Friday, October 29, 2010

செம்மொழிக் குழுவில் முதல்வருக்கு எதிராகச் செயல்படுவோர் எவர்? ஏன்?

natpu லகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிந்ததும் ‘மாநாடு முடிந்தது; கூட்டம் கலைந்தது என்றில்லாமல் ஆக்க முறையிலான தொடர் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என விரும்பிய முதல்வர் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மாநாட்டிற்கு வர வாய்ப்பில்லாதவர்களும் மாநாட்டு உரைகளை அறிய வேண்டும் என்பதற்காகவும்  நிலையான பதிவாக  இருக்க வேண்டும் என்பதற்காகவும் அனைத்து நிகழ்ச்சிகளையும் காட்சிப்பதிவுகளாக்கி (வீடியோவாக) இணையம் மூலம் பார்த்து அறிய வழி வகை செய்துள்ளார். முந்தைய மாநாட்டில் சொல்லப்பட்ட குறையை நீக்குவதற்காக மாநாட்டு ஆய்வுரைகள் விரைவில் நூலாக வெளிவரவேண்டும்  என்றும் நடவடிக்கை எடுத்து வருகிறார். எனினும் முதல்வர் பணியிலிருந்து அடிப்படைப் பணியாளர் வேலை வரை எல்லாவற்றையும் அவரே செய்ய முடியாது அல்லவா? இதனைப் பயன்படுத்திக் கொண்டு செம்மொழி மாநாட்டுக் கருத்தரங்கக் குழுவில் உள்ள சிலர் அவரது எண்ணத்திற்கும் கட்டளைக்கும் மாறாக நடந்து கொண்டு தமிழ் நலத்திற்குக் கேடு விளைவிக்கின்றனர்.
natpu அப்படி என்னதான் கேடு செய்கின்றனர் என்கின்றீர்களா?  தமிழ் நலம் குறித்துப் பாராமுகமாக இருப்பதும் தமிழ்க்காப்புப் பணிகளைத் தடை செய்வதும் கேடுவிளைவிக்கும் செயல்கள்தாமே?
அவற்றில் ஒன்றையே குறிப்பிட விரும்புகின்றேன். எழுத்து என்பது, உடல்; மொழி என்பது, உயிர். எழுத்தாகிய உடல் சிதையுமானால், மொழி என்கிற உயிர் அழிந்துபோகும் என்றார் செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார். அவ்வகையில் தமிழ் எழுத்து வடிவங்களைச் சிதைவில் இருந்து காப்பாற்றித் தமிழ் இலக்கியங்களையும் தமிழ் மொழியையும் இனத்தையும் காப்பாற்ற வேண்டும் என மாநாட்டில் நால்வர் கட்டுரை அளித்தோம்; தமிழ் எழுத்து வடிவங்களைச் சிதைப்பதால் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் ஏற்படும் கேடுகளை நன்கு விளக்கினோம்.
25.06.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அமர்வில் கோவூர்கிழார் அரங்கத்தில் எங்களின் ஆய்வுரைகள் நிகழ்ந்தன. இக் கருத்தரங்கத்திற்கு முந்தைய நிகழ்ச்சி வரையும் இதற்கு அடுத்த நிகழ்ச்சியில் இருந்தும் காணொளிக் காட்சிகளை இணையத்தில் காண முடிகிறது.  தமிழ்மொழிக் காப்பிற்காக நாங்கள் வழங்கிய ஆய்வுரைகள் மட்டும்  திட்டமிட்டுக் காட்டப்பட வில்லை.
அதுபோல், ஆய்வுரைகளைத் தொகுத்து விரைவில் நூலாக வெளியிட வேண்டும் என முதல்வர் கட்டளையிட்டார் அல்லவா? தமிழ்க்காப்பு தொடர்பான எங்களின் கட்டுரைகளை மட்டும் வெளியிடக் கூடாது என முடிவெடுத்து  ஆய்வறிஞர்களிடம் கட்டுரைகள் அளிக்குமாறு கேட்கவில்லை. ஆய்வுக்கட்டுரைகள் அளித்த பிற பேராளர்களிடம் முழுக் கட்டுரையை அளிக்குமாறு மடல் அனுப்பப்பட்டுள்ளது;  எங்களுக்கு மட்டும் அவ்வாறான மடல் வரவில்லை எனப் பன்முறை மின்னஞ்சல் வழியாகவும் பதிவஞ்சல் வழியாகவும் மடல்கள் அனுப்பியும் தொலைபேசி வழியாக வேண்டுகோள் விடுத்தும் அவை பார்க்கப்பட்டு மறைக்கப்பட்டு விட்டன. அப்படி என்ன எங்களின் கட்டுரைகளில் அஞ்சகத்தக்கன உள்ளன என்கிறீர்களா?
natpu மாநாட்டின் பொழுது எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பான ஆணை அல்லது அறிவிப்பு வரும் எனச் சிலரால் பரப்பப்பட்டு வந்த செய்தி நினைவிருக்கும்.  உடனே உலகெங்கும் உள்ள அறிஞர்கள் நிகழ்ச்சிகள், இணையத்தளங்கள், ஊடகங்கள் வாயிலாக இதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.  உடனே முதல்வர் அவர்களும் அத்தகைய எந்த எண்ணமும் அரசிற்கு இல்லை என அறிவிக்கச் செய்தார். அத்துடன் நில்லாமல் மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் தலைப்பில் இருந்த பொதுக்கலந்துரையரங்கத்தையும் நீக்கினார். எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பிலான கட்டுரைகளும் மொழியியல் தலைப்பில் வாசிக்கப்பட வேண்டும் என்றார்.  எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பானவற்றிற்கு எதிர்ப்பாடான நிலையை எடுத்துத் தமிழ் எழுத்து வடிவப் பாதுகாப்பில் தனக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார். வந்திருந்த அறிஞர்கள் எழுத்துச் சிதைப்பிற்கு எதிரான ஆய்வுக் கட்டுரைகளை மட்டுமே அளித்து உரையாற்றினர். தமிழ் எழுத்து முறையின் தனித்தன்மையும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் என்னும் தலைப்பில் பேராசிரியர் சி.ஆர்.செல்வகுமார் (கனடா) அவர்களும், தமிழ் எழுத்துத் திருத்தத்திற் பொதிந்துள்ள பெருங்கேடுகள்  எனப் பொறிஞர் நா.இளங்கோவன் (துபாய்), தமிழ் எழுத்துத்திருத்தம் தேவையா? எனப் பேராசிரியர் மணியம்  (சிங்கப்பூர்) அவர்களும், வரிவடிவச்  சிதைவு வாழ்விற்கு அழிவு என்னும் தலைப்பில் நானும் உரையாற்றினோம். (இதே அமர்வில் முனைவர் வேல்முருகன் வீரமாமுனிவனின் எகர ஒகரக் குறியீடு குறித்துக் கட்டுரை அளித்தார்). வல்லுநர் குழுவின் தெரிவின் அடிப்படையில்தான் எங்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
பொதுவாகப் பிற அரங்கங்களில் போதிய அளவு நோக்கர்கள்  வராதபொழுது இவ்வரங்கத்தில் உட்கார இடமின்றித் திரும்பச் சென்றவர்கள் மிகுதி.
