ஆர்வர்டு தமிழ்ப்பீடம் தேவைதானா? – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்!
ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைக்க உள்ள தமிழ்ப்பீடத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கி.பழனிச்சாமி,
தமிழக அரசு சார்பில் பத்துகோடி உரூபாய் நன்கொடை அளித்துள்ளார். எனவே
நாமும் அவரைப் பாராட்டி நன்றி கூறுகிறோம். மக்கள் அவரை எளிதில் சந்திக்க
முடியும் வகையில் காட்சிக்கு எளியராக அவர் உள்ளமையே நன்கொடை வேண்டுகோள்
உடனே பயனித்துள்ளது எனலாம்.
இசையமைப்பாளர் அ.இர.(ஏ.ஆர்.) இரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் பெற்ற நிதியில் இருந்து கனடா நிறுவனம் ஒன்று 25000 அமெரிக்கத் தாலர் நன்கொடை அளித்துள்ளது.
தமிழ்த் திரைப்பட உருவாக்குநர் சங்கத் தலைவராகவும், நடிகர் சங்கப் பொதுச் செயலராகவும் உள்ள நடிகர் விசால் தன் சொந்தப்பணத்திலிருந்து உரூபாய் பத்து நூறாயிரம் நன்கொடை அளித்துள்ளார். தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளித் தமிழாசிரியர்கள்
தங்கள் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
உலகெங்கும் உள்ள ஆர்வமுள்ள தமிழர்களும் தமிழ் அமைப்பினரும் நன்கொடை
யளித்து வருகின்றனர். இன்னும் நன்கொடைதருவோர் உள்ளனர். அனைவருக்கும்
பாராட்டு.
தமிழ்ப்பீடம் அமைப்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் உள்ளமையும் மாண்புமிகு முதல்வர் கவனத்திற்கு வந்திருக்கலாம். எனினும் நாம் அவற்றையும் சுட்டிக்காட்டிப் பாரெங்கும் பைந்தமிழ் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
தனக்கு ஒதுக்கப்பட்ட துறையில் கருத்துடன் செயல்பட்டுத் தமிழ்வளர்ச்சியில் நாளும் கருத்து செலுத்தி வரும் அமைச்சர் மாஃபா.பாண்டியராசனும்
நன்கொடைக்குக் காரணமாவார். எனவே, இவரும் தமிழ்ப்பீடம் பற்றிய மாறுபட்ட
கருத்துகளை அறிந்து அனைவரும் ஏற்கும் வண்ணம் ஆர்வர்டு தமிழ்ப்பீடம் செயல்பட
வழி வகுக்க வேண்டும்.
சமற்கிருதத்திற்கு இப்படிப் பிச்சை எடுத்ததுத்தான் மொழிப்பீடம் தொடங்கினார்களா என்பது சிலர் வினா. என்றி வேர் வேல்சு(Henry Ware Wales) என்பவர் ஏப்பிரல் 24, 1849 இல் எழுதிய இறுதி முறியில்(உயில்) பேராசிரியப்பணியிடம் அமைக்க நிதிக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்டது. இதன்படி, ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் சனவரி 26, 1903 இல் சமக்கிருதப் பீடம் உருவாக்கப்பட்டது. அப்படியாரும் தமிழுக்குத் தனிக் கொடையாளர்கள் அமையவில்லையே! எனவே, கூட்டுமுயற்சி தேவைப்படுகிறது.
பயிற்றுவிப்பு மூலமும் படைப்புகள் மூலமும் தமிழ் பரப்பி வரும் கணிணித்தமிழின் முன்னோடிகளில் ஒருவரான அமெரிக்கா வாழ் பேரா.முனைவர் இராசம் அம்மையார், மணற்கேணி ஆசிரியரும் அரசியலாளருமான து.இரவிக்குமார் முதலான பலர் தமிழ்ப்பீடத்திற்கு எதிரான வலுவான கருத்துகளைச் சொல்லி வருகின்றனர். பேரா.முனைவர் செ.இரா.செல்வகுமார்
முதலானவர்கள் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பீடம் தேவை என்பதை
வலியுறுத்தி வருகிறார்கள். அமைப்புப்பணியைத் தொடங்கிவிட்டார்கள்.
தமிழ்ப்பீடமும் தொடங்கட்டும் என்ற நிலையில் சிலர் உள்ளனர்.
சங்க இலக்கியங்களையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள அறிஞர் வைதேகி எர்பர்ட்டு
தமிழ்ப்பீடத் தோற்றுவாய்க்கு முதன்மையாளர்களில் ஒருவராக உள்ளார்.
அவரெல்லாம் இதன் பொறுப்பிற்கு வந்தால் நல்லதுதான். ஆனால்,
அந்நாட்டவரைத்தான் பணியமர்த்துவார்கள் என்கின்றனர்.
வெளிநாட்டில் அமைந்துள்ள
பல்கலைக்கழகங்களின் தமிழ்ப்பீடங்களில் தமிழர் பணியாற்றும் வாய்ப்பு
கிடைப்பதில்லை. ஒரு வேளை கிடைத்தாலும் வெள்ளையருக்கு ஊதியம் மிகுதி.
தமிழர்க்கு மிகவும் குறைவு என்பதை இராசம் அம்மையார் அடிக்கடிக்
கூறிவருகிறார்கள்.
என்றாலும் ஆர்வர்டு தமிழிருக்கையினால் தமிழக மக்களுக்கு என்ன நன்மை அல்லது தமிழகத்து மக்களிடம் நன்கொடை பெறவேண்டும் என்றெல்லாம் வினா தொடுத்தால், எந்த நாட்டிலும் தமிழ்க்கல்வி தொடங்க இயலாது. ஆனால், அதே நேரம் தொடங்கப்பட்ட தமிழ்த்துறைகளை மூடிவிட்டுப் புதியதாகத் தொடங்குவதால் என்ன பயன்? இதுவும் சில ஆண்டுகளில் மூடப்படலாமே என அஞ்சவதில் உண்மை யில்லாம லில்லை.
ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பீடம் அமைந்தால் உலகில் தமிழின்மதிப்பு
கூடும்! உலகெங்கும் தமிழ் பரவும்! என்பது போன்ற ஆரவார உரைகள்தாம் இதற்கு
எதிரான உரைகளை முன்வைக்கத் தூண்டுகோலாக அமைகின்றன. ஏனெனில், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இப்பொழுதும் தொடக்கநிலை, இடைநிலை, உயர்நிலை என 3 நிலைகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. அதனால் என்ன மாற்றம் ஏற்பட்டது? அவ்வாறிருக்கப் புதியதாகத் தமிழைக் கற்பிக்க இருப்பதுபோல் மக்களை ஏமாற்றலாமா?
தமிழ் மட்டுமல்ல!
சமற்கிருதம், இந்தோனேசிய மொழி, வங்காள மொழி, பருமிய மொழி, இந்தி-உருது
மொழிகள், நேபாள மொழி, தாய்லாந்து மொழி, திபேத்திய மொழி ஆகியனவும்
கற்பிக்கப்படுகின்றன.
ஆர்வர்டு பல்கலைக்கழகம் தமிழைப்பற்றிக்
குறிப்பிடும்பொழுது 2000 ஆண்டு தொன்மை எனக் குறிக்கிறது. தமிழுக்குப்
பிற்பட்ட சமற்கிருதத்தை ஏறத்தாழ 3000 ஆண்டுத் தொன்மைவாய்ந்ததாகக்
குறித்துள்ளது. அது மட்டுமல்ல. ஆரியர்கள் தங்களை உயர்த்திக் கொண்டு பிறரைத்
தாழ்த்துவதற்காகத் தங்கள் மொழியைத் தேவபாடை என்றனர். இதை ஆர்வர்டு
பல்கலைக்கழகத்தளம், செழுமைவாய்ந்த இந்தமொழியின் அழகிற்காகக் கடவுளர் மொழி என அழைக்கப்படுவதாகக் குறிக்கிறது.
அதுமட்டுமல்ல, தெற்காசியாவின் நுண்மாண்
நுழைபுலம் மிக்கவராக இருக்க வேண்டுமென்றால், சமற்கிருதத்தில் புலமை
மிக்கவராக இருக்க வேண்டுமாம். மேலும், தெற்கு ஆசியாவின் செழுமையையும்
மேம்பட்ட நிலையையும் அறிய சமற்கிருதக் கல்வி முற்றிலும் வேண்டற்பாலதாம்.
தமிழ்ப்பீடம் அமைக்கச் செயலாற்றுவோர் ஆர்வர்டு பல்கலைக்ககழகத் தளத்தில் தமிழின் சிறப்பைப் பதிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
உலகில் ஏறத்தாழ 15 பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை தொடங்கப்பெற்று ஏறத்தாழ 3 பல்கலைக்கழகங்களில் மட்டுமே இப்பொழுது செயல்பாடுகள் உள்ளன.
தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா காலத்தில் சென்னை, மதுரை, அண்ணாமலைப்பல்கலைக்கழகங்களில் திருக்குறள் பீடம்(இருக்கை)
தொடங்கப்பெற்றன. அண்ணாமலையில் எப்பொழுதோ மூடுவிழா நடத்தப்பட்டு விட்டது.
இதனை உயிர்ப்பிக்காமல் செம்மொழி நிறுவனம் உரூபாய் ஒருகோடி அளித்து மற்றொரு
திருக்குறள் பீடத்தை(இருக்கையை) அமைத்துள்ளது. மதுரையில் போதிய
பொருளுதவி இன்றித் தள்ளாடுகிறது. பிற மாநிலத் தமிழ்த்துறைகளும் போதிய
பொருளுதவி இன்றி எதிர்பார்த்த பயனளிக்காமல் உள்ளன.
பேராசிரியர் பணியிடத்தை உருவாக்கும் தமிழ்ப்பீடத்திற்குச் செலவழிக்கும் தொகையில் நடைமுறையில் உள்ள தமிழ்வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் கல்வியுதவித் தொகை அளிப்பது சிறப்பாக இருக்கும். மாணவர் எண்ணிக்கைக்கேற்ற பணியிட எண்ணிக்கையையும் உயர்த்துவது நன்று.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடக்க
ஆண்டில் ஒதுக்கப்பெற்ற 85 கோடி உரூபாயைப் பயன்படுத்தாமல் போனதால் அத்
தொகையைப் பெற இயலவில்லை என்கின்றனர். இதனால் தொடர் ஆண்டுகளிலும் கோர
இயலவில்லை. செம்மொழி நிறுவனம் மூலமாக உலக நாடுகளின் அனைத்துப்
பல்கலைக்கழகங்களிலும் தமிழ் வகுப்புகள் தொடங்கவும் இணைய வழிக்கல்விக்கழகம்
மூலமாக இணைய வழித்தமிழ்க்கல்விகளை ஒருங்கிணைக்கவும் தமிழ்ப்பல்கலைக்கழகம்
உரிய பாடத்திட்டங்களை வகுக்கவும் ஆவன செய்ய வேண்டியதே இன்றைய தேவையா’கும்.
பிறநாட்டுத்
தமிழ்க்கல்விகளில் பேச்சுத்தமிழுக்கு முதன்மை தருவது நிறுத்தப்பட்டு
நற்றமிழை நலியச் செய்யும் போக்கிற்கும் முற்றுப்புள்ளி இட வேண்டும்!
இப்போதைக்கு இருக்கின்ற
தமிழ்த்துறைகளைச் செம்மைப்படுத்துவதும் தமிழ் பரவலாகப் பலநாடுகளிலும்
கற்பிக்கப்படவும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்திற்குத் திரட்டிய பொருளைச்
செலவழித்தால் தமிழ்த்தாய் அகம் மிக மகிழ்வாள்!
தமிழ்க்கல்வி : முதலில் காலூன்றுவோம்! பிறகு பறப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 211, ஐப்பசி 19-25, 2048 / நவம்பர் 05 – நவம்பர் 11, 2017
No comments:
Post a Comment