Tuesday, June 8, 2010

கணிணிச் சொற்கள் 3


. ஒலிபெயர்ப்புச் சொற்கள்
நேர் பெயர்ப்புச் சொற்களிலும் சிலர் ஒலிபெயர்ப்புச் சொற்களைக் கையாண்டு வருவன குறித்து மேலே உள்ள விவரங்கள் விளக்கும். இவை தவிர மூலச் சொற்களாகவும் தலைப்பெழுத்துச் சொற்களாகவும் சுருக்க அமைப்புச் சொற்களாகவும் ஆங்கில ஒலிபெயர்ப்புச் சொற்களைக் கையாளும் போக்கு மிகுதியாக உள்ளது. தமிழ்க் கலைச்சொற்களை நன்கு பயன்படுத்துபவர்கள் கூட, தலைப்பெழுத்துச் சொற்களை ஆங்கிலத்திலேயே பயன்படுத்துகின்றனர். அகராதிகளில் தலைப்பெழுத்துச் சொற்களைத் தமிழில் தந்திருந்தாலும் பயன்படுத்தாமையின் காரணம், உலகளாவியதாக ஆங்கிலத்திலேயே இருக்கட்டும் என்ற எண்ணம்தான். ஆனால், தலைப்பெழுத்துச் சொற்களும் தமிழில் இருந்தால் கணிணியறிவை எளிதில் பெற வாய்ப்பாக அமையும். தமிழில் இருந்தால் புரியாது என்று சொல்வதெல்லாம் மேலோட்டச் சிந்தனையே! விடுதலைப் போராளியும் சிறந்த அறிஞருமான வ..சிதம்பரனார் அவர்கள், ..சி. என்றும் தமிழ்த் தென்றல் அவர்கள் திரு.வி.. என்றும் பன்னாட்டு அமைப்பு .நா. என்றும் பணித்துறைகள் இ..., .கா.., ..ப என்றும் பல கட்சிகள் தி.மு.., ...தி.மு.., .தி.மு.. என்பன போன்றும் அழைக்கப்பட்டு எளிதில் புரிந்து கொள்ளப்படுவதை நோக்கினால், தமிழில் தலைப்பெழுத்துச் சொற்களைப் பயன்படுத்த இயலாது எனக் கருதுவது தவறே என்று புரியும். கணிணியியலில் தலைப்பெழுத்துச் சொற்கள் மிகுதியாக உள்ளமையால், ஒரு சில தலைப்பெழுத்துச் சொற்களையும் சொற்சுருக்கங்களையும் ஒலிபெயர்ப்புச் சொற்களையும் மட்டும் பார்ப்போம்.
? Baud - போ()ட் / பாடு (ஓர் அலகு) / பாட் / விள்ளல் / துண்டம்
விவரங்கள் பரிமாற்றப்படும் விரைவைக் குறிக்கிறது. முடுகு என்றாலும் விரைவு என்றுதான் பொருள். எனவே, பரிமாற்ற முடுகினைக் குறிக்கும் அலகை முடுகுமானம் என்று சொல்வது சரியாக இருக்கும். இங்கு மானம் என்பது (தேய்மானம், குறைமானம், வருமானம் என்பன போல்) அளவைக் குறிக்கும் ஒரு பின்னொட்டுச் சொல்.
Baud - முடுகுமானம்
? Biquinary- பிக்குனரி
Biquinary code என்பதற்கு இருமக்குறிமுறை என்று சொல்வதன் மூலம் biquinary என்பதை இருமம் என்கிறது வளர்தமிழ் மன்றத்தின் கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி. இவ்வாறு குறிப்பிட்டால் பைனரிக்கும் பிக்குனரிக்கும் வேறுபாடு தெரியாது. எனவே, இருபகுதிகளாக அமைந்த பதின்ம எண்முறையைக் குறிப்பதால் - ஈரைந்து பகுதிகளை அடிப்படையாகக் கொண்டதால் - பிக்குனரிஎன்பதை ஈரைமம் என்பது மிகமிகப் பொருத்தமாக, மூலச் சொல்லுக்கு ஏற்றதாக அமையும்.
Biquinary - ஈரைமம்
? Capstan – கேப்சுடன்
காந்தஇழையைச் சுழல வைக்கும் இக்கருவியைச் சுழற்றி என்று சொல்லலாம்.
Capstan - சுழற்றி
? Cartridge - கார்டிரிட்சு
கணிணி தொடர்பான பொருள்களைப் பொதிந்து வைத்துள்ள கலன் அல்லது பெட்டிஉறையான இதனைப் பொதியுறை எனப் பொதுவான சொல்லால் குறிக்கலாம். மைப்பொதிவுறையை மைக்குழல் எனச் சுருக்கமாகக் கூறுவது சிறப்பாக இருக்கும்.
Cartridge - பொதியுறை
? Diode - டையோடு
ஒரே திசையில் மட்டுமே - ஒரு முகமாகவே - மின்குறிபாடுகளைச் (சிக்னல்களைச்) செலுத்தும் ஏதி(சாதனம்) என்பதால் ஒருமுகி என்று சொல்லலாம். கருவிக்கு ஏதி என்றும் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. instrument என்பதில் இருந்து வேறுபடுத்துவதற்காகச் செயல்பாட்டிற்கு ஏதுவாய் அமையும் சிறு கருவியான device என்பது ஏதி எனப்படுதல் பொருத்தமாக இருக்கும்.
Diode - ஒருமுகி
Device - ஏதி
? Do-loop - டூ லூப்
இந்நிகழி ஆணையால் நிகழியின் குறிப்பிட்ட ஒரு பகுதி மீண்டும் மீண்டும் செயல்பட்டு அதன் மதிப்புகள் மாற்றப்பட்டு ஒரு குறிப்பிட்ட நிலை வரும் வரை தொடருவதைக் குறிப்பதால் மாறுநிலைத் தொடரி என்று சொல்லலாம்.
Do-loop - மாறுநிலைத் தொடரி
? Dongle – டாங்கிள்
கணிநிகழ்வுகள் திருடப்படுவதைத் தவிர்க்க உதவுதால் தவிரி என்று சொல்லலாம். முதலில் தனியாக அறிமுகப்படுத்தப்பட்ட இக் கணியம், இப்பொழுது பலக் கணியங்களுடனும் இணைந்து வழங்கப்படுகிறது. எனவே, அந்தந்தப் பெயர்களுடன் தவிரி என்று சேர்த்துப் பொதுச் சொல்லாகக் கையாளலாம்
Dongle - தவிரி
? ESC Key / Escape key - எஸ்க் கீ
விடுவிப்பதற்குப் பயன்படுத்தும் விசை என்பதால் விடுவிசை என்றே தமிழில் குறிக்கலாம்.