நாற்காலி முன்பு உரையாற்றும் சில கருத்தரங்கங்கள் போல் அல்லாமல் அரங்கு நிறைந்து காணப்பட்டது. அந்த அளவிற்கு உலகலாவிய வரவேற்பைப் பெற்றன எங்களின் ஆய்வுக்கட்டுரைகள். பார்வையாளர் அனைவரும் எழுச்சியுடன் பங்கேற்றனர். இந்த அரங்கத்திற்கு வர வாய்ப்பில்லாதவர்களும் கேட்டு அறிந்து மகிழும் அளவிற்குப் பெரிதும் வரவேற்பைப் பெற்றது எழுத்துச் சிதைப்பாளர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது போலும். எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! என்னும் தலைப்பில் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சிறு நூலையும் வெளியிட்டோம்.  அதற்கும்  நல்ல வரவேற்பு கிடைத்தது.  எனவே, எழுத்துச் சிதைப்பாளர்கள் எழுத்துக் காவலர்களுக்கும் தமிழன்பர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைத் தரும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், உண்மையில் தமிழ்த்தாய்க்குத்தான்  கேடு செய்கிறோம் எனப் புரிந்துதான் செயல்படுகின்றனரா எனத் தெரியவில்லை.
மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்பொழுதே தமிழ்ச்சிதைவிற்கான ஆணையோ அறிவிப்போ வெளியிடக்கூடாது என முதல்வரை வேண்டி முறையீடு அளிப்பதற்காகக் கையெழுத்து இயக்கமும் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தினரால் நடத்தப்பட்டது. ஆனால், தமிழறிஞர் ஒருவர் அத்தகைய அறிவிப்போ ஆணையோ எதுவும் வராது என உறுதியளித்து இதனைக் கைவிடுமாறு வேண்டியதற்கு இணங்க அம்முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டது.
natpu மாநாட்டில் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு முதல்வரே முற்றுப்புள்ளி வைத்தமையால் அப்பொழுது சிதைப்பு முயற்சியாளர்களால்  ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆனால் மாநாடு முடிந்ததும் மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டனர்.
தொடக்கத்தில் ஆய்வுரைகளை இணையத்தளத்திலும் ஆய்வுத் தொகுப்பு நூலில் சேர்க்குமாறு வேண்டுகோள் விடுத்த மடல்களைப் பொறுப்பிலுள்ளோர் பார்க்கவில்லையோ என்ற ஐயமும் ஏற்பட்டது. ஆனால்  இதே மடல்களில் மறுநாள் மற்றோர் அமர்வில் எழுத்துச் சீர்திருத்தமா? தமிழுக்கு அது பொருந்துமா? என்னும் தலைப்பில் பேராசிரியர் பெஞ்சமின் லெபொ (பிரான்சு) உரையாற்றியதும் விடுபட்டது குறிக்கப்பெற்றது. அவரது அமர்வில் துணைமுதல்வரின் மனைவி அவர்களும் முதல்வரின் குடும்பத்தினரும் ஈடுபாட்டுடன் கேட்டதும் குறிக்கப்பெற்றது. அவருக்கு மட்டும் கட்டுரையை அனுப்புமாறு மடல் அனுப்பப்பட்டுள்ளது. எழுத்துக் காப்பு அமர்வு மட்டும் கூண்டோடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் கணினி முறையில்  சார்நிலையில் உள்ளவர்களே செய்வதே வழக்கம் என்பதால் பாகுபாடு காட்ட வேண்டும் என்னும் சிலர் திட்டமிட்டே தமிழ் எழுத்துச் சிதைவிற்கு எதிரான முயற்சிகள் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகத் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி இவ்வாறு நடக்கின்றனர் என்று எண்ணத் தோன்றுகிறது.
எனவே,  தமிழ் எழுத்துக் காப்புப் போக்கிற்கு எதிரான செம்மொழி மாநாட்டுக் கருத்தரங்கக் குழுவின் போக்கைக் கண்டித்தும் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் கண்டனக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டனர். இதை அறிந்த இப்பேராளர்கள் அவற்றைத் தடுத்து நிறுத்தினர். இவர்களது கட்டுரைகள் இடம் பெறாமல் கருத்தரங்கக் கட்டுரைகள் தொகுப்பை வெளியிட உயர்நீதிமன்றம் மூலம் தடையாணை பெறவும் தமிழார்வலர்கள் நடவடிக்கை எடுத்தனர். இவ்வாறு வழக்குமன்றம் சென்று நீதி கேட்போம் என எழுதியும் செவி மடுக்காத முதல்வருக்கு எதிரான போக்கினை உடையவர்களுக்கு இதனால் ஒன்றும் ஏற்படாது; தமிழ் எழுத்து வடிவங்களைக் காக்க வேண்டும் என்னும் உணர்வுள்ள முதல்வருக்குத்தான் களங்கம் ஏற்படும் என அதையும் தடுத்து நிறுத்தியுள்ளனர் ஆய்வறிஞர்கள்.
natpu அவ்வாறு தடையாணை பெறுவது மாநாட்டைச் சிறப்பாக நடத்தியதாகக் கூறும் தமிழக அரசிற்கு அவமானம் ஆகும் என்பதால் உடனே விழித்து இவர்களது உரைகள் இணையம் மூலம் ஒளிபரப்பப்படவும் ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு நூலில் சேர்க்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? முதல்வருக்கு எதிராகச் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்குமா?
எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே
என்னும் பாவேந்தர் பாரதிதாசன் வழியில் ஆய்வறிஞர்கள் வழங்கிய தமிழ்க்காப்புக் கட்டுரைகளுக்கு  இழைக்கப்படும் அநீதி தமிழ்த்தாய்க்கு இழைக்கப்படும் அநீதி என்பதை உரியவர்கள் புரிந்து கொள்வார்களா?
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை  யானும் கெடும்
என்னும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் பொய்யா மொழியைப் படித்தாவது தங்களைத் திருத்திக் கொள்வார்களா?
செம்மொழித்தமிழ் தொடர்பான குழுவில் இருந்துகொண்டு இவ்வாறு செய்வது சரிதானா? முறைதானா? அறம்தானா? எனத் தமிழ்த்தாய் கேட்கும் கேள்வி அவர்கள் செவிகளில் விழுமா? அல்லது செவிடன் காதில் ஊதிய சங்குதானா?
மக்கள் மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம்! நல்ல தீர்ப்பு கூறுங்கள்!


