இராசீவு கொலைவழக்கில் எஞ்சிய அப்பாவிகள் அறுவரும் விடுதலை
இராசீவு கொலைவழக்கில் சிக்கித் சிறைத் துன்பத்தில் உழலும் எஞ்சிய அறுவரை உச்சநீதி மன்றம் இன்று (ஐப்பசி 25, 2053 / 11.11.2022) விடுதலை செய்தது.
இராபர்ட்டு பயசு, செயக்குமார், சுதேந்திர இராசா(சாந்தன்), இரவிச்சந்திரன், சிரீஅரன் (எ)முருகன், நளினி ஆகிய அறுவரின் நலிந்த உடல்நிலை, சிறைவாழ்க்கையில் மேற்கொண்டுள்ள நன்னடத்தை, கல்வி, படைப்புகளில் ஈடுபடல் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சட்டப்படியும் மனித நேயத்துடனும் மூன்று தலைமுறையாகச் சிறைவாழ்க்கையில் துன்புறுவதைக் கருத்தில் கொண்டும் பேரறிவாளனை விடுதலை செய்த வழியில் இந்த அறுவரையும் நீதிபதிகள் விடுதலை செய்துள்ளனர். வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரிய உச்சமுறைமன்ற நீதிபதிகள் பூசன் இராமகிருட்டிண கவை(Bhushan Ramkrishna Gavai), பெ.வெ.நாகரத்தினா (Bangalore Venkataramiah Nagarathna) ஆகிய இருவரும் சட்டப்படி ஆராய்ந்து தமிழ்நாட்டரசின் பரிந்துரையையும் ஏற்றும் இது தொடர்பிலான தமிழ்நாட்டு ஆளுநரின் முறையற்ற செயலைக் குறிப்பிட்டும் விடுதலை அளித்துள்ளனர்.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் எக்குடே, கோபால் சங்கரநாராயணன் ஆகியோரும் தமிழ்நாட்டு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் இராகேசு திவேதியும் வழக்காடி வாகை சூடியுள்ளனர். அவர்களுக்குப் பாராட்டுகள். இவர்கள் விடுதலை தொடர்பில் சட்ட நீதி கிடைக்கப்போராடிய வைக்கோ முதலான தலைவர்களுக்கும் மக்களியக்கம் நடத்திய ப.நெடுமாறன் முதலிய தலைவர்களுக்கும் நன்றியுடன் பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம்.
இப்போதைய அரசு அமைந்ததும் முதலில் தமிழ்க்காப்புக் கழகம் இந்திய அளவிலான தமிழ்ச்சங்கங்களைக் கூட்டி வாழ்த்தரங்கம் நடத்தியது(வைகாசி 09, 2052 / ஞாயிறு / 23.05.2021). அதில் அப்போதைய மாநிலங்களவை உறுப்பினர் மதிப்புமிகு தி.கோ.சீ. இளங்கோவன் அவர்களும் மகிழ்வுடன் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள். இக்கூட்டத்தல் முதல்வரை வாழ்த்திய அனைவரும் அப்பாவிகள் எழுவரையும் விடுதலை செய்ய முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதைத் தமிழ்க்காப்புக் கழகமும் முதல்வருக்குத் தெரிவித்தது.
தமிழ்க்காப்புக் கழகம் சார்பில் அவ்வப்பொழுது இவர்களின் விடுதலைக்கும் விடுதலை வரைக்கும் காப்பு விடுப்பிற்கும் முறையீடுகள் அனுப்பப்பட்டன. ஒரு முறை சென்னை உயர் நீதி மன்றத்தில் எழுவருக்கும் எதிராக அரசின் வாதுரை அமைந்ததும், அப்போதைய முதல்வர் செயலலிதா அம்மையாரின் சட்டமன்றப்பேச்சிற்கும் கருத்திற்கும் எதிராக இஃது அமைந்துள்ளது எனச் சுட்டிக்காட்டி வாதுரையைத் திரும்பப்பெற்றுப் புதிய வாதுரை அளிக்க வேண்டினோம். முதல்வர் அதனை ஏற்றுத் தமிழக வரலாற்றிலேயே (எங்குமுள்ள அரசுகளின் வரலாற்றிலேயே) முதன் முறையாக வாதுரையைத் திரும்பப்பெற்று இவர்களின் விடுதலைக்குச் சார்பான புதியவாதுரையை அளித்தனர். இவ்வாறு தமிழ்க்காப்புக்கழகம் இவர்கள் சார்பில் சிறிதளவு பணியாற்றியமையை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியுடன் விடுதலையை வரவேற்கிறது.
‘அகரமுதல’ இதழில் இவர்கள் விடுதலையை வேண்டிப் பலமுறை கட்டுரைகள் எழுதியுள்ளோம். பிறரின் கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டுள்ளோம். சட்ட அறிவே இல்லாமல் இவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, “எழுவர் விடுதலை: முன்விடுதலை என்பது சட்டப்படியானதே! எதிர்ப்பவர்கள் சட்ட மறுப்பர்கள்!”, “வாணாள் தண்டனையும் எழுவர் விடுதலையும்”, “எழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக!” போன்ற என் கட்டுரைகள் தினசரி, தமிழ் இந்தியன் எக்குசுபிரசு, தாய் முதலான பிற இதழ்களிலும் வந்துள்ளன. தினமணியிலும் தினமலரிலும் கருத்தூட்டங்களும் அளிக்கப்பட்டன. ஈழம் வெல்லும்! காலம் சொல்லும்!, கனவல்ல தமிழீழம்! ஆகிய என் நூற்களிலும் எழுவர் விடுதலை தொடர்பான கருத்தூடடங்களும் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
உச்சநீதி மன்றம் அளித்துள்ள விடுதலையால் உலகத்தமிழர்களும் உலக மனித நேயர்களும் உவகை கொள்கின்றனர்.
இப்போதைய தீர்ப்பிற்கு அடிப்படையாய் அமைந்த தீர்மானத்தை இயற்றிய சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கும் முதல்வர் மு.க.தாலின் அவர்களுக்கும் சட்டத்துறை, உள்துறை முதலான துறையினருக்கும் பொதுவாகத் தமிழக அரசிற்கும் நம் பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறோம்.
இனி இவர்களின் வாழ்வு – மறுவாழ்வு – புது வாழ்வு – சிறப்பாக அமைய அரசு துணை புரிய வேண்டும். எழுவருக்கும் குறைந்தது ஒவ்வொரு கோடி உரூபாயும் அவர்களின் வாழ்முறைக்கு உதவிகளும் அளிக்க வேண்டும். பெயர் ஒற்றுமையின் காரணமாகச் சிக்க வைக்கப்பட்ட சாந்தனுக்குக் கூடுதல் பொருளுதவி அளிக்க வேண்டும். இவ்வழக்கில் பொய்யாவணங்களை உருவாக்கியும் வேறு வகையிலும் அநீதி நிகழக் காரணமாக இருந்த அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் தண்டிக்கப்படவேண்டும். திர்ப்பிற்கு எதிராக யாரும் முழங்கினாலோ போராட்டத்தில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலையாக எண்ணிக்கொண்டிருக்கக்கூடிய மடுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டில் குழப்பத்தை விளைவிக்க முயலலாம். உளவுத்துறை கவனமாகக் கூர்ந்தறிந்து நாட்டில் அமைதி நிலவக் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இசுலாமியர் என்ற காரணத்திற்காக நெடுங்காலம் சிறையில் உள்ள பிறரையும் 14 ஆண்டுகளுக்கு மேல் எஞ்சியுள்ள பிறரையும் விடுதலை செய்யவும் தேவையெனில் நீண்டகாலக் காப்பு விடுதலை வழங்கவும் முதல்வரை வேண்டுகிறோம்.
தமிழ்த்தேசிய அமைப்புகள், பன்னாட்டு அமைப்புகள், ஈழ ஆதரவு அமைப்புகள், அயலகச் சட்ட அறிஞர்கள், உலகளாவிய மனித நேயர்கள்,ஊ்டகங்கள், குமுகாயத் தளங்கள், தமிழகக் கட்சிகள், இன்னும் பிற வகையினர் என எல்லா வகையிலும் விடுதலைக்குக் குரல் கொடுத்தவர்கள். பரப்பியவர்கள், உதவியவர்கள் அனைவருக்கும் நம் பாராட்டுகள்!
எழுவர் வாழ்க்கையிலும் துன்பம் அகன்று இன்பம் நிலைத்து நன்னெறியில் மகிழ்ச்சி பரவட்டும்
மகிழ்ச்சியுடனும் பாராட்டுகளுடனும் இலக்குவனார் திருவள்ளுவன்
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. (திருவள்ளுவர், திருக்குறள் 117)
அகரமுதல – இதழுரை
ஐப்பசி 25, 2053 / 11.11.2022
No comments:
Post a Comment