Tuesday, June 8, 2010

கணிணிச் சொற்கள் 2


. நேர்பெயர்ப்புச் சொற்கள்
கணிணியியலில் ஆங்கில ஒலிபெயர்ப்பிலேயே கலைச் சொற்களும் தலைப்பெழுத்துச் சொற்களும் எண்ணிலடங்கா அளவு கையாளப்பட்டுத் தமிழ் மொழி சிதைந்து வருவதைப் பலரும் உணரவில்லை. மணிப்பிரவாளம் என்ற பெயரில் மொழிக்கொலை புரிந்து பாழ்பட்ட நிலையிலிருந்து அண்மைக் காலத்தில் மீண்டுவரும் வேளையில் ஆங்கிலக்கலப்பு விளைவிக்கும் தீங்கைப் பெரும்பான்மையர் புரிந்து கொள்ளவில்லை. இந்தியா என்று இன்று அழைக்கப்படும் இத் தமிழ்க்கண்டம் முழுவதும் ஒரு காலத்தில் தமிழே மண்ணின் மொழியாக இருந்த நிலை மாறித், தமிழ் வழங்கும் பகுதி சுருங்கியதற்குக் காரணம், பிறமொழிச் சொற்கள் கலப்பே என்பதை எண்ணி நாம் திருந்தவில்லை. உண்மை உணர்ந்த சிலரும் தமிழ்மீது பகை உணர்வு கொண்டு மொழிக் கொலை புரிகின்றனர். மொழி ஒரு கருவிதானே; எந்தச் சொல்லைக் கையாண்டால் என்ன எனக் கூறிச் சிதைப்போர், மொழி என்னும் கருவி செப்பமாக இருக்க வேண்டும் என்பதையும் கருவி செப்பமாக இல்லாவிட்டால் பயன்படுத்துவோருக்குத்தான் தீங்கு என்பதையும் மறந்து விடுகின்றனர். தமிழ் மக்களுக்குப் புரிய வேண்டும் என்னும் பேரார்வத்துடன் கட்டுரைகள், நூல்கள் முதலான படைப்புகளை வழங்குவோர், துறையறிவு இல்லாதவர்களும் எளிதில் புரிந்து கொள்ள தமிழ்ச் சொற்களையே கையாள வேண்டும் என்றும் தமிழ்ச் சொற்களைக் கண்டறியும் வேட்கையுடன் திகழ வேண்டும் என்றும் மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். பின் வரும் சில நேர்பெயர்ப்புச் சொற்களைப் பார்த்தால் தமிழ்க் கலைச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்னும் ஆர்வமும் அதற்கான முயற்சியும் ஏற்படும் எனக் கருதுகிறேன். (வினாக்குறியிட்டவை பிறரின் கருத்துகள்)
? Bit - பிட்; துண்டு
binary digit என்பதன் சுருக்கம்தான் bit என்னும்பொழுது, மூலச்சொற்களை மறந்துவிட்டுச் சுருக்கச் சொல் அடிப்படையில் துண்டு என மொழி பெயர்த்தால் தவறான பொருள்தானே கிடைக்கும். சிலர் பிட்- சிறு துண்டு, பைட்-பெருந்துண்டு; மேலும் முறையே சிறுதி (சிறு துண்டு என்பதன் சுருக்கமாம்), பெருதி; துண்டம், எண் துண்டம்; விள்ளல், எட்டு விள்ளல்/அட்ட விள்ளல்; துணுக்கு, எட்டியல் என்றெல்லாம் குறிக்கின்றனர். அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் பிட் என்பதை ஒற்றைச் சொல்லாகக் கருதி மொழி பெயர்ப்பதே ஆகும். எனினும் 1,0 என்னும் இரண்டு எண்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்குவதைக் குறிப்பதால் இருமை எண்கள், ஈரிலக்க எண்கள், இருநிலை எண்கள், இரட்டை எண்கள், ஈரடிமானம் என்று வெவ்வேறு வகையாக இச் சொல் விளக்கப்படுகிறது. எனவே சுருக்கமாக இருமம் என்று குறிப்பிடலாம். எனினும் binary என்பதன் பொருள்தான் இவ்விளக்கங்கள். பிட் ஓர் அலகு என்ற அளவில்தான் பயன்படுகிறது. இவ்வலகில் 0,1 ஆகிய ஈரெண்கள் இருந்தாலும் பயன்பாட்டில் ஏதேனும் ஒன்றைத்தான் குறிக்கும். எனவே, அளவீடாகிய அலகைக் குறிக்கையில் இருமம் என்பது தவறாகிறது. எனவே, ஓர் அலகு என்னும் நடைமுறைக் கிணங்க, ஓர்மம் > ஓர்மி என்று சொல்லலாம். அப்படியானால் பொருள் மாறுபடாதா என்றால் சொல் இடத்திற்கேற்ற பொருளைத்தானே பெற வேண்டும். எடுத்துக்காட்டாக ‘back’ என்றால் பின் எனப் பொருள். backside - பின்பக்கம்; ஆனால், back file - முன் கோப்பு என இடத்திற்கேற்ற பொருளைப் பெறுகிறது. அதுபோல்தான் பைனரி என்னும் பொழுது இருமத்தைக் குறிக்கும் சொல் பைனரி யூனிட் என்னும் பொழுது ஓர்மி ஆகிறது. இல்லாவிடில் பிட் என்பதை இருமம் என்றால் அதன் எண்மடங்காகிய பைட் என்பது எண்ணிரண்டு பதினாறு என்றாகும். எனவே, தவறான பொருள் உண்டாகும். மாறாக, எட்டு ஓர்மி (பிட்) சேர்ந்த பைட் என்பதை எண்மம்’> எண்மி என்று சொல்லலாம். Bit – ஓர்மி; Byte – எண்மி எனச் சுருக்கமாகவே குறிப்பிடலாம். இவற்றின் அடிப்படையில் பிற அளவைகளையும் காணலாம்.
Nibble - நான்கு பிட்டுகள் அல்லது ஒரு பைட்டில் பாதி; நான்கு ஓர்மி; அரையீரெண்மி என்றாகிறது. எனவே, சுருக்கமாக NIBBLE – நான்மம் > நான்மி எனலாம்.
பிட், பைட் தொடர்பான பிற சொற்களையும் பின்வருமாறு குறிக்கலாம்.
BIT DENSITY
-
ஓர்மி அடர்த்தி
BIT MAPPING
-
ஓர்மி வரையம்
BIT PARALLEL
-
ஓர்மி இணை
BIT PATTERN
-
ஓர்மிப் பாணி
BIT RATE
-
ஓர்மி விகிதம்
BIT SERIAL
-
ஓர்மித் தொடர்
BIT STREAM
-
ஓர்மி ஓட்டம்
BIT STRING
-
ஓர்மிக் கோவை
CHECK BIT
-
சரிபார்ப்பு ஓர்மி
BYTE MODE
-
எண்மிப் பாங்கு
? Bomb - குண்டு
இவ்வாறு நேரடியாகச் சொல்வதை விட அழிப்புச் செயலைச் செய்வதால் அழிப்பி என்று சொல்லலாம்.
Bomb - அழிப்பி
? Brush - புருசு, தூரிகை
இரண்டு வகை உள்ளது. தூரிகையல்லாத மின்கருவியான இது மின்னிகை எனப்படுவதே பொருத்தமாக இருக்கும். தூரிகை என்றால் வண்ணம் தீட்டுவது போன்ற பொருளாக - வண்ணத் தூரிகையாகத் - தவறாகக் கருதப்படும். இரண்டிற்கும் வேறுபாடு தெரியாமல் குழப்பம் ஏற்படும்.
Brush- மின்னிகை
? Bug - பூச்சி
முதன்முதலில் பூச்சியால் ஏற்பட்ட பிழையாய் இருப்பினும், இதனைப் பிழை என்று சொல்வதே சரியாக இருக்கும்.
Bug - பிழை
? Debugging - பூச்சி நீக்கம்
என்று சொல்வதை விடப் பிழை நீக்கல் என்பதே ஏற்றமாக இருக்கும்.
Debugging - பிழை நீக்கல்
? Cache - மறைவு, விரைவு
இடைக்காலமாகச் சேமித்து வைப்பதைக் குறிப்பது. எனவே, இடைச்சேமம் எனலாம்.
Cache - இடைச்சேமம்
? Cell - செல், சிற்றறை
பொதுவாகச் செல் என்பதற்குச் சிற்றறை என்பதும் ஒரு பொருள்தான். என்றாலும் கணிணியியலில் - கணிப்பொறியில் தகவல் அலகினைச் சேர்த்து வைக்கும் இடத்தைக் - தன் அகத்தே சேமித்து வைப்பதைக் - குறிப்பதால் அலககம் என்று சொல்லலாம்.
Cell - அலககம்
? Chain - செயின், சங்கிலி
செயற்பாடுகளின் தொடர்ச்சியை - சங்கிலித் தொடர் அமைப்பைக் குறிப்பதால் சங்கிலி என்று சொல்வதை விடத் தொடர் வினை என்று சொல்லலாம்.
Chain - தொடர் வினை > தொடரி
? Chip - செதுக்கல், சில்லு
இங்கு செதுக்கும் பணியைக் குறிக்கவில்லை. மின்னணுச் சுற்றுகள் அடங்கிய சிறு கொள்கலனைக் குறிக்கிறது. சிமிழ் என்பது சிறு கொள்கலன்தான். எனவே, செதுக்கல், சில்லு என்று எல்லாம் சொல்லாமல் சிமிழ் என்றே குறிக்கலாம்.
Chip - சிமிழ்
? Clock Pulses - கடிகாரத் துடிப்புகள்
Clock - கடிகாரம் என்றே அனைவராலும் குறிக்கப்படுகிறது. கடிகாரம் என்றால், நேரம் காட்டும் மணிப் பொறி என்றுதான் பொருள் கொள்வர். இங்கு இச்சொல், குறிப்பிட்ட நேரப்பதிவில் செய்யுமாறு கட்டுப்படுத்திக் காலமுறையில் அலைகுறிகளை (Signals) அனுப்புவதையே குறிக்கிறது. எனவே, கடிகாரம் என்பதற்கு மாற்றாகப் பதிவாரம் என்னும் புதுச் சொல்லைப் பயன்படுத்தலாம். இதனால், கடிகாரம் வேறு ; பதிவாரம் வேறு என்பது எளிதில் புரியும்.
Clock Pulses - பதிவாரத் துடிப்புகள்
Clock Counter - பதிவார மாடம்
? CPU Handshaking - சி.பி.யு கைகொடுத்தல்
இந்த இடத்தில் Handshaking என்பது கைகுலுக்கலைக் குறிக்காமல் செய்திப் பரிமாற்றத்தைக் குறிப்பதால், பரிமாற்றி எனலாம். சிபியூ என்பது மைய வனைம அலகு. எனவே, மை...பரிமாற்றி என்பதே பொருத்தமாக இருக்கும்
CPU Handshaking - மை...பரிமாற்றி
? Drill and practice - ஓடிப் பழகு
கணியறிவு பெறுவதற்கான பயிற்சிகளைக் குறிப்பதால் பயிற்சி வழிப் பழகு அல்லது பழகிப் பயிற்சி கொள் என்று சொல்லலாம். எனவே, சுருக்கமாகப் பழகிப் பயில் என்று குறிப்பிடலாம்.
Drill and practice - பழகிப் பயில்
? Dumb - ஊமை
இவ்வாறு நேருக்கு நேர் மொழிபெயர்க்காமல், தன்னுடைய செயற்பாட்டிற்கு மற்றொரு கருவியைச் சார்ந்து இருப்பதால் சார் செயலி என்று பொருள்வழி மொழிபெயர்ப்பதே சரியாக இருக்கும்.
Dumb - சார் செயலி
? Dump - திணி
அப்படியே நேருக்குநேர் மொழியாக்கம் செய்வதை விடப் பொருள் நோக்கில், - கணிணி நினைவகத்தின் ஒரு பகுதியில் சேமித்து வைக்ப்பட்ட எல்லா விவரங்களையும் வெளிப்புற கருவி ஒன்றிற்கு மாற்றுதலைக் குறிப்பதால் - சேமிக்கப்பட்ட தரவுகளை மாற்றுவதைக் குறிக்கும் இதனைச் சேம மாற்றம் என்று சொல்லலாம்.
Dump - சேம மாற்றம்
? Error message - பிழைச் செய்தி
கணிணியைக் கையாளுகையில் ஏற்படும் செயல்பாடுப் பிழைகளைக் காட்டும் செய்தி மேற்குறித்தவாறு குறிக்கப்பட்டு வருகின்றது. இதன் பொருள் கணிணியில் காட்டப்படும் செய்தியே பிழையானது என்றுதான் ஆகிறது. ஆனால், பிழையைக் குறிப்பிடும் செய்தியைப் பிழையான செய்தி என்று சொல்வது பொருந்தாது அல்லவா? செயல்பாடு சரியான பாதையில் இருந்து நழுவிச் செல்வதை - வழுவிச் செல்வதைக் குறிப்பதால், இதனை வழு குறிப்பி என்று சொல்லலாம். (வழுவைக் குறிப்பது, வழு குறிப்பி)
Error message - வழு குறிப்பி
? Face - முகம்
அச்சிடப்படும் பக்கத்தைக் குறிப்பதால் முகப்புப்பக்கம் என்பதே சரியாக இருக்கும். எனவே, சுருக்கமாக முகப்பு என்று சொல்வதே சரி.
Face முகப்பு
? Folder - மடக்கி
கோப்புகளைப் பகுத்தும் தொகுத்தும் வைக்கப்பயன்படும் போல்டர் என்பதை மடக்கி என்று குறிப்பிடுவதை விட, உறை போல் விளங்கிக் கோப்புகளை அடக்கி வைக்க உதவும் இது அடங்கல் எனப்படுவதே சரியானதாகும். Blessed folder என்பதை ஆசிர்வதிக்கப்பட்ட மடக்கி என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். blessed என்பது வாழ்த்துவதை மட்டுமல்ல சபிப்பதையும்கூடக் குறிக்கும். (Mac) என்றாலும் இச்சொல், ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கணிணியில் வேறுபடுத்திக் காட்டவே பயன்படுத்தப்படுகிறது. எனவே, சீர்அடங்கல் என்றால் சரியாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
Folder - அடங்கல்
Blessed folder - சீர்அடங்கல்
? Forth - போர்த்து
மிகுவிரைவில் செய்து முடிக்கிற ஓர் உயர்நிலைக் கட்டளை விளம்பி. எனவே, சுருக்கமாக விரைவு விளம்பி; விரைவி எனலாம்.
Forth - விரைவு விளம்பி > விரைவி
? Garbage - குப்பை
தேவையற்ற விவரங்களைக் குப்பை என்று சொல்வதை விடத் தேவையிலி என்று சொல்லலாம் அல்லவா?
Garbage தேவையிலி
? Gate - வாயில்
ஒரு பெறவும் (output) பல தரவுகளும் (input) கொண்ட மின்னணுச் சுற்றை - உள் தரவு, வெளிப் பெறல் இடுகைகளுக்கு வாய்ப்பாய் அமைவதை - இடுவாய் என்று சொல்லலாமே! இவற்றுள் AND Gate என்பது இருநிலை இடுவாய் என்றும் OR Gate என்பது மாறுநிலை இடுவாய் என்றும் NOT Gate என்பது அல்நிலை இடுவாய் என்றும் குறிக்கப்படலாமே!
Gate - இடுவாய்
AND gate - இருநிலை இடுவாய்
OR gate- மாறுநிலை இடுவாய்
NOT gate- அல்நிலை இடுவாய்
? Joy stick - மகிழ் குச்சி
களிப்புடன் விளையாடுவதால், விளையாட்டைக் களியாட்டம் என்பது பழந்தமிழ் வழக்கு; மலையாளத்தில் இச் சொல்லாட்சி இன்றும் உள்ளது. (கழி கொண்டு ஆடும் கழியாட்டம் என்பது ஆடல்வகையில் ஒன்று.) அதன் அடிப்படையில் விளையாட்டை மகிழ்ச்சிக் குறியீட்டில் சேர்ப்பது சரியாகத் தோன்றலாம். ஆனால், மகிழ் குச்சி என்னும் பொழுது நேரடிப் பொருளாக உள்ளதே தவிரப் பொருத்தமான கலைச் சொல்லாக இல்லை. களியாட்டத்திற்கான கோல் என்னும் பொருளில் களிகோல் என்றாலும் சுருக்கமாக உள்ளதே தவிர இதுவும் நேர்பொருளாகத்தான் உள்ளது. விளையாட மட்டும் இல்லாமல் பிற வகை இயக்கங்களுக்கும் பயன்படுவதால் இயக்கப் பிடி என்கிறது அண்ணா பல்கலைக் கழக வளர்தமிழ் மன்றத்தின் கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி. வேறுசொல் கண்டறியப்படும் வரை இதையே பயன்படுத்தலாம்.
Joy stick - இயக்கப் பிடி
? Language - மொழி
கணிணி மொழிகள் (computer languages) என்று சிலவற்றைக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு சொல்வது பழக்கத்திற்கு வந்து விட்டாலும் தவறான சொல்லாட்சியே, இவ்வாறு கூறுவதை மாற்றினால் நன்று. இங்கு language என்பது குறியீடுகளும் அடையாளங்களும் உடைய தொகுதி என்னும் பொருளிலேயே வருகிறது. இக்குறியீட்டுத் தொகுதியை மொழியன் என்றாவது குறித்திருக்கலாம். மொழி என்னும் பொழுது பொருள் புரியும் ஒலித் தொகுதியாகிய பேசுமொழியே நினைவில் மேலோங்குகிறது. நாம், குறியீடுகள், அடையாளங்கள் வாயிலாகக் கருத்தைத் தெரிவிப்பதால், - விளம்புவதால்- விளம்பி எனக் குறிக்கலாமே! 8
Language - விளம்பி
Query language - வினா விளம்பி
? Lifeware - உயிர்ப்பொருள்
கணிணி தொடர்பான நிகழியர் (Programmer) முதலான செயற்படுத்தும் பணியாளர்களைக் குறிப்பதால் செயலியர் என்று சொல்லலாம்.
Lifeware - செயலியர்
? Motion capture - நகர்வு/அசைவு, சிறைப்பிடிப்பு
ஏதோ நாட்டைக் கைப்பற்றி நாட்டுமக்களைச் சிறைப்பிடிப்பது போல் கூறுவது உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ள உதவாது. இயங்குநிலை அல்லது அசைநிலையைப் பதிவதைத்தான் இது குறிக்கிறது. ஆனால், பதிவு என்றால் register என்றே உள்ளத்தில் பதிவாகி உள்ளதால் வேறு சொல்லையே நாம் நாடுவோம். அசைவியக்கத்தைத் தன்வயமாகப் பதிவதற்காகக் கவர்ந்து கொள்ளுவதால் கவர்வு என்று சொல்லலாம். எனவே, ‘motion capture - அசைவு கவர்வு என்று சொல்லலாம். (கவருதல் என்றாலும் கைப்பற்றுதல் என்னும் தொனி இருப்பதாகக் கருதினால் ஈர்ப்பு என்று சொல்லலாம்.)
Motion capture - அசைவு கவர்வு/அசைவு ஈர்ப்பு
? Menu – மெனு
பட்டி என்கிறது வளர்தமிழ் மன்றத்தின் கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி. நிரல்படத் தரப்படுவதால் நிரல் என்று சொல்லலாமே. எனவே, Menu driven program - மெனு இயக்கப்படும் கட்டளை என்று சொல்லாமல் நிரல் இயக்க நிகழி என்று சொல்வோம்.
Menu நிரல்
Menu driven program - நிரல் இயக்க நிகழி
? Noise - இரைச்சல், சப்தம் என்று நேர் பெயர்ப்பாகக் கூறப்படுகின்றது.
குறுக்கீடுகளைக் குறிப்பதால் குறுக்கீடு என்றே சொல்லலாம்.
Noise - குறுக்கீடு
? Open systems - திறந்தவெளி முறைமைகள்
Open University என்றால் திறந்தவெளிப்பல்கலைக்கழகம் என்று சொல்வதைப் போல் பல இடங்களிலும் தவறாகவே கையாளுகின்றோம். Open competition என்பது திறந்தவெளிப் போட்டி அல்ல; பொதுப் போட்டிதான். குறிப்பிட்ட வகைப்பாடு என்று ஒதுக்காமல் பொதுவாக அனைவருக்கும் உரியது. அதுபோல் இங்கும் பொதுமை முறைமைகள் என்பதே சரி.
Open Systems - பொதுமை முறைமைகள்
? Prompt - காட்டி / தூண்டி
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதால், செய் சொல்லி என்று சொல்லலாம். ஆனால், அவ்வாறு குறிப்பிட்டால், ஒலி வடிவில் தெரிவிப்பதாகக் கருதலாம். எனவே, அடுத்துச் செய்ய வேண்டியதற்கான குறிப்பினை அளித்து உதவுவதால், குறிப்புதவி என்று சொல்லலாம்.
Prompt - குறிப்புதவி
? Raw data - பச்சை விவரம்
பச்சை என்பது புதிய, இளமை, பசுமை, முதலான பல பொருள்களைக் குறித்தாலும் இங்கு மூலம் என்னும் பொருள் கொள்வதே சரியாகும். எனவே, மூல விவரம் என்று சொல்வதே சரியாகும்.
Raw data - மூல விவரம்
? Scroll - அழிப்பான், திரை உருளல்
அழிப்பான் என்று சொன்னால் eraser என்று தவறாகப் பொருள் கொள்ளப்படும். மேலே சுருட்டப்பட சுருட்டப்பட மேற்பகுதி மறைந்து கீழ்ப்பகுதி தெரிவதாலும் கீழே சுருட்டச்சுருட்ட கீழ்ப்பகுதி மறைந்து மேலே தெரிவதாலும் மறைந்த பகுதியை அழிந்த பகுதியாக எண்ணிச் சொல்லாக்கம் செய்வது தவறாகும். திரை உருளல் என்றால் திரையே உருண்டு போவதாகப் பொருளாகிறது. திரையா உருள்கின்றது? திரையில் காட்சிப்பகுதிதானே உருண்டு விரியவும் சுருங்கவும் செய்கிறது. இத்தகைய அமைப்புள்ள ஓலைச் சுருள் சுருணை எனப்படும். அச் சொல் இதற்கு மிகவும் ஏற்றதாகும்.
Scroll - சுருணை
? Slave application - எடுபிடி பிரயோகம், / அடிமை - ஆணைகேள்
அடிமை என்று சொன்னால் சிறைப்பிடித்தவரை அடிமைப்படுத்தும் அடுத்த நிலையோ என்று எண்ணலாம். இவ்வாறாக நேருக்குநேர் சொல்லாக்கம் செய்வது கூறியபொருளை உணர்த்த உதவாது. தானே இயங்காமல் மற்றொன்றால் செயற்படுத்தப்படுதல் என்னும் பொருளில் சிலேவ்(slave) (application) எனப்படுகிறது. அப்பிளிகேசன் இந்த இடத்தில் விண்ணப்பம் என்ற பொருளில் வராது. பயன்பாடு என்றால் யுடிலிடி என்றாகும். செயற்பாடு என்றால் எக்சிகியூட் என்றாகும். எனவே வினை ஆற்றுவதைக் குறிக்கும் வகையில் வினைப்பாடு என்னும் புதிய சொல்லை இங்குக் கையாளலாம். வினைப்பாடு தன் முனைப்பில் இல்லாமல் மற்றொன்றால் மேற் கொள்ளப்படுவதால் - மற்றொன்றைச் சார்ந்து உள்ளதால் - சார் வினைப்பாடு என்று சொல்லலாம்.
Slave application - சார் வினைப்பாடு
? Smart peripheral - கெட்டிக்கார வெளிப்புறப் பிரிவு
Smart terminal - புத்திசாலியான முகப்பு
Intelligent terminal - கெட்டிக்கார முகப்பு
கணிணியின் வெளிப்புறத்தே அமையும் கருவிகளை வெளிப்புறப் பிரிவு என்று சொல்வதை விடப் புறக் கருவி என்பதே எளிமையாக இருக்கும். முகப்பு போல் அமையும் இக்கருவி முகப்பாகவே குறிப்பிடப்படுகிறது. வினைத்திறம் மிக்க கருவி என்பதால் smart எனப்படுகிறது. எனவே, மனிதர்களைக் குறிப்பது போல் கெட்டிக்கார அல்லது புத்திசாலியான என்ற அடைமொழிகள் பொருந்தா. எனவே, உயிரற்ற கருவி என்பதை உணர்ந்து புறத் திறன் கருவி என்றாவது புறத் திறன் முகப்பு என்றாவது சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
Smart peripheral - புறத் திறன் கருவி
Smart terminal/Intelligent terminal - புறத் திறன் முகப்பு
? Tree- மரம் ; Binary tree – பைனரி மரம், இரும மரம்
கிளைக் கட்டமைப்புடைய உரு அல்லது மர அமைப்பிலான உருவப்படம் (tree chart) என்பது பொருள். கிளைக் கட்டமைப்புடைய இதனை மரம் என்று சொல்லாமல் கிளைப்பி என்று சொல்லலாம்.
Tree - கிளைப்பி
Binary tree – இருமக் கிளைப்பி
? Forest - காடு
காடு என்பதை விடக் கிளைப்பிகளின் தொகுப்பு என்னும் பொருளில் கிளைப்பித் திரள் எனலாம்.
Forest - கிளைப்பித் திரள்
? Virus - வைரசு, நச்சுயிரி
ஒற்றைச் சொல்லாகக் கருதித் தவறாகவே குறிக்கப்படும் மற்றொரு குறிப்பிடத் தகுந்த சொல் வைரசு (virus) என்பதாகும். இதனை ஒற்றைச் சொல்லாகக் கருதுவதால், நச்சுயிரி என்னும் பொருளிலேயே பலரும் குறிக்கின்றனர். எனவே, ஆண்ட்டி வைரசு (anti-virus) எதிர் நச்சுயிரி என்றும் குறிக்கப் படுகிறது. உயிரினங்களுக்கு ஊறு செய்யும் நச்சுயிரியாகக் கொண்டு இதன் அடிப்படையில் தொடர்புடைய சொற்களை விளக்குவது என்பது அறியாமைக்கே வழி வகுக்கும். வைரசு என்பது vital information resource under seize என்றும் சொல்லப் படுகிறது. அவ்வாறாயின் இதன் பொருள் முதன்மைத் தகவல் ஆதாரத்தைக் கைப்பற்றல் என்று குறிக்கப்பட வேண்டும். எனினும் கணிணிப் பதிவுகளில், கட்டமைப்பில் சிதைவை ஏற்படுத்தும் இதனைச் சிதைப்பி என்று சொல்லலாம்; இதற்கு எதிர்ப்பான ஆன்ட்டி வைரசு (anti-virus) என்பது சிதைவு எதிர்ப்பியாகப் பணியாற்றிச் சிதைவை நீக்குவதால் சிதைவு நீக்கி எனச் சொல்லலாம்.
Virus - சிதைப்பி
Anti-virus - சிதைவு நீக்கி
. ஒலிபெயர்ப்புச் சொற்கள்
(தொடர்ச்சி காண்க)

No comments:

Post a Comment

Followers

Blog Archive