Showing posts with label இதழுரை. Show all posts
Showing posts with label இதழுரை. Show all posts

Tuesday, September 29, 2026

ஆட்சி நிலைக்க இடைத்தேர்தல்களில் த.வெ.க.வாகை சூடட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்



வரும் அட்டோபர் 6 அன்று மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள்அடிப்படையில் கணக்கிட்டு யார் வெற்றி பெறுவார் எனக் கணிப்பது வழக்கம். ஆனால் பொதுத்தேர்தலுக்கும்  இடைத்தேர்தலுக்கும் இடையில் கட்சி அணிகள் இடம் மாறியதால் அதற்கேற்பவே கணக்கிட வேண்டும்.

 பொதுத்தேர்தலின்போது இருந்த கூட்டணிக் கட்சிகள் இன்றைக்குத் தி.மு.க. கூட்டணியிலும் அதிமுக கூட்டணியிலும் இல்லை. அதே நேரம் த.வெ.க. கூட்டணி புதிய கட்சிகளை இணைத்துள்ளது. இதனால் அமைந்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வலுவாக உள்ளது. இருப்பினும் மக்கள் மனநிலையை யாரே அறிவார்?

இச்சூழலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். இரண்டுதொகுதிகளும் த.வெ.க. வென்ற தொகுதிகள் அல்ல. எனவே, முன்பை விட வாக்குகள் கூட பெற்றாலே அதற்கு வெற்றியாகத்தான் கருத வேண்டும். ஆனால் வெற்றிக்கனியைப் பறிக்காமல் விட்டு விட்டால் த.வெ.க.விற்கு மாபெரும் தோல்வி என்றுதான் ஊடகத்தினர் ஊதித் தள்ஞவார்கள். முதல்வர் ச.சோ.விசய்க்கு மாபெரும் தோல்வி என்று கூறி ஆட்சியைக் கலைக்க வேண்டும் அல்லது முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கூக்குரலிடுவார்கள்.

இது தமிழ்நாட்டின் அமைதியான சூழலுக்கு இடையூறாக அமையும்.  ஐந்தாண்டு முடிவின் பொழுதுதான் ஆட்சிக்கான முழுப் பருவத் தேர்வு நடைபெறும். அப்பொழுதுதான் மக்கள் ஆட்சியை அகற்றலாமா நீடிக்கச் செய்யலாமா என முடிவெடுப்பர். அதுவே இயற்கையாகும். ஆட்சியில் அமர்ந்த சில திங்களிலேயே ஆட்சி மா்றறம் பற்றிக் கூறுவது முறையல்ல. தான் பொதுத்தேர்தலில் வெற்றி பெறாததொகுதி என்றாலும் த.வெ.க.விற்குத் தோல்வி வந்தால் அவ்வாறு கூறாமல் அக்கட்சிக்கான மாபெரும் தோல்வி, விசய்க்கான வீழ்ச்சி, மக்கள் திருந்தி விட்டார்கள், மாயைஅகன்று விட்டது படச்சுருள்(ரீல்சு) சுருண்டு விட்டது, உண்மை (ரியல்) வெளிவந்து விட்டது என்றெல்லாம் பரப்புவார்கள். த.வெ.க. வெற்றி பெற்றாலும் உண்மையான வெற்றியாகக் குறிப்பிடாமல் அதிகார வலிமையால்  பெற்ற வெற்றி என்றுதான் கூறுவர். கூறிவிட்டுப் போகட்டும். ஆனால் ஆட்சிக் கலைப்பு என்ற கூக்குரல் சற்று அடங்கும். தமிழ்நாட்டின் நன்மைக்குத் தேவை நிலையான ஆட்சி. எனவே, இவ்விரு தொகுதிகளிலும்த.வெ.க. வெற்றி பெறுவதுதான் அதற்கு ஏற்ற வழியாகும்.

இத்தேர்தல்களில் பொதுவுடைமைக் கட்சிக்ள ஒவ்வொன்றும் ஆயிரம் வாக்குகள் அளவில்தான் பெறுவார்கள் என நம்பப்படுகிறது. ஒருவேளை தி.மு.க. வாக்குகள் கிடைத்தால் சில ஆயிரம் பெறலாம். இவ்வாறு அவர்கள் தோல்வியைத் தழுவுவதும் நிலையான ஆட்சிக்கான வழிதான். ஏனெனில் நடுநிலையாகக் கூறுவதாக விளம்பரப்படுத்திக் கொண்டு, இன்னும் பழைய கூட்டணியிலேயே இருக்கும் அவர்களை மக்கள் நம்பவில்லை. இதற்கு அவர்கள் முந்தைய கூட்டணியிலேயே இருந்திருக்கலாமே என்றுதான் கருதுகின்றனர். நாள்தோறும் – அதிலும் குறிப்பாக மார்க்குசியப் பொதுவுடைமைக் கட்சியின் அறிவிப்பு அல்லது செவ்வி வரும் பொழுது அதன் உண்மைத் தன்மையைப் பார்க்காமல் அக்கட்சிக்கு எதிரான எண்ணம்தான் மக்களிடையே எழுகிறது. எனவே, அவர்கள் மண்ணைக் கெளவுவதன் மூலம் அதற்கு விடை கொடுத்தாற்போல் அமையும். அதுவும் இத்தேர்தலின்  மக்கள் வெற்றியாக அமையும்.

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௯௱௮௰௮ – 988)

“மக்கள் ஆதரவின்மை  என்பது இழிவாகாது, சால்பு என்னும் வலிமைப் பண்பைப் பெற்றால்” என்பதைத் தி.மு.க.வும் உணரவேண்டும். தலைமைக்கு இருக்கும் ஆங்கிலப்பித்து, இந்தித்திணிப்பை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு தாங்கள் நடத்தும் கல்வி நிலையங்கள் மூலம் இந்தியைத் திணித்தல் போன்ற குறைகளை அகற்றச் சிந்தித்துத் தமிழ், தமிழர் நலன் குறித்துக் கூடுதலாகச் செயலாற்ற வாய்ப்பு வந்ததாகக் கருத வேண்டும். இன்னும் மூன்று ஆண்டுகளேனும் தேர்தலைப்பற்றி எண்ணாமல், அதற்கடுத்த தேர்தலுக்கு முந்தைய ஈராண்டுகளில் மட்டும் அது குறித்துச் சிந்தித்துச் செயலாற்றினால் நல்லன நடைபெறலாம்.

தான் வென்ற தொகுதிகளிலேயே வெற்றி வாய்ப்பை இழப்பது அதிமுகவின் தோல்வியல்ல, தலைமையின் தோல்வி என்பதை உணர்ந்து அதன் திறன்மிகு கட்சித் தலைமை தன்னைத் திருத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும்.