ESC Key - விடுவிசை
? Fetch – பெட்ச், விவரங்களைக் கொண்டு வா
இவ்வாறு நேர் ஒலி பெயர்ப்பாக அல்லது நீளமாகச் சொல்வதை விடக் கொணர்வு என்று சுருக்கமாகச் சொன்னால்தான் உள்ளத்தில் பதியும்.
Fetch - கொணர்வு
I/O Input / Output - இன்புட்/அவுட்புட்
Input/Output என்பன முறையே உள்ளீடு, வெளியீடு, என்றும் உள்ளீட்டுத் தரவு, வெளியீட்டுத் தரவு என்றும் உள்பதிவு, வெளிப்பதிவு என்றும் குறிக்கப்படுகின்றன. இவற்றின் முறையில் உள்ளீட்டு முறை/வெளியீட்டு முறை அல்லது இடு(முறை)மை அல்லது வரு(முறை)மை என்றால் பொருந்துமா எனத் தோன்றியது. அகத் தரவு, புறத் தரவு என்று சொன்னால் நன்றாக இருக்கும் போலும் தோன்றியது. ஆனால், ஒற்றைச் சொல்லாக இருப்பதே சிறப்பு. எனவே, கணிணிக்குத் தரப்படுவது தரவு; பெறப்படுவது பெறவு என்பதே சுருக்கமாகவும் பொருத்தமாகவும் இருக்கும்.
I/O Input / Output - /பெ; தரவு/பெறவு
? Paddle - பாடில்
மத்து எனக் குறிக்கிறது வளர்தமிழ் மன்றத்தின் கணிப்பொறிக் கலைச் சொல் அகராதி. கணிவரைகலை, கணியாட்டம் முதலியவற்றில் நகரியை மேலும் கீழும் இடமும் வலமும் திருப்ப உதவும் இது, படகை அனைத்துப்புறமும் திருப்பவும் இயக்கவும் உதவும் துடுப்பு போல் செயல்படுவதால் துடுப்பம் என்று சொல்லலாம்.
Paddle - துடுப்பம்
? ABEND - அபென்ட்
இயல்பு அல்லா முடிவைக் (ABnormalEND) குறிப்பதால் அல்லியல் முடிவு என்று சொல்லலாம். சுருக்கமாக .மு.எனலாம்.
ABEND - அல்லியல் முடிவு; .மு.
? Abnormal termination - திடீர் நிறுத்தம்
அதே போல் இயல்பு அல்லாத முடிப்பு என்பதால் அல்லியல் முடித்தம் என்றும் சுருக்கமாக அத்தம் என்றும் சொல்லலாம். (அத்தம் என்றாலும் முடிவு எனப் பொருள் உளது)
Abnormal termination - அல்லியல் முடித்தம்; அத்தம்
? ADONIS – அடோனிசு
கணிணி இயக்க இணைப்பில் இருக்கும் பொழுது தகவல் முறையில் கட்டுரை வழங்கலைக் (Article Delivery over Online Information System) குறிக்கிறது. எனவே, இணைவழித் தகவல்முறை கட்டுரை வழங்கல்; ..மு..; இணைதகவு
Adonis - ..மு..; இணைதகவு
? ADP - ஏடிபி
இதன் விரிவு Automated Data Processing என்பதாகும். தன்னியக்கத் தரவுச் செயலாக்கம் என வளர்தமிழ் மன்ற அகராதி குறிப்பிட்டுள்ளது. எனினும், data என்பது விவரணை யாகும். processing என்பது வனைவம் ஆகும். தன்னியக்க விவரணை வனைவம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். இதன் சுருக்கம்:.வி.. தன்வனைவு
ADP - .வி..; தன்வனைவு
? ALGOL /ALGORrithmic Language - அல்காரிதம்
அல்காரிதத்தைச் செய்முறைப்பாடு என்கிறார் பேராசிரியர் அ.கி.மூர்த்தி. கணிப்பொறியில் முடிவான செயல்முறைகளில் ஒரு சிக்கலைத் தீர்த்து வைப்பதற்கான சொற்றொடர்களின் வரிசை என்று விளக்குகிறார் திரு இராம்குமார். அல்காரிதம் என்பதை நெறிமுறை என்றும் அல்காரித்மிக் என்பதை நெறிப்பாட்டு என்றும் வளர்தமிழ் மன்றத்தின் கணிப்பொறிக் கலைச் சொல் அகராதி குறிக்கிறது. செய்முறையும் நெறிமுறையும் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்காகத் - தீர்வு காண்பதற்காகத்தானே உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுவாகக் குறிப்பதை விடத் தீர்வுமுறை > தீர்முறை என்பது தெளிவாகக் குறிப்பதாக அமையும். எனவே,
Algorithm - தீர்முறை
ALGORrithmic Language - தீர்முறை விளம்பி;
ALGOL - தீ.வி./தீர்விளம்பி எனலாம்.
? APL - ஏபிஎல்
இது கணிதம் சார்ந்த செயல்முறை விளம்பி (A Programming Language) என்பதால் கணிதச் செயன்முறை விளம்பி; .செ.வி./கணிவிளம்பி எனலாம்.
APL - .செ.வி./கணிவிளம்பி; கணிவி
? ASCII - American National Standard Code for Information Interchange - அசுகி
தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்கத் தேசியத் தரக் குறியீடு எனப்படும் இதனைச் சுருக்கமாகப் பரியீடு எனலாம். அப்படியாயின் அசுகி கீ போர்டு (ASCII keyboard), பரியீட்டு விசைப்பலகை என்றாகும்.
ASCII - பரியீடு;
ASCII keyboard - பரியீட்டு விசைப்பலகை
? Basic Language / Beginners All Purpose Symbolic Instruciton Codes - பேசிக் மொழி
தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கான பலநோக்குக் குறியீடுகள் அறிமுறைத் தொகுதி என்பது இதன் விரிவுப் பொருளாய் அமையும். ஆனால், கலைச் சொல்லாய் அமையாது. தொடக்கத்தில் கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய அறிமுறைகளைத் தெரிந்து கொள்வதால் அறிமுறை விளம்பி எனலாம்.
