும் பெற்றுத் தந்துள்ளது.
திருநங்கையர் இச்சட்டத்தால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகத்  தொடர்ந்து முறையிட்டு வந்ததாலும் தற்பால் சேர்க்கையர் தற்பாலுறவு ஏற்பிற்காகத் தொடர்ந்து போராடி வந்ததாலும், இந்தியாவில் தற்பாலுறவு தவறு என்ற நிலை மாறி 06.09.2018 இல் உச்ச நீதிமன்றமே இதனைத் தவறு என்று சொல்லும் சட்டமே  தவறு என்ற நிலைக்கு வந்துள்ளது.
இப்பொழுதும் ஓரறையில் அடைபட்டுக் கிடப்போர் இடையேயும், விடுதிகள், பள்ளிக்கூடங்கள், தனிப்பயிற்சி யகங்கள், சிறைகள், சீர்திருத்தப்பள்ளிகள் முதலான இடங்களில் இருப்போருக்குள்ளும் தற்பாலுறவு கொள்வோர் இருக்கின்றனர். இருப்பினும் சட்டப்படி தவறு என்பதாலும் ஒழுக்கக் கேடு என்று கடியப்பட்டதாலும் ஓரளவு மறைமுகமாகவே நிகழ்ந்தது. ஆனால், தண்டனைக் குற்றமாகக் குறிப்பிடும் சட்டப்பிரிவு நீக்கத்தால், தற்பாலுறவிற்கான ஏற்பால் ஒழுக்கக்கேடுகள் பெருகும் நிலை ஏற்படுகிறது. இதனால் திருமண வாழ்க்கையில் சிக்கல், பிளவு வரும் செய்திகளும் ஊடகங்களில் வருகின்றன. கட்டாயத் தற்பாலுறவு பெருகி இருபால் இளைஞர்களும் பாதிக்கப்படுவர்.
தற்பாலுறவு ஏற்பினால் பல தீமைகள் இருந்தாலும் இன அழிப்பு என்னும் பெருந்தீங்கு குறித்தே நாம் கவலைப்பட வேண்டியுள்ளது.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
மனையறத்தின் மாண்பே மக்கள் பேறுதான். தற்பால் உறவால் மக்கள்பேறுக்கு வழியடைக்கப்படுகிறது. இல்லற நெறியின் அடிப்படையே வழி வழி மக்கட்பேறு பெருகிக் குடும்பம் தழைத்தல்தானே!
“மக்களைப் பெற்று மனையறம் காத்துச் சுற்றம் தழுவிச் சோர்விலாது சிறந்தன செய்து வாழ்தலே இல்லறம்” என்று தமிழர் நெறியைப் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்குகிறார்.
அடுத்த தலைமுறை தோன்றும் வாயிலை அடைக்கும் பொழுது மக்கட் பேறு எங்ஙனம் பெருகும்? மக்கள் பெருக்கம் இல்லாமல் இனம் எங்ஙனம் பெருகும்? இனம் பெருக, இல்லறம் தழைக்க ஆணும் பெண்ணும் முறைப்படி இணைவதுதானே வாழ்வியல் நெறி.
பாலுறவு இன்றி அறிவியல் முறையில் மகப்பேறு அமைய ஆராய்ச்சி நடைபெறுவதாகச் செய்திகள் கூறுகின்றன. இம்முறை வந்தாலும்  முறையான மக்களினம் உருவாகாது, பெருகாது.
அங்கும் இங்குமாகத் தற்பாலுறவு நேர்ந்தாலும் அதனைச் சட்டப்படி சரியாக மாற்றி ஒழுக்கக் கேட்டை உயர்த்தக் கூடாது. சட்டம் என்ன கூறினாலும் அறவோர் தற்பாலுறவிற்கு எதிரான நிலைப்பாட்டை மக்களிடம் உருவாக்க வேண்டும். மக்களும் தங்கள் மரபினர் பெருக முடியாமல் போவதற்குக் காரணமான தற்பாலுறவை விலக்க வேண்டும். உலகில் மக்களினம் பெருக, நல்லறமாம் இல்லறமே வேண்டப்படுவது என்பதை உணர்ந்து நல்லறம் காக்க வேண்டும்.
