Tuesday, November 5, 2013

தமிழ் இந்துவே! தமிழ் அழிப்பு வேலையை நிறுத்து! இல்லையேல் உன் இதழை நிறுத்து!

தமிழ் இந்துவே! தமிழ் அழிப்பு வேலையை நிறுத்து! இல்லையேல் உன் இதழை நிறுத்து!

- இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்
ஒருங்கிணைப்பாளர், இலக்குவனார் இலக்கிய இணையம்,
அமைப்பாளர், தமிழ்க்கூட்டமைப்புகள்
    
இந்து நிறுவனத்தார் தமிழ் முறைக்கு மாறான முறையில் பெயரைச் சூட்டிக் கொண்டு தமிழில் நாளிதழ் நடத்துகின்றனர். இதன் நோக்கம், தமிழ் வளர்ச்சியல்ல; தமிழ்வாசகர்கள் மூலம் பணம் பெருக்குவதே! ஆனால், அதே நேரம் தமிழ் வாசகர்களுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுவருவதுதான் கண்டனத்திற்கு உரியதாக உள்ளது.
   ஆங்கிலப் பெயர் கொண்ட தமிழ் நாளிதழில் பல்துறைக் கட்டுரைகள் வெளிவந்தாலும், அவற்றின் நடை தமிழைச் சிதைப்பாகவே உள்ளன. இவ்வாறு தான் நடத்தும் ஆங்கில இதழில் ஆங்கில நடையைச் சிதைத்து எழுத முன்வருமா இவ்விதழ்? வராது! அங்கே, நல்ல ஆங்கிலத்தில் புதிய புதிய சொற்களைப் பயன்படுத்தி ஆங்கிலக் காவலராக விளங்குவதிலேயே பெருமை கொள்கிறது. இதே அளவுகோலைப் பயன்படுத்தித் தமிழ்க்காவலராகவும் விளங்கலாமே! ஏன், அவ்வாறு விளங்காமல் தமிழ் அழிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது? மக்களால் விரட்டியடிக்கப்படும்வரை மோதிப்பார்ப்போம் என்கிறதா? இத்தகைய இதன்  தமிழ் அழிப்புப் பணிகளில் ஒன்றுதான் தமிழறிவற்ற கதையாளர் ஒருவரைக் கொண்டு, ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?” என வந்துள்ள கட்டுரை.

 கட்டுரைப் பிதற்றலில் உள்ள சில வரிகள் பற்றிப் பார்ப்போம்!

   தாய்மொழியைத் தேர்வுகளில் எளிதாக வெல்வதற்கு மட்டுமே தட்டுத்தடுமாறி வாசிக்கவும் ஓரளவு எழுதவும் கற்கின்றனர். . . .  கல்விக்கு உதவாமல் வெறுமே மொழியறிவுக்காக மட்டுமே கற்கப்படும் இரண்டாம் மொழியை விட்டுவிடுகிறார்கள்  என்கிறார் இவர். தாய்மொழி மட்டுமல்ல, எல்லாப் பாடங்களுமே தேர்வு நோக்கில் கற்கும் வகையில்தான் நம் கல்விமுறை உள்ளது. மாற்ற வேண்டியது கல்வி முறையைத்தான்.  தாய்மொழிக்கல்வியை அல்ல! தமிழ்வழியில் அனைத்துக் கல்வியும் அமைந்தால் தமிழ் நிலைக்கத்தானே செய்யும்!
  
 மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். . . . . குழந்தைகள் மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றனஎன்பது மற்றோர் உளறல். இந்த மனப்பயிற்சி என்பது ஆங்கிலத்திற்கும் பொருந்தும் அல்லவா? அயல் மொழியில் மேற்கொள்ள வேண்டிய கடினமான பயிற்சியைவிடத் தாய்மொழியில் எளிதில் பயிற்சி மேற்கொண்டால் போதுமல்லவா?

  “மலாய் போன்ற பல மொழிகள் இன்று ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதப்படுகின்றன. அந்த மக்கள் ஆங்கிலம் கற்பது எளிதாகிறதுஎனக் கதை சொல்வது மிகவும் தவறான வாதம். மலாய் மக்களில் பொது இடங்களில் பணியாற்றுபவர்களுக்குக்கூடப் பேருந்து எண்கள், நேரங்கள், கட்டண விவரங்கள், உணவுப் பொருள்கள் விலைகள், பிற பொருள்களின் விலைகள், முதலான பயணத்திற்குத் தேவையான எவ்விவரத்தையும் ஆங்கிலத்தில் சொல்லத் தெரியவில்லை. (ஆங்கிலம் தெரிந்திருந்தால்தானே இவற்றைப் புரியவும் சொல்லவும் முடியும்.) எனவே, ஒரு வரிவடிவில் மற்றொரு மொழியைப் படிப்பதால் அம் மொழியையும் அறிந்தவர் ஆவோம் என்பது அறியாமையே!

 இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துருக்களில் எழுதப்பட்டால் பெரும்பாலான மொழிகளை மிகச் சில நாட்களிலேயே வாசித்துப் புரிந்துகொள்ள முடியும்எனச் சரடு விடுகிறார். வரிவடிம்தான் மொழியின் அடையாளம். அவ்வாறிருக்க  ஆங்கில எழுத்துரு எனச்  சொல்லப்படும் உரோமன் எழுத்தில்  படிக்கும் பொழுது, எந்த மொழி என எவ்வாறு அறிய இயலும்?  மேய்ச்சலைக்குறிக்கும் மேய் என்பதை ஆங்கில எழுத்தில் எழுதினால், அதனை மே மாதம் என்றாவது ஆங்கிலத்தில் உள்ள துணை வினை என்றாவது அறிவார்களே தவிர, தமிழ்ச்சொல் என எங்ஙனம் உணர்வார்கள்? தமிழே தெரியாமல் தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்தில் படித்தால் எங்ஙனம் தமிழ் எனப் புரிந்து கொள்வார்கள்?

 தமிழ் எழுத்துகள் அறிவியல் முறையில் அமைந்தவை. தமிழ் உயிர்மெய்யெழுத்துகள் எளிதில் சொற்களைப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் உதவுவன. ’, மி’, ழ் என மூன்றெழுத்தைச் சேர்த்தால் தமிழ் என வாசித்து விடலாம். ஆனால், ஆங்கிலத்தில் எழுதினால்,  டி’, எச்’, ’ -, ‘எம்’, - மி, ‘இசட்’, எச் - ழ் > தமிழ் என எழுத்துக் கூட்டிவரும் எழுத்துகளைச் சேர்த்து வாசிக்க வேண்டும்.  தேவையற்ற உழைப்பும் நேரமும் இதில் செலவாகாதா?

  “மொழிக்கு அடிப்படை ஒலியே என்றும் வரிவடிவம் மாறுவதால் மொழி அழியாது என்றும் சிலர் கூறி வரி வடிவத்தைச் சிதைப்பதற்கு ஆதரவு திரட்டுகின்றனர். எழுத்தாகிய உடல் இல்லையேல் மொழியாகிய உயிர் அழியும் எனப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தெளிவுபடுத்தியுள்ளார். எழுத்தாகிய உடல் சிதைந்தமையால், மொழியாகிய உயிர் தங்குவதற்கு இடமின்றி அழிந்துள்ளதை வரலாறு காட்டுகின்றது. பரதகண்டம் முழுமையும் வழங்கி வந்த தமிழ் மொழி,  புதிய புதிய வரி வடிவங்களுக்கு இடம் அளித்ததால்தான் பிறமொழிச் சொற்களும் உள்ளே புகுந்து இக் கண்டம் முழுவதும் புதுப்புது மொழிகள் தோன்றின. எனவே, இப்பொழுது மேற்கொள்ளும் எழுத்துச்சிதைவு முயற்சி எஞ்சியுள்ள தமிழ்நிலத்தையும் இல்லாதாக்குவதற்கான முயற்சியே அன்றி வேறு இல்லை. (எழுத்தைக் காப்போம் ! இனத்தைக் காப்போம்!- பக்கம் 6)

  எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்லஎன்று வரிவடிவ அழிப்பிற்குச் சப்பைக்கட்டு கட்டுகின்றார். இதற்குப் பின் வரும் குறிப்புகளைக் கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன்.

  “கல்விக்கு அடிப்படையாய் அமைவன எண்ணும் எழுத்துமாய குறியீடுகள் என்பதை உணர்த்தவே எண்ணையும் எழுத்தையும் கண்களாகக் கூறுகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
  
  இதனை நன்குணர்ந்த நம் முன்னோர் எண் எழுத்து உருக்களைப் பேணி வந்துள்ளனர். கல்வெட்டுகளில் உள்ள மாற்றங்களுக்கும் தமிழ் மொழி எழுத்து வளர்ச்சிக்கும் தொடர்பில்லை என்பதை உணர்ந்தால் தமிழ் எழுத்து மாறா வடிவுடன் நிலைத்து வருவதை உணரலாம். எனவேதான்
தொல்லை வடிவின எல்லா எழுத்தும்
என்கிறது நன்னூல். அதனை, அதற்கு 1000 ஆண்டுகளுக்குப் பின் வந்த இலக்கண விளக்கமும் வழி மொழிகின்றது. (நன்னூல்: எழுத்ததிகாரம்: 5.உருவம்: நூற்பா 98 - இலக்கண விளக்கம்: எழுத்தியல்: நூற்பா 23) அஃதாவது எல்லா எழுத்துமே மிகத் தொன்மையான காலத்தில் இருந்துமாறாமல் வருகின்றன என இலக்கண நூல்கள் கூறுகின்றன.

  காலந்தோறும் சிலர் எழுத்து வடிவங்களில் குறை கண்டு மாற்ற வேண்டும் என்று துடித்ததால்தான்
எண்ணெழுத்து இகழேல் (ஆத்திச்சூடி 7)
என்று ஔவையார் தெளிவாகவே கூறிச் சென்றுள்ளார்.

  எண், எழுத்து வடிவங்களில் சிதைவு உண்டானால் அவை வெளிப்படுத்தும் அறிவு வளத்திலும் சிதைவு ஏற்படும் என்பதை உணர்ந்தே இவற்றை நம் முன்னோர் போற்றி உள்ளனர். மொழி வழித் தேசிய இனம் அழியாமல் இருக்க மொழி அழியாமல் காக்கப்படவேண்டும்; மொழி காக்கப்பட அதன் இலக்கியங்கள் பேணப்பட வேண்டும்; இலக்கியங்கள் போற்றப்பட மொழியின் எண்ணும் எழுத்தும் காப்பாற்றப்பட வேண்டும். இஃது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்.

  இந்திய அரசியல் யாப்பும் (Constitution of India: பிரிவு 29(1))   இதை உணர்ந்தே எழுத்து வடிவங்கள் காக்கப்பட வேண்டும் என விதி வகுத்துள்ளது. ஆனால், நடைமுறையில் தேவநாகரியையும் கிரந்தத்தையும் புகுத்திப் பிற தேசிய மொழிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. (எழுத்தைக் காப்போம் - இலக்குவனார் திருவள்ளுவன், நட்பு இதழ்)
  1950 இல்   உரோமன் எழுத்துகளில் தமிழை எழுத வேண்டும் என ஆங்கில நாளிதழ் ஒன்றின் வழிச் சிலர் முயன்றனர்.  பேராசிரியர் சி.இலக்குவனார் முதலானவர்கள் முயற்சியால் அதற்கு முடிவுரை கட்டப்பட்டது. இப்பொழுது மீண்டும் அம் முயற்சியில் 'இந்து' இதழ் இறங்கி மூக்குடைபடுவது தேவைதானா?

எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே!
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே!
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே!
என்னும் பாவேந்தர் பாரதிதாசன் முழக்கங்களை ஏற்று
நம் தமிழ் மொழியின் எண்ணையும் எழுத்தையும் காக்கப் பெரும்திரளாய்த் தமிழன்பர்கள் உள்ளனர்.

 எனவே,
தமிழ் இந்துவே,
           மொழிக் கொலையை நிறுத்திக்கொள்!
    தமிழ் அழிப்பு முயற்சிக்கான கட்டுரையை இணையப் பக்கத்தில் இருந்து எடுத்துவிடு!         
            தமிழால் பெட்டியை நிரப்பும் இந்துவே!
தமிழைக்காக்காவிட்டாலும் தமிழ் அழிப்பு முயற்சியில் ஈடுபடாதே!

அல்லது 
          உன் தமிழ்ப்பதிப்பை நிறுத்திவிடு! நிறுத்திவிடு! நிறுத்திவிடு!

மக்களெல்லாம் தாய்மொழியைக் கற்பதற்கு
மடத்தனமாய்க் கற்பிக்கும் முறையை மாற்றிச்
சிக்கலின்றித் தெளிவாக உணருவதற்குச்
செம்மைநிலை காணாத ஆங்கிலத்தால்
தக்கஒரு தகுதியினைப் பெற்றாற் போன்று
தமக்குள்தாம் பெரியார் என எண்ணிக்கொண்டு
தக்கைகளாய்த் தலைநிமிர்ந்து ஆடல்வேண்டா
 (- பாவேந்தர் பாரதிதாசன்)
==0==

No comments:

Post a Comment