பா.ச.க.வும் தமிழ்நாட்டிற்கு எதிராகவும் இயற்கை நீதிக்கு மாறாகவும் உள்ள செயற்பாடுகளைக் களைய ஒரு வாய்ப்பு கிடைத்ததாக எண்ணி அது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒவ்வொரு தொகுதியை மற்ற கட்சிக்கு விட்டுக்கொடுத்தால் அது த.வெ.க.விற்குத்தான் பயன்தரும்.

குதிரை பேரம் என்னாவது என்கிறீர்களா? குதிரை பேரம் மூலம் ஆட்சிகளை அமைத்து நடத்திக் கொண்டிருக்கும் பாசகவும் அதன் தோழமைகளும் அதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரவித்து முற்றுப்புள்ளி வைக்காத பிற எதிர்க்கட்சிகளும் அதனைக் கூறத் தகுதியுண்டா?

தேர்தலில் போட்டியிட இருந்த த.வெ.க. வேட்பாளரையே குதிரை பேரத்தால் ஒளியச் செய்த அதிமுகவிற்கு இது குறித்து என்ன தகுதி உள்ளது?  மாற்றுக் கட்சியினரைத் தன் கட்சிச் சின்னத்தில் போட்டியிடச்செய்து அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் திமுகவிற்கும் என்ன தகுதி உள்ளது? இதற்கு முந்தைய பல தேர்தல்களும் குதிரை பேர முன் வரலாற்றைக் கூறுமே!

த.வெ.க. வேட்பாளர்கள் இருவரும் கட்சி மாறி வாக்களிக்கவில்லை. கட்சியின் செயற்பாடு பிடிக்காமல் விலகி வந்துள்ளனர். இப்பொழுது மக்கள் அவர்களை வெற்றி பெறச்செய்தால் மக்கள் இவர்கள் செயற்பாடுகளை ஏற்றுக்கொண்டதாகும். அவ்வாறாயின் குதிரை பேரம் எங்கே வரும்?

வேட்பாளர்களைப் பொதுமக்கள் விரட்டியடிக்கிறார்கள் என்கிறீர்களா? பொதுமக்கள் போர்வையில் எதிர்க்கட்சியினர் விரட்டியடிக்கச் செய்வதும் ஆனால், விரட்டப்பட்டவர்கள் வெற்றி பெறுவதும் முந்தைய தேர்தல்களில் நாம் பார்த்தவைதாமே! இவற்றை யெல்லாம் பொருட்படுத்தவேண்டா!

 ஆக ஒட்டுமொத்தமாகத் த.வெ.க.வின் வெற்றி என்பது அனைத்துக் கட்சிகளுக்கும் நன்மையே விளைவிக்கும். எனவே, பொதுமக்கள் சிந்தித்து அளிக்கும் வாக்குகளால் த.வெ.க. வெற்றிக் கனிகளைப் பறித்து ஆட்சி நிலைப்பை உறுதி செய்யட்டும்!

  • இலக்குவனார் திருவள்ளுவன்
  • இதழுரை, அகரமுதல, புரட்டாசி 13, 2057 / 30.09.2026



Monday, September 14, 2026

Deepfake – ஆழேய்ப்பு எனலாம் -இலக்குவனார் திருவள்ளுவன்



இப்போது செய்திகளில் அதிகம் இடம் பெறும் சொல் ‘டீப் பேக்’ என்பது. நல்ல செய்தி என்பதையே ‘குட்நியூசு’ எனக் குறிப்போர் இதனைத் தமிழில் குறிக்க வேண்டும் என எண்ணமாட்டார்கள். எனினும் படிப்பவருக்குப் புரியும் வகையில் தமிழில் சொல்வதே முறை.

 டீப் பேக்  அல்லது டீப்ஃபேக் – Deepfake – என்றால் என்ன?

டீப்ஃபேக் (Deepfake) என்பது செயற்கை நுண்ணறிவு (AI) எனப்பெறும் நுண்மாண்புலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உண்மையில் நடக்காத ஒரு நிகழ்வை, ஒருவர் பேசியது, செய்தது, அல்லது ஏதும் நடந்தது போன்ற தோற்றத்தைப்போலியாக உருவாக்கி ஏமாற்றும் எண்ம ஊடகம் ஆகும். இது படமாகவோ கேட்பொலியாகவோ காணொளியாகேவா இருக்கலாம். இதன் நோக்கம் தொடர்புடையவருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதே. ஆனால் நேரடியாகப் பழித்துக் கூறாமல் தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் மக்களை ஏய்ப்பதே இதன் விளைவு.  பொய்யை மெய்யென்று மக்கள் நம்புவதன் மூலம் உரியவருக்குக் களங்கம் விளைவதை மக்கள் புரிந்து கொள்வதில்லை.

 இது குறித்து விரிவாக அறிய விரும்புவோர் இணையத் தளங்கள் வாயிலாக எழுத்து வடிவிலோ பேச்சு வடிவிலோ காணுரை வடிவிலோ அறிந்து கொள்ளலாம். சொல்லாக்கத்திற்கு இந்த அளவே போதுமானது.

ஆழ் கற்றல்(Deep Learning) என்பதையும் ஏய்ப்பு(Fake) என்பதையும் இணைத்து Deepfake சொல் உருவாக்கப்பட்டுள்ளது.

fake என்றால் ஏமாற்று; ஏய்ப்பு; கள்ளத்தனம்; போலச் செய்; போலி; போலித்தனம்; புரட்டு எனப் பொருள்கள். ஒருவருக்கு அல்லது ஓர் அமைப்பிற்கு அவதூறு கற்பிப்பதன் மூலம் மக்களை ஏய்க்கின்றனர். இவற்றுள் ஏய்ப்பு என்னும் சொல் இங்கே மிகவும் பொருத்தமானது. எனவே Deepfake என்றால் ஆழ் ஏய்ப்பு >  ஆழேய்ப்பு எனலாம்.

ஆளை ஏய்ப்பது – ஆளேய்ப்பு எனத் தவறாகப் புரிந்து கொண்டு பயன்படுத்தக் கூடாது. ஆழ்கல்வியைப் பயன்படுத்தி ஏய்ப்பதால் ஆழ்ஏய்ப்பு என்கிறோம். ஆள்ஏய்ப்பு என்பது எண்ம ஊடக வழி அல்லாமல் மோசடி செய்தும் இரண்டகம் புரிந்தும் ஏமாற்றுவதாகும். ஆழேய்ப்பு என்பது எண்ம ஊடகத்தைப் பயன்படுத்திப் பொய்யை மெய்யாகக் காட்டி ஏய்ப்பதாகும்.

வங்கக் கவிஞர் இரவீந்திரநாத்து தாகூர், “கப்பல் நங்கூரம் பாய்ச்சி கடலிலேயே நின்று விட வேண்டும். கரை கடந்து நாட்டிற்குள் வர இயலாது. ஆனால், கப்பலிலுள்ள பொருட்கள் நாட்டிற்குள் வரும்.  அயல்மொழியும் அப்படித்தான் நாட்டிற்கு வெளியேயே நின்று விட வேண்டும். அதுகூறும் கருத்துகள்தாம் நாட்டிற்குள் வர வேண்டும்” என்று பொருள்படும் வகையில் கூறியுள்ளார்.

