Tuesday, June 8, 2010

கணிணிச் சொற்கள் 1

-->
ஐந்தாவது இணையத் தமிழ் மாநாடு
அக்டோபர் 2009
செருமனி
கட்டுரை:
கணிணியியலில் நேர்பெயர்ப்புச் சொற்களும்
ஒலிபெயர்ப்புச் சொற்களும்
இலக்குவனார் திருவள்ளுவன்


கணிணியியலில் நேர்பெயர்ப்புச் சொற்களும்
ஒலிபெயர்ப்புச் சொற்களும்
அறிவியல் துறைகளைப் புரிய வைப்பதற்கும் அறிந்து கொள்வதற்கும் கையாளப்படும் கலைச்சொற்கள் தன்-விளக்கமாயும் எளிமையாயும் அமைய வேண்டும். அவ்வாறு இல்லாச் சூழலில், தவறாகப் புரிந்து கொள்ளவோ விளங்காமல் குழப்பம் அடையவோ வாய்ப்புகள் ஏற்படுகின்றன. எனவே, விரைந்து வளரும் கணிணியியலில் துறைவளர்ச்சிக்கேற்ற கலைச்சொல் பெருக்கமும் அமைய வேண்டும். இத்தகைய கலைச் சொல்பெருக்கத்திற்குத் தடையாக இருப்பது சொல்லைப் புரிந்து கொண்டு படைக்காமல், சொல்லுக்குச் சொல் என்ற நேர்முறையில் ஆக்கப்படும் கலைச்சொற்களும் தமிழ்ச் சொற்களைக் கையாளாமல் ஒலிபெயர்ப்புச் சொற்களாக மூலச் சொற்களைக் கையாளலுமாகும். இவற்றை உணர்ந்து, புத்தம்புதுக் கலைச்சொற்களை நாளும் உருவாக்கவும், உருவாக்கப்பட்ட கலைச் சொற்களைப் பயன்படுத்தவும் நாம் முன்வர வேண்டும். கலைச் சொற்கள் சுருங்கியனவாகவும், அவற்றின் அடிப்படையில் மேலும் புதிய கலைச் சொற்களை ஆக்க வாயிலாகவும் அமைய வேண்டும்.
. போக்கும் நோக்கும்
கணிணியியலில் அமையும் கலைச் சொற்களைப் பின்வருமாறு பகுக்கலாம்:
1. பெரும்பான்மையர் தமிழில் கையாளும் சொற்கள்: சான்றாக, பெரும்பான்மையர் கோப்பு என்றே எழுதி வந்தாலும், சிறுபான்மையர் Lபைல் என்றே குறிப்பிடுவது.
2. சிறுபான்மையர் தமிழில் கையாளும் சொற்கள்: சான்றாக இண்டர்நெட் எனப் பெரும்பான்மையராலும், இணையம் எனச் சிறுபான்மையராலும் கையாளப்படுவது.
3. ஆங்கிலத் தலைப்பெழுத்துச் சொற்களையே கையாளுதல். சான்று: RAM, ROM
4. அனைத்துத் தரப்பினரும் ஆங்கிலச் சொற்களையே கையாளுதல். modem - மோடம் எனல். சிலர் ஆங்கிலச்சொற்களையே - ஆங்கில வரிவடிவங்களைக் கொண்டே - தமிழ்க் கட்டுரையில் பயன்படுத்தல்.சான்று: Syntax error என்பது எளிதான தவறு; Semantic error என்பது கடுமையான தவறாகும்." என ஆங்கிலச் சொற்களை அவ்வாறே கையாண்டுள்ளமை. (இவற்றை, முறையே அமைவுத்தவறு, பொருள் தவறு எனக் குறிப்பிட்டிருக்கலாம்.)
5. ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையாகக் கையாளுதல். சில நேரங்களில் ஒருவரே வெவ்வேறு வகையாகக் கையாளும் நேர்வும் உள்ளது. சான்றாகக், கம்ப்யூட்டர் என்பதற்குக் கணிப்பொறி, கணிணி, கணினி, கணணி, கணிப்பான், கணிப்பொறி இயந்திரம் என வெவ்வேறு வகையாகக் கையாளல். இவற்றைத் தலைப்பில் ஒரு வகையாகவும், உள்ளடக்கங்களில் வேறுவகையாகவும் கையாளுதல். அதேபோல், ஒத்த பொருளுடையதாய் வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்தல். சான்றாக, home என்பதற்கு, வீடு, முகப்பு, மனை, இல்லம், தலைவாயில் என்பன போன்று பல வகையாகக் கையாளுதல். நடைமுறைக்கு நல்லசொற்கள் வந்துவிட்டபின்னும் கொச்சையாகக் கையாளுதல்.