Basic Language - அறிமுறை விளம்பி
? BBC MICRO - பிபிசி மைக்ரோ, பிபிசி நுண்கணிப்பொறி
இதன் விரிவு A Home Computer Developed by British Broadcasting Corporation என்பதால் பிரிட்டன் ஒலிபரப்புக் கழக நுண்கணிணி / பி..க நு../ பிரி.ஒலி.கணி எனலாம். (corporation என்பதற்கு இலங்கையில் கூட்டுத் தாபனம் என்று சொல்கின்றனர். தாபனம் தமிழ்ச் சொல்லன்று.)
BBC MICRO - பிரி.ஒலி.கணி
? BCD - பிசிடி :
இருமக் குறியீட்டுப் பதின்மம் (Binary Coded Decimal) என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. எனவே, இகுமம் எனலாம்.
BCD இகுமம் (இருமக் குறியீட்டுப் பதின்மம்)
? BCPL - பிசிபிஎல்
ஒரு முறைமை வனைம விளம்பியின் பெயர்; மு..வி.; வனைவி
BCPL - வனைவி
BIOS - பயாசு
Basic Input/Output System எனப்படும் இதனை அடிப்படை தரவு/பெறவு முறை என்று சொல்லலாம்.
BIOS - ..பெ.மு.
? CAD – கேட்
Computer-Aided Design என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. எனவே, கணியுதவி வரையம்; .../கணி வரை எனலாம்.
CAD – .../கணி வரை
? CAI – கேய்
Computer-Aided Instruction என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. எனவே, கணியுதவி அறிமுறை எனலாம்.
CAI – .../கணிமுறை
?CAMகேம்
Computer-Aided Manufacturing என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. எனவே, கணியுதவி உற்பத்தி எனலாம்.
CAM...; கணித்தி
? CBX - சி.பி.எக்சு
Computer Controlled Branch Exchange என்பதன் சுருக்கக் குறியீடு. கணிக் கட்டுப்பாட்டுக் கிளை நிலையம் எனலாம்.
CBX - ..கி.நி./ கணிக்கிளையம்
? C-DAC - சி-டேக்
Centre for Development of Advanced Computing என்பதன் சுருக்கக் குறியீடு. சிறப்புக் கணிணி மேம்பாட்டு மையம் > சி..மே.மை > கணிமேலம் எனலாம். (மையம், மத்தியம் ஆகியவற்றைத் தமிழ்ச் சொற்கள் அல்லவெனச் சிலர் கருதுகின்றனர். இவை அறிவியல்அடிப்படையிலான தமிழ்ச் சொற்களே.)
C-DAC - கணிமேலம்
? CIM - சி..எம்.
கணிணித் தரவு நுண்படம் (Computer Input Microfilm) என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. எனவே,..நு. எனச் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
CIM - கதநு.
? COBOL - கோபால்
Common Business Oriented Language என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. பொது வணிகமுக விளம்பி; வணிவி.
COBOL - வணிவி
? CPL - சிபிஎல்
Combined Programming Language என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. தொகுப்பு நிகழி விளம்பி ; தொநிவி
? CPL - சிபிஎல்
Character Per Line என்பதற்கும் தலைப்பெழுத்துக் குறியீடு. வரி ஒன்றிற்கு எழுத்துரு எத்தனை எனக் குறிக்கும். ... எனலாம்.
CPL - ...
? CPM - சிபிஎம்
Control Program – Microprocessor என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. கட்டுப்பாட்டு நிகழி - நுண்வனைமம்; .நி.நு.வனை. எனலாம்.
CPM - கநிநுவனை.
? CPU - சிபியு
Central Processing Unit என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. மைய வனைம அலகு எனலாம். மை...; மைவனை
CPU - மைவனை
? DBMS– டிபிஎம்எசு
Data Base Management System என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. விவரணைத் தள மேலாண் முறை எனலாம். வி..மே.மு.; விவமேல்
DBMS விவமேல்
? DCE - டிசிஇ
Data Communications Equipment என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. விவரணைத் தொகுப்புக் கருவி எனலாம். வி.தொ..; விவத்தொகி
DCE - விவத்தொகி
? EBCDIC - ஈபிசிடிஐசி
Extended Binary Coded Decimal Interchange Code என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. நீட்சி ஓர்மிக் குறியீட்டு பதின்மப் பரிமாற்றக் குறியீடு எனலாம்.
நீ..கு...கு. ; எளிமை கருதி நீட்டீடு எனலாம்.
EBCDIC - நீட்டீடு
? EDP - ஈடிபி
Electronic Data Processing என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. மின்னணு விவரணை வனைமம் > மிவிவனை எனலாம்.
EDP - மிவிவனை
? ENIAC - ஈனியாக்
Electronic Numerical Integrator And Calculator என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. மின்னணு எண் ஒருங்கிக் கணக்கி; மிஎஒக; எளிமை கருதி, ஒருக்கி எனலாம்.
ENIAC - ஒருக்கி
? EOF - இஒஎஃப்
End Of File என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. கோப்பு முடிவு ; கோ.மு.
EOF - கோ.மு
? EOM இஓஎம்
End OfMessage என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. செய்தி முடிவு; செ.மு. EOM செ.மு.
? EOT - இஓடி
End Of Transmission என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. மாற்றீட்டு முடிவு; மா.மு.
EOT - மா.மு.
? EPROM / Erasable Programmable Read-Only Memory - ஈப்ராம்
புரோகிராம் என்பதை மாற்றக்கூடிய என்பதைவிட நிகழ்வை மாற்றி யமைக்கக்கூடிய என்னும் பொருளில், வகுக்கக்கூடிய எனக் குறிப்பது ஏற்றதாக இருக்கும். எனவே, அழிக்கவும் படிக்கவும் வகுக்கவும் கூடிய ஏற்றம்; அழிவகு படி ஏற்றம்; அவபஏ; அழிஏற்று என்று குறிக்கலாம்.
EPROM அழிஏற்று (அழியேற்று)
? Fortan / Formula Translation - போர்ட்ரான்
பார்முலா சூத்திரம், டிரான்சுலேசன் மொழி மாற்றம் என்றே பலரும் பொருள் விளக்கம் தருகின்றனர். பார்முலா என்பதை வாய்ப்பாடாகக் கருதாமல் கட்டளை விதி எனப் பொருள் கொள்ள வேண்டும். அதுபோல் மொழி மாற்றம் என்பதை விட நிலைமாற்றம் என்பது ஏற்புடைத்தாய் இருக்கும். இவற்றின் அடிப்படையில்,
Fortan - விதி மாற்றம்; (விதி மாற்றீடு)
Fortan Language - விதி மாற்ற விளம்பி (விதி மாற்றீட்டு விளம்பி) எனலாம்.
? HLL - எச்எல்எல்
HIgh Level Language என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. உயர்நிலை விளம்பி; .நி.வி
HLL - .நி.வி
? IC ஐசி
Integral Circuit என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. ஒருங்கிணைந்த மின் சுற்று ; ஒருமின்
IC ஒருமின்
IBM-PC (Personal Computer promoted by IBM) – ஐபிஎம் பிசி
பன்னாட்டு நிறுவனங்களின் பெயர்களைத் தமிழில் எவ்வாறு குறிக்க வேண்டும் எனத் தமிழக அரசு சார்பில் பரிந்துரைத்து அதனையே அவர்களும் குறிக்குமாறு செய்ய வேண்டும். இல்லையேல் ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையாகக் குறிப்பிட, ஒவ்வொன்றும் வெவ்வேறு அமைப்போ என்னும் ஐயத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஐபிஎம் என்பதைப் பின்வருமாறு குறிப்பிடப் பரிந்துரைக்கலாம்.
பன்னாட்டு வணிகப் பொறியத்(தால் உருவாக்கப்படும்) தனியர் கணிணி/
IBM-PC – பவபொ தகணி
? INFLIBENT– இன்பிலிபெண்ட்
இந்திய நூலகங்களையும் நூற்தகவல்மையங்களையும் இணைக்கும் கணிணித் தகவல் வலையமைப்பு. நூற் தக வலை
INFLIBENT - நூற் தக வலை
? IOCS - ஐஓசிஎசு
Input Output Control System என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. தரவு பெறவு கட்டுப்பாட்டு முறைமை ; .பெ..மு
IOCS - .பெ..மு
? ISD - ஐஎசுடி
International Subscriber Dialling என்பதனை நேரடியாக மொழி பெயர்ப்பதை விட, நேரடியாக இணைப்பு வழங்கப்படுவதை நேரி எனச் சுருக்கமாகக் குறிப்பிட்டு,
S T D - புற நேரி
ISD - அயல் நேரி
என்று சொல்லலாம்.
? ISO - INTERNATIONAL STANDARDS ORGANISATION - ஐஎசுஓ
ஆனால் INTERNATIONAL ORGANISATION FOR STANDARDIZATION என்பதுதான் சரி.எனவே, தரப்படுத்துப் பன்னாட்டு அமைப்பு; ...
ISO - ...
? LASER/ Light Amplification bythe Stimuated Emission of Radiation - லேசர்
வளர்தமிழ் மன்றத்தின் கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி லேசர் என்றே குறிப்பிட்டிருந்தாலும் கதிர் வீச்சு தூண்டுஉமிழ் ஒளிப் பெருக்கம் என்கிறார் பேராசிரியர் அ.கி.மூர்த்தி. (அறிவியல் அகராதி: மணிவாசகர் பதிப்பகம்) தூண்டிய கதிர்வீச்சு உமிழ்தலின் மூலம் ஒளி பெரிதாக்கல் என்கிறார் திரு இராம்குமார் (கணிப்பொறி அகராதி: சைவச் சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு). இவ்வாறு பொருள் விளக்கம் கொடுத்திருந்தாலும் லேசர் என்றே குறிப்பதால் சுருங்கிய சொல்லின்றிப் பயன்பாட்டில் இடர்ப்பாடு ஏற்படுகின்றது. ஒளிமிகி என்றாலும் ஒளியை மிகுவிப்பது என்ற அளவில் ஓரளவு பொருத்தமாகவே இருக்கிறது. ஆனால் இரண்டு சொற்களாகின்றது. கதிர் என்றால் கதிர் வீச்சு, ஒளி, ஒளிப் பெருக்கம், வெளிப்படுதல் எனப் பொருள்கள் உள்ளன. பொதுவான சொல்லின் அடிப்படையில் கதிரை என்று சொல்லலாம். லேசர் என்றாலே ஒளியோடு தொடர்புள்ளது எனப் பதிவது போல் ஒளி என்ற சொல்லே நேரடியாக இருந்தால் நன்று என்று எண்ணத் தோன்றும். கதிர், கதிரவன், கதிரொளி எனக் கதிரும், ஒளி என்னும் பொருள் விளக்கமாய் அமைவதையும் கதிர் வீச்சுப் படம் என்னும் பொழுது கதிர் வீச்சினைப் புரிந்து கொள்வதையும் கதிர்த்தல் என்னும்பொழுது ஒளி விடுதலையும், ஒளி பெருகுதலையும் குறிப்பதையும் நோக்கும் பொழுது கதிர்(வீச்சுத் தூண்டுதல்) மூலம் (ஒளிக்)கதிரைக் கதிர்த்தலால்(பெருக்குவதால்) கதிரை எனப்படுவதாகக் கொள்ளலாம். இவ்வாறு ஒற்றைச் சொல்லான கதிரை என்பது லேசர் என்பதற்குப் பொருத்தமாக உள்ளதைப் புரிந்து கொள்ளலாம்.ஆனால் செந்தமிழும் நாப்பழக்கம். இப்படிப்பட்ட சொற்களைக் கதிரைப் பண்டுவம் (laser treatment) மேற்கொள்ளப்பட்டது என்று சொல்வது போல் உரிய இடங்களில் பயன்படுத்திப் பழக்கப்படுத்தினால்தான் எளிதாகப் புரியும். சுருங்கிய சொல்தான் ஆங்கிலச் சொற்களை அகற்ற உதவும்.
LASER - கதிரை
? LISP – லிஸ்ப்
List Processing என்பதன் சுருக்கம், எண் அல்லாத விவரங்களைப் பயன்படுத்துவதற்கான வனைவமைப்பு; எனவே, அல்லெண் விவர வனைவு > விவனை எனலாம்.
LISP - விவனை
? Memory - நினைவு, நினைவகம்.
உயிரினங்களுக்குத் தனிச் சிறப்பாக உள்ள நினைவாற்றலை உயிரற்ற பொறிக்குக் கூறுதல் பொருத்தமாக இல்லை. மீள அறிவதற்காக உள்ளத்தில் கருத்தினை ஏற்றுவதால் ஏற்றம் என்றும் நினைவு குறிக்கப் பெறும். இங்கு பதிவுகளை மீள் பார்வைக்காக ஏற்றுவதால் ஏற்றம் என்று சொல்வது மிகச் சரியாக இருக்கும். ஆதலின்
Memory - ஏற்றம் என்று கையாண்டால் பழகப் பழக இச் சொல் ஏற்றதாகவே விளங்கும்
எனவே, இதன் அடிப்படையில்,
RAM/Random Access Memory - (ராம்) - நேஅஏ / நேர் அணுகு ஏற்றம்
RO/Read only – (ஆர்..) பம / படிக்க மட்டும்
ROM/Read only memory - (ரோம்) பமஏ / படிக்க மட்டுமான ஏற்றம்
PROM/Programmable Read Only Memory - (ப்ரோம்) நி..../
நிகழேற்பு படிக்க மட்டுமான ஏற்றம்
Memory Address - ஏற்ற முகவரி
Memory Allocation - ஏற்ற ஒதுக்கீடு
Memory Capacity - ஏற்றத் திறன்
Memory Chip - ஏற்றச் சிமிழ்
Memory Map - ஏற்ற வரைவி
என்று சொல்வது சரியாக இருக்கும்.
