பயன்பாட்டுப் பார்வையில்துறைதோறும் தமிழ்

பன்னாட்டுக் கருத்தரங்கம் : கார்த்திகை 9, 10 – 2045 / நவம்பர் 25, 26 – 2014

எத்திராசு மகளிர் கல்லூரி, சென்னை

karutharangam_thiruvalluvan03

பாடநூல்களில்பயன்பாட்டுத் தமிழ்

இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசிரியர், அகரமுதல மின்னிதழ்
thiru2050@gmail.com
கலை, அறிவியல் படைப்புகள் யாவுமே பயன்பாட்டிற்குரியனவே. எனினும் தமிழ்வளர்ச்சி நோக்கில் பார்க்கும் பொழுது, கல்வியில் அன்றாடப் பயன்பாட்டிற்கு முதன்மை அளிக்க வேண்டும். ‘தமிழறிவியல்’ அல்லது ‘அறிவியல் தமிழ்’ எனத் தனியாகக் கற்பிக்கத் தேவையில்லை. முதல் வகுப்பிலிருந்தே பாடநூல்கள் வாயிலாகப் பயன்பாட்டு முறையில் கற்பிக்க வேண்டும். நல்ல தமிழ், பாடநூல்களில் சிறப்பாகப் பயன்படுத்தப்படுவதே பயன்பாட்டுத் தமிழின் தொடக்கச் சிறப்பாக அமையும்.பயன்பாட்டுத்தமிழ் மாணாக்கர்களின் பாடநூல்களில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதுபற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்!
மறுமலர்ச்சியுற தமிழ், பயன்படுமொழியாக வேண்டும்!
“தமிழ்மொழி இனிமையானது; தொன்மையானது; வளமானது; கற்பதற்கு எளிமையானது என்பனவெல்லாம் தமிழர்களேயறியார். தமிழ் இந்திய மொழிகளின் தாய்; ஏன், உலக மொழிகளின் தாய் என்ற உண்மையைத் தமிழர்களே அறிந்திலர். தமிழ்நாட்டளவிலும் எல்லாத் துறைகளிலும் பயன்படுகருவியாய் அஃது அமைந்திலது. அமைவதற்குரிய முயற்சியில் தமிழர்கள் ஈடுபடல் வேண்டும். தமிழ் மீண்டும் மலர்ச்சி பெறுவதற்குரிய வழி இதுதான்.”(பழந்தமிழ், பக்கம் 219) என்று தமிழ் பயன்பாட்டு மொழியாய் ஆனால்தான் மறுமலர்ச்சியுறும் என்பதைத் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வழியுறுத்துகிறார். அதற்குரிய வழிகளாக, “கல்வி மொழியாகவும், கடவுள் வழிபாட்டு மொழியாகவும் அரசாள் மொழியாகவும் அறிவியல் மொழியாகவும் தமிழ் ஆகும் நாளே அது மீண்டும் மலர்ச்சி பெற்ற நாளாகும்.” (பழந்தமிழ், பக்கம் 219)என்றும் அவர் கூறுகிறார்.
இவற்றுள் கல்வித்துறையில் தமிழ் பயன்படு மொழியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் அதற்குப் பாடநூல்களில் நற்றமிழே தவழ வேண்டும் என்பதை உரைக்கவும் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது.
மழலை நிலையிலிருந்தே தொடங்குக!
தமிழில் எண்ணியும் தமிழில் எழுதியும் தமிழில் பெயர் சூட்டியும் தமிழ் மரபு போற்றியும் தமிழில் வணக்கமும் வாழ்த்தும் தெரிவித்தும் எந்நிலைக் கல்வியாயினும் தமிழ்நிலைக்கல்வியாகத் திகழச் செய்யவும் தமிழுணர்வை மழலைநிலையிலிருந்தே தொடங்க வேண்டும். இங்கே, தொடக்க நிலைப் பாடநூல்களில் இடம் பெற்றுள்ள செய்திகளின் அடிப்படையில் தமிழ் பயன்பாட்டுத் தமிழாக இருக்க வேண்டிய இன்றியமையாமையைக் காணலாம்.
தமிழ்ப்பெயர்களையே பயன்படுத்துக!
தமிழ்ப்பெயர் சூட்டினால்தான் தமிழ் வாழும்.அதனைப் படிக்கும் பொழுதே மாணாக்கர்களுக்குப் பயன்பாட்டு அடிப்படையில் உணர்த்த வேண்டும். அவர்கள் நல்ல தமிழ்ப் பெயர்களையே கேட்கவும் படிக்கவும் செய்தால் இயல்பாகவே தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும் என்ற உணர்விற்கு ஆளாகுவர்.ராஜாஎன்றெல்லாம் பாடங்களில் பெயர்கள் வருகின்றன. முன்பு நல்ல தமிழ்ப்பெயர்கள் மட்டுமே பாடநூல்களில் இடம் பெற்றன. இப்பொழுது பார்த்தால் சில இடங்கள் தவிர, அனைத்து இடங்களிலும் பிற மொழிப் பெயர்களே பயன்படுத்தப்படுகின்றன. பாடநூல் ஆசிரியர்களுக்குத் தக்க வழிகாட்டி, மொழி நூலாக இருந்தாலும் பிற நூலாக இருந்தாலும் தமிழ்ப் பெயர்களையே பயன்படுத்தச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான்
தமிழ்ப்பெயர் சூட்டுவோம்!
தமிழ்ப்பெயர் போற்றுவோம்!
என்ற உணர்வு படிக்கும்பொழுதே மாணாக்கர்களுக்குப் பதிவதுடன் வீட்டில் பாடம் கற்பிக்கும் பெற்றோர்களுக்கும் அவ்வுணர்வு ஏற்படும்.
தவறான தகவல்கள் கூடா !
மாணாக்கர்களுக்குத் தவறான தகவல்கள் அளிக்கப்படக்கூடா. பாடநூல் ஆசிரியரும் மேற்பார்ப்போரும் கல்வித்துறையினரும் இதில் கருத்து செலுத்த வேண்டும். சான்றாக இரண்டாம் வகுப்புப் பாடநூல் பக்கம் 88இல் விலங்குகள் துன்புறுவதைத் தடை செய்யும் அமைப்பு- ‘புளுகிராசு ‘ (blue cross) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் குறிக்கப்பட்டுள்ள அமைப்பு (Society for the Prevention of Cruelty to Animals) வேறு. ‘புளுகிராசு’ என்பது நீலச் சிலுவைச் சங்கம் ஆகும். இரண்டும் விலங்கின நலம் சார்ந்தன எனினும் உலகெங்கும் உள்ள தனித்தின அமைப்புகள் ஆகும். இவ்விரண்டையும் சரியான முறையில் விளக்க வேண்டும்.இல்லையேல் தமிழில் சரியாகச் சொல்ல இயலாது என்ற தவறான எண்ணத்தைப் படிக்கும் பொழுதே ஏற்படுத்தும்.

சொற்களைத் தமிழ் மரபிற்கேற்பக் குறிப்பிடுக!
எல்லா இடங்களிலும் தமிழ் மரபிற்கேற்பவே குறிப்பிட்டு, இயல்பாக அவ்வாறு எழுதும் பழக்கததை உணர்த்த வேண்டும். ஆனால், இரு வகையாகக் குறிக்கப் பெறுகின்றன. சான்றாகத் தமிழில் முதல் எழுத்தாக , ,வரா; அவ்வாறு வருமிடங்களில் இகரம் சேர்க்கப் பெற வேண்டும். இரண்டாம் வகுப்பு பாடத்தில் ரம்பம்(54) என்றும் இரப்பர் வளையம் 72 என்றும் இடம் பெற்றுள்ளன.   அவ்வாறில்லாமல் எல்லா இடங்களிலும் தமிழ் மரபிற்கேற்பவே சொற்கள் இடம் பெற வேண்டும்.
இருமொழிப் பயன்பாடு வேண்டா!
சில இடங்களில் தமிழ்ச்சொற்களும் சில இடங்களில் அயற்சொற்களும் பயன்படுத்துவதால், மாணாக்கர் அயற்சொற்களையும் தமிழ்ச்சொற்கள் என்றே எண்ணிப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.இரண்டாம் வகுப்புநூலில் இரயில் நிலையம் (60) என்றும் மூன்றாம் வகுப்பில் தொடர்வண்டி(40) என்றும் உள்ளன.சுத்தம்(வகுப்பு 2, 57) தூய்மை(வகுப்பு 2, 58) என்ற இருவகைப் பயன்பாடின்றித் தூய்மையை மட்டும் குறிப்பின் நற்றமிழே மாணாக்கர் நாவில் நடமாடும்.
மூன்றாம் வகுப்பில் ஊடுகதிர் (ப.124), எக்சுகதிர் (ப.130) என உள்ளமையால் இவற்றை வெவ்வேறு என எண்ணவும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய குழப்பமும் மாணவர்களின் சிந்தனை வளர்ச்சியைத் தடை செய்யும். ஒரே இடத்தில் அடைப்பிற்குள் ஆங்கிலச் சொல்லை இடுவது என்பது வேறு. ஆனால், படிக்கும் பொழுது தமிழ்வழியாக எண்ணம் அமையும் வகையில் தமிழ்ப்பெயர்களைத்தான் குறிக்க வேண்டும். மூன்றாம் வகுப்பு பாடநூலில் டீச்சர்என்றே குறிக்கப்பட்டுள்ளதைப் போன்ற கொடுமை வேறல்ல. ஆசிரியரை அயல்மொழியில் குறிப்பதன்மூலம் அவர் அயல்மொழியில் சொல்லித்தருவதால் தவறல்ல என எண்ணுகிறார்களா?
அன்னைத்தமிழிருக்க ஆங்கிலப் பயன்பாடு எதற்கு?
இங்க்ஃபில்லர் (வகுப்பு 3, பருவம் 3, பக். 5,) பாக்கெட் (வகுப்பு 3, பருவம் 3, பக். 35) என ஆங்கிலச்சொற்கள் பயன்படுத்தும் பகுதிகளும் உள்ளன.   எல்லா இடங்களிலுமே அயற்சொல் நீக்கித் தமிழ்ச்சொல் பயன்பாட்டில் இருந்தால்தான் மாணாக்கரின் தமிழ்வழிச் சிந்தனை பெருகும்.
எண்ணைக் காப்போம்! எழுத்தைக் காப்போம்!
   உட்பிரிவு எண்களுக்காக உரோமன் எண்கள் பயன்படுத்தப்படுகின்றன; அவ்வாறு இல்லாமல் தமிழ் எண்களையும் தமிழ் எழுத்துகளையும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம்இவற்றை நன்கு அறிந்து பயன்படுத்தும் வாய்ப்பு மாணாக்கர்களுக்குக் கிட்டும்.
அறிவியல் உண்மைகளையே குறித்திடுக!
பல்லி எப்போதும் நீர் அருந்துவதில்லை (104) எனக் குறிக்கப் பெறுகிறது. நீர் அருந்தாப் பபல்லிகளும் உள்ளன. நீர் அருந்தும் பல்லிகளும் உள்ளன. எனவே, பொதுவான நம்பிக்கையின்பாற்பட்ட செய்திகளைக் குறிக்காமல் அறிவியல் உண்மைகளையே பாடங்களில் குறிக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் அறிவியல் என்பது உண்மையின்பாற்பட்டது என்ற நம்பிக்கை வரும்.
கிரந்தம் நமக்கு எமன்!
கிரந்த எழுத்துகளில் மாதங்களின் பெயர்கள்(19, 20, 21, 22) பண்டிகைகள் பெயர்கள்(24, 25), சில பெயர்ச்சொற்கள் குறிக்கப்படுகின்றன. எந்த இடமாயினும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாமல் படிக்கும் பொழுதே தமிழ் எழுத்துகளையும் தமிழ்ச் சொற்களையும் பயன்படுத்தவேண்டும் என்ற உணர்வை மாணாக்கர்க்கு விதைக்க வேண்டும். பாடநூல்களில் கிரந்தம் கற்பிக்கப்படாத நிலை உருவாக வேண்டும். உலகத்தில் அவரவர் மொழியை அவரவர் மொழி எழுத்துகளில் எழுதும் போது தொன்மையும் தாய்மையும் உடைய தமிழைத் தாய்மொழியாக உடைய நாம் மட்டும் பிற எழுத்துகளைப் பயன்படுத்துவது இழிவானது என்ற உணர்வு படிக்கும் பொழுதே தோன்றினால்தான் மொழிச்சிதைவில் இருந்து தமிழை நாம் காப்பாற்ற முடியும்.
தமிழ் முறையிலான தொடர்களையே பயன்படுத்துக!
மேலும் தமிழ் முறைக்கேற்பவே தொடர்கள் அமைகின்றன. கீழ்க்கண்டவாறு என்று நாம் பல இடங்களில் காண முடிகின்றது. மேலே பார்த்துமுடித்த பின், – கண்டுமுடித்தபின்- அதைக் குறிப்பதால் மேற்கண்டவாறு என்போம். ஆனால் இனிவருவனவற்றைக் கண்டவாறு எனக் குறுிப்பது எவ்வாறு பொருந்தும்- கீழ்க்காணுமாறு அல்லது பின்வருமாறு என்றுதான் குறிக்க வேண்டும். இவற்றையெல்லாம் பயன்பாட்டுமுறையில் மாணாக்கர்களுக்குக் கற்றுத் தரவேண்டும்.
தமிழ்க்கலைச்சொற்களையே அறிமுகப்படுத்துக!
மூன்றாம் வகுப்பு நூலில் “காதின் உள்ளே உள்ள ஃச்டே பஃச் (ஸ்டே பஸ்) என்ற எலும்பு மிகச் சிறியது(ப.125)” என்ற குறிப்பு உள்ளது. ‘stapes’ என்பதைத்தான் இவ்வாறு கிரந்தத்தைப் பயன்படுத்தித் தவறாகக் குறிக்கின்றனர். தமிழில் அங்கவடி எலும்பு அல்லது உறுப்படி எலும்பு எனக் குறிக்கின்றனர். தமிழில் குறிப்பிடாமல் ஆங்கிலத்தில் குறிப்பதால் தவறாகப் புரிந்து கொள்ளும் போக்குதான் ஏற்படும். கலைச்சொற்கள் யாவும் படிக்கும்பொழுதே தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டால்தான் அறிவியல் சிந்தனை வளரும் என்பதை நூலாசிரியர்களும் கல்வித்துறையும் உணர வேண்டும்.
தொல்தமிழர் அறிவியல் உண்மைகளையே உரைத்திடுக!
தமிழ் அறிவியல் எனத் தனியாக உள்ளது போல் இல்லாமல் அறிவியல் செய்திகளைக் கூறும் பொழுதே தமிழில் உள்ள அறிவியல் செய்திகளையும் இணைத்துச் சொல்ல வேண்டும். சான்றாக, நான்காம் வகுப்புப்பாடநூலில் ( பக்.127) தாவரங்களுக்கும் உயிர்உண்டு என்பதை அறிஞர் செகதீசு சந்திரபோசு கண்டறிந்ததாக உள்ளது. இதே இடத்திலேயே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியர், தம் நூலான தொல்காப்பியத்தில் தனக்கும் முன்னரே பயிர்களுக்கு உயிர் உள்ள உண்மையைக் குறிப்பிடுவதைக் கூற வேண்டும்.
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
- (தொல்காப்பியம்: பொருளதிகாரம்: 571)
என ஆறறிவு உயிர்களை வகைப்படுத்திய தொல்தமிழரின் அறிவியல் சிறப்பைக் குறிக்க வேண்டும்.
வான ஊர்தியைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது வலவன் ஏவா வானவூர்தி, தெர்மாசு குடுவையைக் குறிப்பிடும் பொழுது சேமச் செப்பு, ஃச்டெப்னி எனப்படும் மாற்றுச்சக்கரத்தைக் குறிப்பிடும் பொழுது சேம அச்சு, என்பன போன்று தொல்தமிழர்கள் உணர்ந்தறிந்த அறிவியல் உண்மைகளை எளிமையாகப் படிப்பிக்க வேண்டும்.(காண்க :அன்றே சொன்ன அறிவியல் – சங்கக்காலம்.)
விலங்கினங்கள், பறவைகள், கோள்கள் முதலானவற்றைக் குறிப்பிடும் பொழுது அவற்றின் அறிவியல் காரணப் பெயர்களைக் குறிப்பிடுவதன் மூலம் தமிழறிவியலை எளிமையாக மாணாக்கர்கள் உள்ளத்தில் பதிக்கலாம்.
‘தகவல் துளிகள்’ என்ற தலைப்பில் பல செய்திகள் பாடநூல்களில் இடம் பெறுகின்றன. இவற்றில் தமிழின் அறிவியல் சிறப்பு தெரிவிக்கப்பட வேண்டும்.
நிறைவுரை
சான்றுக்குச்சிலவே பார்த்துள்ளோம். தமிழ் பயன்படு மொழியாய்த் திகழ மழலை நிலையில் கற்பிக்கப்படும் பாடல்களிலிருந்து யாவும் தமிழாகவே மணக்க வேண்டும்! தமிழ் எல்லாத் துறைகளிலும் பயன்பாட்டு மொழியாக அமைய அடித்தளமாக அமைவது கல்வியே! ஆதலின் கல்வி மொழி முற்றிலும் தமிழாக இருத்தல் வேண்டும்! பசுமரத்தாணிபோல் பதியும் அகவையிலேயே பைந்தமிழ் பயன்படுமொழியாக இலங்கினால், தமிழ் என்றும் எங்கும் எதிலும் ஏற்றமுடன் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழே எங்கும் என்னும் தகைமையை உருவாக்குவோம்!
பைந்தமிழைப் பயன்படுமொழியாக்கிப் பாரினில் சிறப்போம்!