கலைஞர், வரலாற்றில் அருவினை பல ஆற்றிய
அருந்திறலாளர்! அவரது பகைவர்களும் அவரது உழைப்பை மதிக்கத் தவறுவதில்லை!
நூற்றுக்கு மேற்பட்ட நூல்களைப் படைத்தவர்; மடல்களாகவும் கவிதைகளாகவும்
கட்டுரைகளாகவும் எழுதித் தள்ளியவை மிகுதி. மொத்தத்தில் இருபதாயிரம்
பக்கங்களுக்கு மேல் எழுதிக் குவித்த படைப்பாளர்; ஏறத்தாழ 75
திரைப்படங்களுக்குக் கதை உரையாடல் எழுதி உள்ளார்; நேற்றுவரை திரை உலகில்
நுழைந்தவர்கள் அவர் எழுதிய திரையாடலைப் பேசி நடித்துக் காட்டித்தான்
வாய்ப்பு பெற்றனர் என்பது அழிக்க முடியாத வரலாறு; பன்னிரண்டு முறை
சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை மேலவை உறுப்பினராகவும் ஈராண்டுகள்
அமைச்சராகவும் 19 ஆண்டுகளில் ஐந்து முறை முதல்வராகவும் தொண்டாற்றியுள்ள
அரசியலாளர்! இன்றைக்குப் பல கட்சிகளிலும் அமைப்புகளிலும் சிதறிக் கிடக்கும்
தமிழுணர்வாளர்கள் அவரால் உணர்வூட்டப்பட்டவர்களே! அவரின் சிறப்புகளை
அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், அவரின் 91 ஆம் அகவையில் உலக மக்களே
சிறப்பான பிறந்தநாள் பெருமங்கலம் கொண்டாடியிருக்க வேண்டுமே! ஏனில்லை! அவரை
ஏசுவதையே பிழைப்பாகக் கொண்டு பலர் அலைகிறார்களே! ஏன்?
அவரால் அறிவூட்டப்பெற்றவர்கள், அவரால் உணர்வூட்டப் பெற்றவர்கள், அவரால் பயன்பெற்றவர்கள் இன்றைக்கு அவரை எதிர்க்கின்றனர்! அவருடன் இருப்பவர்கள், அவர் மீது கசப்புடனும் ஆனால், தி.மு.க. என்னும் அமைப்பின் மீது பற்றுறுதியும் கொண்டவர்கள் மட்டுமே
கலைஞரே! உங்களிடம் சில வினாக்கள்!
குறைகளில்லாத மனிதன் என யாரும் இல்லை. அதுபோல் ஊழலில்லாத அரசியல்வாதி
இல்லை! மக்களே ஊழலில் திளைப்பவர்கள்தாம். எனவே, உங்கள் மீதான வெறுப்பு
இதனால் என்று கொள்ளக்கூடாது. தமிழ் எனப் பேசிப் பேசி உணர்வூட்டி, உரமூட்டி,
உயர்ந்தவர், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுதெல்லாம் தமிழை மறந்தது
ஏன்? காங்.ஆட்சி, தமிழுக்குச் செய்தது குறைவானது என்பதால் உங்கள் பணிகள்
பெரிதாகத் தோன்றி இருக்கலாம். ஆனால், பயிற்சிமொழியைத் தமிழாக மாற்ற என்ன
தடை? தமிழ்ப்பயிற்சி தொடர்பான முடிவெடுப்பதற்கான குழுவினை, யார்
வாணாளெல்லாம் தமிழ்ப்பயிற்றுமொழி வேண்டா என்றாரோ அவரிடம் ஒப்பைடத்து
விட்டு, அவர் அறிக்கை பெற்று, தமிழ்வழிக்கல்வியைப் புதை குள்ளியில்
தள்ளியது ஏன்? மழலைக்கல்வி முதல் எல்லா நிலைகளிலும் தமிழ்நாட்டில்
தமிழ்தான் முதல்பாடம் என நடைமுறைப்படுத்தாமல் போனது ஏன்? முதன்மைப்
பொறுப்புகளில் தலைமைப் பதவிகளில் தமிழரை அமர்த்தாதது ஏன்? ‘’எங்கும்
தமிழ்! எதிலும்தமிழ்!’’ எனச்சொல்லிக் கொண்டே ‘’எங்கும் தமிழிலில்லை!
எதிலும்தமிழில்லை!’’ என்னும் நிலையை உண்டாக்கியது ஏன்? தமிழ்நாட்டில்
தமிழே தெரியாமல், படிக்கவும் பணியாற்றவும் வாழவும் தமிழையே எதிர்க்கவுமான
அயலகச் சூழலை உருவாக்கியது ஏன்? தமிழ்ப்பகைவர்கள் தலைமைப் பொறுப்பில்
அமர்த்தப்படுகின்றனர்! உங்களது குடும்ப உறுப்பினர்களது நிறுவனங்களின்
பெயர்கள் தமிழில் இல்லை! உங்களது குடும்பத்தில் உங்களைத் தவிர
வேறுயாருக்கும் தமிழுணர்வு இல்லை. உங்களது உறவினர்கள், கட்சி அரசியலை
நடத்தும் திறனும் பணம் படைக்கும் திறனும் பெற்றிருக்கலாம்; ஆனால், தமிழ்
மொழி, தமிழினம், தமிழ்ப்பண்பாடு, தமிழ் வரலாறு அறியாதவர்களாகவே
வளர்ந்துள்ளார்கள்.
இப்படியெல்லாம் உங்கள் மீது கசப்பு
வளர்ந்தாலும் அமைதி காத்தவர்களே மிகுதி! இவர்கள் வாக்களிக்காமல்
ஒதுங்குவார்களே தவிர, மாற்றுக்கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனால்,
இன்றைய நிலை என்ன? வெற்றியும் தோல்வியும் இயற்கை எனப் பேசலாம்! இதற்கு
முன்பெல்லாம் தோல்வியில் இருந்து மீளவில்லையா எனக் கேட்கலாம்! இவை யெல்லாம்
ஊருக்கான உரைகள் என உங்களுக்கே தெரியும்!
‘’தமிழினப் படுகொலையைத் தடுக்கத் தவறி
விட்டீர்கள்’’ என்றால் ‘’என்ன செய்யு முடியும்’’ என்கிறீர்கள்!
‘’இனப்படுகொலைக் குற்றவாளிகளும் உடந்தையாளர்களும் தண்டிக்கப்படவேண்டும்’’
என்றால், ‘’தீர்மானம் போட்டாயிற்றே வேறு என்ன செய்ய முடியும்’’
என்கிறீர்கள்! ஒன்றுமே செய்ய இயலாதவர்க்கு எதற்கு ஆட்சியும் பதவிகளும் என
மக்கள் எண்ண மாட்டார்களா?
சங்கப் புலவர் பக்குடுக்கை நன்கணியார்
படைத்துள்ள ‘ஓரில் நெய்தல் கறங்க ஓர்இல்’ எனத் தொடங்கும் (புறநானூறு,194)
பாடலில் உலக நிலையாமை கூறப்பட்டுள்ளது. இயற்கையாய் அமையும் நிலையாமையைக்
குறிப்பிடும் அப்பாடலை எடுத்துக்காட்டாகக் கூறி, திட்டமிட்டு பொல்லா
வல்லரசுகள் இணைந்து நடத்திய இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களைக்
குறிப்பிடலாமா? ஆந்திர முதல்வர் இராசசேகரன் நேர்ச்சியில்(விபத்தில்)
இறந்ததற்குத் தமிழ்நாடு துக்கம் கடைப்பிடிக்கவும் விடுமுறை விடவும் இரங்கிய
மனம் தமிழின அழிவிற்கு இரங்கவில்லையா? கொத்துக் குண்டுகளாலும்
வேதியல் குண்டுகளாலும் ஏவுகணைகளாலும் பிறவற்றாலும் செயற்கையாக உருவாக்கிய
சதியில் – இனப்படுகொலையில் – ஏறத்தாழ இரு நூறாயிரம் ஈழத்தமிழ் மக்கள்
இறந்தார்களே! பொல்லாப் போர்முறையில் இறக்காமல் தப்பியவர்களும்,
வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டும் கற்பழிக்கப்பட்டும், எழுதுவதற்கே கூசும்
அளவிற்குக் கொடுமை இழைக்கப்பட்டும் இறந்தார்களே! அச் செயல் இரக்கத்தை
ஏற்படுத்தவில்லையா? உள்ளத்தைக் குமுறச்செய்யவில்லையா? கனிவான உங்கள் உள்ளம் கல்லாக மாறியதன் காரணம் என்ன? முரசொலி மாறன் நோய்வாய்ப்பட்டு ஓராண்டு மரணப்படுக்கையில் அமைச்சராக
வீற்றிருந்து இயற்கை எய்தினார். வருத்தத்திற்குரிய செய்திதான். வேதனையான
செய்திதான். அப்பொழுது ஒரு தீர்ப்பில் கிடைத்த வெற்றியின் காரணமாக
அஇஅதிமுகவினர் வெடி வெடித்துக் கொண்டாடியதற்கு மனித நேயமற்ற செயல் என்று
கடிந்தீர்களே! தனி ஒருவரின் இயற்கை மரணத்திற்கே துன்புற்ற நீங்கள் இருநூறாயிரம் தமிழ் மக்கள் மடிந்துபோகும் நிலைக்கு வருந்தாதது ஏன்? பதவியேற்பைத் தள்ளிப் போடச்செய்து இருக்கலாமே!
ஈழத்துயரம் தமிழர் உள்ளங்களில் வேதனை அலைகளை எழுப்பி, காங்.ஐயும்
தி.மு.க.-வையும் புறமுதுகிட்டு ஓடச் செய்து விட்டன என்னும் உண்மையை
ஏற்கும் பக்குவம் வேண்டும். ஈழத்துயரம், தமிழகத் தேர்தலில் காரணியாக
அமைந்திருந்தால் வைகோ வென்றிருக்க வேண்டும் என எண்ணுவது தவறு. வைகோ மீது
பற்றும் மதிப்பும் இருந்தாலும் மக்கள் தி.மு.க- அல்லது அ.இ.அ.தி.மு.க.-தான்
வெற்றி பெறும்; வெற்றி பெறும் கட்சிக்கு வாக்களிப்பதே பெருமை;
வாக்குகளைச்சிதறவிடக் கூடாது என்ற எண்ணம்தான் ம.தி.மு.க.-விற்கு
வாக்களிக்கத் தயக்கம் அளிக்கிறது. மேலும், தமிழ் ஈழம் தொடர்பாகவும்
அப்பாவிகள் மூவர் விடுதலை தொடர்பாகவும் சட்ட மன்றத் தீர்மானம் முதலான
பலவற்றால் உலகத் தமிழர்களின் அன்பிற்கு அ.இ.அ.தி.மு.க. தலைவி
உள்ளானதுதான் பெரும் வெற்றியை அளித்தது என்பதே உண்மை. தி.மு.க. தலைவரின் கடந்த கால நல்வினைகளைவிட நிகழ்காலத் தீவினைகளே மக்களை எடை போட வைக்கிறது. அதுபோல், அ.இ.அ.தி.மு.க. தலைவியின் கடந்த காலப்பேச்சுகளை விட, நிகழ்காலச் செயல்பாடுகளே அவர்மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. எனவே, இப்போதைய தேர்தல் தோல்வியை இயல்பாக எடுத்துக் கொள்ளாமல் மக்கள் புகட்டிய பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்த பிறந்தநாள் உலக மக்களால் கொண்டாடப்படவேண்டும் என்றால் திசைமாறிய பாதையை மீண்டும் பழைய சுவட்டிற்குத் திருப்ப வேண்டும்.
ஈழம் பற்றி என்ன கூறினாலும் இப்போது மக்கள் கேலியாகத்தான் எண்ணுவர்.
தமிழ்பற்றிப் பேசினாலும் ஆட்சிப் பொறுப்பில் செய்யாமல் இப்பொழுது கூறுவதேன்
என்றுதான் என எண்ணுவர்.
எனவே, பின்வருமாறு நீங்கள் கழகத்தை வழி நடத்த வேண்டும்.
1. அரசின் தமிழ்நலத் திட்டங்களை, ஒப்பிட்டுப் பேசாமல் வரவேற்க வேண்டும்.