? Modem (Modulation/Demodulation) - மோடம்
தரவை மாற்றித் தரும் கருவி; கணிணியில் இருந்து தொலைபேசிக் கம்பிகள் வழியாக அனுப்புவதற்காக அல்லது தொலைபேசிக் கம்பியில் இருந்து கணிணிக்கு வந்துசேருவதற்காகத் தரவினை மாற்றித் தரும் கருவி; தருவி
Modem - தருவி
? MPU- Micro Processor Unit – எம்.பி.யு
Process என்பதற்குச் செயல், செயல்முறை, செயலாக்கம், படிமுறை, வளர்ச்சி முறை எனப் பலவகையாகக் கூறுகின்றனர். சொல்லை விளக்குவதற்கு இவை உதவினாலும், சொற்பொருளை முழுமையாக விளக்கும் கலைச்சொல்லாக எதுவும் இல்லை. மண்பானை முதலான மண்பாண்டங்கள் செய்வதைப் பார்க்கிறோம். படிப்படியாக உருவாக்கம் நடைபெறுகிறது. ஒரு நிலையில் இருந்து இடைவெளிவிட்டு வேறொரு நிலைக்கும் செல்ல முடியாது. இதை வனைதல் என்பர். வனைதல் என்றால உருவாக்கம், அழகூட்டி அணிசெய்தல் என்றெல்லாம் பொருள் உண்டு. இத்தகைய படிப்படியான செயற்பாட்டைத்தான் Process என்பது குறிக்கிறது. எனவே, வனைதல் அடிப்படையில் வனைமம் என்று குறிப்பது பொருத்தமாக இருக்கும். பழஞ்சொற்கள் அருமை தெரியாமல்தான் நாம் புதுச் சொற்கள் உருவாக்கத்தில் தடுமாறிக் கொண்டிருக்கின்றோம். பழஞ்செல்வங்களை மீட்டுருவாக்கம் செய்தாலே நாம் எண்ணற்ற கலைச் சொல் செல்வங்களைக் காண இயலும். இந்த இடத்தில் வனைமம் என்று கொண்டால் நுண்வனைம அலகு என்பது சரியாக இருக்கும்.
Process - வனைமம்
MPU- Micro Processor Unit - நுண் வனைம அலகு/நு...
? On-line - ஆன்லைன்; ? Off-line - ப்லைன்
இவற்றை முறையே நேர்முகம், அணை முகம் என்கிறார் திரு இராம்குமார் (கணிப்பொறி அகராதி: சைவச் சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு) இயக்கம் இணைப்பில் உள்ள நிலையைக் குறிப்பது online - இணைநிலை என்றும், இணைப்பு அணைந்து உள்ள நிலையைக் குறிப்பது offline -அணைநிலை என்றும் சொல்லப்படுவதே ஏற்றதாக இருக்கும்.
Online -இணைநிலை (சுருக்கமாக இணைவு)
Offline அணைநிலை (சுருக்கமாக அணைவு)
? Pixel / Picture Element - பிக்செல்
ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்துவதைவிடக் கூறுபடுத்திப் படங்களைத் தருவதால் படக்கூறு என்று சொல்லலாம்.
Pixel–படக்கூறு
? PL/1 - Programming Language-1 - பி.எல்.1/கட்டளையிடல் மொழி-1 / நிரல் மொழி
language என்பதை விளம்பி என்று முன்னரே கண்டுள்ளோம். Program என்பது நிகழி. இவற்றின் அடிப்படையில் நிகழி விளம்பி-1
என்பதே சரியாகும்.
? Program - அறிவுறுத்தல், ஆணைத் தொகுப்பு, கட்டளை, செயல் திட்டம்,வழியமைப்பு, வழிமுறை, நிகழ்வரை, கட்டளை, ஆணை
இவ்வாறு இச்சொல் பலவகையாகக் குறிக்கப்படுகின்றது.என்ன நிகழ்த்த வேண்டும் எனக் கணிணிக்குத் தரப்படும் அறிவுறுத்தம். கணிணியில் செயல்பாட்டை நிகழச் செய்வதால் நிகழி என்று சொல்லலாம். இயல்பாக, program அல்லது programme என்றால் நிகழ்ச்சி நிரல் என்றே அறியப்படுவதால் அதன் அடிப்படையில் நிகழி என்று சொல்வது எளிதில் பதியும்.
Program - நிகழி
Program Compatibility -நிகழி ஏற்பம்
Program Chaining -நிகழித் தொடரி
Program Library – நிகழியகம் (Library - நூலகம் என்பது இங்கு பொருந்தாது. நூல்கள் தொகுத்து வைக்கப்படும் இடமன்று. நிகழிகளை ஒழுங்கு முறையில் சேர்த்து வைக்கும் தொகுப்பு; எனவே, நிகழியகம் என்பதே சரியாக இருக்கும்.)
Programmer - நிகழ்த்துநர்
? RPG Report Program Generation Language - ஆர்.பி.ஜி / அறிக்கை கட்டளை உற்பத்தி மொழி
‘Generation' என்பதற்கு உற்பத்தி என்று சொல்வதை விட உருவாக்கம் என்பது பொருத்தமாக இருக்கும். எனவே,
RPG - அறிக்கை நிகழி உருவாக்க விளம்பி; .நி..வி.; அறிநிவி
? SBC– எஸ்பிசி
தனி அட்டைக் கணிப்பொறி (Single Board Computer) என்பதன் தலைப்பெழுத்துக் குறியீடு. எனவே, ... எனச் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
SBC... (தனி அட்டைக் கணிப்பொறி)
? SEA-ME-WE: இவ்வாறே குறிப்பிடப்படுகிறது.
South East Asia Middle - East Western Europe என்பதன் சுருக்கம். தென்கிழக்கு ஆசிய, மத்தியக் கிழக்கு மேற்கு ஐரோப்பா எனலாம். தெ.கி.-.கி.மே.. எனச் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
SEA-ME-WE - தெ.கி.-.கி.மே..
? WORM/ write once read many times வோர்ம்
ஒருமுறை எழுது பன்முறை படி/ஒஎபப; எழுபடி என்று காரணக் குறியீட்டுச் சுருக்கமாகவும் கொள்ளலாம்.
Worm - ஒஎபப; எழுபடி
? WYSIWYG - What You See Is What You Get - விசுவிக்
இஃது அச்சில் வருவதைச் சரியாகப் பார்ப்பதற்குப் பயன்படுகிறது. எனவே, அச்சுக் காட்சி எனலாம். அப்படியேதான் சொல்ல வேண்டும் என விரும்பினால் என்ன காண்கிறாயோ அதுவே கிடைக்கும் (எகாஅகி) என்று சொல்லாமல் காண்பதே கிடைக்கும் - கா.கி. எனலாம்.
WYSIWYG - கா.கி.
Microsecond - மைக்ரோ நொடி, நுண் நொடி
Millisecond - மில்லி நொடி
Nanosecond - நானோ நொடி
Picosecond - பீக்கோ நொடி
Kilobyte - கிலோ பைட்
Megabyte - மகா பைட்
Gigabyte - கிகா பைட்
மைக்ரோ, மில்லி, நானோ, பீக்கோ, கிலோ, மெகா, கிகா முதலான அளவைகளெல்லாம் கணிணியியலுக்கு மட்டுமே உரியன அல்ல. கணக்கறிவியலில் இருந்து பயன்படுத்தப்படும் பொதுவான சொற்களே. இவையும் எல்லா இடங்களிலும் தமிழிலேயே குறிக்கப்பட வேண்டும். வேறு வேலை இல்லையா? உலகளாவிய கணக்குச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியதுதானே! என்பர் சிலர். உண்மையில் பழந்தமிழ்நாட்டிலேயே வேறு எவ்வினத்திலும் இல்லாத அளவு மிகமிகக் கூடுதல் மதிப்பிலும் மிகமிகக் குறைந்த மதிப்பிலும் எண்களைப் பயன்படுத்தி வந்தது தமிழினமே! இன்றும் பல மொழியினர் தத்தம் மொழியிலேயே எண்களைக் குறிப்பிட்டு வருகின்றனர். அவ்வாறிருக்க நாம் நாம் பழஞ் செல்வத்தைக் குப்பையில் போடாமல் பேணிக் காத்துப் பயன்படுத்துவதே சரியானதாகும். ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், நூறாயிரம்/இலக்கம், பதின்நூறாயிரம்/பத்து இலக்கம், கோடி, பத்து கோடி, ஆயிரம் கோடி, நூறாயிரம் கோடி, பதின்நூறாயிரம் கோடி, மகா கோடி என்ற முறைகளில் எண்களை மதிப்பைக் குறிப்பிட்டு வந்து, பின்னர், சங்கு, விந்தம் முதலான குறியீட்டுப் பெயர்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். (இவ்வாறு பயன்படுத்தியதற்கும் ஏதோ காரணம் இருந்திருக்க வேண்டும்) அவை வருமாறு:
கோடி கோடி = மகா கோடி 1014
மகா கோடி கோடி = சங்கு( சங்கம்) 1021
சங்கு கோடி = மகா சங்கு ( மகா சங்கம்) 1028
மகா சங்கு கோடி = விந்தம் 1035
விந்தம் கோடி = மகா விந்தம் 1042
மகாவிந்தம் கோடி = பதுமம் 1049
பதுமம் கோடி = மகாபதுமம் 1056
மகா பதுமம் கோடி = குமுதம் 1063
குமுதம் கோடி = மகா குமுதம் / சிந்து 1070
சிந்து கோடி = மகாசிந்து 1077
மகா சிந்து கோடி = வெள்ளம் 1084
வெள்ளம் கோடி = மகா வெள்ளம் 1091
மகா வெள்ளம் கோடி = பிரளயம் 1098
மகா பிரளயம் கோடி = சஞ்சலம் 10105
சஞ்சலம் கோடி= மகா சஞ்சலம் 10112
மகாசஞ்சலம் கோடி= வலம்புரி10119
வலம்புரி கோடி = மகாவலம்புரி 10126
மகாவலம்புரி கோடி தன்பனை 10133
தண்பனை கோடி = மகா தண்பனை 10140
மகாதண்பணை கோடி= கண்வளை 10147
கண்வளை கோடி= மகாகண்வளை 10154
மகாகண்வளை கோடி = அற்புதம் 10161
அற்புதம் கோடி = மகா அற்புதம் 10168
மகா அற்புதம் கோடி = உற்பதம் 10175
உற்பதம் கோடி = மகா உற்பதம் 10182
மகா உற்பதம் கோடி = அனந்தம் 10189
(இவற்றில் சில பாட வேறுபாடுகள் உள்ளன. பூரி முதலான பல்வேறு எண்களும் குறிப்பிடப்படுகின்றன. எனினும், எண்களில் இன்றைக்கும் பயன்படுத்தப்படாத மிகஉயர் மதிப்புகளைப் பழந்தமிழ் மக்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது மட்டும் மறுக்க முடியாத விந்தையான உண்மையாகும்.) இவ்வாறு உயர்மதிப்பு எண் பயன்பாடுகளையும் குறைமதிப்பு எண் பயன்பாடுகளையும் கொண்டிருந்த நாம், இப்பொழுது வறியவர் போல் அடுத்தவர் செல்வத்தை இரவல் வாங்க வேண்டிய தேவையில்லை. எனவே, கணிணியில் குறிப்பிடப்படும் எண்மதிப்புகளையும் பின்வருமாறு தமிழிலேயே குறிப்பிடலாம்.
4 இருமம் (4 Bits) 1 நான்மம் (1 Nibble)
8 இருமம் (8 Bits) 1 எண்மம் (1 Byte)
1024 எண்மம் (1024 Bytes) 1 அயிரை எண்மம்
(1 Kilo Byte)
1024 அயிரை எண்மம் (1024 K.B) 1 மா அயிரை எண்மம் (1
Mega Byte)
1024 மா அயிரை எண்மம் (1024 MB) 1 பேரயிரை எண்மம்
(1 Giga Byte)
1024 பேரயிரை எண்மம் (1024 GB) 1 மாப்பேரயிரை எண்மம்
(1 Tera Byte)
1024 மாப்பேரயிரை எண்மம் (1024 TB) 1சீரயிரை எண்மம்
(1 Petta Byte)
1024 சீரயிரை எண்மம் (1024 PB) 1 மாச்சீரயிரை எண்மம்
(1Exa Byte)
1024 மாச்சீரயிரை எண்மம் (1024 EB) 1செவ்வயிரை எண்மம்
(1 Zeetta Byte)
1024 செவ்வயிரை எண்மம் (1024 ZB) 1 மாச் செவ்வயிரை எண்மம்
(1Yotta Byte)
கீழ் வாய் எண்களையும் பழந்தமிழ் முறையில் பின்வருமாறு குறிக்கலாம்.
deci-
10-1
கீழ்ப் பதின்
centi-
10-2
கீழ் நூறன்
milli-
10-3
கீழ் அயிரை
micro-
10-6
கீழ் மீ அயிரை
nano-
10-9
கீழ்ச் சிற்றயிரை
pico-
10-12
கீழ் மீச் சிற்றயிரை
femto-
10-15
கீழ்ச் சீரயிரை
atto-
10-18
கீழ் மீச் சீரயிரை
எனவே, மைக்ரோசெகண்ட் என்பதை கீழ்மீஅயிரை என்றும் மில்லிசெகண்ட் என்பதை கீழயிரை நொடி என்றும் நானோசெகண்ட் என்பதை கீழ்ச் சிற்றயிரை நொடி என்றும் பிக்கோ செகண்ட் என்பதை கீழ் மீச்சிற்றயிரை நொடி என்றும் அழகுபடச் சொல்லலாம். சுருக்கமான கலைச் சொற்களை வலியுறுத்துகையில் இங்கு மாறாகச் சற்று நீளத் தொடரைக் கூறுவானேன் என்று எண்ணலாம். எண்கணக்கில் சுருக்கமாகச் சொல்வதை விட உள்ளவாறே சொல்வது எண்களை எளிதில் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.
நுண்மணல் என்னும் பொருள் தரும் அயிர் என்னும் சொல்லில் இருந்துதான் ஆயிரம் உருவாகியது என்று தமிழறிஞர்கள் தெளிவாக்கியுள்ளனர். அயிர் என்னும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு அயிரை என இங்கு குறிப்பிடப்படுகிறது. மா என்றால் பெரிய என்று பொருள்; மீ என்றால் மிகவும் என்று பொருள்; பின்ன இலக்கங்கள் கீழ்வாய் இலக்கம் எனப்படும். இவற்றின் அடிப்படையில் சுழிக்குக் கீழான எண்கள் கீழ் என்று சேர்த்துக் கூறப்பட்டுள்ளன. கீழ் மீ அயிரை என்பது மீ கீழ் அயிரை எனப் பொருள் கொள்ள வேண்டும் (இல்வாய், வாயில் என்றாவது போல்).
தமிழில் எண்ணித் தமிழிலேயே எழுதத் தொடங்கினால் அரிய கலைச் சொறகளைக் கூட அழகு தமிழில் அருமையாகக் கூற இயலும். கணிணியியலுக்கான இதழ்கள் சில வந்தாலும் தினத்தந்தி, தினமலர் முதலான பல்வேறு நாளிதழ்களில் வாரந்தோறும் கணிணியறிவை வளர்க்கவென்றே படைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. பாடநூல்களாகவும் கணிணிப் பயிற்சி மையங்கள் வெளியிடும் பயிற்சி நூல்களாகவும் பொதுவாகவும் பல்வேறு நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனினும் பெரும்பான்மையும் ஒலி பெயர்ப்புச் சொற்களையே கையாண்டுள்ளன. அவையனைத்தையும் விரிப்பின் நூலாகப் பெருகும். எனவே, இக்கட்டுரையில் குறிப்பிட இயலவில்லை. மேலும், பலரும் ஒரே வகையாகக் கையாண்டுள்ள சூழல்களில் சிலரது பெயர்களை அல்லது எடுக்கப்பட்ட இதழ்கள் அல்லது நூல்கள் பெயர்களைக் குறிப்பிடின் ஆர்வலர்களைக் குற்றம் சுமத்துவதுபோல் கருதப்படும் என்பதால் அவ்விவரங்களும் அளிக்க வில்லை. அத்தகைய சொற்ககளில் அகராதிகளிலும் தமிழ்க் கலைச்சொற்கள் இடம்பெறாத நேர்வுகள் சில மட்டுமே இங்கு எடுத்தாளப்பட்டுள்ளன. (அறிவியல் தமிழறிஞரின் அகராதி நல்ல தொகுப்பு நூலாக இருப்பினும் புத்தாக்கச் சொற்கள் இன்மையின் இங்கு எடுத்தாளப்படவில்லை.) கணிணியறிவைத் தமிழ்வழி வழங்க விழையும் ஆர்வலர்கள் இனியாவது தமிழ்ச் சொற்களையே கையாள முன்வருவார்களாக!
தமிழ்ப்படைப்புகளில் அயற் சொற்களும் கிரந்த எழுத்து முதலான அயல் எழுத்துகளும் பயன்படுத்தக்கூடா; இக்கட்டுரையில் எடுத்துக் காட்டு வதற்காகவும் பிறர் கையாண்டதை மேற்கோளாகக் காட்டவும் அத்தகைய நேர்வு நிகழ்ந்துள்ளது. ஆனால், இதனை முன்மாதிரியாகக் கருதக் கூடாது, இலங்கையிலும் ஈழத்திலும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாமல் நல்ல கலைச் சொற்களைப் பயன்படுத்துகையில் தாய்த் தமிழகத்தால் ஏன் முடியாது? என்ற எண்ணம் வரவேண்டும். உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து அனைத்துத் துறைகளிலும் தமிழில் எண்ணுவதற்கு வழி வகுக்கும் வகையில் எளிய இனிய செவ்விய தமிழில் எழுத வேண்டும். அதற்கு கணிணியமைப்புகளும் அறிவியல் துறை யமைப்புகளும் உதவ முன்வரவேண்டும்.
பல்வேறு கலை, அறிவியல் துறைகள் இன்னும் தமிழில் அறிமுகமாகா நிலையில் உள்ளன. ஆனால், இவற்றை மொழிமாற்றம் செய்கையில் உதவ வேண்டிய கலைச் சொல் கருவூலம் வெறுமையாய்க் காட்சி தந்து நம் வறுமையைப் புலப்படுத்துகின்றது. கலைச்சொல் கருவூலத்தை நிலைத்த நிறைவுடன் காணவிழைவோர், சொல்லாக்க முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் நோக்கத்தில் ஒன்றுபடுவோர் வழிமுறைகளில் மாறுபட்டு வளங்காணும் வகையின்றி உள்ளனர்.9
ஆதலின் கலையியல் ஆர்வலர்கள், தமிழ்ப்புலமையர், சொல்லாக்கநெறி ஆட்சியர் ஆகியோர் ஒன்றிணைந்து புத்தம்புதுக் கலைச் சொற்களை உடனே உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பழந்தமிழ்ச் சொல் வளத்தை வீணாக்காமல் இம்முயற்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கணிணியியல் கட்டுரையாளர்கள், நூலாசிரியர்கள், இதழாளர்கள், உரையாளர்கள் ஆகியோருக்குச் சொல்லாக்கப் பயிற்சிகள் அளிக்க வேண்டும். தமிழ்க்கலைச் சொற்களைப் பயன்படுத்தும் நூல்களை மட்டுமே பாட நூல்களாக வைக்க வேண்டும்; கலப்பு நடையைக் கைவிட்டு நல்ல தமிழில் எழுதப்படும் நூல்களுக்கு மட்டுமே பரிசுகள் வழங்க வேண்டும். இத்தகைய விதி செய்வோம்! அதை எந்த நாளும் காப்போம்! என்னும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். முயன்றால் முடியாதது என எதுவும் உண்டோ? எனவே, கணிணிச் செல்வத்தைத் தங்குதடையின்றித் தமிழுலகிற்கு அளிப்போம்! சொற்கள் புதியன புனைவோம்! நூல்கள் புதியன படைப்போம்! "தமிழில் ஆங்கிலம் கலந்து தமிழனே தமிழை அழிக்கும் காலம். என்னைக் காப்பாற்றுவார் யார்? என்று புலம்பும் அன்னைத் தமிழின் அழுகுரல் எவன் காதிலும் விழவில்லை. நெருப்பாய் எரிகிறது நெஞ்சம். ஆங்கிலேயன் ஆட்சிக் காலத்தில் அவனுடைய அடக்குமுறையின் கீழ் தமிழ்-ஆங்கிலக் கலப்பு நிகழ்ந்தால் ஆங்கிலம் திணிக்கப்படுகிறது என்றாவது சொல்லலாம். தமிழ் மண்ணை விட்டு ஆங்கிலேயன் வெளியேறி ஐம்பது ஆண்டுகளைத் தாண்டியாயிற்று. எதற்காகத் தமிழன் ஆங்கிலத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறான் என்பதுதான் புரியவில்லை." என்னும் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் வினா (தமிழனா..தமிங்கிலனா?: பக்.9) நம்மாலும் எழுப்பப்பட்டு அன்னைத் தமிழ் நோக்கி நம் துறையறிவுப் பயணம் இருக்க வேண்டும். இந்த வகையில் நாளும் வளர்ந்துவரும் கணிணியியலிலும் நற்றமிழ் முழுமையாய் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தவே இக்கட்டுரை. தவறான சொல்லாக்கம் என்பது தமிழின் பிழையன்று; தமிழனின் பிழையே என்பதை உணர்த்தித் திருத்தவே இக்கட்டுரை.
பிற அறிவியல் துறைகளில் நிகழும் சொல்லாக்கத் தவறுகள்தாம் கணிணியியலிலும் நடைபெறுகின்றன. ஆனால், பிற துறைகளுடன் ஒப்பிட முடியாத அளவு கணிணியியலில்தான் ஆங்கில ஒலி பெயர்ப்புச் சொற்கள் மிகுதியாகக் கையாளப்படுகின்றன. இவை முற்றிலும் உடனடியாகக் களையப்பட வேண்டும்."அயல்நாட்டுக் கப்பல் கடலிலேயே நிற்க வேண்டும். அதிலுள்ள பொருள்கள்தாம் நாட்டிற்குள் வரவேண்டும், அயல்நாட்டு மொழியும் வெளியேயே நிற்க வேண்டும். அம் மொழியிலுள்ள வளம் மட்டும் நம் மொழிக்கு வரவேண்டும்" என்னும் பொருள்பட வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் கூறிய பொன்மொழி என்றென்றைக்கும் எம் மொழியினருக்கும் பொருந்தக் கூடியதே. எனவே, கரைதட்டும் அவலம் ஏற்படாமல் இருக்க, கணிணிச் செல்வத்தை மட்டும் நாம் கொணர்ந்து, அதன் அடிப்படையில் புதுச் செல்வ வளத்தைப் பெருக்க வேண்டும். கணிணியியலிலும் தமிழிலும் புலமை மிகுந்தோர் இணைந்து ஆங்கிலம் அறியாத ஒருவன் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் கணிணியறிவை வழங்குதல் வேண்டும். இங்கு எடுத்துக்காட்டாகச் சிலவே கூறப்பட்டுள்ளன; ஆனால், உண்மையில், பெரும்பான்மை தமிழ்ஒட்டுச் சொற்கள் இணைந்த ஆங்கிலமாகவே கணிணியியல் விளங்குவதைப் புரிந்து கொண்டு வளர்ந்து வரும் கணிணியியலில் தமிழை வளர்த்துப் போற்றிப் பேண வேண்டும். அயற்சொல்லைக் கையாளுவதற்கு வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டு அன்னைத் தமிழே ஆட்சி செய்யும் நிலை வரவேண்டும். தமிழ் வழி அறிவு தேவையில்லை என்பவர்களும் தமிழால் இயலாது என்பவர்களும் விலகிக் கொள்ளட்டும்! அல்லது விலக்கப்படட்டும்! தடைக்கற்களைப் படிக்கற்களாக்கும் தடந்தோள் கொண்டவர்கள் - அன்னைத் தமிழைப் போற்றும் அன்பும் ஆற்றலும் கொண்ட ஆர்வலர்கள் - இணையட்டும்!
" சென்றிடுவீர் எட்டுத் திக்கும்! - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்துஇங்கு சேர்ப்பீர்!"
என்னும் பைந்தமிழ்ச் சாரதி பாரதியின் கட்டளையை நிறைவேற்றி அறிவியல் செல்வத்தைச் சேர்ப்போம்! தமிழைச் செழிப்பாக்குவோம்! நாமும் செழிப்பாவோம்!
வாழ்க தமிழாக! வளர்க நலமாக!
இலக்குவனார் திருவள்ளுவன்
ILAKKUVANAR THIRUVALLUVAN
7/1, மாவு ஆலை முதல் தெரு
மயிலாப்பூர், சென்னை 600 004
பேசி: 98844 81652 / 044 6499 3317
thiru2050@gmail.com


எண் குறிப்புகள்:
(தொடர்ச்சி காண்க)

Followers

Blog Archive