Comments

Saturday, October 9, 2010

யாருக்கும் வெட்கமில்லை!

யாருக்கும் வெட்கமில்லை!

இலக்குவனார் திருவள்ளுவன்
(இளந்தமிழறிஞர்களுக்கான  குடியரசுத் தலைவரின் செம்மொழி விருது வழங்கப்படாமை குறித்த வினாக் கணைகள்)
natpu       தன்மானமும் தன்மதிப்பும் மிக்க  வீரப் பரம்பரை என நாம் நம்மைச்  சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும். மொழி காக்கவும் இனம் காக்கவும் உயிர் நீத்த வீர வணக்கத்திற்குரியோர் பிறந்த குலத்தில்தான் நாமும் பிறந்துள்ளோம் என்பதைத் தவிர நமக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை முதலான பண்புகள் இல்லை என்பதே உண்மை. ஈழத்தில் இனப்படுகொலை புரிந்தவர்களை அரியணையில் ஏற்றியதில் நமக்கும் பங்கு உள்ளது என்பதே நம் இழிந்த நிலையை உலகிற்கு உணர்த்துகிறது. நம் உரிமையைக் கேட்பதற்குக் கூட நாம் தயங்குவதில் இருந்தே நம் வெட்கங் கெட்ட நிலை அனைவர்க்கும் புலனாகின்றது.
      உரிமைக்கு ஊறு நேரும்பொழுது மிக மிகச் சிறிய எதிர்ப்பைக் காட்டக்கூடத் தயங்கும்  தமிழால் வாழ்வோரின் தகைமைக்கு(!) ஒரு சான்று.
     சமற்கிருதம், அரபி, பெர்சியன் முதலான மொழிகளைச் செம்மொழிகள் எனச் சொல்லி பல கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கி வருகிறது சமயச் சார்புடைய மத்திய அரசு. தமிழுக்குப் பல போராட்டங்களுக்குப் பின்பே தமிழின் செம்மொழித் தன்மைக்குரிய தகைவேற்பு வழங்கப்பட்டது. உடனே எப் பேராட்டமும் முயற்சியும்  இன்றிச் சமற்கிருதத்திற்கும் செம்மொழி ஏற்பு வழங்கப்பட்டது. ஆனால், செம்மொழி ஏற்பிற்கு முன்பிருந்தே சமற்கிருதத்திற்கு வழங்கப்படும் நிதியுதவிகள் தொடருகின்றன. தமிழுக்கோ ஒப்பிற்கு ஓரிரண்டு கண் துடைப்பாக வழங்கப்படுவது தவிர முழுமையான நிதி உதவிகள் வழங்கப்படவில்லை. அவற்றில் ஒன்றை மட்டும் பார்ப்போம்.
natpu      செம்மொழிச் செயற்பாட்டுத் திட்டங்களில் ஒன்று செம்மொழி அறிஞர்களை விருதுகள் வழங்கிச் சிறப்பித்தல். ஆனால், தமிழில் புலமையுடையோர் இல்லை எனத் தமிழறிஞர்களை  இழிவுபடுத்தும் விதமாக மத்திய அரசு நடந்து கொள்கிறது. நாமும் அமைதி காப்பதன் மூலம் அதனை ஒப்புக் கொள்கின்றோம்.
ஒவ்வோர் ஆண்டும்  சமற்கிருத அறிஞர்கள் 15 பேர், அரபி அறிஞர்கள் 3 பேர், பெர்சியன் அறிஞர்கள் 3 பேர், பாலி/பிராகிருத அறிஞர் ஒருவர் என 22 அறிஞர்களுக்குக் குடியரசுத் தலைவர் விருது இந்திய விடுதலை நாளின் பொழுது வழங்கப்படுகிறது. இவ் விருதானது விருது பெற்றவர்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் 50,000 உரூபாய் பரிசுத்தொகை வழங்கும் சிறப்பிற்குரியதாகும். செம்மொழித்தமிழ் அறிஞர்களுக்கும் இவ்வாறு வாணாள் முழுவதும் ஆண்டுதோறும் பரிசுஊதியம் வழங்கும் வகையில்  விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதே தவிர இது வரை ஒருவருக்குக் கூட அவ்வாறு விருது வழங்கப்படவில்லை. தமிழ்ப்புலமையுடையோர் யாருமில்லை என மத்திய அரசு கருதுகிறது என்றால், நாமும் ஆமாம், ஆமாம், எங்களில் அறிஞர்கள் யாருமில்லை; அந்த அளவிற்கு வளர்ச்சியில்லாத மொழியே எங்கள் தமிழ் மொழி என்பதுபோல் தலையாட்டிக் கொண்டு அமைதி காத்துவருகிறோம். சமற்கிருதத்திற்கும்  தொன்மையான சிறப்பு மிக்க உலக மூல மொழியான தமிழ் அறிஞர்களுக்கு வாணாள் முழுவதும் ஆண்டுதோறும் பரிசூதியம் வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதைக் கேட்பதற்கு நமக்குத் துணிவில்லை. ஒருவேளை அவ்வாறு விருது வழங்கினால் நமக்கா கிடைக்கப் போகிறது? வேறு யாரோ விருது வாங்க நாம் ஏன் குரல் கொடுக்க வேண்டும் என்ற பெருந்தன்மையா என்று தெரியவில்லை.
natpu      இவை தவிர சமற்கிருத அறிஞர் ஒருவருக்குப் பன்னாட்டு நிலையில் ஆண்டுதோறும் வாணாள் முழுவதும் உரூபாய் 50,000 வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அயல்நாட்டைச் சேர்ந்த செம்மொழியாம் தமிழறிஞர் ஒருவருக்குக் குறள்பீடம் விருது   என உரூபாய் 5,00,000 வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அப்படியானால்  சமற்கிருதத்தைவிடத் தமிழ் உயர்ந்ததாக ஒத்துக் கொண்டதாகுமே! விடலாமா? எனவே, எவ்வகை முறையீடும் போராட்டமும் இன்றிச் சமற்கிருத அறிஞருக்கான இப்பரிசுத் தொகை உரூபாய் 5 இலட்சத்திற்கு ஒருமுறை விருதாக உயர்த்தப்பட்டது.
