Thursday, October 23, 2014

அனைத்து வகுப்புகளிலும் இவ்வாண்டே தமிழ் கற்பிக்கவும்! – இலக்குவனார் திருவள்ளுவன்


அனைத்து வகுப்புகளிலும் இவ்வாண்டே தமிழ் கற்பிக்கவும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

thamizhil_padippoam01
  தமிழின் உயர்வைக் கூறித் தங்களை உயர்த்திக் கொள்ளாத எந்த அரசியல்வாதியும் இல்லை எனலாம். என்றாலும் தொன்மையும் தாய்மையும் மிக்க செம்மொழியான தமிழ் தமிழ்நாட்டில் மறைந்து வரும் அவல நிலைதான் உள்ளது. கல்விக்கூடங்களிலேயே தமிழ் துரத்தப்படும்பொழுது வேறு எங்குதான் தமிழ் வாழும்? என்றாலும் மொழிப்பாடம் என்ற அளவில் தமிழ் கற்பிக்கப்படும் சூழல் அரும்பி மலர்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியது. ஒரே ஆண்டில் தமிழைப் பாடமொழியாக அறிமுகப்படுத்தாமல் ஒவ்வோர் ஆண்டாக அறிமுகப்படுத்தி வருவது மகிழ்ச்சியளிக்காவிட்டாலும் இந்த நிலையாவது உருவாவது பாராட்டிற்குரியதே!
 தமிழ் அறியாதார் தேர்வு எழுத இயலாது
2006ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டத்தின் கீழ் 2006-2007 ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் தமிழ் கட்டாய மொழிப்பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது.  தொடர்ந்து படிப்படியாக ஒவ்வோர் ஆண்டும் ஒரு வகுப்பு என்ற முறையில் வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தமிழ் அறியாதார் தேர்வு எழுத இயலாது. இதனைப் பள்ளிக் கல்வியமைச்சரும் கல்வித்துறை அதிகாரிகளும் வெவ்வேறு நேர்வில் தெரிவித்துள்ளனர்.
இனி மத்தியப் பள்ளிகளுக்கும் இதே நிலைதான்!
 இச்சட்டத்தின் கீழ் வராத, மத்திய அரசு வாரியப் பள்ளி முதலான அனைத்துப் பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டு முதல் படிப்படியாக ஒவ்வொரு வகுப்பாகத் தமிழ்மொழியானது கட்டாயப் பாடமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழக அரசு இதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளது(பள்ளிக்கல்வித்துறை அரசாணை பல்வகை எண் 145 நாள் புரட்டாசி 2, 2045 / 18.09.2014).
அரசு தெரிவிக்கும் நடைமுறை
 இதன்படிப் பின்வரும் முறையில் தமிழ்மொழிக் கல்வியை நடைமுறைப்படுத்தவேண்டும். (முறையே கல்வியாண்டும்   நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வகுப்புகளும்)
2015-16 —– 1
2016-17 —– 1, 2
2017-18 —– 1,2,3
2018-19 —– 1,2,3,4
2019-20—— 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை
2020-21—— 1 முதல் 6-ஆம் வகுப்பு வரை
2021-22—— 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை
2022-23—— 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை
2023-24 —– 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை
2024-25 —– 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை
இவ்வாண்டு முதலே அனைத்து வகுப்புகளில் தமிழ் வேண்டும்!
ஒரே ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் தமிழை அறிமுகப்படுத்தாமல் தி.மு.க. அரசு செய்த தவறு, அ.தி.மு.க. அரசாலும் பின்பற்றப்படுகிறது. மூவாண்டில் அனைவருக்கும் தமிழ் கற்பிக்கலாம். எனினும், அவ்வாறு விரும்பாவிட்டால் எளிய முறையில் அனைத்து வகுப்பினருக்கும் இவ்வாண்டே தமிழ் அறிமுகப்படுத்தலாம். தமிழே படிக்காமல் இருப்பதற்கு முதல் வகுப்புநிலையிலாவது தமிழ் படிப்பது மேலல்லவா? அதற்கு இவ்வாண்டு அனைத்து வகுப்புகளிலும் முதல் வகுப்பிற்கான பாடத்தை அறிமுகப்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டு, இரண்டாம் வகுப்பில் இருந்து அனைவருக்கும் இரண்டாம் வகுப்புப்பாடம், அதற்கு அடுத்த ஆண்டு மூன்றாம் வகுப்பிலிருந்து அனைவருக்கும் மூன்றாம் வகுப்புப் பாடம் என்ற படிநிலைகளில் தமிழ் மொழிப்பாடம் இருக்க வேண்டும். இவ்வாறு நடைமுறைப்படுத்தினால், 2023-24ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புவரை எல்லா வகுப்புகளிலும் அந்தந்த வகுப்பிற்கேற்ற பாடம் நடைமுறையில் இருக்கும். அடுத்த இரண்டாண்டுகளில் தமிழ் படிக்காதவர் யாருமில்லை என்ற நிலை தானாகவே வந்து விடும். இதனைத் தனித்தனியே குறிப்பதாக இருப்பின் பின்வருமாறு கூறலாம்.
பின்பற்ற வேண்டிய நடைமுறை
 2014-2015 : 1 முதல் 12 வரை முதல் வகுப்புப் பாடம்
2015-2016 : முதல் வகுப்பிற்கு முதல் வகுப்புப் பாடம்;
2 முதல் 12 வரை இரண்டாம் வகுப்புப் பாடம்
2016-2017 : முதல் வகுப்பிற்கு முதல் வகுப்புப் பாடம்,
2 ஆம் வகுப்பிற்கு இரண்டாம் வகுப்புப்பாடம்; 3 முதல் 12 வரை மூன்றாம் வகுப்புப் பாடம்
2017-2018 : 1-1, 2-2, 3-3;
4 முதல் 12 வரை நான்காம் வகுப்புப்பாடம்
2018-2019 : 1-1, 2-2, 3-3, 4-4;
5 முதல் 12 வரை ஐந்தாம் வகுப்புப் பாடம்
2019-2020: 1-1, 2-2, 3-3, 4-4, 5-5;
6 முதல் 12 வரை ஆறாம் வகுப்புப் பாடம்
2020-2021: 1-1, 2-2, 3-3, 4-4, 5 -5, 6-6;
7 முதல் 12 வரை ஏழாம் வகுப்புப் பாடம்
2021-2022: 1-1, 2-2, 3-3, 4-4, 5-5, 6-6, 7-7;
8 முதல் 12 வரை எட்டாம் வகுப்புப் பாடம்
2022-2023: 1-1, 2-2, 3-3, 4-4, 5-5, 6-6, 7-7, 8-8;
9 முதல் 12 வரை ஒன்பதாம் வகுப்புப் பாடம்
2023-2024: 1-1, 2-2, 3-3, 4-4, 5-5, 6-6, 7-7, 8-8, 9-9;
10 முதல் 12 வரை பத்தாம் வகுப்புப் பாடம்
2024-2025: 1-1, 2-2, 3-3, 4-4, 5-5, 6-6, 7-7, 8-8, 9-9, 10-10;
11, 12 ஆம் வகுப்புகளுக்கு 11 ஆம் வகுப்புப் பாடம்
2025-2026: 1-1, 2-2, 3-3, 4-4, 5-5, 6-6, 7-7, 8-8, 9-9, 10-10; 11-11, 12-12
என எல்லா வகுப்புகளிலும் அந்தந்த வகுப்பிற்குரிய பாடம்.
இடைக்கால ஏற்பாடாக ஒரே நிலைப் பாட அறிமுகம் தவறல்ல!
 மேல் வகுப்பு மாணவர்களை முதல் வகுப்பிற்குரிய தேர்வை அல்லது குறைவான வகுப்பிற்குரிய தேர்வை எழுதச் சொல்வது சரியா என்று எண்ணலாம். தமிழே அறியாமல் மாணவர்கள் படிப்பை முடிப்பதைவிடக் குறைந்த நிலையிலாவது தமிழ் பேச, எழுதத் தெரிந்தவர்களாக வருவது சிறப்பு என்று எண்ண வேண்டும்.
 அல்லது பொதுத் தேர்வான பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பிலும் குறைவான தரத்திலான பாடத்திட்டத்தில் தேர்வு எழுதச் செய்வதால் தமிழை முதல்பாடமாக முன்னரே எடுத்துப் படித்து வருபவர்களுக்கும் இவர்களுக்கும் சமனிலை இருக்காதே என்றும் எண்ணலாம். இப்பொழுது அயல் மொழி எடுத்துப்படிப்பவர்கள் அத்தகைய குறைவான தரத்திலான பாடத்திட்டத்தில் படித்துக் கூடுதல் மதிப்பெண் பெற்று வருகின்றனர் எனவே, அதற்கு இது பரவாயில்லை.
தீர்விற்கான இரு வழிகள்
 இதனைத் தீர்க்க இரு வழிகள் உள்ளன. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்ற முறையிலான பாடத்திட்டத்தை முதல் 5 வகுப்பிற்கு ஒரு நிலை, 6,7,8 ஆம் வகுப்புகளுக்கு ஒரு நிலை, 9,10 ஆம் வகுப்புகளுக்கு ஒரு நிலை 11,12 ஆம் வகுப்புகளுக்கு ஒரு நிலை என அறிமுகப்படுத்தலாம்.
அல்லது தகுதித் தேர்விற்கோ பணித் தேர்விற்கோ கருதிப்பார்க்கும் பொழுது தமிழ்மொழியை முறையாக மொழிப்பாடமாக எடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்ணில் 10 விழுக்காடு மதிப்பெண்ணைச் சேர்த்து, மொத்தமாகக் கணக்கிட வேண்டும். இம்முறையை 2026 ஆம் ஆண்டுவரை நடைமுறைப் படுத்தினால் போதும். இதனால் தவறு ஒன்றும் இல்லை.
  ‘அறிவியல் தமிழ்’ பாடத்திட்டச்செயலாக்கம் என்னவாயிற்று?
இந்தநேரத்தில் ஒரே ஆண்டிலேயே எல்லா வகுப்பிலும் தமிழ்ப்பாடம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டம் செயலற்றுப் போனதையும் நினைவில் கொள்ள வேண்டும். “தமிழ்நாட்டில் எந்தவொரு மாணவ, மாணவியரும் தமிழ்மொழி கற்காமல் பள்ளியை விட்டு வெளியேறக் கூடாதென்பதை எங்கள் ஆட்சியில் உறுதிப்படுத்துவோம் என்று சொல்லிக் கொள்கிற வகையில் அதிமுக ஆட்சியில் ”அறிவியல் தமிழ்” என்ற பாடத்தை முதலமைச்சர் செயலலிதா அறிமுகப்படுத்தி வைத்தார்” என அ.தி.மு.க.வினரால் போற்றப்பட்ட திட்டம் என்னவாயிற்று?
2003, 2004 கல்வி ஆண்டு முதல் அனைத்துவகைப் பள்ளிகளிலும் இளமழலை முதல் +2 வரை மற்ற பாடங்களுடன் ‘அறிவியல் தமிழ்’ என்ற பாடத்தை கற்பிக்க ஆணையிட்டு அதற்கென பாடப் புத்தகங்களும் இலவசமாக வழங்கப்பட்டன.
நடைமுறைப் படுத்தப்படாமல் போனது ஏன்?
 2012இல், அப்போதைய முதல்வரான செயலலிதாவும் சட்டமன்றத்தில் தெலுங்கிலேயே பேசும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு விடையாக, “தமிழகத்தில் படிக்கின்ற மாணவர்கள் கட்டாயம் தமிழ் படித்தாக வேண்டும் என்பதில் எந்த மாற்றமுமில்லை. கருநாடகத்தில் கன்னட மொழியிலும், ஆந்திரத்தில் தெலுங்கு மொழியிலும்தான் படித்தாக வேண்டும் என்னும் பொழுது தமிழ்நாட்டில் தமிழ்படித்தாக வேண்டும் என்று எதிர்ப்பது முறையல்ல” என்றும் குறிப்பிட்டார். இருப்பினும் முந்தைய இவரின் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படாமல் போனது ஏன்?
கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை
 கல்வித்துறையின் முறையான செயல்பாடு இன்மையால்தான் இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. எனவே, முதலில் இவ்வாணையைச் செயல்படுத்தாத கல்வித்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் கல்விநிலையங்கள் தமிழ் கற்பிப்பதில் முழுமையான ஆர்வம் காட்டும். கல்வித்துறையினரும் தமிழ்நாட்டில் தமிழ் கற்பிக்கப்படச் செய்வது தங்கள் கடமை என உணர்வர். இப்போதைய சட்டத்தையும் எந்த அளவிற்கு மேம்படுத்தித் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழில்லா நிலை இல்லாத நிலையை உருவாக்குவர்.

தமிழகக்கல்வியகங்களில் தமிழே வேண்டும்!
எனவே, செயற்பாடுகளில் குறையில்லா வகையிலும் மேற்குறித்தவாறு இவ்வாண்டிலேயே அனைத்து வகுப்பினரும் தமிழ் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தியும் தமிழ்நாட்டுக் கல்வி நிலையங்களில் தமிழ் இருக்க ஆவன செய்ய வேண்டும்.
அன்னைத்தமிழைப் படிப்போம்!
அன்னைத்தமிழில் படிப்போம்!
tamilstudyG.O.page01 tamilstudyG.O.page02
ஐப்பசி 2, 2045 / அக். 19, 2014
 இதழுரை
http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png


No comments:

Post a Comment

Followers

Blog Archive