Showing posts with label முதல்வர். Show all posts
Showing posts with label முதல்வர். Show all posts

Saturday, January 30, 2021

முதல்வர் திறமையானவர் என்பதால் வந்த பாதையை மறுக்கலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




முதல்வர் திறமையானவர் என்பதால் வந்த பாதையை மறுக்கலாமா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிநிலைப்பாடு குறித்து ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர், ஊடகத்தினர், பொதுமக்கள், ஊகச் செய்தியாளர்கள் எனப் பல தரப்பாரும் எண்ணியதற்கும் சொல்லியதற்கும் மாறாக ஆட்சித் தேரைத் தொடர்ந்து செலுத்திக் கொண்டுள்ளார். நான்கு ஆண்டுகளைக் கடந்து விட்டுத் தேர்தல் காலத்தை நெருங்கிவிட்டார். மத்தியப்பிடியில் சிக்கியும் சிக்காமலும் நழுவியும் நழுவாமலும் வினைத்திறனுடன் செயல்பட்டு வருகிறார். பாராட்டிற்குரிய பல பணிகளை ஆற்றி வருகிறார்.

“எதிர்க்கட்சித் தலைவர் தாலின், தான் சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று கூறி வருகிறார். நான் மக்களால் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவன். என்னை முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் தேர்வு செய்தார்கள்” எனப் பொதுக்கூட்டங்களில் முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி கூறிவருகிறார். கட்சியிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகள் வகித்தவர், இப்பொழுதும் முதல்வராகவும் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள ஒருவர் இவ்வாறு கூறுவது அறியாமையாகக் கருத முடியாது. அவ்வாறிருக்க இவ்வாறு கூறுகிறார் என்றால் என்னென்பது? சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வரைத் தேர்வு செய்வது என்பது வெளியே காட்டப்படும் நடைமுறை. உண்மையில் கட்சித்தலைமை அடையாளம் காட்டப்படுபவரைத்தான் அங்ஙனம் தேர்ந்தெடுத்ததாக அரங்கேற்றுவதே உள்ளார்ந்த செயல்பாடு. முதல்வர் மட்டுமல்ல, தலைமையமைச்சர், குடியரசுத்தலைவர் முதலான ஆட்சிப்பொறுப்பில் உள்ள தெரிவுமுறையெல்லாம் கட்சித்தலைமையின் விருப்பத்திற்கிணங்க நடத்தப்படும் நாடகங்கள்தான் என்பதை அரசியலில் அரிச்சுவடி அறிந்தவர்களும் அறிவார்கள். உள்ளாட்சி உறுப்பினர்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் வரை அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கட்சித்தலைமை வாய்ப்பு அளிப்பதால்தான் இந்த வாய்ப்பை அவர்கள் பெறுகிறார்கள்.

கட்சிச்சார்பின்றிப் போட்டியிடுபவர்கள்தாம் தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகப் பெருமை பேசலாம். பிறர் யாருமே கட்சியால் அடையாளங் காட்டப்படுவதால்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களாக மாறுகிறார்கள். எனவேதான் அவர்கள் வெற்றி பெற்றதும் அதிகாரத் தலைமைக்குத் தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர். முன்பு குடியரசுத் தலைவாகத் தேரந்தெடுக்கப்பட்ட கியானிசெயில்(சிங்கு)வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டதும் கட்சித்தலைவியான இந்திராகாந்தி நடந்தபாதையை மகிழ்ச்சியுடன் துப்புரவு செய்வேன் என்றார்(1982). அவர் குடியரசுத்த்லைவரானதும் இந்திராகாந்தி சீருந்தில் இருந்து இறங்கியபொழுது கதவைத் திறந்துவிட்டார். அவர் சடடமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளில் 72விழுக்காடு பெற்று வெற்றி பெற்றவர். ஆனால், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இறுமாப்புகொள்ளாமல் தன்னைத் தெரிவுசெய்த கட்சித்தலைவி இந்திராகாந்தியால்தான் குடியரசுத்தலைவர் ஆனதை உணர்ந்து அவருக்கு (அளவு கடந்த) நன்றியுடன் நடந்து கொண்டார்

