மாண்புமிகு முதல்வர் மு.க.தாலின் பிறந்த நாளில் அவர் எல்லா நாளும் நலமும் வளமும் மகிழ்ச்சியும் நிறைந்து மக்கள் மகிழ நல்லாட்சி வழங்கி நூறாண்டு வாழ வாழ்த்துகிறோம். இந்தியத் துணைக்கண்டத்திற்கு வழிகாட்டியாகவும் அதன் தலைமையை நோக்கியும் பீடு நடை போடுவது மகிழ்ச்சி யளிக்கிறது. உலகத் தமிழர்களும் தலைவர்களும் வாழ்த்துவதுபோல் தமிழன்னையும் மனங்குளிர்ந்து வாழ்த்த வேண்டுமல்லவா? அதற்கான வாய்ப்பை நல்க வேண்டுமல்லவா? ஆனால், தமிழ்த்தாய்க்கு நாளும் கொடுமை இழைக்கப்படும் பொழுது அதற்கான வாய்ப்பு எங்ஙனம் கிட்டும்?
இன்றைக்கு ஆவின் செய்யும் கொடுமையை அறிந்தபொழுது உள்ளம் பதைக்கிறது. நற்பெருமகனார் ஒருவர் ‘ஆவின் பால்’ எனத் தமிழில் பெயர் சூட்டியிருந்தார். ஆனால், பால் பொதிவுகளுக்கு ‘நைசு, மேசிக்கு, பிரிமியம், டயட்டு’ என்பன போன்ற ஆங்கிலப் பெயர்கள்தான். விலைப்பட்டியல்கள், பொருள் விவரங்கள், பால் பொள்கள் தொட்பான அறிவிப்புகள், செய்திகள் என எல்லாம் ஆங்கிலம்தான். இது குறித்து எழுத எண்ணிக் கொண்டிருந்த பொழுது இப்பொழுதே எழுத வேண்டிய தேவை வந்து விட்டது. ஆவின் நிறுவனம் புதிய பாலை அறிமுகப்படுத்துகிறார்களாம்; செய்தி வருகின்றது. “பால் தட்டுப்பாட்டைப் போக்க மார்ச்சு 1 ஆம் நாள் முதல் Cow Milk என்ற பெயரில் புதிய பால் வகையை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்கிறது” என்பதே அச்செய்தி. பால் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ‘கவ் மில்க்’ என வழங்க உள்ளார்களாம். பால் தட்டுப்பாடுதானே! தமிழுக்குத் தட்டுப்பாடு இல்லையே! ஏனிந்தக் கொடுமை?
செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித் தேனே!
நைந்தாய் எனில் நைந்து போகும் என் வாழ்வு!
நன்மை உனக்கெனில் எனக்குந் தானே?
எனப் பாவேந்தர் பாரதிதாசன் உள்ளம் நைந்தாரே! தமிழை மறந்து நாம் வாழ்ந்து என்ன பயன்? தமிழ் அழிந்து நாம் இருந்து என்ன பயன்? அந்த உணர்வு நம் எல்லார்க்கும் வர வேண்டுமல்லவா?குறிப்பாக ஆள்வோர்க்கு வரவேண்டுமல்லவா? நாட்டில் அடிநிலையில் உள்ளவர்கள் தவறு செய்தாலும் முடிநிலையில் உள்ள ஆட்சியாளரைத்தான் வையகம் ஏசும் என்பதே தமிழ்நாட்டு அரசியல் நெறி. எனவே, தமிழுக்குக் கொடுமை எங்கு இழைக்கப்பட்டாலும் அவப்பெயர் அரசிற்குத்தான். அரசிற்கு அவப்பெயா் எனில், அஃது ஆள்வோருக்குத்தானே! ஆள்வோர் என்றால் அதன் தலைமையில் உள்ள முதல்வரைத்தானே அவப்பெயர் சாரும்!. முதல்வர் விழிப்பாக இருக்க வேண்டாவா? அவரன்றி ஓரணுவும் அசையாது என்ற நிலை வேண்டாவோ?
எனவே, இப்பிறந்த நாளில் முதல்வர் மு.க.தாலின் உறுதியாக ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஒரு மொழிக்கொள்கையே தமிழ் நாட்டின் கொள்கை. ஆட்சிமொழி, கல்வி மொழி, கலை மொழி, வழிபாட்டு மொழி என எதுவாக இருப்பினும் அங்கெல்லாம் தமிழ் மட்டுமே இருக்க வேண்டும். தமிழ் நாட்டுக்கு வெளியே தொடர்பு கொள்ள மட்டுமே ஆங்கிலம். ஆனால், அதனைத் தமிழ் நாட்டுக்குள் பயன்படுத்தினால் தண்டனைதான் வழங்க வேண்டும். இரு மொழிக் கொள்கை என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்குள் ஆங்கிலத்தைத் திணிப்பவர்கள் யாராய் இருப்பினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். முன்னரே கூறியபடி எச்சரிக்கை, சுற்றறிக்கை, ஆணை என்பன போன்று போலிச் சமாளிப்புகளை நிறுத்த வேண்டும். மாறாக உடனடியாக ஆங்கிலத் திணிப்பாளர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் ஆங்கிலத் திணிப்புகள் நிறுத்தப்படும்.
ஆவின் பால் மூலம் ஆங்கிலப்பால் ஊட்டுவதை உடன் நிறுத்த வேண்டும். தமிழ்ப்பால் ஊட்டுவதையே கடமையாகக் கொள்ளச் செய்ய வேண்டும்.
தமிழ் எழுதத் தெரியாதவனே! தமிழ் நாட்டை விட்டு ஓடு!
அயல்மொழியைத் திணிப்பவனே! அயல்நாட்டுக்கு ஓடு!
தமிழைப் பயன்படுத்துபவனே! தமிழ் நாட்டை ஆளு!
என்னும் நிலை வர வேண்டும்.
“வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்!” என முழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநதியின் அருந்தவப்புதல்வர் அதை நினைவில் கொள்ள வேண்டுமல்லவா? முதல்வர் மு.க.தாலின் தமிழ்ப்பகை வென்று தமிழுடன் நூறாண்டு வாழ வாழ்த்துகிறோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment