வணங்குதற்குரிய வாரம்!
ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை இரண்டாம் வாரம்
/ நவம்பர் நான்காம் வாரம் உலகத் தமிழ் மக்களுக்குப்
போற்றுதலுக்கும்வணங்குதற்குரியதான சிறப்பான வாரமாகும்.
நவம்பர் 26, தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர்
மேதகு பிரபாகரன் பிறந்தநாள் பெருமங்கலமாகும். வாராது வந்த மாமணியாய் நமக்கு
அமைந்த ஒப்பற்ற தலைவர் அவர்.
‘கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமை‘(திருக்குறள் 1021)யுடன் வாழும் செம்மல் அவர்.
சலம்பற்றிச் சால்பில செய்யா மா சற்ற (திருக்குறள் 956) மாமனிதர் அவர்.
கெட்டான் எனப்படுதல் நன்று (திருக்குறள் 967) என அடிமையில் ஆழ்ந்திருந்த மக்களுக்கு உணர்த்திய சான்றோர் அவர்.
எனவே, புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை (திருக்குறள் 966) என்னும் உணர்வை மக்களிடம் தோற்றுவித்த பெருந்தலைவர் அவர்.
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கா (திருக்குறள் 952) மக்களைக் கொண்டு ஒப்பற்ற படையை உருவாக்கிய படைத்தலைவர் அவர்.
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் (திருக்குறள் 765) மிக்க விடுதலைப் படையை அமைத்துள்ள ஆன்றோர் அவர்.
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை (திருக்குறள் 764) என்னும் திருவள்ளுவர் வகுத்த இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டான ஒரே படையை வழிநடத்தி உலகிற்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்பவர் அவர்.
உலகின் விடுதலைப்படைகள் எல்லாம் பிற
நாட்டுத் தளத்தில் இயங்கியவையே! ஆனால், தன் நாட்டிலேயே தன் நாட்டு மக்களைக்
கொண்டு தனிச்சிறப்பு மிக்க படையை அமைத்துள்ள தகைமையாளர் இவர் ஒருவரே!
தத்தம் நாட்டிற்காக உயிரைக் கொடுக்கும்
எல்லா நாட்டுப் படையினரும் ஒழுக்கத்தில் சறுக்குபவர்களாகவே உள்ளனர். எதிர்
நாட்டுத் தளத்தில் போராடச் சென்றும் அமைதிகாக்கச் சென்றும் பாவையரின்
உடலில் களமாடுபவர்காளாகவே உள்ளனர். ஆனால், மதுவையும் மாதுவையும் நாடா ஒரே
ஒப்பற்ற படை , தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் படையே ஆகும். உயிரினும் மேலான
ஒழுக்கத்தையும் வீரத்துடன் இணைத்து ஊட்டிய ஒரே உலகத் தலைவர் அவர்தாம்.
தவிர்க்க இயலாச் சூழலில் நாட்டு மானம்
காக்கவும் அடிமைத்தனைத்தைப் போக்கவும் படை அமைத்தாலும் இதனால் அல்லலுறும்
மக்களுக்கு உரிய மறுவாழ்வுப்பணிகளிலும் கருத்து செலுததிய தலைவர் இவர்
ஒருவர்தாமே!
எல்லா நலனும் வளமும் பெற்றுத் தமிழ் ஈழத்தின் தலைமைப் பொறுப்பில் நீடு வாழ நாம் வாழ்த்துவோம்!
சிலர் அவர் மறைந்து வாழவில்லை!
மறைந்துவிட்டார்! இந்த உண்மையை ஒப்புக் கொள்ளாததால், மாற்றுத் தலைமை
உருவாகவில்லை என்கின்றர். அவர் இருந்திருந்தால் எங்ஙனம் வழிகாட்டாமல்
ஒதுங்கி யிருப்பார் என்கின்றனர்.
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர் (திருக்குறள் 487) என்பதை அறியாதவர்கள் அவர்கள்!
ஆகவே, வாழும் தலைவர் மேலும் நூறாண்டுகள் வாழ நாம் வாழ்த்துவோம்!
ஆற்றல் மிகு தலைவரின் அழியாச்சிறப்புடைய
படையில் கரும்புலியாயும்கடற்புலியாயும் வான்புலியாயும் பெண்புலியாயும்
மானம் காக்கும் மறப்புலியாயும் திகழ்ந்து தம் இன்னுயிர் நீத்த மாவீரர்களின்
நாள் நவம்பர் 27 ஆகும். வாழவேண்டிய திறமைமிகு இருபால் இளைஞர்களும்
இளம்அகவையில் வீர மரணம் அமைந்தது என்றும் வருத்தத்திற்கு உரியதே! எனினும்
அவர்கள் கண்ட கனவை நனவாக்குவதே நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றிக்கடன்!
அதுவே உண்மையான அஞ்சலி! மாவீரர் நாளுடனோ மாவீரர் வாரத்துடனோ அவர்களைப்பற்றி
எண்ணுவதுடன் நம் கடமை முடிந்து விடவில்லை.
தமிழீழ விடுதலை பற்றிய பரப்புரை மேற்கொண்டு
தமிழீழத் தேவையை உலகிற்கு உணர்த்தி வாகை சூடித் தமிழ் ஈழத்தை மலரச்
செய்வதே உண்மையான கடமையாக அமையும்!
ஆற்றுவோம் கடமையை! அமைப்போம் தமி்ழ் ஈழத்தை!வாழ்த்தி வணங்கும் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரைகார்த்திகை 7, 2045 / நவம்பர் 23, 2014
No comments:
Post a Comment