இதேபோல் மத்தியப்பிரதேசத் தொழில் அமைச்சர் கைலாசு விசயவர்கியா(Kailash Vijayvargia) பாசக தலைமை தனக்கு வாய்ப்பு தந்தமைக்காக எனக்குக் கட்டளையிட்டால் கட்சி அலுவலகத்தைத் துப்புரவும் செய்வேன் என்றார்(2013). இவ்வாறு பற்பலரைச் சான்றாகக் கூறலாம். தமிழ்நாட்டிலும் அமைச்சர்களாகவும் பேரவைத் தலைவர்களாகவும் வாய்ப்பு பெற்றவர்களும் நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுவதும் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதும் அனைவரும் அறிந்ததே. இத்தகைய வாய்ப்பு பெறாதவர்களும் தங்கள் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்லர். பாசகவின் சதி அரங்கேறாமல் சசிகலா சிறைக்குச் செல்லாமல் இருந்திருந்தால் அவரின் அடிமையாக் காட்டிக்கொள்வதில் போட்டி போட்டிருப்பார்கள். விடுதலை யான அவர் தமிழகம் திரும்பியதும்  இப்படிப்பட்டக காட்சிகள் அரங்கேறவும் வாய்ப்பு உள்ளது.

மக்கள் ஆட்சி என்ற பெயரில் கட்சி ஆட்சிதான் நடைபெறுகிறது. கட்சி ஆட்சி என்றால் ஒரு சிலரின் வல்லாண்மைக்கு உட்பட்டதுதான். கட்சித்தலைமையின் விருப்பத்திற்கு உரியவர்கள் வாய்ப்புகளைப் பெற்றுத் தேர்தல் முறையில் வெற்றி பெறுகிறார்கள்; ஆட்சிப் பொறுப்புகளில் அமர்த்தப்படுகிறார்கள். இவற்றை எல்லாம் கூறுவதன் காரணம் ச.ம.உ(எம்.எல்.ஏ)க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக உதடு சொன்னாலும் சொல்பவர் உள்ளத்திற்கு உண்மை தெரியும் என்பதால்தான். சசிகலா நினைத்திருந்தால் செங்கோட்டையனுக்கோ சட்ட மன்ற உறுப்பினராக இல்லாத தம்பிதுரைக்கோ வேறு யாருக்கோ முதல்வர் பதவி தந்திருக்கலாம்.  சாதி அடிப்படையிலும் யாருக்கேனும் முதல்வர் பதவி தந்திருக்கலாம். எனவே, சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டு அ.தி.மு.க.சட்டமன்றக் குழுவால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முறைப்படி முதல்வரானவர், சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன் எனக் கூறுவது மனமறிந்த பொய்யே! சட்டமன்ற உறுப்பினர்களின் செல்வாக்கு அவருக்கு இருந்தது என்றால் கூவத்தூருக்கு ஏன் தேவை ஏற்பட்டது. அவர்களைக் கூட்டி நேரடியாக முதல்வராக ஆகியிருக்க வேண்டியதுதானே!

அதேநேரம் எடப்பாடியாருக்கு இந்த உண்மையின் அடிப்படையில் நன்றி உணர்வு இருப்பதால்தான் பிற அமைச்சர்கள் சசிகலாவிற்கு எதிராக வன்மையாகக் கருத்து தெரிவித்தாலும்  அவரைத் தாக்கி இவர் எதுவும் பேசவில்லை. அப்படிப்பட்டவர் உண்மையைச் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் பொய்யாக முதல்வரானதன் காரணம் ச.ம.உ.(எம்.எல்.ஏ)க்கள் என்பது சரியல்ல.

ஒருவேளை, “சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துகளைக் கேட்டபொழுது பெரும்பான்மையர் என்னை விரும்பினார்கள், எனவே என்னைப் பரிந்துரைத்தார்” என்றுகூடச் சொல்லலாம். அப்படியானாலும் பெரும்பான்மையர் விருப்பத்தை ஏற்று நடுவுநிலைமையுடன் செயல்பட்டார் அல்லவா? இதை அற்ப உதவியாகக் கருதலாம். ஆனால்,

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

(திருவள்ளுவர், திருக்குறள் 102) என்பதல்லவா அறநெறி.

நன்றி கொன்றமை தவிர ஆட்சித்திறனால், சசிகலா தக்கவரைத்தான் முதல்வராக அமர்த்தியள்ளார் என்னும் நற்பெயரை அவருக்கு வாங்கித் தந்துள்ளார்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.(திருவள்ளுவர், திருக்குறள் 110)

 என்னும் நிலையைத் திறமையும் ஆளுமையும் மிக்கவர் அடையலாமா?

அஃதுமட்டுமல்ல. உதவியின் அளவைப்பொறுத்து உதவி மதிப்பிடப்படுவதில்லை. உதவிபெற்றவரின் பண்பின் அடிப்படையில்தான் உதவி மதிப்பிடப்படுகிறது என்கிறார் திருவள்ளுவர்.

உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.(திருவள்ளுவர், திருக்குறள் 105)

என்னும் தமிழ்மறைக்கிணங்க பெற்ற உதவியை மறக்கும் பண்பற்றவராக மாறலாமா?

ஒருவேளை காட்சிகள் மாறினால், “நான் சின்னம்மாவால் அடையாளங்காட்டப்பட்டவன்” எனப் பெருமை பொங்கக் கூறும் நிலையும் வரலாம். எனவே, இனிமேல், முதல்வர், தான் சசிகலாவால் முதல்வராகவில்லை எனச் சொல்வதையாவது இனி நிறுத்த வேண்டும். தன்னம்பிக்கை உள்ள முதல்வர் அவ்வாறு பொய்யுரை புகல்வதை நிறுத்துவார் என்றே எதிர்பார்க்கிறோம்.

வளர்க அவர் நற்பணிகள்!

வெல்க அவர் நன்முயற்சிகள்!

அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல

 







Saturday, July 1, 2017

செம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட முதல்வருக்கு வேண்டுகோள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 193, ஆனி 18, 2048 / சூலை 02, 2017

செம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட

முதல்வருக்கு வேண்டுகோள்!


  முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி, மேனாள் முதல்வர்,  தங்கள் தலைவி செயலலிதா வழியில் செயல்படுவதாகக் கூறுகிறார். ஆனால், மாறுபட வேண்டிய நேர்வுகளில் மாறுபட்டுச் செயல்படுகிறார். காட்சிக்கு எளிமை, பிற கட்சிகளுடனான அணுகுமுறைகளில் மாற்றம், எனப் பலவற்றைக் கூறலாம். தனக்குச் சரியெனப்பட்டதைச் செய்து தன் தனித்தன்மையை நிலைநாட்டிவருவது பாராட்டிற்குரியது.
  தமிழக முதல்வர் பதவி  வழி, செம்மொழித்தமிழாய்வு  மத்திய நிறுவனத் தலைவராவார். மேனாள் முதல்வர்கள் தங்களுக்கு முந்தைய எதிர்க்கட்சியைச் சேர்ந்த முதல்வர் வழியில் செல்வதைத் தன்மான இழுக்காகக் கருதும் தவறான மனப்பாங்கு உடையவர்களாகவும் இருந்துள்ளனர். எனவேதான், மேனாள் முதல்வர் செயலலிதா, கருணாநிதி “நட்டுவைத்த செடிக்குத்தான் தண்ணீர் ஊற்றவேண்டுமா?” எனக்கூறிச் செம்மொழித்தமிழாய்வு  மத்திய நிறுவனத்தைப் புறக்கணித்தார். அவர் புறக்கணித்தது கலைஞர் கருணாநிதி வீட்டு நிறுவனத்தை அல்ல! உலகத் தமிழ் மக்களுக்கான  மத்திய நிறுவனத்தை! இதன் காரணமாகத் தலைமையின்றி இந்நிறுவம் முழுமையாக இயங்க இயலவில்லை.
  இந்நிறுவனத்திற்குத் தலைவராக முதல்வர் இருக்க வேண்டிய தேவையில்லை.  நெறியாளராக வேண்டுமென்றால் இருக்கலாம். கலைஞர் கருணாநிதி, தாம் தலைவராக இருக்க வேண்டும் என்பதற்காகத் தமிழக முதல்வரைத் தலைவராக்கும் தவற்றினைச்செய்தார். அவர், தன்னைப் பதவிவழித் தலைவராக ஆக்கிக்கொண்டதற்கு மாற்றாகப் பெயர் வழித் தலைவராக  ஆக்கியிருந்திருக்கலாம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர்  கருணாநிதி எனில்,  அவர் இருக்கும் வரை அல்லது விரும்பும் வரை தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் அவர்தான் தலைவர். தன்னால் உருவாக்கப்பட்ட அமைப்பு என எழுச்சியுடன் செயல்பட்டிருப்பார். அப்படிச்சொன்னால் பதவி ஆசை என்பார்கள் என இவ்வாறு பதவிவழித் தலைவராக்கிக் கொண்டார்.
  செயலலிதாவின் செயல்படாத்தலைமையால், முதல்வருக்கு மாற்றாகத் தமிழறிஞர் ஒருவரைத் தலைவராக்கலாம் என்ற கருத்து மத்திய அரசிற்கு அறிஞர்கள் பலராலும் எடுத்துச் சொல்லப்பட்டது. ஆனால், இவ்வாறு அறிவிப்பது மாநில-மத்திய அரசுகளுக்கிடையே பிணக்கை உண்டாக்கும் என்றும் முதல்வராகவே அவ்வாறு தெரிவித்தால் அதை  ஏற்கலாம் என்றும் மத்தியஅரசு கருதியதாகத்  தெரிய வருகிறது.
  அமைதியாகத் திட்டமிட்டு, எண்ணியவாறு செயல்படும் முதல்வர் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர்  என்ற முறையில் அந்நிறுவனத்திற்குச் சென்று செந்தமிழ்வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருக்க வேண்டும். அவர் இந்தப்பொறுப்பிற்குரிய அதிகாரத்தைச் செயல்படுத்தினால் சிறப்பாகவே செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது
  இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த்துறை, தமிழாய்வுத்துறை தொடங்கப்படுவதற்கும் ஆண்டிற்கு 20  அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை தொடங்கப்படவும், தமிழர் வாழும்  பகுதிகளில் தமிழ் கற்பிக்கப்படவும் பரப்பப்படவும் ஏற்ற திட்டங்களைச் செயல்படுத்தவும் வழிகாட்டித் தமிழுக்குப் பெருமை சேர்த்துத் தனக்கும் பெருமை சேர்த்துக் கொள்ளலாம். . இதனால் வையம் உள்ளளவும் வான்புகழ் பெற்றுத் திகழ்வார்.
  ஒருவேளை அவர்,  விரும்பவில்லை எனில்,  மத்திய அரசிற்குத் தலைவர் பதவிக்குத் தமிழறிஞர் ஒருவரை அமர்த்தலாம் என்றும் தமிழக முதல்வர் நெறியாளராக இருப்பார் என்றும் தெரிவித்து அக்கருத்துருவை ஏற்கச்செய்யலாம்.  அவ்வாறெனில் இந்நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டுத் தமிழ்ப்பணி தொடர வாய்ப்பு ஏற்படும்.
  எவ்வாறாயினும் செம்மொழித்தமிழாய்வு  மத்தியநிறுவனம் செயல்படுவது மாண்புமிகு  தமிழக முதல்வர் கைகளில்தான் உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் அவர்களே!
 உலகத்தமிழர் நலனுக்காக
விரைந்து செயல்படுக!
விண்வரை தமிழ்ப்புகழ் பரப்புக!
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்
 (திருவள்ளுவர், திருக்குறள் 648)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை :  அகரமுதல 193, ஆனி 18, 2048 / சூலை 02, 2017


Wednesday, February 8, 2017

குழப்பங்களுக்குக் காரணம் ஆளுநரை இயக்குபவர்களே! - இலக்குவனார் திருவள்ளுவன்





குழப்பங்களுக்குக் காரணம் ஆளுநரை இயக்குபவர்களே!

- இலக்குவனார் திருவள்ளுவன்

  தமிழக முதல்வர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியதும் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்ட மன்றக் கட்சித்தலைவராக வி.கி.சசிகலா என்னும் சசிகலா நடராசனைத் தேர்ந்தெடுத்ததும் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் தமிழ்நாடு விரைந்து வந்திருக்க வேண்டும். இது தொடர்பில் அவர் மத்திய அரசின் உரியவர்களைக் கலந்தாய்வதும் சட்ட வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்பதும் முறையானதே! ஆனால், அதை ஒளிவுமறைவாகச் செய்ய வேண்டிய தேவையில்லை. வெளிப்படையாக அறிவித்துவிட்டுத் தமிழ்நாட்டிற்கு வரும் நாளையும் தெரிவிக்கலாம். காலத்தாழ்ச்சி செய்யாமல், ஆளுங்கட்சியின் ச.ம.உறுப்பினர்களின் முடிவை ஏற்றிருந்தால்,  பன்னீர் வெந்நீரான நிலை ஏற்பட்டிருக்காது.

  பன்னீரின் இந்த முடிவிற்குக் காரணம் திமுகவின் தூண்டுதல் என்று சொல்வதைவிட அக்கட்சியின் அரசியல் தந்திரத்திற்கு இரையாகிவிட்டார் என்றுதான்  சொல்ல வேண்டும்.  தந்தை இருக்கும்பொழுதே தனக்கு முதல்வர் பதவி, கட்சித்தலைவர் பதவி வேண்டும் என்று போராடி வருபவர் இன்னொருவர் அதுவும் வேறு கட்சியைச் சேர்ந்தவர் முதல்வராகவா கட்சி நடத்திக் கொண்டுள்ளார்.  இதுகூடப் பன்னீருக்கப் புரியாமல் போனது வியப்புதான்.
  பணிவிற்கும் எளிமைக்கும் எடுத்துக்காட்டான பன்னீர், இன்று நடிப்பிற்கும் எடுத்துக்காட்டாக மாறியதுதான் வருத்தமாக உள்ளது. அவர் கூறிவரும் கருத்துகள் யாவும் நடைமுறைக்கு  ஏற்றனவல்ல!

  தன்னைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து விலகும் மடலைப் பெற்றதாகக் கூறுகிறார். பொதுவாக எந்த அமைப்பிலிருந்தும் ஒருவரை  ஏதேனும் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும்என்றால், முறைப்படி விலக்கினால் அவருக்குக் களங்கம் ஏற்படலாம் என்பதற்காகத் தானாகவே விலகியதாக எழுதி வாங்குவதே வழக்கம். சிலர் மட்டுமே இத்தகு சூழலில் நீங்களே விலக்குங்கள் நான் விலகவில்லை என்பார்கள். அவ்வாறு பன்னீர் தெரிவித்திருக்கலாம்.
  மேலும் கட்டாயப்படுத்தினால் மடல் எழுதும் இவர்,  பிற கட்சியினரின் துணையுடன்ஆட்சிக்கு வந்தால் கட்டாயத்தால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா? இதுவே இவருக்குத் தகுதி குறைவாகிறதே!
  தன்னையே முன்மொழிய  வைத்ததாகவும் கூறுகிறார். எல்லாக்கட்சிகளிலும் அமைப்புகள், நிறுவனங்களிலும் போட்டிக்கு வாய்ப்பிருந்து, போட்டியின்றி ஒருவரைத் தேர்ந்தெடுக்க விரும்பின், போட்டியாளரை முன்மொழியச் சொல்வதே நடைமுறை. அவ்வாறிருக்க அதனைக் குறையாகக் கூறுவதும் பொருத்தமில்லை.
  செயலலிதா  காலமானதுடன் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி அல்லது வேறொருவரை முதல்வராக்க எண்ணியதாகவும் பா.ச.க.வால் பன்னீர் முதல்வரானதாகவும் அதனால் இருவருக்கும்  இடையே காழ்ப்புணர்ச்சியும் பனிப்போரும் ஏற்பட்டுள்ளதாகவும் இதழ்களில் செய்தி வந்தன. ஆனால், பன்னீரே, சசிசலா, அவைத்தலைவர்  மதுசூதனனரைப் பொதுச்செயலராகவும் தன்னை முதல்வராகவும்  ஆக்க விரும்பியதாகத் தெரிவித்துள்ளார். அப்படியானால், அவர் திட்டமிட்டு முன்னாள் முதல்வரைச் சாகடித்ததாகவும் கட்சி, ஆட்சிப் பொறுப்புகளுக்கு வர முயன்றதாகவும் ஊடகங்கள் கூறி வந்தமை பொய் என்றாகிறது.  அவர்  கூறியபடி,  அவைத்தலைவர் பொதுச்செயலராக வந்திருந்தால், இப்போதைய நிலை வந்திருக்காது. ஆனால், இவரே சசிகலாதான் பொதுச்செயலராக வேண்டுமென்று காலில் விழுந்து இறைஞ்சிமன்றாடிவிட்டு இப்பொழுது வேறுவகையாகக் கூறுவது அவர் பண்பிற்கு ஏற்றதல்ல.