 எனவே, அயல்மொழிச் சொற்கள் நாட்டிற்குள் புகக் கூடாது. அச்சொற்கள் உணர்த்தும் பொருள் மட்டும் தாய்மொழி வடிவில் நாட்டிற்குள் வரவேண்டும்.  எனவே, செய்திகள், விளம்பரங்கள், ஊடகங்கள் வாயிலாக அறியப்பெறும் அயற்சொற்களை நாட்டு எல்லையிலேயே நிறுத்தி விட்டு அவற்றிற்கான தமிழ்ச்சொற்களையே நாட்டில் உலவ விட வேண்டும்.

இதற்கான பணியைத் தமிழ்வளர்ச்சித் துறை செய்யலாம். ஆனால், அதற்கான நேரமோ தக்கவர்களோ இத்துறையில் இல்லை. எனவே, அரசே, தமிழ்க்காப்பிற்கான சொல்லாக்கக் குழு ஒன்றை நிறுவ வேண்டும். ஆனால், விடுமுறை நாட்களையும் மாறுதல் ஆணைகளையும்கூட ஆங்கிலத்தில் வெளியிடும் உயர் அதிகாரிகள் ஊதியம் வாங்குவது ஆங்கிலக் காதலுக்காகத்தானே!  அவர்கள் எப்படித் தமிழ்நலப்பணி யாற்றுவார்கள்?

மாண்புமிகு முதல்வர் ச.சோ.விசய், எல்லா இடங்களிலும் நீக்கமறத் தமிழே பரவியிருக்க

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிவீரராம பாண்டியன் வழியிலே பின்வருமாறு சொல்வோம்:

பொய்யுடை ஒருவன் ஊடகவன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே!




Monday, May 25, 2026

 

முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய்க்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!- இலக்குவனார் திருவள்ளுவன்



தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றியைப் பொறுக்க மாட்டாதவர்கள் மக்கள் ஆதரவில் வெற்றி பெற்றதாக் கூறவில்லை; பொய்மையில் பிறந்த வெற்றி என்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை விரும்புபவர்கள் அதற்காகச் சொல்லப்படும் காரணங்களில் ஈடுபாடு காட்டவில்லை. மக்கள் ஆதரவால் மக்கள் நட்சத்திரம் வெற்றி பெற்று மக்கள் முதல்வர் ஆனதாக மகிழ்கின்றனர்.

த.வெ.க.வின் வெற்றியை விரும்பாதவர்கள், தாங்கள் விரும்பிய கட்சியின் தோல்வியால் அதிர்ச்சியடைந்தவர்கள், தாங்கள் ஆட்சியில் செய்த தவறுகளை உணராதவர்கள் திரைப்படமாயையால்தான் ஆட்சியில் அமர்ந்ததாகக் கூறி வருகிறார்கள். கூறி வருவது மட்டுமில்லை. அவ்வாறு எண்ணித் தங்களையே ஏமாற்றிக் கொண்டுள்ளார்கள். த.வெ.க.வெற்றிக்கான காரணங்களில் திரைப்பட மாயையும் ஒன்று. ஆனால், அது மட்டுமே காரணமில்லை. வெற்றி தோல்வி இயற்கை என்பதை உணர்ந்து தோல்வியை மக்கள் முன்னிலையில் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருந்தாலும் அவர்களின் உள்ளம் அதனை ஏற்கவில்லை. உண்மையை உணர்ந்து கொள்ளா இச்சூழல் அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லாது.

இந்நேர்வில் முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய் அமைதி காப்பதும் நன்றே. அவருக்குத் தங்கள் பக்கம் இருக்கும் குறைகளும் தவறுகளும் தெரியும். அதே நேரம் தாங்கள் சொன்ன வாக்குறுதிகளும் தாங்கள் நிறைவேற்றிவரும் திட்டங்களும் என்னென்ன என்றும் அறிவார்.

பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கும் அரசில் பங்களித்துள்ளமையை கட்சிச்சார்பின்றி அனைவரும் பாராட்டத்தான் செய்கின்றனர். மக்கள் நலச் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டி வரும் முதல்வருக்குப் பாராட்டுகள்.

முதல்வருக்கு என்றென்றும் பாராட்டு மாலைகள் குவியவும் உலக அளவில் நிலையான புகழ் பெறவும் தமிழுக்கும் தமிழர்க்கும் செய்ய வேண்டிய நிலையான செயல்கள் பல உள்ளன. அவற்றுள் சிலவற்றை விரைந்து நிறவேற்ற வேண்டுகிறோம்.

கட்சி வலியுறுத்தும் கொள்கைகளில் ஒன்றாக இருமொழிக் கொள்கை குறிக்கப்பெற்றுள்ளது. தேர்தல் அறிக்கையிலும் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இருமொழியில் ஒன்றான ஆங்கிலம் உலகத்திற்கான இணைப்பு மொழியாகத்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சி மாறினாலும் ஆங்கில ஆட்சி மாறவில்லை என்பதே நடைமுறையாக உள்ளது. தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ள அனைத்து மாறுதல் ஆணைகளும் ஆங்கிலமாகத்தான் உள்ளன. தமிழுக்கு இடமில்லா நிலையே தொடர்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்வதை அரசு கொள்கையாகக் கடைப்பிடித்து வருகிறது. இதனைக் காரணம் காட்டியே இடமாற்றங்கள் அளிக்கின்றனர். ஆனால் இதனைத் தலைமைச்செயலகத்தில் கடைப்பிடிக்காமையால் பணிச்சுணக்கம், விதி மீறல்கள், இவற்றால் பணியாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாதல், இவற்றால், அரசிற்கு எதிரான வழக்குகள் குவிதல் போன்ற பலவும் நேர்கின்றன. எனவே, முதற்கட்டமாகப் பணியாளர் மேலாண்மைத் துறை, நிதித்துறை, பொதுத்துறைகளில் பணியாற்றும் அனைவரையும் உடனடியாக மாற்றுதல் வேண்டும். புதிய செயலர்கள் வந்தாலும் இத்துறைகளில் முன்னரே பணியாற்றுவோர் அவர்களையும் திசை திருப்பிவிடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்களுள் நல்லவர்களும் வல்லவர்களும் உள்ளனர். எனினும் செல்லாக்காசினர். எனவேதான் தீமைகள் தொடர்கின்றன. பிற துறைகளில் உள்ள அதிகாரிகள், பணியாளர்களையும் உடன் மாற்ற வேண்டும். பணியிடமாற்றங்கள் மேற்கொள்ளும் பொழுது தமிழ் வளர்ச்சித்துறையில் தமிழில் பட்டம் பெற்றவர்களையே மாற்றி அமர்த்த வேண்டும்.

