Tuesday, October 21, 2014

சங்க இலக்கியக் காலத் தொடக்கம் கி.மு. ஆயிரத்திற்கு முற்பட்டது.


சங்க இலக்கியக் காலத் தொடக்கம் கி.மு. ஆயிரத்திற்கு முற்பட்டது.

சங்க இலக்கியக் காலத் தொடக்கம்

கி.மு. ஆயிரத்திற்கு முற்பட்டது.

- இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசிரியர்,
அகரமுதல மின்னிதழ்,
thiru2050@gmail.com
  சங்க இலக்கியங்கள் இனிமைச் சிறப்பும்சாதி, சமய, இன வேறுபாடற்ற பொதுமைச்சிறப்பும் இன்றைக்கும் பொருந்தும் புதுமைச் சிறப்பும் மிக்கன. இவை குறித்து, “வாழ்வியல் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பவை; பொருட் சிறப்பும், கருத்துச் செறிவும், சொல்லினிமையும் வாய்ந்தவை; அவை அகத்திணை, புறத்திணை என இருபாற்பட்டுப் பெரும்பாலும் காதல், வீரம், குறித்துப் பாரித்துரைப்பினும் வையத்துள் வாழ்வாங்கு வாழும் அறநெறிகளை வாய்மை, நட்பு, மானம், தாளாண்மை முதலியவற்றை இலைமறைகாய் போன்று ஆங்காங்கே புலப்படுத்தும்.”(பெரும்புலவர் முனைவர் இரா.சாரங்கபாணியார் : சங்கச் சான்றோர்கள் : நூன்முகம்) என அறிஞர் பெருமக்கள் போற்றுகின்றனர்.
  “தமிழில் முதல், இடை, கடை என முச்சங்கங்கள் இருந்தன என்பதும் முதலது கடலுட்பட்ட குமரி-ப..றுளி நாடுகளிலமைந்த தென்மதுரையிலும், இடையது அதே இடத்தில் கவாடபுரத்திலும், மூன்றாவது வைகைக்கரை மதுரையிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்வு பெற்றிருந்தன என்பதும் நெடுநாளைய தமிழ்நூல் மரபு” (பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்).இவற்றுள் இடைச்சங்கக்காலத்தையும் கடைச்சங்கக்காலத்தையும் சேர்ந்த இலக்கியங்களின் தொகுப்பே இன்று நமக்குக் கிடைத்துள்ள சங்க இலக்கியங்கள்.
  சங்க இலக்கியங்கள் முழுமையும் நமக்குக் கிட்டில. அவற்றிலிருந்து தொகுக்கப்பெற்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய 18 நூல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் வெவ்வேறு காலத்தைச் சேர்ந்தவை. இவற்றின் காலம்பற்றித் தவறான தகவல்களே உலா வருகின்றன. உண்மையான காலத்தை ஆராயும் பொருட்டு நாம் சில குறிப்புகளைக் காண்போம்.
  தமிழ் இலக்கியக்காலங்கள் குறித்துச் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், “தமிழ் மக்களின் வரலாற்றை அறிவதற்குத் துணைபுரிவனவற்றுள் முதன்மை இடம் பெறுவது தமிழ் இலக்கியமேயாகும். தமிழ் இலக்கியம் தொன்மை நலம் சான்றது. அதன் தோற்றுக் காலம் யாதென அறுதியிட்டுரைத்தல் எவராலும் இயலாது.”(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், பக்13) என்கிறார்.
  பொதுவாகச் சங்கக்காலம் என்பது கி.மு. 5 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2 ஆம் நூற்றாண்டுவரை சொல்லப் பெறுகிறது [பேராசிரியர் ந.சுப்பு(ரெட்டியார்) - இலக்கிய வகையின்   வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்:பக். 3]. என்றாலும் தமிழ்இலக்கியங்களின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளுவதில் இன்பம் காணும் வையாபுரியும் அவர்வழியினரும் அறியாமையால் அதை மட்டும் படித்து ஏற்போரும் தவறான கால வரையறையையே கூறுகின்றனர்.
கட்டுரைக் களஞ்சியமான விக்கீபீடியாவில்கூட,
1-2 திருமுருகாற்றுப்படை,பொருநராற்றுப்படை கி.பி.எட்டாம் நூற்றாண்டு
3-4 சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை கி.பி. 4 – 6ஆம் நூற்றாண்டு
5-7 நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, முல்லைப்பாட்டு கி.பி. 2 – 4ஆம் நூற்றாண்டு
8 மதுரைக் காஞ்சி கி.பி. இரண்டாவது, நான்காவது நூற்றாண்டு
9 பட்டினப் பாலை கி.பி. மூன்றாம் நூற்றாண்டு
10 மலைபடுகடாம் கி.பி. இரண்டாவது, நான்காவது நூற்றாண்டு
எனத் தவறாகத்தான் காலங்கள் காட்டப்பெற்றுள்ளன. இதன் நோக்கம் சங்க இலக்கியத்தைக் கி.பி. 400இற்குப் பின்தள்ளிக் காட்ட வேண்டும் என்பதே!
  “தமிழகத்தின் வரலாறு காண்போருக்கு மிக்க பழமையான காலம் சங்க இலக்கியக் காலமாகும். அது தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னுமாகிய காலமாகும்.” என்கிறார்உரைவேந்தர் ஔவைதுரைசாமி (மதுரைக்குமரானர், பக். 1)
  “சங்க நூற்களிற் காணப்படும் பாட்டுகள் பலவும் ஒரு காலத்தன அல்ல. நெடுங்காலம் இடையிட்ட பாட்டுகளும் அவற்றுள் உண்டு. தென்குமரியின் தெற்கிலுள்ள இந்துமாக்கடல் தோன்றுவதற்கு முன் தோன்றிய செய்யுட்களும், அது தோன்றியபின் பாரத இராமாயண நிகழ்ச்சிகட்கு முன்னும் பின்னும் தோன்றிய செய்யுட்களும் தொகுக்கப்பட்டுள்ளன” என்கிறார் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் (குறுந்தொகை, அணிந்துரை, பக்கம் 11)
  பேராசிரியர் எம்.எசு.பூரணலிங்கம்(பிள்ளை) தமிழ் இலக்கிய வரலாற்றை, 1.) செவ்வியல் இலக்கியக் காலம், 2.) புத்த – சமணக் காலம், 3.) சமய மறுமலர்ச்சிக் காலம், 4.) இலக்கிய மறுமலர்ச்சிக் காலம், 5.) மடங்களின் காலம், 6.) ஐரோப்பியப் பண்பாட்டுச் செல்வாக்குக் காலம் எனப் பகுக்கிறார். இதன் மூலம் புத்த – சமணக்காலத்திற்கு முற்பட்டதே சங்க இலக்கியக் காலம் என உணர்த்துகிறார்.
  “குறிப்பாகத் தமிழின் தொன்மையைத் தமிழ் இலக்கியங்கள் பலபடப் பேசுகின்றன. இறையனார் களவியல் உரையின்வழியாக நாம் முச்சங்க வரலாறு அறிகிறோம். அதன்படி, கடல் கொண்ட தென்மதுரையில் 4400 ஆண்டுகள் முதற்சங்கமும் கபாடபுரத்தில்   3700 ஆண்டுகள் இரண்டாம் சங்கமும் மதுரையில் 1850 ஆண்டுகள் மூன்றாம் சங்கமும் செயல்பட்டுள்ளன என அறியவருகிறோம். 9950 ஆண்டுகள் முச்சங்கங்களும் செயல்பட்டுள்ளன என்பதை இவ்வுரை உணர்த்துகின்றது.ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகள் சங்ககாலமாகக்கொள்ளப்படவேண்டிய நிலை இதன்வழி ஏற்படுகிறது.”
  சங்கஇலக்கியக் காலத்தை ஆராயும் சங்கத் தமிழ்ச் செம்மல் பேரா.சி.இலக்குவனார், எட்டுத்தொகையினுள் 2371 பாடல்களுள் 885 பாடல்கள் ஆரியவர் வருகைக்கு முன்னர் இயற்றப்பட்டன என்று கூறுகிறார்.சங்கப் புலவர்களுள் ஆரியர் வருகைக்கு முன்னர் வாழ்ந்த புலவர்களாக, அகம்பல்பாலாதனார் முதல் வேம்பற்றூர்க்குமரனார் ஈறாக 268 புலவர்கள் பெயர்ப்பட்டியலையும் பேரா.சி.இலக்குவனார் பழந்தமிழ் நூலில் அளித்துள்ளார்.
  “ஒன்பது புலவர்களின் இயற்பெயர்கள் மறைந்துவிட்டன. அப்பெயர்களாவன 1. செம்புலப்பெயல் நீரார் 2.தேய்புரிப் பழங்கயிற்றினார் 3. அணிலாடுமுன்றிலார் 4. கல்பொரு சிறுநுரையார் 5. குப்பைக்கோழியார் 6. தொடித்தலை விழுத்தண்டினார் 7. நெடுவெண்ணிலவினார் 8. மீனெறி தூண்டிலார் 9. விட்ட குதிரையார்”எனக் குறிப்பிட்டு இவர்களும் ஆரியர் வருகைக்கு முந்தைய தமிழ்ப்புலவர்கள் என அவர் நிறுவுகிறார். “இவற்றுள் ஆரிய மொழிச்சொற்களோ கருத்துகளோ பயின்றிடக் கண்டிலோம்” என்கிறார் அவர்.
  “பத்துப்பாட்டுள் ‘மலைபடுகடாம்’ என்பது ஆரியர் வருகைக்கு முன்னரும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரும் இயற்றப்பட்டதாகும்” என ஆராய்ந்து குறிப்பிடுகிறார் சங்கத்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி. இலக்குவனார்(பழந்தமிழ் பக்கங்கள் 50-51). எனவே, ஆரியர் தமிழகத்தில் புகத்தொடங்கிய காலத்தில் உருவான தொல்காப்பியத்திற்கு முன்னரும் உள்ள இலக்கியங்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் உள்ளன என்பதே உண்மையாகும்.
  “அடியார்க்கு நல்லார், பெருங்கதை எழுதிய கொங்குவேள் ஆகியவர் காலம்வரை இடைச் சங்க நூல்களான குருகும் பெருநாரையும் வெண்டாளியும் இருந்ததாகத் தெரிகிறது. ஏனெனில், அவற்றைக் கற்றே கொங்குவேள் பெருங்கதை யாத்ததாக அடியார்க்கு நல்லார் கூறுகின்றார்.” எனப் பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார் கூறுகிறார். எனவே, சங்க இலக்கியம் தொகுக்கப்பெற்ற காலத்திலும் இடைச்சங்க நூல்கள் இருந்துள்ளன என அறியலாம். ஆதலின் இடைச்சங்கப் பாடல்களும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன என்பதே உண்மையாகும்.
  சங்க இலக்கியச் சிறப்புகளை, “வடமொழி முதலிய பிறமொழிவாணர்கள் தங்கள் இலக்கியங்களை ஆக்குதற்குப் பெரும்பாலும் அறிவொடு பொருந்தாத கற்பனைகளையே பயில வழங்குவராயினர். பாற்கடலும், கருப்பஞ் சாற்றுக் கடலும், மேலுலகங்களும், கீழுலகங்களும், அரக்கர்களும், தேவர்களும், பிசாசுகளும், இன்னோரன்ன பொருந்தாப் புனைவுகளை அவர்கள் இலக்கியங்களில் யாண்டுங் காணலாம். பல்லாயிரம் ஆண்டு உயிர் வாழ்ந்திருப்போரையும், பதினாயிரம் மகளிரை மணந்தோர்களையும் அவர்கள் இலக்கியங்களிலே காண்கின்றோம். இப்புனைவுகள் ஆராய்ச்சி அறிவிற்குச் சிறிதும் பொருந்தாத பொய்ப் புனைவுகளேயாகும் அன்றோ? நந்தமிழ் நாட்டுப் பிற்றைநாட் புலவர்களும் ‘இனத்ததாகும் அறிவு” என்றபடி அவ் வடவர் கூட்டுறவானே நல்லறிவிழந்து அவர் நெறியே பற்றிப் பிற்றை நாள் வீண்படும் இலக்கியங்கள் பலவற்றை யாத்து அவம் போயினர்.”
  “நம் சங்ககாலத்து இலக்கியங்களிலே, இத்தகைய பொருந்தாப் புனைவுகளை யாண்டும் காண்டல் அரிது. ஒரோவழி யாண்டேனும் காணப்படுவனவும் அக் காலத்தே வடவர் கேண்மையானே வந்த சிறிய இழுக்குகளாகவே காணப்படுகின்றன. நம் பழம்புலவர்கள் உலகியற் பொருள்களின் இயல்பினை யாண்டும் தன்மைநவிற்சியானே விளக்குவதைக் காணலாம்.” எனப் பெருமழைப்புலவர்பொ.வே.சோமசுந்தரனார்(குறுந்தொகை, அணிந்துரை, பக். 11) கூறுகிறார். எனவே, ஆரியச் செல்வாக்கிற்கு முற்பட்டவையே பெரும்பாலான சங்க இலக்கியங்கள் என்பது உறுதியாகிறது.
  தொல்காப்பியத்திற்குப் பாயிரம் பாடியவர் பனம்பாரனார். “ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்” எனத்   தொடங்கும் அவரது பாடல் குறுந்தொகையில் 52 ஆம் பாடலாக இடம் பெற்றுள்ளது. தொல்காப்பியர் காலப்பாடல்களும் சங்க இலக்கியத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன என்பதற்கு இஃதோர் எடுத்துக்காட்டாகும்.
  இன்னும் சிலர் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் இடம் பெறும் தமிழ்ச்சொற்களை எல்லாம் ஆரியச் சொற்களாகக் காட்டி,   இவற்றின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளிப் பொய்யான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வருகின்றனர். ஆரியமாகக் கற்பிக்கப்படும் அவை யாவும் தமிழே எனப் பேரா.சி.இலக்குவனார் முதலான தமிழறிஞர்கள் விளக்கியுள்ளனர். எனவே, தமிழ்ச்சொற்களை ஆரியச் சொற்களாகத் தோற்றமுறச் செய்து ஒரு சார்புடன் கூறப்படும் கால வரையைறைகளையும் நாம் புறந் தள்ள வேண்டும்.
  சங்கப்புலவர்களுள் ஒருவர் இளம்போதியார். நற்றிணையில் 72 ஆவது பாடலாக இவரது பாடல் தொகுக்கப்பெற்றுள்ளது. போதி எனப்படும் அரச மரத்தடியில் புத்தர் தவம் இருந்தமையால் போதி என்பது புத்தர் நெறியுடன் தொடர்புடையதாகும். ஆதலின், இவரது பெயரே இவரைப் புத்தர் வழியினர் எனக் காட்டுகிறது. எனவே, புத்தர் காலமான கி.மு.5ஆம் நூற்றாண்டு இலக்கியங்களும் சங்க இலக்கியங்களுள் உள்ளன எனலாம்.
  சங்க இலக்கியங்களில், மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் (அகநானூறு 70), ஊன்பொதி பசுங்குடையார் (புறநானூறு 378) பாடல்களில்இராமாயணச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.பாரதப்போரின் போது இருதரப்பாருக்கும் உணவு வழங்கியமையால் சேரமன்னனை அடைமொழியுடன் ‘பெருஞ்சோற்று உதியன்’ சேரலாதன் என்கிறார் புலவர் முடிநாகராயர்.கலித்தொகையில் பாரதக் கதை நிகழ்ச்சிகள் உவமைகளாகக் காணப்படுகின்றன.   எனவே, இராமாயண, மகாபாரதக் காப்பியக் காலங்களிலும் அதற்குப் பின்னரும் உள்ள பாடல்களும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன எனலாம்.
  ஆரியத் தொன்மங்களின் தவறான கால அடிப்படையிலும் தமிழ் இலக்கிய வரலாற்றையும் சங்கக் காலத்தையும் பலர் வரையறுக்கின்றனர். இவ்விரு காப்பியங்களின் காலம் மிகத் தொன்மையாகக் காட்டப்படுவதும் அதனடிப்படையில் சங்க இலக்கியக் காலத்தை வரையறுப்பதும் தவறாகும்.தவறாகச் சொல்லப்பட்டு வரும் இராமாயணக் காலமும் மகாபாரதக்காலமும் வேண்டுமென்றே தமிழிலக்கியக் காலத்தைவிடத் தொன்மையாகக் காட்ட வேண்டும் என்பதற்காகத் திரித்துத் தவறாகவே கூறப்படுகின்றன.
  எடுத்துக்காட்டாகச் சொல்வதானால்,“தொல்காப்பியர்ஆரியரான சமதக்கினியின் புதல்வர், சமதக்கினி பரசுராமர் தந்தை, பரசுராமர் இராமர் காலத்தவர், தொல்காப்பியரும் இராமரும் சம காலத்தவர், இராமர் கி.மு.2000 இற்கு முற்பட்டவர், தொல்காப்பியர் காலமும் கி.மு.2000 இற்கு முற்பட்டதுஎன்ற முறையில் சொல்லப்படுவனவற்றைக் குறிப்பிடலாம். “தொல்காப்பியர் சமதக்கினி முனிவரின் புதல்வர் என்பதும், அகத்திய முனிவரின் மாணவர் என்பதும்சான்றுகளுடன்நிறுவ முடியாத கற்பனையாம்” என்கிறார் தொல்காப்பிய அறிஞர் பேரா.சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக்கம்11-12). இது புனைகதை என்பதாலும் இராமரின் காலமும் முற்படக் காட்டப்படுவதாலும் இக்கால வரையறை தவறே. எனவே, இராமாயணம், மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்துக் கால வரையறையையும் தள்ளிவிடவேண்டும். இவற்றின் மூலம் தமிழின் தொன்மையைக்கூறி அப்பொழுது இல்லாத ஆரியத்தின் தொன்மையையும் கற்பிக்க முயல்வதே இவற்றின் நோக்கம்.
  ஆரியர்களின் தவறான கூற்றுகளை உண்மையான கால வரையறை என எண்ணிக் கொண்டு ஏறத்தாழ அனைவரும் சங்கக் கால வரையறையைக் குறிப்பிடுகின்றனர். தமிழினும் தொன்மையாக ஆரியத்தைக் காட்ட முனைந்த நடுநிலையற்றோர், இவற்றின் காலத்தை வேண்டுமென்றே முன்னதாகக் காட்டி உள்ளனர். அறிஞர்கள் கருத்து சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இவற்றை ஏற்றுக் கொண்டு இவற்றின்அடிப்படையில் தமிழ் இலக்கியக் காலத்தைக் கணித்துரைத்துள்ளனர்.
  இராமாயணக் காலம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டிற்குப்பிற்பட்டதே! “வால்மீகி இராமாயணத்தில், புத்தர் முன்பு தங்கியிருந்த இடத்தில், தான் இப்பொழுது தங்கியுள்ளதாக விசுவாமித்திரர் கூறுவதாகவும் முடி சூட்டுவதற்காக இராமரை அழைத்து வருகையில் புத்தர் நினைவிடங்களையும் வலம் வந்ததாகவும், காட்டிற்குச் செல்லும்முன் புத்தத் துறவிகளுக்கும் தானம் செய்யுமாறு சீதையிடம் சொல்லியதாகவும், காட்டிற்குச் செல்லும் வழியில் இராமர் முதலானோர் புத்தர் நினைவிடத்தையும் பார்த்துக் கொண்டு சென்றதாகவும், இராவணன் புத்தத் துறவி வேடம் கொண்டுதான் சீதையைக் காண வந்ததாகவும், இலங்கையில் புத்த விகாரத்தின் அருகில் இருந்த மரத்தடியில் சீதையை அனுமன் கண்டதாகவும், இலங்கையில் புத்த விகாரங்களையும் அனுமன் இடித்துத் தள்ளியதாகவும், இராமர் வருகையைத் தெரிவிக்க வந்த அனுமன் நந்திக் கிராமத்தில் புத்தர் நினைவிடத்தையும் பார்த்ததாகவும், இராமர் வருவதைக் கேட்டு மகிழ்நத பரதன், புத்தர் மடங்களிலும் அருச்சனை செய்யுமாறு சொன்னதாகவும், பல இடங்களில் புத்தரின் நினைவிடங்கள் அல்லது புத்த மடங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. எனவே, இராமர் புத்தருக்குப் பிற்பட்டவர் எனத் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. எனவே, புத்தரின் மறைவிற்குப் பின் – அதாவது கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்தான் இராமர் வாழ்ந்திருக்க வேண்டும்.” (சேது பாலமும் இராமர் பாலமும் – இலக்குவனார் திருவள்ளுவன்)
  இராமாயணத்திற்குப் பிற்பட்டதே மகாபாரதக் காலம் என்பதால் அதன் காலம் இன்னும் பின்னுக்குப் போகின்றது. இத்தகைய உண்மையை மறைத்துத் தவறாகக் கற்பிக்கப்படும் இராமாயண, மகாபாரதக்காலங்கள்அடிப்படையில் கால வரையறை செய்யக்கூடாது என்பதை உணர வேண்டும்
  தொல்காப்பியர் தம் நூலான தொல்காப்பியத்துள் 287 இடங்களில் ‘என்ப’, ‘என்மனார் புலவர்’ என்பன போன்று முன்னோர்களை மேற்கோளாகக் குறிப்பிட்டுள்ளார் என்கிறார் தொல்காப்பிய அறிஞர் பேராசிரியர் சி. இலக்குவனார் (Tholkappiyam in English with Critical Studies, Page 21).இலக்கண நூலில் இலக்கண நூலாசிரியர்கள் கூற்றைத்தான் மேற்கோளாகச் சுட்ட இயலும். நூற்றுக்கணக்கிலான இலக்கண மேற்கோள்களைக் குறிப்பிடுகின்றார் எனில் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னர்ப்பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்இலக்கண ஆசிரியர்கள் பெருமளவில் இருந்துள்ளனர் என்பது தெளிவு. நாளும் இலக்கிய நூல்கள் தோன்றுவதுபோல் இலக்கண நூல்கள் தோன்றா. இலக்கண நூல்களின் பெருக்கம்அவற்றுக்கும் முன்னர்க் கடலளவு இலக்கிய நூல்கள் தமிழில் இருந்துள்ளன என்பதை உணர்த்துகின்றன.