மனநோயர்களை ஆற்றுப்படுத்திக் குணப்படுத்துகின்றோம் அல்லவா? அதுபோல் தற்பால் உறவினரையும் நல்வழிப்படுத்த வேண்டும். நடைமுறையில் யாரும் பாதிக்கப்பட்டால் அதனைச் சரி செய்ய வேண்டுமே தவிர கூடா ஒழுக்கமே ஏற்றது என்பதுபோல் செயல்படக்கூடாது. திருமண வாழ்க்கை கிட்டாதவர்கள், திருமண வாழ்க்கையில் துயருறுபவர்கள், தவறான வழியில் செல்லா வண்ணமும் கட்டாயமாகத் தற்பாலுறவில் தள்ளுபவர்களை நல்வழிப்படுத்தவும் மன வள மையங்களை அமைத்து முறையான நல்லுறவுகளையே பேண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்கிறோம். பயிரை வளரவிடாமல் முளையிலேயே அழிக்க முயலலாமா?
– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

Tuesday, October 1, 2019

வெகுளி கணமேயும் காத்தல் அரிது – யாருக்கு? – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

வெகுளி கணமேயும் காத்தல் அரிது – யாருக்கு?
– இலக்குவனார் திருவள்ளுவன்
0000000000000000000000000000000000000000000000000000000000000000
மூன்றாவது  அனைத்துலகத் திருக்குறள் மாநாடு,
புது தில்லி
புரட்டாசி  06-07, 2050 *** 23-24.09.2019
0000000000000000000000000000000000000000000000000000000000000000
மூன்றாவது உலகத்திருக்குறள் மாநாட்டின் மையப்பொருள் உலக அமைதியும் நல்லிணக்கமும் என உள்ளது. இவ்விலக்கை எட்டுவதற்கான அடிப்படையாக இருப்பது சினம் தவிர்த்தல் என்பதாகும். எனவே, சினத்துடன் தொடர்புடைய ஒரு தலைப்பில் கட்டுரை அளிக்கின்றேன்.
தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பலராவர். சிற்சில இடங்களில் அல்லது பல இடங்களில் திருவள்ளுவர்  கருத்திற்கு மாறான உரையை எழுதியுள்ளவர்கள், எழுதி வருபவர்கள் உள்ளனர். திருவள்ளுவர் கருத்தைத் திருக்குறளே விளக்கியிருக்கும் பொழுது அதற்கு முரணாகத் தங்கள் எண்ணத்தைத் திருக்கறள் கருத்தாக இவர்கள் சொல்லியுள்ளனர்.
“திருக்குறளுக்கு உரை திருக்குறளே” எனப் புலவர்மாமணி முதுமுனைவர் இளங்குமரனார், பேராசிரியர் மறைமலை இலக்குவனார், பேராசிரியர் பி.என்.(இ)டயசு முதலானோர் எழுதியுள்ளனர். இதுவே உண்மையாகும். அவ்வாறு பார்க்கும் பொழுது உரைகள் தவறுகள் நமக்குப் புரியும். இவ்வாறு பல உரைகள் இருப்பினும் இங்கே ஒன்றை மட்டும் நாம் பார்ப்போம்.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது
(அதிகாரம்: நீத்தார் பெருமை : குறள் எண் : 29)
“கணமேயும் காத்தல் அரிது” என்பதற்கு உரையாசிரியர்கள் தரும் விளக்கங்களைப் பிற தவறான உரைகள் பட்டியலில் சேர்க்க முடியாது. எனினும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்ட உரைகளே மிகுதி. இக்குறளுக்கான சில உரைகளைப் பார்ப்போம்.
பொதுவான பொழிப்புரை: நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறிநின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
மணக்குடவர், “குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார்மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும் வாராமற் காத்தலரிது” என்கிறார்.
“கோபம் கணமேனுங் காக்கமாட்டார் என்றவாறு” என்று பரிதியும் “மற்று அவ்வெகுளியானது தன்மாட்டுச் சிறுதுபொழுது நிறுத்திக்கொண்டு நிற்கமாட்டாது என்றவாறு”  என்று காலிங்கரும் கூறுகின்றனர்.
பரிமேலழகர், “குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி – துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி; ‘கணம் ஏயும்’ காத்தல் அரிது – தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது.” என்கிறார்; “சலியாமையும், பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். குணம் சாதியொருமை. அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரோ வழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின், கணம் ஏயும் என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின், ‘காத்தல் அரிது’ என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது” என விளக்கவும் செய்கிறார்.
மணக்குடவர், “சிறுபொழுதாயினும் வெகுளியால் உண்டாகும் தீமையை காத்தல் அரிது என்றார். இதை ஏற்ற பரிமேலழகர் கணமே ஆனாலும் வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது என்றார். பரிதியும் காலிங்கரும் கணப்போதும் நீத்தார் சினம் கொள்ளார் என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை நல்கினர்.” என்கிறார்.
குன்றக்குடி அடிகளார், “நற்குணம் என்னும் குன்றின் மீது ஏறி நின்றவர்கள் வெகுளியை ஒரு நொடியும் பேணிக் காக்க மாட்டார்கள். அதாவது வெகுளியை ஒரு பொருளாகக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் வெகுளல் அரிது. ஒரொவழி, வெகுண்டாலும் உடன் மாறும் என்பதாம்” என உரை தருகிறார்.
திருக்குறளுக்கான 650 உரையாசிரியர் நூல்கள் தம்மிடம் இருப்பதாகத் திருக்குறள் தலைமைத் தூதர் முனைவர் கு.மோகன்ராசு என்னிடம் தெரிவித்தார்.  திருக்குறள் உரைகளைத் தொகுத்தும் பல நூல்கள் வந்துள்ளன. எனினும் முழுமையாக அனைத்து உரைகளையும் தொகுத்து நூல்கள் வரவில்லை. விக்கிபீடியா தளத்திலும்  முனைவர் இர.குமரன் முயற்சியில் உருவான விக்கி குறள் முதலான பல தளங்கள் மூலமும் திருக்குறளுக்கான வெவ்வேறு உரைகளைக் காண இயலும்.
இக்குறளுக்கான அனைவர் உரைகளையும் படித்து வகைப்படுத்தி இக்கட்டுரையை எழுத முயன்றேன். வாய்ப்பு கிட்டாமையால் இயலவில்லை. எனினும் திருக்குறள் அறிஞர் பேரா.சி.இலக்குவனார் முதலான ஐம்பதின்மரின் இக்குறளுக்கான உரையைப் படித்தே எழுதுகின்றேன்.
திருக்குறள் உரைகள் சிலவற்றையேனும் தொகுத்துத் தருவது குறள்.திறன் என்னும் இணையத் தளமாகும். கணிஞன் (மணி மு.மணிவண்ணன்) என்பாரின் அருமுயற்சியில் உருவாகியுள்ள தளம் இது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் கருத்துகளைப் பார்ப்போம்.
“இன்றைய ஆசிரியர்கள் ‘சினத்தைச் சிறுபொழுதும் யாரும் தாங்கமுடியாது’, ‘சினத்தை அச்சினத்திற் சிக்கியோரால் கணப்பொழுதும் தடுத்து நிறுத்துதல் இயலாது’, ‘சினமானது ஒரு கணப்பொழுதுதான் தோன்றும். அப்படித் தோன்றியபோது அதனைத் தடுத்தல் முடியாததே’, ‘சீற்றம் நிலைப்பது ஒரு நொடிதான் எனினும் அதன் ஆற்றலைத் தடுத்தல் இயலாது’ என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.”
“குணத்தில் சிறந்த நீத்தார்க்கு ஒருகணம் கூட சினம் தோன்றுவதில்லை என்கிறது குறள்.”
“ ‘கணமேயும் காத்தல் அரிது’ என்ற தொடருக்கு நீத்தார் சினத்தை ஒரு கணப்பொழுதேனும் தாங்கியிரார் என்றும் நீத்தாரால் வெகுளப்பட்டார் அச்சினத்தை ஒரு கணப்பொழுதேனும் தாங்கி நிற்கார் என்றும் இரு திறமாகப் பொருள் உரைக்கப்பட்டது.”
இக்குறளில் “குணமென்னும் குன்றேறி நின்றார்”  என்னும் அடிக்கான விளக்கத்தில் மாறுபாடு இல்லை. உரையாசிரியர்கள் தத்தம் உரைவளத் திறமைக்கேற்பச் சொல்லியிருப்பினும் அடிப்படையில் நற்குணம் என்னும் பண்பின் மலையில் நிற்பவர்கள் – குணக்குன்றர்கள் – என்ற ஒத்த கருத்துதான் உள்ளது.
ஆரியத்தில் முனிவர்கள் சாவம் இடுவதும் இதனால் சாவத்திற்கு உள்ளானோர் பாதிக்கப்படுவதுமான கதைகள் உள்ளன. இக்கதைகளின் பாதிப்பால், குணக்குன்றர் வெகுளியால் பாதிப்பு வரும் என்ற சிந்தனை சிலருக்கு எழுந்துள்ளது. எனவே, அதற்கேற்பவே, பண்பு மலையில் நின்றார் வெகுளியால் வரும் தீமையைக் கணப்பொழுதும் காக்க இயலாது என்ற வகையில் பொருள் தந்து விட்டனர்.
அதே நேரம், பொதுநல நோக்கிற்குத் தீங்கிழைக்கும் பொழுது அறவாணருக்கு ஏற்படும் அறச் சீற்றத்தைத் திருவள்ளுவர் குறிப்பிடுவதையும் நாம் கருதிப் பார்க்க வேண்டும்.
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும் (திருக்குறள் 899)
என்கிறார் திருவள்ளுவர்.
ஆட்சியாளராக இருப்பினும் நற்கொள்கை உடையவர்கள் அறச்சீற்றம் கொண்டால் தன்னிலை இழந்து கேடுறுவர் என்கிறார் திருவள்ளுவர்.
இந்த நோக்கில் பார்த்தால் பண்புநலனில் குன்றென நிமிர்ந்து நிற்போர் சினம் கொண்டால், அச்சினத்திற்கு ஆளாகிறவர்களால் தங்களைக் காத்துக் கொள்வது அரிது என்றுதான் கொள்ளத் தோன்றும். ஆனால், ‘வெகுளாமை’யில் திருவள்ளுவர் வெகுளி கணமேயும் காத்தல் அரிது எனக் கூறவில்லை. ‘நீத்தார் பெருமை’யில் கூறுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். இதனைப் பெருமையாகத் திருவள்ளுவர் கூறமாட்டாரே!
இந்த இடத்தில் தவவலிமை உடையார் தண்டிக்கவும் உயர்த்தவும் வல்லார் என வரும் பின்வரும் குறளையும் நோக்க வேண்டும்.
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.(திருக்குறள் 264)
என்கிறார் திருவள்ளுவர். இதற்கு ஒரு சாரார் பகைவரைத் தண்டித்தலும் நட்பு வட்டத்தில் உள்ளோரை உவக்கச் செய்தலும் தவத்தார் சிறப்பு எனக் கூறுகின்றனர். சிலர், “அறத்திற்குப் பகையானவர்கைளத் தண்டித்தலும் அறத்தை விரும்பிச் செய்வோரைப் போற்றலும்” என்ற வகையில் பொருள் தருகின்றனர். எப்படிப் பார்த்தாலும் நீத்தாருக்கு இத்திறமை பெருமை தருவதாக அமையாது. ஏனெனில் அவர்களுக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடே இருக்காது; இருக்கவும் கூடாது. அவ்வாறிருக்க அதன் அடிப்படையில் எப்படித் தம் வலிமையை அவர்கள் வெளிப்படுத்துவர்.
                சினத்தைச் சட்டென்று வெளிப்படுத்தாமல் அடக்கிக் கொண்டு அதனைக் காட்ட வேண்டிய நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் திருவள்ளுவர் கூறுகிறார்.
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.(திருக்குறள் 487)
என்கிறார் அவர்.
இந்தச் சினம் நாட்டுப் பகைவர்களுக்கும் ஆட்சிப் பகைவர்களுக்கும்  அரசியல் பகைவர்களுக்கும்  தொழில் பகைவர்களுக்கும் வணிகப் பகைவர்களுக்கும் எதிராகக் காலம் அறிந்து மேற்கொள்ள வேண்டிய நடைமுறையைக் கூறுவது. ஆனால், தாம் பகையாகக் கருதாவிட்டாலும் தம்மைப் பகையாகக் கருதிச் செயல்படுவோரைப் பொறுத்தலே நீத்தாருக்குப் பெருமையாகும். எனவே, காத்திருந்து சினம் காட்டல் அவர் பண்பன்று.
திருவள்ளுவர் நம்மிடம் நெருப்புக் கொத்தில் தேய்த்தால் போன்ற துன்பத்தைச் செய்பவனிடமும் முடியுமெனில் சினம் கொள்ளாதிருத்தல் நன்று என்கிறார்.
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று (திருக்குறள் எண்:308)
என்பதுதான் அத்திருக்குறள்.
எளிய மக்களிடமே, சினம் கொள்ள வாய்ப்பு உள்ள சூழலிலும் சினம் கொள்ளாதே என அறிவுறுத்தும் திருவள்ளுவர் நீத்தார் பெருமையில் சேர்ந்தாரைக் கொல்லியாகிய சினத்தைப் பண்பாகக் கூறுவாரா? மாட்டார் அல்லவா?
எனவே திருவள்ளுவர், பண்புநிறை சான்றோர்கள் சினம்கொள்ள மாட்டார். ஒருவேளை வந்தாலும் கணப்பொழுதுகூட அச்சினம் அவர்களிடம் தங்கியிராமல் உடன் மறைந்து விடும் என்னும் சிறப்பை உணர்த்தவே “வெகுளி கணமேயும் காத்தல் அரிது” என்கிறார்.
பொதுவாக  இக்குறட்பாவிற்குப் பின்வரும் மூவகை விளக்கங்கள் உள்ளன.
  1. குணக்குன்றர்களிடம் தோன்றும் வெகுளியால் வரும் தீமைகளில் இருந்து கணப்பொழுதும் காத்தல் இயலாது.
  2. குணக்குன்றர்களிடம் வெகுளி கணப்பொழுதுதான் தோன்றும் என்றாலும் அதனால் வரும் தீமையிலிருந்து வெகுளப்பட்டோர் தம்மைக் காத்தல் இயலாது.
  3. குணக்குன்றர்களிடம் வெகுளி வராது. வந்தாலும் கணப்பொழுதேனும் அவர்களிடம் தங்காது.
தேவநேயப்பாவாணர் மட்டும், நற்குணமலையாகிய முனிவர் நொடிநேரமேனும் தம் உள்ளத்திற் சினத்தைப் பேணுதலில்லை யென்று பொருள் கூறுவாருமுளர் எனக் குறிப்பிட்டு அதனை மறுத்துள்ளார். மேற்குறித்தவாற்றால் அம்மறுப்பு பொருந்தாது எனத் தெளியலாம்.
நீத்தாரின் சினம் கணப்பொழுது வந்தாலும் தீமை விளைவிக்கும் எனப் பலர் கூறியிருக்கப் பெருங்கவிகோ வா.மு.சேதுராமன், நீத்தார் சினம் வலிமையானது என்றாலும் அவர்களிடம் தோன்றாது என்னும்படிப் பின்வருமாறு கூறியுள்ளார்.
“நீத்தார் .. .. சினம் நன்மையைச் சமைக்க வல்லது.தீமையைப் பொசுக்கவும் வல்லது. எனினும் குணவான் கோபம் ஒரு நொடிப்போதும் தங்காது” என்கிறார் அவர்(திருக்குறள் செம்மொழி உரை, பக்கம் 23)
“வெகுளியுடையவர் நீத்தார் அல்லர். வெகுளி சிறிதுடையாரும் ஒரோவழி எழுதலுடையாரும் கூட நீத்தாராகார். சினம் கொண்டு சாவம் வழங்குகின்ற முனிவர்கள் நீத்தாராகவே கருதப்படமாட்டர். வெகுளி முற்றிலும் அற்ற ஒருவரே நீத்தாராவர்; குறை கடந்தவராவர் வெகுளி தோன்ற வேண்டிய இடத்தும் தோன்றாமையே நீத்தார்க்குப் பெருமை தருவது. இக்கருத்துக்களைத் தெளிவாக்கவே இப்பாடல் படைக்கப்பட்டது.” எனக் ‘குறள்.திறன்’ தளத்தில் குறித்துள்ள கருத்துகளுக்கு நான் முழுதும் உடன்படுகின்றேன்.
குணக்குன்றர்கள் தங்களிடம் வெகுளியைச்  சிறுபொழுதுகூடத் தங்க விடமாட்டார்கள் என்பதே நீத்தார் பெருமையாகத் திருவள்ளுவர் சிறப்பிப்பது.
 இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive