பிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள
ம.ந.கூட்டணி விரிவு
விசயகாந்தைத் தங்கள் பக்கம் இழுக்க
முயன்ற ஒவ்வொரு கட்சியும் அவர் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்ததும்
அவரையும் வைகோவையும் தாழ்த்தியும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
அப்படியானால் இவர்கள் ஏன்,
விசயகாந்தைத் தங்கள் பக்கம் இழுக்கப் பலவாறாக முயன்றனர். விசயகாந்துடன்
இணைந்ததால் ம.ந.கூட்டணியைத் தாழ்வாகக் கூறுகின்றனரே, அப்படியானால்,
தங்களைவிட இக்கூட்டணி உயர்வானது, அத்தகைய உயர்வான கூட்டணி ஏன்
விசயகாந்துடன் இணைந்தது என்கின்றனரா? தேர்தலில் கூட்டணி என்பது வெற்றிக்கான தொகுதி உடன்பாடேயன்றிக் கொள்கைக் கூட்டணியன்று. எனவே, வேறுவகையில் கூறுவதற்கு ஒன்றுமில்லை.
விசயகாந்து எந்தக்கூட்டணியில் இணைந்தாலும்
தவறெனக் கூறும் எண்ணமுடையோர் இப்பொழுதும் பழிதூற்றுகின்றனர். அவர்களைப்
பொருட்படுத்த வேண்டா. ஆனால், தங்களுடன் இணையவில்லை என்பதற்காகப் புதிய
கூட்டணியைத் தரம் தாழ்த்திக் கூறுவது சரியல்ல.
விசயகாந்தின் இந்தமுடிவு அவர்
தெளிவாகத்தான் உள்ளார் என்பதைக் காட்டுகின்றது. அவரது ஒற்றைவரி இலக்கு
என்பது, தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும்என்பதுதான்.
அதிமுக, திமுகவில் இதற்கான வாய்ப்பிலலை.
பா.ச.க.வில் சேருவதால் பணமும் அதிகாரச்சுவையும் கிடைக்கலாம். ஆனால்,
வெற்றியைச் சுவைக்க முடியாது. மேலும் நாடாளுமன்றத்தேர்தல் முடிந்தபின்
எந்த அளவிற்கு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவிற்குப் பா.ச.க.
அவமானப்படுத்திய பின்னரும் தன்மான உணர்வின்றி அதனுடன்இணைவது மானக்கேடே! தன்மான உணர்வுடன் பா.ச.கவைப் புறந்தள்ளியது பாராட்டிற்குரியதே!
பா.ம.க.வில் முதல்வர் வேட்பாளர் அன்புமணி இருக்கையில் அங்கும் இணைய முடியாது.
எனவே, தன் ஒற்றைவரி இலக்கிற்கு இணங்கிய ம.ந.கூட்டணியில் இணைந்துவிட்டார். எனவே, பணம், பிற அதிகார வாய்ப்பைப் புறந்தள்ளி இந்த முடிவை எடுத்துள்ளார் எனலாம்.
மக்கள்நலக்கூட்டணிக்குத் தங்கள்
இருப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே இலக்கு. ஆளும்கட்சியாக
வரவாய்ப்பில்லாவிட்டாலும் கணிசமான வாக்குவங்கி உள்ள கூட்டணி என்ற நிலையை
உருவாக்கி அடுத்த தேர்தலில் முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும். ஆட்சி மாற
வேண்டும்;அதே நேரம் ஆட்சி தி.மு.க.கைக்கு மாறக்கூடாது. என்னதான் பரப்புரை
மேற்கொண்டாலும் முதன்மைக்கட்சிகளாக அதிமுகவும் திமுகவும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
எனவே, வாக்குவங்கி உள்ள தே.தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலைச்சந்திப்பது
அவர்களின் நோக்கம் நிறைவேறத் துணை புரியும். எனவே விசயகாந்துடன் இணைந்தது
தவறில்லை.
இதில் வைகோதான் பெரிதும் பாராட்டிற்குரியவர்.
ம.ந.கூட்டணி வென்றால் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்திருக்கும். அல்லது
சுழற்சிமுறையில் முதலில் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்திருக்கும். எனவே,
அதுபற்றிக் கவலைப்படாமல், கூட்டணி வாகை சூடவேண்டும் என்பதற்காக, இதுவரை முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் வழக்கம் இல்லை என்று சொல்லி வந்தாலும், கொள்கை, செயல்திறம், அரசியல்தலைவர்கள் தொடர்பு, பொதுவாழ்க்கை, சிறைவாழ்க்கை, எனப் பலவகைகளிலும் விசயகாந்தைவிட மேலான நிலையில் இருந்தாலும், விசயாந்தை முதல்வராக ஏற்பதாக அறிவித்துள்ளார்.
பிறர் எள்ளி நகையாடினாலும் உண்மையில் இது பாராட்டத்தக்கது. இருவரும்
இணைந்தால் தெலுங்கர்கள் இணைந்ததாகப் பரப்புரை மேற்கொள்வர் என்பதை
அறிந்தும், கூட்டணியின் பொது இலக்கிற்காக அவர்
இறங்கிவந்துள்ளார். இதனால் அவரையும் ம.ந.கூட்டணியிலுள்ள பிற
தலைவர்களையும் விசயகாந்து அணியினர், குறிப்பாகத் தே.தி.மு.க. முன்னணித் தலைவர்கள் எப்பொழுதும் மதிக்க வேண்டும்.
ஆனால், இந்த இணைப்பு கண்டு
நடுக்குறுவோர், முன்னிலும் உரத்த குரலில் ம.ந.கூட்டணி அதிமுகவின் ‘ஆ’ அணி
என்கின்றனர். பொதுவாகப் பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்னை முன்னேறவிடாமல்
தடுக்க, அவரது ஒழுக்கத்தைப்பற்றிக் கதைகட்டுவது வழக்கம். அதுபோல்தான்
இதுவும். மக்கள் திலகம் எம்ஞ்சியார் தி.மு.க.வை உடைத்ததில்
பேராயக்கட்சியான காங்.கின் பங்கு இருந்தது என்பது பலரது நம்பிக்கை. இதனால்,
தி.மு.க.அவரது கட்சியை ‘ஒட்டுக்காங்கிரசு’
என்றே கூறிவந்தது. காங்.கின்ஒட்டாக இருந்திருப்பினும் அதனையும்
முறியடித்துத்தான் வெற்றி வாகை சூடிப்புரட்சித்தலைவரானார் எம்ஞ்சியார்.
என்.டி.ஆர். கட்சி தொடங்கியபோதும் முரசொலியில் ஒட்டுக் காங்கிரசு என்றே
அதனைக் குறிப்பிட்டனர். அவரும் தனித்தன்மையைக் காட்டும் வண்ணம் வெற்றி
வாகை சூடினர். எனவே, ஒரு வேளை மக்கள் நலக்கூட்டணி அ.இ.அ.தி.மு.க.வின் துணை
யணியாக இருந்தாலும் அதனையும் வெல்லும் வாய்ப்பு உள்ளது. அஇ.அதிமுகவின் எதிர்வாக்குகள்மட்டுமல்ல, தி.முக.வின் எதிர்வாக்குகளையும் இக்கூட்டணி பெறும்.
எனவே, அஇஅதிமுகவின் சார்பு வாக்குகளையும் பிரிக்கும் எனலாம். மேலும்,
அஇஅதிமுக தோற்கடிக்கப்படவேண்டும் என்று மட்டும் எண்ணுபவர்கள்தான்
எதிர்வாக்கு சிதறுகிறதே எனக் கவலைப்படுவதுபோல் சொல்லித் தாங்கள் பெறும்
வாக்குகள் குறைவதுபற்றிக்கவலைப்படுவர். ஆனால், அஇஅதிமுக
தோற்கடிக்கப்படவேண்டும்; அதே நேரத்தில் அஇஅதிமுகவும் திமுகவும் மாறிமாறி
ஆட்சிக்கு வரக்கூடாது என எண்ணுபவர்கள், திமுகவும் தோற்கடிக்கப்பட வேண்டும்
என விரும்புபவர்கள் இவ்வாறு கூறமாட்டார்கள்.
அஇஅதிமுகவிற்கு எதிரான வலுவான கூட்டணியை
உருவாக்க வேண்டும் என்கிறது தி.மு.க. அப்படியானால் தான்தனித்துப்
போட்டியிடும் வலிமையுடன் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறதா?
நாம்தமிழர் கட்சி தனித்துப்
போட்டியிடுகின்றது என்றால் பெறக்கூடிய வாக்குகளெல்லாம் அதற்கு நம்பிக்கை
தருவனவே! அதன் வலிமையை மதிப்பிட உதவுவனவே! ஆகவே, வெற்றிபற்றிய கவலை இல்லை
அதற்கு! ஆனால், பா.ம.க.தனித்துப்போட்டியிடுகின்றதே! அந்தத்தன்னம்பிக்கை ஏன்
தி.மு.க.விற்கு இல்லை. கடந்த ஆட்சிகளில் செய்த தவறுகளுக்குத் தாலின்
மன்னிப்பு கேட்டது, கனிமொழி மூலம் மதுவிலக்குப்பரப்புரையை மேற்கொள்வது
போன்றவற்றால், தி.மு.க.விற்கு வாக்களிக்க முன்வந்தவர்கள்கூட அது கொலைகாரக்
காங்கிரசுடன் இணைந்ததால், தங்கள் முடிவை மாற்றிக் கொண்டனர். இருப்பினும் காங்கிரசின் துணை அணியாகத் தி.மு.க.நடந்து கொண்டு வெற்றி வாய்ப்பை இழப்பது ஏன்?
பிற கட்சிகள் பிரிக்கும் வாக்குகள் இழப்பை ஏற்படுத்தும் என்பதுதானே!
எனவே, ம.ந.கூட்டணி – தே.தி.மு.க. உடன்பாடு அதற்குப் பெரும் சரிவை
ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துள்ளது. எனவேதான், தவறான
பரப்புரைமேற்கொள்கிறது.
தனித்து நிற்பதாக வீரம்பேசும் அஇஅதிமுக,
சரத்துகுமார், மட்டந்தட்டிப் பேசியபின்னும் அழைத்துத் தன்அணியில்
சேர்த்துக் கொண்டது எனில், ம.ந.கூட்டணி – தே.தி.மு.க. உடன்பாடு அதற்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதுதானே! ஒருவேளை சரத்துகுமாரும் அக்கூட்டணியில் இணைந்துவிட்டால் என்னாவது என்ற விழிப்புணர்வும்தானே!
எனவே ஒட்டுக்காங்கிரசு எனக்
கூறப்பட்ட கட்சிகள் வெற்றி பெற்றமைபோல், அஇஅதிமுகவின் துணையணியாகக்
கூறப்படும் மக்கள்நலக்கூட்டணி – தே.தி.மு.க. அணியும் கடுமையாகப்பரப்புரை
மேற்கொண்டால் வெற்றிக்கொடி நாட்டலாம். மக்கள்நலக்கூட்டணியினர், தங்கள்
கருத்து வேற்றுமைகளைப் பொதுவிடங்களில் கூறாமை, தமிழர்நலன் கருதி
ஒத்துப்போதல், ஊழல்களை எந்தெந்த வகைககளில் குறைக்கலாம் என முன்கூட்டியே
திட்டமிடல், தமிழ்ஈழம் நலனுக்கான கடமையை மறவாமை எனத் தங்களைச்
செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிற கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள மக்கள்நலக்கூட்டணி விரிவு,
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (திருக்குறள்:642)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறும் தமிழ்நெறியைப் பின்பற்றி நாவடக்கத்துடனும் ஒற்றுமையுடனும் உழைத்தால் வெற்றிக்கனியைப் பறிக்கலாம்.
நல்லாட்சி தரும் மாற்றாட்சி அமையட்டும்! நற்றமிழ் நானிலமெங்கும் ஆட்சி செய்ய வழி வகுக்கட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 126, பங்குனி 14, 2047 / மார்ச்சு 27, 2016
No comments:
Post a Comment