      உண்மையில், குறள் பீடம் பன்னாட்டு விருதுகள் இரண்டு வழங்கப் பெறும் என அறிவிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று இந்தியாவில் தங்கியிராத இந்தியர் ஒருவருக்கும் மற்றொன்று இந்தியரல்லாத அயலவர் ஒருவருக்கும் வழங்கப்பெறும். சமற்கிருதத்திற்கு ஒரு விருது; ஆனால், தமிழுக்கு இரண்டா என எண்ணியே குறள்பீட விருது ஒன்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
natpu  அறிவித்துள்ள விருதுகளையாவது காலமுறையில் வழங்கியுள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. 2004ஆம் ஆண்டு   அக்டோபர்த் திங்கள் 12 ஆம் நாள் தமிழுக்குரிய செம்மொழி ஏற்பாணை வெளியிடப்பட்டது. ஆனால், அந்த ஆண்டிற்கான விருதாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை. அஃதாவது  2004-2005ஆம் ஆண்டிற்குரிய தொல்காப்பியர் விருதோ, குறள் பீடம் விருதுகளோ இளம் அறிஞர் விருதுகளோ யாருக்கும் வழங்கப்படவில்லை. (மூத்த அறிஞர் விருது பற்றித்தான் வாயே திறக்கவில்லையே!) தமிழறிஞர்கள் யாருமில்லை என மத்திய அரசு கருதுகிறதா? சமற்கிருதத்திற்குக் கீழான நிலையில்தான் தமிழாக இருந்தாலும் இருக்க வேண்டும் என்ற பரந்த(?) மனப்பான்மையா எனத் தமிழ் டிரிபுயூன் (Tamil Tribune) கேட்டது. இருப்பினும் வழங்கப்படவில்லை.
      தொல்காப்பியர் விருது 2005-2006ஆம் ஆண்டிற்கு மட்டுமே (பேராசிரியர் அடிகளாசிரியர்) அறிவிக்கப்பட்டுள்ளது. குறள்பீடம் விருதும் அயலவருக்கான ஒரு விருது மட்டும் (பேராசிரியர் சியார்சு அர்ட்)  2006-2007இற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக விருது வாங்கும் அளவிற்குக் கூடத் தமிழறிஞர்கள் யாரும் இல்லை என்பது மத்திய அரசின் வாதம் போலும். ஆனால் சமற்கிருத விருது சிற்றூரைச் சேர்ந்தவருக்குக் கூட வழங்கிச் சிற்றூரிலும் அதற்குச் செல்வாக்கு உள்ளதாக அறிவிக்கத் தயங்குவதில்லை.
இளம்அறிஞர் விருது 2005-2006 (முனைவர் அறவேந்தன், முனைவர் மணிகண்டன், முனைவர் கலைமகள், முனைவர் வா.மு.சே.ஆண்டவர், முனைவர் பழனிவேலு), 2006-2007 (முனைவர் சந்திரா, முனைவர் அரங்க. பாரி, முனைவர் மு.இளங்கோவன், முனைவர் பவானி, முனைவர் கலைவாணி), 2007-2008ஆம் ஆண்டுகளுக்கு மட்டுமே (முனைவர் செல்வராசு, முனைவர் வேல்முருகன், முனைவர் மணவழகன், முனைவர் சந்திரசேகரன், முனைவர் சைமன் சான்) அறிவிக்கப்பட்டது. எனவே, இதற்கு முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட வேண்டிய விருதுகள் வழங்காமை தமிழுலகத்திற்கு இழப்பு என்னும் உணர்வு ஆட்சியாளர்களுக்கு ஏன் வரவில்லை? பரபரப்பான அரசியல் விளம்பரத்தில் விரிவான செய்தி இடம் பெறாது என்ற நம்பிக்கையோ?
      உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திய 2010  சூனில் 2008-2009,   2009-2010 வரை விருதுகளை அறிவித்து வழங்கியிருக்கலாமே.  அவற்றையும் ஏன் அறிவிக்கவில்லை. உலக அறிஞர்கள் முன்னிலையில் விருதுகளை வழங்கிச் சிறப்பித்து இருக்கலாமே! தமிழால் பெருமை பேசுவோர்களுக்குத் தமிழறிஞர்களைச் சிறப்பிக்க மனமில்லாமல் போனது ஏன்? சரி போகட்டும்! அறிவித்த விருதுகளையாவது குடியரசுத்தலைவர் மூலம் வழங்கினார்களா? அவ்வாறு வழங்கவில்லையே! ஏன்? சமற்கிருதம் முதலான மொழியறிஞர்களுக்கு வழங்கியதுபோல் இந்திய விடுதலை நாளின் பொழுது வழங்குவதைத் தடுத்தது யார்? அதுதான் போகட்டும். குடியரசுத் தலைவர் நிகழ்ச்சித் திட்டத்தைப் பார்த்தால் வாரத்தில் 4 நாட்கள்கூடத் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில்  பங்கேற்றுள்ளார்கள். அவ்வாறிருக்க தமிழறிஞர்களுக்கான விருதுகளுக்கு நாள் ஒதுக்காமல் முட்டுக்கட்டையாக இருப்பது யார்? ஏன்? 
விருது தராமல் விருதுத் தொகை மட்டும் தந்த பொழுது அதை எவ்வாறு இந்த அறிஞர்கள் வெட்கம் சிறிதுமின்றி ஏற்றுக்கொண்டார்கள்?
natpu அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரடீ-கிளியே
ஊமைச்சனங்களடீ
மானம் சிறிதென் றெண்ணி
வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந்தனில்-கிளியே
இருக்க நிலைமையுண்டோ?