  விலகல்மடலைத் திரும்பப் பெறுவதாகக் கூறுகிறார். அப்படியானால், விலகலை ஏற்றதாக ஆளுநர் வாய்மொழியாகத் தெரிவித்ததாகவும் எழுத்து  மூலம் தெரிவிக்க வில்லை என்றும் கூறி, இவரையே பெரும்பான்மையை மெய்ப்பிக்க வாய்ப்பளித்து முதல்வராகத் தொடரச் செய்ய வாய்ப்பிருக்கும். அதனால்தான் அவர் இவ்வாறு கூறுகிறார். மத்திய அரசின் - மத்திய ஆளுங்கட்சியான பா.ச.க.வின் ஒத்துழைப்பின்றி இவ்வாறு நிகழ வாய்ப்பில்லை. எனவே,   ஆளுநரின் காலத்தாழ்ச்சி, கட்சிக்கு எதிரான பன்னீரின் நிலைப்பாடு முதலானவற்றிற்குப்  பா.ச.க.வே காரணம் என்பது தெளிவாகிறது.

  ஒருவேளை இத்தகைய வாய்ப்பினை நல்கிப் பன்னீரையே முதல்வராகத் தொடரச் செய்தால், அவர் முதல்வராகத் தொடரக் காரணமானவர்களே அதனை நிலைக்க விடமாட்டார்கள். நம்பிக்கை தீர்மானத்தின் பொழுது தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்கள் இவருக்கு ஆதரவாக வாய்ப்பளித்தாலும் இவரைக் கவிழ்த்துத் தாம் பொறுப்பிற்கு வருவதில்தான், இப்போதைய ஆதரவாளர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பர். பா.ச.க. நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆள்வதற்குத்தான் இது துணைபுரியும். இதைத்தான்  மாண்புமிகு இடைக்கால முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறாரா?
  வஞ்சகம்(துரோகம்) இழைக்கவில்லை என்பதுபோன்ற பேச்சுகள் எல்லாமே கட்சியைப் பிளவுபடுத்துபவர்கள் முதலில் பேசும் பேச்சுகள்தாம். எனவே, இவற்றை மக்கள் நம்பவில்லை.
  ஒன்றைப் பன்னீர் எண்ணிப்பார்க்க வேண்டும். ஒருவேளை இச்சூழல் எழாமல் அவரே முதல்வராகத் தொடரும் நிலை ஏற்பட்டிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்?  இன்றைய ஆதரவு நடிப்பாளர்கள்,  சேகர்(ரெட்டி) முதலானவர்களுடன் தொடர்புடைய ஊழல் பன்னீர் செல்வம் பதவி விலக வேண்டும் என்றுதானே போர்க்குரல் கொடுத்திருப்பர்?  தனக்கு எல்லாவயைிலும் துணை நின்ற கட்சியினரை விட்டு ஆதரவு நடிப்பாளர்களை நம்புவது அறியாமையல்லவா?

 மறதியும் அறியாமையும் மிக்க பலர், சசிகலா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்அல்லர் என்றும்  செயலலிதாவிற்காக வாக்களித்தார்களே தவிர, இவருக்காக வாக்களிக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். அப்பாவி மக்களில் பெரும்பான்மையர் இதை நம்புகிறார்கள்.

  குடியரசுத்தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்லரே! மாநிலங்கள் அவை உறுப்பினரல்லாத துணைக்குடியரசுத்தலைவர்தான் மாநிலங்கள் அவைத் தலைவராவார். இராசீவு காந்தி அரசியல்பட்டறிவின்றியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலும்தான் இந்தியத் தலைமையமைச்சரானார், அரதனஃகல்லி தொடே(கௌடா) தேவெ(கவுடா) (Haradanahalli Doddegowda Deve Gowda),  மன்மோகன்(சிங்கு) முதலானவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் தலைமையமைச்சர் ஆனவர்கள்தாம். கொல்லைப்புறவழியாக முதல்வரானவர் என இராசாசி(இராசாகோபாலாச்சாரியார்) சொல்லப்பட்டாலும் பேரறிஞர்  அண்ணாவும் இதேபோல்  முதல்வரானபின்னர் மேலவை உறுப்பினராலும் வேறு நிலைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டடவர்களே. ஆனால்,  மக்களால் புறக்கணிக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டவர்களை ஆளுநர்களாகவும்  அமை்சசர்களாகவும் அமர்த்தும் வழக்கம் இன்றளவும் தொடர்கின்றது. எனவே, இக்கூற்று பொருந்தாது.

