தலைப்பு- ஆண்டவர்களைப் புறக்கணிப்பீர் :thalaippu_thearthal_purakkaanippeer_ithazhurai_thiru

தேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்!


  நிகழ இருக்கின்ற சட்டமன்றத்தேர்தலில்(2016)  பன்முனைப் போட்டிகள் உள்ளன. ஒவ்வோர் அணியும் நம்பிக்கையுடன் உள்ளதாகத்தான்  கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் தேர்தல்  நெருங்க நெருங்க இப்போதைய சூழலில் மாற்றம் ஏற்படும். எனவே, சிலர் நம்பிக்கைகள் பொய்த்துப்போகும். சிலர் எதிர்பார்த்ததைவிட வாக்குகள் கூடுதலாக வாங்கலாம். கூட்டணியாகப் போட்டியிடாத கட்சிகளும் தேர்தலுக்குப்பின் புதிய கூட்டணி அமைக்கலாம். எனினும் இன்றைய நம் கடமை, யாருக்கு நம் மதிப்பார்நத வாக்குகளை அளிக்க வேண்டும்  என ஆராய்ந்து வாக்குரிமையைப் பயன்படுத்துவதுதான். யார் வெற்றி பெற்றால் என்ன என்ற புறக்கணிப்போ, நம் வாக்கால் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற நம்பிக்கையின்மையோ தகுதியற்றவர்களுக்கு நம் வாக்குகள் போவது சரியல்ல என்ற எண்ணத்திலோ  பலர் இருப்பர்.
  இதுவரை மிகுதியான காலம் ஆட்சி செய்த  இப்போதைய ஆளும் கட்சியான அதிமுக, எதிர்கட்சியாக மாறியுள்ள திமுக இரண்டுமே நலத்திட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தியும் செயல்படுத்தியும் வந்துள்ளன.  தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இரண்டு கட்சிகளுக்கும் முதன்மைப் பங்கு உண்டு. கட்சியின் நற்பணிகளை அந்தந்தக் கட்சியினரின் உரை மூலம் உணரலாம். அதே நேரம், இரண்டு கட்சிகளால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அவலங்களை இவ்விருகட்சிகளின் எதிர்க்கட்சி குறித்த உரை மூலம் அறியலாம்.  நல்ல திட்டங்கள் செய்தமைக்குப் பாராட்டித்தான் இதுவரை ஆட்சி செய்யும் வாய்ப்பை அளித்துள்ளோம்.  ஆனால், செய்யத்தவறியமைக்கு மாறி மாறித் தோல்வியை அளித்தது மட்டும் தண்டனையாகாது. எப்படியும் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தொலைநோக்கில் செய்யத் தவறியவற்றை உணரமாட்டார்கள்;  குடியினால் குடிமக்களை அழித்தது குறித்து வருந்த மாட்டார்கள்; தமிழால் ஆட்சிக்கு வந்தும் தமிழ் மொழியைக் கல்வியகங்களில் இருந்து விரட்டி வருவதை உணர்ந்து திருந்த மாட்டார்கள்; தமிழ் நாட்டை அயலவர் நாடாக மாற்றி வரும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமாட்டார்கள். எனவே,  மக்கள், வாக்குகளை வீணாக்க வேண்டா எனக் கருதிப் பிற கட்சிகளுக்கு வாக்களிக்காமல் புறக்கணிக்கும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
  தமிழ் ஈழ மக்கள் படுகொலையில் தி.மு.க.வின் நிலைப்பாட்டிற்காக அதற்குத் தரவேண்டிய  தண்டனையை இன்னும் தரவில்லை. எனவேதான் அக்கட்சி இனப்படுகொலைக் கட்சியான பேரயாத்துடன் – காங்.உடன் – கூட்டணி வைத்துள்ளது. இதைக் கொள்கையளவிலான கூட்டணி என்றும் உண்மையை ஒத்துக் கொண்டுள்ளது. வீட்டு மக்கள் நலனுக்காக நாட்டு மக்கள் அழிவைக் கவலைப்படாத கலைஞர், தாம்  அதற்கு முன்புவரை செய்த நற்பணிகளின் பயனையும் இழந்தவராகிறார்.  பெரும்பான்மைத் தமிழர்க்கு உணர்வு ஊட்டிய அவர், தம் குடும்பத்தார்க்குத் தமிழ் உணர்வு ஊட்டத்தவறியதால்,  தமிழ்நலப்பணிகளை ஆற்றமுடியாமல், இனப் படுகொலைக்கு உதவியுள்ளார். கொடுமை கண்டு நடுநிலை என்ற பெயரில் ஒதுங்கியிருப்பதும் அதற்கு உதவுவதாகத்தான் பொருள்.
  எனவே, கொடுங்குற்றச் செயலுக்கு வருந்தா அவர், தோல்வியுற வேண்டுமெனில் தி.மு.க. தோற்றாகத்தான் வேண்டும்.
  அப்படியானால், தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதிராகத்தீர்மானம் கொணர்ந்த இனப்படுகொலையாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று குரல் கொடுத்த அதிமுக தலைவி செயலலிதாவிற்கு வெற்றி வாய்ப்பை வழங்கலாமா எனலாம். அவரது இந்த உணர்விற்காகத்தான் இந்த முறை ஆட்சிப் பரிசு கிடைத்துள்ளது. ஆனால், தமிழ் நாட்டில் ஈழத்தமிழர் சிறப்பு முகாம்கள் பெயரில் நடைபெறும் மனித உரிமை மீறிய அடக்கு முறைக்கு உரிய பரிசை அளிக்க வேண்டாவா? பொய்க்குற்றச்சாட்டால் வாழ்வினை இழந்து வாடும் எழுவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பாராம்! ஆனால், மரணப்படுக்கையில் இருக்கும் தந்தையைப் பார்க்க விடுப்பு அளிக்கமாட்டாராம்! மரணத்திற்குப் பின்னும் செய்ய வேண்டிய இறுதிக்கடனுக்கும் விடுப்பு அளிக்க மாட்டாராம். அப்படியானால் என்ன பொருள்? ஈழத் தமிழர் ஆதரவுத் தீர்மானத்தால் மத்திய அரசின் போக்கிலும் பன்னாட்டு அவையின் போக்கிலும் எந்த மாற்றமும் விளையாது. ஆனால், உலகத் தமிழர்களிடம் அவர்களுக்கு உணர்வு அடிப்படையில் ஆதரவாளராக இருப்பதாகக் காட்டி அவர்களின் ஆதரவைப் பெறலாம் என்பதுதானே!
  அரசியலில் அடிமைகளை வளர்த்தெடுப்பதுதான் கட்சித்தலைமைகளின் செயல்பாடுகளாக உள்ளன. ஆனால், எல்லாரையும் விஞ்சியவராக இவர் தமக்கு இணையாக மதிக்கத்தக்க அமைச்சர் பெருமக்களையும் மண்டியிடச்செய்யும் அடிமைகளாக நடத்துகிறார் எனில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாவா? எனவே, இவர் ஆற்றிய நற்பணிகளுக்காக இதுவரை ஆட்சிப் பரிசு தந்தது போதும். செய்யத் தவறியமைக்காகச் சற்று ஓய்வு  கொடுப்போம்.
  இன்னார் வரக்கூடாது என்ற நோக்கிலேயே இதுவரை வாக்களித்துவந்துவிட்டோம். இம்முறை அவ்வாறு எண்ணாமல் நம் வாக்குகளை அளித்து ஒரு வேளை வேண்டாதவர் வந்து விட்டால் என்ன செய்வது என எண்ணலாம். அவ்வாறு வந்திருந்தால்கூட மாற்றுக் கட்சியினரின் வாக்கு வங்கி உயர்ந்திருக்கும் என்பதை உணர்ந்து தங்களை மாற்றிக் கொள்ள வாய்ப்பு  இருக்கும். அடுத்த தேர்தலில் முற்றிலும் இவர்களைப் புறந்தள்ள வாய்ப்பு அளிக்கும்.
  பேராயக்கட்சியாகிய காங்கிரசும் பாரதியசனதாக் கட்சியும் வேரூன்றவிடக்கூடாது என்பதில் மக்கள் கருத்தாக இருப்பதால் செல்லாக் காசுகளைப்பற்றி இங்கே கூற வேண்டா!
   புதிய கட்சி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் ஊழலில்  ஈடுபடமாட்டார்களா எனலாம். ஊழலில் திளைத்து வெற்றி வாய்ப்பை இழந்த முதலிரு கட்சிகளும் கண்கொத்திப் பாம்பாக இருந்து இவர்கள ஊழல் செய்ய முயலாமல் தடுப்பார்கள் என்பதால் அது குறித்துக் கவலைப்பட வேண்டா. ஆனாலும் நம்மால், மக்கள் நலனுக்கான நல்ல கட்சி என்று எததையும் சொல்ல முடியவில்லை. கூரையில் தீ வைத்துக் கொண்டிருப்பவன்தான் நல்ல பையன் என்பதுபோல், உள்ள கட்சிகளில் தீமை குறைந்த கட்சி எது என்றுதான் பார்க்க முடியும். தமிழ்த்தேசியம் பேசும் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதால், இருக்கின்ற கட்சிகளில்  தீமை குறைந்த கட்சி எது என்றுதான் பார்க்க வேண்டும்.
  அவற்றுள் முதலிடமாக மக்கள்நலக் கூட்டணியை நாம் கருதலாம். இங்கும் சறுக்கி விழுந்து இனப்படுகொலையாளிகள் நிறைந்த பேராயக்கட்சியை – காங்கிரசை ஆதரித்த திருமாவளவன் இருக்கிறார்.  நல்ல  தொண்டர்களும் மக்கள் சார்பாளர்கள் பலரும் இருப்பினும்  செஞ்சட்டை அணிந்த காவிச்சட்டையராகத்தான்  மார்க்சியப் பொதுவுடைமைத்தலைவர்கள் உள்ளனர். கொள்கைகளை விட்டுக்கொடுத்து அடிமைவாய்ப்பு கிடைக்காமையால் கூட்டணியில் சேர்ந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர் உள்ளனர்; பிறரை ஒப்பிடம் பொழுது அரசியல்  போராளியாக வைகோ திகழ்ந்தாலும் கட்சியின் இருத்தலுக்காக அவரும் இடருகின்ற தலைவர்தான். எனினும் நாம் வாய்ப்பளிப்பதன் மூலம் இந்தத் தேர்தல் அடுத்த தேர்தலுக்கு நல்ல வழிகாட்டியாக அமையும் எனலாம்.
 தமிழ் ஈழத்தில் படுகொலை நடந்த நேரத்தில் மத்திய ஆட்சியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது; ஆட்சிக்கட்டில் ஏறுவதற்காக விரட்டியடிக்கப்படவேண்டிய  பேராயக் கட்சியும் (காங்\கிரசும்) பா.ச.க.வும் ஆதரவு தந்தால் கட்டியணைத்துக்  கொஞ்சும் கட்சிதான் பா.ம.க. எனினும், இலவசங்களுக்கு எதிராகவும் மதுவிற்பனைக்கு எதிராகவும் பா.ம.க. குரல் கொடுத்து வருவது பாராட்டிற்குரியது.  எனவே, தமிழினப்பகைவர்களுடன் கூட்டணி  வைக்காவிட்டால், இக்கட்சிக்கும் வாய்ப்பளிப்பது தவறில்லை.
  தமிழ்நாட்டில் தமிழர் தலைமைக்கும் தமிழின் முதன்மைக்கும் குரல் கொடுக்கும் நாம் தமிழர் கட்சி 234 இடங்களிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இன்றைய நிலையில் தொகுதிக்கு 2000 குடும்பத்தினர் வாக்கு அதற்கு இருக்கலாம். பரப்புரைக்கேற்ப இதில் மாற்றம் வரலாம். இதற்கு அளிக்கும் வாக்கு  இதனை  வெற்றி பெறச் செய்யாவிட்டாலும் பிறரைத் தோல்விக்குத் தள்ளலாம்.  பெரியாரியம் குறித்த முரண்பட்ட கருத்து,  தேசியம் பற்றிய சரியான புரிதலின்மை  போன்ற குறைகள் இருப்பினும், இக்கட்சியினருக்கும் வாக்களிக்க எண்ணுவது தவறில்லை.
  மற்றொரு முதன்மையான விசயகாந்தின் தே.மு.தி.க.பற்றிக்கூறவில்லையே எனலாம். தனக்கு முடி சூட்டுவதாக இருந்தால் எத்தகைய கொடியவரையும் ஆதரிக்கும் கட்சிதான் இதுவும். இருப்பினும் நாடாளுமன்றத்தேர்தலின் தன் உழைப்பபைப் பயன்படுத்தி விட்டு வெற்றி பெற்ற பின்னர் சந்திக்கக்கூட நேரம் ஒதுக்காமல்  அவமரியாதை செய்தமையால் பாசகவைத் தொலைவிலேயே வைத்துள்ளது.  தி.மு.க.வுடன் கொலைகாரக் காங். உடன்பாடு கொண்டதால் இதனுடன்  உடன்பாடு கொள்ள வாய்ப்பில்லை. தனியாகப் போட்யிடுவதாக அறிவித்தாலும் மக்கள் நலக்கூட்டணியில் சேரும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு சேர்ந்தால் அக்கூட்டணிபற்றிய கருத்து   இதற்கும் உரியதாகின்றது. ஆனால், அப்படி சேரும் பொழுது தெலுங்கர்கள் இணைந்த கூட்டணி என்று எதிர்க்கட்சியினர் பரப்புரை செய்வர். அது குறித்துக் கவலைப்படாமல் ஒது்க்கி விட வேண்டும். அவ்வாறில்லாமல்  தேதிமுக தனித்துப் போட்டியிட்டால் ஆதரிக்கலாமா என்ற வினா வருகிறது.
  அடடா! வாசன் என்பவர் கட்சி நடத்துகிறாரே! காங்.தி.மு.க.வுடன் கூட்டணி  வைத்தமையால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கத்துடிப்பார். அவ்வாறாயின் அவரின் தமிழ்மாநிலப் பேராயக்(காங்கிரசுக் )கட்சியும் தோற்கடிக்கப்படவேண்டியதே! முதலில் கூறிய விலக்க வேண்டிய 5 கட்சிகளுடன் கூட்டணி  வைத்தால், முன்னர்க் கூறியவை இதற்கும் பொருந்தும்.
உதிரிக்கட்சிகள், தாங்கள் சேரும் கூட்டணிக்கேற்பவே வெற்றி, தோல்வியைத் தழுவ வேண்டியவர்கள் என்பதில் ஐயமில்லை.
  பொதுவாக, அஇஅதிமுக, திமுக, காங்கிரசு, பா.ச.க  ஆகிய கட்சிகள் இவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்காமல்,  தத்தம் தொகுதியில் போட்டியிடும் மேற்குறித்த பிற கட்சிகளில் உள்ள தமிழ், தமிழர் நலம் நாடும், நேர்மையான அரசியலை நடத்தும் தீமை குறைந்தவருக்கு வாய்ப்பளிக்கலாம். இதனால் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். ஆனால், இவர்கள் வெற்றி பெற்ற பின்னர், இவர்களை விலைபேசத் துடிக்கும்  பணக்கார ஐந்து கட்சிகளின் பக்கம் சாயாமல், தங்களுக்குள் புரிதலை ஏற்படுத்திக் கொண்டு கூட்டணி ஆட்சி தருவது நன்மை பயக்கும்.
  தேர்தலில் எதிர்த்துவிட்டு வெற்றி அடிப்படையில் சேருவது தவறல்லவா என எண்ணலாம். எப்படியும் கூட்டணிதான் என்று வந்த பின்னர், ஆண்ட கட்சிகளைப் புறக்கணித்து விட்டுப் புதியவர்களுடன் கூட்டணி வைப்பதே சிறந்தது.
  இறுதியான தேர்தல் கூட்டு முடிந்தபின்னர் மேற்கொண்டு கருத்தைத் தெரிவிக்கலாம். எனினும் எப்படி இருந்தாலும்.
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். (திருவள்ளுவர், திருக்குறள் 511)
என்பதை எண்ணி நாம் முடிவெடுப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 124, மாசி 30, 2047 / மார்ச்சு 13, 2016
Akaramuthala-Logo