தமிழ் ஆட்சி மொழித்திட்டத்தைச் செயற்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே ஆணைகள் உள்ளன. அவற்றை மீண்டும் மீண்டும் அறிவிப்பதால் பயனில்லை. எனவே, முதன்முறையாக ஆங்கில ஆணைகளுக்குக் காரணமான உதவிப்பிரிவு அலுவலரில் இருந்து செயலர் வரை உள்ள அனைத்து அலுவர்களுக்கும் குறைந்தது ஓராண்டேனும் ஊதிய உயர்வு நிறுத்த வேண்டும். இவ்வாறு தண்டனை பிறப்பித்தால்தான் பிறருக்கும் தண்டனை மீதான அச்சம் வரும். எனவே, உடனடியாகத் தமிழாட்சிமொழித் திட்டத்தைச் செயற்படுத்தாதவர்கள் மீது நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியேனும் ஆங்கிலக் காதலர்கள் திருந்த வேண்டும். ஆங்கில ஆட்சியை நிலை நிறுத்தியதால் ஆட்சியை முந்தைய ஆள்வோர் இழந்தனர். அவ்வாறில்லாமல் தமிழாட்சியை நிலை நிறுத்துக.

எல்லா இடங்களிலும் தமிழுக்கும் தமிழாய்ந்த தமிழர்க்கும் முதன்மை தர வேண்டும்.

தமிழ்க்கல்வியகங்களுக்கும் தமிழ்த்துறைகளுக்கும் தமிழ் இருக்கைகளுக்கும் தர வேண்டிய நல்கைகள் தரப்படாமல் உள்ளன. அவற்றை நிலுவையின்றி வழங்கித் தொடர்ந்து நல்கை வழங்கப்படவும் ஆவன செய்ய வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த்துறை தொடங்க வேண்டும்.

உலகப் பல்கலைக்கழகங்கள் மூலமாக அந்தந்த நாட்டு மொழிகள் மூலமாகத் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் வாயிலாக அஞ்சல்வழி மூலமாகப் பிற மொழிகள் வாயிலாகத் தமிழ் கற்பிக்க வேண்டும். 

இன்னும் பல வேண்டுகோள்கள் உள்ளன. அவ்வப்பொழுது தெரிவிக்கலாம். எனினும் தமிழ்மொழிக்குத் தலைமை யளிப்பதற்கு முதலிடம் தர வேண்டும்.

மக்கள் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ள முதல்வர் மக்கள் நட்சத்திரம் ச.சோ.விசய்க்குப் பாராட்டுகள். தமிழ் நலச்செயற்பாடுகளே தலையாய பணிகள் எனக் காெண்டு செயற்படுமாறும் வேண்டுகிறோம்.

Wednesday, May 13, 2026

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர் முறை தேவை – இலக்குவனார் திருவள்ளுவன்



தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும்  மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே. எனவே, இது முழுமையான மக்கள் மன்றமாக உள்ளது.

தற்போது, இந்திய மக்களவையில் (Lok Sabha) நியமன உறுப்பினர்கள் யாரும் இல்லை. 104-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2019-இன் மூலம், ஆங்கிலோ-இந்தியன் சமூகத்தினரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கும் முறை 2020 சனவரி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

மக்களவையில் நியமன உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும், மாநிலங்களவையில் (Rajya Sabha) கலை, இலக்கியம், அறிவியல்,  குமுகத் தொண்டு போன்ற துறைகளில் சிறந்த பன்னிருவரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கும் முறை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமேலவை 1921 முதல் செயற்பட்டு வந்தது.   நவம்பர் 1, 1986-இல் அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் ம.கோ.இரா.(M.G.R.)வால் கலைக்கப்பட்டு, மேலவை முறை நீக்கப்பட்டது. எல்லா மாநிலங்களிலும மேலவை இருந்த நிலைமாறி, இப்பொழுது ஆந்திரப்பிரதேசம், பீகார், கருநாடகா, மகாராட்டிரம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில்மட்டும்தான் மேலவை உள்ளது.

மேலவையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது கீழவையில் உணர்ச்சிகரமாக எடுக்கப்படும் முடிவுகளை அமைதியாக ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க மேலவை துணை புரியும் என்பர். அரசியல் கட்சிகளின் உணர்ச்சிப்பூர்வமான முடிவுகள் அல்லது அவசரச் சட்டங்களுக்கு எதிராக, மேலவை ஒரு பாதுகாப்புத் திரையாகச்     செயற்பட்டு, சட்டங்களை மறு ஆய்வு செய்ய வழிவகுக்கிறது. கீழவையில் அரசியல் காரணங்களுக்காக விவாதங்கள் தடைப்பட்டாலும், மேலவையில் ஆழமான, அரசியல் சார்பற்ற விவாதங்கள் நடத்த வழி வகுக்கப்படலாம்.

சூடான பானத்தைக் குவளையும் தட்டும் கொண்டு அருந்தும் பொழுது குவளையில் சூடாக இருக்கும் பானம் தட்டில் ஊற்றப்பட்டு குடிக்கும் பக்குவத்திற்குச் சூடு தணிந்த  நிலையில் இருக்கும். இதுபோன்ற செயற்பாடுதான் மேலவையின் செயற்பாடு என்று அருமையாகப் பேரறிஞர் அண்ணா கூறுவார். அஃதாவது கீழவையைக் குவளை என்றும் மேலவையைத் தட்டு(Cup and saucer)  என்றும் ஒப்பிட்டுக் குறிப்பார்.

ஆனால், அத்தகைய செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். தேர்தல் அரசியலை எதிர்நோக்க இயலாத அறிஞர்கள், வல்லுநர்கள்,  கல்வியாளர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், கலை, இலக்கியம், குமுகப்பணிகளில் சிறந்தவர்கள், தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல், மேலவை உறுப்பினர் (MLC) ஆகப் பங்கேற்கும் வாய்ப்பு நின்று விட்டது. என்றாலும் அவ்வப்பொழுது மேலவையை மீள அறிமுகப்படுத்துவது குறித்து விவாதங்கள் எழுவது வழக்கமாக உள்ளது.

மேலவைக்கான வாய்ப்பு இல்லாத நேர்வில் இத்தகையோருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சட்ட மன்ற உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் 234 உறுப்பினர்கள் உள்ள்னர். இதில் ஏறத்தாழ  10 விழுக்காட்டிற்கு ஒப்பாக 25 நியமன உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இதன் மூலமாக இத்தகையோர் சட்ட மன்றத்திற்குள் வந்து பங்களிக்க முடியும்.

மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படும் எனலாம். மாநிலங்களவைக்கு ஒன்றிய அரசு பரிந்துரைப்வர்களைத்தான் குடியரசுத் தலைவர் நியமிப்பார்.  இங்கு மாநில அரசின் பரிந்துரையை ஏற்காமல் ஒன்றிய அரசின் முகவராகச் செயற்படும் ஆளுநர் மாநில அரசின் பரிந்துரைகளைப் புறக்கணிக்கும் வாய்ப்பே மிகுதியாக உள்ளது. எனவே, நியமன உறுப்பினர் முறை அறிமுகப்படுத்தப்படும்பொழுது அதற்கான அதிகாரத்தை முதல்வருக்கு வழங்க வேண்டும்.

மாநிலத் தகவல் ஆணையரை எதிர்க்கட்சித்தலைவரை உறுப்பினராகக் கொண்ட முதல்வர் தலைமையிலான குழு முடிவு செய்து ஆளுநருக்குப் பரிந்துரைக்கும். அதுபோல் இங்கும் ஒரு குழுவை அமர்த்தலாம். ஆனால், முதல்வருக்கே நியமன அதிகாரம் அளிப்பின் சட்டப்பேரவை முன்னவர், எதிர்க்கட்சித்தலைவர்,  மாநில அமைச்சர் ஒருவர் அடங்கிய குழு முதல்வருக்குப் பரிந்துரைக்க வேண்டும். பரிந்துரைக்கப்படுபவர்கள் தமிழுணர்வும் தமிழ்நாட்டுணர்வும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஆதலின், சட்டப்பேரவையில் நியமன உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கான தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் நிறைவேற்றி உரியவாறு தொடர் நடவடிக்கை எடுத்து ஆவன செய்ய வேண்டும்.

ஆங்கிலோ இந்தியர் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை யெனில் அவர்களில் ஒருவரை நியமிக்கும் முறை தமிழ்நாட்டில் இருந்தது. ஆனால், இந்திய அரசியல் யாப்பின் 104 ஆவது திருத்தச் சட்டம் (2020) நடைமுறைக்கு வந்ததும் இந்தியா முழுவதும் இந்நியமன முறை நீக்கப்பட்டதால் தமிழ்நாட்டிலும் நீக்கப்பட்டது. ஆனால் அஃது இட ஒதுக்கீடு முறையில் மேற்கொள்ளப்பட்டது. எனவே, இந்நியமன முறைக்கு அரசியல் யாப்பில் திருத்தம் தேவையில்லை.

அறிவுரை கூறின் ஏற்கத்தக்கவராக மாண்புமிகு முதல்வர் ச.சோ.வி்சய் உள்ளமையால் அவரும் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் சா.கி்.தே.(J.C.D.) பிரபாகரும் விரைந்து நடவடிக்கை எடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.

வல்லுநர்கள் பங்களிப்பில் சட்டப்பேரசை மிளிரட்டும்!

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்.  

(திருவள்ளுவர், திருக்குறள் ௪௱௪௰௧ – 441)

Tuesday, December 31, 2024

எத்தனை ஆண்டுகள் பிறந்தால் என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்

 


     

ஃஃஃ01சனவரி 2025  அகரமுதல



எத்தனை ஆண்டுகள் பிறந்தால் என்ன?

இலக்குவனார் திருவள்ளுவன்

எத்தனை ஆண்டுகள் பிறந்தால் என்ன? எள்ளத்தனைத் துயரமும் முடியவில்லை. ஆண்டுகள் முடிந்தாலும் துயரங்களுக்கு முடிவில்லையே! பல நாடுகளில் போர்கள். அதனால் வேறுபல நாடுகளிலும் போர்களால் பாதிப்புகள். உலகெங்கும் போர் அச்சுறுத்தல்கள். “கெட்டபோரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்” என்னும் பாவேந்தர் பாரதிதாசன் குரல்போல் பலரும் குரல் எழுப்பத்தான் செய்கின்றனர். ஆனால் போர்களுக்கு முடிவில்லையே!

அணுக்குண்டுகளின் அழிவுகளைப் பார்த்த பின்னும் அணுக்குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றனவே! போர்களில் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என எல்லாத் தரப்பு மக்களும் கொல்லப்படுகின்றனரே! பிற உயிரினங்களும் அழிக்கப்படுகின்றனவே! நாடுகளின் வளங்களும் சிதைக்கப்படுகின்றனவே! போர்கள் புத்தாண்டிலும் தொடரும் பொழுது அதனை வரவேற்றுப் பயன் என்ன?

உலகின் ஒரு பகுதியில் மக்கள் வறுமையால் நாளும் மடிகின்ற பொழுது மற்றொரு பகுதி மக்கள் ஆடம்பரத்தில் திளைக்கும் சமநிலையற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்காத சூழலில் புத்தாண்டை வரவேற்கலாமா? எல்லார்க்கும் எல்லாம் என்னும் நிலை வராத பொழுது புத்தாண்டு வந்தால்தான் என்ன பயன்?

பல நாடுகளில் புலம்பெயர் மக்கள் விரட்டியடுக்கப் படுகின்றனர். புலம்பெயர் மக்களை வரவேற்று வாழ்வளித்த கனடாவிலேயே இந்த நிலை என்னும் பொழுது, இதனால் பெரிதும் பாதிப்புறுவோர் தமிழர்களாக இருக்கும் பொழுது வாட்டுகின்ற வருத்தத்தைப் போக்குகின்ற நிலை வராமல் புத்தாண்டு வந்து என்ன பயன்? ஈழத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலை வேறு வடிவுகளில் தொடரும் பொழுது அவற்றை முறியடிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் ஊக்கப்படுத்துகின்றனர். நாமோ வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம். இந்நிலைக்கு இறுதி வராத பொழுது ஆண்டு இறுதி வந்து புதிய ஆண்டு தொடங்குவதில் என்ன மகிழ்ச்சி உள்ளது?

உலக மக்கள் தொகையில் தமிழ் மக்கள் தொகை குறைவாகவே காட்டப்படுகிறது. உண்மைக் கணக்கை யறிந்து நாம் விழிப்புணர்வு பெறாத பொழுது புத்தாண்டு கண்டு மகிழ என்ன உள்ளது?

தமிழ்நாட்டிலும் பிற நாடுகளிலும் உள்ள தமிழர்கள் தமிழறியாத் தமிழர்களாகப் பெருகிக் கொண்டே இருக்கும் பொழுது புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதில் என்ன பயன்?

 நாடுகளுக்கிடையேதான் போர் என்றால் நாடுகளுக்குள்ளேயும் போர். இன, மத, சாதி, ஊர், பிரிவினை முதலிய சண்டைகள்,  -கலவரங்கள்.  