  மூன்றுமுறை முதல்வர் பொறுப்பு வகித்ததன் அடிப்படையிலும்  அரசியலில் உரிமைகோரல் இயலாது.  இடைக்காலத் தலைமையமைச்சராக இருந்த  குல்சாரிலால் நந்தாவும் இடைக்கால முதல்வராக இருந்த நாவலர் இரா.நெடுஞ்செழியனும் உரிய பதவிகளில் அமர முடியவில்லையே!  பணி மூப்பை ஓரங்கட்டிவிட்டுத் தமக்கு முன்னுரிமை அளிக்கும்பொழுது தாமே தகுதியுடையவர் என மகிழ்வதும், தமக்குப் பாதிப்பு வரும் பொழுது மூப்பு நிலை மீறுவதாகக் குமுறுவதும் பலரின் இயல்பு. ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரானதும் முதல்வரானதும் இவரைவிட அக்கட்சியில் மூப்புநிலையில் இருந்தவர்களும் அணிமாறாமல் கட்சியிலேயே கட்டுப்பாட்டுடன் இருந்தவர்களும் கட்சியின் முடிவிற்குக் கட்டுப்பட்டுள்ளனர். இன்றைக்கு அவர்,  தன்னைப் புறக்கணிப்பதாகக் கூறுவது ஏற்புடைத்தல்ல.
 சசிகால மீதுள்ள பொருளாதராக் குற்ற வழக்கில் விடுதலை செய்யப்பெற்று மேல் முறையீட்டு நிலையில் உள்ளார். குற்ற வழக்கு நிலுவையில் உள்ளவர்களும்  பதவிகளில் அமர்த்தப்படுவது  வழக்கமாக உள்ள நாட்டில் இதனைக் காரணம் காட்டுவது எப்படிப் பொருந்தும்? நீதிமன்றம் எடுக்க வேண்டிய முடிவை  தானே எடுத்துக் குற்றவாளி என்ற கோணத்தில் ஆளுநர் முடிவெடுத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகாதா?
  இவ்வாறு சசிகலாவிற்கு எதிராகப் பரவலாகக் கூறப்படுவன யாவும்  தவறான ஊகங்கள் அடிப்படையிலானவையே!   நடைமுறையில் அவை யாவும் பொருந்தா. 
  நம்மைப்பொறுத்தவரை யார் ஆட்சியில் அமர்ந்தாலும் அந்த ஆட்சியானது அதன் காலம்முழுவதும் நிலைத்திருக்க வேண்டும்.  அந்த வகையில் அதிமுக ஆட்சி நிலைக்க வேண்டும். தி.மு.க.வும் குறுக்குவழியில் வரவிரும்பவில்லை என அதன் (செயல்)தலைவர் தாலின் கூறியுள்ளார்.  தேர்தல் மூலம்வந்தால்தான் நிலைக்க  முடியும் என்ற நல்ல நிலைப்பாட்டில் உள்ளார்.  ஆனால், தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் பன்னீர் செயல்பாடுகள் அமைந்து விடக்கூடா. அவரை அந்த நிலைக்குப் பிற கட்சிகள் தள்ளினாலும் மத்தி  அரசு அதற்கு உடன்பாடாக இருக்கக்கூடாது..

  தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர்   வித்தியாசாகர் பேர  அரசியலுக்கு இடமளிக்காத வகையில் சட்டமன்றப் பெரும்பான்மைக்கட்சி உறுப்பினர்களின் கருத்திற்கிணங்கச் செயல்பட்டு,   மக்களாட்சியின் மாண்பைக் காக்க வேண்டும்.

  பதவியில் அமர்வதும் பதவி இழப்பதும் இயற்கையே! ஆனால், அவ்விரு நிலைகளிலும் நடுவுநிலை அறத்தைக் கடைப்பிடித்தலே சிறந்ததாகும்.

    கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
    கோடாமை சான்றோர்க் கணி. (திருவள்ளுவர், திருக்குறள் 115)

- இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive