அவற்றில் ஒன்றையே குறிப்பிட விரும்புகின்றேன். எழுத்து என்பது, உடல்; மொழி என்பது, உயிர். எழுத்தாகிய உடல் சிதையுமானால், மொழி என்கிற உயிர் அழிந்துபோகும் என்றார் செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார். அவ்வகையில் தமிழ் எழுத்து வடிவங்களைச் சிதைவில் இருந்து காப்பாற்றித் தமிழ் இலக்கியங்களையும் தமிழ் மொழியையும் இனத்தையும் காப்பாற்ற வேண்டும் என மாநாட்டில் நால்வர் கட்டுரை அளித்தோம்; தமிழ் எழுத்து வடிவங்களைச் சிதைப்பதால் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் ஏற்படும் கேடுகளை நன்கு விளக்கினோம்.
25.06.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அமர்வில் கோவூர்கிழார் அரங்கத்தில் எங்களின் ஆய்வுரைகள் நிகழ்ந்தன. இக் கருத்தரங்கத்திற்கு முந்தைய நிகழ்ச்சி வரையும் இதற்கு அடுத்த நிகழ்ச்சியில் இருந்தும் காணொளிக் காட்சிகளை இணையத்தில் காண முடிகிறது. தமிழ்மொழிக் காப்பிற்காக நாங்கள் வழங்கிய ஆய்வுரைகள் மட்டும் திட்டமிட்டுக் காட்டப்பட வில்லை.
அதுபோல், ஆய்வுரைகளைத் தொகுத்து விரைவில் நூலாக வெளியிட வேண்டும் என முதல்வர் கட்டளையிட்டார் அல்லவா? தமிழ்க்காப்பு தொடர்பான எங்களின் கட்டுரைகளை மட்டும் வெளியிடக் கூடாது என முடிவெடுத்து ஆய்வறிஞர்களிடம் கட்டுரைகள் அளிக்குமாறு கேட்கவில்லை. ஆய்வுக்கட்டுரைகள் அளித்த பிற பேராளர்களிடம் முழுக் கட்டுரையை அளிக்குமாறு மடல் அனுப்பப்பட்டுள்ளது; எங்களுக்கு மட்டும் அவ்வாறான மடல் வரவில்லை எனப் பன்முறை மின்னஞ்சல் வழியாகவும் பதிவஞ்சல் வழியாகவும் மடல்கள் அனுப்பியும் தொலைபேசி வழியாக வேண்டுகோள் விடுத்தும் அவை பார்க்கப்பட்டு மறைக்கப்பட்டு விட்டன. அப்படி என்ன எங்களின் கட்டுரைகளில் அஞ்சகத்தக்கன உள்ளன என்கிறீர்களா?
பொதுவாகப் பிற அரங்கங்களில் போதிய அளவு நோக்கர்கள் வராதபொழுது இவ்வரங்கத்தில் உட்கார இடமின்றித் திரும்பச் சென்றவர்கள் மிகுதி.
நாற்காலி முன்பு உரையாற்றும் சில கருத்தரங்கங்கள் போல் அல்லாமல் அரங்கு நிறைந்து காணப்பட்டது. அந்த அளவிற்கு உலகலாவிய வரவேற்பைப் பெற்றன எங்களின் ஆய்வுக்கட்டுரைகள். பார்வையாளர் அனைவரும் எழுச்சியுடன் பங்கேற்றனர். இந்த அரங்கத்திற்கு வர வாய்ப்பில்லாதவர்களும் கேட்டு அறிந்து மகிழும் அளவிற்குப் பெரிதும் வரவேற்பைப் பெற்றது எழுத்துச் சிதைப்பாளர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது போலும். எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! என்னும் தலைப்பில் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சிறு நூலையும் வெளியிட்டோம். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, எழுத்துச் சிதைப்பாளர்கள் எழுத்துக் காவலர்களுக்கும் தமிழன்பர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைத் தரும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், உண்மையில் தமிழ்த்தாய்க்குத்தான் கேடு செய்கிறோம் எனப் புரிந்துதான் செயல்படுகின்றனரா எனத் தெரியவில்லை.
மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்பொழுதே தமிழ்ச்சிதைவிற்கான ஆணையோ அறிவிப்போ வெளியிடக்கூடாது என முதல்வரை வேண்டி முறையீடு அளிப்பதற்காகக் கையெழுத்து இயக்கமும் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தினரால் நடத்தப்பட்டது. ஆனால், தமிழறிஞர் ஒருவர் அத்தகைய அறிவிப்போ ஆணையோ எதுவும் வராது என உறுதியளித்து இதனைக் கைவிடுமாறு வேண்டியதற்கு இணங்க அம்முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டது.
தொடக்கத்தில் ஆய்வுரைகளை இணையத்தளத்திலும் ஆய்வுத் தொகுப்பு நூலில் சேர்க்குமாறு வேண்டுகோள் விடுத்த மடல்களைப் பொறுப்பிலுள்ளோர் பார்க்கவில்லையோ என்ற ஐயமும் ஏற்பட்டது. ஆனால் இதே மடல்களில் மறுநாள் மற்றோர் அமர்வில் எழுத்துச் சீர்திருத்தமா? தமிழுக்கு அது பொருந்துமா? என்னும் தலைப்பில் பேராசிரியர் பெஞ்சமின் லெபொ (பிரான்சு) உரையாற்றியதும் விடுபட்டது குறிக்கப்பெற்றது. அவரது அமர்வில் துணைமுதல்வரின் மனைவி அவர்களும் முதல்வரின் குடும்பத்தினரும் ஈடுபாட்டுடன் கேட்டதும் குறிக்கப்பெற்றது. அவருக்கு மட்டும் கட்டுரையை அனுப்புமாறு மடல் அனுப்பப்பட்டுள்ளது. எழுத்துக் காப்பு அமர்வு மட்டும் கூண்டோடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் கணினி முறையில் சார்நிலையில் உள்ளவர்களே செய்வதே வழக்கம் என்பதால் பாகுபாடு காட்ட வேண்டும் என்னும் சிலர் திட்டமிட்டே தமிழ் எழுத்துச் சிதைவிற்கு எதிரான முயற்சிகள் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகத் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி இவ்வாறு நடக்கின்றனர் என்று எண்ணத் தோன்றுகிறது.
எனவே, தமிழ் எழுத்துக் காப்புப் போக்கிற்கு எதிரான செம்மொழி மாநாட்டுக் கருத்தரங்கக் குழுவின் போக்கைக் கண்டித்தும் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் கண்டனக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டனர். இதை அறிந்த இப்பேராளர்கள் அவற்றைத் தடுத்து நிறுத்தினர். இவர்களது கட்டுரைகள் இடம் பெறாமல் கருத்தரங்கக் கட்டுரைகள் தொகுப்பை வெளியிட உயர்நீதிமன்றம் மூலம் தடையாணை பெறவும் தமிழார்வலர்கள் நடவடிக்கை எடுத்தனர். இவ்வாறு வழக்குமன்றம் சென்று நீதி கேட்போம் என எழுதியும் செவி மடுக்காத முதல்வருக்கு எதிரான போக்கினை உடையவர்களுக்கு இதனால் ஒன்றும் ஏற்படாது; தமிழ் எழுத்து வடிவங்களைக் காக்க வேண்டும் என்னும் உணர்வுள்ள முதல்வருக்குத்தான் களங்கம் ஏற்படும் என அதையும் தடுத்து நிறுத்தியுள்ளனர் ஆய்வறிஞர்கள்.
எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே
என்னும் பாவேந்தர் பாரதிதாசன் வழியில் ஆய்வறிஞர்கள் வழங்கிய தமிழ்க்காப்புக் கட்டுரைகளுக்கு இழைக்கப்படும் அநீதி தமிழ்த்தாய்க்கு இழைக்கப்படும் அநீதி என்பதை உரியவர்கள் புரிந்து கொள்வார்களா?
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்
என்னும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் பொய்யா மொழியைப் படித்தாவது தங்களைத் திருத்திக் கொள்வார்களா?
செம்மொழித்தமிழ் தொடர்பான குழுவில் இருந்துகொண்டு இவ்வாறு செய்வது சரிதானா? முறைதானா? அறம்தானா? எனத் தமிழ்த்தாய் கேட்கும் கேள்வி அவர்கள் செவிகளில் விழுமா? அல்லது செவிடன் காதில் ஊதிய சங்குதானா?
மக்கள் மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம்! நல்ல தீர்ப்பு கூறுங்கள்!
No comments:
Post a Comment