6. சுருங்கிய கலைச்சொல்லாக இல்லாமல், விளக்கச் சொற்றொடராகக் கையாளுதல். .கா.: debugging aids - பிழை நீக்க உதவும் பொருள்கள்; பிழை நீக்குதவி என்று சொல்லலாம். bootstrap input program - கணணி உயிர்ப்பூட்(டு)டல்/உள்ளீட்டு திட்ட நிரல்; தொடக்கத் தரவு நிகழி என்று சொல்லலாம். இவ்வாறு தமிழில் விரிவாகக் கலைச் சொற்கைள அமைக்காமல் எளிமையாகவும் சுருக்கமாகவும் அமைத்தலே நன்று.
7. பொருள்விளக்கமான கலைச்சொல்லைக் கையாளாமல், நேருக்குநேர் மொழி பெயர்த்துக் கையாளுதல். mouse என்றால் சுண்டெலி என்பது போன்றவை.
8. தவறான சொல்லாக்கத்தைக் கையாளுதல். .கா.: barcode –சட்டக் குழூஉக்குறி; bar என்றால் சட்டம் என bar council என்ற முறையில் எண்ணியிருந்தாலும், frame என்று பொருள் கொண்டிருந்தாலும் தவறுதான். (பட்டைக்குறி என்று சொல்லலாமே!)
9. ஒரு சொல்லே வெவ்வேறு பொருள்களில் கையாளப்படுதல். .கா.: அடையாளம் அல்லது சின்னம் என்றே symbol, logo, icon ஆகிய சொற்களைக் குறித்தல். தனித் தனிச் சொல்லாக முறையே குறியீடு, முத்திரை, குறியுரு எனலாம்.
10. பிற அறிவியல் துறைச் சொற்களை ஆங்கிலத்திலேயே கையாளுதல். எடுத்துக்காட்டாக, எண் மதிப்புகள் கணக்குத் துறையில் கையாளப் படுகின்றன; இங்கும் கையாளப்படுகின்றன. ஆனால், அங்கும் தமிழ் இல்லை; இங்கும் தமிழ் இல்லை. பிற அறிவியல் துறைகளில் தமிழ்க்கலைச்சொற்களைக் கையாண்டிருந்தால், அவற்றையே இத்துறையிலும் கையாளுவதே ஏற்ற முறையாகும்; அவ்வாறு இல்லாத நேர்வுகளில் தமிழில் அமைத்தப் பயன்படுத்த வேண்டும்.
மேற்குறித்த ஒவ்வொரு வகைப்பாட்டிலும், கணிணிக் கலைச்சொற்களை ஆராய்தல் இன்றைய அடிப்படைத் தேவையாகும். எனினும் நாம், இங்கு நேர்பெயர்ப்புச் சொற்களையும் ஒலிபெயர்ப்புச் சொற்களையும் பற்றி மட்டும் பார்ப்போம்.
இவற்றுக்கு முன்னதாகச் சொல்லாக்க நெறிமுறைகள் குறித்துக் கருத்தில் கொள்ள வேண்டும். எந்த ஒரு சொல்லுக்கும் தனிப்பட்ட முறையில் பொருள் இல்லை. அச்சொல் பயன்படும் இடத்திற்கேற்பத்தான் அச்சொல்லுக்குப் பொருள் உண்டாகிறது. சொல் என்பது பொருளைச் சுமந்து செல்லும் ஊர்திதான். ஊர்தியில் நீர் கொண்டு போகும் பொழுது நீர்ஊர்தியாகவும், பால் கொண்டு போகும் பொழுது பால்ஊர்தியாகவும், வேறு எப்பொருளேனும் கொண்டு செல்லும் பொழுது அப்பொருளைச் சுமந்து செல்லும் ஊர்தியாகவும் அழைக்கப்படுவதே நடைமுறையாகும். இவைபோன்று, குறிப்பிட்ட சூழலில் எந்த ஒரு பொருளை வெளிப்படுத்துகிறதோ அதுதான் அந்த இடத்தில் அந்தச் சொல்லின் பொருளாகிறது. அந்தச்சொல்லே வேறு இடத்தில் வேறு பொருளை விளக்கும்பொழுது சொல்லின் பொருள் வேறாகின்றது. நீர், தான் இருக்கும் இடத்திற்கேற்ற வடிவைப் பெறுவதுபோன்று, சொல்லும் இடத்திற்கேற்ற உருவையும் வனப்பையும் பெறுகிறது எனலாம். இதனையே பின்வருமாறும் சொல்லலாம். விறகு ஏற்றிச் செல்லும் பொழுது விறகுவண்டி என அழைக்கப்படுவது போல் அதே வண்டி கரி ஏற்றிச் செல்லும்பொழுது கரிவண்டி எனப்படும். காலமாற்றத்தில் விறகுக்கும் கரிக்குமான தேவை குறைந்து அதே வண்டி எரி உருளையை ஏற்றிச் சென்றால் எரிஉருளை வண்டி எனப்படும். பயன்பாட்டிற்கு ஏற்ப வண்டியின் பெயர் மாறுவது போல், சொல்லும் அதன் பயன்பாட்டுக் காலத்திற்கு ஏற்பப் பொருள்மாற்றம் அடைகிறது. எனவே, இதுதான் இச்சொல்லுக்குப் பொருள் என்னும் பிடிவாதம் இன்றிச் சூழ க்கேற்ற பொருள் விளக்கத்தைக் கொள்வதுதான் சரி. குறிப்பிட்ட பயன்பாட்டிற்கென ஊர்தியை வடிவமைத்துப் பயன்படுத்திய பின் அப்பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்துவது போல், குறிப்பிட்ட பயன்பாட்டில் சொல்லாட்சியை வகுத்த பின்பு அதே பொருளிலேயே கையாளாமல் அடிக்கடி பொருளை மாற்றிக் கையாளுவதும் தவறாகும்.
தமிழ் ஆர்வலரான கட்டுரையாளர் சிலர், தத்தம் படைப்புகளில் நல்ல தமிழ்ச் சொற்களைக் கையாண்டு வரினும், கணிணித்தமிழ் அறிஞர் சிலர் நல்ல தமிழ்ச் சொற்களைத் தொகுத்து அகராதியில் வழங்கியிருப்பினும், அவற்றை அறியும் தேடுதல் வேட்கையின்றியும், அல்லது அறிந்தாலும், அத் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கடப்பாட்டு உணர்வு இல்லாமலும், கணிணித்துறையினர் ஆங்கிலச் சொற்களையே கையாண்டு கணித்தமிழ் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றனர். கணிணியறிவைத் தமிழில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று சில இதழ்கள் தமிழில் நடத்தப்படுகின்றன. எனினும் சிலவற்றின் நோக்கம் துறைதோறும் துறைதோறும் தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதா? அல்லது தமிழ்வழிக் கணிணித் துறையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வலர்களிடம் பணம் பறிப்பதா? எனத் தெரியவில்லை. தமிழ்ப்படுத்தல் தேவையா? என்னும் தலைப்பில் வெளிவந்த பின்வரும் ஆசிரியவுரையைப் பாருங்கள்!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! இதை மெய்ப்பிக்கும் முயற்சியில் நாம் ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆர்வமிகுதியில் தமிழைத் தொழில்நுட்பத்திற்குள் புகுத்த முயற்சிக்கும் சிலரது நடவடிக்கைகள் கேலிக்கூத்தாக மாறியுள்ளது வேதனை யளிக்கிறது. ஆர்குட் தளம், விக்கிபீடியா, வேர்டுபிரசு போன்ற பயனர்களின் அன்றாடவாழ்வில் அங்கமாகிவிட்ட ஆன்லைன் சேவைகள் தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றிப் புகழ்பெற்று விளங்கும் பல வலைத்தளங்களும் படுமோசமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சிறிய எடுத்துக்காட்டு: ஆர்குட், விக்கிபீடியா போன்ற தளங்களின் விண்ணப்பப்படிவம் மற்றும் ப்ரொஃபைல் பக்கங்களில், திருமணமாகாதவர்களைக் குறிக்கும் single என்ற சொல்லுக்கு ஒண்டிக்கட்டை என்றும், கட்டபிரம்மச்சாரி என்றும் தனிக்கட்டை என்றும் மொழி பெயர்ப்பு செய்துள்ளனர். இதுபோல் பல இடங்களில், பல அபத்தங்கள்... ஏன்? அனைத்தையும் தமிழில் கொண்டுவருவது மட்டுமே தமிழை வளர்க்க சிறந்த வழியாகிவிட முடியாது. முடிந்தவரை தமிழைப்படுத்தாமல் இருப்பதே தமிழை வளர்க்கும் செயல் என்பதைத் தொழில் நுட்ப நிபுணர்கள் புரிந்து கொள்ள வேண்டும். (கம்ப்யூட்டர் உலகம்: பிப்ரவரி 2008: ஆசிரியவுரை)
"கெடல் இயக்கும் நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலைக்
கெடுக்கப் பாடு
படல்தன்னை நினைக்கையிலே
நெஞ்சு பதைக் கும்பகர
வாய் பதைக்கும்"
எனப் பாவேந்தர் பாரதிதாசன் வழியில் கிளர்ந்தெழுந்தால் பாராட்ட வேண்டியதுதான். ஆனால், குருடர்கள் யானையைக் குறித்து விளக்குவது போல், தமிழ்ப்பார்வை இல்லாதவர் உருவாக்கும் தமிழாக்கங்களுக்காக அருமைத் தமிழ் மொழியைக் குறைகூறி என்ன பயன்? பயனர், வலைத்தளம் என்றெல்லாம் கட்டுரையில் பயன்படுத்தியது போன்று சொல்லாக்கம் எளிய இனிய தமிழில் அமைய வேண்டும் என வற்புறுத்த வேண்டிய ஆசிரியர் இங்ஙனம் எழுதியது ஏன் என்று தெரியவில்லை. இதேபோல், மொழிபெயர்ப்பு என்ற பெயரில் தமிழ் மொழிக் கொலை! என்னும் தலைப்பில் வந்துள்ள ஆசிரியர் தரப்புக் கட்டுரையின் ஒரு பகுதியைப் பாருங்கள்:
"எல்லாமே புதிய புதிய தமிழ் வார்த்தைகள். இது தமிழா? என்று நம்மை மேலும் வியக்க வைப்பதோடு நில்லாமல், எதுவும் நம் அறிவுக்குப் புரிய மறுக்கிறது. இடையிடையே தமிழில் எழுதப்பட்ட சில ஆங்கிலச் சொற்களும் நமக்குப் புரியாதது போல இருக்கிறது. கடைசிவரை தேடி நம் மொழியில் ஒரு வார்த்தைகூட கண்டுபிடிக்க முடியாமல் பெருத்த ஏமாற்றமே வருகிறது... .ஆனால், மென்பொருள் மொழி பெயர்ப்பில் என்ன நடக்கிறது? - இந்த மென்பொருள் மொழிபெயர்ப்பு என்ற சொல்லே மிகவும் தவறான மொழிபெயர்ப்பாகும்.- ஒரு மொழியை முழுவதும் அழித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பலவித விதிமுறைகளின் கீழ் மொழிபெயர்ப்பு என்னும் செயல் நடந்தேறுகிறது. ஆர்டுவேர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு வன்பொருள் என்று தமிழர் மொழிபெயர்ப்பு செய்கின்றார். ஆர்டுடிசுக் என்றால் வன்வட்டு என்கிறார் ஒருவர்; வன்தட்டு என்கிறார் ஒருவர்; வன்தகடு என்றார் ஒருவர். ஒருநாள் ஒன்றுமே புரியல கணிணியில் என்பான் அப்பாவித் தமிழன்." (கம்ப்யூட்டர் உலகம்: சூன் 2008)
இதில் குறிப்பிட்டவாறு software, hardware என்பவற்றைப் பெரும்பான்மையர் மென்பொருள், வன்பொருள் அல்லது சுருக்கமாக மென்மி, வன்மி என்றே கையாள்கின்றனர். soft என்றால் மென்மை என்றும் hard என்றால் கடினம் அல்லது வன்மை என்றும் மட்டுமே நாம் சிந்தித்து இவ்வாறு கையாளுகிறோம். soft என்பது கட்டமைப்பையும் குறிக்கும்; எவ்வாறிருப்பினும் கணிணியில் அடிப்படை உட்கட்டமைப்புப் பணியை ஆற்றுகின்றது. மக்கள் மொழியை இயந்திர மொழியில் கணித்து வழங்கும் சாப்ட்வேர் (software) என்பது கணியம் என அழைக்கப்பெறலே சரியானதாகும். கணியத்தை நமக்கு வழங்கும் கருவியாக இருக்கும் ஆர்ட்வேர் (hardware) என்பது கருவியம் எனப் பெறல் வேண்டும்.
இவை போன்றே சாப்டுகாப்பி (soft copy) என்றும் ஆர்டுகாப்பி (hard copy) என்றும் சொல்லப்படுவன முறையே மென்படி என்றும் வன்படி என்றும் குறிக்கப்படுவதும் தவறாகும். சாப்டுவேர் என்பதைக் கணியம் என்றாலும் சாப்டுகாப்பி என்பதை நாம் கணிணியில் காட்சியாகக் காணும் படி என்ற பொருளில் காட்சிப்படி என்றும் அச்சுப்படியாக நாம் எடுக்கும் ஆர்டுகாப்பி என்பதை அச்சுப்படி அல்லது கைப்படி என்றும் சொல்லுவதே முறையாகும். எனவே, கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பிழைபாடு உண்மைதான். ஆனால், கட்டுரையாளர் போன்றோர் நோக்கம் (நல்ல) தமிழில் கலைச் சொற்கள் அமைய வேண்டும் என்று இருந்தால் பாராட்டப்படவேண்டியதுதான். ஆனால், ஆங்கிலச் சொற்களை அவ்வாறே கையாள வேண்டும் என்றல்லவா வாதிட்டு நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறார். இத்தகைய போக்கு உண்மையில் சீரழிவை அல்லவா உருவாக்கும்! குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதைப் புகுத்துவதாகச் சொல்வதைப் போன்ற அறியாமைதான், தாய்த்தமிழ்ப் பயன்பாட்டைப் புகுத்துவதாகக் கூறுவதும். தமிழ்ப்பயன்பாடு சிறப்பாக இருந்தால் அல்லவா துறையறிவு சிறப்பாக வளரும்! தவறான தமிழ்ச் சொல்லாக்கங்கள் குறித்து எள்ளி நகையாடுவதோடு நிற்காமல், சரியான சொல்லாக்க முயற்சியில் ஈடுபட்டு அவற்றைப் படிப்போரிடையே பரப்ப வேண்டும்.
தமிழிலேயே எழுத வேண்டும்; படிக்க வேண்டும் என்னும் எண்ணம் பலருக்கு இருந்தாலும் நடைமுறை நேர்மாறாக இருப்பதன் காரணம் என்ன?
அயற்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை உருவாக்குகையில் பெரும்பாலானவை பொருள் விளக்கமாய் அமைகின்றன. இதனால், வினைவடிவம், பெயர் வடிவம் என்பன போன்று வெவ்வேறு வடிவங்களில் இவைபோன்ற சொற்களைக் கையாளுகையில், இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. இதுபோல் முன்னொட்டு அல்லது பின்னொட்டு சேர்க்கவேண்டிய நேர்வுகளிலும், கூட்டுச்சொல் உருவாக்கப்படும் நேர்வுகளிலும், சொல் மறைந்து தொடரே ஆட்சி செய்கின்றது. ஏழெழுத்துகளுக்கு மேல் சொற்கள் இல்லாத தமிழ் மொழியில் - ஈரெழுத்து மூவெழுத்துச் சொற்கள் அடிப்படைச் சொற்களாய் அமைந்துள்ள தமிழ் மொழியில் - உருவாக்கப்படும் தொடர் சொற்கள் உரிய பயன்பாட்டை இழந்து விடுகின்றன. தமிழில் சுருக்கமாகக் கூற முடியவில்லை; விளக்கமாகவே கூற வேண்டியுள்ளது. எனவே, சுருக்கமான அயற்சொல்லே வழக்கத்தின் காரணமாக எளிதாக உள்ளது எனப் பலர் கூறுவதால், எளிமை, வழமை முதலான போர்வைகளில் அயற்சொற்களே நிலைத்து விடுகின்றன.1
கணிணி தொடர்பான கட்டுரைகளிலும் இதழ்களிலும் நூல்களிலும் ஆங்கிலமே மேலோங்கியிருந்தாலும், கணித்தமிழ் அகராதிகளில் நல்ல தமிழ்ச்சொற்கள் கையாளப்பட்டுள்ளன. தமிழில் எழுத எண்ணுவோர் இவற்றை அறிந்து தக்கனவற்றைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தும் பொழுது பொருத்தமில்லா சொல்லாகத் தோன்றின், சொல்லியவரையோ, சொல்லப்பட்ட மொழியான தமிழையோ பழித்துக் கொண்டிராமல் சூழலுக்கு ஏற்ப பொருள் மாறுபடும் என்பதை உணர்ந்து உரிய சொல்லை அறிய முயல வேண்டும். தேடுதல் வேட்கையும் ஆர்வமும் ஈடுபாடும் முயற்சியும் இருந்தால்தான் தமிழ்ச் சொற்கள் உருவாக்கமும் பயன்பாடும் நிலைப்பும் நிகழும். பயன்பாடு இல்லாத சொல் இருந்து பயன் என்ன? நாம் கலைச் சொற்களை உருவாக்குவதன் நோக்கம், அவை அயற் சொற்களை யகற்றி அல்லது அயற்சொற்களுக்கு இடந்தராமல் நின்று நிலைத்துப் பொருள் தரவேண்டும் என்பதே!2 என உணர்ந்து நடைமுறையில் வழங்கப்படும் பழஞ்சொற்களையும் புனையப்படும் புதுச்சொற்களையும் பயன்படுத்தி உயிர்ப்பூட்ட வேண்டும்.
தமிழில் எழுதும்பொழுது விரிவாகவும் விளக்கமாகவும் எழுத வேண்டியுள்ளது. செறிவாகவும் சுருக்கமாகவும் விளக்க இயலவில்லை என்பது ஒருசாராரின் கருத்து. சொல் இடத்திற்கு ஏற்பப் பொருளைப் பெறுகின்றது என்பதை மறந்து, நாம் ஏற்கெனவே அறிந்த பொருளையே பொருத்திப் பார்க்கும் பொழுது சொல்லாக்கம் தவறாய் அமைகின்றது. இத்தவறு நேரக்கூடாது என விழிப்புடன் இருக்கையில் சொல் விளக்கமாய் அமைந்து விடுகின்றது. இதையே மற்றொரு வகையாகவும் கூறலாம். ஒவ்வொரு சொல்லும் வெளிப்படையாய்த் தெரிவிக்கும் பொருள் ஒன்று உண்டு; அதே சொல் உணர்த்திப் புரிய வைக்கும் பொருள் பல உண்டு. தெரிபொருளும் புரிபொருளும் மாறுபடுகையில், அதைச் சரியாய் உணர்த்தாவிட்டால் சொல்லாக்கம் செப்பமாய் அமையாது. எனவே, புரிபொருளை உணர்த்த வேண்டும் என்பதற்காகவும், சில நேர்வுகளில் விளக்கமான பொருளில் சொல்லை அமைக்க வேண்டிய சூழல் உள்ளது. இவ்வாறான நேர்வுகளில் சொல்லின் பயன்பாடு மிகுதியாக மிகுதியாக, சொற்சுருக்கம் இயல்பாக நிகழும் வாய்ப்பு ஏற்படும். இதை உணர்ந்து சொல்லாக்கத்தின் தொடக்கத்திலேயே குறுஞ்சொல்லையும் விளக்கச் சொல்லையும் படைப்பது விரைவான பயன்பாட்டிற்கு வழி கோலும்."3
"பழந்தமிழ்ச்சொற்களை மறந்து விடுவதாலும் தொடர்சொற்கள் அமைகின்றன. சான்றாக, அருவியை மறந்து விட்டு நீர்வீழ்ச்சி என்கிறோம். துரவு என்பதை மறந்துவிட்டு இறங்கும்படிகள் கொண்ட சதுரக் கிணறு என்கிறோம். பழந்தமிழ்ச் சொற்கள் இருக்கும்பொழுது அவற்றை உலவவிட்டு உயிர் கொடுக்க வேண்டுமேயல்லாமல், தொடர்சொற்களை அமைக்கக் கூடாது."4
ஒரு சொல்லுக்குப் பல பொருள் உள்ளன என அறிந்தும், ஒரு சில பொருளுக்கு அப்பால் எண்ணம் செல்லாமையும், அயற்சொல் வடிவம் தரும் ஒழுங்கமைவை, அதற்குரிய தமிழ்ச் சொல் வடிவத்தைப் பயன்படுத்துகையில் ஏற்படும் பொருந்தாமையும் அல்லது பொருந்தாமை உணர்வும், செவ்வை வடிவில் நாட்டம் செலுத்த விடாது அயற்சொல் கலப்பிலேயே ஈடுபாடுகாட்டச் செய்கின்றது. எனவே, நமக்குத் தேவை வெறும் சொற்பொருள் களஞ்சியம் மட்டுமல்ல; ஒரு சொல் இடத்திற்கேற்ப பொருளை உணர்த்துவதை விளக்கும் வகையில் சொற்றொடரைக் கையாண்டு விளக்கும் சொற்றொடர் - பொருள் தொடர் களஞ்சியமே ஆகும்.5
Mouse என்றால் சுண்டெலி என்றும் எலி என்றும் நேர்பெயர்ப்பாகப் பலரும் சுட்டி, நகர்த்தி எனத் தமிழில் சிலரும் குறிக்கின்றனர். அதே நேரம் cursor என்றால் கர்சர் என்றே பெரும்பான்மையரும், நகர்த்தி, சுட்டி, காட்டி என வெவ்வேறுவகையாகச் சிலரும் கூறுகின்றனர். pointer என்றால் பாயிண்டர் என்று பலரும், சுட்டி, காட்டி என்று சிலரும் குறிக்கின்றனர். ஒரே சொல்லையே ஒவ்வொருவர் வெவ்வேறு பொருளில் கையாளுவதால் படிப்பவர்க்குக் குழப்பம் ஏற்படும். mouse என்பதைச் சுட்டி என முதலில் புரிந்து கொண்ட ஒருவர், மற்றொருவரால் cursor என்பதைச் சுட்டி என்று குறித்து விளக்கியுள்ளதைப் படிக்கும் பொழுது பொருள் குழப்பம் வருவது இயற்கைதானே! எனவே, சொற்பொருள்களை வரையறை செய்து, ஒரே வகையான கலைச்சொல்லையே குறிப்பிட்ட பொருளில் கையாள வேண்டும். நகர்ந்து செல்லும் இயக்கம் கொண்ட cursor என்பதை நகரி என்றும் அதனை நகர்த்தும் இயக்கம் கொண்ட mouse என்பதை நகர்த்தி என்றும் வேறோரிட முகவரியைக் காட்டும் pointer என்பதைக் காட்டி என்றும் சொல்லலாம்.
இவ்வாறு ஒரு சொல்லே வெவ்வேறு பொருள்களில் பயன்படுத்தப்படுகிற குறைபாட்டாலும் ஆங்கிலச் சொற்களையே கையாளுவதாக ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால் கணிணியியலில் இத்தகைய குறைபாடு மிகுதியாக இல்லை. ஏனெனில் தமிழ்க்கலைச் சொற்களைப் பயன்படுத்தும் எண்ணம் இருந்தால் அல்லவா இத்தகைய இடர்ப்பாடுகளைச் சந்திக்கும் நேர்வு வரும். ஆங்கிலச் சொற்களையே பெரும்பாலும் கையாளுவதால் இத்தகைய சூழலே எழுவதில்லையே! எனினும்,
"ஒரு சொல் - பல பொருள் என்னும் நிலைமை கலைச் சொற்களைப் பொருத்தவரை தவிர்க்கப்பட்டாக வேண்டும். ஒரு பொருளை உணர்த்த ஒவ்வொருவர் ஒவ்வொரு சொல்லைக் கையாளுவதும், ஒரு சொல்லை பல்வேறு பொருளில் வழங்கி வருவதுமான நிலைமையால் ஏற்படும் இடர்ப்பாடுகளை உணர்ந்து தேக்க நிலைமையை நீக்க வேண்டும். இவ்வாறாக ஒருசொல்-பல பொருள் என்ற நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். ஒரு பொருள் இடத்திற்கேற்ப பொருட்சிறப்பினை உடைதாக இருப்பின் குறையொன்றும் இல்லை. ஆனால், கலைச்சொல் உலகில் ஒரே சொல்லையே திரும்பத் திரும்ப வெவ்வேறு சொற்களுக்கு ஈடாகப் பயன்படுத்துவதை அடியோடு நிறுத்த வேண்டும். சரியான பொருளை உய்த்துணர்ந்து சொல்லை அமைப்பின், உள்ளத்தில் புரியும் வண்ணம் கருத்தினை வெளிப்படுத்த முடியும்." 6
ஆகவே, கலைச் சொல்லாக்கத்தில் ஈடுபடும் பொழுது, (மூலச்) சொல்லுக்கு நேரான (பெயர்ப்புச்) சொல்லை அமைக்காமல், (மூலப்)பொருளுக்கு ஏற்ற (பெயர்ப்புச்) சொல்லையே ஆக்க வேண்டும். சொல் செறிவாயும் செவ்விதாயும் இருத்தல் வேண்டும். பண்பாட்டுப் பின்னணியைக் கருத்தில் கொண்டு ஆக்கப்பட வேண்டும். குன்றக் கூறல்¯ முதலான நூற்குற்றங்கள் பத்தும் சுருங்கச் சொல்லல்ß முதலான நூல் அழகுகள் பத்தும் சொல்லுக்கும் மிகப் பொருந்தும்.