2. நீங்கள் காலடி எடுத்து வைத்த
பாதையில்தான் இப்பொழுது ஆங்கிலவழிக் கல்வி திணிக்கப்படுகிறது. எனவே,
எதிர்க்க இயலாதுதான். ஆனால், உங்கள் குடும்பத்தினர், கட்சியினர் நடத்தும்
பள்ளிகளில் தமிழ்வழிக்கல்விமட்டும் நடைமுறைப்படுத்தப்படவும் முதல் பாடமாகத்
தமிழ்அறிமுகப்படுத்தப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடும்பத்தினரையும் கட்சியினரையும் பிள்ளைகளைத் தமிழ்வழிக்கல்வியில்
சேர்க்கவும் தமிழை முதல் பாடமாக எடுக்கவும் வலியுறுத்த வேண்டும்.
3. குடும்பத்தினர், கட்சியினர் பிற மொழிப் பெயர்கள் உடையவர்களாக இருப்பின், தமிழ்ப் பெயர்களைச் சூட்டிக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
4. குடும்பத்தினர், கட்சியினர் நடத்தும்
நிறுவனங்களின் பெயர்களைத் தமிழ்ப்பெயர்களாக மாற்றவேண்டும்; இனித்
தமிழ்ப்பெயர்கள் மட்டுமே சூட்ட வேண்டும் என நெறிப்படுத்த வேண்டும்.
5. குடும்பத்தினர், கட்சியினர் நடத்தும்
இதழ்களில் அயலெழுத்து, அயற்சொல் கலப்பற்ற தமிழ் நடை பேணப்படவும்,
தமிழ்ப்பண்பாட்டை உணர்த்தும் படைப்புகள் இடம் பெறவும் வழி காட்ட வேண்டும்.
6. குடும்பத்தினர், கட்சியினர் நடத்தும்
தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிப் பெயர்கள், பாத்திரப் படைப்புகள், செய்திகள்,
தொகுப்புரைகள், கலந்துரையாடல்கள், நேர்முகங்கள் என யாவும் தமிழாகவே அமைய
கட்டளை இட வேண்டும்.
7. குடும்பத்தினர், கட்சியினர் தமிழ்
வழிபாடுமட்டுமே நடத்தவும் அவர்களில் பொறுப்புகளில் உள்ள கோயில்களில் குட
முழுக்கு முதலானவை தமிழில் நிகழ்த்தவும் ஆற்றுப்படுத்த வேண்டும்.
8. மேடையில் பேசாமல், ஊடகங்கள் மூலமும்
நாடகங்கள் மூலமும் மது விலக்கு, சாதி ஒழிப்பு முதலானவற்றை மக்கள்
உள்ளங்களில் பதிக்க வேண்டும்.
9. ‘தமிழ் ஈழப் பரப்புரைக் குழு’
ஒன்றை அமைத்து, ‘தமிழ் ஈழம் தமிழர்களின் தாயகம்’ என்பதை உலகமக்களுக்குப்
புரியும் வகைகளில் உலக மொழிகளில் பரப்ப வேண்டும். தமிழ் ஈழத்தை உலக நாடுகள்
ஏற்கச் செய்யும் வகையில் அமைதியான பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.
10. தேவையான நேர்வுகளில் தமிழக முதல்வரைச்
சந்தித்து அவருடன் இணைந்து, தமிழ்நலன்களுக்காகவும் தமிழ் ஈழ
நலன்களுக்காகவும் குரல் கொடுக்கத் தயங்கக்கூடாது.
எனவே, மேடைப்பேச்சுகளில் கருத்து
செலுத்தாமல், தமிழ்நாட்டில் தமிழ் தலைமை பெறுவதற்கான செயற்பாடுகளை உங்கள்
கட்சி அளவிலும் கூட்டணிக் கட்சிகள் அளவிலும் ஆதரவு அமைப்புகள் அளவிலும்
மேற்கொண்டால் தமிழ் எழுச்சி பெறும்! தமிழ் விடுதலை அடையும்! தமிழர் உரம்
பெறுவர்! தமிழ்ஈழம் ஏற்கப்படும்! உலகத் தமிழர்கள் உயர்வர்! உங்கள் கழகமும்
உயர்ந்தோங்கும்!
சிறியவன் உங்களை வாழ்த்தக்கூடாது என்பதால், தமிழ் உள்ளங்களின் விழைவுகளை, வேண்டுதல்களாகத் தங்கள் முன் வைத்துள்ளேன்! இவற்றை நிறைவேற்றி, முதுபெரும் தலைவரான உங்கள் பிறந்தநாள் பரிசாக எங்களுக்குத் தாருங்கள்!
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. (திருக்குறள் 669)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment