Showing posts with label akaramuthala. Show all posts
Showing posts with label akaramuthala. Show all posts

Saturday, January 25, 2020

சடங்காகிப்போன வீர வணக்க நாள்! – இலக்குவனார் திருவள்ளுவன்



சடங்காகிப்போன வீர வணக்க நாள் 


தாய்மொழியாம் தமிழ் மொழியின் உரிமை காக்கத் தீயுண்டும் நஞ்சுண்டும் சிறைப்பட்டும் உயிர்நீத்த மாமறவர்களின் நினைவைப் போற்ற சனவரி 25 அன்று வீர வணக்க நாள் நிகழ்த்துகிறோம். தமிழகக் கட்சிகள் மாவட்டந்தோறும் இதனை நிகழ்த்தத் தவறுவதில்லை. ஆனால், மொழி உரிமைக்காகப் பாடுபட்டவர்களையும் உயிரை இழந்து பாரினை நீங்கியவர்களையும் போற்றும் நாம், நாளும் மொழி உரிமை இழந்து நலிவதில் இருந்து மீள எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவ்வப்பொழுது இந்தி எதிர்ப்பு வீரர்கள் போல் கூக்ககுரலிடுவது தவிர அன்னைத்தமிழை அழிவிலிருந்து காக்க எந்தச் சிறுதுரும்பையும் எடுத்துப் போடுவதில்லை. ஒவ்வோர் இடத்திலிருந்தும் தமிழ் நீக்கப்படுவதற்கு உடன்பட்டும் அல்லது அதை அறிந்தும் எங்கும் தமிழ் எனப் போலி எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறோம்.
பிரதான் மந்திரி சுரக்சா பீம யோசனா, சீவன்சோதி பீம யோசனா, சன்தன் யோசனா, கிராம் சதக்கு யோசனா, பசல் பீம யோசனா, கிரிசி சிஞ்சை யோசனா, கிரிசி விகாசு யோகனா, அவாசு யோசனா எனத் திட்டங்களுக்கு இந்திப்பெயர்கள் சூட்டி அவையே நாடு முழுவதும் விளம்பரப் படுத்தப்படுகின்றன.
வானொலி, தொலைக்காட்சிகளில் இந்தி விளம்பரங்களே பெருகிக் கொண்டுள்ளன. விளம்பரங்களின்  நோக்கம் இந்தித்திணிப்பாகத்தான் உள்ளது. வானொலி நிகழ்ச்சிகளிலும் இந்தி ஒலிபரப்பு நேரங்கள் கூடிக் கொண்டுள்ளன. இந்தி வருவதால் அங்கிருந்த தமிழ் அகற்றப்படுகிறது; அங்கு வரவேண்டிய தமிழ் விரட்டப்படுகின்றது என்பதை உணராமல் இந்நிகழ்வுகளுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டுள்ளோம்.
மத்திய அரசின் அலுவலகங்களிலும் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் முதலான மத்திய அரசு சார் நிறுவனங்களிலும் தனியார் மருத்துவமனைகள், விடுதிகள் முதலான இடங்களிலும் ‘வணக்கம்’  மூட்டைக்கட்டி வைக்கப்பட்டுள்ளது. ‘நமசுதே’ அல்லது நமசுகார் குடி கொண்டுள்ளன.
தமிழ் நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் தனியார் அலுவலகங்களிலும் இந்தியில் எழுதத் தெரிந்தால்தான் வேலை இந்தியில் தட்டச்சிட அல்லது கணிப்பொறியில் கணியச்சிடத் தெரிந்தால்தான் வேலை என்று வேலை வாய்ப்புகளில் இந்திக்கு வரவேற்புப்பா பாடிக்கொண்டு தமிழ் விரட்டப்பட்டுக் கொண்டுள்ளது.
தமிழ் முதலான தேசிய மொழிகள் பல இந்தியாவில் இருப்பினும் இந்தி மட்டுமே தேசிய மொழியாக விளம்பரப்படுத்தப்பட்டு பிற மொழிகள் விரட்டப்பட்டுக் கொண்டுள்ளன. நாமும் சேர்ந்து தமிழை விரட்டிக் கொண்டுள்ளோம்.
இந்தி திணிக்கப்படவில்லை என்றும் இந்தி கட்டாயமாக்கப்படவில்லை என்றும் கூறிக்கொண்டே இந்திக்கல்வி தவிர்க்க இயலாததாக மாற்றப்படுகிறது. விருப்பப்பாடம் என்ற பெயரில் அதுமட்டுமே பாடம் என்று நிலை நாட்டப்படுகிறது.
தமிழின் பெருமையைக் கூறி நம்மை மகிழ்ச்சி மாயையில் ஆட்படுத்திவிட்டுத் தமிழுக்கான தடங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. நாட்டுமொழியாக மட்டுமல்லாமல் வீட்டு மொழியாகவும் இந்தி இருக்கவேண்டும் என  மத்திய ஆட்சியாளர்கள் அறைகூவிக்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து இந்தியை அப்புறப்படுத்த ஆழமான திட்டம் எதுவும்  இந்தி எதிர்ப்புப் போலி வீரர்களிடம் இல்லை.  தமிழை எல்லா இடங்களிலும் வீற்றிருக்கச் செய்யும் செம்மையான திட்டம் எதுவும் தமிழ்க்காப்புப் போலி வீரர்களிடம் இல்லை.
தமிழக ஆட்சியாளர்களிடம் தமிழ்நாட்டில் தமிழ்தான் கல்வி மொழி, தமிழே அலுவல் மொழி, தமிழ்மட்டுமே வழிபாட்டு மொழி, தமிழ் ஒன்றே இசையாக முழங்கும் என்று சொல்வதற்கும் செய்வதற்கும் துணிவு இல்லை.
திரைப்படப் பெயர்களில் கூடத் தமிழ் காணவில்லை. இதைக்கண்டும் தமிழக மக்கள் நாணவில்லை. தமிழ்ப்பெயர் சூட்டப்பட்டவன் தமிழன் என்ற நிலை மாறி, மறந்தும் தமிழ்ப்பெயர் சூட்டாதவனே தமிழன் என்ற நிலை நாளும் பெருகி வருகிறது.
தொடரிகள், கப்பல்கள், வானூர்திகள், ஏவுகணைகள் முதலான எவற்றின் பெயராயினும் இந்திவயமாக்கப்பட்ட சமசுகிருதப் பெயர்கள்தாம். மூத்த மொழியாம் தமிழுக்கு இடமில்லை. இதுகுறித்து நமக்குச் சிறுதுளி அளவேனும் வருத்தமும் இல்லை!
பெயரில் என்ன இருக்கிறது என்று எண்ணாமல் பெயரில்தான் வரலாறு, பண்பாடு, உரிமை எல்லாம் இருக்கின்றன என்பதை உணரவேண்டும். தமிழ்ப்பெயர் சூட்டப்படாத எப்பொருளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்ற நிலைப்பாட்டை நாம் உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டிலாவது தமிழ் காக்கப்படும்.
1965இல் “தமிழ் உரிமைப் பெருநடைப் பயணம் மேற் கொள்ள உள்ள பேராசிரியர் சி.இலக்குவனார் கைது செய்யப்பட இருக்கிறார் என்னும் செய்தி நண்பர் ஒருவர் மூலம் புலவர்மணி இரா.இளங்குமரன் அறிய வந்தார். இதனை அவர் தெரிவித்த பொழுது தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், தமிழ் மொழிக்காகச் சிலரேனும் பலியாக வேண்டும். அவர்களில் நான்  முதல் ஆளாக இருக்கிறேன் என்று வழக்கமான புன்முறுவலுடன் மொழிந்தார்.” (செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார், பக்கம் 79) அத்தகைய நெஞ்சுரம் படைத்த, மாணாக்கர்களையும் தமிழ் அன்பர்களையும் வழி நடத்தக்கூடிய தமிழ்ப்பேராசிரியர் ஒருவரும் இன்று இலரே அத்தகையோரை உருவாக்க வேண்டியது வீர வணக்கம் கொண்டாடுவோர் கடமையல்லவா?
அன்னைத்தமிழ் அனைவருக்கும்உரியதே அன்றி  ஒரு தரப்பாருக்கு மட்டும் உரியதல்ல! தமிழ் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் அமைப்பினர் அந்தக் குரல் பொதுமக்களிடமிருந்து எழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். ஒட்டு மொத்தத் தமிழினமும் தமிழுக்காகக் குரல் கொடுத்தால்தான் அது நிறைவேறினால்தான் நாம் தமிழ் மொழிக்காவலர்களுக்காக உண்மையில் வீர வணக்கம் செலுத்தியவர்கள் ஆவோம்.
மொழிப்போரில் உயிர் நீத்தவர்கள், உடலூறு நேர்ந்தவர்கள், துயரங்களைச் சந்தித்தவர்கள் உழைத்தவர்கள் முதலானோர் வழியில் செல்லாமல், நாமே மொழி அழிப்பிற்குத் துணை நிற்கின்றோம். அப்படியானால், மொழிப்போர் ஈகியருக்கான வீர வணக்க நாள் என்பது வெற்றுச்சடங்குதானே!
வீர வணக்க நாள் கொண்டாடுநரே! அன்று ஒருநாளாவது இந்தி எதிர்ப்புப் போரில் களப்பலியானவர்கள் குடும்பத்தினரை, மரபு வழியினரைச் சந்தித்துச் சிறப்பியுங்கள். அவர்களுக்குத் தேவையான கல்வி, வேலைவாய்ப்பு முதலியவற்றை அளியுங்கள். அவர்கள் யாரையும் சாராமல் தலைநிமிர்ந்து வாழும் வகையில் உதவுங்கள்!
தமிழ்க்காப்புச் செயல்களில் கட்சி, மதம், அமைப்பு முதலிய எவ்வேறுபாடின்றியும் அனைவரும் ஈடுபட வேண்டும். தமிழர் வாழும் நிலப்பகுதிகளில் எல்லாம் மத்திய அரசு இந்தித்திணிப்பை நிறுத்திவிட்டுத் தமிழ் கற்பிக்கவும் வளர்க்கவும் வகை செய்ய வேண்டும்.
தமிழ் நாட்டிலும் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையேயும் அயல்மொழிகளின் திண்பிற்குச்சிறிதும் இடம் இல்லாச் சூழலை உருவாக்க வேண்டும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது பேச்சு என்பதை தாண்டிச் செயலாக்கப்பட வேண்டும். தமிழுக்குரிய தலைமைநிலையைத் தந்து உண்மையான வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.
மொழிப்போர் ஈகியர்களே! உங்கள் கனவுகளை நனவாக்குவோம்!
பாருள்ளளவும் பைந்தமிழும் இருக்கும். பைந்தமிழ் உள்ளளவும் உங்கள் புகழும் நிலைத்து நிற்கும். உங்கள் எண்ணங்களும் நினைவுகளும் எங்களை என்றென்றும் வழி நடத்தட்டும்!
வீர வணக்கத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல தை 11, 2051 / 25.01.2020

Tuesday, November 26, 2019

மாவீரர்களைப் போற்றுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

மாவீரர்களைப் போற்றுவோம்!

மாவீரர் நாள் 1989இல் அறிவிக்கப்பட்டு அப்பொழுது முதல், நவம்பர் 27இல் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழீழ அமைப்பில் வீர மரணம் அடைந்த முதல் போராளி சங்கர் என்ற செ.சத்தியநாதன் வீரமரணம் அடைந்த நாள் அது..
மாவீரர் நாளைத் தேசியக் கொடியை ஏற்றியும் ஈகைச் சுடர் ஏற்றியும் மாவீரர்களின் குடும்பத்தினரைச் சிறப்பித்தும் கடைப்பிடித்து வருகின்றனர். தொடக்கத்தில் ஈகைச்சுடரை நள்ளிரவு 12.00 மணிக்கு  ஏற்றினர். பின்னர் மாவீரர் சங்கர் புகழுடல் எய்திய நேரமான மாலை 6.05 மணிக்கு ஏற்றி வருகின்றனர். பொதுவாகப் பொதுவெளியில் மிகுதியும் உரையாற்றாத தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் மாவீர் நாளின் பொழுது உரையாற்றுவார். மாவீரர் உரையை உலகெங்கும் உள்ளவர்கள் கேட்கும் வகையில் ஒலி பரப்பவும் செய்வர்.
கார்த்திகைத் திங்களில் பூத்துக் குலுங்குவதால் கார்த்திகைப் பூ என அழைக்கப்பெறும் காந்தள் பூவே தமிழீழத் தேசியப் பூ. காந்தள் பூக்களால் மாவீரர்கள் துயிலுமிடங்களை அணிசெய்வர். அவரவர் இல்லங்களிலும் மாவீரர்களின் படங்களை வணங்கி அஞ்சலி செய்வர். உலகின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் செயற்கையாக அவர்களுக்கான துயிலிடங்களை அமைத்து அங்கே வணங்குவர்.
மாவீரர் நாளில் மக்கள் எடுக்கும் உறுதிமொழி வருமாறு
மொழியாகி,
எங்கள் மூச்சாகி – நாளை
முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை
உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடு இங்கு
துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்
தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி!”
புதுவை இரத்தினதுரையால் இயற்றப்பட்ட மாவீரர் நாள் பாடல் மாவீரர்நாள் அன்றும் போராளிகள் இறுதிச் சடங்குகள் அன்றும் ஒலிக்கப்படும். வருணராமேசுவரன் பாடிய இப்பாடலை மாவீரர் நாளில் ஈகச்சுடர் ஏற்றும் பொழுது பாடுவர். போராளிகளின் இறுதிச்சடங்கின் பொழுதும் பாடுவர். அப்பாடல் வருமாறு
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிறதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிறதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
       எல்லா நாட்டினருமே தத்தம் நாட்டு விடுதலை நாளின் பொழுது தம் நாடடிற்காக மடிந்தவர்களைப் போற்றி வருகின்றனர்.  முதல் உலகப்போர் முடிவடைந்த நவம்பர் 11 ஆம் நாளை, அமெரிக்கா, ஆத்திரேலியா, கனடா, பிரித்தானியா முதலான பல நாடுகளும் படைவீரர் நினைவு நாளாகக் கொண்டாடுகின்றன. இசுரேல் விடுதலை நாளைத் தேசிய வீரர்கள் நாளாகக் கடைப்பிடித்து வருகிறது. ஆத்திரேலியப் பழங்குடி மக்கள் நாட்டு நலன்களுக்காக மடிந்தவர்களை நவம்பர் 27அன்றுதான் நினைவுகூர்கின்றனர். மூத்த இனமான தமிழினம் தொன்றுதொட்டே நடுகல் நட்டு வீரர்களைப் போற்றி வருகின்றது.ஆனால், இலங்கையில் சிங்கள அரசு இந்நாளுக்கு இடையூறு விளைவிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது.
இலங்கையின் புதிய தலைவர், கோத்தபய இராசபச்ச,  மாவீரர் நாளை நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏறபடாத வகையில் நினைவுகூரத் தெரிவித்துள்ளார். ஆனால் செயல் ஈழத்தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. மாவீரர் துயிலும் இல்லங்களில் மிகுதியான படைத்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். படைத்துறை வண்டிகள் அங்குமிங்குமாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மாவீரர் நினைவுத் தூண்களும் நடுகற்களும் படைத்துறையினரால் அகற்றப்பட்டு வருகின்றன. மாவீரர் துயிலகங்களுக்கு வரும் மக்களை ஒளிப்படம் எடுத்து நாளை அவர்களுக்கு இன்னல் வரும் என மறைமுகமாக அச்சுறுத்துகின்றனர். இவ்வாறு பன்னாட்டு ஒலிபரப்பு அவையம் (மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தினர் அடாவடி!, IBC Tamil ) தெரிவிக்கிறது. மாவீரர்களின் புதைகுழிகளையே வீரத்தலைமுறைகளை விளைவிக்கும் விதை குழிகளாக எண்ணும் மக்களுக்கு இந்த அச்சுறுத்தல் ஒன்றும் செய்யாது. என்றாலும் உலகெங்கும் உள்ள பழக்கமான நீத்தார் வணக்கத்தை எதிர்த்துத் தமிழர்களுக்குப் பகை முகம் காட்ட வேண்டா என இலங்கை அரசை  வேண்டுகிறோம்.
“….. வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்கால நல்வாழ்வின்றிச் சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம்.  . . .”
மாவீரர் நாள் உரை  2004
தமிழரின் தேசியத் தனித்துவத்தை  ஏற்று, அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்தளித்து, அவர்களை அரவணைத்து வாழச் சிங்களத் தேசம் மறுத்து வருகிறது. இலங்கை  விடுதலையடைந்த காலம் தொட்டு, கடந்த 57 ஆண்டுகளாக இந்த அரசியற் புறக்கணிப்புத் தொடர்கிறது. வேண்டப்படாத இனத்தவராக, ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டுப், புறந்தள்ளி வைக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து சலித்துப்போன தமிழர், சிங்கள ஆட்சியமைப்பையும் அதன் அதிகாரபீடத்தையும் ஒதுக்கிப் புறக்கணிக்கத் தீர்மானித்து விட்டனர்.”
– மாவீரர் நாள் உரை  2005
தமிழீழ அரசைச் சிறப்பாக நடத்தி வந்தவர் மேதகு பிரபாகரன். பயங்கரவாத அமைப்பு அல்ல அவர் நடத்தியது. முப்படை கொண்டு அரசாட்சி செய்து வந்தார். ஆனால், துணை நிற்க வேண்டிய பிற நாட்டு விடுதலைகளுக்காகக் குரல் கொடுக்கும் நாடுகளும் அண்டை நாடுகளும் தமிழர்க்கு எதிரான செயற்பாடுகளில் தொடர்ந்து இருப்பதால், பேரழிவை உருவாக்கி நூறாயிரக்கணக்கான மக்களைச் சிங்கள அரசுடன் இணைந்து கொன்று விட்டன.
தமிழின் தொன்மை, இலங்கை முழுவதும் தமிழர்க்கு உரிமையாக இருந்த வரலாறு, ‘தமிழீழம் தமிழர்களின் தாயகம்’ என்ற உண்மை முதலானவற்றைப்  பெரும்பான்மைத் தமிழர்கள் அறியவில்லை. இந்த உண்மை உலக மக்களால் உணரப்படும் பொழுதுதான் தமிழ் ஈழம் உதயமாகும். எனவே, உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள், தமிழ்மொழியிலும் தாங்கள் வாழும் பகுதிகளில் உள்ள மொழிகளிலும் வரலாற்று உண்மையை விளக்கும் பணியில் ஈடுபட வேண்டும். இதுவே மாவீரர்களுக்குச்செலுத்தும் உண்மையான வணக்கம் என்பதைப் புரிந்து கொண்டு தொண்டாற்ற வேண்டும். அறிவாயுதத்தை ஏந்திச் செயல்பட்டுப் பன்னாட்டு அவைகளில் ஈழக்கொடி பறக்கும்  நாளை விரைவில் கொண்டுவர வேண்டுகிறோம்!
போர்க்களங்களிலும் தாய் நிலத்திலும் உயிர் நீத்த வீரர்களுக்கும் மக்களுக்கும் ‘அகரமுதல’ இதழின் வீர வணக்கம்!
உங்கள் உணர்வுகள் உலகத்தமிழர்களுக்கு வழி காட்டட்டும்!
அந்த ஒளியில் விடுதலை ஒளி வீசட்டும்!
வீர வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை,அகரமுதல

Monday, August 12, 2019

ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை!

ஒப்பிலக்கியம் அல்லது ஒப்பியல் இலக்கியம் என்பது இலக்கிய ஆராய்ச்சிகளில் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
அமெரிக்க இந்தியானா பல்கலைக்கழகப் பேராசிரியர் எச்.எச்.இரீமாக்கு ((H.H.Remack), “ஒப்பிலக்கியம் என்பது ஒரு நாட்டின் இலக்கியத்தை இன்னொரு     நாட்டு இலக்கியத்தோடு     ஒப்பிடுவது; இலக்கியங்களுக் கிடையேயான உறவுகளை ஒரு பக்கமும், குமுகாயவியல் தத்துவம் போன்ற துறைகளை இன்னொரு பக்கமுமாக ஒப்பிட்டுக் கூறுவது ;  இலக்கியத்திற்கும், இசை, ஓவியம், கூத்து போன்ற கலை வடிவங்களுக்குமிடையேயான உறவுகளைக் கூறுவது”  என்கிறார்.
 பொதுவாக ஒரு நாட்டு அல்லது ஒரு மொழி இலக்கியத்துடன் அடுத்த நாட்டு அல்லது அடுத்த மொழி இலக்கியத்தை ஒப்பிடுவதைத்தான் ஒப்பிலக்கியம் வலியுறுத்துகிறது. ஆனால், பின்னர் ஒரே மொழியில உள்ள இலக்கியங்களை அதே மொழியிலுள்ள இலக்கியங்களுடன் ஒப்பிடுவதும் ஒப்பிலக்கியத்திற்குள் அடங்கலாயிற்று. ஒப்பீடு இரண்டுக்கு மேற்பட்ட இலக்கியங்களுடனும் அமையலாம்.
 தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் பக்கம் எண் 142-இல் மொழிகளின் தொன்மை வரலாற்றைக் குறித்து விளக்கப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சமசுகிருதம் கி.மு.2000 ஆண்டுகள் பழமையானது என்றும் தமிழ் கி.மு.300 ஆண்டுகள்தான் பழமையானது என்றும் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல உலக மொழிகள் அனைத்திலும்தொன்மையானது சமசுகிருதம் என்று வேண்டுமென்றே தவறாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதனை அறிந்ததும் கல்வியாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் நடுநிலையாளர்களும் கொதித்து எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். உடன் பள்ளிக்கல்வி யமைச்சர் செங்கோட்டையன் தமிழ்மொழியின் தோற்றம் குறித்த தவறான பாடப்பகுதி நீக்கப்படும் என்றும் தவறான தகவலைச் சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். உடன் நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.
 ஆனால் மதிப்பிற்குரிய மற்றோர் அமைச்சர் “பா...வின் தாள் பணிதலேமுதன்மைதமிழைத் தாழ்த்தினால் நமக்கென்ன” என்று கருதுகிறாரோ என மக்கள் எண்ணும் வகையில் கருத்துகள் தெரிவித்துள்ளார்.  “தமிழ், சமற்கிருதம் இவற்றில் எது மூத்தது எது சிறந்தது என்ற  அருததமற்ற ஆய்வை விட்டுவிடுங்கள்” என அவர் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறார்.  எல்லாக் கட்சிகளிலும் ஆதரவாளர்கள் உள்ளவர் என்றும் வினைத்திறம் மிக்கவர் என்றும் கருதப்படும் அவர், தெரிவித்த கருத்துகள் ஒப்பிலக்கியத்திற்கு முரணானவை.
 இலக்கியமோ மொழியோ எதுவாயினும் கால முதன்மை குறித்த ஆராய்ச்சி அவற்றை முழுமையாக ஆராய்வதற்கு அடிப்படையாக அமைகிறது. காலஆராய்ச்சியைத் தவிர்க்கும் மொழி ஆராய்ச்சி முழுமை யற்ற்தாக மட்டுமல்லதவறானதாகவும் இருக்கும். சான்றுக்கு நாம் இராமாயணத்தை எடுத்துக் கொள்வோம்.
 இராமாயணக் காலம் கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கும் – கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது என்பதே சரியான முடிவாகும். புத்தர், புத்த சமயத்தவர், புத்த பீடங்கள் முதலானவை பற்றிய குறிப்புகளின் அடிப்டையில் வரலாற்று நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாகும் இது.
 ஆனால், இராமாயணம் திரேதாயுகத்தில் நடந்ததாக ஆரியப்புனை கதை கூறுகிறது. இக்கற்பனையின்படி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன. கால ஆராய்ச்சியின் மூலம்தான் இது தவறு என்று மெய்ப்பிக்கப்படுகிறது.
‘இராமாயணம் ஓர் ஆய்வு’  நூலாசிரியர் கே. முத்தையா குறிப்பிடுவதுபோல் ஆராய்ச்சியாளர்கள் பலர், இராமாயணம் குறிப்பிடும் இலங்கா என்பது இலங்கை அல்ல என்றும் இராமன் முதலான எவரும் விந்திய மலைக்குத் தெற்கே வரவில்லை என்றும் கூறுகின்றனர்.
 கி.பி.1010-1050 ஆண்டுகளில்  உருவான சம்பூர்ண இராமாயணம் வரையிலும் இன்றைய இலங்கை பற்றிய எக்குறிப்பும் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 
 அதுபோல் திரேதாயுகததின் கடைசி ஆண்டில் பிறந்திருந்தாலும் இராமன் 8,69,110 ஆண்டுகளுக்கு முன்னர்ப் பிறந்தவன் ஆகிறான். ஆனால் அவன் பிறந்ததாகக் கூறப்படும் அயோத்தி கி.மு.700இல்தான் உருவானது. இதனை மத்திய அரசின் தொல்பொருள் துறை 1976-77 இல் ஆய்வு செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இக்குறிப்பை அம்சத்து வலைப்பூவில் (amjat.blogspot.com)காணலாம். தவறான இராமாயணக் கால அடிப்படையில் தமிழ் இலக்கியங்களின் காலங்களைத் தவறாக மதிப்பிடும் போக்கு வந்ததல்லவா? ஆகச் சரியான ஆய்விற்குச் சரியான கால ஆய்வும் தேவை அல்லவா?
பரிதிமாற்கலைஞர் வி.கோ.சூரியநாராயண(சாத்திரியா)ர்  ஆரியர் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் புகும் முன்னரே மேலை நாட்டு ஆரியர்களுடன் தமிழர் கடல்வழி வாணிகம் மேற்கொண்டு இருந்தனர் என்கிறார். இந்த முடிவிற்கு அவர் கால ஆராய்ச்சியையே அடிப்படையாகக் கொண்டார்.
இத்தகைய கருத்துகளைத் திருப்பூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாசக தகவல் தொழில்நுட்பம்-சமூகஊடகப்பிரிவும் முகநூலில் குறிப்பிட்டுள்ளது(08.06.2018). எனவே, பா...என்பதால் வரலாற்றுத் திரிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றல்ல. நடுநிலையாகவும் செயல்படலாம் என்பதற்கு இது சான்றகும்.
பரிதிமாற் கலைஞர் ஆரியர்கள் தமிழ் இலக்கியங்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்து அவ்வோலைகளைப் பழமையானவைபோல் காட்டி அவ்றறிலிருந்து தமிழில் இலக்கியங்கள் எழுதப்பட்டன என்று தவறாக நிறுவுவதை மெய்ப்பித்துள்ளார். வேண்டுமென்றே தமிழ் இலக்கியக்காலங்களைப்பின்னுக்குத் தள்ளுவதையே ஆரியர்கள் கடமையாகக் கொண்டுள்ளதால்தமிழ்சமற்கிருத ஒப்பாய்வில் கால ஒப்பீடு இன்றியமையாதுவேண்டப்படுகிறது.
 இப்பொழுது கூறுங்கள். தமிழின் காலத்தை வேண்டுமன்றே ஒரு மொழியினர் பின்னுக்குத் தள்ளுவதையே வாணாள் கடமையாகக் கொண்டு வாழும் பொழுது மொழிகளின் காலங்களைச் சரியாகக் குறிப்பிட்டுத்தானே ஆக வேண்டும்! இலக்கியக் கருத்துகள் சொல்லப்பட்ட காலங்கள் அடிப்படையில் பெருமைஉறுகின்றன என்னும் பொழுது கால ஆராய்ச்சியும் கால ஒப்பீடும்தேவைதானே! இலக்கிய ஆராய்ச்சியின் முழுமைக்குக் காலஆராய்ச்சி தேவை என்பது மறுக்க முடியாத உண்மைதானே!
ஒரு மொழி எழுத்திலக்கியம் பெற்றிருக்க வில்லை என்றால் முழுமையடைந்த மொழியாகாது. சமற்கிருத மொழியினர் இன்றைய இந்தியா என்று சொல்லப்படும் தமிழ்நிலத்திற்கு வந்த பின்னர்தான் தமிழ் எழுத்து வரிவடிவத்தைப் பார்த்துத் தங்கள் நெடுங்கணக்கு – எழுத்து – வடிவங்களை அமைத்துக் கொண்டனர். அவ்வாறு தமிழுக்குப் பிற்தைய சமற்கிருத மொழியைத் தமிழுக்குமுந்தையதாகத் தவறான காலக்குறிப்பை அளித்தால் அது தமிழுக்குச்செய்யும் கொடுமை அல்லவா?
எனவே இதுபோன்ற தவறுகளைத் தவறல்ல என்று சொல்லி ஊக்கப்படுத்தாமல் பள்ளிக் கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுப்பதுபோல் எடுத்துக் குறைகளைக் களைய வேண்டும். மொழிகளின் உண்மையான காலத்தையும் தமிழின் தொன்மையையும் குறிப்பிடும் பாடங்கள் எல்லா  மொழிப் பாடங்களிலும் இடம் பெற வேண்டும்.
மொழியின் சிறப்புக்கும் சிறுமைக்கும் அவ்வம்மொழிகளின் இலக்கியப் படைப்புகளே உரைகல்லாக அமையும்.
 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.(திருவள்ளுவர், திருக்குறள் 505)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல



Followers

Blog Archive