எனப் பாரதியார் இவர்களுக்காகத்தான் பாடிச் சென்றாரோ?
இன்று அவர் இருந்திருந்தால்

விருதுபெறுவதற்கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்

எனப் பாடியிருப்பார் அல்லவா?

விருதுகள் வழங்காமல் விருதுத் தொகைகள் மட்டும் வழங்கப்பட்டது ஏன் என எண்ணலாம். நிதி ஒதுக்கப்பட்ட ஆண்டிற்குள் அந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும் அல்லவா? எனவே, வழங்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் கோரிப் பெறப்பட்ட தொகையைத் திருப்பிச் செலுத்தினால்  தணிக்கைத் தடை வருமல்லவா? எனவேதான் விருதுகளைக் குடியரசுத் தலைவர் தரும்பொழுது தரட்டும். விருதுத் தொகைகளை  வழங்குவோம் என வழங்கியுள்ளனர். விருதுகள் வழங்காதது விருதாளர்களுக்கு அதிர்ச்சியும் வருத்தமும் அளித்தாலும் பெருமைக்குரிய விருதுத் தொகையை அறிந்தேற்பிற்குக் காரணமான முதல்வர் வழங்கும் பொழுது வாங்குவதுதானே ஏற்றது என வாங்கிவிட்டனர்.
natpu       விருதுத் தொகைகள் வழங்காததன் காரணம் என்ன தெரியுமா? ஆரிய மேலாதிக்க மனப்பான்மையில் ஊறிப்போன மத்திய அரசு தமிழ் டிரிபுயூனில் குறிப்பிட்டாற்போன்று சமற்கிருதத்திற்கு இணையாக எந்த மொழியையும் ஏற்க விரும்பவில்லை. உண்மையிலேயே சமற்கிருதத்தைவிடப் பன்மடங்கு மேம்பட்டதாக உயர் தமிழ் இருப்பினும் ஒப்பிற்குச்  சமற்கிருதத்திற்கு அடுத்தநிலை தமிழ் எனக் கூறி வந்தாலும் அதற்கு மிகவும் கீழான நிலையே கொடுக்க விரும்புகிறது. சமற்கிருதத்திற்கு அடுத்துள்ள நிலையில் பல மொழிகளைக் கூறிவிட்டு அதில் தமிழையும் சேர்த்து விட்டால் தமிழின் உயர்தனிச் செம்மொழிச் சிறப்பை மறைத்து விடலாம் அல்லவா? எனவே, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் செம்மொழி ஏற்பு நடைமுறைக்கு வருவதற்குக் காத்திருக்கிறார்கள்.
மருத்துவர் கி.ஆ.பெ.மணிமேகலை கண்ணன் நடத்தும் தமிழ்க்கழகம் (அகாதமி) சார்பாக அதன் தலைவர் மூத்த வழக்குரைஞர் காந்தி அவர்கள் உயர் நீதிமன்றத்தில் செம்மொழித் தகுதியல்லாத மொழிகளுக்குச் செம்மொழி ஏற்பு வழங்கக்கூடாது என வழக்கு தொடுத்துள்ளார். தீர்ப்பு வருவதற்குள் அவசரம் அவசரமாக  அம் மொழிகளுக்கான அறிந்தேற்பாணையைத் தீர்ப்பிற்கு உட்பட்டுச் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளார்கள். வழக்கு முடிவில் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பை வரவழைத்து விடலாம் என எதிர் நோக்குகிறார்கள். அவ்வாறு வந்தால் அவையும் செம்மொழிகளாகும். மலையாள மொழியினர் சேரநாட்டில் இயற்றப்பட்ட செந்தமிழ் நூல்களான தொல்காப்பியம், பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் முதலியவற்றின் அடிப்படையில் செம்மொழிஏற்பினை வேண்டி உள்ளார்கள். வங்காள மொழியினரும் செம்மொழிஏற்பினை வழங்க வேண்டி உள்ளார்கள். இவ்வாறு இந்தியாவின் எல்லா மொழிகளுக்கும் செம்மொழி ஏற்பு வழங்கிவிட்டால்  சமற்கிருதம் தவிர பிற அனைத்தும் ஒரு கும்பலாகக் காட்சியளிக்கும். கும்பலோடு கும்பலாகத் தமிழுக்கான விருதுகளை வழங்கினால் அதன் சிறப்பு யாருக்குத் தெரியப் போகிறது? என்னும் உயர்வு(!) மனப்பான்மை. எனவே, பிற மொழிகளுக்கான செம்மொழி ஏற்பாணை நடைமுறைக்கு வருவதற்காகக் காத்து உள்ளார்கள்
natpu       செம்மொழிக்காலம் என்பதற்குக் கி.மு. (கிறித்து பிறப்பிற்கு முன்புள்ள காலம்) எனப் பொதுவாகக் குறித்திருக்க வேண்டும். அல்லது 2000 ஆண்டு முன் வரலாறு என்று  இருந்ததையாவது மாற்றாமல் இருந்திருக்க வேண்டும். அதைத்தான் 1000 ஆண்டு என அறிவித்துப் பிற மொழிகளைப் பட்டியலில் சேர்க்க ஆட்சியாளர்கள் ஒத்துக்  கொண்டார்களே! பிறகு போராட்டத்திற்குப் பின்தானே 1500 ஆண்டுப் பழமை என மாற்றினார்கள். எனவே தமிழால் பிழைப்பவர்களுக்குப் பிறருக்கான விருதுகள் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது? அவர்கள், பிற மொழிஅறிஞர்களுக்கான விருதுகள் வழங்கும் வரை பொறுத்துக் கொள்வார்கள் அல்லவா? அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. இதுவரை தமிழக அரசு மத்திய அரசைக் கண்டிக்க வேண்டா - வற்புறுத்தி விருதுகள் வழங்கும் விழாவை நடத்தியிருக்கலாமே! ஏன் நடத்தவில்லை? முதல்வர் தில்லிக்குச் சென்ற பொழுதுகூட விருதளிப்பை வைத்திருக்கலாமே! செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ன செய்கிறது என்கிறீர்களா? முதல்வர் தமிழர் நலனுக்கு அனுப்பும் மடல்களே குப்பைத் தொட்டிக்குப் போகும்பொழுது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அதிகாரிகள் கடமை உணர்வுடன் அனுப்பும் மடல்களுக்கா மதிப்பிருக்கப் போகிறது! அனைவரும் சமம் எனப் பேசும் மத்திய அரசு, அயல்நாட்டு மொழியாம் ஆரியத்தை உயர்த்துகிறது; மண்ணின் மொழியான உயர்தனிச் செம்மொழித் தமிழைத் தாழ்த்துகிறது. இதனைக் கடமையாக எண்ணும் மத்திய அரசினருக்கு வெட்கம் எங்கே வரப் போகிறது?
      அரசியல்வாதிகளுக்குத்தான் வெட்கம் கிடையாது. விருதுகளால் மதிப்படையும் அறிஞர்களுக்குமா வெட்கம் இல்லை. விருதுகள் வழங்கிவிட்டதாக எண்ணி நண்பர்களும் சுற்றத்தாரும்  விருது எங்கே? விருது எங்கே? எனக் கேட்கும் பொழுது நாணிக் குறுகுகிறார்களே! கிளர்ந்து எழ வேண்டாவா?
     விருதுக்குத் தெரிவு செய்யப்பெற்ற அறிஞர்களே! உண்மையிலேயே நீங்கள் தமிழை மதிப்பதாயின் குறைந்த காலக்கெடு கொடுத்து குடியரசுத்தலைவர் அவர்களால் விருதுகள் வழங்கப்படவில்லையெனில் திருப்பித் தருவதாக அறிக்கை விடுங்கள்! தமிழை மதிக்காதவர்களும் தமிழ்ப்பகைவர்களே. ஆதலின்
       எதிரிகள் எமை நத்துவாய் எனக் கோடி    
       இட்டழைத்தாலும் தொடேன்
என அறிவித்து  விருதுத் தொகைகளைத் திருப்பியளியுங்கள். தமிழ் என்பது மொழியை மட்டும் குறிப்பதில்லை. வீரம், மானம் முதலான உணர்வுகளையும் குறிப்பது. எனவே, படித்த தமிழுக்காவது மதிப்பளித்து தன்மானத்தமிழர்களாக மாறுங்கள். இப்படி ஒரு நெருக்கடி கொடுத்தாலன்றித் தமிழ்மானம் காக்கப்படாது என்பதை உணருங்கள்.

தமிழை மதிக்கும் தமிழர்களாய்த் தலை நிமிர்ந்து வாழ்வோம்!


Comments




(1 hours ago) ஏதிலன் said:
வெட்கமில்லை, வெட்கமில்லை, இங்கு யாருக்கும் துளிக்கூட வெட்கமில்லை!
(1 hours ago) தஞ்சை இறையரசன் said:
தமிழ் மொழிக்கான தகுதியைக் குறைத்து மதிப்பிட இடம் கொடுத்தவர்கள் கொடுப்பவர்கள் தமிழறிஞர்களும் தமிழகமும்தான்! உண்மையை விளக்கமாகத் தந்துள்ளார் திருவள்ளுவனார்! தமிழறிஞர்கள் தமிழமைப்புகள் அதிக உரிமைகளைப் போராடிப் பெற்வில்லை என்றாலும் கிடப்பவற்றையாவது தக்கவைத்துக்கொள்வார்களா?

செய்திகள்



© நட்பூ @ 2010, ஆக்கம் மற்றும் பராமரிப்பு தாய் தொழில் நுட்பம்
மின்னஞ்சல் முகவரி : natpoo.in@gmail.com
தொடர்புக்கு: 9884057744
4 hours ago) karikalan said:
ஐயா!

இந்தக் கட்டுரையின் வாயிலாக உங்கள் குமுறல்களை நீங்கள் கொட்டி விட்டீர்கள். இதைப்படித்த எங்களைப் போன்றோரும் எங்கள் பங்குக்குப் புலம்புவதைத் தவிர என்ன செய்ய? "உரிமைக்கு ஊறு நேரும்பொழுது மிக மிகச் சிறிய எதிர்ப்பைக் காட்டக்கூடத் தயங்கும் தமிழால் வாழ்வோரின் தகைமைக்கு(!) ஒரு சான்று" என நீங்கள் எழுதியுள்ள வரியிலேயே இத்தகு நிலைமைக்கு விடையும் புதைந்துள்ளது. தமிழால் தங்களை அவர்கள் வளப்படுத்திக் கொண்டது மட்டுமல்ல, மாறாகத் தமிழினத்தையே கொள்ளை கொண்டு வருகிறார்கள் என்பது தான் உண்மை. தமிழறிஞர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது அப்படித் தங்களைத் தாங்களே எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் ஆட்சியாளர்களின் அடிவருடிகளாக இருந்து தொலைக்கும் வரை நம் நிலை இப்படித்தான் இருக்கும். பாவேந்தர் கூறியது போலத் தமிழாய்ந்த தமிழன் தமிழ்நாட்டை ஆண்டாலொழிய, வந்தேறிகள் இந்த மண்ணுக்கும் இனத்துக்கும் எதுவும் நன்மை செய்துவிடப் போவதுமில்லை, அவர்களுடைய அடிவருடிகளாலும் நம் மொழிக்கும், இனத்துக்கும் எதுவகையான நன்மைகளும் ஏற்படவும் ஏற்படாது. தமிழ்நாடு தமிழர்நாடாக மாற வேண்டும். அப்போது தான் நம் இனத்துக்கும், மொழிக்கும் விடிவு பிறக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++