  இவற்றுள்பன்னூறாயிரக்கணக்கான தமிழ்ச்சுவடிகள் இயற்கையாலும், ஆடிப்பெருக்கில் ஆற்றில் விடும் மூடநம்பிக்கைகளாலும் அறியாமையால் அடுப்பெரிக்கப் பயன்படுத்தியும் இயற்கைப் பேரிடர்களாலும் இன்றுவரை அழிந்துள்ளன; இருப்பனவும் பேணப்படாமலும் அறியப்படாமலும் அழிந்து வருகின்றன. பல நூறாயிரம் தமிழ் இலக்கியங்களுள் பெரும்பான்மை கடல் கோள்களாலும் பிற இயற்கைப் பேரிடர்களாலும் அக்காலத்திலும் அழிந்துள்ளன. அழிந்தனபோக எஞ்சியனவற்றுள் கிடைத்தவரை தொகுத்துள்ளனர். அவ்வாறு தொகுக்கும்பொழுது கிடைக்கப்பெற்ற தொன்மையானவும் தொகுக்கும் காலத்தைச் சேர்ந்தனவும் எனப் பலகால இலக்கியங்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் காலத்தால் பிந்தைய இலக்கியங்களின் அடிப்படையில் நாம், தவறான கால வரையறை செய்கின்றோம்.
  சங்க இலக்கியங்களின் கீழ் வரம்பைக் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்று சொல்வதும் தவறாகும். இதற்குக் காரணம் சிலப்பதிகாரக்காலத்தை நாம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு எனச் சொல்லி அதனடிப்படையில் சிலம்போடு தொடர்புடைய புலவர்களின் காலத்தைக் கணக்கிடுவதாகும்.
  மேற்குறித்த அறிஞர்களின் கூற்றுகளிலிருந்து தொல்காப்பியர் காலமான கி.மு. ஆயிரத்திற்கும் முற்பட்ட கால இலக்கியங்களும் தொல்காப்பியர் கால இலக்கியங்களும் தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்ட இலக்கியங்களும் இணைந்த தொகுப்பே சங்க இலக்கியங்கள் எனக் கூறுவதே மெய்மையுடைத்தாகும். எனவே, இன்றைக்கு நமக்குக்கிடைத்தள்ள சங்க இலக்கியங்களின் காலம் கி.மு.ஈராயிரத்திலிருந்து கி.மு.முதல்நூற்றாண்டுவரையான இடைப்பட்ட பகுதி எனலாம்.
  இவ்வாராய்ச்சி மேலும் விரிவிற்குரியது. எனினும் சுருக்கமாக நாம் பார்த்தவற்றின் அடிப்படையில், சங்க இலக்கியம் தொகுக்கப்பட்ட காலத்தைச் சங்கக்காலம் என்பதும் தவறு; தொகுக்கப்பெற்ற காலத்துப் பாடல்கள் அடிப்படையில் அதன் காலத்தை வரையறுப்பதும் தவறு; நூல் தொகுக்கப்பெறும் பொழுது அற்றைக்காலமும் இற்றைக்காலமும் இணைந்தே இடம் பெறும் என்னும் நடைமுறை உண்மையை உணர்ந்து, தொல்காப்பியரின் காலமான கி.மு. ஆயிரத்திற்கும்   முற்பட்ட இலக்கியங்களும் தொல்காப்பியர் காலமான கி.மு. ஆயிரத்தைச்சேர்ந்தனவும் அதற்குப் பிந்தைய- கி.மு.ஆயிரத்திற்குப்பிற்பட்டனவும் தொகுக்கப்பெற்று உருவானவையே சங்க இலக்கியங்கள் எனலாம்.
சங்க இலக்கியப் புகழ்பாடித் தங்கத்தமிழ் வளர்ப்போம்!
சங்க இலக்கியத் தொன்மை காத்துப் புதுமை இலக்கியம் படைப்போம்!
ilakkuvanar_thiruvalluvan+9


No comments:

Post a Comment

Followers

Blog Archive