தமிழ்நாட்டில் இக்கலவரங்களுடன் மொழிக் கொலைஞர்களும் உலாவந்து அரசோச்சுகின்றனரே! பேச்சிலும் தமிழ்க் கொலை! எழுத்திலும் தமிழ்க்கொலை! படிப்பிலும் தமிழ்க்கொலை! படைப்பிலும் தமிழ்க்கொலை! முத்தமிழால் புகழ் பெற்ற தமிழில் இயலிலும் தமிழ் இல்லை! இசையிலும் தமிழைத் தொலைத்து விட்டனர்! நாடகத்திலும் தமிழைச் சிதைத்து விட்டனர்! வழிபாடுகளில் கேட்டால்தான் தமிழ் என்ற பொய்க்கோலம். தமிழ்நாட்டில் இசை என்றால் தமிழிசைதான் என்றில்லாமல் தமிழிசையும் பாடப்படலாம் என்ற சூழலே மேலோங்கியுள்ளதில் மாற்றமில்லை. மாற்றமில்லாச் சூழல் மாறாத பொழுது மாறிவரும் ஆண்டிற்கு வாழ்த்துப் பா இசைத்து என்ன பயன்?

“எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்!” என்பது தமிழ் வளர்ச்சித்துறையின் முழக்கமாக உள்ளது. ஆனால், “எண்ணுவோம் ஆங்கிலத்தில்! எழுதுவோம் ஆங்கிலத்தில்!” என்பது பிற துறைகளின் செயற்பாடாக உள்ளது. இவர்களைத் தட்டி வீழ்த்த வேண்டிய தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வம் காட்டிக் கொண்டே இவர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துகிறது.

ஆண்டுகள் மாறினாலும் இந்த நிலையில் மாற்றமில்லை என்னும் பொழுது வருகின்ற ஆண்டை வரவேற்றுப் பயன் என்ன?

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.   (திருவள்ளுவர், திருக்குற௨௱௨ – 202)

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

நடைமுறைப் புத்தாண்டுச் சிந்தனைகள்

இதழுரை, அகரமுதல

மார்கழி 17, 2055 / 01.01.2025




Thursday, October 5, 2023

தமிழ்ப்பாரதம் – இந்தியாவா? பாரதமா? – 1 தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(இந்தியாவா? பாரதமா? – 1 தொடர்ச்சி

)

தமிழ்ப்பாரதம்

முந்தைய கட்டுரையில் பரதம் அல்லது பாரதம் என்பது தமிழ்ச்சொல் எனக் கூறியிருந்தோம். இதற்கான தமிழிலக்கிய மேற்கோள்களையும் காட்டியிருந்தோம்.  இன்று வரையுள்ள அனைத்து மேற்கோள்களையும் காட்டினால் பக்கங்கள் பெருகும்.

“பாரத நாடு பழம் பெரும் நாடு,  பாரதப் பூமி பழம்பெரும் பூமி, பாரத நாடு பார்க்கெலாம் திலகம், பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ?, பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர், வாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியை, பாரத தேசமென்று பெயர் சொல்லுவார், வாழிய பாரத மணித்திரு நாடு, பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை,  பாரத தேவி, சயசய பாரதம், எமது பரத கண்டம், எமது பரதநாட்டுப் பெண்” எனப் பலவாறாகப் பாரதம் என்று பாரதியார் குறிப்பிடுகிறார்

தமிழ்த்தாய் வாழ்த்தில், “திகழ் பரத கண்டம்” என்கிறார்  மனோண்மணியம் சுந்தரனார்.

இவ்வாறு நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். விரிவஞ்சி இத்துடன்விடுக்கின்றோம். விரும்புவோர் இணையவழித் தேடி அறிந்துகொள்க.

காலுடுவெல் ‘பரத கண்ட புராதனம்’ என்ற ஒரு தமிழ் ஆய்வு நூலை எழுதியிருக்கிறார்(1893). இதனையும் அறிய வேண்டுகிறோம்.

இந்தியா என்பது ஆங்கிலேயர் சூட்டியது. எனவே வேண்டா என்கின்றனர் ஆங்கில மொழிக்கு அடிமையாகவும் ஆங்கிலேயர் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவோராகவும் உள்ள சிலர். ஆங்கிலேயர் தம் ஆட்சியெல்லைக்குள் வந்த நிலப்பகுதிகளை இணைத்து இந்தியா என்றது உண்மைதான். எனினும் இப்பெயர் அவர்களால் சூட்டப்பட்டதன்று. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததுதான். தமிழில் சிந்து என்றால் நீர் என்றும் நீர்ப்பரப்பு மிகுந்த கடல் என்றும் பொருள். இவைபோல் நீரோட்டம் மிகுந்த நீர்ப்பரப்பு சிந்து ஆறு எனப்பட்டது. இதனடிப்படையில் சிந்து>சிந்தியா>இந்தியா என வந்ததாகக் கூறுவர். சிந்து ஆற்றுப் பகுதி நம் தமிழர்கள் நாகரிகத்துடனும் பண்பாட்டுடனும் வாழ்ந்த பகுதி. எனவே இதனடிப்படையில் வந்திருந்தாலும் இது தமிழ் நிலத்தைக் குறித்ததாகவே கொள்ள வேண்டும்.

கிரேக்கச் சொல்லான ‘இண்டிகா’ என்பதிலிருந்து  இந்தியா என்னும் பெயர் வந்ததாகக் கூறுவர். மெகசுதனிசின் (Megasthenes) (கிமு 350 – கிமு 290)  நூல் ‘இண்டிகா’ என்பதைச் சான்றாகக் கூறுவர். இலத்தீனின் ஒலிபெயர்ப்புச் சொல்லாகப் பயன்படுத்தியதாகவும் கூறுவர். சிந்து> சிந்தியா>சிண்டியா>சிண்டிகா>இண்டிகா என மருவியிருக்க வேண்டும் என்கின்றனர்.

வடக்கே புகுந்த ஆரியர்களைப் பார்த்து “திருடன்,திருடன்” என்னும் பொருளில் “இந்து, இந்து” என மக்கள் கூவியதாகவும் இப்பெருசியச் சொல்லே நிலைத்துவிட்டதாகவும் கூறுவர். இந்து என்றால் திருடன் என்பதைப் பழம் நூல்கள் குறிப்பதாகப் பெரியார் ஈ.வெ.இராமசாமி ஐயாவும் பேசியுள்ளார். தமிழ்நாட்டரசின் மதமாற்றத் தடைச்சட்டத்தைக் கண்டித்து 24.10.2002 அன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி “இந்து என்றால் திருடன் எனப் பொருள்” இருந்ததாகக் குறிப்பிட்டார்.  இதற்கு மதவாதிகளிடமிருந்து  வலுத்த எதிர்ப்பு வந்தது. தெ.சை.சி.நூற்பதிப்புக் கழகத்தின் வினா விடை நூலொன்றிலும் இச் சொல் விளக்கம் குறிக்கப் பெற்றுள்ளது. இவ்வாறு கூறுவதால் இப்பொழுதும் அதே பொருளில் பயன்படுத்தப்படுவதாகவும் இந்துக்கள் யாவரும் திருடர்கள் என்று கூறுவதாகவும் கருதக் கூடாது. அது சொல் வந்த வரலாறு. அவ்வாறு வந்த இந்து என்பதிலிருந்து இந்தியா வந்ததாகவும் கூறுவர்.

“இந்தியா அஃதாவது பாரதம்” என இந்திய அரசியல் யாப்பே கூறும் பொழுது பாரதம் என்பது தீண்டத்தகாத சொல்லல்ல. பேராய(காங்கிரசு) ஆட்சி, அதன் கூட்டணி ஆட்சி, பாசக ஆட்சி, அதன் கூட்டணி ஆட்சி என ஒன்றியத்தில் யார் ஆட்சி செய்தாலும் இந்தியா என்பதற்கு இந்தி முதலிய பிற மொழிகளில் மாற்றுச் சொல்லாகப் பாரதம் என்பதையே கையாள்கின்றனர். இந்தி அகராதியிலும் இந்தியா என்பதற்குப் பொருளாகப் பாரதம்(பாரத்) என்றே குறிக்கப் பெற்றுள்ளது. ஒன்றிய அரசின் அமைப்புகள் அனைத்தும் பாரத்து பெயர்தாங்கியே உள்ளன. இசுடேட் பாங்கு ஆப் ந்தியா என்பதும் தமிழ் முதலான பிற மொழிகளில் பாரதிய வங்கி என்றுதான் குறிக்கப்பெறுகிறது. பாரதிய மகிளா வங்கியும் அவ்வாறுதான் இந்திய மொழிகளில் குறிக்கப் பெறுகிறது. ஒன்றிய நிறுவனங்கள் பெயர்கள், இந்திய விடுதலைக்கு முன்னர்  இந்தியா எனக் குறிக்கப்பெற்றிருப்பின் பிற மொழிகளில் பாரத் என்றே குறிக்கப்பெறுகின்றன. அதற்குப் பின்னர் தோன்றிய அனைத்து நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் பாரத்(து) என்ற பெயரிலேயே குறிக்கப் பெறுகின்றன.

மேலும் சில நிறுவனங்கள் பெயர்களை அவ்வாறே ஒலிபெயர்ப்பில் காணலாம். பாரத் எர்த்து மூவர்சு லிமிடெடு, பாரத் பாரி உத்யோக்கு நிகம் லிமிடெடு. பாரத் பிராட்பேண்டு நெட்வொர்க்கு, பாரத் கோக்கிங்கு கோல் லிமிடெடு, பாரத் டைனமிக்சு லிமிடெடு, பாரத் எலெக்ட்ரானிக்குசு லிமிடெடு, பாரத் கேசு ரிசோர்சசு, பாரத் எவி எலக்ட்ரிக்கல்சு லிமிடெடு, பாரத் இம்மியூனாலாசிகல், பயலாசிக்கல் கார்ப்பரேசன் , பாரத் பெட்ரோலியம் லிமிடெடு, பாரத் பெட்ரோ ரிசோர்சசு லிமிடெடு, பாரத் பம்ப்சு & கம்ப்ரசர்சு லிமிடெடு, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெடு, பாரத் வேகன், எஞ்சினீயரிங்கு லிமிடெடு எனப் பாரதம் என்னும் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளன. அப்பொழுது யாரும் பொங்கி எழவில்லை. ஒரு பகுதியினர் ஏற்றுக் கொண்டனர். மறு பகுதியினர் எப்படி அழைத்தால் நமக்கென்ன எனப் பொருட்படுத்த வில்லை.

பெருசியர்களால் இந்துசுதான் என்ற சொல்லும் பயன்படுத்தப்பெற்றது. பிரித்தானிய ஆட்சியில் 1750 – 1880 இல் இந்துசுதான் சொல்லும் பரவலாகக் கையாளப்பெற்றது. எனவே  இந்திய அரசியல் யாப்பு குறித்த வரையறைக் கலந்துரையாடலில், நாட்டின் பெயர் குறித்த கூறு ஒன்று ஆராயப்பட்ட பொழுது இந்துசுதான் கருதிப் பார்க்கப்பட்டு,  அனைவராலும் கைவிடப்பட்டது. இருப்பினும்   இன்றும் மதவாதிகள் இந்துசுதான் என்று குரல் கொடுக்கின்றனர். இப்பெயர் இந்து மத அடிப்படைப் பெயர் என்பதால் இதைக் கைவிட வேண்டும்.

2004இல் உ.பி.யில் முதல்வர் முலாயம் சிங்கு யாதவு சட்டமன்றத்தில் “இந்தியா அஃதாவது பாரதம்” என்பதை மாற்றிப் “பாரதம் அஃதாவது இந்தியா” என மாற்ற வேண்டும் எனத் தீர்மானம் கொணர்ந்தார். அபபோது பாசக  இதனை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்தது. அதே பாசகதான் இன்று பாரதம் என்று பெயர் மாற்றத் துடிக்கிறது. ஒருவேளை இந்தியா என்பது எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைப்பெழுத்து சொல். பாரத்(து) (பாரதிய) என்பது தம் கட்சியின்பெயரில் உள்ள சொல் எனக் கருதியும் அவ்வாறு இப்பொழுது ஆதரிக்கலாம்.

நாட்டின் பெயர் மாற்றம் குறித்து நான் முன்பு தெரிவித்த கருத்தை இப்போது நினைவு கூர்கிறேன்.

இந்தி விதைப்பு :  ‘வங்காளியர்’ எனில் வங்காள மொழி பேசுநர்; ‘மலையாளியர்’ எனில் மலையாள மொழி பேசுநர்; ‘பஞ்சாபியர்’ எனில் பஞ்சாபி மொழி பேசுநர்; ‘மராத்தியர்’ எனில் மராத்தி மொழி பேசுநர்; ‘குசராத்தியர்’ எனில் குசராத்தி மொழி பேசுநர்; இவைபோல் ‘இந்தியர்’ எனில் ‘இந்தி மொழி பேசுநர்’ ; பேச வேண்டியவர்கள் என்ற தவறான எண்ணம் நம் நாட்டில் மட்டுமல்ல; உலகெங்கும் விதைக்கப்பட்டுள்ளது. எனவேதான் தலைமையமைச்சரும் இந்தியில் பேச இயலாமைக்கு வருத்தம் தெரிவிக்கிறார்; இந்தியில் உரையாற்ற இயலாமையை இழுக்கு எனக்கருதி, இந்தியில் உரையாற்றுகிறார்.   ‘இந்தியா’ என்றால், இந்தி நாடு, இந்துநாடு என்ற எண்ணம் மாற முதலில் நம்நாட்டின் பெயரே மாற்றப்பட்டாக வேண்டும்.

தமிழ் இந்தியா: உலகின் மூத்த குடியான தமிழ் மக்கள் தோன்றிய, வாழ்ந்த, வாழும் பகுதியான ஆசியாக் கண்டத்தை நாம் ‘தமிழ்க் கண்டம்’ என்றே அழைக்க வேண்டும். ‘இந்தியா’ என்பது தமிழ்த் துணைக்கண்ட கூட்டரசு நாடுகள் என அழைக்கப்பெற வேண்டும்; அல்லது குறைந்தது, ‘தமிழ் இந்தியா’ என்றாவது அழைக்கப்பட வேண்டும்

[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரையில் இடம் பெற்ற பத்திகள் .]

கடல் சார் நில அடிப்படையில் தமிழ்ச்சொல் இருப்பினும் இச்சொல் இதிகாசங்களில் இடம் பெற்றமையால் மதம்சார்ந்து மதவாதிகள் கற்பிக்கின்றனர்.

நா.தொ.ச.(ஆர்.எசு.எசு.) குரு கோல்வாக்கர், “இந்தியா என்றால் கிறித்தவர்களையும் முசுலிம்களையும் உள்ளடக்கும், பாரதம் என்று சொன்னால் இந்துக்களை மட்டும் தான் குறிக்கும்” என்று கூறுகிறார்

மாறுபட்ட கருத்துகளைக் கூறும் பாரதியாரும்,

வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்

பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?

என்று கேட்டு, இந்துமதத்தை ஏற்போருக்கே பாரதம் என்பதைக் கூறுகிறார். இவ்வாறு, காவிக்கட்சி பாரதத்தை வலியுறுத்துவதால்,  இந்தியாவை இந்துமத நாடாக அறிவிப்பதற்கான முயற்சி என அனைத்துத் தரப்பாரும் கருதி யஞ்சுகின்றனர்.

ஆனால், பா.ச.க.வின் மதநோக்க அடிப்படையில் அல்லாமல் நான் இந்தியாவின் பெயர் மாற்றத்தை வலியுறுத்தவே செய்கிறேன்.

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்

குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்

குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்”

என்கிறார் காரிகிழார். அஃதாவது பழந்தமிழ் நாட்டு எல்லை வடக்கே இமயமலைக்கு அப்பாலும் தெற்கே குமரிக்கு அப்பாலும் இருந்தது என்கிறார். எனவே, இந்நிலம் முழுவதும் தமிழ் நிலமாகவே முன்னர் இருந்தது. இந்த வரலாற்று உண்மையை உணர்த்தும் வகையில் இந்நிலப்பரப்பின் பெயரில்  தமிழ்  என்னும் சொல் இடம் பெற வேண்டும்.

இமயமலை தோன்றும் முன்னர் அந்த இடம் கடற்பரப்பாக இருந்தது. திதை என்றால் பரவு எனப் பொருள். வடக்கே நீரெல்லை பரவியிருந்த இந்த இடம் திதையன் > திதியன் எனப் பெற்றது. நீர் பரவி யிருக்கும் பரப்பிற்குப் பரவை என்று சொல்வதும் தமிழே. பரவையில் ஆட்சி      செலுத்தியவர்கள் பரவையர்கள் என்பதிலிருந்து பரதவர் என்னும் சொல் வந்தது என்பாரும் உளர். எவ்வாறிருப்பினும் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வடக்கே கடல் இருந்த பொழுதும் அதுவரை தமிழே இருந்தது என்பதே உண்மை. எனவே, இந்நிலப்பரப்பில் ஆட்சி செய்த மண்ணின் மொழியான தமிழ், நாட்டின் பெயரில் இடம் பெற வேண்டும் என்பதே அறவழிப்பட்ட செய்தியாகும்.

தலைமையமைச்சர் நரேந்திரர் பிப்பிரவரி 2023 இல் மக்களுடனான சந்திப்பிலும் அண்மையில் 6 வெளிநாடுகளின் அரசுமுறைப் பயத்தைமுடித்துவிட்டுத் திரும்பியபோதும், “தமிழ் மொழி நமது மொழி, உலகில் சிறந்த, மிகப்பழமையான மொழி. தமிழ்மொழி இந்தியர்களின் மொழி” என்று பேசியுள்ளார். முதன்மை எதிர்கட்சியான பேராயக்கட்சியைச் சேர்ந்த இராகுல் காந்தி கடந்த  நிதிநிலையறிக்கைக் கூட்டத் தொடரில் (2/2023) நாடாளுமன்றத்தில் பன்முறை தமிழ்நாடு குறித்துப்பேசி இதன்சார்பில் குரல் கொடுத்தார். உரை முடிந்து வெளியேறிய இராகுலிடம் செய்தியாளர் ஒருவர் தமிழ்நாடு என அதிக முறை உச்சரிததது ஏன் எனக் கேட்ட கேள்விக்கு  “ஏனென்றால் நான் ஒரு தமிழன்” எனக் கூறியுள்ளார். இத்தகைய தமிழ்க்காதலர்கள், தமிழினக் காவலர்கள் ஒன்றியத்தில் இருக்கும் பொழுது நம் நாட்டின் பெயரைத் தமிழ்ப்பாரதம் என மாற்றுவது எளிதாகும்.

நாடும் ஒன்றே! சாதி தவிர மொழி, பண்பாடு, நாகரிகம், மதம், தேர்தல், ஆட்சி முதலிய எல்லாம் ஒன்றே! எனச் செயல்படும் ஒற்றைநாயகப் பாசக அரசு ஒற்றை இந்தியாவிற்காகத்தான் நாட்டின் பெயரை மாற்றத் துடிக்கிறதோ என்ற ஐயம் அனைவருக்கும் உள்ளது. அதனைப் போக்க நாட்டின்பெயரில் மிகவும் தொன்மையான – ஒருகாலத்தில் நம்நாட்டில் முழுமையாக வழங்கிவந்த மொழியான தமிழின் பெயரை நாட்டின் பெயருடன் இணைக்கவும் ஆசியாக் கண்டத்தைத் தமிழ்க்கண்டம் என மாற்ற வலியுறுத்தவும் முன் வருமா? 

இந்தியா என்னும் பெயரே நீக்கப்படும்போது தென் பெருங்கடலுக்கு இந்தியப்பெருங்கடல் என்ற பெயர் ஏன்தேவை? இதனை இனிமேல், தமிழ்ப்பெருங்கடல் என அழைக்க வேண்டும்.

எனவே, நம் நாட்டுப் பெயரைத் தமிழ்ப்பாரதம்(THAMIZH PAARATHAM) என மாற்ற முன்வருவார்களா?

இனிமேல் வரலாற்றாசிரியர்கள், தமிழ்ப்பாரதம், தமிழ்க்கண்டம், தமிழ்ப்பெருங்கடல்  எனக் குறிப்பிட்டு வரலாறு எழுதுவார்களாக! நாமும் இவ்வாறே அழைப்போமாக! அரசும் அதற்கேற்ப பெயர்களை மாற்றுவதாக!

– அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

Followers

Blog Archive