 

within the last minute) இலக்குவனார் திருவள்ளுவன் said:
அன்புள்ள திரு கிருட்டிணன், உங்களுக்குத் தமிழில் தட்டச்சு செய்வதில் சிக்கல் என எண்ணுகிறேன். thiru2050.blogspot.com வலைப்பூவில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி எனக் குறிப்பு உள்ளது. அதனைப்பின்பற்றினால் நீங்கள் கணிணியில் தமிழில் தட்டச்சிட இயலும். எனினும் உங்கள் கருத்திற்கு நன்றி. (பிற கருத்தாளர்களுக்கும்தான் நன்றி.)அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
(1 hours ago) Krishnan-Chennai said:
This needs no further illustrations. Even Sahithya Awards have been turned down by some of our Great Scholars for reasons best known to them. So People have to come to a consensus and decide keeping in mind the Larger Interests of the Tamil Community as a whole. There are enough of precedences earlier in the History of Tamil Nadu. Even otherwise they can lay their own cases as examples and create a Noble Precedence.
Hats off to Valluvan for the above exemplary Note. Quotation from Bharathi is extremely apt and I have no doubt that it will open the minds of People.

யாருக்கும் வெட்கமில்லை என்னும் கருத்துரையைப் படித்தேன்.
நெருப்புரையாக இருந்தது. மேற்கூறிய தலைப்பில் பாவலரேறு
பெருஞ்சித்திரனார் தம் தென்மொழியில் ஓர் ஆசிரிய உரையை
எழுதி அந்தக் காலத்தில்
தமிழுக்கும் இனத்திற்கும் ஏற்பட்ட இழிவுகளைச்
சுட்டிகாட்டிருந்தார். இக்காலத் தமிழனுக்கு மொழியைப் பற்றியோ
இனத்தைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ கவலை இல்லை.
மொழி இனம் நாடு ஆகிய மூன்றிலும் நாம் கோட்டை விட்டோம்
என்பதுதான் அவலம். அறிஞர் திருவள்ளுவன் அவர்களின் கருத்துகள்
தமிழர்களை விழிக்கச் செய்யும்.

இரா.செம்மல்











(within the last minute) Anonymous said: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வெட்கமில்லை வெட்கமில்லை! யாருக்கும் வெட்கமில்லை!

தமிழ் மொழிக்கான தகுதியைக் குறைத்து மதிப்பிட இடம் கொடுத்தவர்கள் கொடுப்பவர்கள் தமிழறிஞர்களும் தமிழகமும்தான்!
(within the last minute) முருகன் said:
ஐயா!


தங்கள் கருத்துரை..... நெருப்புரை........
(within the last minute) தீபக் ,திருப்பெரும்பதூர் said:
சிறு எறும்பு  கூடத் தன்னைப்  பாதுகாக்கத்  தன்னால் ஆன எதிர்ப்பைக் காட்டும் ஆனால் தமிழன்.............. இதையெல்லாம் என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை.....
(within the last minute) மாணிக்கம் , லிட்டில் இந்தியா, சி said:
நட்பூ ஆசிரியருக்கு வணக்கம்,
தங்களுடைய தலத்தில் தமிழ் அறிஞர்களின் கட்டுரைகள் இடம்பெறுவது மகிழ்ச்சி, மற்ற இணைய இதழ்களில் எல்லாம் சினிமா, கவர்ச்சி இதுவே உள்ளது தற்போதைய தமிழனுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை முதலான பண்புகள் இல்லை........
(6 hours ago) Anonymous said:
சிறு எறும்புகூடத் தன்னைப் பாதுகாக்கத் தன்னால் ஆன எதிர்ப்பைக் காட்டும்  ஆனால் தமிழன்.............. இதையெல்லாம் என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை.....
durai
(2 days ago) த.மணிமாறன் said:
எந்த ஒரு சொல்லையும் இடம் மாற்றம் செய்ய முடியாத படி பொருத்தமாகவும் சரியாகவும் திரு இலக்குவனார் திருவள்ளுவன் எழுதியுள்ளார். ஆனால் எருமை மாட்டுத் தோல் உள்ளவர்களுக்குச் சுரணை எப்படி வரும்? வெட்கம் எப்படி வரும்? வழக்குரைஞர் காந்தியின் பணியும் பாராட்டிற்குரியது. உயர் மட்டத்தில் உள்ளவர்களும் வழக்கைத் திரும்பப் பெற கேட்டதாகவும் சிலர் விலை பேச முயன்றதாகவும் மிரட்டல் வந்ததாகவும் கேள்விப்பட்டேன். அவருடன் மேலும் பல தமிழ் அமைப்புகளும் அவருடைய வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டு வழக்கை வலிமையுடையதாக ஆக்க வேண்டும். இதைப் படித்த பின்பும் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு வெட்க உணர்வு ஏற்பட வில்லை என்றால் நாம் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.
(5 days ago) besten online poker said:
hey your blog design is very nice, clean and fresh and with updated content, make people feel peace and I always like browsing your site.

- Joe
(5 days ago) குமரன் said:
என்ன செய்வது தன்மானமற்ற் தலவர்களால் தமிழகம் தாழ்ந்து போய் கிடக்கிறது. தடுமாறிக் கிடக்கும் தமிழகம் தலை நிமிர இயன்றதைச் செய்வோம்.
(Oct 11, 2010) said:
(within the last minute) Anonymous said:
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
hit counters

Followers

Blog Archive