ஈ. வெ. கி. ச. இளங்கோவன் மன்னிப்பு கேட்பாரா? வாகை சூடுவாரா?
ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27.02.2023 அன்று நடைபெற உள்ளது. தற்சார்பு வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். இருப்பினும் தி.மு.க.வின் கூட்டணியில் பேராயக்கட்சி சார்பில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் போட்டியிடுகிறார். எதிர் நிலையில் அஇஅதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்து, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா முதலிய பலரும் நின்றாலும் இவர்களுள் போட்டி பேராயக்கட்சிக்கும் அதிமுகவிற்கும் தான். பாசகவின் சதியால் பன்னீர்செல்வம் அணி அதிமுக உண்மையான செல்வாக்கை மறைப்பதற்கு அதையே நல்வாய்ப்பாகக் கருதி போட்டியிடவில்லை. தேர்தல் ஆணையத்தின் அறமற்ற முறையால் உரிய சின்னம் கிடைக்கவில்லை என்பதால் இதேபோல் அமமுகவும் போட்டியிடவில்லை. ம.நீ.மையம் பேராயக்கட்சிக்கு ஆதரவு அளித்துப் போட்டியிலிருந்து விலகியுள்ளது.
பேராயக்கட்சி போட்டியிட்டாலும் வெற்றி தோல்வி திமுகவையே சாரும். தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு அதனை நடைமுறைப்படுத்தி வரும் முதல்வர் மு.க.தாலின் நிறைவேற்ற வேண்டியன உள்ளன. இருப்பினும் பொதுமக்களின் ஆதரவுடன் உள்ளார். பேராயக் கட்சி வெற்றி பெற்றால், ஆளுங்கட்சிக் கூட்டணியின் வலிமையை ஒப்புக்கொள்ளாமல் வேண்டுமென்றே திமுகவின் குறுக்கு வழி, கள்ள வாக்குகள், அதிகார வன்முறை, பணமும் பரிசுகளும் தானமாக வழங்கியமை போன்றவற்றால் அவ்வெற்றி கிடைத்ததாக அதிமுக கூறும். ஒருவேளை, அதிமுக வெற்றி பெற்றால் இவற்றை யெல்லாம் மீறி மக்கள் செல்வாக்கால் வெற்றி பெற்றதாகக் கூறும்.
பாசக, ஒரு தேர்தல் வருவதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்னரே அதற்கான ஆயத்த வேலையில் இறங்கி விடும் திட்டமிடலையும் ஆளுமையையும் வஞ்சகத்தையும் கொண்டுள்ளது. எனவே, ஈரோடு இடைத்தேர்தல் குறித்த திட்டமிடலை பொதுத்தேர்தலுக்கான திட்டமிடலில் இருந்து எடுத்துக் கொள்ளும். இப்போது மேலும் பல சதிச் செயல்களிலும் ஈடுபடும். அவற்றில் ஒன்றாகத்தான் பழ.நெடுமாறனின் பிராபகரன் குறிதத அறிவிப்பையும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். போர்க்களத்தலிருந்து அஞ்சி ஓடும் இயல்பினரல்லர் தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன். எனினும் கொத்துக் குண்டுகளாலும் எரி குண்டுகளாலும் மிகக் கொடுமையான முறையற்ற போர் முறைகளாலும் துணை நிற்கும் நாடுகளுடன் இணைந்து செயற்படுத்திய வஞ்சக முறைகளாலும் தாய்நாட்டின் ஈழத்தமிழர்கள் திரள் திரளாகக் கொல்லப்பட்டது கண்டு மனம் பொறாமல் ஆயுதங்களை அமைதிப்படுத்தியவர். அக்கொடுஞ்சூழலில் தான் மட்டும் தப்பிக்கும் எண்ணம் கொண்டிருக்க மாட்டார். தலைவர் பிரபாகரனுக்கு மயக்கம் ஏற்பட்டு, மெய்க்காவல் படையினரால் போர்க்களத்தை விட்டு வேறு எங்கும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம். அங்கே நலமாக வாழலாம். என்றபோதும் இப்போது பிரபாகரன் உயிருடன் இருப்பதாகச் செய்தியைச் சொன்ன சூழல் பல ஐயங்களையே வெளிப்படுத்துகிறது. அதுவும் இதுவரை இல்லாத வகையில் பிரபாகரன் ஒப்புதலுடன் வெளியிடுவதாகத் தெரிவித்தது மேலும் ஐயத்தையே கிளப்புகிறது. அண்ணாமலை அண்மையில் முள்ளிவாய்க்கால் முற்றம் சென்று அவரைச் சந்தித்தது, அவரும் பாசக அமைச்சரும் இலங்கை சென்றுள்ளது, முன்னரே பழ.நெடுமாறனும் காசி ஆனந்தனும் பாசகவின்பக்கம் சாய்ந்தமை முதலிய சூழல் இவ்வறிவிப்பும் தேர்தலைப் பேராயக்கட்சியான காங்கிரசைத் தோற்கடிப்பதற்கான முயற்சியோ என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இளங்கோவன் குறைந்த வாக்கில் வெற்றி பெற்றாலும் அதைத் தோல்வியாகவே கருதுவார்கள். எனவே, பெரும்பான்மை வாக்குகள் பெற்றே வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு கடுமையாக உழைக்க வேண்டும்.
இந்த நேரம் இளங்கோவனின் கடந்த கால உளறல்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
“திமுக ஆட்சி சரியில்லை”(2009)
“ஈரோட்டில் பெரியாருடன் பிரபாகரன் இருக்கும் சுவரொட்டியை அகற்ற வேண்டும்”(2009)
“திமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டால் காங்கிரசு தோற்றுவிடும்” (2010)
“மொழி என்பது என்ன? வெறுஞ் சத்தந்தானே! எவனாவது ஒருவன் எங்களுடைய சத்தந்தான் உலகிலேயே சிறந்தது என்று சொன்னால், அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது”(2010)
“திமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிட்டால் காங்கிரசு தோற்கும். தை பிறந்தால் வலி பிறக்கும். பொறுத்திருந்து பாருங்கள்; அதற்கு வலி நிவாரணி எல்லாம் இல்லை. நேரடியாக அறுவைச் சிகிச்சைதான்”(2010)
“இராசீவுவ் காந்தி கொலையாளிகளைச் சிறைக்குள் கொன்றிருக்க வேண்டும்.(2011)
“கூட்டணித் தருமத்தால் காங்கிரசு கட்சிக்குச் சங்கடம்”(2020)
பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது அறிந்த உலகமே கண்ணீர் வடித்தது. ஆனால், இளங்கோவன், “ஒரு சிறுவன் இறந்ததாகச் செய்தி வந்தது. அது பிரபாகரன் மகன் என்று அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன்” என்று அ்ப்பாவிச்சிறுவன் கொல்லப்பட்டதற்கு மகிழ்ந்தவர். தமிழர் அல்லர் என்பதால் தமிழின உணர்விற்கு வாய்ப்பில்லை. ஆனால் கொலைகார உள்ளம் கொண்ட இவருக்கு, மனித நேயமும் கூடவா இல்லாமல் போனது.
இவை போன்ற பொன்மொழிகளை(?) நாளும் உதிர்த்து வந்தவர் இளங்கோவன். எப்பொழுதும் திமுகவையும் அதன் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியையும் தாக்குவதே தன் வாணாள் இலக்கு என்று கொண்டவர்.
அவருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்திருக்கக்கூடாது. ஆனால் அவரது மகன் கட்சிக்குப் புதியவர் என்பதால் உட்கட்சிச் சிக்கல் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கக்கூடாது எனக் கருதிய மு.க.தாலின் அவரைப் போட்டியிட வைத்துள்ளார்.
இந்த நன்றிக்காகவாவது இளங்கோவன் தி.மு.க.வினரிடமும் தமிழ் மக்களிடமும் தன் கடந்த காலப் பேச்சுகளுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
கூடுதல் வாக்கு வேறுபாட்டில் வெற்றி பெற வேண்டியது இளங்கோவனுக்குத் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால், தி.மு.க.விற்குத் தேவை. எனவே, இளங்கோவன் மன்னிப்பு கேட்பதே அவருக்கும் கூட்டணிக்கும் நல்லது. மன்னிப்பு கேட்பாரா? வாகை சூடுவாரா?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
No comments:
Post a Comment