"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை யறிந்து."
எனும் திருக்குறளை நினைந்து தக்க சொல்லைத் தெரிவு செய்ய வேண்டும். அயற்சொல் கலப்பை அறவே நீக்க வேண்டும். உரிய சொல் கண்டறியும் இடைநேரத்தில் அயற்சொல்லைப் பயன்படுத்த வேண்டிய தவிர்க்க இயலா நேர்வுகளில் பெயர்ப்பு மொழியின் வரிவடிவிலேயே எழுத வேண்டும்.7 எல்லா மொழிகளுக்கும் பொதுவான இச் சொல்லாக்க நெறிமுறைகளின் அடிப்படையிலேயே கணிணியாளர்கள் படைப்புகளை அளிக்க வேண்டும்.
. நேர்பெயர்ப்புச் சொற்கள்


¯ குன்றக்கூறல், குறைபடக் கூறல்,
கூறியது கூறல், மாறுபடக் கூறல்,
வழூஉச் சொல் புணர்த்தல், மயங்க வைத்தல்,
வெற்றுஎனத் தொடுத்தல், மற்றுஒன்று விரித்தல்,
சென்றுதேய்ந்து இறுதல், நின்று பயன் இன்மை,
என்று இவை ஈர் - ஐங் குற்றம் நூற்கே. (நன்னூல் நூற்பா 12)
ß சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்,
நவின்றோர்க்கு இன்மை, நனிமொழி புணர்த்தல்,
ஓசை உடைமை, ஆழம் உடைத்து ஆதல்,
முறையின் வைப்பே, உலகம் மலையாமை,
விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தது
ஆகுதல், நூலிற்கு அழகு என்னும் பத்தே. (நன்னூல் நூற்பா 13)

(தொ டர்ச்சி காண்க)

2 comments:

  1. அன்புடன் ஐயா!

    கலைச்சொல்லாக்கம் குறித்த உங்கள் பார்வையும், சொற்களும் சிறப்பானவை. இணையத்தில் தமிழ் விக்கிப்பீடியா குழுமத்தினரால், கலைச்சொல்லாக்கக் கலந்துரையாடலுக்கு என்றே உள்ள "விக்சனரி" குழுமத்தில் நீங்களும் இணைந்து கலைச்சொல்லாக்கச் சொற்களை உருவாக்க உதவுங்கள் ஐயா! அது உடனடியாக பலரதும் பயன்பாட்டிற்கு கிடைக்கக்கூடியதாக அமையும்.

    ReplyDelete
  2. அன்புள்ள திரு அருண் அவர்களுக்கு
    நன்றி. நீங்கள் கூறியவாறான எண்ணமும் உள்ளது. தனியாக கலைச்சொல் குழுமம் உருவாக்கிப் பிற குழுமங்களுடன் இணைந்து செயலாற்றலாம் என்ற எண்ணமும் உள்ளது.சில திங்கள் சென்ற பின் அவ்வாறான முயற்சியில் இறங்குகின்றேன்.அதற்கு முன்னதாகக் கணிணிச் சொல்லாக்கம் தொடர்பான என் பிற கட்டுரைகளையும் இதில் வெளியிட உள்ளேன்.கணிணி ஆர்வலர்களிடமும் தமிழ் ஆர்வலர்களிடமும் இக் கட்டுரையைப் படிக்கச் சொல்லுங்கள். நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

    ReplyDelete